Monday, March 30, 2009

யாழ்பாணத்திற்கு வெகு அருகில்




ரொம்ப நாளாப் போகணும்ன்னு ஆசைப் பட்ட ஒரு ஊர் ராமேஸ்வரம்...இந்த வாரம் தான் அந்த நீண்ட நாள் ஆவல் நினவானது...தீடிரென்னு காரைக்குடி நண்பன் கார்த்தியின் கால்சீட் கிடைக்க கேமராவும் கையுமா ராமேஸ்வரத்துக்கு சனிக்கிழமை ரயிலேறியாச்சு..

காலையிலே காரைக்குடி வரவும் தூக்கத்தைக் கலைச்சு நண்பன் எழுப்பிவிட்டான்...அப்படியே பேசிகிட்டே...அவன் கொண்டு வந்த வைன் பிஸ்கோத்தை சாப்பிட்டுகிட்டேப் பயணத்தை ரசிச்சப்படி ரயில் ஜன்னலோரம் எட்டிப்பாத்துகிட்டே இருந்தேன்...

ரொம்ப நாளா வெறும் சினிமாவுல்லயும் டிவியிலும் மட்டுமே பார்த்த அந்த தமிழகத்தின் பொறியியல் சாதனை பாலத்தை ஜன்னல் வழியாக் கண்ணில் கண்டேன்...பாம்பன் பாலம்.. தீவையும் தமிழகத்தையும் இணைக்கும் இருகரங்களாய் ரயில் பாலமும்..சாலை வழி பாலமும் நீண்டு என்னை வரவேற்பது போலிருந்தது..

ம்ம் ரயில் கதவோரம் போய் நின்னுகிட்டு முடிஞ்சவரைக்கும் க்ளிக் க்ளிக்ன்னு க்ளிக்கி தள்ளுனேன்... கப்பல் வந்தா பாலம் திறக்குமாம்.. நந்தா படத்துல்ல வர்ற முன்பனியா...பாட்டு பாத்துருப்பீங்களே.... கடலோரம் எங்கும் படகுகள்....கடலில் போட்டு வச்ச கோலங்கள் மாதிரி..காலை காற்றில் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தன...

ராமேஸ்வரத்தில் நான் மிகவும் பார்க்க விரும்பிய இடம் தனுஷ்கோடி... தீவுக்குள் இன்னொறு தீவு... 60களில் புயல் அடித்து தமிழகத்தின் ஒரு ஓரம் கொள்ளைப் போனதாய் படித்திருக்கிறேன்...அந்த இடம் தனுஷ்கோடி... வேர்க்காடுன்னு ஓரு ஊர் வரைக்கும் அரசாங்க பஸ் இருக்கு... அங்கிருந்து ஒரு ஆறு கிலோ மீட்டர்..அங்கு தான் மன்னார் விரிகுடாவின் எல்லை... திரும்பிய பக்கமெல்லாம் கடல்... கடல் தாண்டி ஆங்காங்கு மணல் திட்டுக்கள்...
அந்தா அப்படியே போனா சிலோன் வந்துரும்ங்க... வண்டி ஓட்டி வந்தவர் சொன்ன தகவல்...இங்கே இன்னொரு விசயம்...வேர்காட்டிலிருந்து தனுஷ்கோடி போகணும்ன்னா..ஜீப்..இல்லன்னா ஒரு வேன் தான் வழி...மத்த வண்டிக்கெல்லாம் வாய்ப்பு இல்ல.. கடலோரமா ஒரு பாலைவனப் பயணம் அது...ஒரு வேன்ல்ல ஒரு 10- 15 பேரை ஏத்திக்கிறாங்க... நாங்க எல்லாம் வேனுக்கு வெளியே ஒரு பலகை போட்டு அதுல்ல நின்னுகிட்டே கைக்கு வாட்டமா இருந்த கயித்தைப் பிடிச்சு தொங்கிட்டே அந்த 6 கிலோ மீட்டரையும் கொஞ்சம் ஓவரான உயிர் பயத்தோடவே பயணம் போயிட்டு வந்தேன்...

தனுஷ் கோடியின் மிச்சங்களாய்... ஒரு சர்ச்...பள்ளிக் கட்டடம்...ரயில் நிலையம்...வாட்டர் டாங்க்.தபால் நிலையத்தின் சிதிலமடைந்தக் கட்டடங்கள்...அவைகளோடு அலைப் பார்த்தாக சொல்லும் ஒரு வயதானக் கிழவர்... அலை இப்படித் தான் வந்தது என அவர் தனியே ஒரு கதைச் சொல்லி என் நண்பனிடம் அதற்கு சன்மானமாக 15 ரூபாய் வாங்கிக் கொண்டார்...

திரும்பி வரும் போது..எங்கள் வேன் கூரை மீது அமர்ந்து வந்த மீனவ நண்பரிடம் சும்மா ஊர் வம்பு பேசிகிட்டு வந்தோம்...அங்கிருந்து ஏழு மண்ல் திட்டு தாண்டினால் இந்திய எல்லை வந்து விடும் என்றார்..அதற்கு அப்பால் இருப்பது யாழ்ப்பாணம் என்றார்.. கேக்கறவங்களுக்கு அப்படியே கடல் சாவாரியும் கூட்டிப் போவோம் என்றார்...
யாழ்ப்பாணத்துக்கு ஒரு வேளை ஒருத்தர் கள்ளத்தோணியில் 80களில் போனதாய் ஒருத்தரைச் சொல்லுவாங்களே...அவரை இவர் தான் கூட்டிப் போயிருப்போரோ... எனக்கும் என் நண்பனுக்கும் ஏக சமயத்தில் கேட்க நினைத்த கேள்வி..ஆனாக் கேக்காமலே அவரிடம் விடைப் பெற்றோம்...
ம்ம்ம் யாழ்பாணத்திற்கு மிக அருகில் வந்தும் அங்கு போக் முடியாது... இந்த யுத்தம் ரத்தம் என்ற சச்சரவு இல்லாது இருந்திருக்குமானால்.. நாங்களும் அது வரை போயிருப்போம்...எல்லாம் ஒரு ஆசை தான்.. நம்ம காலத்துக்குள்ளே யுத்தம் நின்னு மறுபடியும் ராமேஸ்வரம் போய் அங்கிருந்து அப்படியே ஜாலியா படகு ஏறி சிலோன் போயிட்டு வரணும்ங்க.... நடக்குமா பாப்போம்...

