Wednesday, May 23, 2007

எம்.ஜி,ஆரையே எதிர்த்தவன்டா இந்த ஆபிசர்

"இந்த கத்திரி வெயில் இழுத்து வச்சு நம்ம தோலை இஸ்திரி போட்டுச் சோலியை முடிச்சுரும் போலிருக்கே.. என்ன சித்தப்பூ சாப்பிடக் கிளம்பல்லயா?"
சவுண்டு விட்டுகிட்டே பருத்தி வீரன் சித்தப்பூ சீட் பக்கம் வரும் போது மணி ஒண்ணே முக்கால்.

சித்தப்பு கம்ப்யூட்டர்ல்ல கண்டபடி மூழ்கி கிடந்தார். எதோ எக்ஸ்ல் ஷீட் திறந்து சார்ட் எல்லாம் போட்டு சென்னை சூட்டை இன்னும் கிளப்பிக் கொண்டிருந்தார்.

"சித்தப்பூ என்ன இது? ஏன் இப்படி?"

"கருத்துக் கணிப்பு நடத்தப் போறேன்.. இந்த வடக்கத்திகார பாஸ் இருக்கானே.. அவனை என்னப் பண்ணலாம்ன்னு நம்ம ஆபிஸ் மகா ஜனங்களைக் கேக்க்ப் போறேன்...

ஆப்ஷ்ன் 1 ஓட விட்டு அடிக்கணும்

ஆப்ஷன் 2 நிக்க வ்ச்சு அடிக்கணும்

ஆப்ஷ்ன் 3 கட்டி வ்ச்சு அடிக்கணும்

வா நீயும் வந்து கருத்துச் சொல்லிட்டுப் போ.."

"சித்தப்பூ எதுக்கு இந்தக் கொலவெறி?"

"என் ஆன் சைட் கனவுக்குக் காத்து புடுங்கி விடுறதே இந்த பான்பராக் மண்டையனுக்கு நாலு வருசமா வேலையாப் போச்சு.. ஒவ்வொரு அப்ரேசலிலும் ஒரே ஆப்பை ஒவ்வொரு இடத்துல்ல் வச்சுட்டுப் போயிடுறான்"

"அப்படி என்னப் பண்ணான்?"

"ஒவ்வொரு வாட்டியும் YOU HAVE TO IMPROVE YOUR COMMUNICATION அப்படின்னே ரெக்கார்ட் ஓட்டுறான்"

"அதுவும் ரைட் தானெ போன வாட்டி இங்கிட்டு வந்த அட்லாண்டிக் கிளையண்ட் கிட்ட WE ALL CALL NIC NAMES.. HE PARUTHI VEERAN THAT IS COTTON SOLDIER.. ME.. CHITTAPOO.. அப்படின்னு நீ சொல்ல...

""WHAT U SHIT BOO" அப்படின்னு அந்த ஆளு மூக்கைப் பொத்த... தெரியுமே உன் இங்கிலீஸ் அறிவு எங்களுக்கு."

"லேய் கோடு அடிக்கத் தானே சம்பளம் கொடுக்குறாய்ங்க.. இங்கே என்ன இங்கிலீஸ் பாடம் எடுக்கவா நாங்க மருதையில்ல மாறி மாறி பஸ் புடிச்சு வந்தோம்"

"நோ டென்சன் சித்தப்பு.. பாஸ் மேட்டருக்கு வா..."

"முந்தா நாள், மூணு நாள் குடும்பமா மூணாறு போயிட்டு ஊருக்கு வந்த அவன் வீட்டு ஏசி வேலை செய்யல்லன்னு என்னைய பிடிச்சுக் காய்ச்சுறான்ய்யா.. மனுசனா அவன்?"

"அவன் வீட்டு ஏசி புதுசா ஆச்சே!!! போன மாசம் வாங்குனது தானே.. உன் தம்பி கடையிலே வாங்கி நீ தானே சித்தப்பு கொடுத்த்.. ஏசி என்னாச்சாம்?"

"ஏசிக்கு எல்லாம் ஒண்ணூம் ஆகல்ல.. கரண்ட் இல்லப்பா அதான் ஏசி வேலை செய்யல்ல"

"அதுக்கு நீ என்னப் பண்ணுவ பாவம்"

"ஊருக்குப் போறதுக்கு முன்ன.. கரண்ட் பில் கட்டிடு ப்ளிஸ்ன்னு எங்க கிட்டச் சொல்லிட்டுப் போனான்.. நான்.... உனக்கேத் தெரியும் ப்ராஜக்ட் பிசியிலே மறந்து வேலையிலே மூழ்கிட்டேன்... அதை எல்லாம் ஒரு தப்புன்னு..." சித்தப்பு சொல்லும் போதே பருத்திவீரனோடு எங்களுக்கும் டென்சன் ஆகிப் போச்சு."

"யோவ் எதாச்சும் அசிங்கமாத் திட்டிற போறேன்.. போய்யா போய் பொழப்பைப் பாரு..." பருத்திவீரன் கிட்டத்தட்ட கையை ஓங்கிட்டான்.

"வேணாம் நான் எல்லாம் அரசியல்வாதி தெரியும் இல்ல.. கட்சிக்காரன்லேய்... அதுவும் மருத திமுககாரன் சொல்லிபுட்டேன்" சித்தப்பு சீற

"இங்கே பாருடாக் கூத்தை.. சித்தப்பு நீ எல்லாம் கட்சிகாரனா!!!.... அதுவும் திமுகவா!!! ஆளும் கட்சி பெயரைச் சொல்லி அல்வாக் கிண்டுற பார்த்தியா"

"லேய் சின்னப் பயலே நான் உண்மையாவே திமுக தான்லேய்.. இன்னிக்கு ஊருக்குப் போய் பேண்ட்ட கழட்டிப் போட்டேன்னு வை..."

"ஊர்ல்ல இருக்க நாய் எல்லாம் சேந்து ஒண்ணா தொரத்தும் உன்னிய வேற என்ன?"

"ஏலேய் சின்னப் பயலே பேண்ட்டை அவுத்துட்டு வேட்டியக் கட்டுனேன் வை.. அதுவும் கரை வேட்டி.. ஊர்குள்ளே எனக்கு எம்புட்டு மருவாதை தெரியுமா"

"சொல்லுறதை ஒழுங்காச் சொல்லு.. வேட்டி ஒழுங்காக் கட்டத் தெரியுமா ஓனக்கு?"

"மருதைக் காரன் கிட்ட பேசுற நீயு... காலேஜ்க்கே கரை வேட்டி கட்டிகிட்டு கக்கத்துல்ல பொஸ்தகத்தை வச்சுகிட்டு போனவன் நான்"

"தெரியுது... அந்தப் பொஸ்தகம் வாய் இருந்தா எப்படி கதறி இருக்கும்ன்னு"

"லேய் நான் உண்மையா திமுககாரன் தான்டா... எங்க தாத்தா.. அப்பா எல்லாம் கட்சிகாரங்கடா நம்புடா"

பருத்திவீரன் மோவாயைத் தடவிகிட்டு நின்னான்.

