Monday, August 27, 2007

தலைவர் ஆவாரா தளபதி?

தளபதி... திமுக தொண்டர்களின் அகராதியில் அந்த வார்த்தைக்கு மு.க.ஸ்டாலின் என்று பொருள்..

இந்தப் பதிவின் தலைப்பு முன்னொரு காலத்தில் திமுக வட்டாரங்களில் மட்டுமன்றி தமிழக மக்கள் மத்தியிலும் பரவலாக எழுந்து இன்று விடை கிட்டத் தட்ட உறுதி செய்யப்பட்ட கேள்வி..

திமுகவின் கடைசி தொண்டன் வரை ஒரு மனதாய் தளபதியை எதிர்காலத்தில் தலைவனாய் ஏற்று கொண்டு ஆண்டுகள் பல ஓடி விட்டன.. ஆனால் இன்னும் தளபதி வெறும் தளபதியாய் தொடரும் காரணங்கள் என்னவாக இருக்கும்..

ஒய்வெடுக்க வேண்டிய வயதில் ஒரு பெரியவரை இன்னும் அரசியல் களத்தில் போராட விட்டு விட்டு தளபதி தள்ளி நின்று வேடிக்கை மட்டும் பார்ப்பது போல் ஒரு தோற்றம் திமுகவில நிலவது ஏன்?

தளபதி தயங்குகிறாரா.. இல்லை தடைச் செய்யப்படுகிறாரா.. இன்னும் காலம் கனியட்டும் என ஐம்பதுகளின் மத்தியினைத் தொட்டு விட்ட திமுகவின் இளைஞரணி அமைப்பாளர் காத்திருப்பதன் நோக்கம் என்ன?

அரசியலில் முப்பது ஆண்டுகால அனுபவம்.. தொண்டர் பலம்.. கட்சியில் முன்னணியினரின் ஆதரவு..தமிழ் மக்களிடம் பரவலான அறிமுகம்..சென்னை மாநகர மேயராக நிர்வாக அனுபவம்...இப்படி ஒரு தலைவருக்கான அடையாளங்கள் அனைத்தையும் நிதானமாய் தன் வசப்படுத்திக் கொண்ட பின்னும் தளபதி அமைதி காப்பதன் அர்த்தம் என்னவாக இருக்கும்.

பேரறிஞர் அண்ணாவின் செல்வாக்கு உச்சத்தில் இருந்த போதே துருவ நட்சத்திரமாய் எழுந்தவர் கலைஞர் மு.கருணாநிதி.. பிற்காலத்தில் அவருக்கு அது திமுகவின் தலைமை பொறுப்பை ஏற்கும் நிலையை ஏற்படுத்திக் கொடுத்தது.. கிட்டத் தட்ட 40 ஆண்டுகாலமாய் திமுகவின் தலைமையைத் தன் வசம் வைத்திருக்கும் கலைஞர் ஒய்வெடுக்க மறுப்பது ஏன்?

திமுககாரர்கள் இந்த விவகாரத்தை உணர்வு பூர்வமாக அணுகினாலும்.. பொதுவாக சிந்தித்துப் பார்க்கும் போது சக்கரவர்த்தியின் சக்திக்கு முன்னால் பட்டத்து இளவரசர் பவர் எடுபடாமல் இருப்பதே இதற்கு காரணமா என்று சிந்தனை ஓடுவதைத் தவிர்க்க முடியவில்லை.

84 வயதிலும் ஆட்சி பளு, கட்சி தலைமை பொறுப்பு, மத்திய அரசில் பங்களிக்கும் பொறுப்பு, மாநிலத்தில் எதிர்கட்சிகளோடு அரசியல், கூட்டணி கட்சிகளின் உள்குத்துகளைச் சமாளிப்பது, குடும்பச் சண்டையில் தனக்கு அடுத்ததுக்கும் அடுத்த தலைமுறையோடு மல்லுகட்ட புதிய தொழில் நுட்பம் கையில் ஏந்தி நிற்பது, எழுத்துலகில் கவனம், திரை உலகில் ஆர்வம் என பெரியவர் கலைஞரின் சுறுசுறுப்பும் ஆற்றலும் அவர் தம் அரசியல் கோட்பாடுகளையும் மீறி என்னை கவர்ந்தவை.. தமிழர்கள் பலரையும் அரசியல் தாண்டி ஈர்த்தவை..

ஒரு தலைவராய் கலைஞர் கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியேயும் சந்தித்த சோதனைகளும் சவால்களும் ஏராளம்.. வென்றாரா.. தோற்றாரா என்பது ஒரு புறம் இருக்கட்டும்.. நின்றார் கலைஞர்..

