Saturday, November 27, 2010

நந்தலாலா

மழை மெல்லியதாக தூவும் வெள்ளிகிழமை மாலையிலே கடற்கரையோர பிராத்தனா திரையரங்கில் நேற்று நந்தலாலா திரைப்படம் பார்த்தேன்...அஞ்சாதே...சித்திரம் பேசுதடி திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்த மிஷ்கின் இயக்கம்...அதற்கு அப்பால் படத்துக்கு விலாசம் சொல்லும் முக்கிய அம்சம் இசைஞானியின் இன்னிசை...

ஒரு வரி கதை...தாயைத் தேடிச் செல்லுன் இரு உயிர்களின் பயணம்...

ஒருவன் பள்ளி சிறுவன்...இன்னொருவன் மன நலம் குன்றியவன்...இரு வேறு காரணங்களுக்காக தாயைத் தேடி இருக்கும் சூழல் பெயர்ந்து இருவரும் பயணப்படுகிறார்கள்...பயணம் இருவரையும் இணைக்கிறது...போதுமான பணமின்றி அவர்கள் பயணம் எப்படி தொட்ர்கிறது...வழியில் அவர்கள் சந்திக்கும் மனிதர்கள்...சம்பவ்ங்கள்....என் நீள்கிறது படம்...



பயணம் தொட்ர்கதை என்றால்...வழி நெடுக அவர்கள் சந்திக்கும் மனிதர்களும் சம்பவங்களும் குறுங்கதைகள்....அழகான திரைக்கதை...

சின்ன சின்ன பாத்திரங்களைக் கொண்டு கோர்வையாக கதையை சாமர்த்தியமாக நகர்த்தியுள்ளார் மிஷ்கின்....போலீஸ்காரர்...லாரி டிரைவர்....பள்ளி மாணவி....இளநீர் கடை வியாபாரி....பைக் பயணிகள்...என ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு விதம்...நடிகர்களும் அழகாக நடித்துள்ளனர்...பலரும் புதுமுகங்கள் என நினைக்கிறேன்..

மிஷ்கின் காட்சிகளின் வழியே கதை சொல்வதில் மகாக் கெட்டிக்காரர்...கேமராவை ஒரு தேர்ந்த கதைச் சொல்லியாகப் பல இடங்களில் பயன்படுத்தி உள்ளார் ..படத்தின் எழுத்துக்கள் போடும் போதே கேமரா அழகான ஒளிபதிவில் மிரட்டுகிறது...நீரில் வளைந்தாடும் நாணலில் அழகு இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.... பயணப் பாதைகளின் தன்மைக்கு ஏற்ப கேமராவும் உடன் பயணிக்கிறது...கேமரா நிறைவு

சிறுவனின் நடிப்பு அளவான நிலையில் திருப்தி தருகிறது....மிஷ்கின் தான் கதையின் நாயகன்....மனநலம் குன்றியவராக அவர் போதுமான அளவு செய்துள்ளார் எனவே சொல்லலாம்....மிஷ்கினின் நடிப்பில் அஞ்சாதே படத்தில் வ்ரும் மாற்று திறனாளியின் (அவர் பெயர் ஞாபகம் இல்லை)உடல் மொழியும் குரல் மொழியும் அப்படியே பிரதிபலிக்கிறது...அதை அவர் சற்று தவிர்த்து இருக்கலாமோ...

அஞ்சாதே கத்தால கண்ணழகி ஸ்னிக்கிதாவும் படத்தில் இருக்கிறார்...படம் முடியும் நேரத்தில் வருகிறார்...அவர் பங்குக்கு நடிக்கிறார்....கவர்ச்சி தவிர்த்து நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாத்திரம் ஏற்று நடித்திருப்பதற்கு அவரை மனதாரப் பாராட்டலாம்....


படத்தின் முடிவு என்ன...இருவரும் தங்கள் தாய்களைச் சந்திக்கிறார்கள்...சந்திக்கும் முன் தாய் மீதிருந்த எண்ணங்கள் இருவருக்குமே மாறுகிறது....அழுத்தமாய் ஆனால் மெல்லியதாக ஒரு புன்னகையை வரவழைத்துப் படத்தை முடித்திருக்கிறார் மிஷ்கின்....

