Tuesday, October 31, 2006

மனதோடு மழைக்காலம்

வணக்கம் மக்கா,

தீவாளி வந்து செலவு புயல் அடிச்சு ஓயஞ்சு அதனால பர்ஸ்,பாக்கெட் மற்றும் இதர துட்டு தங்கும் இடங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு அதற்கான நிவாரணங்கள் தேடி மனம் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் நேரத்துல்ல... மறுபடியும் புயல்ன்னு ரேடியோ டி.வியில்ல எல்லாம் சொன்னா மனம் என்ன பாடு படும்ய்யா கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க...

நம்ம ஆபிஸ்க்கும் நான் குடியிருக்க வீட்டுக்கும் கிட்டத்தட்ட ஒரு 10 - 12 கிலோமீட்டர் தூரம் இருக்கும்... நடுவில்ல அடையாறுன்னு ஒரே ஒரு ரிவர் இருக்கு..லண்டனுக்கு தேம்ஸ் மாதிரி தென்சென்னைக்கு இந்த அடையார்...( இதை யாராவது லண்டன் மக்கள் வாசிச்சா கண்டபடி உணர்ச்சி வசப் படக்கூடாது ஆமா.. அடையார்ல்ல ஜெயிச்ச கவுன்சிலர் ஓட்டுக் கேட்டு வரும் இதைச் சொன்னப்போ நாங்க யாருமே டென்சன் ஆகல்ல தெரியுமா?)

சரி நான் என் கதைக்கு வரேன்ங்க.. இந்த் ஒரே ஒரு ஆறு தான் இருக்கு.. ஆனாப் பாருங்க ஒரு அரை மணி மழை ரொம்ப பொங்கி புனல் எடுத்துச்சுன்னு வைங்க... அது என்ன மாயமோ என்ன மந்திரமோ தெரியல்ல எங்க வீட்டுல்லருந்து அடையாறு போறதுக்குள்ளே ஒரு இருபது இருபதைஞ்சு ஆறு உற்பத்தி ஆயிடுதுங்க...

இங்கேத் தான் இந்தப் பதிவைப் படிக்கிற விஞ்ஞானிகள் ரொம்ப ஆழமாக் கவனிக்கணும்

மழை வந்தாலும் வெயில் அடிச்சாலும் நான் ஆபிஸ்க்குப் போறது என்னமோ என் பியரோ பைக்ல்ல தான்.. ஆனாப் பாருங்க வெயில்ல ரோடு மாதிரி காட்சி தர்ற இடங்கள் எல்லாம் மழை பெஞ்சா ஆறு மாதிரி மாறிடுது.. அந்தச் சமயத்துல்ல நம்ம பைக் பாவம் ஆத்துல்ல இறங்கவே பதறி உதறும்... அப்போ அதோட என்ஞின் கொடுக்குற அந்த சவுண்ட்டைக் கேட்டா...

"ஏன்டா படிச்சவன் தானே நீயு... அறிவிருக்கா ஓனக்கு நிலத்துல்ல ஓடுற என்னை இப்படி தண்ணியிலே இறக்கி கொல்லப் பாக்குறீயே கிராதகா.. இதுல்ல 24ஆம் புலிக்கேசி மாதிரி என் முதுகுல்ல ஓக்காந்துகிட்டு வேற இருக்க...பாவி.. படுபாவிபயலே..."

இந்த சவுண்டையும் மீறி ஆத்துல்ல இறங்கி ஆக்சிலேட்டரை ஒரு முறுக்கு முறுக்கி காலைத் தூக்கி கிராஷ் கார்ட்ல்ல வச்சிகிட்டு ஜொய்ங்ன்னு முன்னேறுவேன்ங்க... இஞ்சின் சவுண்ட் ஆத்து தண்ணி நாம் போட்டுருக்க அம்சமான ஷூ பேண்ட் எல்லாத்து மேலயும் காறித் துப்பும் பாருங்க... சும்மாத் தனியா எல்லாம் துப்பாது.. அங்கிட்டு இங்கிட்டு திறந்துப் பொங்கி வழியுற கழிவுத் தண்ணியோடு கூட்டணிப் போட்டுத் துப்பும்.

அடப் பொட்டித் தட்டி வெள்ளைக் காரனுக்கே எடுப்பு வேலைப் பாத்து இருக்க அம்புட்டு மானத்தையும் என்னிக்கோத் தொலைச்ச நமக்கு இந்த துப்பல்ஸ் எல்லாம் சாதாரணம்ப்பா...

ஆங் விஞ்ஞானிகளே உங்களைப் பதிவைப் படிக்கச் சொல்லிட்டு நான் நொந்தக் கதையைச் சொல்லிகிட்டு இருந்தா எப்படி?

இப்படி ஒரு ஆறு தாண்டி மறு ஆறு தாண்டி பாவம் நம்ம பைக் ஒரு கட்டத்துல்ல என்னோட அராஜகம், கொடுமை, முடிச்சவிக்குத் தனம் எதையும் சகிக்க முடியாம..

"போடா நீயும் ஒன்னோட எனக்கு இருக்க சவகாசமும்ன்னு ஒரு பெரிய உறுமல் போட்டுட்டு... புகையை வெளியே என் மொகம் இருக்கத் திசைப் பார்த்துக் கக்கிட்டு "காந்திகிரி" பண்ண ஆரம்பிச்சுடுது.. ( அதான்ங்க ஒத்துழையாமை இயக்கம்)

அதை எம்புட்டு கெஞ்சியும் கொஞ்சியும் பயனில்லாமல்.. செல்லத்தைக் கையிலேடுத்து ( செல் போன் தான்) " Hello I am stuck in the Rain.. u know the roads are flooded.. heavy traffic.. my bike has developed rainophobia.. அப்படின்னு பைக் டாக்டருக்குப் படிச்சவன் மாதிரி அளந்து விட்டுட்டு முடிவா I Will coming a lil late to the aaapis.." ன்னு சொல்லுவேன்.

ஒவ்வொரு வாட்டி மழை வரும் போது இது தான் நடக்குது.. இது தான் நடக்கும் போல இருக்கு...

இது தீருவதற்கு ஒரு வழி சரியான சாலைகள், நகரத்தின் கட்டமைப்பினை மழையை எதிர்கொள்ளும் அளவிற்கு தயார் செயவது.. இதையெல்லாம் அரசியல்வாதிங்க.. கழகத்துக்காரங்கத் தான் செய்யணும் செஞ்சிருக்கணும்.. அவிங்க செய்யல்ல.. அதுக்குண்ணு நாம சும்மா இருக்க முடியுமா சொல்லுங்க...

இங்கே தான் மகாகனம் பொருந்திய விஞ்ஞானிகளே நீங்க வர்றீங்க...

இதைச் சமாளிக்க இன்னொரு வழி நீர்/நிலம் இரண்டுல்லயும் ஓடுற பைக் கண்டுபிடிக்கிறது..

அது உங்க கையிலேத் தான் இருக்கு.. எப்படியாவது அப்படி ஒரு பைக் கண்டுபிடிச்சு சல்லிசா என்னிய மாதிரி ஏழை பாழை வாங்கி ஓட்டுறதுக்கு வசதியான விலையிலே மார்க்கெட்ல்ல விட்டீங்கன்னா.. ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்லல வண்டிக் கடன் வாங்கி ஓட்டிப் பொழைச்சுக்குவோம் சாமி..

