Saturday, February 23, 2008

டி.ஜி.எஸ். தினகரன் சில ஞாபகங்கள்

இந்த வாரத்தைப் பொறுத்த வரை என்னைப் பாதிச்ச ஒரு விசயம்... டி.ஜி.எஸ்.தினகரனின் மறைவு..தமிழகத்தின் கிறித்தவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த யாராக இருந்தாலும் இவரைப் பற்றிய ஒரு அறிதல் இல்லாமல் வளர்ந்திருக்க முடியாது..

எதோ ஒரு விதத்தில் இவரைப் பற்றி விசயங்களும் செய்திகளும் நிகழ்வுகளும் என்னை என் சிறு வயது துவங்கி வந்தடைந்து கொண்டே இருந்து வந்துள்ளன..சுயமாக சிந்திக்கும் காலம் வரை பெற்றவர்களும் உற்றவர்களும் உறவினர்களும் சொல்லிக் கொடுத்து வளர்த்த அறிவே ஆன்மீகம் என்பதாய் இருந்தது.. சுருங்கச் சொல்லுவதனால் ஆன்மீகம் என்பது மனம் சார்ந்ததாக இல்லாமல் மதம் சார்ந்ததாகவே இருந்து வந்துள்ளது...

தமிழகத்தைச் சார்ந்த கிறித்தவக் குடும்பங்களுக்கு டிஜிஎஸ் அவர்கள் ஒரு ஐகானிக் பிகர்.. அவரைப் போல இறை பணி செய்ய தம் குடும்பத்தில் இருந்து ஒருவராவது வரவேண்டும் என்பது பரவலான எண்ணம். இறை பணிக்காகவே தன் வாழ்க்கையை ஒப்படைத்து அதன் பொருட்டாகவே வாழ்ந்தவர் டிஜிஎஸ் தினகரன்.. மனிதராய் பிறந்த எவரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல... அந்த முறையில் கிறித்தவச் சமுதாயத்திலே அவரை விமர்சிப்பவர்களும் உண்டு.. ..

அவரைப் பற்றி இது வரை பொதுவாக சொல்லிய கருத்துக்களை விட அவரைப் பற்றி நான் ஒரு பதிவு எழுதும் அளவுக்கு என்னைத் தூண்டிய விசயங்கள் இரண்டு...

முதல் விசயம்.. டிஜிஎஸ் அங்கிளின் பாடல்கள்.. கிறித்துவச் சமய வழிபாடுகளில் இசை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது ஒரளவு உலகறிந்த விசயம்... டிஜி.எஸ் முறைபடி சங்கீதம் கற்றவரா என்ற விவரம் எனக்கு தெரியாது.. ஆனால் அவர் பாடும் பாடல்கள் பொதுவாக கர்னாடக சங்கீத ராகங்களை அடிப்படையாக கொண்டிருப்பதாகக் கேள்விபட்டிருக்கிறேன்..

வாத்தியங்களின் இரைச்சலும் இதர பிற தற்கால இசை முன்னேற்றங்களும் வந்த போதும் அந்த பழமையான சாஸ்தீரிய முறையில் கணீரென ஒலிக்கும் அவர் குரலுக்கு நான் பரம ரசிகன்...

பழங்காலங்களில் சொல்லக் கேட்டிருக்கிறேன்... இறையடியார்கள் உள்ளம் உருகி இறைவனைத் துதித்து பாடும் போது அதைக் கேட்போரின் மனமும் உருகி போகும் என்பதாய்... அதை நான் இவர் பாடல்களைக் கேட்கும் போது உணர்ந்திருக்கிறேன்... அதிகமாய் பக்தி பாடல்கள் கேட்கும் பழக்கம் இல்லாத எனக்கு இவரது பாடல்கள் மட்டும் அலாதி விருப்பம்... மனம் சோர்ந்த நேரங்களிலும் பின்னிரவு நேரங்களிலும் இப்படி பாடல்கள் கேட்பது உண்டு...

என்னுடைய ஆல் டைம் பேவரிட் பாடல்கள் என நான் குறிப்பிட விரும்பும் பாடல்கள்

இயேசு அழைக்கிறார்.. மற்றும் சோர்ந்து போகாதே மனமே ... என்னும் இந்த இரண்டு பாடல்களும் தான்

அடுத்தக் காரணம் சில பல நேரங்களில் மனம் மதத்தை எதிர்ப்பதாய் கிளம்பி இறை நம்பிக்கை விட்டு தூரம் போகும்.. அப்படிப் பட்ட நேரங்களில் நான் கோயில்களுக்குச் செல்லாமல் இருந்தது உண்டு.. கோயிலுக்குப் போனால் இறைவனைப் பற்றி பேசுவதை விட மதம் பற்றிய பேச்சே அதிகமாக இருக்கும்...அப்படி ஒரு எண்ணம்... அந்த நேரங்களில் இவரது ஜெப கோபுரம் அமைந்திருக்கும் இடத்தில் இருக்கும் ஒரு தியான மண்டபத்தில் சென்று அமர்வது உண்டு... அங்கு அமைதி மட்டுமே நிறைந்து இருக்கும்... நம்மை நாமே பரிசோதித்து அறிய அந்த இடம் வசதி படைத்ததாய் என் மனத்திற்கு படும்... நகரத்தின் மையத்தில் நான் அலுவலகம் செல்லும் வழியில் இப்படி ஒரு இடம் இந்த மனிதரால் தான் எனக்கு கிடைத்தது என்பது இன்னொரு விசயம்...

மதம் மீது நம்பிக்கை தொலைத்த என் மனத்தை இறைவனை நோக்கி செலுத்த டிஜிஎஸ் அவர்களின் பாடல்கள் பெரிதும் உதவியிருக்கின்றன....

விவிலியத்தின் வாக்கு படி நல்லதொரு ஓட்டத்தை ஓடி முடித்து விட்டார்....

Blessed be the name of the lord...

tamil10