Thursday, March 26, 2009

ஒரு முடிவின் தாக்கம்

DECISIONS MAKE A MAN எவ்வளவு சரியான கருத்து...

இன்று காலையில் இருந்து என் சிந்தனையில் இந்தக் கருத்து நீக்கமற நிறைந்து நின்றது.. சில வரிகள் சும்மா படிக்கும் போதோ கேக்கும் போதோ நம்மை அதிகம் பாதிப்பதில்லை...ஆனா அந்தக் கருத்தை ஒத்த சூழ்நிலையில் இருக்கும் போது அதே வரிகள் நம்மை மிகவும் பாதிக்கின்றன....
எதோ ஒரு படத்துல்ல இளையதளபதி விஜய் பஞ்ச்சா ஒரு டயாலக் சொல்லுவார்...நான் ஒரு தடவை ஒரு முடிவெடுத்துட்டா அதை நானே மாத்த முடியாதுன்னு....அந்த வரியில்ல எவ்வளவு அர்த்தம் இருக்கு கொஞ்சம் யோசிச்சா புரியும்...
பொதுவாக ஒரு முடிவு எடுத்துட்டா அதுல்ல நிலைச்சு நிக்கணும்...அப்படி நிலைச்சு நிக்காம நாணல் மாதிரி அடிக்கிற காத்துக்கெல்லாம் வளைஞ்சு வளைஞ்சு முடிவை மாத்துனா...அப்படியிருக்குறவன் நிலைமை கேலிக்கூத்தாய் முடிஞ்சுப் போகும்....

முடிவு எடுக்க எவ்வளவு யோசிக்கிறோமோ அதே அளவு திடமா அதைச் செயல்படுத்துறதுக்கும் துணிச்சல் வேணும்..ஆற்றல் வேணும்...இல்லன்னா எடுக்குற முடிவு வெத்தாப் போயிடும்...முடிவு எடுக்குற மனிதனோட கெத்தும் போயிடும்..

முடிவுகளை எடுக்கறதுக்கு முன்னாடி யோசிக்கறவன் அறிவாளி... முடிவெடுத்தப் பின்னால் அதைப் பத்தி யோசிக்கறவன் அறிவிலி.....அறிவாளிகள் கொண்டாடப்படுவார்கள்...அறிவிலிகள் துண்டாடப்படுவார்கள்...

கல்வி என்பது ஒரு மனிதனுக்கு தன் வாழ்க்கையைக் குறித்த முடிவுகளை எடுக்கச் சொல்லிக் கொடுக்கவேண்டும்.. கல்வி தவறும் பட்சத்தில் பெரியோர்களாவது அதை நிச்சயமாக செய்ய வேண்டும்... ஒரு மனிதனின் வாழ்க்கை அவன் எடுக்கும் முடிவுகளைச் சார்ந்தே அமைகிறது...

இப்படி முடிவெடுக்கத் தெரியாமல் வாழ்க்கையை நகர்த்தும் மனிதனுக்கு ஒரு நாள் வாழ்க்கையே முடிவு எடுக்கச் சொல்லிக் கொடுக்கிறது...ஆனால் என்ன் அது வாங்கும் ட்யூசன் பீஸ் ஸ்பெஷல் கிளாஸ் டொனேஷன் ரொம்ப அதிகம்....

சில நேரம் எடுத்த முடிவுகள் அன்புக்காகவும் நட்புக்காகவும் இன்னும் பிற பாசத்துக்குரிய விசயங்களுக்காகவும் மாற்றப்படலாம் இல்லையேல் ஒத்திப் போட படலாம்..அதுவும் காலத்தின் கட்டாயத்தால் காயப்படுத்தப்படலாம்.. என்னக் கேவலக்கூடப் படுத்தபடலாம்... அதன் மூலம் நம்மை நாலு பேர் கைக்கொட்டி சிரித்து சந்தோசக் கூடப் படலாம்.. இதெல்லாம் மேல சொன்ன ட்யூசன் பீஸில் அடங்கும்....

நாம் எடுக்கும் சரியான முடிவுகள் நம் வெற்றிக்கான பாதைகள்... நாம் எடுக்கும் தவறான முடிவுகள் என்றோ நம் பெற போகும் வெற்றிகளுக்கான பாடங்கள் எனத் தான் எண்ண வேண்டும்..

இதைப் படிக்கறவங்க இப்போ எதாவது முடிவு எடுக்கப் போறீங்கன்னா....ப்ளீஸ் கொஞ்சம் நிதானம்...ஆனா முடிவெடுத்துட்டா அதை யாருக்காகவும் மாத்தாதீங்க... முடிவுகளை மாற்றினால் பல அவமானங்கள் வெகுமானங்களாய் கிடைக்கலாம்...ஏன் சில நல்லவர்கள் கூட உங்களுக்கு கெட்டவர்களாகத் தெரிவார்கள்...

முடிவுகள் பல ஆரம்பங்களின் அஸ்திவாரம் என்பது என் நம்பிக்கை.....

அந்த நம்பிக்கையில் இந்த பதிவை முடிக்கிறேன்..

Tuesday, March 24, 2009

ஓட்டுப் போடுங்க ப்ளீஸ்

வருது வருது விலகு விலகு... இந்தப் பாட்டு இப்போ யாருக்குப் பொருந்துமோ இல்லையோ நம்ம ஐ,பி.எல் தொடருக்குப் பொருந்தும்...

