Thursday, April 30, 2009

GIANT ரோபோ

காலசட்டைப் போட்டக் காலத்திலே எல்லாம் நமக்கு இருந்த ஒரே தொலைக்காட்சி நம்ம தூர்தர்ஷ்ன் தான்...அப்போ எல்லாம் மிமிக்கிரி பண்ணுறவங்க மறக்காம சென்னைத் தொலைக்காட்சியை வச்சு ஒரு பிட் நகைச்சுவை போட மறந்தது இல்லை.... அதுவும் அந்த மாலை வேளையிலே ஒரு அஞ்சு ஆறு மணிக்கு ஒரு முட்டையும் அது சுத்தி இரண்டு உருளையும் ஒரு இசையோட வரும் பாருங்க.... தூர்தர்ஷன் லோகோ தான்...அதுக்கு பிறகு ஒரு வர்ணனையாளர் வருவார்... வணக்கம் நேயர்களே... சென்னைத் தொலைக்காட்சியின் இன்றைய மாலை ஒளிபரப்பு பேண்ட் 1 சேனல் 4ங்கில் இனிதே ஆரம்பம் ஆகிறது அப்படிம்பார்... இந்த அறிவிப்பை மிமிக்கிரி செய்யாத கலைஞர்களே அன்று கிடையாது....அன்னிக்கெல்லாம் தூர்தர்ஷன் மவுசு மவுசு தான்...

இன்னிக்கு புள்ளங்க எல்லாம் சுட்டி டிவி டோராவுக்கு எப்படி கிறங்கி கிடக்குதோ..அப்படி அந்த காலத்துல்ல நாங்களும் ரவுண்ட் கட்டிப் பார்த்த சில டிவி தொடர்கள் இருக்கு...அதை எல்லாம் பத்தி யோசிச்சப்போ..நம்ம சிறு வயசு ஹீரோ ஞாபகத்துக்கு வந்துட்டார்..

சனிக்கிழமை தோறும் சாயங்காலம் இந்திபடம் போடுவாங்களே அதுக்கு முன்னாடி இந்த தொடர் வரும்....தொடர் பேர் ஜெயண்ட் ரோபோ.....ஒரு ஜப்பான் கார சின்னப் பையன் அவன் பேர் ஜானி..அவன் கையிலே ஒரு வாட்ச் ஒண்ணு இருக்கும் ஆபத்து வரும் போது அந்த வாட்ச்சை அப்படி இப்படி திருகி... அந்த பையன் ஜெயண்ட் ரோபோ அப்படின்னு கூப்பிடுவான் பாருங்க...அப்ப நம்ம ரோபோ அண்ணாச்சி.. மெல்ல கண்ணு முழிச்சு...மெதுவா மேலுக்கு சோம்பல் எல்லாம் முறிச்சு...அங்கிட்டும் இங்கிட்டும் அசைஞ்சு அசைஞ்சு புறப்படுவார் பாருங்க...அப்படி ஒரு கெத்தாயிருக்கும்.... சில சமயம் ஜானி வேறு எங்கேயோ சிக்கிட்டு வாட்ச் வழியாக் குரல் கொடுக்கும் போது நம்ம ரோபோ சும்மா ராக்கெட் வேகத்துல்ல வானத்துல்ல தவ்வி பறக்குற அந்த ஸ்டைல் இருக்கு பாருங்க.... இயந்திர மனுசனுக்கு தீவாளி ராக்கெட் வேசம் கட்டுனாப்புல்ல பின்னாலே புகை கிளம்ப அட்டகாசம் பண்ணுவார்...

ஜானி பையன் வேண்டாதவங்க கிட்டச் சிக்குறதும் ரோபோ அவனை காப்பாத்தக் கிளம்புறதுன்னும் தூள் பறக்கும் தொடரின் ஒவ்வொரு பாகமும்...சில சமயம் ஜானி ரோபோவைக் காப்பாத்தறதும் நடக்கும்...ரோபோ எந்திரம் தான்னாலும் அதுக்கும் ஜானி பையனுக்கு நடுவில் ஒரு அற்புதமான நட்பு சிருஷ்ட்டிக்கப்பட்டிருக்கும்.. அந்த சென்டிமெண்ட் சின்னஞ்சிறு வயசுல்ல மனசை எவ்வளவு கலங்கடிச்சு இருக்கு தெரியுமா...அனுபவிச்சுப் பாத்தவங்க கண்டிப்பா ஒத்துப்பாங்க...