நடு ரோட்டுல்ல நிக்கும் போது என்னப் பொழுதுபோக்கு காதுல்ல எப்.எம் ரேடியோ தான்.. அதுல்ல போட்டாங்கப்பா ஒரு பாட்டு.. படம் பேர் மனதோடு மழைக்காலமாம்... அதான் தலைப்பா வச்சிட்டேன் நல்லாயிருக்கா...


Ok Chennaittes enjoy the rain...hehehe

Tuesday, October 24, 2006

வரலாறு - ''மீண்டு''ம் ''தல''

நேத்து ஆல்பர்ட் தியேட்டர்ல்ல மழைக்கு ஒதுங்கலாம்ன்னு ஓதுங்குனா.. அங்கிட்டு பேனர்ல்ல அலையென எழுவோம்.. தலையென வாழ்வோம்ன்னு ஒரு பேனர்...

கவுண்ட்டர்க்குள்ள கையை நீட்டுனா டிக்கெட் கொடுத்துட்டாங்க... "அல்டிமேட் ஸ்டார்" அஜீத் நடிப்பில் கடைசியாக வெளிவந்த இரண்டு படங்கள் பரமசிவன், திருப்பதி பார்த்து நொந்த நிலையில் அதிகமான மனத்தைரியத்தோடு வரலாறு பார்க்க நண்பர்களோடு போயிருந்தேன்.

அரங்கிற்குள் நுழையும் முன் நம்மை ஈர்த்த விஷயஙக்ள். அஜீத்தின் மூன்று வேடங்கள், ரஹமானின் இசை, நாயகி அசின், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் ஜனரஞசகமான இயக்கம்.

அஜீத் ரசிகர்களின் ஆரவாரம் அடங்கிய வெகு நேரம் ஆகியும் கதையை நோக்கி படம் நகர்ந்த மாதிரி தெரியவில்லை. நகைச்சுவை என்ற பெயரில் ஆரம்பக் காட்சிகளில் வழியும் இரட்டை அர்த்த சம்பவங்களின் கோர்வையில் கதை மெல்ல நகர்கிறது. அதில் ஆங்காங்கு வேகத் தடைகளாய் பாடல் காட்சிகள் வேறு..

வீல் சேரே வாழ்க்கையாகிப் போன பாசமான 'காட்பாதர்' தந்தை அஜீத், பொறுப்புகளைச் சுமக்க விருப்பமின்றி இளமை.. இளமை எனக் கூத்து கட்டும் பணக்கார மகன் அஜீத்...அவர் நண்பர்கள், அவர் காதலியாக அசின், தந்தையின் விசுவாசமான் வேலையாள் பாண்டு எனக் கதை களம் முதல் பாதியில் விரிகிறது

மூன்றாவது அஜீத் எங்கே என வினா எழும் போது அதுவே இடைவேளை நெருங்குகையில் திரைக்கதையில் முடிச்சாய் விழுகினறது...

கடல்மீன்கள் என்றொரு பழைய கமல் படத்தில் பார்த்தக் கதை தான்...
தந்தை தாய்க்கு துரோகம் இழைத்து விட்டதாய் நினைத்து குரோதம் கொள்ளூம் வில்லன் மகனாய் இன்னொரு அஜீத்.. வில்லன் அஜீத் தந்தை - தம்பி வாழ்க்கையில் மர்ம புயலாய் வீசுகிறார். விபரீதங்களை விளைவிக்கிறார். தந்தையைக் கொல்ல வெறீயோடு அலைகிறார்.
இந்த நிலையில் காட்பாதரின் பிளாஷ் பேக் ஆரம்பம்...

நாட்டிய கலைஞராய் தந்தை அஜீத்... அவரின் பெண்மை கலந்த நளின நடைப்பாவஙகளை காரணம் காட்டி அஜீத்தை மணக்க மறுத்து அவமானபடுத்தும் அம்மா கனிகா..கல்யாணம் தடைப்பட.. அப்புறம் என்ன அஜீத் பொங்குகிறார்... தன் ஆண்மைக்கு சவால் விடும் கனிகாவை அவர் சம்மதமின்றி அம்மா ஆக்குகிறார். இரட்டைக் குழந்தைகள் பிறக்கினறன்... இதுக்கும் மேல என்ன நடந்து இருக்கும் என் தமிழ் திரைப்பட் ரசிகர்கள் நீங்கள் கட்டாயம் ஊகித்து விடுவீர்கள் எனப்தால் இத்தோடி கதையை விட்டு விடுகிறேன்.

கடைசியில் மசாலாத் தடவப் பட்ட காரணங்கள் சொல்லி இயக்குனர் காட்பாதர் குடும்பம் இணைய வழி செய்கிறார். இணையும் போது பாதர் காட் பாதர் ஆகிறார்.

அஜீத் தந்தை வேடத்தில் ஜொலிக்கிறார். அதுவும் நாட்டியக் கலைஞராய் கலைந்த தலைமுடியில் அவர் நடக்கும் அந்த நடைக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது.

வில்லன் அஜீத் நிறைவு. அந்த கோபப்பார்வை.. ஆவேச அசைவுகள் என வில்லன் பாத்திரத்தை மிகைப் படுத்ததாமல் செய்துள்ளார்.

அசினுக்கு அதிகம் வேலையில்லை. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் அவ்வளவே. FAIREVER QUEEN FOREVER AJITH என படத்தில் ரொமான்ஸ் ராகம் பாடுகிறார்.

ரமேஷ் கண்ணா, சுமன் ஷெட்டி ( 7ஜி ரெயின்போ காலனி, ஜெயம்) , ராஜீ சுந்தரம் குரூப் டான்சர்கள் என ஒரு பட்டாளமும், வழக்கமான வில்லன்கள் பொன்னம்பலம், மன்சூரலிகான் ஆகியோரும் நகைச்சுவைக் களத்தில் இறக்கிவிடப்பட்டிருந்தாலும் ஓரிரு காட்சிகளில் வரும் மனோகர் கைத்தட்டலை அள்ளிச் செல்கிறார்.

கனிகா கதையோடு வருகிறார். முதலில் ஆவேசமாய் இளமையாய் பின் பாதியில் அமைதியும் அவதியுமாய்.

இன்னிசை என்ற பாடல் அஜித்தின் நடிப்புக்கு 'ஓ' போட வைக்கிறது.
ரஹமான் இசையோடு ஒரு பாட்லும் பாடியிருக்கிறார்.

சுஜாதா, சந்தானபாரதி, ராஜேஷ், விஜயன் போன்றோரும் படத்தில் உண்டு.

ஆக மொத்தம் நம்மால் பொறுத்துக் கொள்ள முடிந்த அளவிலான பூச்சுற்றல்களோடு, சென்டிமெண்ட் கலவையைத் தூவி அஜித் நடிப்பில் ஒரு பார்க்கக் கூடிய பொழுதுபோக்கு படம் படைத்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.
மொத்தத்தில் அஜீத் ரசிகர்களுக்கு இது 'தல' தீபாவளி தான்...பின்னே தீபாவளிக்குத் திரைக்கு வந்த எல்லாப் படத்துல்லயும் இப்படமே முன்னணியாமே....

Monday, October 23, 2006

வல்லவன் - திரை விமர்சனம்

லூஸ் பெண்ணே ... லூஸ் பெண்ணே ... லூஸ் பையன் உம் மேலத் தான் லூஸாச் சுத்துறான்...

இந்தப் பாட்டு தான் கதை...