"சரி நீ திமுகன்னா நான் கேக்குற கேள்விக்கெல்லாம் கரெக்ட்டாப் பதில் சொல்லிரு பாப்போம்"

"திமுக கொடியிலே கருப்பு மேல வருமா சிவப்பு மேல வருமா?"

"கருப்பை மேல வச்சு கட்டுனா.. கருப்பு மேல வரும்...அதே மாதிரி சிவப்பை மேல வச்சு கட்டுனா சிவப்பு மேல வந்துரும்... இதெல்லாம் ஒரு கேள்வியாம் வென்று..."

"சித்தப்பு உன் பதிலை உங்க கட்சித் தலைமை கேட்டதுன்னு வை.. உன்னை மேல வச்சு கட்டி கீழே தீ வச்சுருவாங்க.. அப்புறம் நீ ராக்கெட் மாதிரி விண்வெளிக்கே ஆன் சைட் போயிருவே..."

"கொடியை விடு... மொழிப் போர் தெரியுமா?"

"பிச்சுருவேன் பிச்சு... மொழி போராம்.. எவன் சொன்னான் எடுபட்ட பைய.. போன வாரம் தான் குடும்பத்தோட சத்யம் போய் பார்த்தோம்... எங்க அப்பத்தாவுக்கு கூட ரொம்ப பிடிச்சு இருந்துச்சு...சோதிகா என்னமா நடிக்குது.... அய்யோ அந்த சொர்ணமால்யா ம்ம்ம்ம் ( ஜொள்ளூ வழிகிறது) மொழி சூப்பர் படம் அதைப் போய் போர்ன்னு எவன் சொன்னான்"

ஆவேசமாச் சாமியாடிய சித்தப்புவை மெதுவாப் பிடிச்சு இழுத்து வச்ச பருத்தி வீரன்.. மொழிப் போர் பத்திக் கேட்டேன்... உங்க கட்சி 60ல்ல பண்ண அரசியல் போராட்டம் பத்திக் கேட்டா அது தெரியல்ல.. பிரகாஷ் ராஜ் எடுத்த மொழியைச் சொல்லுற நீ..இது தான் லாஸ்ட்... இத்தோட நீ இனிமே அரசியலேப் பேசக் கூடாது தெரியும்ல்ல...

"ஏலேய்.. எனக்கு வேணும்ன்னா விசய ஞானம் இல்லாம இருக்கலாம்.. ஆனா நான் எல்லாம் களப்பணின்னு வந்துட்டா பின்னிருவோம்.தெரியும்ல்ல.. அஞ்சு வயசுல்ல எங்க ஊருக்கு தேர்தல் பிரச்சாரம் பண்ண வந்த எம்.ஜீ.ஆரையே நான் எதிர்த்தவன் தெரியுமா? சொன்னா நம்பணும்"

எம்.ஜி.ஆர் அந்தப் பேரைக் கேட்டதும் பருத்திவீரன் கூட் மைல்ட்டா ஜெர்க் ஆயிட்டான்னு தான் சொல்லணும்...

"ஆமா அப்போ எனக்கு அஞ்சு வயசு..."

சித்தப்பு கொசுவர்த்தி சுத்த ஆரம்பிச்சார்.. எல்லாரும் ஆர்வமா உக்காந்துட்டோம்.
பாதி சாப்பாட்டுல்ல வாயைப் பொழந்தவங்க பொழந்தப் படியே கதைக் கேக்க ஆரம்பிச்சாங்க..

"எங்க ஊர்ல்ல தேர்தல் வந்துச்சு.. ஊர் முழுக்க எல்லா சுவத்துல்ல உதயசூரியனும் இரட்டை இலையும் மாறி மாறி வரைஞ்சு இருந்தாங்க..."

அப்புறம்

"ஆட்டோ கட்டி தெருவில்ல புழுதி பறக்க ஓட்டுக் கேட்டு நிதம் பிரச்சாரம் பட்டையக் கிளப்பிச்சு..."

ம்

"அப்படி ஒரு நாள் நானும் எங்க கூட்டுச் சேக்காளிகளும் தெரு முனைக் கடையிலே கமர்கட்டும் கடலை முட்டாயும் கடன் சொல்லிச் சாப்பிட்டுகிட்டு இருக்கும் போது..

ஊர் முழுக்க பரபரப்பு ஆயிருச்சு...

எங்க ஆத்தாக் கிழவி கூட மேக்கப் எல்லாம் போட்டுகிட்டு ஊர் எல்லைக்குப் போய் நின்னுகிச்சு...
எங்கம்மாவுக்கு லேசா பயம் இருந்தாலும் அவிங்களும் பக்கத்து வூட்டு அத்தையக் கூட்டிகிட்டு அப்பாவுக்குத் தெரியாம எல்லைக்குப் போயிட்டாங்க...

ஊரே காத்து கிடந்துச்சு...

என் கையிலே இருந்த கடலை மிட்டாயும் கம்ர்கட்டும் தீரப் போற நேரம் வந்துசுடுச்சு....

ஒரே சவுண்டு.. சும்மா பெரிய குழாய் ஸ்பீக்கர் எல்லாம் வச்சு எம்.ஜி.ஆர் பாட்டு முழங்குது... தூரத்துல்ல சர் சர்ன்னு கார்களா வருது...

ஊரே பொங்குது....

ஒரு கார் கண்ணாடி திறந்து இருக்கு உள்ளே.... ஆமா எம்.ஜி.ஆர்....எல்லாரையும் பார்த்து சிரிச்சுகிட்டே டாட்டாக் காட்டிகிட்டேப் போறார்...

நான் திடமா முடிவு பண்ணிகிட்டேன் எனக்குள்ளே...

கார் கிட்ட வந்துருச்சு...

நான் அப்பவும் என் முடிவுல்ல பயங்கர உறுதியா இருக்குறேன்...

கார் பக்கமா வந்துருச்சு....

எல்லாரும் கத்துறாங்க...

நான் முடிவு பண்ணிட்டேன்.. எனக்குள்ளே இருந்த வீரம் என் முடிவை செயல் படுத்த இது தான் டைம்ன்னு சொல்லிருச்சு...

அப்புறம் என்ன கையை நல்லா மடக்கிட்டேன்...

கார் என் கிட்ட வந்துருச்சு...

எல்லாரும் நல்லா கையை விரிச்சு எம்.ஜி.ஆருக்கு டாட்டாக் காட்டுனாங்க..

அவ்ரும் பதிலுக்கு டாட்டா காட்டுனார்..

ஆனா நான் கடைசி எம்.ஜி.ஆருக்கு வரைக்கும் டாட்டாக் காட்டவே இல்ல தெரியும்ல அதுவும் எம்.ஜி.ஆர் டாட்டாக் காட்டியும் கூட நான் டாட்டாக் காட்டவே இல்ல...