ஜானி வாட்ச்சை தொலைக்கும் போதெல்லாம்...அவன் ரோபோ கூட எப்படி பேசப் போறானோன்னு நமக்குப் பதறும்...அப்புறம் ரோபோவை அழிக்க வில்லன் கோஷ்ட்டி திட்டம் போட்டு ரோபோவைத் தாக்க கிளம்பும் போதெல்லாம் நமக்கு மனசு துடிக்கும்..

இது எல்லாம் வாரம் வாரம் நடக்கும்...ஒவ்வொரு வார முடிவிலும் ஜானியும் ரோபோவும் எப்படியாவது ஜெயிச்சுருவாங்க.... அதைப் பாத்துட்டு அப்படியே ஆனந்தமா தெருவில்ல விளையாடப் போயிருவோம்...

இணையத்துல்ல அங்கங்கே தேடுனதுல்ல சிக்குன நம்ம பாசத்துக்குரிய ஜெயன்ட் ரோபோ சாரின் படங்கள் உங்கள் பார்வைக்கு

Wednesday, April 29, 2009

தளபதிங்கற பட்டம் இருக்கே

முதல் டிஸ்கி: இது உள்ளாட்சித் துறை அமைச்சரும் திமுக முன்னணி தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களைப் பற்றிய பதிவு இல்லை.

ஒரு பட்டம்ங்கறது...ஒருத்தரோட சாதனையைப் பாத்து..இருப்பைப் பாத்து...நடப்பைப் பாத்து...கொடுக்கப் படும் ஒரு அந்தஸ்து...

நடிகர்கள்ல்ல வி.சி.கணேசன் என்ற நடிகர் மராட்டிய வீரனாய் மேடையில் வாழ்ந்த விதம் கண்டு அவருக்கு தகுதியான சிவாஜி என்னும் பட்டத்தை அளித்தார் ஒரு மாபெரும் திராவிட பெரியார்.. அதற்கு பின்னர் அவருக்கு கிடைத்த நடிகர் திலகம் என்னும் பட்டமும் அவருக்கு எத்தனைப் பொருத்தம் என்பது அவரது படங்களைப் பார்த்த அனைவரும் ஒத்து கொள்வார்கள்..

மருதூர் கோபாலன் ராமச்சந்திரன். என்றொரு நடிகர் தன் படங்களில் தொடர்ந்து திராவிடக் கருத்துக்கள் ஒலிக்க பாமரனுக்கும் அது புரியும் வகையில் கொண்டு சென்ற காரணத்தினால் "புரட்சி நடிகர்" என்பதைக் கூட ஏற்றுகொள்ளலாம்

இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்...காதல் மன்னன் ஜெமினி கணேசன்..மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்...நடிகவேள் எம்.ஆர்.ராதா....இப்படி அந்த பட்டங்களுக்கு அன்றைய கலைஞர்கள் தகுதி படைத்தவர்களாக இருந்தனர்..அதற்கு பின் கலையுலகம் சமுதாயம் சார்ந்த நிலையில் இருந்து வசூல் சார்ந்த ஒரு நிலையை பிரதானமாகக் கொண்ட நேரத்தில் வந்த ரஜினிகாந்த சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்றது...கமல்ஹாசன் காதல் இளவரசன் பட்டம் பெற்றது ( கமல் பின்னாளில் கலை ஞானி என்ற பட்டத்தை கலைஞரால் பெற்றார்) அவை எல்லாமே பொருத்தமாகவே இருந்தது...

ஆனால் சமீபக் காலமாக...பட்டங்கள் என்றால் என்ன அப்படின்னு தெரியாத ஒரு கூட்டம் தலைதூக்கியதால் நடக்கும் கூத்துக்கள் தாங்க முடியவில்லை...

