Tuesday, August 19, 2008

ரஜினிகாந்த் தலைவரா? வியாபாரியா?

ஒருவன் இரண்டு எஜமானர்களுக்கு வேலைக்காரனாக இருக்க முடியாது என வேதாகமத்தில் ஒரு வாக்கியம் உண்டு.

அது தற்சமயம் யாருக்குப் பொருந்துமோ இல்லையோ நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நன்றாக பொருந்துகிறது

தலைவர் ரஜினிக்காக எதையும் செய்யக் காத்திருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஒரு பக்கம்.
வியாபாரி ரஜினிக்காக கோடிக்கணக்கான பணம் சுமந்துக் காத்திருக்கும் வியாபார உலகம் ஒரு புறம்.
இரண்டுக்கு இடையில் சிக்கியிருக்கும் ரஜினி என்ற மனிதனின் நிலை தான் இன்று தமிழ் கூறும் நல்லுலகத்தின் ஹாட் டாபிக்

ரஜினியின் புகழ் என்பது பலருக்குக் கனவிலும் வாய்க்காத ஒன்று...அவர் வளர்ச்சி அசாதரமானது.. அந்த வெற்றியின் சூத்திரம் அறிய முயன்று முடியாமல் போனோர் பலர் உண்டு.. அறிந்ததாக நினைத்து கதை அளந்தவர் ஆயிரம் உண்டு... உண்மை அவருக்கும் அவரை படைத்த ஆண்டவனுக்குமே வெளிச்சம்...

ஒரு மரம் விதையாக இருக்கும் போது அது படும் அவமானங்கள் அதிகம்.. அதை மிதிப்பவர்கள் ஏராளம்... அந்த மிதிகளால் அந்த விதை மண்ணுக்குள் அமிழ்ந்து பின்னர் எப்படியோ பிழைத்து மெதுவாக மண்ணை விட்டு தலை உயர்த்தி கொஞ்சம் கொஞ்சமாய் இலை விட்டு.. வேர் விட்டு... நிலம் பிடித்து... அப்புறம் ஆகாயம் பார்த்து கிளை விட்டு...மரமாக வளர்ச்சியடையும்.. அந்த மரமானது பலருக்கு நிழல் கொடுக்கும்..காய் கொடுக்கும்... கனி கொடுக்கும்...கூடு கட்டி வாழ இடம கொடுக்கும்...அந்த மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடியவர் ஏராளம்..தாவி விளையாடிக் களித்தவர் ஏராளம்... அந்த மரம் பலருக்குப் பார்பதற்கே பரவசம் கொடுக்கும்....

அப்படிப் பட்ட மரம் ஒரு வியாபாரியின் கண்ணில் பட்டால் என்ன ஆகும்... ம்ம்ம் நல்ல மரம் இதைப் படம் புடிச்சு போடுவோம் நாலு காசு பாப்போம்... ஆகா இந்த மரம் என்ன மாதிரி இருக்கு சுத்தி வேலி கட்டி டிக்கெட் போடுவோம் வசூலைப் பாப்போம்...ம்ம்ம் இப்படியே வசூல் பாத்துகிட்டு இருந்தா எவ்வளவு நாள் ஆகுமோ சம்பாதிக்க...அப்படின்னு ஒரு எண்ணம் வரும் போது அந்த மரத்தையே கூறு போட்டு வித்தா ஓடனே நிறைய அள்ளலாம்ன்னு தான் தோணும்.. அது தான் வியாபார உலக நியதி...

இங்கே யாரை மரம் என்று நான் சொல்ல வந்தேன்னு உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை... ரஜினி விதையாய் தமிழ் மண்ணில் வந்து விழுந்து... இங்கே மிதிப்பட்டு... நிலத்தில் தன்னை ஊன்றி.. இங்கே வேர் விட்டு.. இன்று ஒரு மரமாய் இங்கே இருக்கிறார்... அந்த மரம் காய்த்த மரம்.. கல்லடிகள் அதுக்கு விதிக்கப்பட்டவை...கல்லால் எத்தனை நாள் அடிப்பது.. வாய்ப்பு கிடைக்கும் போது வாங்க வெட்டிச் சாய்க்கலாம்ன்னு இப்போ ஒரு வியாபாரக் கூட்டம் கிளம்பிருச்சு...

எதையும் தாங்கும் மரமாய் ரஜினி நிற்பதை பாவம் அவர் ரசிகர்களால் தான் ஏற்க முடியவில்லை.. தவிக்கிறார்கள்... இன்னும் சிலர் விரக்தியின் உச்சத்துக்கே போய் விட்டார்கள்...

1990களின் பிற்பகுதியில் ரஜினிக்கு சொல்லளவில் கிடைத்து வந்த தலைவர் பதவி செயலளவிலும் கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் அவர் படங்களின் வாயிலாகவே அவரே ஏற்படுத்தினார். ( இப்போது குசேலன் மூலம் அதையே அவர் மறுத்திருப்பது முரண்)

அண்ணாமலையில் துவங்கி விரல் சொடுக்கி அரசியல் வசனங்கள் பேசியதாகட்டும்,
பாட்சாவில் திரையைப் பார்த்து "இது தானா சேர்ந்த அன்புக்கூட்டம்" என்றது ஆகட்டும்....,
முத்துவில் "நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு" வசனம் பேசி ரசிகனை உசுப்பதியாகட்டும்,
தொடர்ந்து அருணாச்சலம் , படையப்பா என ரசிகனைத் திரையில் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியதாகட்டும் ரசிகர்களை அவரை இன்னொரு எம்.ஜி.ஆராகவேப் ஆராதிக்க வைத்தன...