சித்தப்பு சொல்லி முடிச்சுட்டு பெருமையா எங்களை எல்லாம் பாக்க....
அவ்வளவு தான் அம்புட்டு டிபன் பாக்ஸ்ல்லயும் மிச்சம் இருந்த மொத்தச் சோறும் சித்தப்பு மூஞ்சியிலே போய் பேஸ் க்ரீம் கண்க்காக உக்காந்துக்குச்சுங்கறதை நான் தனியாச் சொல்லணுமா என்ன?

Tuesday, May 22, 2007

வ,வா,சங்கத்தில் கைப்புள்ளயின் அடுத்த வாரிசு யார்- மெகா சர்வே முடிவுகள்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் வலையுலகின் மிகவும் பிரபலமான சங்கம்.. இந்தச் சங்கத்தின் லேட்ட்ஸ்ட் செய்தி சங்கத்தின் 'தல' கைப்புள்ள விரைவில் மணக்கோலம் பூண்டு ரங்கமணியாக பதிவு உயர்வு பெறப் போகிறார் என்பதே.. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் நம்பர் ஒன் வலைப்பதிவுகள் தல திருமணம் பற்றிய சூடானச் செய்திகளை வழங்க முயன்று கொண்டிருக்கும் நேரத்தில்..

நமது சென்னைக் கச்சேரி உங்களுக்காக களத்தில் இறங்கியது.. உலகப் புகழ் பெற்ற நிறுவனமான ஓசி பீல் சன் குழுவோடு இணைந்து இணைய ச்ர்வே குரு சர்வேசன் அவர்களின் நல்லாசியோடு நடத்திய சர்வே முடிவுகள் இதோ உங்கள் பார்வைக்கு

ஆம் தலக் கைப்புள்ளக்கு ஆப்பு வைக்க சகல உரிமைகளோடு அவர் தம் தங்கமணி பதவியேற்க போகும் நேரத்தில் மக்களின் ஆப்புக்களை யார் வாங்குவது? தலக் கைப்புள்ள உயிரேன மதித்துப் போற்றிய கடமையை தொடரப் போவது யார்?

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கத்தில் தலக் கைப்புள்ளயின் அடுத்த வாரிசு யார்?

இந்த கேள்வியோடு தமிழ் கூறும் பதிவர்களைச் சந்தித்தோம்... உலகத் தரம் வாயந்த சர்வே நுணுக்கங்களை நுணுக்கி இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது.. முடிவுகள் இதோ வந்து விட்டன..






அயல்நாடுகளில் வாழும் பதிவர்களின் கருத்து




இந்தியவாழ் பதிவர்களின் கருத்து





தமிழகவாழ் பதிவர்களின் கருத்து


பெங்களூர்வாழ் பதிவர்களின் கருத்து
சர்வே முடிவுகளைச் சொல்லியாச்சு...
நாளை பச்சோந்தி மக்கள் கட்சியின் (ப.ம.க) அடுத்த வாரிசு யார்? தொடரும் சரவே
மீண்டும் சந்திப்போமா... அது வரைக்கும் டாட்டாங்கோ

Monday, May 21, 2007

சந்திரமுகி ரஜினி படமா?


2005 ஒரு கோடைக் காலக் காலைப் பொழுதில் நெருக்கியடிக்கும் கும்பலில் நானும் ஒருவனாக நின்று ஆமாம் நின்ற படியே ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி படத்தின் முதல் காட்சிப் பார்த்து வெளியில் வந்தேன்...

என்னோடு படம் பார்த்து வெளியில் வந்த சிறுவர்களின் லக்க லக்க.. கோஷங்கள் படத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறுவதாக இருந்தாலும்..ரஜினியின் ரசிகர் கூட்டத்தில் ஒரு சாரார்க்கு சந்திரமுகி திருப்தியினை ஏற்படுத்தவில்லை என்பது நான் கண்கூடாகக் கண்ட உண்மை..

அதாவது இங்கு இந்தப் பதிவினைப் படிக்கும் மிஸ்டர்.பொதுஜனம் ஒரு விஷ்யத்தைக் கருத்தில் கொள்ளவேண்டும்..

ரஜினி என்ற நடிகருக்கு இருக்கும் ரசிகர்கள் இருவகைப் பட்டவர்கள்.. ரஜினியைத் திரையில் பார்த்து தலைவா என்றழைக்கும் கூட்டம் ஒன்று... திரைக்கு வெளியிலும் ரஜினியைத் தலைவராய் ஏற்று கொண்டவர்கள் இன்னொருக் கூட்டம்..

காலம் காலமாய் ரஜினிகாந்த இந்த இரண்டுக் கூட்டங்களையும் தன் படங்களின் மூலம் திருப்திப் படுத்தி வந்ததன் பயனாய் இருக் கூட்டமும் சேர்ந்து அவரை சூப்பர் ஸ்டார் என்ற உச்சப் பட்ச அந்தஸ்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வைத்துக் கொண்டாடி வந்தார்கள்.

90களில் ரஜினிகாந்த தன்னையுமறியாமல் தன் படங்களில் பிரயோகித்த பஞ்ச் டயலாக்கள் மூலம் இந்த இரண்டாவது கூட்டத்தின் எதிர்பார்ப்புகளையும் ஆர்வங்களையும் அளவுக்கு அதிகமாய் வளர்த்து விட்டார்..ஒரு கட்டத்தில் திரைக்கு வெளியேயும் ரஜினியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து விரிய ஆரம்பித்தது இந்த இரண்டாம் வகைக் கூட்டத்தை அளவுக்கு அதிகமாய் வலுப் பெற செய்தது.
இது ரஜினியின் தனிப்பட்ட விருப்பமா? தானாய் அமைந்ததா அது தனி விவாதம்..

அண்ணாமலை.. ரஜினியின் திரை உலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை... பாட்சா ரஜினியை மட்டுமின்றி ரஜினியின் இரண்டாம் ( இங்கு இரண்டு என்பது தரம் பிரிப்பது அல்ல) வகை ரசிகர்களையும் அழைத்துச் சென்று விட்ட இடம் தமிழக அரசியல் போர்முனை... மாபெரும் இயக்கமான அதிமுகவைப் போர்கோலம் பூண்டு சந்திக்க வேண்டிய கட்டாயம்... ரஜினியை விட அவர் ரசிகர்கள் ஆர்வமாய் போரில் பங்குபெற்றனர்... ஆர்வம் மட்டுமே அடுத்து வந்தப் போர்களுக்கு ஆகாது என்பது ரஜினி ரசிகர்கள் கற்ற பாடம்...

ரசிகர்களின் ஆர்வத்தை கட்டுப்படுத்த ரஜினி மேற்கொண்ட முயற்சியில் ஒன்று திரையில் தான் தோன்றுவதைக் குறைத்தது.. ஆனால் அது ரஜினி மீது ரஜினியின் போர்கோல ரசிகர்கள் அளவுக்கு பாசம் கொண்ட இன்னொரு பிரிவு ரசிகர்களை வாட்டியது... ரஜினி அவர்களுக்காக தன் ந்டிப்பைத் தொடர வேண்டியிருந்தது...

