Monday, August 27, 2007

தலைவர் ஆவாரா தளபதி?

தளபதி... திமுக தொண்டர்களின் அகராதியில் அந்த வார்த்தைக்கு மு.க.ஸ்டாலின் என்று பொருள்..

இந்தப் பதிவின் தலைப்பு முன்னொரு காலத்தில் திமுக வட்டாரங்களில் மட்டுமன்றி தமிழக மக்கள் மத்தியிலும் பரவலாக எழுந்து இன்று விடை கிட்டத் தட்ட உறுதி செய்யப்பட்ட கேள்வி..

திமுகவின் கடைசி தொண்டன் வரை ஒரு மனதாய் தளபதியை எதிர்காலத்தில் தலைவனாய் ஏற்று கொண்டு ஆண்டுகள் பல ஓடி விட்டன.. ஆனால் இன்னும் தளபதி வெறும் தளபதியாய் தொடரும் காரணங்கள் என்னவாக இருக்கும்..

ஒய்வெடுக்க வேண்டிய வயதில் ஒரு பெரியவரை இன்னும் அரசியல் களத்தில் போராட விட்டு விட்டு தளபதி தள்ளி நின்று வேடிக்கை மட்டும் பார்ப்பது போல் ஒரு தோற்றம் திமுகவில நிலவது ஏன்?

தளபதி தயங்குகிறாரா.. இல்லை தடைச் செய்யப்படுகிறாரா.. இன்னும் காலம் கனியட்டும் என ஐம்பதுகளின் மத்தியினைத் தொட்டு விட்ட திமுகவின் இளைஞரணி அமைப்பாளர் காத்திருப்பதன் நோக்கம் என்ன?

அரசியலில் முப்பது ஆண்டுகால அனுபவம்.. தொண்டர் பலம்.. கட்சியில் முன்னணியினரின் ஆதரவு..தமிழ் மக்களிடம் பரவலான அறிமுகம்..சென்னை மாநகர மேயராக நிர்வாக அனுபவம்...இப்படி ஒரு தலைவருக்கான அடையாளங்கள் அனைத்தையும் நிதானமாய் தன் வசப்படுத்திக் கொண்ட பின்னும் தளபதி அமைதி காப்பதன் அர்த்தம் என்னவாக இருக்கும்.

பேரறிஞர் அண்ணாவின் செல்வாக்கு உச்சத்தில் இருந்த போதே துருவ நட்சத்திரமாய் எழுந்தவர் கலைஞர் மு.கருணாநிதி.. பிற்காலத்தில் அவருக்கு அது திமுகவின் தலைமை பொறுப்பை ஏற்கும் நிலையை ஏற்படுத்திக் கொடுத்தது.. கிட்டத் தட்ட 40 ஆண்டுகாலமாய் திமுகவின் தலைமையைத் தன் வசம் வைத்திருக்கும் கலைஞர் ஒய்வெடுக்க மறுப்பது ஏன்?

திமுககாரர்கள் இந்த விவகாரத்தை உணர்வு பூர்வமாக அணுகினாலும்.. பொதுவாக சிந்தித்துப் பார்க்கும் போது சக்கரவர்த்தியின் சக்திக்கு முன்னால் பட்டத்து இளவரசர் பவர் எடுபடாமல் இருப்பதே இதற்கு காரணமா என்று சிந்தனை ஓடுவதைத் தவிர்க்க முடியவில்லை.

84 வயதிலும் ஆட்சி பளு, கட்சி தலைமை பொறுப்பு, மத்திய அரசில் பங்களிக்கும் பொறுப்பு, மாநிலத்தில் எதிர்கட்சிகளோடு அரசியல், கூட்டணி கட்சிகளின் உள்குத்துகளைச் சமாளிப்பது, குடும்பச் சண்டையில் தனக்கு அடுத்ததுக்கும் அடுத்த தலைமுறையோடு மல்லுகட்ட புதிய தொழில் நுட்பம் கையில் ஏந்தி நிற்பது, எழுத்துலகில் கவனம், திரை உலகில் ஆர்வம் என பெரியவர் கலைஞரின் சுறுசுறுப்பும் ஆற்றலும் அவர் தம் அரசியல் கோட்பாடுகளையும் மீறி என்னை கவர்ந்தவை.. தமிழர்கள் பலரையும் அரசியல் தாண்டி ஈர்த்தவை..

ஒரு தலைவராய் கலைஞர் கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியேயும் சந்தித்த சோதனைகளும் சவால்களும் ஏராளம்.. வென்றாரா.. தோற்றாரா என்பது ஒரு புறம் இருக்கட்டும்.. நின்றார் கலைஞர்..

அப்பேர்பட்ட தலைமையின் பின்னால் அரியணை ஏற போவதாய் உறுதி செய்யப் பட்ட ஒருவர்... அந்த தலைமையின் திறன்களில் ஒரு சில சதவிகிதத்தைக் கூட வெளிகாட்டாமல் இருப்பது ஆச்சரியமாய் இருக்கிறது.அது தளபதியின் தன்னடக்கம் என்றால் நம்பும் படி இல்லை...

