Monday, January 28, 2008

சொன்னா மானக்கேடு...சொல்லாட்டி வெக்கக்கேடு...


"டேய் நீ எல்லாம் ஒரு மனுசனா.... உன்னச் சுத்தி என்னவெல்லாமோ தப்பு நடக்குது..அதுவும் தப்பு தப்பா நடக்குது... கருத்துச் சுதந்திரம்ங்கற பேர்ல்ல கருவாடு மீனாகுது.. மீன் வெறும் கூடாகுது...

அவங்கப் பேசலாம்...பேசிகிட்டேப் போலாம்...நீ கேளு..கேக்காம போ...ஆனா கேள்வி எல்லாம் கேக்கப்பிடாது....கேட்டா... பிஞ்சுரும் பேட்டா...மேடை மைக் எல்லாம் உனக்கு இல்ல.. இல்லவே இல்ல... புரியுதா? கையை மட்டும் தட்டு.. தட்டிகிட்டே இரு....

காலம் காலமா இதைத் தானே செய்யுற... இப்போ மட்டும் என்ன வந்துச்சு? அதையேச் செஞ்சுட்டு போ... என்னாது கோவம் வருதா....அதெல்லாம் எதுக்கு? என்னப் பண்ண போற கோவப்பட்டு....

போடா போவீயா... போய் பொழப்பைப் பாரு... உருப்படற வழியை பாரு....யாருக்கு என்ன நடந்தாலும் ஏன் உனக்கே என்ன நடந்தாலும் "மூடிகிட்டு" இருக்கறதோ இல்ல போறதோ தான் பொழைக்கற புள்ளக்கு புத்திசாலித்தனம் ... ரைட்டா...

அய்யோ இதெல்லாம் உங்களைச் சொல்லல்ல... எனக்கு நானே சொல்லிகிட்டது... சொல்லிக்குறது... சொல்லிக்கப் போறது..

இதை எல்லாம் வெளியே சொன்னா மானக்கேடு... சொல்லாட்டி வெக்கக்கேடுங்கண்ணா"

இதை எல்லாம் படிச்சுட்டு கைத் தட்டுனும்ன்னா என் பின்னூட்டப் பொட்டி தொறந்தே தான் இருக்கு... கோவத்துல்ல முதுகைத் தட்டுணும்ன்னா... ஓவர் டூ ஜி.ரா அன்ட் காதல் முரசு அருட்பெருங்கோ... ஏன்னா அவங்க இரண்டு பேரும் தான் என்னை மொக்கப் போடச் சொல்லிக் கூப்பிட்டாங்க....

போட்டாச்சுப்பா மொக்க...

நம்ம பங்குக்கு நான் கூப்பிடுறது....

அனுசுயா
சந்தனமுல்லை

Tuesday, January 22, 2008

சீனியருக்கு எல்லாம் சீனியர்டா இந்த ஆபிசர்

"ஆகா...மொத்தப் பணமும் போச்சே... " கையைக் கன்னத்துக்கு முட்டுக் கொடுத்துகிட்டு மானிட்டர்ல்ல எதோ ஷேர் மார்கெட் சைட் பாத்து நம்ம ஆபிசர் பிலீங்க்கா நேத்துல்ல உக்காந்து இருக்கார்.

"ஆபிசர் மார்கெட்ல்ல பணம் போறது இருக்கட்டும்... டேமேஜருக்கும் உங்களுக்குமான உறவு வர ரணகளமாப் போயிட்டு இருக்கே அதை பத்தி கொஞ்சமாவது கவலை இருக்கா உங்களுக்கு?" பருத்தி வீரன் ஆபிசர் முதுகைத் தட்டிக் கேட்டான்

மார்கெட் சோகத்தில் இருந்து மெல்ல நிமிர்ந்து லுக் விட்ட ஆபிசர்... கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தார்.

"டேய் பருத்திவீரா... நான் எல்லாம் சீனியருக்கு எல்லாம் சீனியர்டா...உனக்கேத் தெரியும் நான் பதவிக்கெல்லாம் ஆசைப் படறவன் இல்லன்னு.. அவன் பொடி பைய.நானாப் பாத்து வழி விட்டு மேனேஜர் ஆனப் பய அவன்..என் மேல அவனுக்கு மரியாதை ஜாஸ்திடா..."