தேர்தலோட வரவு ஐபிஎல்க்கு தடையாக நிற்க....ஐபிஎல் நடத்த முடியாதது இந்தியாவுக்கே அவமானம் என ஆங்காங்கே தேசபக்தர்கள் கொதித்து எழ...அதற்கு பதிலாய் எது அவமானம் என பட்டிமன்ற மேடைக்கு அழைப்பு விடுக்கும் ஆளும் வர்க்கம் என ஒரு வழியாய் தேர்தலுக்கு முட்டி மோத எதோ ஒரு காரணம் கிடைத்து விட்டது நாட்டின் இரு பெரும் அரசியல் வியாபார ஸ்தாபனங்களுக்கு... சாரி அரசியல் கட்சிகளுக்கு...

ஐபிஎல் வேணுமா..தேர்தல் வேணுமான்னு இந்தியர்களைக் கேட்டா...
யாரோ எப்பவோ சொன்னது ஞாபகத்துக்கு வருது...
INDIANS CAN LIVE WITHOUT DEVELOPMENT..BUT NEVER WITHOUT ENTERTAINMENT

உலக மகா ஜனநாயக நாட்டுல்ல அஞ்சு வருசத்துக்கு பொறவு எலெக்ஸ்சன் சீசன் 16...( நம்பர் சரியாத் தெரியல்ல.. தெரிஞ்சவங்கச் சொன்னாத் திருத்திக்கிறேன்)..இந்த முறை தேர்தல்ல பெரிய சுவராஸ்யம் எதுவும் இல்லாமல் எல்லா டிவிகாரங்களூம் முழி பிதுங்கிப் போயிருக்காங்க... ஒவ்வொரு வாட்டியும் எதாவ்து ஒரு மேட்டர் சிக்கும் இவங்களும் அதை வச்சே மீட்டர் போட்டு டிவியில்ல ரியாலிட்டி...ரிவாவ்லர்டீ..ன்னு பாக்குற நம்ம மேல ஓவரா க்ருயால்டி காட்டிருவாங்க.. பாவம் இதுவரை ஐபிஎல் மேட்டர் தவிர பெருசா எதுவும் இல்லை...

மக்கள் அதை விட பாவம்...ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல...எலெக்ஷன் அன்னிக்கு லீவ் விட்டீங்கன்னாப் போதும்...படுத்து ஒரு தூக்கம் போடலாம்ன்னு இப்பவே திட்டம் போடுறாங்க...

அட அமெரிக்காவில்ல மெக்கெயின் ஒபாமா இரண்டு பேரும் ரவுண்ட் கட்டுனப்போக் கூட நம்ம ஊர்ல்ல ஒவ்வொரு தெரு முனை டீக் கடையிலும் கூட ஆளுக்கு அட்லீஸ்ட் முக்கா ரூவாயாது பெட் கட்டுனாங்கப்பா...ஆனா இப்போ உள்ளூர் சந்தையிலே எந்தக் கடைக்கு கிராக்கின்னு யாருக்குமே அக்கறை இல்லை.. அடுத்த வீட்டு அங்கிள் அமெரிக்கா எலெக்ஷ்ன்ல்ல தன்னாலே ஓட்டு போட முடியல்லன்னு அப்படி பீல் பண்ணாரு... உள்ளூர் தேர்தல் மேட்டர் பேசலாம்ன்னு வாயைக் கொடுத்தா... விடுப்பா... நாம போடல்லன்னா என்ன நம்ம ஓட்டு வேஸ்ட்டாவா போக போவுது.... அப்படின்னு சொல்லிட்டு மதுரை குலுங்க குலுங்க நீ நையாண்டி மேளம் கொட்டு அப்படின்னு சன் டீவியிலே ஓடுற சுப்ரமணியபுரம் பாட்டு சவுண்ட்டைக் கூட்டுறார்..

தேர்தல்ன்னா உங்களையும் என்னையும் மாதிரி ஒரு சாதரண மனிதனுக்கு ஒண்ணுமே இல்லையா.... ஒரு ஒட்டை வச்சுகிட்டு ( அதுவும் போட்டாத் தான் வாதம்....போட விட்டாத் தான் உத்தரவாதம்) நாம என்னப் பண்ணிர முடியும்...இது இப்போ பொதுவா பரவி நம்மைப் போன்ற படித்த மக்களால் நிறுவப்பட்டக் கருத்தாகி போய்விட்டது என்னக் கொடுமையான மேட்டர்...

ஓட்டுப் போட்டு ஒட்டையாகிப் போன தேசம்ன்னு கவிதை எல்லாம் படிச்சிருக்கேன்.. ஆனா உண்மை நிலைமை என்னன்னா ஓட்டுப் போடாமல் தான் நாம் ஓட்டையாகி போயிருக்கோம்ன்னு தோணுது...
அக்கறையின்மையா.... இல்ல இயலாமையா எனக்குச் சரியாப் புரியல்ல... ஆனா ஜனநாயகத்து மேல மைல்டா ஒரு நம்பிக்கையின்மையாத் தான் தேர்தல் நேரத்துல்ல வாக்குப் போடாமல் நாம் தள்ளி நிற்பது எனக்கு படுது....
நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் தனி மனித முன்னேற்றத்துக்கு மட்டும் எவ்வளவு முக்கியம்ன்னு நிறைய நூல்கள் இருக்கு,,,ஆனா நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் ஒரு நாட்டோட மொத்த முன்னேற்றதுக்கும் ரொம்ப அவசியம்... என்னிக்குமே எந்த நிலைமையிலும் நம்ம நம்பிக்கையைத் தொலைக்ககூடாது

தேர்தல்ங்கறது யாரோ சில பேர் பொழுது போகாமல் பொழப்பு இல்லாமல் நடத்துற வித்தைன்னு வீட்டுல்ல இருந்து நாம டிவியிலே கிரிக்கெட் ஸ்கோர் பாக்குற மாதிரியா பாக்கணும்...