ஒவ்வொருத்தருக்கும் இருக்க பட்டத்தைக் கேட்டிங்கன்னா...ஆளுக்கு நாலு கார்கில் யுத்தம்...பம்பாய் தீவிரயுத்தம்...சீன யுத்தம் இப்படி பல யுத்தத்துல்ல முன்னால நின்னு முழுமூச்சா சண்டை போட்டிருப்பாங்களோன்னு சந்தேகமே வரும்..

இந்தச் சரித்திரமெல்லாம் ஊன்றிப் படிச்சீங்கன்னா... இல்லை குறைந்தப் பட்சமா சரித்திர நாவல்களைப் படிச்சாக் கூட போதும்....அப்படி படிக்கும் போது பழங்காலத்து மன்னர்கள் அவர் தம் படைத்தலைவர்கள் பத்தியும் ஒரளவுக்கு விசயங்கள் தெரிஞ்சுக்க முடியும்...தளபதி அப்படின்னா எவ்வளவு பெரிய பதவி...அதற்கு எவ்வளவு தகுதிகள் வேண்டும்...ம்ம் யோசிக்க் யோசிக்க பிரம்பிப்பாக இருக்கும்

அப்படியே அந்தக் காலத்துல்ல இருந்து திரும்பி இந்தக் காலத்துக்கு வந்தா....வகை வகையாக காரு...சரக்கடிக்க ரக ரகமா பல ரக பாரு....கம்பெனிக்கு கலர் கலரா பிகரு இப்படி வாழுற நம்ம கோடம்பாக்கத்துப் பையபுள்ளக இருக்காங்களே அவங்க கணக்குல்ல முக்காவாசிப் பேர் தளபதி தான்...

அந்த தளபதிங்கற வார்த்தைக்கு மட்டும் உயிர் இருந்தா... ஏகப்பட்டத் தடவை தற்கொலை பண்ணியிருக்கும்...பட்டமெல்லாம் கொடுக்குறவங்களால்ல வாங்குறவங்களுக்கு ஒரு மரியாதை இருந்தது ஒரு காலம் ஆனா இப்போ கொடுமையிலும் கொடுமை....

இரண்டு புள்ளைகளை அரையும் குறையுமா உடுத்த விட்டு அக்கம் பக்கம் வச்சுகிட்டு நாலு கும்மாங்குத்து பாட்டு... நடுவுல்ல நாலு பைட்டு....கிடைக்கிற கேப்ல்ல எல்லாம் விரலை...உசுப்பி உலுக்கு எடுத்து பஞ்ச் டயலாக்ன்னு முக்கால் இஞ்சுக்கு மேக்கப் போட்டுக்கிட்டு கேமரா முன்னாடி ரவுசு விடுறது அமவுண்ட் கொடுத்து விசில் அடிக்கும் குஞ்சுகள் மூலம் வீதிக்கு ஒரு போஸ்ட்டர் அரங்கம் தோறும் சொந்தச் செலவில் கட் அவுட் என அராத்து வேலைகளை கொஞ்சம் கூட கூச்சமின்றி வலம் வருவது தான் இன்றைய தேதியிலே தளபதி ஆகுறதுக்கு வேண்டிய அடிப்படை தகுதியாப் போச்சு...

தளபதின்னு சொன்னா மட்டும் போதாதுன்னு அதுக்கே இன்னொரு பட்டம் சேத்துக்குறாங்க....

இளைய தளபதி...சின்னத் தளபதி...புரட்சித் தளபதி....வீரத் தளபதி....இப்படி இந்த நிமிசம் வரைக்கும் தளபதிகள் லிஸ்ட் நீண்டுகிட்டே போகுது...ஒவ்வொரு வெள்ளியும் ஒரு புதுப் பட ரிலீஸ் போது ஒரு தளபதி உருவாகிக் கொண்டே இருக்கிறார்...இந்த அதி பயங்கர தீவிரவாதத் தாக்குதலுக்கு ஒரு முடிவே இல்லாமல் போயிட்டு இருக்கு..இந்த தீவிரவாதத்தை எல்லாம் ஒழிக்க ஒரு சிறப்பு படை அமைக்கற மாதிரி பெருகி வரும் தளபதிகள் தொல்லையை ஒழிக்க எதாவது ஒரு படை அமைச்சாத் தேவலாம் போலிருக்கு...

