Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Sunday, June 07, 2009

ARCHIE+VERONICA-BETTY


ஒரு பதினைஞ்சு வயசுல்ல.... அமெரிக்கா அப்படிங்கற ஊரை ஹாலிவுட் படங்கள் மூலமாப் பாத்து தெரிஞ்சுகிட்டத விட ஒரு காமிக்ஸ் புத்தகம் மூலமாத் தான் நான் அதிகமா தெரிஞ்சுகிட்டேன்...

அந்த பெருமைக்குரிய காமிக்ஸ் புத்தகத்தின் பேர் ஆர்ச்சி... ஆரஞ்ச் மண்டை ஆர்ச்சி...மஞ்சள் நிற கூந்தலாள் பெட்டி கூப்பர்...பணக்கார அழகி வெரோனிக்கா லாட்ஜ்...அமெரிக்க டீன் ஏஜ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாக் கிட்டத் தட்ட அறுபது எழுவது வருசமா இருக்காங்க...

ரிவர்டேல்ன்னு ஒரு ஊர்... அதுல்ல ஒரு ஹஸ்கூல்..அதுல்ல படிக்கிற பசங்க..அவங்க வாழ்க்கை...அவங்க நட்பு.. விரோதம்..காதல்...மோதல்...கலாட்டா இது தான் அந்த காமிக்ஸின் அடிநாதம்

கதையின் நாயகன் ஆர்ச்சி...அசட்டுத் தனமான காதல் பையன் (ப்ளே பாய்)...அவனையே சுத்தி சுத்தி வரும் அடுத்த வீட்டு பொண்ணு மாதிரியான அழகான குண கொண்ட அம்சமான பொண்ணு பெட்டி கூப்பர்...அவளை அவ்வளவாக் கண்டுக்காம ஆர்ச்சி டாவடிக்கும் கோடீஸ்வர வீட்டு குமரி வெரோனிக்கா லாட்ஜ்...அவளுக்கு சைட்ல்ல ரூட் விடும் வில்லன் ரெஜி மேன்டில்.... ஆர்ச்சியின் அந்தரங்க நண்பன் சாப்பாட்டு ராமன் ஜக்ஹெட் ஜோன் ஸ்.... பள்ளியின் பயில்வான் பையன் பிக் மூசா...அவன் சைட் மிட்ஜ்.... படு புத்திசாலி மாணவன் டில்டன் டாய்லி... பள்ளி தலைமையாசிரியர் வெதர்பீ...ஆசிரியை மிஸ் கிரண்டி.... கான்டீன் கடைக்காரர் பாப் டேட்...


இவங்க எல்லாரும் தான் கதையின் பாத்திரங்கள்...இதை எல்லாம் படிச்ச காலத்துல்ல இதை மாதிரி நம்ம பள்ளிக் கூடம் இல்லையேன்னு ஏங்காத நாள் கிடையாது...அமெரிக்கான்னா இப்படித் தான் இருக்குமோன்னு நினைச்சு நினைச்சு பெருமூச்சு விட்டது உண்டு...

முக்கியமா அந்த பீச் காட்சிகள்... பில்லா நயந்தாரா எல்லாம் ஒதுங்கி நிக்கணும்...பெட்டியும் வெரோனிக்காவும் பிக்னி போட்டுகிட்டு வந்தா....ஒரே கிளுகிளு மயம் தான்...

ஆர்ச்சி அடிக்கடி வெரோனிக்காவிடம் பல்ப் வாங்குவதும்... பின் பெட்டி வந்து ஆறுதலாய் இருப்பது என அந்த முக்கோணக் காதல் அமெரிக்கா டீன் ஏஜ்களிடம் மட்டுமின்றி பல தலை முறை உலக டீன் ஏஜ் காமிக்ஸ் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளைக் கொண்ட ஒரு விசயம்..

அந்தக் காதல் நம்ம ஊர் சிந்துபாத் கன்னித்தீவு கதைக்கு ஈடாப் போயிட்டு இருந்தது...இதுல்ல பசங்க பக்கம் பாத்தீங்கன்னா..பாதி பேர் பெட்டி பக்கம்...இன்னும் கொஞ்சம் பேர் வெரோனிக்கா பக்கம்...

எப்படின்னா ஜொள்ளுக்கு வெரோனிக்கா... ஒரு இனிய சொல்லுக்கு பெட்டின்னு ரசிகர் பட்டாளமே உண்டு..