முதல் பாதியில் தன் நிஜக் காதலி (!!!??) நயன் தாரா மீது லூசாகி காதலாகி லூசுத்தனமான காதல்கவித்துவமான காரியங்களைச் செய்கிறார் சிம்பு. இரண்டாவது பாதியில் வரும் பிளாஷ் பேக்கில் இதே லூஸ் தனங்களைச் சிம்பு ரொம்பவே அதிகப்படியான சென்டிமென்ட் பூச்சுற்றல்களோடு தன் பள்ளிக் கூடக் காதலி ரிமா சென்னுடன் செய்கிறார்.

படம் துவங்கும் போது காதல் அனுபவமே இல்லாததுப் போல் பேசும் சிம்பு தன் எதிர்காலக் காதலி குறித்த கற்பனையுடன் இருப்பது போல் காட்சிகள் விரிகின்றன....நயனைக் கோயிலில் வழக்கமானத் தமிழ் பட பார்முலாவை மீறாமல் சந்திக்கும் சிம்பு அவர் மீது லூசாகிறார் (நோட் த் பாயிண்ட் இது காதல்ன்னு தப்பா நினைக்கக்கூடாது)

அப்புறம் என்ன சிம்பு பல்லன் என்ற பெயரின் கமலின் கல்யாணராமனாக வந்து நயன் பின்னால் லூசாக அலைகிறார். காதலுக்கு அழகு முக்கியம் இல்லை என்ற மகத்தானக் கருத்தைக் காட்டப் பல்லனாக வருகிறாராம். நயன் மனத்தில் செருப்புத் திருடி இடம் பிடிக்கும் சிம்பு.. நயனின் கட்டிலில் இரண்டு உம்மா கொடுத்து இடம் பிடிக்கிறார். இது எல்லாம் நடக்கும் வரை நயனுக்கு சிம்பு தான் விரிவுரையாளராக இருக்கும் (அதே கல்லூரியில் ஒரு மாணவன் தான் என்பது தெரியாதாம்.. அட நம்புங்கப்பா)

தெரிந்தவுடன் வயதில் தன்னை விட மூன்று வயது சின்னவனான சிம்புவை மணக்க மறுக்கிறார் நயன்.அப்புறம் லூஸ் பையன் தன் காதலியை நினைத்து பல அழகிய அரைகுறை உடை உடுத்திய மாடல் அழகிகளுடன் கவலையாக லூசு பெண்ணே பாட்டு பாடி நம்மையும் கவலைக் கொள்ளச் செய்கிறார்...

இடையில் சிம்புவின் நண்பர் கூட்டணி ஒன்று சிம்புவின் எல்லா லூசுத்தனங்களுக்கும் ஓ போடுவதற்காகவே படம் நெடுக வருகின்றன.

காதல் சந்த்யா, லொள்ளு சபா சந்தானம், சத்யன், ரேடியோ சிட்டி ஆர்.ஜே நண்டு.. அந்த நண்பர் பட்டாளத்தில் கொஞ்சம் வயதுமுதிர்ந்த அங்கிளாக எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ, சந்தானம் மற்றும் சேகரின் டைமிங் ஜோக்குகள் சில ரசிக்க படி உள்ளன.

இடைவேளைக்குப் பிறகு வரும் பிளாஷ் பேக்கில்,பள்ளிக்காலத்தில் சிம்புவுக்கு ரிமா சென் மீது காதல் என்றால் ரிமாவுக்கு சிம்பு மீது சைக்கோத் தனமானக் காதல்.இந்தக் காதல் ஒரு கட்டத்தில் முறிகிறது.

அப்புறம் என்ன நீங்க நினைக்கிறது சரி தான்.. சிம்பு படையப்பா ஆகிறார்.. ரிமா நீலாம்பரி ஆகிறார்..( அப்படின்னு நாம நினைச்சுகிட்டுப் படம் பார்க்கணும்) ரிமாவா இது... ஸ்கூல் பொண்ணாய் ரிமா வரும் குளோஸ் அப் காட்சிகளில் அது எதோ ஒரு முதியோர் கல்விக்கூடமோ என்ற சந்தேகம் நமக்குள் எழுவதை நம்மால் தடுக்கமுடியவில்லை. படத்துக்கு எவ்வளவோ செலவு பண்ண தேனப்பன் ரிமா மேக்கப்க்கும் அஞ்சு பத்து அதிகம் பார்க்காமல் செலவு பண்ணியிருக்கலாம். மேக்கபில்லாமல் நடிக்க தைரியம் வேணும் ரிமா.. ஆனா பார்க்க அதை விட தைரியம் அதிகம் வேணும்.

சிம்புவை அடைய ரிமா போடும் திட்டங்களைச் சிம்பு யாரையோ உசுப்பேற்றும் படி பிஞ்ச் டயலாக் எல்லாம் பேசி (ஆமாங்க இது சத்யமா பஞ்ச் டயலாக் இல்ல) சவால் விட்ட படி ஸ்டைலாக யார் மாதிரியோ ஸ்லோ மோஷனில் நடந்து தவிடு பொடி ஆக்குகிறார்.

டைட்டில் கார்டில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று போடுகிறார்கள் அந்த டைட்டிலுக்குத் தகுந்தப் படி பிஞ்ச்சோ பிஞ்ச் டயலாக்ஸ் தான் போங்க...

நான் கவனிச்ச ஒரு சில பிஞ்சிங் டயலாக்ஸ் இதோ

" நீ அம்பானி பொண்ணைக் கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகணும்ன்னு ஆசைப் படுறே..ஆனா நான் அந்த அம்பானியாவே ஆகணும்ன்னு ஆசைப் படுறேன்."

"நீ என்னையும் என் காதலையும் ஒதுக்கிட்டே.. தூக்கி எறிஞ்சுட்ட.. அதுக்காக நான் போலீஸ் கோர்ட்ன்னு தாடி விட்டுகிட்டு தண்ணியடிச்சுட்டுப் போய் நிப்பேன்னு நினைச்சியா... நான் உன்னைவிட அழகா,கும்ன்னு , ஜம்முன்னு ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி வாழ்ந்துக் காட்டுறேன் பாரு..."

இசை யுவன்.. பாடல்கள் எல்லாம் எப்.எம் ரேடியோக்களின் புண்ணியத்தில் ஏற்கனவே சூப்பர் ஹிட். (அந்த நம்பிக்கையிலே தானே படம் பார்க்கவே போனேன்). குறிப்பா டி.ஆர் பாடிய யம்மாடி.. ஆத்தாடி..பாடலில் திரையரங்கம் எழுந்து ஆடுகிறது. டி.ஆரும் இந்தப் பாட்டில் ஆடுகிறார்.

அந்நியன் பாணி முடிவு..ரிமா மனநலக் காப்பகம் செல்கிறார்...அங்கு மூன்று வருடங்கள் இருந்து திருந்தியதாய் பாலகுமாரன்(இவரே வசனம் மன நல மருத்துவராய் தலைக் காட்டுகிறார்.) ஆமோதிக்க திரும்புகிறார்...

ஆனால் அதே லூஸ் பெண்ணாக மீண்டும் சிம்புவைச் சந்திக்கிறார்.... TO BE CONTINUED
என்ற வார்த்தைகள் திரையில் தெரிய திரையரங்கின் வாசல் நோக்கி தலைதெறித்து ஓடிய மொத்த கும்பலில் நானும் ஒருத்தன்.

முதல் பாதியில் லூஸ் பையன் சிம்பு... லூஸ் பொண்ணு நயன் தாரா

அடுத்த பாதியில் லூஸ் பையன் சிம்பு... லூஸ் பொண்ணு ரிமா சென்.

படம் முடியும் போது படம் பார்த்தவங்க எல்லாரும்.... அட நீங்களே புரிஞ்சிக்கோங்க...