அந்தக் காலத்துல்ல பல போர்களுக்கு படைத் திரட்டி...வியூகம் வகுத்து.. நாடு கடந்து..நகரம் கடந்து...கடல் கடந்து... வீடு துறந்து...சொந்த விருப்பு வெறுப்பு துறந்து தேச நலன் பேண..இன மானம் காக்க... போர்கள் புரிந்த அந்த மெய் தளபதிகளின் ஆன்மா...இந்த டூபாக்கூர் தளபதிகளை மன்னிப்பார்களா... வேற என்னச் சொல்ல...

Friday, April 24, 2009

தனுஷ்கோடி - இன்னும் சில படங்கள்

மண்ணில் புதைந்த ஞாபகங்கள்


கடலோடி கடலோடிக் களைத்துப் போன மிச்சங்கள்


கடலோரம் ஒரு பாலைவனம் - இன்றைய தனுஷ்கோடி


ரயில் எங்கே...ரயில் எங்கே...


நேற்று நிஜம்...இன்று வெறும் நிழல்...


தொலைந்துப் போன நகரம் தேடி செல்லும் பாதை இது

Thursday, April 23, 2009

சரத்பாபுவை ஏன் ஆதரிக்க வேண்டும்

சமீபத்தில் தம்பி வெட்டி பயலின் பதிவு ஒன்று படித்தேன்... சரத்பாபுவை தென்சென்னை வேட்பாளராக பத்திரிக்கைகளும் இணைய நண்பர்களும் கொண்டாடுவதைக் குறித்த தன் கேள்விகளை எழுப்பியிருந்தார்....

பொதுவாக படித்த நமக்கிருக்கும் அதே ஒரு மனநிலை தான் அவர் பதிவிலே எனக்குத் தெரிந்தது....படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பது நம் அனைவரின் ஆவல்...படித்தவர்கள் என இங்கு நாம் குறிப்பிடுவது மெத்த படித்த மேதைகள்...படிக்காத மேதைகளும் நாட்டில் இல்லாமல் இல்லை.. ஆனால் படித்தவன் என்று நாம் அடிக்கடி நாம் குறிப்பிடுவது ஒரு சாதரண மத்தியத் தர குடும்பத்தில் இருந்து படிப்பை மட்டும் தன் வாழ்க்கையின் மூலதனமாகக் கொண்டு வரும் சாமன்ய மனிதர்களை தான் என்பது தான்.... நம் நாட்டில் இதற்கு முன் அரசியலுக்கு படித்தவர்கள் வரவில்லையா என்ன.... மருத்துவர்கள் அய்யாக்கள்... சின்ன அய்யாக்கள்..வக்கீல்கள்.... பொறியாளர்கள்... இன்னும் எத்தனையோ மேதாவிகள் வந்துள்ளனர்...ஆனாலும் சரத்பாபு போன்றவர்கள் வரும் போது நாம் ஆதரிக்க முனைவது ஏன்.... அவர் நம்மைப் போன்றவர்.. படிப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையை எதிர்கொண்டவர்... அதன் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை ஏறப்டுத்திக் கொண்டவர்

அப்துல் கலாம் அரசியல் களம் கண்ட போதும்.. மன்மோகன் சிங் அரசியல் வலம் வந்த போதும் நாம் அடைந்த அதே ஒரு திருப்தி தான் சரத்பாபு விஷ்யத்திலும் நடக்கிறது...

இந்த நாடு ஒரு நல்ல தலைவனுக்காக ஏங்குகிறது....ஆனால் நம்மிடையே தலைவர் வேடமிட்டு வருபவர்கள் அனைவரும் அரசியல் வியாபாரிகள்...இரண்டு லட்சம் ஓட்டு இருக்கும் தொகுதியில் எப்படி மூன்று லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்லலாம் என கணக்கு போடுபவர்கள்...முடிந்தால் தேர்தல் கமிஷனுக்கே கமிஷன் கொடுத்து காரியம் சாதிக்க முயலும் ஓட்டு பிரோக்கர்கள்...கரன்சி நோட்டுக்கள் மூலம் ஜனநாயக கற்பை களவாடும் களவாணிகள்..தேர்தல் என்பது அவர்களைப் அவர்களுக்கு பிட் அடித்தாவது பாஸ் ஆக வேண்டிய அரசியல் தேர்வு மட்டுமே...