சைட் அடிச்சா வெரோனிக்கா மாதிரி ஒரு பிகரைத் தான் சைட் அடிக்கணும்ன்னு கனவு கூட கண்டதுண்டு...ப்ச் பலிக்கல்லங்கறது வேற் மேட்டர்..பட் கல்யாணம் குடும்பம்ன்னா பெட்டி மாதிரி பொண்ணு தான் ரைட்டுன்னு பீல் பண்ணதும் உண்டு...

இப்போ எதுக்கு இந்த புராணம்ன்னு கேக்குறீங்களா... ஆண்டாண்டு காலமா இப்படியே தெய்வீக காதலர்களாக போயிட்டு இருந்த கதையிலே ஒரு முடிவு வரப் போகுதாம்... மேல் நாட்டு காமிக்ஸ் உலகமே ஆடி போய் கிடக்கு அதைக் கேட்டு...

ஆர்ச்சி கடைசியா லவ் எல்லாம் போதும்... சரி கண்ணாலம் பண்ணிக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டாப்ப்ல்லயாம்..... அங்கே தான் ட்விஸ்டு... சரி நம்மாளு எப்படி தான் ஜொள்ளு மன்னனா இருந்தாலும் மேரேஜ் மேட்டர்ல்ல கரெக்ட்டான முடிவு எடுத்துடுவான்னு நினைச்சா... கவுத்துட்டாப்பல்ல..டோட்டல்லா கவுந்துட்டாப்பல்ல..

ஆர்ச்சி பணக்கார பந்தாக் குட்டி வேரோனிக்காவைக் கட்டிக்கப் போறானாம்.... ம்ம்ம் புத்திசாலித்தனமான முடிவுங்கறாய்ங்க நம்ம கூடக் காமிக்ஸ் படிச்ச பயல்வ பாதி பேர்... சொத்து பத்து கார் பங்களா..மாமனார் புண்ணியத்துல்ல நல்ல வேலைன்னு செட்டில் ஆயிடலாம்ன்னு ஆர்ச்சி சரியான முடிவு எடுத்துருக்கான்னு சொல்லுறாங்க...

ம்ம்ம் நான் என்ன சொல்லுறேன்னா...படையப்பாவுல்ல தலைவர் சொல்லுவாரே..பெண்கள்ல்ல சாத்வீகம்..ப்ரோசதகம்..பயனாகம்..இப்படி பல வகைன்னு...அதுல்ல நம்ம புள்ள பெட்டி சாத்வீகம்... அந்த புள்ள வெரோனிக்கா ப்ரோசதகம் வகை...பின்னாடி பயனாகமாவும் மாறலாம்...

சாத்வீகத்துக்கே சல்யூட் வச்சிருக்கலாம்....ஆனா என்னப் பண்ணுறது முடிவு வேற ஆயிடுச்சு,...வேற என்ன சொல்ல


HAPPY MARRIED LIFE ARCHIE N VERONICA... BETTY MAY U GET THE RIGHT GUY...

Friday, March 13, 2009

அழுவாச்சி காவியம்

கவிப்பேரரசு அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்..அவர் எழுதிய பல புத்தங்களைத் தேடிப் பிடித்து படித்து சுவைத்திருக்கிறேன்...திரையில் அவர் வைத்த படைப்புகளின் சுவையை விட அவரது புத்தகப் படைப்புகளுக்கு சுவை அதிகம் எனக் கருதுபவர்களில் நானும் ஒருவன்...

கவிஞர் எழுதிய சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் புத்தகம் என் கல்லூரி நாட்களில் என்னை மிகவும் கவர்ந்த பாதித்த ஒரு புத்தகம் அதை மீண்டும் மீண்டும் படித்திருக்கிறேன்,.. பலருக்குப் படிக்கப் பரிந்துரைத்திருக்கிறேன்.. பரிசாக கூட அளித்துள்ளேன்...

கள்ளி காட்டு இதிகாசம் கவிஞரின் இன்னொரு யதார்த்ததை வாசகனுக்கு பக்குவ பதார்த்தமாய் அளிக்கப் பட்ட ஒரு கவின் மிகு படைப்பு...
அணைக் கட்ட தம் கிராமம் தொலைத்த மக்களின் வாழ்க்கை முறையையும் வலியையும் ஒருங்கே பதிவு செய்திருப்பார்...

அந்த பேயத் தேவக் கிழவனின் ஒவ்வொரு அனுபவமும் நம்மையும் அவனுடன் அழைத்துச் சென்ற வாழச்செய்யும்...