இரு தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்தும் விதமாக அவரால் பாட்சாவிற்கு அதாவது 1995ல் இருந்து 2002 வரை கொடுக்க முடிந்த படங்களின் எண்ணிக்கை வெறும் இரண்டு மட்டுமே

அருணாச்சல்ம் - 1997
படையப்பா - 1999

2002ல் ரசிகர்களுக்குத் தன் கருத்தைச் சொல்ல முயன்று எடுத்த பாபா ரசிகர்களைக் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது.

இதற்கிடையிலும் ரஜினியின் பொது வாழ்க்கையில் அவரது ரசிகர்கள் பக்கபலமாய் நின்றனர்.. உதாரணம் 2002 ஆகஸ்ட் காவிரி போராட்டம்.. அங்கு திரண்ட ரசிகர் கூட்டம் அதற்கு சாட்சி... அங்கு வந்திருந்த ரசிகர் கூட்டம் திரைக்கு வெளியிலும் ரஜினியை தன் தலைவனாக அறிவித்தக் கூட்டம்...



இந்த நிலையில் 2005ல் ரஜினி நடித்த படம் சந்திரமுகி... முற்றிலும் தன் சூப்பர் ஸ்டார் இமேஜை உதறாவிட்டாலும் வழக்கமா விசில் பறக்கும் பஞ்ச் டயலாக்களை அறவே விட்டு... டிரேட் மார்க் சிக்ரெட்டை தவிர்த்து... விரல் அசைவு ஓசை எழுப்பும் மேஜிக் தவிர்த்து.. ஆர்ப்பாட்டமில்லாத கதை நாயகனாக ( கம்ர்ஷியல் தமிழ் சினிமா இலக்கணத்துக்கு உட்பட்டு சண்டை, டூயட் எல்லாம் இருந்தது) திரையில் தோன்றினார்... கிட்டத் தட்ட ரஜினியே பல ஆண்டுகளுக்கு முன் திரையில் நடித்த ஆயிரம் ஜென்மங்கள் கதாபாத்திரம் தான் சந்திரமுகியின் டாக்டர் சரவணன் கேரக்டரும்..

ரஜினியின் இந்த மாற்றம் அவருடைய திரை ரசிகர்களையும் வெகு ஜனங்களையும் வெகுவாகக் கவர்ந்தது.. தமிழக் மக்கள் குடும்பம் குடும்பமாகத் திரையரங்குகளை முற்றுகையிட்டு ..சந்திரமுகி வெற்றி வரலாறு படைத்தது அனைவரும் அறிவோம்...

ரஜினியின் எல்லாத் தரப்பு ரசிகர்களும் ரஜினி என்ற தனி மனிதனின் வெற்றியில் மகிழ்ந்தனர் ஆனாலும் சூப்பர் ஸ்டாருக்காகத் தெருவில் போர்கோலம் பூண்ட ரசிகர் பிரிவின் மனத்தில் லேசான நெருடல் இருந்தது நிஜம்...

அந்த நெருடலின் கேள்வி வடிவமே இந்தப் பதிவின் தலைப்பு... அப்படின்னா அடுத்தக் கேள்வி சிவாஜி ரஜினி படமா....? அடுத்து அதைப் பற்றியும் பேசுவோம் கொஞ்சம் கேப் விட்டு

Wednesday, May 16, 2007

கலாநிதி மாறன் - நிழல் அரசாங்கம்







இன்று தமிழகத்தில் நடந்து வரும் திமுக உச்சக் குடும்பத் தகராறில் மிகவும் சாமர்த்தியமாகத் தவிர்க்கப்பட்டிருக்கும் பெயர் கலாநிதி மாறன்.

90களின் ஆரம்பத்தில் பூமாலை என்னும் வீடியோப் பத்திரிக்கையோடு தமிழக மீடியா உலகின் கதவுகளைத் தட்டிப் பார்த்த இளைஞர் கலாநிதி பின் 93ல் சன் டிவி ஆரம்பித்து தமிழக மீடியாவை மொத்தக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டது வரலாறு..

இந்த இளைஞரின் வெற்றிக்குக் குடும்பத்தின் அரசியல் பலம் ஆதாரம் என்ற கருத்துக்கள் ஒரு புறம் வலம் வந்தாலும்.. இவர் வளர்ச்சிக்கு இவர் முயற்சிகள் பெரும் காரணம் என்பதை மறுக்க இயலாது.

வியாபார உக்திகளில் தன்னை வித்தியாசப் படுத்திக் கொண்டு மக்களுக்குப் பிடித்த விஷ்யங்களைக் கொடுத்து மீடியா மகாராஜா எனப் பத்திரிக்கைகளால் முடிசூட்டவும் பட்டார். விருதுகள் குவிந்தன. நிறுவனம் வளர்ந்தது. கிளைப் பரப்பியது.

96ல் திமுக என்ற கட்சி ஆட்சிக்கு வர இவரது சன் டிவி ஆற்றிய பங்கை யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.. கட்சியால் வளர்ந்த டிவி எனப் பேசப்பட்ட காலம் போய் கட்சியையே வளர்க்கும் நிலைக்கு கலாநிதி உயர்ந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.

ஆனா இது ஒரு திட்டமிட்ட வளர்ச்சி..

தந்தை மாறனின் மரணம்.. கலாநிதியை அரசியலுக்கு அழைத்தது.. அழைத்தது தென்னகத்தின் மூத்த அரசியல் அறிஞர் கலைஞர்... மென்மையாக அழைப்பை மறுத்தார் மாறன்.. அழைப்பை தம்பியிடம் கொடுத்தார். அது வரை நாடறியாத தயாநிதி அடுத்தச் சில காலங்களின் உலகறியும் இந்திய அமைச்சர் ஆனார். சாதனைகள் புரிந்தார். அண்ணன் கலாநிதி தன் வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாய் தொடர்ந்தார்.

அரசியல் சதுரங்கம் அசாதரமானது தான் ஆனால் வியாபார உலகம் அதற்கு சற்றும் குறைந்தது அல்ல.. அரசியலுக்கு விளம்பரம் தேவை இல்லை.. ஆனால் அரசியல்வாதிகளுக்கு விளம்பரம் அவசியம்.. வியாபாரத்துக்கு விளம்பரம் உயிர்.. வியாபாரிக்கு தேவை இல்லை.. சத்தம் இன்றி சாதனைகள படைத்து சர்ரேன்று தன் பலத்தை கலாநிதி கூட்டிக்கொண்டேப் போனார்.

