Thursday, November 30, 2006

தூம் - 2 | DHOOM - 2


வணக்கம் மக்கா,

நேத்து நம்ம ஆபிஸ் மக்களோட உழைச்ச உழைப்பின் பலனைக் கொண்டாட படம் போக முடிவாச்சு.. என்னப் படம் போகலாம்ன்னு ஆளுக்கு ஆள் அபிப்பிராயம் செப்பிக்கொண்டிருக்க.. கடைசியா நம்ம கிளைன்ட் ஆசைக்கு மருவாதைக் கொடுத்து கும்பலாக் சத்யம் காம்ப்ளக்ஸ்க்குக் கிளம்புனோம்ய்யா

படம் போன வாரம் தான் ரிலீஸ்.. ஓரளவு நல்ல கூட்டம்ங்க...

போஸ்ட்டர்ல்ல பார்த்துக் கதையைக் கண்டுபிடிக்க முடியுமான்னு ஒரு சின்ன யோசனையிலே போஸ்ட்டரைப் பார்த்தேன்ங்க.

விறைப்பா அபிஷேக் பச்சன் பக்கத்துல்ல நம்ம ஐஸ் (ஐசா அது.. சின்ன வயசு டிரஸ் போட்டுகிட்டு நிக்குது... யம்மாடி) அதுக்குப் பக்கத்துல்ல ஒரு கள்ளத் தனமான புன்னகையோட நம்ம இந்தியன் சூப்பர்மேன் கிரிஷ் புகழ் ஹிரித்திக் ரோஷன், அதுக்கும் பக்கத்துல்ல பிபாஷா ( இவங்க டிரஸ் போடுறதே பெரிய விஷயம் தான்.. ஆ....த்தாடி ஒரு பெரும்மூச்சு) அதுக்கும் பக்கத்துல்ல யாஷ் சோப்ரா (படத்தின் தயாரிப்பாளர்) குடுமபத்து வாரிசு உதய் சோப்ரா ஒரு காமெடி கலந்தச் சிரிப்போடு போஸ் கொடுக்கிறார்.

இந்தப் போஸ்ட்ரை வச்சு கதை என்னவா இருக்கும்ன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்..கதைன்னு ஒண்ணு தேடினாலும் இந்தப் படத்தில் இல்லைங்கறது படம் பார்க்க ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல்லயே தெள்ளத் தெளிவா விளங்கிப் போச்சு.

படத்தை இப்படி தான்..... உக்காந்து.... யோசிச்சி எடுத்துருப்பாங்களோன்னு யோசிக்க வைச்சுட்டாங்கப்பா

அதாவது முதல்ல ஹிரித்திக்கின் அறிமுக காட்சி... அந்த ரயில் காட்சி பயங்கரப் பூச்சுற்றல் என்றாலும் ரசிக்கும் படி இருக்கிறது.. ஸ்டண்ட் மாஸ்டர் வாழ்த்துக்களை அள்ளிக் கொள்கிறார்.

அதுக்கு அடுத்து உதய் மற்றும் அபிஷேக் அறிமுகமாகும் காட்சி..உதய் பைக்ல்ல பறந்து வருவதும், தண்ணிக்குள் இருந்து வாட்டர் ஸ்கூட்டரில் அபிஷேக் வெளியே பறந்து அடியாட்கள் கூட்டத்தை போட்டுத் தள்ளும் அந்த லாஜிக் செம் காமிக்..(தமிழ்ல்ல இதைக் கண்டிப்பா அடுத்த பேரரசுவின் படத்தில் பார்க்கலாம்.. மகிழலாம்..)

ஆச்சு ரெண்டு நட்சத்திரங்களும் வந்தாச்சு படமும் ஒரு பத்து பதினைஞ்சு நிமிஷம் ஓடிருது இதுக்குள்ளே... இந்தக் கேப்பிலே தூம் மச்சாலே பாட்டுக்கு ஹிரித்திக் அட்டகாசமா ஆட்டம் போடுறார்.. நடனம் பாராட்டும் படி இருக்கிறது..