கவிஞரின் இன்னொரு இலக்கிய மைல் கல்லாய் வருணிக்கப்படும் கருவாச்சி காவியம் புத்தகத்தை வாசிக்க வெகு நாட்களாக எண்ணியும் பல வித காரணங்களால் வாசிக்க இயலாது போனது.. இந்த முறை புத்தகக் கண்காட்சியில் காசு கொடுத்து வாங்கி இரண்டு மாதம் கழித்து இப்போது தான் வாசிக்க முடிந்தது...

ம்ம்ம் மதுரை மண் வாசனை ஒவ்வொரு பக்கத்திலும் அள்ளி பூசப்பட்டுள்ளது... வட்டார வழக்கில் தனி ராஜ்ஜியமே நடத்தியுள்ளார் கவிஞர்....அந்த சொக்கத் தேவன் பட்டியின் வீதிகளில் கவிஞர் நம் கரம் பிடித்து அழைத்துச் சென்று உலா விடுகிறார்.. ஒரு கட்டத்தில் மக்கா.. இது உங்க ஊர்.. போய் பழகி பாருங்கய்யான்னு அங்குள்ள மக்களோடு நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்....

வெள்ளந்தி மக்களின் வினயமற்ற வாழ்க்கையை வாகாக நமக்கு சொல்லிக் கொண்டே போகிறார்... கிராமத்து சோறு வைக்கிறார்... பட்டிக்காட்டு பாசம் குழைத்து குழம்பும் பரிமாறுகிறார்...இந்த புள்ள கருவாச்சி கதையைக் கேளுங்கய்யான்னு அங்கனக் குள்ளேயே வாசகனுக்கு ஒரு குடிசையும் வேய்ந்து குடியே அமர்த்துகிறார் கவிஞர்...

அந்தூரூ மாடு கன்னு ஆடு குட்டி அம்புட்டு மேலயும் நமக்கு ஒரு பிடித்தம் ஏற்படுத்துகிறார்...பாவப்பட்ட மக்கள் வாழ்க்கையின் வலியோடு அவர் தம் வலவிகளின் குலவி கலவி என சகல சங்கதியையும் நமக்கு சத்தமின்றி கவிஞர் கதையாகச் சொல்லிக் கொண்டே போகிறார்...

ஆகா.. ஒஹோன்னு அப்படியே பயணம் போவுது வாசகனுக்கு,,,,
ஆனாலும் படிக்க படிக்க ஒரு சின்ன நெருடல்.... கருவாச்சி மெய்யாலுமே பாவப்பட்டவளா... இல்ல பாவப்ட்டவளா காட்டப் படுறாளான்னு.... கருவாச்சியின் வாழ்க்கை சம்பவங்கள் பலவும் வலிந்து திணிக்கப்பட்டது போலவே தெரிகிறது....
காவிய நாயகன்னா.... நாயகனை நல்லவனா... வல்லவனா... நாலும் தெரிஞ்சவனா.. காட்டணும் கஷ்ட்டம் எல்லாம் தாண்டி கடல மலைத் தாண்டி செயிக்கறவன் காவிய நாயகன் .. காவியத் தலைவன்...

ஆனா அதே நேரம் ஒரு பெண் பிள்ளையை காவிய நாயகிக்கணும்னா... அவளை ஒரு பாவப்பட்ட பிறப்பாவே உருவகிக்கணும்ங்கறது என்ன சட்டமோ தெரியல்ல...

அந்தப் பெண்ணுக்கு எல்லாமே கஷ்ட்டமாகவே வருவதும்... அவள் வாழ்க்கையில் அவளுக்கு உதவ வருபவருகளுக்கும் பெருங் கஷ்ட்டம் வருவது எனவும் கருவாச்சி கதையிலும் கவிஞர் அதே சட்டத்தை மீறாமல் கதையை செலுத்தியிருப்பது சற்று சங்கடம் அளிக்கிறது...ஒரு கட்டத்தில் கருவாச்சி காவியம்ங்கறதுக்கு பதில் அழுவாச்சி காவியம்ன்னே பேர் வச்சிருக்கலாம் போலிருக்கேன்னு யோசிக்க வைக்கிறார் கவிஞர்...

கதையின் முடிவு... தொலைக்காட்சி நெடுந்தொடரின் வாடை அடிக்கிறது... அந்தக் காலத்து தமிழ் படத்தின் முடிவு வாசனை வேறு... கல்லானாலும் கணவன்..புல்லானாலும் புருசன்....

சொக்கத்தேவன் பட்டி வீதிகளையும் மனிதர்களையும் ரசித்த அளவுக்கு என்னால் எனோ கருவாச்சிக்கு நடப்பதாய் கவிஞர் சொல்லும் சம்பவ்ங்களை ஏற்கவும் முடியவில்லை...ஒப்பவும் முடியவில்லை...