அவ்வப்போது அவரது வளர்ச்சி விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டாலும் அது திமுக என்ற அரசியல் கட்சியையும் அதன் தலைமையும் தாக்கும் விதமாகவே பெரும்பாலும் அமைந்தது. கலாநிதி அந்த சூழ்நிலையைத் தனக்குக் கேடயமாக திறமையாகப் பயன்படுத்திக் கொண்டார். அவரது முழு நோக்கமும் வளர்ச்சியில் மட்டுமே குறியாய இருந்தது.

கலாநிதியின் வளர்ச்சியைத் தங்களுக்குச் சாதகமாகவே நினைத்தும் பார்த்தும் வந்த திமுக உச்சக் குடும்பம் ஒரு கட்டத்தில் அந்த வளர்ச்சியின் வேகம் திகைக்க வைத்தது. அந்த வளர்ச்சியில் தங்கள் வீழ்ச்சி ஒளிந்திருக்குமோ என எண்ணம் கொண்டது.. இந்த எண்ணம் உரசலுக்கான முதல் விதையைத் தூவியது...

ஆனாலும் அவர்களால் கலாநிதியை நேராக மோதலுக்கு அழைக்கமுடியவில்லை.. கலாநிதி அப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியிருந்தார்.. தன் தாக்குதலைப் புத்திசாலித் தனமாகப் பத்திரிக்கையாளன் என்ற போர்வையில் அவ்வப்போது தொடுக்க கலாநிதி தவறவில்லை.

அவரது போர் வியூகம் அப்படி...திமுக உச்சக் குடும்பம் பொறுத்துப் பார்த்து இனியும் அமைதிக் காப்பதில் லாபமில்லை எனப் போர் பிரகடனம் செய்தது தான் மதுரைக் காட்சிகள்...

போர் காட்சிகள் துவங்கி விட்டன... வெட்டப் பட்ட முதல் காய் தயாநிதி..கலாநிதியின் யுத்தத் திட்டத்தின் அறிவிக்கப்படாத தளபதி...

இன்னும் கலாநிதி தன் பங்குக்கு எந்தக் காய்களையும் நகர்த்தவில்லையா நகர்த்துவாரா பொறுத்திருந்துப் பார்ப்போம்...

எது எப்படியோ இப்போதைக்கு இலவசமா டிவி கொடுத்த திமுககாரங்க பக்கம் . இல்ல வசமா ஒரு டிவி...

CAN I SAY KALANIDHI MARAN IS THE MAN TO WATCH OUT FOR IN THIS POLTICAL BATTLE

Friday, May 11, 2007

சிக்கியது தினகரன் தப்பித்தது சென்னைக் கச்சேரி

ஆமாங்க திமுக அரசியல் வாரிசு யார்ன்னு கருத்துக் கணிப்பு வெளியிட்டு அதனைத் தொடர்ந்து மதுரையில் நடந்தக் கலவரமும் நாடறிந்த விஷ்யம்... இதே கருத்துக் கணிப்பை மார்ச் ஒன்றாம் தேதி நடத்திய பிரபல ??? வலைப் பதிவு 'சென்னைக் கச்சேரி' எந்தச் சேதாரமும் இல்லாம்ல் தப்பித்தது தெய்வச் செயல்..

அந்தக் கருத்துக் கணிப்பு ஒரு பிளாஷ் பேக்




அப்புறம்...

இன்று சட்டமன்ற வாழ்க்கையில் தன் பொன்விழாக் கொண்டாடும் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்களுக்குக் கச்சேரியின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மதுரைக் கலவரத்தில் தங்கள் வாரிசுகளை இழந்த குடும்பத்தார்க்கு சென்னைக் கச்சேரியின் ஆழ்ந்த அனுதாபங்களையும் இந்தப் பதிவின் மூலம் பதிவு செய்து கொள்கிறோம்

Tuesday, May 08, 2007

எங்க ஆபிஸ் பருத்தி வீரன்

"ஏ சித்தப்பு.. புதுசா ஒரு பைய.. நம்ம ஆபிஸ்ல்ல ஜாவால்ல சேர்ந்து இருக்கான்.. பார்த்துப் பேசுனீயளா?"

"வரும் போது அப்பிராணியா வர்றாயங்க..
நாம உக்கார வச்சு இங்கிட்டு இருக்கது கூரான ஆணி.. அங்கிட்டு இருக்கது மொக்க ஆணி.. பாத்து பதவிசாப் புடுங்கணும்... விரல் வீங்கிரும்டான்னு நாலு நாளுச் சொல்லிக் கொடுத்தா.. புடுங்குன ஆணியை அஞ்சாவது நாள் அம்சமா நம்ம ஓவர் கோட்டுல்ல செருகிட்டு போயிரான்வே..
சரி நம்மூர்கார பைய நல்லாயிருக்கட்டும்ன்னு நான் வாழ்த்துறதும் வழக்கமாப் போயிருச்சு" சித்தப்புன்னு நாங்கச் செல்லமாக் கூப்பிடுற ஆறுமுகம் தன் கதையைச் சொல்லி எங்கக் கண்ணைக் கசக்குனார்.

"பயலுக்கு ஜாவாத் தெரியாதாம்... வேற எதோ பிளாட்பார்ம்ல்ல இருந்து இருக்கான்.. அதுல்ல மூணு வருசம் பின்னி பெடல் எடுத்தவனாம்" நியூஸ் நாதன் எடுத்துச் சொன்னான்.

"சென்ட்ரல் பிளாட்பார்ம், எக்மோர் பிளாட்பார்ம்ன்னு ரயில் பொட்டியில்ல வந்து இறங்குனவனை எல்லாம் கம்ப்யூட்டர் பொட்டி முன்னால உக்கார வச்சுரான்வ... அவனுக்கு கீ போர்ட் எங்கிருக்கு.. மவுஸ் எங்கிருக்குன்னு நான் சொல்ல வேண்டியிருக்கு..."

சித்தப்பு சொல்லிக் கொண்டிருக்கும் போதே..

ரகளையா மொபைல் போன்ல்ல டங்கா துங்கா சேலைக்காரி பாட்டை அலற விட்டுகிட்டு கையிலே லேப் டாப் (சித்தப்புக்கு லேப் ஆப்) அப்படின்னு ஒரு மார்க்கமா புதுப் பைய வந்து இறங்குனான் சீன்ல்ல.வந்தவன் லேப் டாப்பைச் சித்தப்பு மடியிலே வச்சுட்டு .... "கொஞ்சம் கண்டுக்காதீங்கன்னு" சொல்லிட்டு டேபிளைத் துடைச்சு தூசியை நாதன் முகத்தில்லத் தட்டி விட்டான்.

"என் மடி வலிக்குது.. லேப் டாப்பை எடுக்குறீயான்னு" சித்தப்பு ஈனஸ்வரத்துல்ல சவுண்ட் கொடுக்க...