முப்பது ஆண்டு காலமாய் அரசியலில் இருக்கும் தளபதியின் மிகப் பெரும சாதனையாகவும் சோதனையாகவும் இன்று வரை சொல்லப்படுவது அவரது மிசா சிறைவாசம் மட்டுமே

தளபதியிடம் இருக்கும் இன்னொரு கவனிக்கத் தக்க விசயம் MEDIA SHYNESS..ஆரம்பக் காலங்களில் இருந்து தளபதியை ஏற்றமிகு கண்ணோட்டத்தில் பத்திரிக்கைகள் காட்டியதில்லை..அந்தக் காரணத்தினாலோ என்னவோ தளபதிக்கும் பத்திரிக்கைகளுக்கும் நெருக்கம் அதிகமில்லை.. தற்போதைய திமுக தலைவரோ ஒரு தேர்ந்த பத்திரிக்கையாளர். பத்திரிக்கை பலம் தெரிந்தவர்.

கடைசியாக மார்ச் வாக்கில் என்.டி.டி.வி நிருபர் தளபதி பிறந்த நாளுக்கு அவரிடம் மைக் நீட்டி பிறந்த நாள் செய்தி கேட்டப் போது...

தளபதி தவிர்க்கும் நோக்கில் தவிப்பாய் வெளியிட்டக் கருத்து... நான் பிறந்த நாள் வாழ்த்து எல்லாம் சொல்லுறது இல்லங்க...

தளபதி டிஜிட்டல் பேனர்களில் கட் அவுட்களிலும் திமுகவின் தலைவராகி ஆண்டுகள் பல ஆகிவிட்டன...

இப்போது இருக்கும் ஒரே கேள்வி போஸ்ட்டரில் மட்டுமே அவர் ஆளுமை இருக்குமா இல்லை அதையும் தாண்டி நீளுமா...

பொது மக்களுக்கு அவர் தமிழகத்தின் அடுத்த தலைவராய் விசுவ ரூபம் எடுப்பாரா இல்லை வெறும் கலைஞரின் மகனாகவே என்றும் இருந்து விடுவாரா... பொறுத்திருந்து பார்க்கலாம்..

8 comments:

அபி அப்பா said...

அருமையான பதிவு! அவருக்கான நேரத்துக்காக வெயிட்டிங் அவ்வளவே!

லக்கிலுக் said...

உங்களாண்ட தாவு தீருது :-)))))

இதுகுறித்து நான் எழுதிய பதிவு இதோ

ஒரே மாதிரி தான் சிந்திக்கிறோம் இல்லை?

Unknown said...

நம்ம சிபி பத்திதான் எதாவது இருக்குன்னு வந்தேன் போய்ய்ய்ய்ய்யாஆஆஆஅன்ங்க்க்க்க்க்

இலவசக்கொத்தனார் said...

நீயுமா அரசியல்? டாக்டர் இளைய தளபதிதான் தலைவராயிட்டாரோன்னு வந்தேன்!

Unknown said...

//அருமையான பதிவு! //

வாங்க அபி அப்பா.. இந்தப் பதிவின் தொடர்ச்சியாய் நீங்கள் கொடுத்த சூரியன் - தி பாஸ் (!!!:)) பதிவர் இட்டிருந்த பதிவின் கருத்துக்களைக் காண்கிறேன்..

//அவருக்கான நேரத்துக்காக வெயிட்டிங் அவ்வளவே!
//
வெயிட்டிங்ல்ல நேரம் போயிடும் போலிருக்கேன்னு தான் சொல்ல வந்தேன்.

Unknown said...

//உங்களாண்ட தாவு தீருது :-)))))

இதுகுறித்து நான் எழுதிய பதிவு இதோ

ஒரே மாதிரி தான் சிந்திக்கிறோம் இல்லை? //

லக்கி நீங்க தளபதி பத்தி போட்ட அந்தப் பதிவை நான் அப்பவே படிச்சுட்டேன்.. கண்டிப்பா ஒத்தக் கருத்துக்களே...கழகம் சார்ந்தாலும் கருத்துத் தளத்தில் நீங்கள் மக்கள் மனம் அறிந்து இருக்கீங்க..:)))))

தளபதி போராட்டங்களிலும் தளபதியாக தலையிட வேண்டிய நேரங்கள் பலவற்றை தவற விட்டிருந்தாலும்.. உள்ளிருந்தே கிளம்பும் அனலை அடக்க மவுனம் கலைவரா? என்பதே இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி,.

Unknown said...

//நம்ம சிபி பத்திதான் எதாவது இருக்குன்னு வந்தேன் போய்ய்ய்ய்ய்யாஆஆஆஅன்ங்க்க்க்க்க் //

யோவ் கிழுமாத்தூர் நம்ம தளபதி சிபி ஆல் ரெடி தலைவர் ஆகியாச்சுய்யா... கும்மி அடிப்போர் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் யார்ன்னு தெரியும்ல்ல

Unknown said...

//நீயுமா அரசியல்? டாக்டர் இளைய தளபதிதான் தலைவராயிட்டாரோன்னு வந்தேன்! //
என்னத் தலைவரே விக்குற சரக்கு அதான் நம்ம கடையிலேயும் வச்சுருக்கேன்..அதுவில்லாமல் தமிழ்நாட்டு எதிர்காலம் பத்திய விசயம்... காலம் காலமா இங்கேயே இருக்கோம் அதான் பேசிட்டேன்...

டா க் ட ரு எளைய தள்ளாபதி பத்தி பேசுர அளவுக்கு நம்ம அறிவு இன்னும் வளர்ல்லயே தலீவா.. வளந்ததும் அ.த,மகனுக்கு இருக்கு

tamil10