Sunday, August 28, 2011

திராவிட முகமூடி கழகம்

பதிவு எல்லாம் எழுதி பல காலம் ஆச்சு !!! 2011ல்ல மொத்தமே 1 பதிவு தான் போட்டிருக்கேன்..எழுத ஒண்ணுமில்லயா இல்ல எழுதுனா படிக்க ஆள் இல்லயா இரண்டுமே ஒரளவுக்கு சரியான காரணங்களே

அப்புறம் எதுக்கு இந்த பதிவு..இருக்கு காரணம் இருக்கு... பொதுவா பலத் தரப்பட்ட புத்தகங்கள் படிக்குறது நம்ம பழக்கம் லேண்ட்மார்க்லல வேடிக்கை பாத்து பேரை மட்டும் குறிச்சுகிட்டு பிளாட்பாரக் கடைகளிலே அதே புத்தகங்களைத் தேடி அலைஞ்சு பேரம் பேசி வாங்கி வீட்டுல்ல அடுக்கி வச்சு அப்புறம் எப்போவது நேரம் உண்டாக்கி படிக்குற அந்த அனுபவம் இருக்கே அது அலாதியானது...

இப்போ சமீபக் காலமா கண்ணதாசன் புத்தகங்கள் நிறைய வாசிக்க முடிஞ்சது.. கவிஞரின் சினிமா பாடல்களுக்கு தமிழறிந்த அனைவரும் எதோ ஒரு விதத்துல்ல ரசிகர்களா இருக்கும் போது நான் மட்டும் என்ன விதிவிலக்கா

கவிஞரின் பாடல்கள் வாழ்க்கையின் மொத்த பரிமாணங்களையும் தமிழுக்குள் அடக்கி ஆள்வதைக் கண்டு வியக்காமல் இருக்க முடிவதில்லை கவிஞரின் புத்தகமெல்லாம் படிக்கும் போது திராவிடத்துக்கும் ஆத்திகத்துக்கும் இடையே கிடந்து ஊசலாடிய தருணங்களையும் உணர்வுகளையும் புரிஞ்சுக்க முடியுது

பகுத்தறிவு என்றால் என்ன? பல காலமாய் புலப்படவில்லை... இப்போவும் சரியா புரியல்ல ஈரோட்டு வயல்களில் நடப்பட்டு காஞ்சிபுரம் சந்தையில் கொள்முதல் ஆகி கோபாலபுரத்தில் அசத்தலா பாக்கெட் போட்டு தமிழகம் மொத்தத்துக்கும் விற்பனை செய்யப்பட்ட ஒரு விற்பனை பொருள் தான் பகுத்தறிவோன்னு 2011ல்ல மல்லாக்க படுத்து சிந்திக்கும் போது எனக்கு தோன்றுது

அதுக்கு கண்ணதாசனும் ஒரு காரணமான்னு எனக்குத் தெரியல்ல. உழுதவன் நடுவுல்ல வாங்குனவன் எல்லாம் பெருசா லாபம் பாக்கல்ல ஆனா ஏஜென்சி எடுத்து வித்த குரூப் மட்டும் செமயா கல்லாக் கட்டுனது கண்ணெதிரே கண்ட உண்மை

நம்பிக்கை தான் வாழ்க்கை என்பது உலக மொத்தமும் ஒப்புக் கொண்ட தத்துவம் ஒவ்வொரு மனிதனும் எதாவது ஒரு நம்பிக்கையில் தான் வாழ்ந்து வருகிறான் அந்த நம்பிக்கை அவன் வாழ்க்கைக்கு ஒரு ஊன்று கோலா இருந்து வழிகாட்டுகிறது. சில பல நம்பிக்கைகளால் மனித வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு ஆறுதல் கிடைக்கிறது. பெரும்பாலான நேரங்களில் அந்த நம்பிக்கை இறைவன் சார்ந்தாகவே அமைந்து போகிறது

நேரு வால்டேரின் மேற்கோளிட்டு சொன்னதாய் நினைவு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது முக்கியமல்ல ஆனால் மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க கடவுள் அவசியமாய்படுகிறது

தலைமையோ தலைவனோ மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும் நம்பிக்கையை குலைக்க கூடாது எப்படி பார்த்தாலும் திராவிடமும் அதைச் சார்ந்த தலைவர்களும் மக்களின் நம்பிக்கையை நையாண்டி செய்தும் அதைக் குலைத்துமே தம் இயக்கத்தை வளர்த்து உள்ளார்கள்...உடைத்தெறிந்த நம்பிக்கைகளுக்கு பதிலாக புதிய நம்பிக்கைகளையும் கொடுக்கவும் இல்லை வளர்க்கவும் இல்லை...