அப்பேர்பட்ட தலைமையின் பின்னால் அரியணை ஏற போவதாய் உறுதி செய்யப் பட்ட ஒருவர்... அந்த தலைமையின் திறன்களில் ஒரு சில சதவிகிதத்தைக் கூட வெளிகாட்டாமல் இருப்பது ஆச்சரியமாய் இருக்கிறது.அது தளபதியின் தன்னடக்கம் என்றால் நம்பும் படி இல்லை...

முப்பது ஆண்டு காலமாய் அரசியலில் இருக்கும் தளபதியின் மிகப் பெரும சாதனையாகவும் சோதனையாகவும் இன்று வரை சொல்லப்படுவது அவரது மிசா சிறைவாசம் மட்டுமே

தளபதியிடம் இருக்கும் இன்னொரு கவனிக்கத் தக்க விசயம் MEDIA SHYNESS..ஆரம்பக் காலங்களில் இருந்து தளபதியை ஏற்றமிகு கண்ணோட்டத்தில் பத்திரிக்கைகள் காட்டியதில்லை..அந்தக் காரணத்தினாலோ என்னவோ தளபதிக்கும் பத்திரிக்கைகளுக்கும் நெருக்கம் அதிகமில்லை.. தற்போதைய திமுக தலைவரோ ஒரு தேர்ந்த பத்திரிக்கையாளர். பத்திரிக்கை பலம் தெரிந்தவர்.

கடைசியாக மார்ச் வாக்கில் என்.டி.டி.வி நிருபர் தளபதி பிறந்த நாளுக்கு அவரிடம் மைக் நீட்டி பிறந்த நாள் செய்தி கேட்டப் போது...

தளபதி தவிர்க்கும் நோக்கில் தவிப்பாய் வெளியிட்டக் கருத்து... நான் பிறந்த நாள் வாழ்த்து எல்லாம் சொல்லுறது இல்லங்க...

தளபதி டிஜிட்டல் பேனர்களில் கட் அவுட்களிலும் திமுகவின் தலைவராகி ஆண்டுகள் பல ஆகிவிட்டன...

இப்போது இருக்கும் ஒரே கேள்வி போஸ்ட்டரில் மட்டுமே அவர் ஆளுமை இருக்குமா இல்லை அதையும் தாண்டி நீளுமா...

பொது மக்களுக்கு அவர் தமிழகத்தின் அடுத்த தலைவராய் விசுவ ரூபம் எடுப்பாரா இல்லை வெறும் கலைஞரின் மகனாகவே என்றும் இருந்து விடுவாரா... பொறுத்திருந்து பார்க்கலாம்..

Thursday, August 23, 2007

நானும் என் ரேடியோ பொட்டியும்

இன்றைய நகர வாழ்க்கையில் பலரது வாழ்க்கையிலும் பின்னி பிணைஞ்சுப் போன ஒரு மேட்டர்ன்னா அது ரேடியோங்க..

ஆறாவதோ ஏழாவதோ படிக்கும் போது அப்பா ரிச்சி தெருவுக்குக் கூட்டிட்டு போய் ஒரு பாக்கெட் ரேடியோ வாங்கி தந்தது இன்னும் நினைவு இருக்கு... அதோட அன்றைய விலை 100 ரூபாய்.. சிவப்பு கலர் ரேடியோ அது.. அப்போல்லாம் எப்.எம் கிடையாது.. ஆனா கேக்குறதுக்கு ரொம்ப இனிமையா இருக்கும்...

காலை நேரங்களில் ரேடியோ அதிகம் கேட்க முடிந்ததில்லை.. ஆனா அந்த மாலை நேரங்களில் மயிலாப்பூர் பகுதியில் நாங்க குடியிருந்த வீட்டின் மொட்டை மாடிக்குச் செல்லும் படிகளில் அமர்ந்து ரேடியோ கேக்குறது இருக்கே... அதெல்லாம் ஒரு சுகம்ங்க..

அந்த சுகம் அதிகமா வார இறுதிகளில் தான் கிடைக்கும்.. லீவுன்னு சொல்லி ரேடியோவும் காதுமா அலையலாம்.. முன்னிரவு நேரங்களில் சிபாக்கா டாப் டென் பாடல்கள்ன்னு ஒரு நிகழ்ச்சி வரும்... நமக்கு ரொம்ப பிடிச்ச நிகழ்ச்சி அது.. பாடல்களை வரிசைப் படுத்துற நிகழ்ச்சி அது... கேக்க அருமையா இருக்கும்.. அப்படியே சேனலை ட்யூன் பண்ணா இந்தியிலே அமின் சயானி ( பேர் கிட்டத் தட்டச் சரின்னு நினைக்கிறேன்) அப்படின்னு ஒரு தொகுப்பாளர் அசத்துவார் பாருங்க... அதைப் புரிஞ்சிக்கவே இந்திக் கத்துக்கலாம் போலிருக்கும்....