2000க்கு பிறகும் ரஜினியின் இந்த போகும் வரை போகட்டும்... நடக்கும் வரை நடக்கட்டும் என்ற செயல்பாடு அவருக்கு சறுக்கலைக் கொடுத்தது... திரையுலகின் முடிசூடா மன்னனாக இருந்த ரஜினி பாபாவில் பாமக விடம் அடிவாங்கியதும், பின் தொடர்ந்த பாமக மோதலில் ரஜினி படை தோற்றதும் அரசியலில் ரஜினியும் சரி....அவர் ரசிகர்களும் சரி.... கற்க வேண்டிய பாடங்கள் நிறைய இருப்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லியது...

அந்த பாடத்தைத் தலைவர் கற்று கொண்டார்.. ஒரு கலைஞனுக்கு எல்லாரும் தேவை என்பதை புரிந்துக் கொண்டார்... புயலுக்கு பூச்செண்டு கொடுத்த வரலாறு எல்லாம் அடுத்து அடுத்து அரங்கேறியதும் அதன் பின் நடந்ததும் நாடறியும்....

ரஜினி ரசிகன் மட்டும் ஏனோ ரஜினியைத் தலைவனாகப் பார்ப்பதைத் தவிர்க்க முடியாமல் தவித்தான்... ரஜினி ரசிகன் என்ற அவன் கெத்து பிற நடிகர்களின் அரசியல் பிரவேசமும் அதைத் தொடர்ந்து அந்த நடிகர்களுக்குக் கிடைத்த வெற்றியும்...குறிப்பாக அரசியலுக்கு வந்த மற்ற நடிகர்களின் ரசிகர்களுக்கு கிடைத்த புது மரியாதைகளாலும் சரிந்துப் போனது...அதை மீட்டு எடுக்க தலைவனின் தயவு அவனுக்குத் தேவைப்பட்டது....

அவன் குரலைக் கேட்கும் தூரம் தாண்டி அவன் தலைவராக நினைத்த மனிதன் நகர்ந்து போனதை அறிந்தும் அதை ஏற்று கொள்ள முடியாமல் அவன் குரல் அவரைக் கோட்டைக்கு அழைத்தப் படியே இருந்தது...
ரஜினி என்ற நடிகரின் வியாபார எல்லைகள் இந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் உலகம் எங்கிலும் விரிந்தது.. வேர்கள் தமிழகத்தில் இருந்தாலும் கிளைகள் ஜப்பான் வரையிலும் நீண்டன....

தேசிய பத்திரிக்கைகள் ரஜினியை இந்திய சினிமாவின் உச்ச வியாபாரியாக சித்தரிக்க துவங்கின... உள்ளூர் பத்திரிக்கைகள் எழுத எதுவுமின்றி இங்கிருக்கும் ரசிகனின் உணர்வுகளோடு விளையாடிய வண்ணம் இருந்தன...

சந்திரமுகி. சிவாஜி என்ற இமாலய வெற்றிகளின் உஷ்ணம் உள்ளூரில் பலருக்கு பல உபாதைகளைக் கொடுத்தக் காலகட்டம்.... அந்த உஷ்ணம் தணியும் முன்னரே ரஜினியே வலிய வந்து அவர்களுக்கு வைத்த விருந்து... ஹோக்கனேக்கல் உண்ணாவிரதப் பேச்சு.. பின் தொடர்ந்த கர்னாடக வருத்தம்... அதைத் தொடர்ந்த குசேலன் வசனங்கள்....

அடுத்து அடுத்து தொடர்ந்த எல்லா நிகழ்வுகளிலும் ரஜினி மாற்றி மாற்றி தலைவர், வியாபாரம் என இரட்டை குதிரைகளில் லாவகமாக சவாரி செய்து சமாளித்து வந்தார்... சமீபத்தில் அந்த இரண்டு குதிரைகளும் முரண்டு பிடித்து நிற்கின்றன....

"ரஜினி வியாபாரம்" நஷ்ட்டம் கொடுத்து விட்டது எனக் குரல் உயர்த்தி கொக்கரிக்கும் மக்கள் ஒரு பக்கம் நிற்க...

காலம் எல்லாம் தலைவன் என்று அடி மனத்தில் இருந்து குரல் உயர்த்தி இன்று பேச்சு இழந்து ரசிகன் ஒரு புறம்...

எதிலும் ஆகாயம் பார்த்து விடை தேடும் ரஜினி இம்முறையும் ஆகாயம் பார்த்து ஆண்டவனிடம் கேட்கும் கேள்வி....

"இந்த ரஜினிகாந்த தலைவனா? வியாபாரியா?"

tamil10