ஆபிசர் சொல்லி முடிக்கவும்..."யோவ் ஆபிசர்... இந்தாப் பாருய்யா.. அந்த எக்ஸல் ஷீட் பிரிண்ட் கொடுத்து இருக்கேன்.. போய் அதை எடுத்துட்டு சீக்கிரம் இங்கே வாய்யா ஒரு டிஸ்கஷன் இருக்கு" டேமேஜர் குரல் படு சத்தமாய் பாய்ந்து வந்தது.. அவ்வளவு தான் பதறியடித்து எழுந்த ஆபிசர்.. சுற்றி இருந்த எங்களைப் பார்த்து பயங்கரமான எபெக்ட் கொடுத்து பயந்த பாடி லாங்க்வேஜை அப்படியே உதாரான போஸுக்கு மாத்துன அந்த அழகு இருக்கே...அதை எல்லாம் வெறும் வார்த்தையிலே சொல்லமுடியாது.

'என்ன ஆபிசர்.. பிரிண்ட் எடுக்கவெல்லாம் உங்களை வெரட்டுறார்... நீங்க எவ்வளவு பெரிய சீனியர்... மரியாதை கூட வேணாம்... ஒரு சின்ன மதிப்பு கூட் மிஸ் ஆகுற மாதிரி தெரியுது.." பருத்திவீரன் கொளுத்தினான்...

"லேய் பருத்திவீரா.. நீ கார்பரேட் ஒலகத்துல்ல இன்னும் பச்சப்புள்ளயாவே இருக்கே...அந்த பிரின்டரை பாரு அது நம்ம ஆபிஸ் ஆரம்பிக்கிறதுக்கு அறுவது வருசம் முன்னாலே இருந்து பல இடத்துல்ல வேலை பாத்து அந்து அவலாகி இத்து இரும்பாகி இங்கே வந்து நிக்குது... மேனேஜர் பயலுக்கு பிரிண்டருக்கும் ஜெராக்ஸ்க்குமே ஒழுங்கா வித்தியாசம் தெரியாது.. இப்படி ஒரு பராம்பரியமான சீனியர் பிரிண்டரை ஒரு சீனியரால மட்டுமே ஹேண்டில் பண்ணமுடியும்ங்கற உண்மை அவனுக்குத் தெரியும் அதான்......" ஆபிசர் பேசி கொண்டிருக்கும் போதே பருத்திவீரன் கொட்டாவி விட வாயைத் திறந்தான்...

'நீ கொட்டாவி விடுறதைப் பாத்த என்னை அவமானப்படுத்த மாதிரி அடுத்தவங்களுக்குத் தெரியும்...ஆனா ராத்திரி இரண்டு மணி வரைக்கும் நீ வேலை பாத்த விவரம் எனக்குத் தெரியும்ங்கறதால உன்னை நான் தப்பா நினைக்க மாட்டேன்.. உன் கொட்டாவியைக் கன்டினியூ பண்ணு.. நான் பிரிண்டரைப் பாத்துட்டு வர்றேன்..." ஆபிசர் அசுர வேகத்தில் கிளம்பினார்.

ஆபிசர் போய் அரை மணி நேரமாகியும் திரும்பி வரவில்லை....டேமேஜரே பிரிண்டர் ரூம்க்கு எழுந்து போக வேண்டியதாப் போச்சு. நாங்களும் பின்னாலேப் போனோம் நடக்கிறதைப் பாக்க

"யோவ் ஆபிசர் என்னய்யா...இப்படி ஒரேடியா பிரிண்டருக்குப் பக்கத்துல்ல வந்து நின்னுகிட்டா என்ன அர்த்தம்?"

அவ்வளவு தான் ஆபிசர்.. அப்படியே ரெண்டி ஜம்ப் அடித்து பிரிண்டரில் இருந்து நாலடி தள்ளி போய் நின்றார்...நின்றது மட்டுமில்லாமல்... இது போதுமா மேனேஜர்ன்னு பம்மி பணிவாக வேற கேட்டுவிட்டு பால் பொங்கும் முகத்தோடு நின்றார்...

கஷ்ட்டப்பட்டு சிரிப்பை அடக்கிட்டோம் நாங்க.. டேமேஜர் ஆபிசரை கோபமாகப் பார்க்க ஆபிசர் பணிவு குறையாமல் தரையைப் பாக்க...

"யோவ் பிரிண்டர்ல்ல கார்ட் எங்கேய்யா...?"