சில சமயம் மொழி புரியாத பாடல்களைக் கூட கேட்டு கிடப்பது உண்டு...

அப்புறம் ஒரு நாள் நான் ஆசையா வச்சிருந்த அந்த சிகப்பு ரேடியோ உயிரை விட்டுச்சு.. என்னவெல்லாமோச் செஞ்சுப் பாத்தோம்.. செலவழிச்சும் பார்த்தோம்... ம்ஹூம் அதைக் காப்பாத்த முடியல்ல

அந்த பாக்கெட் ரேடியோ போன பிறகு பலக் காலம் ரேடியோ ஆசையே போயிருச்சு...

பின்னாடி விவேகானந்தா காலேஜ்ல்ல படிக்கும் போது முக்காவாசி மதிய நேரம் ப்ரீயா அமைவது உண்டு... அப்போ எங்க வீட்டுல்ல பிலிப்ஸ் மியூசிக் சிஸ்டம் இருந்துச்சு... புதுசா வந்த நேரம்..

பண்பலை ஒளிபரப்பு துவங்கியிருந்த நேரம்... ப்ரியமான நேரம், வி.ஆர்.ஜி நேரம்ன்னு பல தனியார் நிறுவனங்கள் ஆளுக்கு ஒரு மணி நேரம்ன்னு ரேடியோ நேயர்களுக்கு புது அனுபவம் கொடுத்தக் காலமது... இன்றைய எப்.எம் சேனல்களின் முன்னோடிகள் அவைன்னு சொல்லலாம்...

மதியம் நல்லா சாப்பிட்டுட்டு ரூம் கதவைச் சாத்திட்டு வெயில் ஜன்னல் வழியா வருவதை திரைப் போட்டு பாதி தடுத்தும் தடுக்காமலும் மல்லாக்கப் படுத்துகிட்டு ரேடியோவைப் போட்டா அந்த அனுபவம் இருக்கு பாருங்க அட்டகாசம்
பொழுது பக்காவாப் போகும்...

அதற்கு பின்னால் கல்லூரி முடித்து வேலை. அப்படின்னு வாழ்க்கையின் கால்களில் சக்கரம் கட்ட தொடங்கிய காலத்தில் ரேடியோவுடனான என் நட்பு பாதிக்கப்பட்டது..

அப்படிப் பாதிக்கப்பட்ட நட்பு பின்னால் வந்த செல்போன் புரட்சி மூலம் புதுப்பிக்கப்பட்டதுன்னு சொல்லணும்...காலையில் கடுப்பேற்றும் டிராபிக்கை சிரித்தவாறு சமாளிக்க எப்.எம் தான் உதவுதுன்னா கண்டிப்பா அது மிகையாகாது...

கடுமையான வேலை இருக்கும் சில நாட்களில் இரவு நேரம் கடந்து வீடு திரும்பும் பொழுதுகளில் காதுகளில் சன்னமா இசை வழிய பயணம் போகும் அந்தத் தருணங்கள் மதிப்புமிக்கவை...அதிலும் லேசா சாரல் அடிச்சா இன்னும் அருமையான அனுபவம்...

சமீபத்திலே நம்ம குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பேச்சை இஅப்ப்டி ரேடியோவுல்ல கேட்டுகிட்டே வண்டி ஓட்டிக்கிட்டு போனது ஒரு வித்தியாசமான அனுபவம்...

ரேடியோ என் வாழ்க்கையில் எனக்கு அமைந்த ஒரு வித்தியாசமான இனிமையான நட்புன்னு சொல்லலாம்..

இந்தா இப்போக் கூட பிக் எப்.எம்ல்ல தீனான்னு நம்ம பையன் ஒருத்தன் 92.7 மணி நேரம் விடாம நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி சாதனைப் படைக்க முயற்சி பண்ணிகிட்டு இருக்கார்... நாளைக்கு காலையிலே அந்த சாதனை முடியும்... அப்பப்போ கிடைக்கிற பிரேக்ல்ல தீனா இன்னும் பேசிக்கிட்டு தான் இருக்காரான்னு செக் பண்ணுறது ஒரு த்ரில்...

ரேடியோ பத்தி பேசச் சொன்னா பேசிகிட்டே போலாம்....இன்னொரு சமயம் இன்னும் பேசலாம்.. :)

Saturday, August 18, 2007

காந்தியா சுதந்திரம் வாங்கி கொடுத்தார்?

இந்த வாரம் ஊரெல்லாம் கொடியேத்தி முட்டாய் கொடுத்து இந்திய சுதந்திரத்தின் அறுபதாவது ஆண்டை அமோகமாக்கொண்டாடுனாங்க...மெயில்..பதிவுன்னு நம்ம மக்களும் குறைவில்லாம கிடைச்ச சுதந்திரத்தை சுகமாக் கொண்டாடினாங்க..