வீடு...குடும்பம்..வேலை..என நாட்டுக்குள் வாழும் ஒவ்வொரு சாதரண குடிமகனும் தன்னளவில் சுருங்கி தன் பொருளாதார தேடுதலில் தொலைந்து நின்றாலும் தன் நாடு தன் மக்கள் என்னும் எண்ணங்கள் அவன் அளவில் என்றுமே உண்டு.. தான் சம்பாதிக்கும் பணம் தன் வீடு சேர்க்கும் முன்னே அரசாங்க கஜானாவில் வரியாக செலுத்தி வீடு போகும் மக்கள் ஏராளம்.. அவர்கள் அனைவரிடமும் இருக்கும் ஒரே மூலதனம் படிப்பு மட்டுமே...

வெளிநாடுகளையும் அங்கிருக்கும் வளர்ச்சியையும் காணும் இந்த மக்கள் தங்கள் நாடு இப்படி ஆகாதா என ஏக்கம் கொள்வதும்...அது இதுவரை ஒரு நிறைவேறாத கனவாகவே தலைமுறைகள் தாண்டியும் தொடர்வதுமாய் இருப்பது என்னக் கொடுமை...

நம் இனத் தலைவர்களும்...புரட்சி பட்டத் தலைவர்களும் செய்வது என்ன...
சாதனையா.... ஒரு ரூபாய்க்கு அரிசி.....கலர் டிவி.....ஒரு ஆட்சி போய் மறு ஆட்சி வந்தால் சிலை மாற்றம்... இதனால் மொத்த மக்களுக்கும் ஏமாற்றம்..

ஒரு தலைவனாவது.... அட இன்னும் இரண்டு படி அரிசி நம்ம ஊர்ல்ல அதிகமா விளையுறதுக்கு ஒரு திட்டம் போட்டிருக்கானா....இஸ்ரேல் இப்போவும் பண்ணுறான் விவசாய புரட்சி...இங்கே பட்டத்துல்ல மட்டுமே ஒட்டிகிட்டு இருக்கு புரட்சி.... கலர் டிவி கொடுக்குறாங்க அப்படியே அவங்க குடும்ப மக்களே டிசைன் டிசைனா டிவி ஆரம்பிச்சுக்குறாங்க... அவங்க டிவி சேனலை பார்க்க கூட்டம் சேர்க்க ஒரு வழியா இதுன்னு யோசிக்கத் தோணுது.....தமிழ் பேசுற ஒரு கூட்டத்துக்கே சங்கொலி ஊதுறாங்க அங்கே..இங்கே சிரிப்பொலின்னு டிவி ஆரம்பிச்சு பக்காவா எதிரொலி கொடுக்குறாங்க நம்ம இனமான தலைவர்கள்

ஐடியிலே அடி.... அத்தனை பேருக்கு வேலை போவுது....அப்படின்னா அதை நம்பி இருக்கும் நம்ம இந்திய பொருளாதாரம் என்னவாகும்....அதைப் பத்தி பேசக் கூட ஒரு தலைவன் இல்ல... படிச்சவங்க பிரச்சனை... சம்பாதிக்கும் போது சம்பாதிக்கட்டும் இப்போ எப்படியோ போகட்டும்ன்னு விட்டுட்டாங்களோ என்னவோ...

எத்தனை நாள் தான் வெறும் சின்னம் பாத்து ஓட்டு போடணும்... சூரியன்..இலை....கை...இப்படின்னு...கழுதையை நிறுத்துன்னாலும் சில சின்னங்களில் ஜெயிக்கலாம் என்பது நம்ம ஊரில் அபத்த நிலை...

கழகங்களின் கபடி ஆட்டம்...கூட்டணி என்ற பேரில் நடக்கும் அரசியல் பங்கு சந்தை ஏற்ற இறக்கங்கள்... சாமன்ய மனிதனை அரசியலை விட்டு தூரமாய் நிறுத்தி வைத்து தேர்தல் வரும் போது மட்டும் உற்சவ மூர்த்திகளாக வலம் விட்டு பின் அவர்களை பூட்டி வைக்கும் அவலங்கள்...