மன்மதனில் மனம் கவர்ந்த சிம்பு இதில் இயக்குனராகவும் நடிகராகவும் மிஸ்ஸிங்..

Monday, October 16, 2006

5 புள்ளி யாரோ ஒண்ணு

வணக்கம் மக்கா,

தலைப்பைப் படிச்சா எதாவ்து விளங்குதா.. நேத்து மாலை நம்ம சகா ஒருத்தன் வீக் என்டும் அதுவுமா விட்டத்தைப் பாத்துகிட்டு இருக்க இந்தா இந்தப் புக்கை ஒரு பொரட்டு பொரட்டுப் பாருன்னு சொல்லி கொடுத்த புக் டைட்டில் தான் மேலே நான் போட்டு இருக்கும் ஐந்து புள்ளி யாரோ ஒண்ணு. (FIVE POINT SOMEONE)

ஒரு இந்தியரால் எழுதப் பட்ட ஆங்கில நாவல். இந்தியாவின் தலைச்சிறந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனமாகக் கருதப்படும் ஐ.ஐ.டியில் என்னச் செய்யக்கூடாது என்ற ஒரு அடைமொழியொடு நாவல் துவங்குகிறது.

சாயங்காலம் திருவான்மியூர் பீச்சுக்கு போய் 96ல்ல ரஜினி அரசியலுக்கு வராதது சரியா தப்பான்ன்னு அலசி ஆராய்ஞ்சுட்டு வீட்டுக்கு வந்து நூடுல்ஸ் கிண்டி சாப்பிட்டுட்டு புத்தகத்தைப் பிரிக்கும் போது மணி சரியா இரவு 10.15புத்தகத்தின் அட்டையில் 270 பக்கங்களும் குதுகாலம் நிரம்பியவை என்ற வாசகம் வேறு உசுபேத்த சுவாரஸ்யமாப் புத்தகத்தைப் பிரிச்சுப் படிக்க ஆரம்பிச்சேன்.

ஐ.ஐ.டிக்குள் நுழையும் மூன்று மாணவர்கள் மற்றும் அவர்கள் நட்பின் பின்னணியில் கதை சொல்லப்படுகிறது. ஐ.ஐ.டியின் வாழ்க்கை முறை, பாடத்திட்டங்கள், பேராசிரியர்கள், வகுப்பறைகள், கேன்டீன், விடுதி என கதையாசிரியர் நம்மை கரம் பிடித்து ஐ.ஐ.டி வளாகத்திற்குள் உலாவ விடுகிறார்.

கதையில் வரும் ஹரி என்ற மாணவன் மூலமே கதை நிகழ்ச்சிகள் விவரிக்கப் படுவதாய் நாவல் செல்கிறது. ஹரி, ரேயான், அலோக் என்ற மூன்று மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட மாணவர்களின் மூலம் நானும் என் கல்லூரி வாழ்க்கையை மீண்டும் வாழ்ந்து பார்க்க வைத்தார் ஆசிரியர் என்று சொல்லலாம் போல் தோன்றுகிறது.

ரேயான் - பணக்கார வீட்டு பையன், இயல்பிலேயே தலைமைக் குணம் கொண்டவன்.
அலோக் - சாது, நடுத்தர குடும்பம். குடும்பக் கஷ்ட்டங்களுக்கு பாடப்புத்தகங்களை முழுங்கி அதன் மூலம் ஒரு தீர்வு காண கனவு காண்பவன்.
ஹரி - வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்பவன். ரேயான் போல் எதிலும் முன் நிற்க வேண்டும் என்று ஆசை அதிகம் கொண்டவன். தன்னால் அது முடியாது என்றும் நினைப்பவன்.

இவர்கள் மூவரின் நட்பு எப்படியெல்லாம் இவர்களை ஆட்டுவிக்கிறது என்று மெல்லிய நகைச்சுவை இழையோட ஆசிரியர் கதையை நகர்த்துகிறார்.ஹரியின் காதல் கிளைக் கதை, வேறு திசையில் கதையின் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.

ரேயான் மூலம் ஐ.ஐ.டியின் பாடத்திட்டங்களை நாவலாசிரியர் சாடுவதை நம்மால் பல இடங்களில் தெளிவாய் உணர முடிகிறது. மனிதனை மனிதனாய் வாழவிடாமல் அவனை ஒரு ஒரு யந்திரமாய் மாற்றி அவன் சுய கௌரவத்தைப் பறிக்கும் தற்கால கார்பரேட் உலகத் தத்துவங்களையும் நாவல் லேசாக உரசிப் பார்க்கிறது.ரேயான் ஐ.ஐ.டி, பாடத்திட்டங்கள் மனத்தளவில் மாணவனை ஊனப்படுத்துகிறது என குமுறுகிறான். மாணவனின் சுய சிந்தனைகளையும் கற்பனா சக்திகளும் ஊக்கப்படுத்துமாறு பாடத்திட்டம் அமையவில்லை என ஆதங்கப்படுகிறான். வெறும் மனப்பாடம் செய்து பாடங்களில் மார்க் வாங்கிக் குவிக்கும் போக்கு அவனை விரக்தியடைச் செய்கிறது.

அதை மாற்ற கல்லூரி வாழ்க்கையை வண்ணமயமாக மாற்ற பலப் புதிய திட்டங்கள் வகுக்கிறான். அத்திட்டங்களை நண்பர்கள் தற்காலிகமாகச் செயல்படுத்துவதும் பின்னர் கைவிடுவதும் என நாவல் போராடிக்காமல் நகர்கிறது.

முதல் செமஸ்டர் முடிவினில் (ஆமா செமஸ்டருக்கு தமிழில் என்ன?) நண்பர்கள் மூவரும் 5 புள்ளிகளில் நிற்கிறார்கள். ஐந்து புள்ளிகளுக்குச் சொந்தக்கார்கள் ஐ.ஐ.டி மொழியில் மற்ற மாணவர்களின் திறனுக்கு முன் குறைந்தவர்கள் என்ற அர்த்தப்படுபவர்க்ள். ( இதான் தாங்க தலைப்பின் விளக்கம்). இந்த முதல் சறுக்கல் நண்பர்களைப் பெரிதும் பாதிக்கிறது, பின்னர் அந்த சறுக்கலை அவர்கள் சகஜமாக எடுத்துக் கொண்டு வாழப் பயிலுகிறார்கள்.

ரேயானின் ஆராய்ச்சித் திறமை அவன் ஐந்து புள்ளி இனத்தைச் சார்ந்தவன் எனபதால் துறை தலைவரின் கவனம் மறுக்கப்படுவது,ரேயானின் சிறு வயது, தாய் தகப்பன் ஏக்கம் என ரேயானின் கிளைக் கதைகள் ஒரு பக்கம் நம் கவனம் கவர்கின்ற வண்ணம் இட்டுச் செல்லப்படுகிறது.

ஹரி துறைத் தலைவர் மகள் நேகாவோடு கொள்ளும் காமம் எட்டிப் பார்க்கும் காதல் கலகலப்பு எனறால். நேகா ரயிலில் அடிப்பட்டு இறந்த அண்ணன் மீது கொண்டிருக்கும் பாசம் ஒரு உணர்வு குவியல்.

அலோக் வீட்டு விஷயங்களான, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அப்பா, எப்போதும் கண்ணீர் வடிக்கும் பயலாஜி டீச்சர் அம்மா, கல்யாண வயதைத் தொட்டும் மாப்பிள்ளைக் கிடைக்காத அக்கா என பக்காச் சென்டிமென்ட் கலவை.