நம்பிக்கை கொடுக்காத இயக்கமும் கொள்கையும் சமுதாயத்துக்கு எந்த விதத்தில் பயனளிக்கும்...வெறும் வாயிலே வடை சுட்டு அதில் ப்குத்தறிவு முத்திரை குத்தி பேச்சாலே அதை ஊருக்கு எல்லாம் வித்து வயிறு வளக்கும் ( வளத்த) திராவிடமும் திராவிடத் தலைவர்களையும் என்னன்னு சொல்ல...

சொல்லணும்ன்னு தோணுச்சு சொல்லிட்டேன்... தோணும் போதெல்லாம் இன்னும் சொல்லுவேன்

ஆங் அப்புறம் 8வது பதிவுல ஆண்டில் அடி எடுத்து வைக்கும் அன்பு நண்பர் இளாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்குறேன்.

8 comments:

ILA (a) இளா said...

வாழ்த்துக்கு நன்றிங்க தேவ்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஈரோட்டு வயல்களில் நடப்பட்டு காஞ்சிபுரம் சந்தையில் கொள்முதல் ஆகி கோபாலபுரத்தில் அசத்தலா பாக்கெட் போட்டு தமிழகம் மொத்தத்துக்கும் விற்பனை செய்யப்பட்ட ஒரு விற்பனை பொருள் தான் பகுத்தறிவோன்னு//

சூப்பரு! :)

//ஆங் அப்புறம் 8வது பதிவுல ஆண்டில் அடி எடுத்து வைக்கும் அன்பு நண்பர் இளாவுக்கு//

எட்டடி பாஞ்சிட்டாரு-ன்னு சொல்ல வரீக!
எட்டடியில் பாஞ்சவரு, கொட்டடியில் பாஞ்சாரா-ன்னு மேயர் இளாவே வந்து சொல்லுவாரு!:)

Anonymous said...

//காஞ்சிபுரம் சந்தையில் கொள்முதல் ஆகி கோபாலபுரத்தில் அசத்தலா பாக்கெட் போட்டு தமிழகம் மொத்தத்துக்கும் விற்பனை செய்யப்பட்ட ஒரு விற்பனை பொருள் தான் பகுத்தறிவோன்னு 2011ல்ல மல்லாக்க படுத்து சிந்திக்கும் போது எனக்கு தோன்றுது //

மற்றவர்கள் சொல்லி ஆன்மிகமுமோ பகுத்தறிவோ வரக்கூடாது. உங்களுக்கு என்ன தோன்றுகிறது? கண்ணதாசன் சொன்னார், கருனானிதி சொல்லவில்லை. காஞ்சியில் முளைத்து, கோபாலபுரத்தில் கருகியது என்றால், நீங்கள் பிறக்கவில்லையென்றுதான் ஆகிறது. When are you going to be born as an independent thinker ?

பகுத்தறிவு என்றால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு இயக்கம். மதத்தைக்காட்டி மக்களைப் பயமுறுத்தி சுரண்டி வாழ்பவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவது எதுவோ அதுவே அவ்வியக்கம். அதை மக்கள் ஏற்பதும் ஏற்காததும் அவர்கள் விருப்பம். இயக்கம் இவ்வளவுதான் செய்யும். அதை எவன் செய்தாலென்ன தேவ். பாராட்டுவதில் உங்களுக்கென்ன கவுரப்பிரச்சினை ?

ஒன்றை நினைவில் கொள்வது நலம். கடவுள் பெயரால் ஏமாற்றும் கூட்டம் என்று கடிவாளத்தால் இழுத்துப்பிடித்து வைத்துக் கொள்ளப்படவேண்டும்.

Anonymous said...