சரி.. அடுத்து இருக்கே மேட்டர் பி..பா..ஷா... அவங்க அறிமுகம் வளைவு நெளிவுகளின் விளக்கத்தோடு அமைக்கப்பட்டிருக்கிறது.. ம்ஹும் இப்படி எல்லாம் ஒரு போலீஸ் இருந்தா எல்லா கிரிமினலும் அவங்க கஸ்டடிக்கு வர்றதுக்கு க்யூ கட்டி இல்ல நிப்பாங்க.. ஆனா பாவம் படத்துல்ல அவங்க கிரிமினல் பின்னாடி அலையறாங்க... கேமரா அவங்க பின்னாடியே அலையுது...கேமரா மேன் கொடுத்து வச்சவர் தானுங்க..

ம்ஹும்.. சோ அபிஷேக் வந்தாச்சு ஹ்ரித்திக் வந்தாச்சு, பிபாஷாவும் வந்தாச்சு.. அடுத்து என்ன?

யோசிக்க விடாமா ஆடுறாங்கப்பா பாடுறாங்கப்பா.. ஹிரித்திக் எல்லா லாஜிக்கையும் மீறி நம்ம கமல்ஹாசன் டைப்ல்ல மேக்கப் எல்லாம் போட்டுகிட்டு கன்னாபின்னான்னு கண்ட இடத்துல்ல திருடுறார்.. அவரை யாராலும் கண்டே பிடிக்க முடியல்ல... அபிஷேக்கும் பிபாஷாவும் ஜகஜால கில்லாடியான ஹிரித்திக்கைப் பிடிக்க என்னவெல்லாமோ திட்டம் போடுறாங்க...அப்படியும் அவரை பிடிக்க முடியாமல் கோட்டை விடுறாங்க...

அப்படிங்கும் போது நமக்கும் புரியுது.. அதாவது திருடன் போலீஸ் விளையாட்டுத் தான் இந்த தூம் 2 படமா எடுத்துருக்காங்கன்னு...அபிஷேக் புத்திசாலி போலீஸ் அப்படின்னா கூட வர்ற உதய் கொஞ்சம் நம்ம மன்மதன் சத்யன் டைப் தமாஸ் போலீஸ்...உதய் சோப்ரா நம்ம சத்யன் ரேஞ்சுக்கு நல்லாக் காமெடி பண்ணியிருக்கார்... அவர் அடிக்கிற நகைச்சுவை வசனங்களுக்கு சனங்க ரெஸ்பான்ஸ் நல்லாவே இருக்கு..

கிட்டத் தட்ட இடைவேளை வரைக்கும் இப்படியே ஓட்டிட்டு போய் பிரேக் அடிக்கிறாங்க... இடைவேளைக்குக் கொஞ்சம் முன்னாடி ஐஸ் அம்மணி முக்காடு போட்டுகிட்டு திருடனுக்கு திருடியா அறிமுகமாகி ( ஆமாங்க ஐஸ் இதுல்ல அபிஷேக்கு ஆள் இல்ல) அரையும் கொரையும் நின்னு ஹ்ரித்திக்கைப் பார்த்து ஸ்டைலா U WANNA CHECK ME OUT ன்னு பீட்டராக் கேக்குது. சாரி ஐஸ் உங்க லெவலுக்கு கதை உள்ள படத்தை நம்புங்க...இப்படி சதை உள்ள படமெல்லாம் உங்களுக்கு நல்லா இல்லங்க.

இடைவேளைக்குப் பிறகு ஹிரித்திக்கும் ஐசும் ஒருத்தரை ஒருத்தர் நெருங்க... அபிஷேக் ஹிரித்திக்கை நெருங்க பகீரத பிரயத்தனங்களில் ஈடுபடுகிறார்...பலன் பூஜ்ஜியம்...

என்னங்க இந்த இடத்துல்ல விமர்சனம் படிக்கிற உங்களுக்கே கொஞ்சம் அலுப்புத் தட்டுதா? அப்படின்னா படம் பார்த்த எங்களுக்கு எல்லாம் எப்படி இருந்திருக்கும்.