ஐ.ஐ.டி வாழ்க்கையை எப்படியாவ்து முடித்தால் போதும் என இருக்கும் நண்பர்களுக்கு ஐந்து புள்ளிகளைத் தாண்டியே ஆக வேண்டிய மறைமுகக் கட்டாயம் ஏற்படுகிறது.

ஹரிக்குத் தன் காதலும் காதலியும் கிடைக்க அதிக மார்க்குகள் தேவை.
ரேயானுக்கு தன் ஆராய்ச்சி கட்டுரைக் கவனிக்கப்பட மார்க்குகள் முக்கியமாகிறது.
ஆலோக்க்கு வேலை கிடைக்க மார்க்குகள் கட்டாயமாகிறது.

மார்க்குகளைக் குறி வைத்து அவர்கள் வகுக்கும் திட்டம் மேலும் விபரீதங்களை விளைவிக்கிறது. ஆலோக் தற்கொலைக்கே துணிகிறான்... மூவரின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் அளவுக்கு சம்பவங்கள் நடந்தேறுகின்றன. அதிலிருந்து அவர்களை மீட்க முயலும் ரேயானின் ஆதர்ச பேராசிரியர் வீராவின் முயற்சிகள் என்னவாகின்றன?
விபரீதங்களின் விளிம்பில் நின்று காதலியைக் காட்டிக்கொடுக்கும் ஹரியின் காதல் என்னவானது?

துறைத் தலைவர் செரியன் மகன் மரணம் ஒரு விபத்தா? போன்ற கேளிவிகளுக்குப் படு யாதார்த்தமாய் பதில்கள் சொல்லி நாவல் முடிகிறது.

மீண்டும் கல்லூரி போய் வந்த உணர்வு மிஞ்சியது.

கடிகாரம் பார்த்தேன் மணி 2 ஆயிருச்சு.... இழுத்துப் போர்த்திகிட்டுப் படுத்தேன்... ஒரு சில கணங்களுக்கு நாவலில் வந்த ஹரி, ரேயான், ஆலோக், நேகா, புரொபசர் வீரா, புரோபசர் செரியன், சசி தாபா என நாவலின் பாத்திரங்களின் ஞாபகம் மீண்டும் மீண்டும் என் எண்ணங்களைச் சுற்றி வந்துக் கொண்டிருந்தன..

PS: Five Point Someone is a novel wriiten by Chetan Bhagat.

Friday, October 13, 2006

லகே ரகோ கொத்ஸ் பாய்

வணக்கம் மக்கா,

பீலிங் பதிவுப் போட்டுட்டு பீலிங்காத் திரிஞ்சிகிட்டு இருந்த எனக்கு அமெரிக்காவில்ல இருந்து போன்.. அரக்க பரக்க போனை எடுத்தா என் தானைத் தலைவர் கொத்ஸ் லைன்ல்ல இருக்கார்.

என்னய்யா ஆச்சு உனக்கு.. ஏன் இப்படி அப்படின்னு அக்கறையா நமக்கு நாலு வார்த்தைச் சொன்னவர்..சரி சரி.. நமக்கு டக்குன்னு ஒரு படம் பண்ணனும் கதை ரெடி பண்ணு.. யாகூல்ல ஆன்லைன்ல்ல வர்றேன் கதையச் சொல்லுன்னுட்டு போயிட்டார்.நமக்கு கையும் ஓடல்ல காலும் ஓடல்ல.. மறுபடியும் நம்ம கலைத்தாகத்துக்கு தலைவரே பீர் ஊத்துறாரேன்னு பொங்கி வழிஞ்சுது நம்ம மனசு.

"சரா.. ஏலேய் சரா" அப்படின்னு நம்ம நண்பனுக்குப் போனைப் போட்டுக் கூப்ப்ட்டேன்..லைன்ல்ல வந்தவன் ஆனந்தக் கூத்தாடிட்டான்.. அடுத்த அரை மணி நேரத்துல்ல மெரீனாக் காந்தி சிலைக்குக் கீழே வானத்தைப் பாத்துகிட்டு கதை ஆலோசனையிலே நாங்க ஆழமா இறங்கிட்டோம்ய்யா.

"தேவ்.. ஒரு அருமையானக் கதை இருக்கு சொல்லுறேன் கேளு"
"சொல்லு"
"நம்ம கொத்ஸ்பாய் பழைய வண்ணாரப் பேட்டை ஏரியாவில்ல பெரிய தாதா. அவர் பேரு சொன்னாலே நம்ம மொத்தச் சென்னையும் நடுங்கும்"
" அப்புறம்.. அவருக்கு ஒரு சிஷ்ய புள்ள கூடவே வ்ர்றான்.. அவன் பேர் ப்யூஸ் கேரியர்"
"பேர் வித்தியாசமா இருக்கே"

"நம்ம தலைவர்க்கு காலையிலே எந்தரிச்சு ரெகுலராக தேன்மணம் எப் எம் கேக்குறது வழக்கம் அது ஒரு பிளாக் ரேடியோ.. அதுல்ல சங்வி அப்படின்னு ஒரு சூப்பர் பிகர் டெய்லி தன்னோட மெலடியான வாய்ஸ்ல்ல கவிதைச் சொல்லும்.. அதுல்ல இம்ப்ரஸ் ஆவுற நம்ம தலைவர் அந்தப் பொண்ணு எழுதற பிளாக்க்கு மட்டுமில்லாம அந்தப் பொண்ணுக்கே பயங்கர பேன் ஆகி லவ்ஸ் வூடுறார்"

"சூப்பர் ஸ்டோரிப்பா"

"அப்புறம் அந்தப் பொண்ணு ஒரு நாள் தன் பிளாக்ல்ல வெண்பா எழுதும் போட்டி வைக்குது.. ஜெயிக்கறவங்களுக்கு தன் கையலே வெண்பொங்கல் சாப்பிடுற வாய்ப்பும் தருவதாகச் சொல்லுது.. நம்மத் தல முடிவு பண்ணிடுறாரு அவர் வெண்பா எழுதி வெற்றி பெற்று விடுவதுன்னு"

"அப்புறம்"

"அவர் சிஷ்யன் ப்யூஸ் கேரியர்கிட்டே போன் போட்டு வெண்பான்னா என்னன்னு விசாரிக்கிறார். புதுசா வந்த பிகர் மினிஷா லம்பா சிஸ்டரா இருந்தாலும் இருக்கும் தலை.. ஆனா எப்படியும் எல்லா விவரங்களையும் விசாரித்துச் சொல்லுவதாகச் சொல்கிறான்"

"ம்ம்ம் அதுக்குப் பிறகு விசாரிக்கிறானா?"

"ஆங் பயங்கரமா விசாரிச்சு அது எதோ தமிழ் டிபார்ட்மென்ட் சம்பந்தப் பட்ட மேட்டர்ன்னு சொல்லுறான்.

தலை..பெரிசா விஷயம் ஒண்ணுமில்ல மாங்கா, தேங்கான்னு சிம்பிள் மேட்டர் தான். உடனே நம்ம தலை மாங்கா, தேங்கான்னா கோயம்பேடு மார்க்கெட்ல்ல கிடைக்குமான்னு கேட்க..அதுப் பத்தியும் விசார்ப்பதாச் சொல்லுகிறான் ப்யூஸ் கேரியர்"

"அப்புறம் எப்படி வெண்பா எழுதுறாங்க?"