இன்னிக்கு இந்த தேர்தல்ல நின்னு ஜெயிக்கப் போறவன் நாளைக்கு ஒண்ணு கூடி ..ஆமா ஒரு 539 பேர் ஒண்ணு கூடி நம்மோட நாளையை நிர்ணயிக்கப் போறான்,,,,அவன் எடுக்கப் போற ஒரு சில முடிவுகள் நம்ம சந்ததிகளைக் கூட பல வருசங்களுக்குப் பாதிக்கலாம்...

அவன் தான் நம்ம சம்பாதிக்கற காசுல்ல எவ்வளவு வரியா வாங்கலாம்... மீதி எதாவது மிஞ்சிச்சுன்னா அதை வாட்....செஸ் இதர வரிகள்ன்னு மொத்தமா ஆட்டயப் போடலாமான்னு முடிவு பண்ணுறவன்...

நம்ம ஊருக்கு ரயில் பஸ் பாலம் கரண்ட் தண்ணி இதெல்லாம் எவ்வளவு படியளக்கலாம்ன்னு சட்டம் போடுறவன்...

நம்ம வீட்டு பசங்க எவ்வளவு படிக்கலாம்... கோட்டாப் போட்டு அவங்க படிப்பை எங்கே நிறுத்தலாம்... படிச்சா வேலை வாய்ப்புக்கு வழி பண்ணலாமா இல்ல அதுல்லயும் கோட்டாப் போட்டு கோலம் போடலாமான்னு யோச்சிச்சு செய்யப் போறவன்...

டிவியிலே நீ என்னப் பாக்கலாம்...நீ என்னப் பாக்கக் கூடாதுன்னு அவன் தான் முடிவு பண்ணுறான் சில நேரத்துல்ல...

பொண்ணைப் பெத்தவன்... மாப்பிள்ளைப் பாக்கும் போது அப்படி பக்குவமாப் பாக்கணுமாம்...பொண்ணோட வாழ்க்கை பிசகிற கூடாதுன்னு அப்படி ஒரு அக்கறை...
மண்ணு..நமக்குன்னு ஒரு அடையாளம் கொடுத்த மண்ணு...அடைக்கலம் கொடுத்த பூமி...அதைக் கண்டவன் கையிலே அப்படியேவா கொடுக்கறது...

வாக்களிப்பது நமது உரிமை மட்டும் அல்ல.. கடமையும் கூட... எதோ சொல்லணும்ன்னு தோணுச்சு சொல்லிட்டேன்..

நம்மச் சொன்னா மட்டும் போதுமா.. இன்னும் நாலு பேர் சொன்னாத் தானே கேப்பீங்க...அதுன்னால இவங்களையும் சொல்லச் சொல்லுறேன்..

பதிவுலகத்தில் வந்தார்க்கு எல்லாம் வரவேற்பு அளிக்க விருந்தினர் மாளிகை அமைத்த நண்பர் சிபி
பதிவுலகப் பகலவன் பினாத்தலார்
பதிவுலக சுப்ரீம் கோர்ட் பாஸ்டன் பாலா
அதிரடி அட்டகாசப் பதிவர் நண்பர் குழலி

Saturday, March 21, 2009

ஆபிசர் IS BACK

க.க.போ.க.... க.க.போ.க.... இதே மேட்டரை நம்ம ஆபிசர் காலையிலே இருந்து கன்டினீயூசா சொல்லிகிட்டு இருந்ததைப் பார்த்து பருத்தீவீரன் மெகா டென்சன் ஆகிட்டாப்பல்ல

ஆபிசர்...என்ன இது வேலை செய்யிற ஆபிஸ்ல்ல பேட் வேர்ட்ஸ் எல்லாம் பேசிகிட்டு...

யப்பா வீரா....பீதியைக் கிளப்பாதே.. நான் வர்ற தேர்தல்ல எதாவது மக்களுக்கு செய்யலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்ப்பா

யோவ் ஆபிசரே ஆபிஸ்ல்ல கொடுக்குற வேலையே ஒழுங்காச் செய்ய மாட்டேங்கறீங்கன்னு தானே உங்களை ரெண்டு மாசமா பெஞ்ச்ல்ல உக்கார வச்சிருக்காங்க...

ம்ம்ம் ஒரு பொது நல தொண்டன் உருவாகுறதை முதல்ல யாரும் புரிஞ்சிக்க மாட்டாங்க போக போகத் தான் புரியும்

ஆபிசர்..உங்களை பெஞ்சல்ல் உக்கார வச்சது தப்புய்யா... ரொம்ப தப்பு...

உனக்கு மெதுவாப் புரிய ஆரம்பிச்சுருக்கு... போக போக புரிஞ்சுக்குவ வீரா

ம்ம்ம ஆபிசர் உங்களுக்கு இருக்க குசும்புக்கு உங்களை பெஞ்ச்ல்ல உக்கார வச்சது தப்பு.. அப்படியே ஏத்தி நிக்க வைக்கணும்ய்யான்னு சொல்ல வந்தேன்.. எனக்கு வேலை இருக்கு சாமி..ரிசசன் டைம்ல்ல உங்க கூட சேர்ந்து வெட்டியாப் பேசி வேலைக்கு உலை வைச்சுக்க கூடாதுன்னு நான் ஒரு முடிவுல்ல இருக்கேன்...ஆளை விடுங்க ஆபிசர்

பருத்தி வீரனை அப்படியே ஒரு லுக் விட்ட ஆபிசர்... கையிலிருந்த பால் பாயிண்ட் பென்னை மோவாயிலே வ்ச்சு ஒரு சிந்தனைச் சிற்பி போஸ் கொடுத்து விட்டு... ண்டும்..க.க.போ.க...அப்படின்னு முணுமுணுக்க ஆரம்பிச்சார்...