சரி அப்படியே படம் பிரேசிலுக்கு நகர்கிறது யம்மாடியோவ் ரியோடி ஜெனிரோ என்ன அழகுப்பா.. பிரேசில் பீச் காட்சிகள் கிளுகிளுப்பு... பைக் சேஸிங் காட்சிகள் பரபரப்பு... கிளைமாக்ஸ் மலைச்சரிவு நீர்வீழ்ச்சி காட்சிகள் கண்களுக்கு ஜிலிஜிலிப்பு.

பிரேசலில் இன்னொரு பிபாஷா பாசு வருகிறார்... கேமரா அவரைக் கண்டபடியெல்லாம் அளவு எடுக்கிறது. அவரும் பிகினி எல்லாம் போட்டு கேமராவுக்கு நல்லாவே வேலைக் கொடுத்திருக்கிறார். கொடுத்த சம்பளத்திற்கு பிபாஷாவிடம் உள்ளதை உள்ளபடியே வாங்கியிருக்கிறார்கள்.பிரேசில் பிபாஷாவோடு உதய் ஆடுகிறார் பாடுகிறார்.

இதற்கிடையில் ஐஸ் அபிஷேக் செட் பண்ணி அனுப்பும் போலீஸ் இன்பார்மர் என ஒரு டூமில் வேறு.. ஆனால் ஒரு கட்டத்தில் உண்மையாகவே ஐஸ் ஹிரித்திக்கின் காதல் வலையில் விழ ஹிரித்திக் ஐஸின் உதட்டினை கவ்வி இழுக்கும் காட்சியில் (நம்ம சிம்பு அளவுக்கு இல்லங்க).. தியேட்டரில் எழுந்த அபிஷேக்பச்சா நீ கோயிந்தா கோயிந்தாடா குரல்கள் இன்னும் என் நினைவில் நிற்கின்றன.

பிறகென்ன சேஸிங்... எதிர்பார்க்கும் திருப்பங்கள்.. போலீஸ் வெல்கிறது... ஆனால் திருடனும் தோற்கவில்லை.. ஐஸ் ஹிரித்திக் காதலும் கேப்பில் வெற்றி பெறுகிறது எனப் படம் முடிகிறது...

நமக்கும் வெற்றி அடைந்த ஒரு உணர்வு.. பின்னே இப்படி ஒரு படத்தை முழுசாப் பார்த்து நம்ம சகிப்புத் தன்மையை உலகத்துக்கே பதிவா வேற போட்டுக் காட்றோம் இல்ல.

முதல் பாகத்தின் இசை வெற்றி இதில் நிச்சயமாக இல்லை. அபிஷேக் நடிப்பில் அவ்வளவாய் துடிப்பு இல்லை. ஐஸ்வர்யாவுக்கு இப்படி ஒரு ரோல் தேவையா தெரியவில்லை. திரைக்கதை என்ற விஷ்யம் மொத்ததில் இயக்குனரின் எண்ணத்தில் சுத்தமாக இல்லை.

சரி இவ்வளவு தடைக் கற்களையும் மீறி தூம் வெற்றி படமாக அமையுமானால் அதற்கு காரணம் என்னவாக இருக்கும்

SLEEK AND STYLISH FILM MAKING என்ற நவீன திரைப்பட பார்மூலா மீது மக்கள் காட்டும் தற்காலிக மோகம், அற்புதமான வெளிநாட்டு படப்பிடிப்புக் காட்சிகள், ஓரளவுக்கு ஈர்ப்பு ஏற்படுத்தும் சாகசக் காட்சிகள்,ஹிரித்திக்கின் ஆர்பாட்டமில்லாத அசத்தலான பங்களிப்பு... வேற என்ன சதைப் பற்றுள்ள படங்கள் மீது இருக்கும் ஒரு வித ஆர்வம் அவ்வளவு தான்..

நான் என்ன நினைச்சேனா..ம்ம்ம் இப்படி ஒரு படத்துக்கு கூட்டிட்டு போய் ஒரு புதன் கிழமை சாயங்காலத்தைச் சாவடிச்சதுக்கு ஆபிஸ்ல்ல ஓரமா ஒரு பெஞ்சைப் போட்டு ஏத்தி நிக்க விட்டுருக்கலாம்ய்யா...