கருவாச்சியை கடும் பிரயத்தனப் பட்டாவது காவிய நாயகி ஆக்கியே தீருவேன் எனக் கவிஞர் முயலவது ஆங்காங்கே சம்பவங்களாய் ஒட்டுதல் இன்றி விலகி நிற்கின்றன...

ம்ம்ம் அடுத்தக் கவிஞரின் படைப்பில் தத்துவ அலங்காரங்களின்றி யதார்த்தங்களின் அழகு தோரணங்கள் தொங்குமா என ஆவலான எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறேன்...

Monday, December 18, 2006

வாழக்கைக் கச்சேரி

வணக்கம் மக்கா,

இந்த வாரமும் மறுக்க வெயிலை... (படத்தத் தான்) பாக்க ஒரு குரூப் என்னிய கார் எல்லாம் வச்சி கடத்திக் கொண்டு போய் டிக்கெட் எடுக்க விட்டக் கொடுமைய நான் என்னன்னு சொல்லுவேன்..

இந்த வருசம் முடிய இன்னும் ஒரு 10 - 12 நாள் பாக்கி இருக்கும்ன்னு நினைக்கிறேன்...
இந்த சமயத்துல்ல நம்ம நடு மண்டையிலே ஒரு கேள்வி உக்காந்துகிட்டு நாட்டியமாடுதுங்க... விக்கி பயல்வளைக் கேளுங்கன்னு சொல்லுறீயளா.. ம்ஹும் சில விஷயங்களுக்கு நமக்கு நாமே திட்டம் தாங்க சரியா வரும்...

வேற ஒண்ணும் இல்லைங்க.. ஒரு சிறப்பான வாழ்க்கை வாழ என்ன வழின்னு தான்ங்க கேள்வி ஆரம்பிச்சது... ஆரம்பிச்சு ஆரம் வட்டம் ஆர்ப்பாட்டம்ன்னு அண்டமெல்லாம் சுத்தி வந்து நம்ம நடு மண்டையிலே நின்னுக்கிட்டு பதில் சொல்லுங்கண்ணேன்னு செம டார்ச்சர் கொடுக்க ஆரம்பிச்சது..

நானும் என்னவெல்லாம் சொல்லிப் பார்த்தேன்..

அடேய் பய மக்கா..

வாழ்க்கை ஒரு வாழப் பழம் அதை உரிச்சு வாயிலே போட்டவன் எல்லாம் ஆளைக் காணும்..

அதுன்னாலே அது அப்படித் தான்... ஆத்து வெள்ளம் மாதிரி வாழ்ந்துட்டுப் போயிருணும் ரொம்பக் கேள்வி கேட்கப்பிடாதுன்னு பச்சப் புள்ளக்குச் சொல்லுற மாதிரிச் சொல்லியும் அது அழிச்சாட்டியம் தாங்கல்ல மக்கா....

எப்பவோ நம்ம பதிவுலகச் சகா மனதின் ஓசையார் ஒரு புத்தகத்துப் பெயரைச் சொல்லி படி மாப்பூன்னு அன்பா நம்ம அறிவு வளர்ச்சிக்கு வரப்பு வெட்டியிருந்தார்.. அவர் சொன்னக் கையோட மூர் மார்கெட் பக்கம் அலைஞ்சி திரிஞ்சு அந்தப் புத்தகத்தை வாங்கிட்டேன்...

அந்த புத்தகத்தில் ஒரு குருவும் சிஷ்யனும் பேசிக்கிற மாதிரி போதனைத் தோரணையிலே கதை நகரும்... நிறைய விஷ்யங்கள் அட போட வைக்கும் படியான் செய்திகள்..

சே இது இம்புட்டு எளிமையான விஷ்யம் ஆச்சே... செய்யலாமே...

அப்படிங்கற மாதிரி செய்திகள் அந்தப் புத்தகம் முழுக்க வழிஞ்சு கிடக்கு...

புத்தகத்தைப் படிக்கும் போது பய மக்கா நம்ம வாழ்க்கையை நம்ம முதுகு பின்னால வச்சுகிட்டு வேற எங்கிட்டு எல்லாமோ தேடுறோமேடான்னு ஒரு உணர்வு தட்டுச்சுங்க...

சாமி எதைத் தேடிடா இம்புட்டு வேகமா ஓடுற கொஞ்சம் நில்லுய்யா.. பின்னாலேப் பார்.. ஓன் வாழ்க்கை அங்கிட்டே நிக்குது நீ தான் அதை விட்டுட்டு எங்கிட்டோ ஓடிக்கிட்டு இருக்கேன்னு சொல்லாமச் சொல்லுது அந்தப் புத்தகம்.