"இங்கே தான் மேட்டரே.. நம்ம ப்யூஸ் கேரியர் இந்தப் பிளாக்ல்ல எல்லாம் வெண்பா எழுதுற எஸ்.கே, வெண்பா வாத்தி மாதிரி நம்ம மக்களை எல்லாம் கடத்திட்டு வந்து நம்ம தலக் கொதஸ்க்காக வெண்பா எழுத வைக்கிறான்"

"ஆகா.. நல்லாயிருக்கு சரா மேலேப் போ"

"அப்புறம் தலைவர் வெண்பா போட்டியிலே ஜெயிச்சுப் பரிசு வாங்கப் போறார்..அங்கே ஒரு பாட்டு போடுறோம்.. நம்ம தளபதி சிபி வழக்கம் போல நல்ல வரிகளை ரெடி பண்ணிடுவார்..அப்புறம் தலைவர் பிகர் கையால வெண்பொங்கல் சாப்பிடுறார்.. அப்போ அந்தப் பிகர் தலைவர்கிட்டெ வெண்பாப் பத்தி நிறைய கேள்வி கேக்குது"

"தலிவர் மாட்டிக்கிறாரா?"

"இல்ல தலிவர் செமையா டபாய்க்கிறார். உம்பா உம்பா அப்படின்னு பஞ்சதந்திரம் பாடு எல்லாம் பாடிக் கலக்குறார். அவரை ஒரு வெண்பா பாடச் சொல்லி பிகர் பீலிங்காக் கேட்க.. தலைவர் அதை விட பீலிங்கா அன்னிக்குத் தான் அவங்க வெண்பாச் சொல்லிக்கொடுத்த குருவோட மாமியார் மண்டையப் போட்ட நாள் அதுன்னால அவர் வெண்பா பாட முடியாதுன்னு எஸ் ஆயிடுரார்"

"அப்பாடா மாட்டிக்குவாரோன்னு பயந்துட்டேன்.. தலீவர் மாட்டுன்னா ரசிகர்கள் செம கடுப்பாயிடுவாங்க"

"அது தெரியும்ண்ணா.. அப்புறமும் உடாம அந்தப் பொண்ணு தலைவரை வெண்பா எப்போப் பாடுவீங்கன்னு கேக்க தலைவர் வழி இல்லாம சனிக்கிழமை அந்த்ப் பொண்ணு பிளாக்ல்ல வந்துப் பாடுறதா ஒத்துக்கிடுறார்"

"இது கஷட்டம்டா சாமி.."

"ப்யூஸ் கேரியர் என்ன என்னமோ கொடுக்கிறான்.. எதுவும் ஓர்க் அவுட் ஆகாது போகவே தலைவர் நேரா தேவனேயபாவாணர் லைப்ரரிக்குப் போய் இரவு பகலாக உக்காந்து வெண்பா படிக்கிறார். அப்போ கவிச்சக்கரவர்த்தி கம்பர் தலைவ்ருக்குத் தரிசனம் தர்றார்.. அவர் வெண்பாவின் மகிமையை தற்காலம் எப்படி மறந்துப் போச்சின்னு தலைகிட்ட சொல்லுறார்.. இங்கிட்டு கதை டேக் ஆப் ஆகுது"

"ஆகா இதெல்லாம் ரைட்.. நம்ம தலைவர்க்கு பைட் அவர் ரெகுலர் ஸ்டைல் பஞ்ச் டயலாக், வில்லன், இந்த் மேட்டர் எல்லாம் இல்லைன்னா எப்படி?"

""இருக்குதுண்ணா மாயன்சிங் அப்படின்னு ஒரு பெரிய பிளாகர்.. கிட்டத்தட்ட ஒரு 500 பிளாக், 1256 பிளாகர் ஐடி, அப்புறம் அவருக்குன்னு ஒரு 3456 அனானி மன்றங்கள் அப்படின்னு பெரிய கை அவர்.. நட்பு காரணமா நம்ம தலைவர் மாயன்சிங் எழுதுற வெத்துப் பதிவுக்கெல்லாம் 1000 - 5000ன்னு பின்னூட்டம் போட்டு வளர்த்துவிடுறார். மாயன் சிங்க்கு எதிரா எழுதுறவங்க பதிவுக்கு எல்லாம் வ்ர்ற பின்னூட்டத்தை மேஜிக் மாடுரேஷன் முறையிலே காலி பண்ணி கலங்க வைக்கிறார்."

"ம்ம் அப்புறம்.. "

"ஒரு கட்டத்துல்ல மாயன் சிங் தலைவர் லவ்ஸ் பண்ற பொண்ணு பிளாக்கையே காலி பண்ண்ச் சொல்லித் தலைவர்கிட்டேச் சொல்ல.. அப்புறம் தலையோட சிஷ்யனை வச்சே அந்த பிளாககைக் காலி பண்ண.. தலைவருக்கும் மாயன்சிங்க்கும் முட்டிக்குது"

"இங்கே பைட் எல்லாம் வைக்கிறோம்.. அந்தப் பொண்ணுகிட்ட லவ்ஸ் சொல்ல தலைவர் அந்தப் பொன்ணு அப்புறம் அவங்கச் சொந்தங்களை எல்லாம் கூட்டிட்டு கிஷ்கிந்தாப் போறார்.. அங்கே ஒரு பாட்டு நம்ம கவிஞர் நவீன்பிரகாஷ் ப்ரியன் கிட்டே சொன்னா ஆளுக்கு ஒரு நல்ல காதல் பாட்டு போட்டுருவாங்க,,, தலைவர் காதலைச் சொல்லருதுக்குள்ளே பெரிய பிரச்சனை வந்து வில்லன் கூட மோதல் ஆயிடுது"

"ம்ம்ம் அப்புறம் என்ன நடக்குது?"

" இங்கே தான் புதுமை.. தலைவர் கோபமாப் போய் வில்லனைப் புரட்ட்ப் போக.. கம்பர் வர்றார்.. வெண்பா வழியிலே எதுக்கும் தீர்வு உண்டுன்னு சொல்லுறார். அதாவது தலைவர் வழ்க்கமாப் போடுற பின்னூட்டத்தை எல்லாம் சுத்த தமிழ் வெண்பாக்கள்ல்ல போடச் சொல்லுறார்"

"ம்ம்ம்"

"தலைவர் அப்படியே செய்யுறார்,, தனியா வெண்பாக்குன்னு பதிவு தொடங்கி அங்கே வெண்பாப் பயிற்சி கொடுக்குறார்.. அவ்ர் கிட்ட் பயிற்சி எடுத்தவங்க எல்லாம் மாயன் சிங் பிளாக்ல்ல போய் வெண்பாப் பின்னூட்டமாப் போட்டுத் தாக்குறாங்க...தமிழேத் தெரியாத மாயன் சிங் இதுன்னால டென்ஷன் ஆகுறான்"

"தலைக்கு வெண்பாவில்ல பஞ்ச் டயலாக் எல்லாம் இருக்கா?"

"நல்லாக் கேட்டீங்க போங்க.. மாயன் சிங் கடுப்பாகி கொத்ஸ் அடிக்க ஆள் அனுப்புறான்..அவங்களை நம்ம தலைவர் வெண்பாவில்ல அடி அடின்னு அடிச்சு துவைக்கிறார். அப்புறம் என்ன தியேட்டர்ல்ல விசில் பறக்குது"

"கிளைமேக்ஸ் என்ன.. ?"