நெக்ஸ்ட் சினிமாத் தவிர்த்து வேற கச்சேரிக்கு முயற்சி பண்ணுறேண்ங்கன்னு சொல்லி இப்போ ஜூட் விட்டுக்குறேங்க...

Monday, November 20, 2006

'ஈ' படம் பார்த்தீங்களா?

வணக்கம் மக்கா,

தீவாளிக்கு வந்தப் படத்துல்ல கிட்டத்தட்ட எல்லாப் படத்தையும் துட்டு கொடுத்து டிக்கெட் எடுத்து தியேட்டர்ல்ல பார்த்து முடிச்சாச்சுன்னு இருந்தப்போ தான் யாரோக் கேட்டாங்க.. 'ஈ' படம் பார்த்தாச்சான்னு..

பள்ளிக்கொடத்துல்ல சில பாடங்கள் நமக்கு பிடிக்கிறதுக்கும் பிடிக்காமல் போறதுக்கும் காரணம் அந்தப் பாடங்கள் நமக்குச் சொல்லிக் கொடுக்கப் படும் முறை.. சில சமயம் மிகவும் கடினமான பாடங்கள் கூட எளிமையா சொல்லிகொடுக்கப்படுவதால் நமக்கு டக்குன்னு புரிஞ்சிடும்.. அதே டைப்ல்ல படிச்சவங்க, பாமரங்க, சின்னப் பசங்க இப்படிப் பலத் தரப் பட்ட சினிமா ரசிகர்களுக்கு இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் ரொம்ப எளிமையா "பயோ வார்" (BIO WAR) அப்படிங்கற விஷயத்தை படமா எடுத்துப் புரிய வச்சுருக்கார்.

அறிவியலும்,அரசியலும்,பொருளாதாரமும் கலந்து கும்மியடிக்கும் பயோ வார் விஷயத்தை படம் பார்க்கும் ரசிகர்களை அதிகம் குழப்பாமல் ஒரு சில கதாபாத்திரங்களின் வழியாகவும் அவர்கள் வாழ்க்கை நிகழ்வுகள் வழியாகவும் ஒரு யதார்ததமான கதையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

காசுக்காக் எதையும் செய்யும் 'ஈ' கதாபாத்திரம் (கிட்டத் தட்ட நம்ம புதிய பாதை பார்த்தீபன் மாதிரி தான்) தமிழ் சினிமாவுக்கு புதுசு இல்லத் தான்னாலும் ஜீவா அந்தப் பாத்திரத்தை செய்திருக்கும் விதம் ஈ மீது நமக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்திடுது கருணாஸ்க்கு மீண்டும் ஒரு லொடுக்கு பாண்டி பாத்திரம் கிடைச்சுருக்கு...இதுல்ல அவருக்கு பேர் டோனி. நயந்தாரா படத்தின் கதாநாயகி.. நாயகனைத் தமிழ் படங்களின் விதிப் பிசகாமக் காதலிக்கிறாங்க. படத்துல்ல அவங்க பேர் ஜோதி... ஒரு பார் டான்சரா வர்றாங்க.

ஆஷிஷ் வித்யார்த்தி டாக்டரா வர்றாரு..( இது என்னவோ தெரியல்ல டாக்டர்கள் ஸ்கீரினில் வில்லன்களாக் காட்டப் படும் சீசன் போல) ஏழைக் காவலனாய் இலவ்ச மருத்துவம் பார்க்கும் நல்லவனாய் வலம் வரும் ஆஷிஷின் மறுபக்கம் தான் படத்தின் கரு. வெளிநாட்டுகாரர்களின் பயோ வார் திட்டங்களுக்கு நம் இந்தியாவையும் பொருளாதாரத்தில் கீழ் நிலையில் இருக்கும் சேரி வாழ் மக்களையும் ஆய்வுக் கூடமாகவும் ஆய்வுப் பொருட்களாகவும் மாற்றி அதன் மூலம் கோடிகளைக் குவிக்கும் ஆராய்ச்சியாளர் என கோரமான அவரது மறுபக்கம்.