ஒரு சின்ன விடுகதை மாதிரி கதையைச் சொல்லி குரு தன் சிஷ்யனுக்கு வாழ்க்கையை எதிர் கொள்ளக் கொடுக்கும் டிப்ஸ் சட்டுன்னு நம்ம மனசுல்லயும் ஒட்டிக்குது..

ஏழு எளிமையான் வழிவகைகளை ரொம்பவே அழுத்தமாச் சொல்லியிருக்கார் ஆசிரியர்.

முதலில்.. நம்ம எல்லோருக்குமே ஆட்சி அதிகாரம்ன்னா ஒரு சின்ன மயக்கம் இருக்கத் தான் செய்யுது.. அதுக்குத் தான் நமக்குன்னே ஆண்டவன் ஒரு பெரிய ஏரியாவை உள்ளுக்குள்ளே ஒதுக்கிக் கொடுத்து இருக்காரே ஆனாப் பாருங்க நாம அதைக் கண்டுக்குறதே இல்லை.. ஆமாம்ங்க
ஆளணும்.. நாம ஒவ்வொருத்தரும் நம்ம மனசை ஆளணும்....

மனத்தை ஆண்டாப் போதுங்க.. அமைதியான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட்ட மாதிரி தான்..

இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் வாழ்க்கையின் நோக்கம்ன்னு ஒண்ணுக் கண்டிப்பா இருக்கும்ன்னு நம்புங்க.. உங்க வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டுபிடிச்சு.. உங்க மனசு கிட்ட அந்த நோக்கத்தை அறிமுகப் படுத்தி கைகுலுக்க வைங்க... அப்புறம் என்ன மனம் நோக்கத்தின் இலக்கு நோக்கி மெதுவா மெதுவா உங்களை நகர்த்திச் செல்லும்

நோக்கம் புரிந்தாலே வாழ்க்கையிலே பாதி ஏக்கங்கள் தீரும்

நோக்கம் தெரிஞ்சுப் போச்சு அதை நோக்கி அப்படியே நகரும் போது லைட்டா நம்ம கவரவுத்துக்குப் பங்கம் வர்றலாம்.. விதி வில்லங்கமா டேகரேட் பண்ணி வந்து நம்ம வீதியிலே இழுத்து விட்டு வித்தைக் காட்டலாம்.. எதுவும் நடக்கலாம் இல்லையா... அதுனால நாம என்ன செய்யணும்..நம்மை நாம சுய பரிசோதனைச் செஞ்சுகிட்டு சுய் மேம்பாட்டுல்ல இறங்கிடணும்.. அதுல்ல ஒரு விடா முயற்சி வேணும்.. நமக்கு நாமே முதல்ல விசிலைப் போடுவோம் அப்புறம் ஊரே கூட வந்து கச்சேரி வைக்கும் பாருங்க..

தொடர்ச்சியான சுய மேம்பாடு வாழ்கையை அதன் உயரங்களுக்குச் வளர உரம் போடும்

அடுத்து சொல்லுறது தாடி வச்ச நம்ம வள்ளுவர் தாத்தால்ல இருந்து தடி பிடிச்சி நடந்த நம்ம ஒளவையார் பாட்டி வரைக்கும் சொல்லிக் கொடுத்த மேட்டர் தான்.. ஒழுக்கம்..

இதைக் கூடவே வச்சிகிட்டா நிறைய வேண்டாதக் கும்பலை எல்லாம் நம்ம வாழ்கையிலே கேரண்டியாக் கும்மியடிக்காமாப் பாத்துக்கலாமாம்.

ஒழுக்கம் அஸ்திவாரம் போட்டு ஒவ்வொரு செங்கல்லாப் பாத்து பாத்துக் கட்டுன வாழ்க்கைங்கற வீட்டுக்கு டாப் மாதிரி அதாவது கூரை மாதிரி ஓ.கேவா

நெக்ஸ்ட் மேட்டர் இன்னும் ரொம்ப டக்கர் விசயம் தான்.. கண் முன்னாடியே காணமாப் போயிட்டு இருக்கும்.. எந்த போலீஸோ.. எந்த ராணுவமே வந்தாலும் மீட்டு தர முடியாது.. அதுனால அதை பயங்கர ஜாக்கிரதையா பயன் படுத்திக்கணுமாம்.. அது படா தில்லாங்லங்கடி மேட்டர்.. எல்லாருக்கும் சமம் தான்.. ஆனா அதை எப்படி மாத்தி வச்சிக்குறோம்ங்கறது நம்ம கையிலே தான் இருக்கு.. இன்னும் புரியல்லயா..