"சாரி பாஸ்... வந்தோமா வேலைய ஆரம்பிச்சமோன்னு இருக்கணும்ன்னு பெரிய பாஸ் சொல்லிட்டார்.. இந்த வெட்டி அரட்டை, வீண்வம்பு பேசிகிட்டுத் திரியறவங்களோட வச்சுக்கவேக் கூடாதுன்னு இன்டர்வீயூல்ல சொல்லிட்டார்.. அதில்லயும் இங்கே முக்கியமாச் சித்தப்புன்னு ஒரு வெத்து கேரக்டர் திரியுதாமே.. அதுக் கூடக் கண்டிப்பா எந்த விஷ்யமும் இருக்கக் கூடாதுன்னு சொன்னார்.. ஆமா யார் பாஸ் அந்தச் சித்தப்பு..."

அவன் கேட்டதும் சித்தப்பு முகம் சிதறிப் போனத் தேங்காப் பீஸ் மாதிரி கதறிப் போச்சு...இருந்தாலும் டக்குன்னு சுதாரிச்சச் சித்தப்பு...

"ஆமா உனக்கு ஜாவாத் தெரியுமா?ன்னு" வம்படியாக் கேக்க

"தெரியாதுன்னு சொன்னா நீங்கச் சொல்லித் தரப் போறீங்களா.. எனக்கும் சேத்து நீங்கக் கோடு எழுதப் போறீங்களா.. எதுக்கு இந்தக் கேள்வி இன்ட்ர்வீயூல்ல ஆறு ரவுண்டு... மொக்கப் போட்டுத் தான் கூப்பிட்டாயங்க...இனியும் கேட்டாச் சொல்லமாட்டோம்ல்ல.. நாங்க மருதக் காரங்க தெரியுமில்ல... அதுவும் அழகர் கோயில் ஆளு நான்..." பயக் கெத்துக் கொத்தா ஜொலிக்க

மருதன்னு ஊர் பேர் சொன்னதும் சித்தப்பு முகம் தேங்காப் பால் ஊத்திக் கழுவுனாப்பல்ல அப்படி பளபளக்குது..

"நினைச்சேன்.. இம்புட்டு கெத்து நம்மூர்காரப் பயபுள்ளக்குத் தான் வரும்ன்னு... வா ராசா.. ஊர்ல்ல வையைல்ல தண்ணி இருக்கா.. அழகர்சாமி ஆத்துல்ல இறங்குனதுக்குப் போனீயா... ஜிகர்தண்டாக் குடிச்சு எம்புட்டு வருசமாச்சு.. "அப்படியே ஒரு பாசமலரைக் கோர்த்து சித்தப்பு அவன் கழுத்தில்லே சூட்டிச் செட்டில் ஆயிட்டார்.

அப்புறம் என்ன ஒரே வாரத்துல்ல சித்தப்புவும் அவனும் பக்கா ஜமாவாயிட்டாங்க... கிட்டத்தட்ட நம்ம பருத்திவீரன் கார்த்தியும், சரவணனும் மாதிரி...

போன வாரம் ஒரு நாள்.. மேனேஜர் கேக்குறார்

"ஏன் ஆறுமுகம்... உங்க டீம் மேட் பார்த்தி ஓர்க்ல்ல ஓ,கே தான் .. ஆனா பொண்ணுங்கக் கிட்ட ஓவரா வழியறது.. அப்புறம் ஆபிஸ்ல்ல சேட்டிங்ன்னு ராங்க்காப் போயிட்டு இருக்காரே.. அவரோட டீம் சீனியர் மெம்பர் ஆச்சே கொஞ்சம் சொல்லக்கூடாதா? ந்னு யதார்த்தாமக் கேட்க..

அவன் எங்கே சார் கேக்குறான்.. நான் கூட நிறையத் தடவைச் சொல்லிட்டேன்..

அப்படியா?

ஆமா சார்.. நீ இப்படி பொண்ணுங்களோட ஓவராப் பேசிகிட்டுத் திரிஞ்சா கண்டப் பயலும் வயிர் எரிஞ்சு உன் வேலைக்கே உலை வச்சுரப் போறான் பாருன்னும் சொல்லிட்டேன் பைய கேக்க மாட்டேன்னு வம்படியாத் திரியுறான் அப்படின்னு அடக்கமாப் பதில் சொல்லி தனக்கு தானே சொந்தச் செலவுல்ல சூ வச்சுகிட்டார் சித்தப்பு.

அடுத்துச் சும்மா இருந்த நம்ம சித்தப்புவை சிந்தனைச் செய்ங்கன்னு இப்படி கிளறி விட்டான் பருத்திவீரன்

"சித்தப்பூ எப்படியாவது ஒரு தரமாவது ஆன் சைட் போயிரணும் சித்தப்பு.".

" ஏன்டா இங்கிட்டு என்னக் கொறச்சல்?"

"என்னச் சித்தப்பு இப்படி கேக்குறீங்க? எத்தன நாள் தான் இவளுகளுக்கு ஜிமிக்கி, ஸ்டிக்கர் பொட்டு, ரிங்ன்னு நம்ம வாடிப்பட்டி சந்தையிலே வாங்கியாந்ததை ... HEY I BOUGHT THIS FOR U WHEN I WENT TO DUBAI LAST VACATION... MY MOM GOT THIS FOR U FROM HER TRIP TO SPAIN அப்படின்னு பரோட்டாப் போடறது..

போனத் தரம் நம்ம ஊர் தெரு முக்குல்ல பத்து ரூவா பாசி மணியை முப்பது நிமிசம் பேரம் பேசி மூன்று ரூவாவுக்குக் கேட்டு இனி என் மூஞ்சியிலேயே முழிக்காதேன்னுச் சொல்லி அஞ்சு ரூவாக்கு கையிலே கொடுத்தான் நம்ம மூக்கன்..

அதேப் பாசியை கிப்ட் ராப் பண்ணி.. அந்த பஞ்சாப் பானுவுக்கு எங்க அண்ணன் ஆன் சைட்க்கு லண்டன் போனப்போ உனக்க்காக நான் சொல்லி வாங்குனதுன்னுக் கொடுத்தப்போ மைல்ட்டா டவுட் ஆயிட்டா.. இனியும் ஆட்டயப் போட முடியாது..

சோ ஆன் சைட் போறோம் அங்க சிவத்த சிவத்த குட்டப் பாவடப் போட்டக் குட்டிகளாப் பார்த்து நம்ம பில்டப்பு போட்டு வாழ்றோம்.. அடி வாங்குனாலும் அவக கையாலே அடி வாங்கணும் அது தான் என் சித்தப்பு என் லட்சியம்..மனுசப் பிறவின்னா ஒரு லட்சியம் வேணாமாச் சித்தப்பு"

சித்தப்புப் பேசக் கூட முடியாம கண்ணு கலங்கி நிக்க.. ஆன் சைட் போறதுக்கு இப்படி ஒரு காரணமா..அப்படின்னு நாங்களும் மலைக்க

"சித்தப்பூ எங்கச் சித்தி பையன் போன வருசம் ஜெர்மனிக்குப் போயிருக்கான்.. அங்கே இந்தியாக்காரப் பயபுள்ளன்னு சொன்ன உடனே.. ஏ...YOU FROM LAND OF ELEPHANTS
அப்படின்னு பொண்ணுங்க, பயல்வ,கூடவே அம்மணிகளும், அய்யாக்களும், லைன் கட்டி கதைக் கேட்க.. திருச்செந்தூர் கோயில் யானைத் தவிர வேறு யானையைப் பாக்காத பய மண்டையிலே பல்பு எரிஞ்சிருக்குப் பாருங்க...