பழைய இந்தி படங்களின் சாயலில், வில்லன் டாக்டர் ஆஷிஷ் வித்யார்த்தி கூடவே கிளுகிளுப்பா ஒரு நர்ஸை உலாவ விட்டிருக்காங்க.. அது கொஞ்சம் பொருந்தாத மாதிரி இருக்கு... இருந்தாலும் முன் பெஞ்ச் மக்கள் அந்த நர்ஸ் திரையில் வரும் போதேல்லாம் உற்சாகக் குரல் கொடுப்பது இயக்குனரின் வியாபாரப் பார்வையையும் காட்டுகிறது. டாக்டரின் கொடுஞ்செயல்களுக்கு அந்த நர்ஸ் எடுப்பு வேலைப் பார்க்கிறார்.

பசுபதி, இவருக்கு சேகுவேரா மாதிரி ஒரு வேடம். கொஞ்சமே வருகிறார். ஆனால் மனுசன் அழுத்தமாய் பதிகிறார். (பசுபதிண்ணா வெயில்ல உங்களை இன்னும் அதிகமா எதிர்பார்க்க வச்சீட்டீங்க). இவருக்கும் ஜீவாவுக்கும் கிளைமெக்ஸ் நெருக்கத்தில் நடக்கும் உச்சக் கட்ட உரையாடல்களில் சமுதாயச் சிந்தனைகளை அதிகப் பிரச்சார வாசம் இன்றி ஒலிக்கச் செய்திருக்கிறார் இயக்குனர்.

இது தவிர படத்தில் அஜய் ரத்னம், ராஜேஷ், பான்பராக் ரவி ஆகியோரும் வந்துப்போகிறார்கள். படத்தில் சிறிய வேடத்தில் வந்தாலும் ஜீவாவின் ஆயாவாக வரும் அந்த பாட்டி மனத்தில் நிற்கிறார்.

ஜீவாவின் நடிப்பைப் பத்தி சொல்லுணம்ன்னா.. மாப்பூ.. கமல்..விக்ரம்.. சூர்யா.. போய்ட்டுருக்க ரூட்ல்ல வண்டியை விட்டிருக்கார். நிறைய மெனக்கெட்டிருக்கார். அவர் மெனக்கெட்டதன் பலனை திரையரங்களில் ரசிகர்களின் கரகோஷ்மாய் நல்லாவே அறுவடைப் பண்ணிகிட்டு இருக்கார்.

நயந்தாரா ஜீவாவோடு போராடும் ஒரு காதலியாய் நல்லாவே செஞ்சு இருக்கார். சில காட்சிகளில் நடிப்புத் திறனைக் காட்டக் கிடைச்சக் காட்சிகளையும் நல்லாவே பயன்படுத்திகிட்டு இருக்கார்.

பாடல்கள் ஓ,கேன்னு சொல்லலாம். ஒரே முறை ..ஒர்ரே முறை... பாடல் தாளம் போட வைக்கிறது... சில காட்சிகளில் பின்னணி இசை இன்னும் பலம் சேர்த்திருக்கலாம்.. குறிப்பா பசுபதியின் உயிர் பிரியும் காட்சி..SOMETIMES SILENCE CAN BE THE BEST FORM OF MUSIC.. சிரிகாந்த் தேவா அதை ட்ரை பண்ணியிருக்கலாமேன்னு தோணுச்சு...

படத்தின் இன்னொரு பாராட்டத் தக்க விஷயம் கலை இயக்குனரின் உழைப்பு என்னமாச் செட் போட்டுருக்கார்ப்பா. ( ஏற்கனவே இவர் இயற்கையிலே போட்ட கலங்கரை விளக்கம் செட் அற்புதமான் ஒன்று) சாரி அவர் பெயரை நான் கவனிக்க மறந்துட்டேன்.