இப்படி அரசியல் பற்றி சொல்ல முடிந்த கருத்துக்கள் கொஞ்சம்...சொல்ல முடியாத கருத்துக்களும் கோபங்களும் அனேகம்... இப்படி பொழுதையும் பொழப்பையும் கடத்தும் சாமான்ய மக்கள் தங்களை போல யாராவது ஒருத்தர் இந்த கழகங்கள்...அவர தம் கூட்டணி கும்ப்லகளை எதிர்கொள்ள களம் காணும் போது.. நம்மைப் போல் ஒருவன்... என்னும் அடிப்படை எண்ணம் அவனை ஆதரிக்கத் தூண்டுகிறது....

நம்மிடத்தில் இருந்து போகும் இவன் நம் கனவுகளின் பிரதினிதி என்ற ஒரு எதிர்பார்ப்பு...நம்பிக்கை....இது வரை போராடி வாழ்க்கையில் வென்றவன்.. இந்தப் போராட்த்திலும் நிச்சயம் நல்வழி கண்டு வெல்லுவான்

இது ஒரு ஆரம்பம்....நமக்கும் மாற்று உண்டு... அந்த மாற்று நம்மை மாதிரி தொழில் முறை அரசியல்வாதியாக இல்லாமல் மக்களில் இருக்கும் ஒருவனாகவும் இருக்க வாய்ப்புண்டு என்பதை இன்றைய தமிழ் அரசியல் நிறுவன அதிபர்களுக்கு உணர்த்த வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது...

அந்த கருத்தை வலிமையாகவும் உரக்கவும் சொல்ல ஒரு படித்த...தன் படிப்பை மூலதனமாக கொண்டு நாட்டுப் பணி செய்ய கிளம்பியுள்ள சரத்பாவுக்கு வாக்களிப்பதில் என்ன தவறு இருக்கிறது.....

தம்பி வெட்டி சரத்பாபுவின் தகுதி பற்றி மட்டும் கொதிப்பது போல் தமிழகத்தில் கழகங்களும் அவர் கூட்டணி கட்சிகளும் நிறுத்தியுள்ள ஒவ்வொரு வேட்பாளரின் தகுதி பற்றியும் சேர்த்து கொதித்து பொங்குவதே மிகச் சரியான நியாயமாக இருக்கும் என எனக்கு படுகிறது....

கண்மூடித்தனமாய் ஆதரிக்காமல் நம் கேள்விகளுக்கு விளக்கம் பெற்று அவர் தம் கொள்கையில் தெளிவு பெற்று நல்ல வேட்பாளர்களை ஆதரிப்போம்.. டெல்லி அனுப்புவோம்..

Tuesday, April 21, 2009

ஒரு ஒப்பாரி

நித்தம் சோறு தேடும் பணி
நியாயம் பேசவும் தடுத்திடும் ஆயிரம் சட்டம்
மனிதம் காயப்பட்டாலும்
மனத்தோரம் மட்டும் அழுதிட முடியும்
கொடுமை எனக் கண்டும்
கோபம் கொள்ள அவகாசமில்லை

அரசியல் வியாபாரக் கட்சிகளின்
அறிக்கை விளம்பரங்களில்
இருக்கும் ஒரு ஓட்டையும் விற்று
இடுப்பு கோவணத்தையும் தொலைக்கப் போகும் அவலம்


விற்றது தமிழ்
திமு கழகம்

தமிழா...அது யாருக்கு வேணும்
அதிமு கழகம்

கொள்கையின்றி
கோட்டைக்கு வழி கேட்கும்
தேமுதி கழகம்

கூட்டணி வியாபாரம்
சூடு பிடிக்குது
மிச்ச அரசியல் கம்பெனிகளுக்கு

சொந்த மண்ணிலே
நொந்த தமிழன் நான்

தீவுத் தமிழனே...
தீராத் துயரச் சகோதரனே..

உனக்கு என்னச் செய்வேன்
உள்ளத்தைக் கிழித்து
உள்ளிருக்கும் உயிரை உருக்கி
உரக்க ஒப்பாரி தான் பாட இயலும்

தீவு சிவக்கிறேதே....
தீரா பழி சரித்திரத்தில் சேர்கிறதே....