எங்க ஆபிஸ்ல்ல நானும் 10 மணி நேரம் தான் வேலைப் பாக்குறேன்... எங்க நிறுவனத்தின் முதலாளியும் 10 மணி நேரம் தான் வேலை??!!! பாக்குறார்..என்னோட பத்து மணி நேரங்களுக்கு பொருளாதார ரீதியாகக் கிடைக்கும் மரியாதை அவரோட 10 மணி நேரத்து கூட ஒப்பிட்டுப் பார்த்தா ரொம்ப... ஹி..ஹி

ஆக அது என்ன விசயம்ன்னு விளங்கிச்சா மக்கா.. காலத்தை மதிக்கக் கத்துக்கிட்டா நம்ம வாழ்க்கைக்கும் மதிப்பு கூடுமாம்

உனக்கென வாழ்வது வாழ்க்கை இல்லை.. ஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லை.. ஓடனே ரொம்ப யோசிக்காதீஙக்... அடுத்தவங்களுக்கு பலன் தர்ற மாதிரி ஒரு மரம் ந்ட்டு வச்சு இருக்க வரைக்கும் அதுக்கு தண்ணி ஊத்துறது கூட ஒரு சேவைத் தான்...

நல்லதொரு வாழ்க்கை நாலு பேர்க்கு நன்மைச் செய்வதில் அடையாளம் காணப் படுகிறதாம்.

கடைசியா.. 2006க்கு வாங்க... முடிஞ்சுப் போச்சு 2005.. வரப் போகுது 2007.. சூப்பரா அமையும் கவலை வேண்டாம்.. ஆனா இப்போ இன்னிக்கு இன்னும் மீதியிருக்க் நேரம் அதுல்ல வாழுவோம்..

கடமையச் செய்ங்க... தோடா இன்னிக்குத் தான் என் வாழ்க்கையிலே கடைசி நாள்ன்னா எப்படி இருப்போமோ அப்படி வாழணுமாம்...

அதாவது.. நல்லதே செய் நைனா.. அதையும் அப்புறம் பண்ணிக்கலாம்ன்னு அப்பீட் ஆகமா இன்னிக்கே ஜோராச் செய்யணுமாம்

தோடா ந்டு மண்டையிலே இருந்தக் கேள்வி ஒரு குதி குடிச்சு என் முன்னாடி வந்து நின்னு ஒரே நக்கல் சிரிப்பு சிரிக்குதுங்க...

என்ன நக்கலா அப்படின்னு நான் கேட்டா?

ம்ஹும் அதெல்லாம் இல்லை. உன்னிய நக்கல் அடிச்சு நான் என்னைக் கேவலப் படுத்துவேனா?

அப்படி எல்லாம் இல்ல...

சொல்லுதல் யார்க்கும் எளியவாம்.. அதைக் கேட்டுக் கைத்தட்டி சொன்னவனைத் தலையிலே வச்சு கரகம் ஆடுவது இன்னும் எளியவாம்...அப்படின்னு இழுத்துச்சு..

போது நிப்பாட்டிக்க எங்களுக்கு என்னச் சொல்ல வர்றேன்னுப் புரிஞ்சுப் போச்சு.. இப்போப் புறப்படு 2007 டிசம்பர் இதே தேதிக்கு ரிட்டன் வா அப்போப் பேசிக்கலாம்.. சொல்லி ஒரு வழியாக் கேள்விக்கு டாட்டா காட்டினேன்

Thanks THE MONK WHO SOLD THE FERRARI BY ROBIN SHARMA and Hamid for your recommendation to read

Monday, October 16, 2006

5 புள்ளி யாரோ ஒண்ணு

வணக்கம் மக்கா,

தலைப்பைப் படிச்சா எதாவ்து விளங்குதா.. நேத்து மாலை நம்ம சகா ஒருத்தன் வீக் என்டும் அதுவுமா விட்டத்தைப் பாத்துகிட்டு இருக்க இந்தா இந்தப் புக்கை ஒரு பொரட்டு பொரட்டுப் பாருன்னு சொல்லி கொடுத்த புக் டைட்டில் தான் மேலே நான் போட்டு இருக்கும் ஐந்து புள்ளி யாரோ ஒண்ணு. (FIVE POINT SOMEONE)

ஒரு இந்தியரால் எழுதப் பட்ட ஆங்கில நாவல். இந்தியாவின் தலைச்சிறந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனமாகக் கருதப்படும் ஐ.ஐ.டியில் என்னச் செய்யக்கூடாது என்ற ஒரு அடைமொழியொடு நாவல் துவங்குகிறது.