"அதை தான்ங்க மேனேஜர் நானும் அரை மணி நேரமாத் தேடிகிட்டு இருக்கேன்" அப்படின்னு அப்பவும் பணிவு குறையாமல் சொன்னார் பாக்கணும் ஆபிசர்.

"ஒரு வேலை ஒழுங்காத் தெரியுதாய்யா உனக்கு..போன வாரம் ஜெராக்ஸ் மெஷினுக்கு பிரிண்டருக்கும் வித்தியாசம் தெரியாம..பிரிண்டர்ல்ல ஜெராக்ஸ் எடுக்க மூணு மணி நேரம் முயற்சி பண்ணியிருக்கீங்க..... பிரிண்டர் டேமேஜ் ஆனது தான் மிச்சம்....." டேமேஜர் ஆபிசரை பார்ட் பை பார்ட்டாக் கிழித்து தொங்கவிட்டுட்டு கிளம்பி போனார்.

வழக்கம் போல் நம்ம ஆபிசர் எதுவுமே நடக்காதது போல் வெளியே வாசலில் நின்று பருத்திவீரன் தலைமையில் அவருக்கு ஓ போட்டு நாங்க வரவேற்பு கொடுத்தோம். அதை அசால்ட்டாச் சிரிச்சுகிட்டே வாங்குன ஆபிசரை பருத்திவீரன் கைப் போட்டு ஆபிசர்....

"ஏன் ஆபிசர்...ஊர்ல்ல நாங்க எல்லாம் காளை மாட்டுல்லேயே பால் கறந்தவய்ங்க தெரியும்ல்லன்னு சொல்லுவீங்களே.... அதுக்கும் இந்த பிரிண்டர் ஜெராக்ஸ் மேட்டருக்கும் சம்பந்தம் இருக்கும் போல இருக்கேன்னு" ஆரம்பிச்சான்...

"அது எப்படி?" நாம் டவுட் கேக்க..

"ஒரு வேளை பசு மாட்டுக்கும் காளை மாட்டுக்கும் வித்தியாசம் தெரியாமப் போயிருக்குமோ.... ஜெராக்ஸ் மிசின்ன்னு நெனச்சு பிரிண்டரை அந்தப் பாடு படுத்துனவர்.. ம்ம்ம்ம்ம்..பாவம்ய்யா அந்த காளை....." பருத்திவீரன் சொல்லி நிறுத்தினான்.

"தம்பி பருத்திவீரா... இந்த நக்கல் எல்லாம் நம்ம கிட்ட வேணாம்ய்யா...உனக்கெல்லாம் ஜாவா சொல்லி கொடுத்து பூவாக்கு வழி சொன்ன என்கிட்டவே நக்கலா.... எதோ சீனியர் ஆபிசர் வாழ்க்கையிலே மைனரா ஒரு மிஸ்டேக் நடந்துப் போச்சு...."

"இது மட்டுமா....ஆபிசர்....புது ப்ராஜக்ட் சம்பந்தமா எத்தனை டாக்குமெண்ட் படிச்சிங்கன்னு மேனேஜர் கேட்டதுக்கு என்னப் பதில் சொன்னீங்க?"

"ஒம்போது டாகுமென்ட் படிச்சதாச் சொன்னேன்"

"மொத்தம் இருக்க டாகுமென்ட்டே நாலு தானே அப்படின்னு டேமேஜர் உங்களை டீம் மீட்ல்ல கேவலப்படுத்துனாரே ஆபிசர்"

"அதையே தான் நான் ஒம்போதாப் பிரிச்சு பிரிச்சுப் படிச்சேன்னு விளக்கம் கொடுத்தேன்ல்ல"

"விளங்காத விளக்கம்"

"என் புத்திசாலித்தனத்தை உன்னாலயும் உங்க டேமேஜரால்லயும் தாங்கிக்க முடியல்ல.."

"இன்னுமா உங்களை நீங்களே புத்திசாலின்னு நம்புறீங்க?"

"கண்டிப்பா...."

"அட அநியாய ஆபிசரே"

"போதும் பருத்திவீரா நிப்பாடிக்க... இப்போ என்னத் தான் சொல்ல வர்ற?"

"ஆபிசர் மருதமலையிலே நம்ம என்கவுண்டர் ஏகாம்பரம் சொல்லுறதை தான் நான் உங்களைப் பார்த்துச் சொல்லுறேன்"

"அது என்னாஆஆது?"

"உங்களுக்கு ஒரு அதிகாரியை எப்படி டீல் பண்றதுன்னு தெரியல்ல..."