மொத்ததுல்ல சொல்லணும்ன்னா ஒரு முக்கியமான வெகுஜன விழிப்புணர்வு மேட்டரை தேவையான அளவு உப்பு உரைப்பு எல்லாம் சேத்து பக்குவாமாச் சமைச்சு பரிமாறி இருக்காங்க...போதுமான அளவுக்கு ருசியாவே இருக்கு..

இந்த ஈ தீவாளி ரேஸ்ல்ல மெதுவா ரெக்க விரிச்சாலும் கொஞ்சம் உசரமாவே பறக்கும்ங்கோ..

அப்புறம் என்ன டைம் கிடைச்சா ஈ படம் பாருங்க..

Wednesday, November 15, 2006

CMஐ முந்துகிறாராம் ஸ்டாலின்??

வணக்கம் மக்கா,

ஒரு பத்து பதினைஞ்சு நாளா ஒரே வேலை... இன்னும் ஓயல்ல.. வீட்டிலும் சரி ஆபிஸ்ல்லயும் சரி குனிய வச்சு குட்டுறாய்ங்க... சரி நம்ம கதை தான் வீடு தோறும் நடக்கும் கதையாச்சே.. அதைப் பத்தி பேசி என்ன பிரயோஜனம்.

பேப்பர் படிக்க முடியல்ல ...ஒழுங்கா நாலு நியூஸ் சானல் மாத்திப் பாத்து ஜி.கே டெவலப் பண்ண முடியல்ல... மழை வேற பெஞ்சு ஓஞ்சா மாதிரி போக்குக் காட்டிட்டு நான் ரெயின் கோட் கொண்டு போக மறக்கற நாளாப் பாத்துப் பேக்ல்ல தாக்குது.. ஒரு மனுஷன் என்னத் தான் செய்வான் சொல்லுங்க?

நாட்டு நடப்பெல்லாம் எப்படி இருக்குன்னு தெரிஞ்சிக்க எனக்கு இருந்த ஒவ்வொரு வழியும் ஒவ்வொரு விதத்துல்ல ஊட்டி ரோடு மண்சரிவுல்ல பிளாக் ஆன மாதிரி மூடி கிடக்க... நம்ம அறிவு பசி மட்டும் அடங்க மறுத்து அடம் பிடிக்க ஆரம்பிச்சது.

தமிழ் மணம் தேன்கூடுன்னு காலை முதல் மாலை வரை வேலையாக இருந்த எனக்கு அப்ரைசல் கண்டம் வெகு அருகினில் வரும் காரணத்தில் கூடுமானவரை அந்தப் பக்கங்களுக்கு அடிக்கடி போகக் கூடாது என்று ஒரு உறுதிமொழி வேறு... ( தமிழ்மணம் , தேன்கூடு படிக்கறதையே தொழிலாகக் கொண்டு ஒரிஜினல் தொழில் என்ன எனபதையே மறந்து அப்ரைசல் நேரத்தில் அது தங்களுக்கு நினைவூட்டப் பட்டதாய் பரிதாப கதை சொன்ன வலையுலக மேன்மக்களுக்கு என் உறுதி மொழியின் நோக்கம் புரியும்)

ஆக... இப்படி அகில உலகத்தில் நடக்கும் வம்பு தும்புகள் காதில் விழாமல் என்னடா வாழ்க்கை என்று அலுத்தப் படி டீ குடிக்க கடைக்குப் போயிருந்தேன்...

ம்ம் பிரெட் பஜ்ஜி ஒரு பிளேட் அப்புறம் ஒரு ஸ்பெஷல் டீ சொல்லிட்டு காத்திருந்த கேப்பில் காதில் விழுந்தது தான் இந்தப் பதிவின் தலைப்பு..


CMஐ முந்துகிறாராம் ஸ்டாலின்

அடங்கொக்க மக்கா.. உள்ளாட்சி உடனே தமிழக ஆட்சி ஆகப் போகுதான்னு காதைத் தீட்டிகிட்டேன்.

"ஸ்டாலின் முந்துறதாவது.. எங்கேய்யா பார்த்த?" ஒருத்தன் கேட்டான்.