போன வேகத்தில் ரிவர்ஸ் போட்ட பருத்திவீரன்...அது சரி ஆபிசர்...க.க.போ.க.. அப்படின்னா மட்டும் என்னன்னு சொல்லிருங்க...

"கண்ணா வீரா... இப்படி ஒரு கேள்வி நாட்டு மக்கள் எல்லாரும் கேக்கணும்... அப்படி கேக்கும் போது தான் நாம் பாப்புலர் ஆவோம்...எப்படி என் ஐடியா"

"அப்படின்னா...க.க.போ.க அப்படின்னா என்னன்னு உங்களுக்கே தெரியாது...அப்படித் தானே..."

"இது வரைக்கும் தெரியாதுன்னு வேணும்ன்னா சொல்லலாம்...அப்படித் தான் சொல்லணும்..."

"யோவ் ஆபிசர் ஒரு கட்சி ஆரம்பிக்கப் போறீங்க..அதுக்கு கக்காபோக அப்படின்னு பேர் வேற வச்சாச்சு..ஆனா அதுக்கு அர்த்தம் தெரியாதுங்கறீங்க...உங்களை ...."

"வீரா... அது... க புள்ளி க புள்ளி போ புள்ளி க... நீ சொல்லற மாதிரி சொல்லப் பிடாது புரியுதா...."

"சரி உங்களை நம்பி யார்ய்யா ஓட்டுப் போடுவா...."

"அதுக்கு தான் ஐடியா இருக்கு... கூட்டணி....ஒரு 987 கட்சித் தலைவர்களை எனக்கு பர்சனலாத் தெரியும்....அவங்க கட்சிகளோடக் கூட்டணி பேசப் போறேன்..."

"என்னது 987 கட்சியா.... உலகம் முழுக்கவா...."

"நோ நோ....ஆல் இன்டியன் ஸ் முக்கிய தமிழன் ஸ் கட்சிஸ்....ஒரு சின்ன ரகசியம் அதுல்ல இருக்கு உனக்கு மட்டும் சொல்லுறேன்.. கேளு..."

"ரகசியமா... என்ன எழ்வு ஆபிசர் அது..."

"அந்த 987 கட்சியும் என்னைத் தவிர வேற யார் கூடவும் கூட்டணி வைக்கவே மாட்டாங்க அப்படி ஒரு மேட்டர் புடிச்சு வச்சுருக்கேன்..."

"ம்ம் ஆபிசர்ங்கண்ணா..அது என்னங்க வெண்கல மேட்டர்..மகா ஜனங்கள் எல்லாம் கேக்கணும்ன்னு பிரியப்படுறாங்க.. சொல்லிருங்க..."

"அந்த 987 கட்சியும் இதுவரைக்கும் ஆரம்பிக்கவே இல்ல... எல்லாத் தலைவர்களும் என்னை மாதிரியே ஆரம்ப கால சிந்தனையிலே தான் இருக்காங்க...சோ.. மீ த பர்ஸ்ட் ஆரம்பிச்சிட்டா... சீனியாரிட்டி முறையிலே எனக்கு தான் அதிக சீட்... அடிச்சு வாங்கிருவோம்ல்ல... இப்போ இருக்க ஆளுங்கட்சி கூட கூட்டணி மேட்டர்ல்ல நம்ம அளவுக்கு ஸ்டாரங்க் இல்ல..."

பருத்திவீரன் மடக் மடக்குன்னு நாலு கிளாஸ் தண்ணியை எடுத்து குடிச்சுட்டு வெறி தனியாம ஆபிசரைப் பாத்தான்...

"யோவ் ஆபிசர் பட்டப்பகல்ல என்னை ஆபிசுக்கு லீவ் போட வெச்சுட்டு டாஸ் மாக் போய் தண்ணியைடிக்க வச்ச பாவம் உங்களுக்கு வேணாம்...ஒழுங்கா பெஞ்ச் துடைக்கிறதைக் கன்டினியூ பண்ணுங்க... எனக்கு வேலை இருக்கு..."

"ம்ம்ம் வீரா.. இப்படி தான் அண்ணா திமுக ஆரம்பிச்சப்போ சில் பேர் பேசியிருப்பாங்க... அப்புறம் எம்.ஜி.ஆர் ஆரம்பிச்ச்போ பேசியிருக்கலாம்.. ஆனா நடந்தது என்ன... யோசிச்சு பார்...."

"யோவ் ஆபிசர் வெவரமா ஜெயிச்சவங்க மேட்டரை மட்டும் பேசிட்டு எஸ்கேப் ஆவலாம்ன்னு பாக்குறீங்களா... சிவாஜி ஆரம்பிச்சார்.. பாக்ய ராஜ் ஆரம்பிச்சார்...அண்ணன் வீராச்சாமி ஆரம்பிச்சார்..."

"என்னது ஆற்காடு வீராசாமி தனிக் கட்சி ஆரம்பிச்சாரா...?"

"யோவ் அந்த வீராச்சாமி இல்லய்யா... சிபி பீலிங் விடுற நயன் தாராவை ஒரு காலத்துல்ல லவ் பண்ண சிம்பு இருக்கானே அவங்க அப்பா வீராச்சாமி..."

"வீரா... சிபி மேல உனக்கு என்னக் கோபம்... அப்படியே விஜய டி ராஜேந்தர்ன்னு சொல்லமால்... நீட்டி சிபியை எல்லாம் இழுத்து விட்டு சொல்லுற...."

"பதிவுலகத்துல்ல பதிவு ரீச் ஆகணும்ன்னா.. பதிவுலகத்துல்ல செல்வாக்கான ஆளைக் கோத்து விட்டா நல்லாயிருக்குமேன்னு நாட் போட்டேன் ஆபிசர்...அதை விடுங்க....அவங்களுக்கே டவுசர் டவணாகி போச்சே.. உங்க நிலைமையை நினைச்சா பரிதாபமா இருக்கு...."