//கவிஞரின் புத்தகமெல்லாம் படிக்கும் போது திராவிடத்துக்கும் ஆத்திகத்துக்கும் இடையே கிடந்து ஊசலாடிய தருணங்களையும் உணர்வுகளையும் புரிஞ்சுக்க முடியுது //

கண்ணதாசனும் உங்களைப்போலத்தான். தனக்கு கிஞ்சித்தும் பொருந்தா இயக்கத்தில் சேர்ந்தது அவ்வியக்கத்தின் பாப்புலாரிட்டியைப்பயன்படுத்தி ஆதாயம் தேடலாமென நினைத்தே. அவ்வியக்கத்தினர் தமிழ், தமிழ் என்றார்கள். இவர் கவிஞர். தமிழால்தான் வாழ்க்கை. எனவே போனார். ஆனால், அவர்களுக்கு தமிழுக்கும் அப்பால் கொள்கைகள் இருந்தன. பெரியார் இருந்தார். இவருக்கு ஙே என்றாகி விட்டது. சந்தர்ப்பம் வந்தது. ஓடிவிட்டார். எல்லாமிருக்குமிடத்திலிருந்தால் எல்லாம் சவுக்கியமே எனப்புரிய இவருக்கு ஆண்டுகள் பலவாயிற்று.

பரவலாகப் படிக்கணும். ஒரே எழுத்தாளனைப்படிக்கும்போது அவன் மகாபெரியவனாகத் தெரிந்து நம்மையே முழுக்க ஆளுமை செய்துவிடுவான். ஜாக்கிரதை தேவ்.

Anonymous said...

//நம்பிக்கை தான் வாழ்க்கை என்பது உலக மொத்தமும் ஒப்புக் கொண்ட தத்துவம் ஒவ்வொரு மனிதனும் எதாவது ஒரு நம்பிக்கையில் தான் வாழ்ந்து வருகிறான் அந்த நம்பிக்கை அவன் வாழ்க்கைக்கு ஒரு ஊன்று கோலா இருந்து வழிகாட்டுகிறது. சில பல நம்பிக்கைகளால் மனித வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு ஆறுதல் கிடைக்கிறது. பெரும்பாலான நேரங்களில் அந்த நம்பிக்கை இறைவன் சார்ந்தாகவே அமைந்து போகிறது //

உலகமொத்தமும் ஒப்புக்கொண்ட தத்துவம் என்று சொல்வது மிகை. உலகத்தில் பெருவாரியான மக்கள் ஒப்புக்கொண்டது என்பதே உண்மையாகும்.

கடவுள் மறுப்புக் கொள்கை என்று கடவுள் நம்பிக்கை தோன்றியதோ அன்றிலிருந்து இருக்கிறது. ஆனால் எண்ணிக்கை குறைவு. மக்களில் 99 விழுக்காடு பயத்தின் காரணமாகத்தான் கடவுள் மீது நம்பிக்கை. கடவுள் மீதல்லா. தமக்கு கடவுளில்லாவிட்டால் என்ன நேருமோ என்ற பயம். பயமில்லாமல் இறைவனை நம்பி வழிபடுபவன் ஞானி.

கொஞ்சம் சிந்தியுங்கள். பயமில்லாதவனுக்கு ஏன் கடவுள் நம்பிக்கை ? பயமென்றே தெரியாக் குழந்தைக்கு ?
என்று பயம் உள்ளே நுழைந்தததோ அன்றே கடவுளும் வந்து விடுவார்.

//ஒவ்வொரு மனிதனும் எதாவது ஒரு நம்பிக்கையில் தான் வாழ்ந்து வருகிறான் அந்த நம்பிக்கை அவன் வாழ்க்கைக்கு ஒரு ஊன்று கோலா இருந்து வழிகாட்டுகிறது. //

நாத்திகன் எந்த நம்பிக்கையில் வாழ்கிறான்? அவனுக்கும் ஒரு நம்பிக்கை இருக்கும். ஆனால் கடவுள் நம்பிக்கை கிடையாது. அவனுக்கு ஊன்று கோல் உண்டா ? உண்டு. ஆனால் கடவுள் நம்பிக்கை என்ற ஊன்று கோல் இல்லையது.

//பெரும்பாலான நேரங்களில் அந்த நம்பிக்கை இறைவன் சார்ந்தாகவே அமைந்து போகிறது//

நல்லவேளை. 'எப்போதுமே' என்றெழுதாமல் 'பெரும்பாலான நேரங்கள் என்றெழுதிவிட்டீர்கள். வெல் டன்.