ஓட்டு வியாபாரிகளின்
அரசியல் வேட்டுச் சத்தங்களில்
தமிழினத்தின் சோகம்
தெருவினில் நாதியற்று திரியுதே...

Wednesday, April 15, 2009

தென்சென்னை வாக்காளப் பெருமக்களே

படிச்சவன் எல்லாம் பையைத் தூக்கி தோள்ல்ல போட்டுட்டு பைக்கையோ காரையோ கிளப்பிக்கிட்டு வேலைக்குத் தான் போவாங்க...அரசியல்ன்னா அவங்களுக்கு பேப்பர் பேச்சும் இணைய சாட்டும் தான்ன்னு ஒரு பொதுவானக் கருத்து இருக்கு..அதை பெரிதாக மறுக்கமுடியாது..படித்த இளைஞர்களுக்கு இன்னும் நம் நாட்டில் பொருளாதார விடுதலையே ஒரு பெரும் சவாலாகத் தான் உள்ளது..முதலில் பொருளாதார சுயநிறைவு.... பின்னால் தான் அவனால் அடுத்தக் காரியங்களைப் பற்றியே சிந்திக்க முடிகிறது..என்னச் செய்ய அந்த சுயநிறைவு அடையும் முன்னரே பலருக்கு ஆயுளே நிறைந்து போகிறது...

படித்த இளைஞர்கள்..அதுவும் குறிப்பாக பணக்காரத் தகப்பன்களுக்கு பிறக்காத இளைஞர்கள் சுயசிந்தையோடு அரசியலுக்கு வருவது இரு கரம் கொண்டு வரவேற்க வேண்டிய விஷயம்...அதிலும் இன்றைய தேர்தல் களம் இருக்கும் நிலையில் உண்மையிலே பாராட்டப் பட வேண்டிய விஷயம்


வெறும் பாராட்டுக்களோடு நிறுத்திக் கொள்ளாமல் அப்படி வரும் வேட்பாளருக்கு அரசியலில் அடித்தளம் அமைத்து தரும் நல்ல காரியமும் நம்மைப் போன்ற குடிமக்களையே சாரும்..அப்படி ஒரு அரிய வாய்ப்பு தென்சென்னை மக்களுக்கு கிடைத்து உள்ளது..வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் கூட்டணி..தெய்வக் கூட்டணி...கரன்சி கூட்டணி...பூத் கேப்சர் கூட்டணி...என ஏகத்தும் ஒவ்வொரு தொகுதியும் கொதித்து கொந்தளிக்கும் போது....தென்சென்னையில் ஐ.ஐ.எம்ல் படித்த ஒரு இளைஞன் தேர்தல் களம் காண்கிறார்...

29 வயது சரத்பாபு...அறிவையும் படிப்பையும் உழைப்பையும் நம்பி களம் காண்கிறார்

பிறப்பு சென்னை மடிப்பாக்கத்தில் ஒரு குடிசையில்...அம்மா செய்த இட்லி வியாபார மூலதனத்தில் ஐ.ஐ.எம் படிப்பு...பிட்ஸ் பிலானியில் பொறியியல் படிப்பு...எனப் பல பட்டங்கள் பெற்றவர்..சொந்தமாய் தொழில் செய்து வெற்றி பெற்றவர்.... யூத் ஐகான் விருது பெற்றவர்...

ஒரு எம்.பி.யா நல்லாப் படிச்ச பையன் ஒருத்தன் வரணும்ங்கறது நம்மில் பலர் எத்தனையோ இடங்களில் அங்கலாய்த்து இருக்கிறோம்.. இதோ ஒரு வாய்ப்பு....

கழகங்களுக்கு காவடி தூக்க வாக்களிக்காமல்... ஒரு மாற்றத்துக்கு நாளைய நம் தலைமுறையின் ஏற்றத்துக்கு ஒரு வாக்கு போடலாமே...
கொஞ்சம் யோசிங்க.....இந்தச் செய்தியை அப்படியே நாலு பேருக்கும் சொல்லுங்க...VOTE FOR A CHANGE...
VOTE FOR SOMEONE FROM YOU...
சரத்பாபுவின் வலைத்தளம் நன்றி நம்ம ரிப்பிட்டேய் கோபி

tamil10