"ஹே வீரா.. எது பரிதாபம்... ஐடி ஐடின்னு சிங்கிள் டீக்கு சிங்கி அடிச்ச பார்டி எல்லாம் ஒரு தம்மாத்துண்டு பொட்டியைத் தட்டியே கல்லாப் பெட்டியே ரொப்பிட்டு சிங்காரமா ஒய்யாரமா ஒலகத்தையே ரவுண்ட் வந்தீங்களே... இப்போ உங்க நிலைமையை யோசிச்சுப் பார்...." ஆபிசர் சவுண்டா பேச ஆபிசில் எல்லாருமே ஆணி புடுங்கறதை விட்டுட்டு அவர் டெஸ்க் பக்கம் வந்துட்டாங்க...

"போன வாரம் நீ போட்ட சட்டைக்கு பேண்ட் மேட்ச்சா இல்லன்னு சொல்லி உன்னை லே ஆப் பண்ணப் பாத்தாங்களே.. என்னக் கொடுமை.. அப்புறம் அவசரத்துக்கு எதோ நீயும் நானும் சட்டையை மாத்தி மேட்சிங் மேட்சிங் ஆகி வேலையைக் காப்பத்திக்கிட்டோமே...அது பரிதாபம் இல்லையா...." ஆபிசர் ஆவேசமா பேச ஆரம்பிச்சார்...

"ஒருத்தன் கீ போர்ட்டல்ல எஸ்ங்கற ஒரு வார்த்தை தேஞ்சுப் போச்சு அதுக்கு அவன் என்ன பண்ணுவான்...அதுனால அவன் செஞ்ச வேலையிலே குறை கண்டுபிடிச்சு அவனை பெஞ்சுல்ல உக்கார வச்சுட்டாங்களே.. அது பரிதாபம் இல்லையா..."

"ஆபிசர் இது உங்க சொந்தக் கதை மாதிரி இருக்கு.. கோடிங்ல்ல பல இடத்தில்ல சொந்தமா அடிக்கிறேன்னு சொல்லி ஸ்பெலிங் தப்பு தப்பா அடிச்சு எஸ் வர வேண்டிய இடத்துல்ல எல்லாம் சவுண்ட் ஒண்ணாத் தான் இருக்கும்ன்னு சி அடிச்சு அப்ளிகேசன் புஸ் ஆனதையா சொல்லுறீங்க.." விளக்கமா பருத்தி வீரன் சந்தேகம் கேக்க...

"இதை எல்லாம் விளக்கமாக் கேளு...இப்போத் தான் கூட்டம் கூடுது... கெடுத்துராதே ராசா..அப்படின்னு மெல்லக் கெஞ்சிட்டு மறுபடியும் சவுண்ட் கூட்டி..."ஒரு கம்பெனியிலே சேந்து ஒன்போது வருசமா ஒருத்தன் ஆபிசராவே இருக்கானே.... அவனுக்கு அஞ்சு வருசம் பின்னாடி அவன் காலேஜ்ல்ல படிச்சு அவனை மாதிரியே பல அரியர்ஸ் வச்சு பேப்பர் சேஸ் பண்ணி அவனுக்கு பின்னாடி வந்து அவன் கம்பெனியிலே ஜாயின் பண்ணி அவன் மேனேஜர் சொந்தக்காரப் பொண்ணைக் கரெக்ட் பண்ணி அவனுக்கே அவன் மேனேஜரா ஆகுறது எவ்வளவு பரிதாபம்...அதுன்னாலத் தான் சொல்லுறேன்... க.க.போ.க...." மூச்சு வாங்க ஆபிசர் பொங்கி வழிய...
"சே இவ்வளவு அசிங்கம்.. இவ்வளவு கேவலம்... இவ்வளவு. தூ...." பருத்திவீரன் முடிக்கும் முன்...

"போதும்...துப்பிராதேன்னு " ஆபிசர் இறங்கி வர...

"இல்ல ஆபிசர் இவ்வளவு துர்பாக்கியசாலியா நீங்கன்னு கேக்க வந்தேன்...." அப்படின்னு பருத்திவீரன் சொல்ல ஆபிசர் அவனை அப்படியே அணைத்துக் கொள்கிறார்...

"இது வரைக்கும் இப்படி எல்லாம் இருக்க பரிதாபமான சாப்ட்வேர் மக்களுக்கு குரல் கொடுக்க வேணாமான்னு ராத்திரி பகலா யோசிச்சேன்... அதான் முடிவு பண்ணிட்டேன்.. இனிமே என் வாழ்க்கை பொருள் ஆவி எல்லாம்.... க.க.போ.க....ஆமா க.க.போ.க...க.க.போ.க வாழ்க..வாழ்க..க.க.போ.க வாழ்க..வாழ்க....

சவுண்ட் அதிகமாக மேனேஜர் கேபின் கதவு லைட்டாத் திறக்கறதை முதல்ல பார்த்த பருத்திவீரன் பின்னாடி காலை வச்சு நகர்ந்து ரெஸ்ட் ரூம் பக்கம் போயிட்டான்..அதை நம்ம அப்பாவி ஆபிசர் கவனிக்கல்ல...

கடைசியா க.க.போ.க வாழ்க சொல்லிட்டு பாத்தா மேனேஜர் முகம் எக்ஸ்ட்ரா ஜூம்ல்ல தெரியுது..

என்ன மேன் ஆபிசர் இங்கே கலாட்டா... ஆல் ரெடி யூ ஆர் இன் பெஞ்ச்.. நவ் வாட்....