சாயங்காலம் திருவான்மியூர் பீச்சுக்கு போய் 96ல்ல ரஜினி அரசியலுக்கு வராதது சரியா தப்பான்ன்னு அலசி ஆராய்ஞ்சுட்டு வீட்டுக்கு வந்து நூடுல்ஸ் கிண்டி சாப்பிட்டுட்டு புத்தகத்தைப் பிரிக்கும் போது மணி சரியா இரவு 10.15புத்தகத்தின் அட்டையில் 270 பக்கங்களும் குதுகாலம் நிரம்பியவை என்ற வாசகம் வேறு உசுபேத்த சுவாரஸ்யமாப் புத்தகத்தைப் பிரிச்சுப் படிக்க ஆரம்பிச்சேன்.

ஐ.ஐ.டிக்குள் நுழையும் மூன்று மாணவர்கள் மற்றும் அவர்கள் நட்பின் பின்னணியில் கதை சொல்லப்படுகிறது. ஐ.ஐ.டியின் வாழ்க்கை முறை, பாடத்திட்டங்கள், பேராசிரியர்கள், வகுப்பறைகள், கேன்டீன், விடுதி என கதையாசிரியர் நம்மை கரம் பிடித்து ஐ.ஐ.டி வளாகத்திற்குள் உலாவ விடுகிறார்.

கதையில் வரும் ஹரி என்ற மாணவன் மூலமே கதை நிகழ்ச்சிகள் விவரிக்கப் படுவதாய் நாவல் செல்கிறது. ஹரி, ரேயான், அலோக் என்ற மூன்று மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட மாணவர்களின் மூலம் நானும் என் கல்லூரி வாழ்க்கையை மீண்டும் வாழ்ந்து பார்க்க வைத்தார் ஆசிரியர் என்று சொல்லலாம் போல் தோன்றுகிறது.

ரேயான் - பணக்கார வீட்டு பையன், இயல்பிலேயே தலைமைக் குணம் கொண்டவன்.
அலோக் - சாது, நடுத்தர குடும்பம். குடும்பக் கஷ்ட்டங்களுக்கு பாடப்புத்தகங்களை முழுங்கி அதன் மூலம் ஒரு தீர்வு காண கனவு காண்பவன்.
ஹரி - வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்பவன். ரேயான் போல் எதிலும் முன் நிற்க வேண்டும் என்று ஆசை அதிகம் கொண்டவன். தன்னால் அது முடியாது என்றும் நினைப்பவன்.

இவர்கள் மூவரின் நட்பு எப்படியெல்லாம் இவர்களை ஆட்டுவிக்கிறது என்று மெல்லிய நகைச்சுவை இழையோட ஆசிரியர் கதையை நகர்த்துகிறார்.ஹரியின் காதல் கிளைக் கதை, வேறு திசையில் கதையின் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.

ரேயான் மூலம் ஐ.ஐ.டியின் பாடத்திட்டங்களை நாவலாசிரியர் சாடுவதை நம்மால் பல இடங்களில் தெளிவாய் உணர முடிகிறது. மனிதனை மனிதனாய் வாழவிடாமல் அவனை ஒரு ஒரு யந்திரமாய் மாற்றி அவன் சுய கௌரவத்தைப் பறிக்கும் தற்கால கார்பரேட் உலகத் தத்துவங்களையும் நாவல் லேசாக உரசிப் பார்க்கிறது.ரேயான் ஐ.ஐ.டி, பாடத்திட்டங்கள் மனத்தளவில் மாணவனை ஊனப்படுத்துகிறது என குமுறுகிறான். மாணவனின் சுய சிந்தனைகளையும் கற்பனா சக்திகளும் ஊக்கப்படுத்துமாறு பாடத்திட்டம் அமையவில்லை என ஆதங்கப்படுகிறான். வெறும் மனப்பாடம் செய்து பாடங்களில் மார்க் வாங்கிக் குவிக்கும் போக்கு அவனை விரக்தியடைச் செய்கிறது.

அதை மாற்ற கல்லூரி வாழ்க்கையை வண்ணமயமாக மாற்ற பலப் புதிய திட்டங்கள் வகுக்கிறான். அத்திட்டங்களை நண்பர்கள் தற்காலிகமாகச் செயல்படுத்துவதும் பின்னர் கைவிடுவதும் என நாவல் போராடிக்காமல் நகர்கிறது.