எஸ் எஸ் YOU KNOW OUR COUNTRY ELEPHANT COUNTRY.. EVERY HOUSE HAS 3-4 ELEPHANTS..MY HOUSE HAS 6 ELEPHANTS.. I GO SCHOOL COLLEGE IN ELEPHANT... MY DAD GO OFFICE IN ONE ELEPHANT.. MY MOM GOES VEGETABLE MARKET IN ONE ELEPHANT...ITS FUN U KNOW அப்படின்னு அடிச்சு விட்டுருக்கான்..ம்ஹும் கூட்டத்துல்ல இருந்த பொண்ணு ஒருத்தி அவன் விட்ட ரீலை நம்பி அவன் கன்னத்துல்ல பச்சக்ன்னு ஒரு உம்மா வேறக் கொடுத்துட்டா.... தொடர்ந்து பல உம்மாக்கள் ... பைய பாக்க எலிபேண்ட் மாதிரி இருந்துகிட்டு அந்த ரவுசு பண்ணியிருக்கான்.. அன்னிக்கு முடிவானது தான் லட்சியம்.. ஆன் சைட் போய் அட்லீஸ்ட் ஒரு உம்மாவது வாங்கமா நான் ஐ,டி பீல்ட்ல்ல இருந்து ரிட்டையர் ஆக மாட்டேன்னு...

பருத்திவீரனின் ஆவேசம் சித்தப்புவையும் தொற்றி கொண்டது தான் துரதிர்ஷ்ட்டம்.. கல்யாணம் ஆகி இரண்டு புள்ளக்கு அப்பன் ஆகிட்ட சித்தப்புவும் இப்போ வெள்ளைக்கார முத்தம் அப்படின்னு பாட்டு பாடிகிட்டுத் திரியுறார்...

மக்களே இதெல்லாம் எங்கே போய் முடியுமோ?

Monday, May 07, 2007

வாஜி வாஜி சிவாஜி - ரஜினி ரசிகர்களின் வரவேற்பு

சிவாஜி - இந்த வருடத்தின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷ்ங்கர் இயக்கத்தில் ஏவி.எம் தயாரிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம்...

பாடல்கள் வெளிவந்த நிலையில்.. இன்னும் படத்தின் வெளியீட்டு நாள் குறித்தான எந்த திடமானத் தகவலும் இல்லை.. ஆனாலும் மே 17 பாஸ் பரிவாரங்களோடு பரிவட்டம் கட்ட வருவதாய் செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன.

தலைவர் படமென்றால் விளம்பரங்கள் பொங்கி வழியும் ஆனால் பெரிய பட்ஜெட் படமென்பதாலோ இல்லை ஷங்கரின் தாமதத்தால் ஏற்பட்ட மனத்தாங்கலினாலோ ஏவி.எம் சிவாஜிக்கு அதிக விளம்பரம் கொடுக்கவில்லை என்பது ரஜினி ரசிகர்களின் கருத்து..

ஏவி.எம் கொஞ்சம் அசந்தா என்ன நம்ம ரசிக கண்மணிகள் களத்தில் உற்சாகமாக் குதிச்சிட்டாங்க.. கூடவே சில வர்த்தக நிறுவனங்களும் நம்ம பாஸ் வரவேற்புக்குத் தோரணம் கட்டி கலக்கிட்டாங்க..

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் சிவாஜி டிஜிடல் விளம்பர போர்ட்கள் மன்ற மக்களால் அதிக அளவில் வைக்கப் பட்டு வருகின்றன... வேறு எந்தப் படத்திற்கும் இல்லாத அளவுக்கு வரும் முன்னே இந்தப் படத்திற்கு இப்படி கலக்கல் ஆரம்ப்பம்... அது தான் ரஜினி...

அந்தப் படங்கள் உங்கள் பார்வைக்கு





அண்ணா நகர் பகுதியில் சிவாஜி வெளியீடை முன்னிட்டு வைக்கப்பட்டிருக்கும் பேனரும் ரசிகர்களின் கொண்டாட்டங்களும்


கோடம்பாக்கம் பகுதியில் ஒரு சிவாஜி வரவேற்பு பேனர்


சிவாஜி வெளியீடு முன்னிட்டு பயணியர் நிழல் குடைச் சீரமைப்பு.


லேண்ட் மார்க் வைத்திருக்கும் சிவாஜி பேனர்


கோக் விளம்பரங்களில் சிவாஜி
படங்கள் நன்றி SIMPLE SUNDAR -RAJINIFANS.COM




இது மலேசியாத் திரையரங்குகளில் வைக்கப் படவிருக்கும் சிவாஜி வரவேற்பு பேனர்.

கடைசியாக் கிடைத்தத் தகவல் சிவாஜி மே 26 அன்று வெள்ளித் திரைகளில் வெளிச்சம் பரப்புமாம்

Saturday, May 05, 2007

ரஜினியும் பெரியாரும்

2002...

தலைவர் ரஜினிகாந்த் நடிப்பில் பாபா திரைப்படம் வெளி வருகிறது..



பாபா படத்தில் ராஜ்யமா இமயமா என்றொரு பாடல்.. வாலி எழுதியது...

அதில் பெரியார் குறித்த சர்ச்சை மிகுந்த வரி இருப்பதாய் வெகுண்டெழுகிறார்கள் தி.க.வினர்...பாபா பாடல்களைக் கண்டித்து எங்கெங்கும் போஸ்ட்ர்கள் ஒட்டப்படுகின்றன...

அப்போதும் அமைதியாகவே ரஜினி

2007...

சத்யராஜ் நடிப்பில் ஞானராஜசேகரன் இயக்கத்தில் தமிழகம் கண்ட நல்லதொரு மாமனிதர் பெரியாரின் வாழ்க்கை திரைப்படமாக பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது...

அதே தி.கவினர் இப்போது அந்தப் பெரிய பட விளம்பரத் தட்டிகளில் வைத்திருப்பது தலைவர் ரஜினியின் படம்... அதுவும் பாபா கெட்டப்பில்...



பேனர் படம் உதவி SIMPLE சுந்தர் - Rajinifans.com


இப்போதும் அமைதியாகவே ரஜினி...

தலைவர் வார்த்தையில் சொல்வதனால்....

கஷ்ட்டப்பட்டு உழைச்சு முன்னேற பார்.. இஷ்ட்டப்பட்டு எல்லோரும் பின்னால் வருவார்...