அப்போ ஆபிசர் சத்தமா சொன்னாரே பாக்கணும்... மொத்த ஆபிசும் சிரிச்ச சிரிப்பு பக்கத்து ஆபிசுக்கும் கேட்டுருச்சு பருத்திவீரன் ரெஸ்ட் ரூம்ல்ல உக்காந்து உக்காந்து சிரிச்சுட்டுருந்தான்

ஆபிசர் என்னச் சொன்னாருன்னா கேக்குறீங்க...
அது ..ஒண்ணுமில்ல மேனேஜர் சார்.. நான்.. கக்கா போக போறேன்....

Friday, March 13, 2009

அழுவாச்சி காவியம்

கவிப்பேரரசு அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்..அவர் எழுதிய பல புத்தங்களைத் தேடிப் பிடித்து படித்து சுவைத்திருக்கிறேன்...திரையில் அவர் வைத்த படைப்புகளின் சுவையை விட அவரது புத்தகப் படைப்புகளுக்கு சுவை அதிகம் எனக் கருதுபவர்களில் நானும் ஒருவன்...

கவிஞர் எழுதிய சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் புத்தகம் என் கல்லூரி நாட்களில் என்னை மிகவும் கவர்ந்த பாதித்த ஒரு புத்தகம் அதை மீண்டும் மீண்டும் படித்திருக்கிறேன்,.. பலருக்குப் படிக்கப் பரிந்துரைத்திருக்கிறேன்.. பரிசாக கூட அளித்துள்ளேன்...

கள்ளி காட்டு இதிகாசம் கவிஞரின் இன்னொரு யதார்த்ததை வாசகனுக்கு பக்குவ பதார்த்தமாய் அளிக்கப் பட்ட ஒரு கவின் மிகு படைப்பு...
அணைக் கட்ட தம் கிராமம் தொலைத்த மக்களின் வாழ்க்கை முறையையும் வலியையும் ஒருங்கே பதிவு செய்திருப்பார்...

அந்த பேயத் தேவக் கிழவனின் ஒவ்வொரு அனுபவமும் நம்மையும் அவனுடன் அழைத்துச் சென்ற வாழச்செய்யும்...

கவிஞரின் இன்னொரு இலக்கிய மைல் கல்லாய் வருணிக்கப்படும் கருவாச்சி காவியம் புத்தகத்தை வாசிக்க வெகு நாட்களாக எண்ணியும் பல வித காரணங்களால் வாசிக்க இயலாது போனது.. இந்த முறை புத்தகக் கண்காட்சியில் காசு கொடுத்து வாங்கி இரண்டு மாதம் கழித்து இப்போது தான் வாசிக்க முடிந்தது...

ம்ம்ம் மதுரை மண் வாசனை ஒவ்வொரு பக்கத்திலும் அள்ளி பூசப்பட்டுள்ளது... வட்டார வழக்கில் தனி ராஜ்ஜியமே நடத்தியுள்ளார் கவிஞர்....அந்த சொக்கத் தேவன் பட்டியின் வீதிகளில் கவிஞர் நம் கரம் பிடித்து அழைத்துச் சென்று உலா விடுகிறார்.. ஒரு கட்டத்தில் மக்கா.. இது உங்க ஊர்.. போய் பழகி பாருங்கய்யான்னு அங்குள்ள மக்களோடு நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்....

வெள்ளந்தி மக்களின் வினயமற்ற வாழ்க்கையை வாகாக நமக்கு சொல்லிக் கொண்டே போகிறார்... கிராமத்து சோறு வைக்கிறார்... பட்டிக்காட்டு பாசம் குழைத்து குழம்பும் பரிமாறுகிறார்...இந்த புள்ள கருவாச்சி கதையைக் கேளுங்கய்யான்னு அங்கனக் குள்ளேயே வாசகனுக்கு ஒரு குடிசையும் வேய்ந்து குடியே அமர்த்துகிறார் கவிஞர்...

அந்தூரூ மாடு கன்னு ஆடு குட்டி அம்புட்டு மேலயும் நமக்கு ஒரு பிடித்தம் ஏற்படுத்துகிறார்...பாவப்பட்ட மக்கள் வாழ்க்கையின் வலியோடு அவர் தம் வலவிகளின் குலவி கலவி என சகல சங்கதியையும் நமக்கு சத்தமின்றி கவிஞர் கதையாகச் சொல்லிக் கொண்டே போகிறார்...

ஆகா.. ஒஹோன்னு அப்படியே பயணம் போவுது வாசகனுக்கு,,,,
ஆனாலும் படிக்க படிக்க ஒரு சின்ன நெருடல்.... கருவாச்சி மெய்யாலுமே பாவப்பட்டவளா... இல்ல பாவப்ட்டவளா காட்டப் படுறாளான்னு.... கருவாச்சியின் வாழ்க்கை சம்பவங்கள் பலவும் வலிந்து திணிக்கப்பட்டது போலவே தெரிகிறது....
காவிய நாயகன்னா.... நாயகனை நல்லவனா... வல்லவனா... நாலும் தெரிஞ்சவனா.. காட்டணும் கஷ்ட்டம் எல்லாம் தாண்டி கடல மலைத் தாண்டி செயிக்கறவன் காவிய நாயகன் .. காவியத் தலைவன்...

ஆனா அதே நேரம் ஒரு பெண் பிள்ளையை காவிய நாயகிக்கணும்னா... அவளை ஒரு பாவப்பட்ட பிறப்பாவே உருவகிக்கணும்ங்கறது என்ன சட்டமோ தெரியல்ல...

அந்தப் பெண்ணுக்கு எல்லாமே கஷ்ட்டமாகவே வருவதும்... அவள் வாழ்க்கையில் அவளுக்கு உதவ வருபவருகளுக்கும் பெருங் கஷ்ட்டம் வருவது எனவும் கருவாச்சி கதையிலும் கவிஞர் அதே சட்டத்தை மீறாமல் கதையை செலுத்தியிருப்பது சற்று சங்கடம் அளிக்கிறது...ஒரு கட்டத்தில் கருவாச்சி காவியம்ங்கறதுக்கு பதில் அழுவாச்சி காவியம்ன்னே பேர் வச்சிருக்கலாம் போலிருக்கேன்னு யோசிக்க வைக்கிறார் கவிஞர்...