மேலே எழுதியவைதான் பகுத்தறிவுச் சிந்தனைகள். இதை உங்களுக்குச் சொல்ல கோபாலபுரத்தை நோக்கிக் கும்பிடவேண்டுமா ?

Anonymous said...

Voltaire said,"If God did not exist, it would be necessary to invent him”

வால்டேர் ஒரு கடுமையான நாத்திகர். அவர் சொன்ன இவ்வாக்கியம் பலவித பொருட்களில் பலராலும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. நீங்கள் அவர் கடவுள் நம்பிக்கை எப்படியும் வந்தே தீரும்; அவ்நம்பிக்கையில்லாமல் மக்களால் வாழமுடியாது என்று பொருளில் எடுக்கிறீர்கள். ஏனென்றால், உங்கள் நோக்கம் பகுத்தறிவுப்பாசறையப் பகடி செய்வதே. அதற்கு வால்டேரை வசமாக்குகிறீர்கள். இல்லையா ?

எப்படி ஒரு நாத்திகர் கடவுள் நம்பிக்கை வேண்டுமெனச் சொல்லுவார் ?

என் பார்வையின்படி, இவ்வாக்கியத்தில் வால்டேர் சொல்வதென்னவென்றால், கடவுள் என்பது ஒரு இல்லாப்பொருள். அது பொய். அது பொய் என்பதே உண்மை. ஆயினும் கடவுள் என்ற ஒரு பொய்யை நாம் உருவாக்கி உண்மை போல நடமாடவிட்டு விட்டால், அது மக்களை ஒரு கூட்டமாக்கும். சமூகத்தில் ஒரு பிணைப்பு உருவாகும். ஒவ்வொரு மனிதன் என்பதை விட்டுவிட்டு, நாமெல்லாரும் ஒரு இனம் எனற நினைப்பை இந்த நம்பிக்கை உருவாக்கலாம். இந்த கூட்டு நம்பிக்கையால் பலபல நன்மைகளை சமூகம் தங்களுக்கு உருவாக்க்கிக்கொள்ளும் என்பதே.

இங்கு மிகவும் குறிப்பிடப்படுவது. ஒரு பொய்யை நாம் உணமையாக்க வேண்டும். வள்ளுவர் வழியில் சொன்னால், பொய்மையும் வாய்மையிடத்து புறைதீர்ந்த நன்மைபயக்குமெனில்.

Anonymous said...

//நம்பிக்கை கொடுக்காத இயக்கமும் கொள்கையும் சமுதாயத்துக்கு எந்த விதத்தில் பயனளிக்கும்...வெறும் வாயிலே வடை சுட்டு அதில் ப்குத்தறிவு முத்திரை குத்தி பேச்சாலே அதை ஊருக்கு எல்லாம் வித்து வயிறு வளக்கும் ( வளத்த) திராவிடமும் திராவிடத் தலைவர்களையும் என்னன்னு சொல்ல... //

இது சரி. ஆனால் இது பகுத்தறிவு இயக்கத்தைத் தொடங்கி நடாத்திய பெரியாருக்குப் பொருந்தாது. அதே தி.,மு.க அதன் தொடக்கக்காலத்தில் பொருந்தாது. மக்களுக்கு அவ்வியக்கம் ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது. அவ்நம்பிக்கை தமக்கு பயனளிக்குமென்று மக்கள் நம்பியே காங்கிரசை விரட்டிவிட்டு தி.மு.கவுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தினார்கள்.
அன்றைய காலகட்டத்தில் வயிறு வளர்க்கவில்லை.

அவ்வியக்கமின்றில்லாவிட்டால், இன்று உங்கள் தமிழே மாறிப்போய் மலையாளத்துடன் இணைந்திருக்கும். மலையாளம் 75 விகிதம் சமஸ்கிருதம் கலந்த மொழி. பார்ப்ப்னர்கள் தமிழை அழித்திருப்பார்கள்.

Unknown said...

அனானி நண்பரே உங்கள் விரிவான் கருத்துக்களுக்கு என் நன்றியை பதிவு செய்கிறேன் கடவுள் மறுப்போ கடவுள் ஆதரவோ குறித்த விடயங்களை நான் இங்கே பகிரவில்லை பகுத்தறிவு என்ற பெயரில் தமிழகத்தில் நடக்கும் வியாபார போக்கை எடுத்துரைப்பதே இப்பதிவின் நோக்கம்

tamil10