இந்த நிலைமையிலேத் தான் எனக்குக்குள்ளே இப்படி ஒரு கேள்வி கொக்கியா தொக்கி நின்னுச்சு

அந்தக் கேள்வியைப் பதிவு தலைப்பா வச்சாச்சு.. சில பல காலத்துக்கு முன்னாடி ஒரு இந்தி படம் பார்த்தேன்.. படத்தின் பெயர் மாச்சீஸ்.. நம்ம குல்சார் கைவண்ணத்தில் வந்த படம்.. பஞ்சாப் தீவிரவாதத்தைப் பத்தி பேசும் படம் அது.. படத்தின் மொத்தத்தைப் பத்தி நான் இங்கே சொல்ல வர்றல்ல..அந்தப் படத்தில் வர்ற ஒரு வசனம் என்னைக் கொஞ்சம் சிந்திக்க வச்சிருச்சு...

அதாவது அந்த ஊர் பள்ளிக்கொடத்துல்ல வழக்கம் போல வாத்தியார் ஒருத்தர் கையிலே பிரம்போட வரலாறு சொல்லிக் கொடுத்துகிட்டு இருக்கார்...

நம்ம பாரத தேசத்துக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தது மகாத்மா காந்தி அப்படின்னு பொறி பறக்க பாடம் நடத்திகிட்டு இருக்க அவரைப் பார்த்து இடி இறக்கற மாதிரி என்னிய மாதிரி ஒரு சின்னப் பொடியன் அதிரடியா சொல்லுறான்... சார் சும்மா பொய் சொல்லக் கூடாது... இந்த டுபாக்கூர் கதையை எல்லாம் நாங்க நம்ப மாட்டோம்..

லைட்டா ஜெர்க்காகுற வாத்தி... என்னாச்சு உனக்கு நக்கலா... மவனே எனக்கு வரலாறு நீ சொல்லப் போறீயா அப்படின்னு கோவமா பிரம்பைச் சுத்த பொடியன் பிரம்புக்கு பம்மி நிக்காம வாத்தியாரை நேருக்கு நேரா நிமிந்து கேக்குறான்...

"காந்தி கிட்ட வெள்ளைக்காரன் சுதந்திரத்தை இந்தா வச்சிக்கங்க அப்படின்னு சொல்லிக் கொடுத்துட்டுப் போனதை நீங்கப் பார்த்தீங்களா... காந்தி தான் வாங்கிக் கொடுத்தார்ன்னா.. நம்ம ஊர் லாலா லஜ்பத் ராய்.. பகத் சிங்.. ஜாலியன் வாலா பாக்ல்ல ரத்தம் சிந்துன்ன பல்லாயிரக்கணக்கான மக்கள் எல்லாம் எதையும் வாங்கி தர்றல்லயா....

ஒரே பஞ்சாப்பா ஒண்ணா இருந்த நம்ம இன்னிக்கு அந்த பஞ்சாப்ல்ல இருக்க நம்ம உறவுகளை சுதந்திரமாப் போய் பார்த்துட்டு வர முடியுமா? கிடைச்சது சுதந்திரம் இல்லை... "அப்படின்னு அந்தக் காட்சி இன்னும் நீளும் ...

ஓடனே நமக்கும் யோசனை ஓடுச்சு... நம்ம செந்தமிழ் நாட்டு விடுதலை வீரர்களைப் பத்தி...வரிசையா நிறைய பேர்கள் வந்தாலும் அவங்க எல்லாம் பெரிதாகப் பேச படவில்லையோ அப்படின்னு நினைக்க வச்சுருச்சு...

காந்தி அவர்களை இந்த நாட்டின் முகமாக சித்தரிக்க என்ன காரணமாயிருக்கும்? எத்தனையோ ஆயிரம் விடுதலை வீரர்கள் போராட்டக் களத்தில் பொங்கி எழுந்து போராடி வீழ்ந்தும் வாங்கிக் கொடுத்த சுதந்திரத்தின் விலாசம் மகாத்மாவின் பெயரை மட்டும் சுமந்து நிற்க காரணம் என்ன?

மற்றவர்களின் பங்கு மறைக்கப்பட்டதா? காந்தி அவர்களின் பங்களிப்பு மிகைப் படுத்தப்பட்டதா?

எனக்கு ஒண்ணியும் புரியல்ல... ஆனா சம்பந்தில்லாம எங்க மொதலாளி அடிக்கடி சொல்லுற தத்துவம் ஞாபகம் வந்துப் போனது

"பொடியா நீ செய்யற எந்த வேலையும் ஊரும் உலகமும் கவனிக்கும் படி இருந்தா தான் நீ பெரிய ஆள் ஆக முடியும்ன்னு..."

tamil10