கதையின் முடிவு... தொலைக்காட்சி நெடுந்தொடரின் வாடை அடிக்கிறது... அந்தக் காலத்து தமிழ் படத்தின் முடிவு வாசனை வேறு... கல்லானாலும் கணவன்..புல்லானாலும் புருசன்....

சொக்கத்தேவன் பட்டி வீதிகளையும் மனிதர்களையும் ரசித்த அளவுக்கு என்னால் எனோ கருவாச்சிக்கு நடப்பதாய் கவிஞர் சொல்லும் சம்பவ்ங்களை ஏற்கவும் முடியவில்லை...ஒப்பவும் முடியவில்லை...

கருவாச்சியை கடும் பிரயத்தனப் பட்டாவது காவிய நாயகி ஆக்கியே தீருவேன் எனக் கவிஞர் முயலவது ஆங்காங்கே சம்பவங்களாய் ஒட்டுதல் இன்றி விலகி நிற்கின்றன...

ம்ம்ம் அடுத்தக் கவிஞரின் படைப்பில் தத்துவ அலங்காரங்களின்றி யதார்த்தங்களின் அழகு தோரணங்கள் தொங்குமா என ஆவலான எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறேன்...

Wednesday, March 11, 2009

கொஞ்சம் EKI... கொஞ்சம் OSI...

1977.... 831....
என்னப்பா கணக்கு இது.....

மேல இருக்க மேட்டரை எல்லாம் ஒரு மாதிரியா கூட்டிக் கழிச்சு புரிஞ்சுகிட்டு சூரியன் படத்துல்ல நம்ம பன்னிக்குட்டி ராமசாமி ஒரு வசனம் சொல்லுவாரு பாருங்க அதாங்க அரசியல்ல இதெல்லாம் சாதரணம்ப்பா...அதை சூரியன் படத்து ஹீரோ கிட்ட இப்போ யாராவது சொன்னா.... அவர் என்ன சொல்லூவாரு...

ஆப்சன் 1 EKI ஆப்சன் 2 OSI

நாங்க என்னச் சொல்லுறோம்ன்னா
ஒண்ணுல்ல விழுந்தா நோ கட் அவுட்
இன்னொண்ணுல்ல விழுந்தா தான் கட் அவுட்
இல்லன்னா ரெண்டுல்லயுமே கெட் அவுட்...

மதுரை...வருவோம்ல்ல...

வடிவேலு கிட்டே நம்ம டாக்சி ட்ரைவர் சொல்லுவாரே அதே மேட்டரை..மல்லிப்பூ மாநாகர் உள்ளே போய் ஆட்சி பண்ணுறவருகிட்டே தகிரியமா யாராவது சொல்லிட்டு வந்தா.. சொல்லிட்டு வந்தவங்க நிலைமை என்னவாகும்....

ஆப்சன் 1 EKI ஆப்சன் 2 OSI

நாம என்னச் சொல்லுறேன்னா...சொன்னா வாரணம் ஆயிரமாகவும் இருக்கலாம்...இல்ல பத்தாயிரமாகவும் இருக்கலாம்..

கலாநிதி...தயாநிதி...தேர்தல் நிதி...நெஞ்சுக்கு நீதி... கழகத் தலைவர் கருணாநிதி

பராசக்தியிலே வருமே ஒரு பாட்டு ஓ ரசிக்கும் சீமானே....அந்த பாட்டை திமுக தேர்தல் பிரச்சார டைம்ல்ல கொள்கை பாட்டுன்னா தப்பா போட்டா அந்த ஸ்பீக்கர் செட் சொந்தக்காரர் என்ன ஆவார்...

ஆப்சன் 1 EKI ஆப்சன் 2 OSI

நாங்க என்னச் சொல்லுறோம்ன்னா

இதெல்லாம் இப்போ முக்கியமான மேட்டரா... தமிழனுக்கு வேற எங்கோ மனம் பறக்கிறது....(எங்கே பறக்குது... எதுக்கு பறக்குதுன்னு எல்லாம் என்னைக் கேக்கக் கூடாது சொல்லிட்டேன்.

மம்மி மம்மி மாடர்ன் பிரெட்

பழைய விளம்பர பாடலை அதிமுக உண்ணாவிரத பந்தல்ல போய் நின்னுகிட்டு உச்சாஸ்தியிலே பாடுனா என்னாகும்...

ஆப்சன் 1 EKI ஆப்சன் 2 OSI

நாங்க என்னச் சொல்லுறோம்ன்னா...
"ஜெ" ஹோ சொல்லி பாருங்க...ஸ்லம் டாக் கூட மில்லியனேர் ஆயிடலாம்....

பல்லேலக்கா..பல்லேலக்கா..சேலத்துக்கா...திருச்சிக்கா...திருத்தணிக்கா...அண்ணன் வந்தா இப்போ தமிழ்நாடும் அமெரிக்கா...

அப்படின்னா எந்திரன் எந்திரிச்சு வந்தா இங்கேயும் ரிசசன் வருமா அமெரிக்கா மாதிரி அப்படின்னு அப்பாவியா கேக்குற ஐடி பிரொபசனலைச் என்னச் சொல்லுறது...

ஆப்சன் 1 EKI ஆப்சன் 2 OSI

நாங்க என்னச் சொல்லுறோம்னா
கண்ணா கடமையைச் செய் பலனை எதிர்பார்...

இப்படி ஒரு பதிவுக்கு பின்னூட்டம் வந்தா என்னச் சொல்லுறது... வர்றல்லன்னா என்னச் சொல்லுறது..

ஆப்சன் 1 EKI ஆப்சன் 2 OSI

tamil10