Thursday, May 03, 2007

மணிரத்னத்தின் இரவல் சிந்தனைகள்


முந்தா நேத்து மே தினம் அன்னிக்கு கொளுத்துற வெயில்ல வீட்டுல்ல உக்காந்து எப்படி போக்குறதுன்னு யோசிக்கும் போது நண்பன் ஒருத்தன் கொடுத்த டி.வி.டி கையிலே சிக்கியது.

ONCE UPON A TIME IN AMERICA...அப்படிங்கறது படம் பேர். 1984ல்ல வெளிவந்திருக்கு. படம் கிட்டத் தட்ட மூணே முக்கால் மணி நேரம் ஓடுச்சு. அமெரிக்காவின் அந்தக் காலத்து அதாவது 1930கள் கட்டத்தில் கொடி கட்டி பறந்த பேட்டைப் பிஸ்தாக்களின் வாழ்க்கையைச் சொல்லும் கதை..

இந்த படம் ஒரு கொசுவர்த்தி சுத்தும் ஸ்டைலில் சொல்லப்படும் கதையை உள்ளடக்கியது..

ஆமாங்க.. 1930களில் புருக்ளின் பகுதியில் சுற்றித் திரியும் யூதச் சிறுவர்கள் சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு பின் அமைப்பு ரீதியான குற்றம் புரியும் அளவிற்கு வளர்கிறார்கள்.. இந்த வளர்ச்சியை மிகவும் இயல்பாய், எளிமையாய், ஆர்ப்பாட்டமின்றி தெளிந்த நீரோடைப் போலச் சொல்லிக்கொண்டேப் போகிறார் இயக்குனர்.

சிறுவர் குழுவில் ஆரம்பத்தில் மொத்தம் நான்கு பேர், நூடுல்ஸ், மேக்ஸ், பேட்சி, காக் ஐ, மற்றும் டோம்னிக்.. இதில் டாம்னிக் சின்னஞ்சிறு பால்கன்.. அந்த ஏரியா தாதாவோடு ஏற்படும் மோதலில் டோம்னிக் கொல்லப்படுகிறான். இதற்கு பழித் தீர்க்க நூடுல்ஸ் அதே இடத்தில் ஏரியா தாதாவையும் ஒரு போலீஸ்காரரையும் அங்கேயே கத்தியால் குத்திக் கொல்கிறான். சிறை வாசம் முடிந்து இளைஞனாய் திரும்பும் நூடுல்ஸ் சகாக்களின் வளர்ந்த குற்ற அமைப்பின் தலைவன் ஆகிறான்.

மேக்ஸ் நூடுல்ஸ் இடையே மலரும் நட்பு அதன் ஆழம் என்று அழகாய் கதை செதுக்கப்பட்டிருக்கிறது. மேக்ஸ்க்கும் நூடுல்ஸ்க்கும் தொழில் ரீதியாக் ஏற்படும் சிறு சிறு மன வேறுபாடுகள் பின்னர் மேக்ஸ் விட்டுக்கொடுத்து இறங்கி வருவது என நட்புக் கோட்டை தெளிவாகக் கட்டப்படுகிறது.

கடகியில் காதலும் உண்டு, சிறுவர்களின் குற்றங்களில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் பேக்கிரிக் கடைக்கார பையன் மோ... அவனுக்கு ஒரு தங்கை. நன்றாக பாடுவாள், ஆடுவாள்.. நூடுல்ஸ்க்கும் அவளுக்கும் இடையே ஒரு அழகிய காதல் கவிதையாய் நகர்கிறது. வலியில் முடிகிறது.

மேக்ஸின் பெரும் கனவுகளால் கலக்கமுறும் நூடுல்ஸ் மேக்ஸைக் காப்பாற்ற எடுக்கும் ஒரு முடிவு மேக்ஸ், பேட்சி, காக் ஐ ஆகியோரது வாழ்க்கையை முடிக்கும் வீபரீதத்தில் முடிகிறது. நூடுல்ஸ் அந்த விபரீதத்திற்கு தானேக் காரண்ம் என்ற குற்ற மனத்தைச் சுமந்தப் படி அந்த ஊரை விட்டு வெளியேறுகிறான். 35 ஆண்டுகள் கழித்து நூடுல்ஸை அதே ஊருக்கு மறுபடியும் ஒரு விழாவுக்கான அழைப்பிதழ் அழைத்து வருகிறது...

நூடுல்ஸ் மட்டுமல்லாமல் பார்வையாளர்களையும் திடுக்கிட வைக்கும் திருப்பங்களைத் தந்து படம் முடிகிறது...

இதை பற்றி மேலும் விவரிக்காமல் விடுகிறேன்.. ஒரு வேளை நீங்க யாராவது இந்தப் படம் பார்க்க விருப்பப்பட்டால் பார்த்து அறிந்துக் கொள்ளுங்கள் மற்றவர்களுக்கு மொத்தக் கதையும் இங்கே ஆங்கிலத்தில் படிக்கக் கிடைக்கும்.

படத்தின் முக்கிய பாத்திரம் நூடுல்ஸ் வேடத்தில் ராபர்ட் டி நிரோ அசத்தியிருக்கிறார். அவரது நண்பன் மேக்ஸ் வேடத்தில் வரும் ஜேம்ஸ் வுட்ஸ்ம் சொல்லும் படி செய்த்திருக்கிறார். நூடுல்ஸின் காதலியாய் வரும் எலிசபெத் மெக்கவுன் நல்ல தேர்வு. அதே பாத்திரத்தின் சிறுவயது பெண் அழகு.

படத்தை இயக்கியிருப்பவர் செர்கியோ லியோனே. படத்தின் சிறப்பம்சம் ஒளிபதிவு.. கண்களை உறுத்தாத காலமாற்றங்களை இயல்பாக கண் முன் நிறுத்தும் ஒளிபதிவு. இசையைப் பற்றி கட்டாயம் சொல்ல வேண்டும்.. மெல்ல ரம்யமான இசை. கட்டிப் போடுகிறது.

அமெரிக்க குற்றவுலக வாழ்க்கையை அருமையாக பதிவு செய்திருக்கும் ஒரு படம் இது என்றால் மிகையாகாது.

இந்தப் படம் பார்க்கும் வரை நாயகன் படத்தை மணியால் எப்படி இப்படி எல்லாம் சிந்தித்து செதுக்க முடிந்தது என நான் எண்ணி எண்ணி வியந்தக் காலங்கள் உண்டு.. அதற்கானப் பதில் இந்தப் படம் பார்த்தப் பிறகு எனக்கு கிடைத்து விட்டது..I AM SURE MANI IS A LOT INSPIRED BY SERGIO LEONE's ONCE UPON A TIME IN AMERICA

எதோ ஒரு சோம்பலான விடுமுறை நாளில் என்னச் செய்யலாம் என யோசித்தீர்களானால் I SUGGEST U WATCH THIS MOVIE

tamil10