"அது மட்டும் சஸ்பென்ஸ் இப்போதைக்கு இந்தக் கதையை டெவலப் பண்ணி தலைவர்கிட்டச் சொல்லுங்க..அவர் ஓ,கே சொன்னா மேலே தாக்கிடலாம்"

"ம்ம் சரி.. இந்த ப்யூஸ் கேரியர், மாயன் சிங் , தலைவர் டாவடிக்கற பொண்ணு ரோல் இதுக்கு எல்லாம் யாரைப் போடலாம்ன்னு யோசிக்கிறேன்"

" அண்ணே ப்யூஸ் கேரிய்ர் ரோல் நான் பண்ணட்டுமா.. நல்லா நடிப்பேனண்ணா"

சராவை ஒரு ஆங்கிளாய் பார்த்துச் சிரித்தேன்.. தலைவர் ஆன்லைன் வருவாரா எனக் காத்திருக்கிறேன்.

இப்போதைக்கு இதுவரை நாங்கள் யோசித்தக் கதை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.

தலைவரின் அன்பு ரசிகர்கள் கதையை மேலும் மெருகேற்ற ஐடியாக்களை அள்ளிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஆங்.. படம் பேர் அதான்ங்க தமிழ் பெயரா வைக்கணும்ன்னு யோசிச்சிகிட்டு இருக்கோம் அதுக்கும் ஐடியா கொடுங்களேன் ப்ளீஸ்

Wednesday, October 11, 2006

பார்த்தீபா ஓ பார்த்தீபா

வணக்கம் மக்கா,

உள்ளாட்சித் தேர்த்ல் மேடையிலே ஒரு கழகம் இன்னொரு கழகத்தைத் திட்ட இன்னோரு கழகம் வந்த இன்னொரு கழகத்தைத் திட்ட இதைப் பத்திரிக்கைக்குப் பத்திரிக்கைப் போட்டோவோடப் போட்டுத் தாக்க.. இப்போவெல்லாம் மனசுக் கஷ்ட்டமாப் போச்சுன்னா அப்படியே நம்ம தமிழ் பேப்பர் எடுத்துப் படிக்க ஆரம்பிச்சுருவேன்.. அப்புறம் என்ன வடிவேல் காமெடி சீன் பார்த்தா மாதிரி மனசும் லேசாயிடும் அடுத்த வேலையும் நமக்கு சுளுவா ஓடும்...

இந்த வாரம் பேப்பரைப் பொரட்டும் போது படிச்ச மேட்டர் மனசை ஆக்ஸா பிளேட் வச்சு கீறுன மாதிரி வலியெடுத்துப் போச்சுங்க.. யார் கிட்ட என் வலியைச் சொல்லுவேன்.. இங்கன நம்ம கச்சேரியை விட்டா வேற வழி.

எல்லாம் இந்த தீவிரவாத மேட்டர் தான்.. அட தீபாவளிக்கு என்னப் படம் ரிலிஸ் ஆகும்ன்னு பார்க்கலாம்ன்னு பேப்பரைப் பொரட்டுன்னா.. அங்கிட்டு பாம் போட்டான்க.இங்கிட்டு ராக்கெட் விட்டானுங்கன்னு செய்தி முழுக்க புகை மண்டலமாவே இல்ல இருக்கு.. இது என்னடா கலாட்டான்னு அந்தச் செய்தியைப் படிக்க ஆரம்பிச்சேன்..தோடா தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரம் கூட இல்ல.. அதுக்குள்ளே காஷ்மீர் பார்ட்ர்ல்ல வெடி வெடிக்க ஆரம்பிச்சுட்டான்வ..

எல்லைத் தாண்டும் பயங்கரவாதிகள் அப்புறம் எல்லையை நோண்டும் தீராவியாதிகள்ன்னு படிச்சுச் சலிச்சு போன மேட்டர் தான். இருந்தாலும் படிச்சேன்...
காரணம் பார்த்தீபன்...

பார்த்தீபன் எனக்கு உறவுக்காரன் இல்ல.. சினேகிதம் கூட கிடையாது.. அவன் யாரோ எவ்னோ அப்புறம் ஏன் அவ்வள்வு அக்கரைன்னு யோசிக்கிறேன்... இன்னும் பதில் தெரியல்ல...

பார்த்தீபன் 23 வயசு பையன்..சென்னைப் பம்மலைச் சேர்ந்த இளைஞன். அவன் தந்தை இந்திய ராணுவத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். இந்த இளைஞனும் இப்போது தான் பயிற்சி முடித்து ராணுவப் பணியில் சேர்ந்து இருக்கிறான். இப்போது காஷ்மீர் தீவிரவாதிகளுடன் நடைப்பெற்ற போரில் தன்னுயிரை இழந்து விட்டான். அவ்வளவு தான் செய்தி..

இதைப் படிச்சிட்டுத் தான் எனக்கு ஒரே பிலீங்க்ஸ்...

தினம் தினம் உலகின் பல்வேறு பகுதிகளில் எத்தனையோ அப்பாவிகளும் ராணுவவீரர்களும் இந்த தீராத வியாதியாம் தீவிரவாதத்தால் தாக்கப்பட்டு இறந்துக் கொண்டுதானிருக்கின்றனர்.
அப்போது எல்லாம்,
ஒரு சின்ன அச்சோ..
கொஞசம் அதிகப்பட்சமாய் ஒரு அய்யோ..
இன்னும் மிஞ்சிப்போனால் சில நிமிட வருத்தம்.. அவ்வளவுத் தான் தோன்றியிருக்கிறது என்னிடம்...

இந்த பார்த்தீபன் விஷ்யத்தில் மட்டும் பதிவுப் போட்டும் புலம்பும் அளவிற்கு என்னாயிற்று என்று இன்னும் யோசிக்கிறேன்..
அவன் என் சென்னைப் பட்டணத்தைச் சேர்ந்தவன் என்பதாலா?
பம்மல் எனக்குத் தெரிந்த ஊர் என்பதாலா?

தீவிரவாத்தின் வலி எனக்கு வெகு அருகினில் உணரப்படும் போது எனக்கு இன்னும் அதிகமாய் வலிக்கிறது.. அது தான் காரணம்..

முன்னொரு முறை திருச்சி சரவணனின் மரணம் என்னைத் தாக்கியது...இப்போது பார்த்தீபன்...

எங்கிட்டோ...
எவனோ....
எப்படியோ...
எக்கேடு நடந்தா எனக்கென்ன?
இந்த நினைப்பு என்னை என்னிடமே தலைக்குனிந்து நிற்க செய்கிறது...

அட வேற என்னச் சொல்ல ஒரு ரெண்டு மூணு நாளு அந்த பயலை நினைச்சு மனசுக் கஷ்ட்டப்படும் அப்புறம் நம்ம மனசு கழட்டி வச்ச எருமை மாட்டு தோல் சட்டையை மாட்டிகிட்டு எல்லாத்தையும் மறந்துட்டு நம்ம பொழைப்பைப் பாக்க கிளம்பத் தான் போறேன்.. அலுவலகத்திலேப் பொட்டியத் தட்டிட்டு மேலதிகாரிசொல்லுறதைக் கேட்டுகிட்டு.. ஒண்ணாம் தேதியானா ஏ.டி.எம் வாசல்ல கையிலே கார்டை வச்சிகிட்டு தேவுடு காத்துகிட்டு.. இது தானே நம்ம வாழ்க்கை.. இதுல்ல ஏன் இந்த வருத்தம்.. நாட்டைப் பத்திய் கவலை கத்திரிக்கா எல்லாம்... (கேக்குது கேக்குது கேட்கிற கேள்வி எல்லாம் கேக்குது) ஆனா என்னச் செய்வேன் முடியல்லயே.. எங்காவது இப்படி எதாவது நடந்தா ஓரமா உக்காந்து ஒப்பாரி வைக்கவாது விடுங்கப்பா

இந்தப் பதிவின் மூலம் பார்த்தீபா.... உன் வீரத்திற்கும் தியாகத்திற்கும் நான் தலை வணங்குகிறேன்..
உன் இழப்பைத் தாங்கிக் கொள்ள உன் குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டிக்கொள்கிறேன்.