முதல் செமஸ்டர் முடிவினில் (ஆமா செமஸ்டருக்கு தமிழில் என்ன?) நண்பர்கள் மூவரும் 5 புள்ளிகளில் நிற்கிறார்கள். ஐந்து புள்ளிகளுக்குச் சொந்தக்கார்கள் ஐ.ஐ.டி மொழியில் மற்ற மாணவர்களின் திறனுக்கு முன் குறைந்தவர்கள் என்ற அர்த்தப்படுபவர்க்ள். ( இதான் தாங்க தலைப்பின் விளக்கம்). இந்த முதல் சறுக்கல் நண்பர்களைப் பெரிதும் பாதிக்கிறது, பின்னர் அந்த சறுக்கலை அவர்கள் சகஜமாக எடுத்துக் கொண்டு வாழப் பயிலுகிறார்கள்.

ரேயானின் ஆராய்ச்சித் திறமை அவன் ஐந்து புள்ளி இனத்தைச் சார்ந்தவன் எனபதால் துறை தலைவரின் கவனம் மறுக்கப்படுவது,ரேயானின் சிறு வயது, தாய் தகப்பன் ஏக்கம் என ரேயானின் கிளைக் கதைகள் ஒரு பக்கம் நம் கவனம் கவர்கின்ற வண்ணம் இட்டுச் செல்லப்படுகிறது.

ஹரி துறைத் தலைவர் மகள் நேகாவோடு கொள்ளும் காமம் எட்டிப் பார்க்கும் காதல் கலகலப்பு எனறால். நேகா ரயிலில் அடிப்பட்டு இறந்த அண்ணன் மீது கொண்டிருக்கும் பாசம் ஒரு உணர்வு குவியல்.

அலோக் வீட்டு விஷயங்களான, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அப்பா, எப்போதும் கண்ணீர் வடிக்கும் பயலாஜி டீச்சர் அம்மா, கல்யாண வயதைத் தொட்டும் மாப்பிள்ளைக் கிடைக்காத அக்கா என பக்காச் சென்டிமென்ட் கலவை.

ஐ.ஐ.டி வாழ்க்கையை எப்படியாவ்து முடித்தால் போதும் என இருக்கும் நண்பர்களுக்கு ஐந்து புள்ளிகளைத் தாண்டியே ஆக வேண்டிய மறைமுகக் கட்டாயம் ஏற்படுகிறது.

ஹரிக்குத் தன் காதலும் காதலியும் கிடைக்க அதிக மார்க்குகள் தேவை.
ரேயானுக்கு தன் ஆராய்ச்சி கட்டுரைக் கவனிக்கப்பட மார்க்குகள் முக்கியமாகிறது.
ஆலோக்க்கு வேலை கிடைக்க மார்க்குகள் கட்டாயமாகிறது.

மார்க்குகளைக் குறி வைத்து அவர்கள் வகுக்கும் திட்டம் மேலும் விபரீதங்களை விளைவிக்கிறது. ஆலோக் தற்கொலைக்கே துணிகிறான்... மூவரின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் அளவுக்கு சம்பவங்கள் நடந்தேறுகின்றன. அதிலிருந்து அவர்களை மீட்க முயலும் ரேயானின் ஆதர்ச பேராசிரியர் வீராவின் முயற்சிகள் என்னவாகின்றன?
விபரீதங்களின் விளிம்பில் நின்று காதலியைக் காட்டிக்கொடுக்கும் ஹரியின் காதல் என்னவானது?

துறைத் தலைவர் செரியன் மகன் மரணம் ஒரு விபத்தா? போன்ற கேளிவிகளுக்குப் படு யாதார்த்தமாய் பதில்கள் சொல்லி நாவல் முடிகிறது.

மீண்டும் கல்லூரி போய் வந்த உணர்வு மிஞ்சியது.

கடிகாரம் பார்த்தேன் மணி 2 ஆயிருச்சு.... இழுத்துப் போர்த்திகிட்டுப் படுத்தேன்... ஒரு சில கணங்களுக்கு நாவலில் வந்த ஹரி, ரேயான், ஆலோக், நேகா, புரொபசர் வீரா, புரோபசர் செரியன், சசி தாபா என நாவலின் பாத்திரங்களின் ஞாபகம் மீண்டும் மீண்டும் என் எண்ணங்களைச் சுற்றி வந்துக் கொண்டிருந்தன..

PS: Five Point Someone is a novel wriiten by Chetan Bhagat.

tamil10