"எதை வச்சு அப்படி சொல்லுற?"

"போன வாரம் நம்ம டேமேஜர்... ஆபிஸ்க்கு வர்ற வழியிலே பைக்ல்ல இருந்து சிலிப் ஆகி கீழே விழுந்து கால் உடைஞ்சு வீட்டுல்ல இருந்தாரே அப்போ நம்ம டீம் மொத்தமும் அவரைப் போய் பார்த்து ஆப்பிள், ஆர்லிக்ஸ், ஆரஞ்சு.. அது இதுன்னு கொடுத்து ஆறுதலா நாலு வார்த்தைப் பேசிட்டு வந்தோமே.... நீங்களும் கூட வந்திருந்தா.. டேமேஜருக்கும் உங்க மேல ஒரு சின்ன பாசம் வந்துருக்கும்ல்ல... " பருத்திவீரன் பிலீங்கா அட்வைஸ் மழை பொழிய

"ஹா...ஹா..ஹா...ஹா..." என அடக்கமுடியாமல் ஆபிசர் சிரிக்க ஆரம்பித்தார்.

"யோவ் ஆபிசர் என்னய்யா ஆச்சு உனக்கு?" பருத்திவீரன் கேட்டான்....

"கொய்யால.. வண்டியிலே இருந்து அவன் சிலிப் எல்லாம் ஆவல்ல... சைட்ல்ல போய் கட் கொடுத்து தள்ளி விட்டதே நான் தான்.... அவன் கால் உடைஞ்சுருச்சுன்னு நானே சந்தோசத்துல்ல திக்கு முக்காடி போயிருக்கேன்... சந்தோசத்துல்ல இருக்க நான் துக்கம் கேக்கணுமாம்ல்ல.... போவீயா" ந்னு சொல்லிட்டு மை நேம் இஸ் பில்லா பாட்டை விசிலா அடிச்சுகிட்டு படு ஸ்டைலா நடந்துப் போயிகிட்டே இருந்தார் ஆபிசர்...

"அட மெய்யாலுமே.. அநியாயத்துக்கு அநியாய ஆபிசாரா இல்ல இருக்கார்" பருத்தி வீரன் வாய்விட்டு சொன்னான்.

Friday, January 18, 2008

எழுதியதில் பிடித்தது - விளம்பர விளையாட்டு

புது வருசத்துல்ல நமக்கு ஒரே விளம்பர பதிவா போட வேண்டியதாப் போயிட்டு இருக்கு.... மக்களே உங்களுக்கு சத்திய சோதனை தான் போங்க...

நான் எழுதுன பதிவை முதல்ல ஒரு தடவை படிக்காம நீங்க எஸ்கேப் ஆயிருந்தாலும் இன்னொரு தடவை உங்களைப் பொறி வச்சு பிடிக்குறதுக்குன்னா வாய்ப்பா நம்ம பெனத்தலார் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பைக் கொடுத்துருக்கார்ன்னு சொல்லணும்... பெனத்தாலர் மட்டும் கொடுப்பாரே இந்தாங்க நானும் தர்றேன்னு சொல்லி இங்கே பாச மழைப் பொழிஞ்சிருக்கான் நம்ம தம்பி வெட்டி பயல் அதுன்னால இந்தப் பதிவின் மூலம் கிடைக்கப் போகும் எல்லாப் புகழையும் அவர்களுக்கே சமர்ப்பிக்கிறேன்.. இப்போ ஆரம்பிக்கிறேன்.

தேவ்க்கு இரண்டு பதிவுகள் உண்டுங்கற மேட்டர் உங்க எல்லாருக்குன் தெரியும்ன்னு நினைக்கிறேன்.. பக்கம்78 கதை கவிதைக்குன்னு எழுதுறது...சென்னைக் கச்சேரிங்கறது சும்மா தோணுறதை எல்லாம் சொல்லுறது.. முன்னதுல்ல எழுதுவேன்... பின்னதுல்லே பேசுவேன் அப்படின்னு சொல்லலாம்...

அதுன்னால எழுதுனது பேசுனது இரண்டுல்லயும் பிடிச்சதைச் சொல்லுறேன்...