"மச்சி எல்லாப் பேப்பர்ல்லயும் போட்டிருந்தானே நீ பார்க்கலியா.. நெட்ல்ல எல்லாம் கூட போட்டிருக்கான்ப்பா" அங்கிருந்தக் கும்பல்ல ஒருத்தன் பதில் சொன்னான்..

"ஸ்டாலின் ஓ,கே தான்ம்மா அதுக்காக CM அளவுக்கெல்லாம் பேசக் கூடாது"

"எத்தனை நாளைக்கு தான் இன்னும் CM புராணம் பாடுவீங்க ஸ்டாலின் அடிச்சுக் கிளப்புறாரு பாருங்கப்பா"

"யோவ் அதுக்குள்ளே சொன்னா எப்படி இப்போத் தானேப்பா ஸ்டாலின் வந்துருக்கார்..CM ரிக்கார்ட் தெரியும் இல்ல"

"CM ரிக்கார்ட் எல்லாம் உடைக்கப் போறார் பாருய்யா ஸ்டாலின்"

"யோவ் ஆயிரம் இருந்தாலும் CM ரேஞ்சு வேறய்யா..ஸ்டாலின் எல்லாம் CM ரேஞ்ச்க்கு எப்படிய்யா ஒத்துக்க முடியும்?"

"பந்தயம்ய்யா ஸ்டாலின் CMஐ அடிச்சுக் காட்டுவாரு பாப்போமா"

இப்படியே பேச்சுப் போச்சு.. நான் ஆர்டர் பண்ண பஜ்ஜியும் டீயும் வர அந்தக் கும்பல கிளம்பி போகவும் சரியா இருந்துச்சு..

ஆக கூடி ஸ்டாலின் கலக்க ரெடி ஆயிட்டார்ன்னு எதோ புரிஞ்சிகிட்டு எழுந்து ஆபிஸ் போனேன்.

போனதும் அவசரமா நம்ம இட்லி வடையார் பக்கம் போனேன்.. இப்படி நியூஸ் எல்லாம் அவரை விட்டா யார் முதல்ல சொல்லுவா? ம்ஹும் அவர் பக்கத்துல்லயும் இந்த மேட்டர் எதுவும் இல்லை...

ச்சே என்னப்பா விவரம் தெரிஞ்சும் சரியா விளங்கல்லயே...பேப்பர்ல்ல எல்லாம் வந்து இருக்குங்கறாங்க... நெட்ல்ல போட்டு இருக்குன்னு சொல்லுறாங்க... ஆனா நமக்கு மட்டும் தெரியல்லயேன்னு மண்டைக் காய்ஞ்சுப் போய்.. நேரா சன் டிவிக்கு போன் போட்டுரலாமான்னு யோசிச்ச டைம்ல்ல நம்ம ஜி மெயிலுக்கு ஒரு மெயில் வந்துச்சுங்க...

அதோட டைட்டில்...

"STALIN OVERTAKES CM"

அவசரம் அவசரமா மெயிலைத் திறந்துப் படிக்கிறேன்...

"சுப்ரீம் ஸ்டார் சீரஞ்சிவி நடித்த ஸ்டாலின் படம் முந்தைய வருடம் நம்ம தலைவர் நடிச்சு வெளிவந்த சந்திரமுகி படத்து வசூலை ஆந்திராவில்ல முந்திருச்சாம்....

அட பாவிகளா இது தானா நான் கேட்ட டீக் கடை மேட்டர்.. ஸ்டாலினுக்கு சப்போர்ட்டாப் பேசுனவிங்க குரல்லயே லைட்டா ஜாங்கிரி எழுத்து வாடை அடிக்கும் போதே நான் டவுட் ஆகி இருக்கணும்... என்னப் பண்றது... சரி விடுங்க மக்களே மறுபடியும் டைட்டிலுக்கே வர்றேன்...


CMஐ முந்துகிறாராம் ஸ்டாலின்??

உங்க கருத்தை எனக்குப் பின்னூட்டமாச் சொல்லுங்க..

இப்போதைக்கு ஐயாம் தி எஸ்கேப்ங்கோ

PS: CM = ChandraMukhiயாம்

tamil10