Tuesday, October 03, 2006

வரி விலக்கு

வணக்கம் மக்கா,
உழைப்பாளி இல்லாத நாடு தான் இங்கே இல்லையேயாஅவன் உழைப்பாலே பிழைக்காதப் பேர் தான் இங்கே இல்லையேயா.. எதோ ஒரு பண்பலைவரிசையில் தலீவர் பாட்டுக் கேட்டுகிட்டு இருந்தேன்.

அப்போ நம்ம பங்காளி ராஜா ( கொங்கு ராசா இல்லீங்க) சனிக்கிழமையாச்சே.. பய வேற பேச்சு இலர் வாழ்கை மறுபடியும் வாழ்றானேன்னு ஒரு வித வருத்தமானப் பாசத்தோடு நம்மளைப் பாக்க வந்து இருந்தான்.

ஐ.நா சபை ஷசி தரூர் ஆரம்பிச்சு அதிமுக சசி சித்தி ( அவக அம்மான்னா இவக சித்தி தானே) வரைக்கும் ரெண்டு பேரும் மோட்டுவளை இடிஞ்சுத் தகர அள்வுக்குப் பேசிகிட்டு இருந்தோம். அப்போ நம்ம பங்காளி அவனுக்கு சென்னையிலே பெரிய கம்பெனியிலே ஒரு நல்ல தொகையிலே ஒரு வேலைக் கிடைச்சுருக்குன்னு அவ்வளவு சுரத்தையே இல்லாமச் சொன்னான்.

அட மாப்பூ இது பீரைப் பொங்க வச்சு சிக்குன கோழியை வறுத்து தலைகீழாத் தொங்கவிட்டுக் கொண்டாட வேண்டிய மேட்டர் ஆச்சே இப்படி கொசு கடிப்பட்டு சிக்குன் குனியா வருமான்னு தவிக்கறவன் மாதிரி சொல்லுற?

"அப்புறம் என்னப் பண்றது.. சம்பளம் அதிகம் தான். ஆனா எவ்வளவு அதிகம் வருதோ அம்புட்டையும் வரியாக் கட்டி வறுமைக் கோட்டுக்குக் கீழேப் போயிருவேன் போலிருக்கே"

"அடக் கிரகம் புடிச்சவனே வரி கட்டுறது எவ்வளவு நல்ல விஷயம் தெரியுமா.. நாம கட்டுற வரி இந்த நாட்டுக்கே உயிர் மாதிரி... நாட்டோட வளர்ச்சிக்கு ஊட்டம் மாதிரி.. வரி தாண்டா நம்ம நாட்டையே வாழ வைக்குது புரியுதா?"

பங்கு நான் பேசுனதைக் கேட்டு விழி பிதுங்கிட்டான். ஒரு நிமிசம் என்னையே மேலும் கீழும் பார்த்துட்டுக் கேட்டான்.
"ஆமா வர்ற உள்ளாட்சித் தேர்தல்ல அம்மா கட்சியிலே இல்ல திராவிடர் கேப்டன் கட்சியிலே நிக்கப் போறீயா என்ன?"

"ஏன் அப்படி கேக்குற?.. நான் அரசியல் பேசவே இல்லியேடா"

"அட என்ன மாப்பூ... முதல்வர் கலைஞரை இம்புட்டுத் தாக்கிப் பேசிபுட்டு இப்படி ஜகா வாங்குற?"

"நான் எப்போடா கலைஞரைத் தாக்குனேன்?"

"நீ தாண்டா செமத் தாக்கு தாக்குன!"

"டேய் இங்கிட்டு கலைஞர் விசுவாசிக நிறைய பேர் படிக்க வருவாங்க.. வம்பு பண்ணி வச்சிட்டுப் போயிராதடா"

"மாப்பூ... நீ என்னச் சொன்ன வரி நாட்டுக்கு உயிர், வளர்ச்சி அப்புறம் நாட்டையே வாழ வைக்குதுன்னு.. இப்போ நம்ம முதல்வர் கலைஞர் எப்படி வேணும்ன்னாலும் படம் எடுத்துட்டு தலைப்பை மட்டும் தமிழ்ல்ல வச்சுட்டா அதுக்கு வரி விலக்குன்னு சொல்லியிருக்காரே அப்படின்னு நாட்டோட உயிரை அவர் எடுத்துட்டார்ங்கற.. நாட்டோட வளர்ச்சியைத் தடுத்துட்டார்ன்னு நீ சொல்லுற.. நாட்டோட வாழ்வையே குலைச்சுட்டார்ன்னு நீ குற்றம் சாட்டுற.. அப்படித் தானே"

"ஆகாக் கிளம்பிட்டான்யா. இனி பூ வச்சு பொட்டு வைக்காம போக மாட்டான் போலிருக்கே"

"என்ன முணுமுணுப்பு"

"மச்சான்.. கலைஞர் தமிழினத் தலைவர்டா, தமிழை வளர்க்கறதை அவர் தன் வாழ் நாள் கட்மையாச் செஞ்சுகிட்டு இருக்கார்.. இப்போ அதனாலத் தான் படமெல்லாம் தமிழ் பெயர் இருந்தா தமிழ் வளரும்ன்னு அப்படிச் சொல்லியிருக்கார்டா"

"அதுன்னால நாட்டுக்கு எவ்வளவு நஷ்ட்டம் தெரியுமா?"

"அது நஷ்ட்டம் இல்ல்டா தமிழ் வளர்க்க நாம் கொடுக்கும் விலை.."

"ஆக எம்டன் மகன் எம் மகன் ஆனாதல்ல... ஜில்லென்ற ஒரு காதல் சில்லுன்னு ஒரு காதல் ஆனாதால்ல... அப்புறம் காட்பாதர் வரலாறு அப்படின்னு மாறுனதால்ல.. தமிழ் வளர்ந்துச்சுன்னு சொல்லுற?"

பங்காளி கேட்டக் கேள்விக்கு என்னப் பதில் சொல்லுறதுன்னு யோசிச்சக் கேப்பல்ல அடுத்தக் கேள்விய வேற கேட்டான்.

"அப்ப்டின்னா.. நான் வேலைப் பாக்குற என் கம்பெனியும் தன் பெயரைத் தமிழ்ல்ல மாத்திகிட்டா அங்கே வேலைப் பாக்குற எல்லாருக்கும் கலைஞர் வரிவிலக்குக் கொடுப்பார்ன்னு சொல்லுற?"

"ஆகா.. இப்படி வேற கிளம்பியிருக்கீங்களா? ஆமா.. இன்போசிஸ்,விப்ரோ, டி.சி.எஸ், ஹெச்.சி.எல், ஐ பிளைக்ஸ் இதுக்கெல்லாம் தமிழ் பெயரா.. என் சின்ன மூளைக்கு தமிழ் படுத்துதல் ரொம்பக் கஷ்ட்டம்டா சாமி... ப்ளீஸ் ஹெல்ப்....

"மச்சான் இன்னொருக் கேள்வி..." பங்கு ஆரம்பிச்சான்.

"போதும் நான் உள்ளாட்சித் தேர்தல் அன்னிக்கு ஊரை விட்டேப் போயிடுறேன்.. என்னிய விட்டுடு.."

tamil10