சென்னைக் கச்சேரியைப் பொறுத்த வரை ஆபிசர்கள் பதிவுகள் எனக்கு மிகவும் நெருக்கமானப் பதிவுகளாகச் சொல்லுவேன்... ஆபிசர் பதிவுகள் தினசரி அலுவலகத்தில் நான் சந்தித்த சுவாரஸ்யமான மனிதர்களைக் குறித்தான வாய்ப்பாக அந்தப் பதிவுகளை நான் பார்க்கிறேன்..இதுவரைப் படிக்கல்லன்னாப் படிச்சுப் பாருங்களேன்.

ஆபிசர் ஆன கதை, அம்மா உங்க பையன் இப்போ ஆபிசர், ஆபிசருக்கு இன்னிக்கு அப்புரேசல், அட அநியாய ஆபிசரே, ஆபிசர் விடைபெறுகிறார், எங்க ஆபிஸ் பருத்திவீரன, எம்.ஜி.ஆரையே எதிர்த்தவன்டா இந்த ஆபிசர்,
ஆபிசர் கவிஞர் ஆகிறார்

இந்தப் பதிவுகள் தவிர்த்துப் பார்த்தீங்கன்னா.. சமீபக் காலத்தில் போட்ட கச்சேரி பிலிம்ஸ் பாணி பதிவுகளுக்கான முன்னோடி பதிவாய் இந்தப் பதிவைச் சொல்லுவேன்.. ஒரு ரயில் பயணத்தில் உதித்த யோசனை இது... அப்படியே உசுப்பேத்தி ரணகளப்படுத்திட்டோம்ல்ல....நண்பர் கொத்தனாரை வைத்து உருவாக்கிய இலவச அரசன் 23ஆம் பின்னூட்டக்கேசி பதிவு எனக்குப் பிடித்தமான ஒரு பதிவு.

இந்தப் பதிவைத் தொடர்ந்து பின்னால் எழுதி பெரு வெற்றி பெற்ற பதிவுத் தொடர் தான் விவாஜி.
விவாஜியைத் தொடர்ந்து அதே பாணியில் பதிவுலக லொள்ளு சபா ரேஞ்சுக்கு கச்சேரி பிலிம்ஸ் பதிவுகள் பண்ண வேண்டும் என்பது என் விருப்பம். விரைவில் பாலாகன், மற்றும் கே.டி.எம் பதிவுகளை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

சினிமாக் குறித்தான விமர்சனப் பதிவுகள் தவிர ஒரளவுக்கு அலசி போட்ட சந்திரமுகி ஒரு ரஜினி படமா? பதிவும் மணிரத்னத்தின் இரவல் சிந்தனைகள் பதிவும் எனக்கு விருப்பமான மற்ற பதிவுகள்.

அரசியலில் ஒரளவுக்கு நாட்டம் இருந்தாலும் அது பற்றி எழுதுவதற்கு போதிய விஷய ஞானம் இருக்காங்கற எண்ணம் அதைப் பத்தி எழுதுறதை அடிக்கடி தடுத்து விடுவது உண்டு..அந்த தடுப்புக்களையும் மீறி நான் போட்ட இந்த இரண்டு அரசியல் சம்பந்தமானப் பதிவுகளும் எனக்குப் பிடிக்கும்

தலைவர் ஆவாரா தளபதி? மற்றும் கலாநிதி மாறன் - நிழல் அரசாங்கம்

மேலே குறிப்பிட்ட எல்லாப் பதிவுகளும் நான் கச்சேரியில் போட்ட பதிவுகள்...

பக்கம்78ஐ பொறுத்தவரை எனக்குப் பிடித்தவைகளை மட்டுமே எழுதி வருகிறேன்.. அது உங்களுக்கும் பிடித்தால் சந்தோஷம்...

இப்படி சொந்தச் செலவில் விளம்பர தட்டி வைக்க ஒரு வாய்ப்பு கொடுத்த பெனத்தலாருக்கு ஒரு டாங்க்ஸ் சொல்லிட்டு... இப்படி சொந்த வீட்டுக்கே மேப் போட்டு சுட்டி கொடுக்குற ஐடியா ஊருக்குச் சொன்ன பதிவுலக சுட்டி செம்மல் பாபா அவர்களுக்கும் ஒரு பெரிய டாங்க்ஸ் சொல்லிகிட்டு முடிச்சிக்குறேன்... நன்றி.

நம்ம பங்குக்கு நாம யாரைக் கூப்பிடலாம்ன்னு யோசிச்சா இவங்க நியாபகம் தான் வந்துச்சு.

நாகை சிவா
கீதா சாம்பசிவம்
மு.கார்த்திகேயன்

tamil10