எல்லாரைப் பத்தியும் சொல்லியாச்சு....படம் பாக்கப் போன முக்கிய காரணகர்த்தாவைப் பத்தி சொல்லணுமே....ராசா எப்பவும் ராசா தான்....பின்னணி இசையில் விருந்து பரிமாறியிருக்கிறார்...சில இடங்களில் இசை மிரட்டுகிறது...சில இடங்களில் தாலாட்டுகிறது...சில இடங்களில் நெகிழச் செய்கிறது...ராஜாவின் இசை ராஜ்ஜியம் நந்தலாலாவில் பரந்து விரிகிறது... ராஜா ரசிகர்களுக்கு இன்னிசை மழை

படத்தில் வழக்கமான தமிழ் சினிமாவின் கிளிஷேக்களும் இல்லாமல் இல்லை...முதல் பாதி கொஞ்சம் வேகம் கம்மி..நீளம் அதிகம்...அடுத்த பாதி சட்டெனப் போய் முடிகிறது...

மிஷ்கின் சொல்ல வந்திருப்பது...உலகத்தில் யாரும் அனாதை இல்லை...ஒண்ணுக்கு ஒண்ணு துணையாக யாரோ இருக்காங்க என்பதை தான்...அதை ராஜாவின் ராகத்தில் யேசுதாசின் குரலில் கேட்பது சுகமோ சுகம்...

மொத்ததில் நந்தலாலா ம்சாலா நெடி தவிர்த்த தமிழ் சினிமா எதிர்பார்க்கும் ரசிகர்கள் போய் பார்க்கலாம்...ராஜா ரசிகர்கள் கட்டாயம் பாருங்கள்...எப்பவும் ராஜா ராஜா தான்ன்னு காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்...

Friday, October 01, 2010

எந்திரன் எப்படி?


Rajini You Have done it Again!!!!

எந்திரன் இமாலய வெற்றி !!!!

நன்றி ஷங்கர் - சன் பிக்சர்ஸ்

Sunday, August 01, 2010

நண்பர்கள் தினம்

ஆகஸ்ட் முதல் ஞாயிறு நண்பர்கள் தினம்...இந்த வழக்கம் எப்போது யாரால் துவங்கப்பட்டது என எனக்குச் சரியாக ஞாபகம் இல்லை..கல்லூரி படிக்கும் காலத்தில் சில வாழ்த்து அட்டை வியாபாரிகளால் இப்படி பல தினங்கள் பிரபலமாக்கப்பட்டன...அதில் இதுவும் ஒன்று...முக்கியமாச் சொல்லணும்ன்னா பிரண்ட்ஷிப் பேண்ட்....கிட்டத்தட்ட ராக்கி கயிறு மாதிரி ஒரு ஐட்டம் தான் இந்த பேண்ட் விவகாரமும்...ராக்கி அன்று ஒரு பொண்ணு உங்க கையிலே இந்த கயித்தைக் கட்டுனா...அந்தப் பொண்ணுக்கு நீங்க அண்ணன் முறை ஆயிடுறீங்க...அதே பொண்ணு இந்த கயித்தை நண்பர்கள் தினத்தன்னிக்கு கட்டுனா அந்தப் பொண்ணுக்கு பிரண்ட்ஷிப் ஆயிடுறீங்கறதுங்கறது ஐதீகம்..

ஒரு கயித்துல்ல எவ்வளவு லாஜிக்...அதுக்கு பின்னாடி எத்தனை மேஜிக்...படிக்கற காலத்துல்ல ராக்கி அன்னிக்கு கட்டுன கயித்தை கட்டுன தடம் கூடத் தெரியாம பயபுள்ளக அவுத்து தலையைச் சுத்தி கூவம் ஆத்துல்ல விட்டு எறிஞ்சுட்டு வீசுன கையை வெறும் கையுமா காலேஜ்க்கு வருவாங்க..ஆனா அதே மாதிரி ஒரு பொண்ணு பிரண்ட்ஷிப் டே அன்னிக்கு கட்டின கயித்தைக் கையே கூவம் ரேஞ்சுக்கு நாறுனாலும் சரி அடுத்த பிரண்ட்ஷிப் டே வரைக்கும் கழட்டாத குரூப்பும் இருந்துச்சு...

இப்போவும் அந்தப் பழக்கம் இருக்குதா இல்லையான்னு தெரியல்ல...ஆனா இப்போவும் மெயில்ல பழைய நண்பர்கள் கிட்ட இருந்து எதாவது ஒரு நண்பர்கள் தின பார்வேர்ட் மெயில் வந்தா மனசோரம் அப்படியே லேசா சின்னத் தூறலடிக்கத் தான் செய்யுது...இன்னிக்கு மெயில்ல் ஒரு வாசகம் வந்துச்சு....ரொம்பவே யோசிக்க வச்சுருச்சு....
ஒரு எதிரியை நண்பனாக்க ஆயிரம் வாய்ப்புக்கள் கொடுக்கலாம்...ஆனா ஒரு நண்பன் உன்னோட எதிரியாக ஒரு சின்ன வாய்ப்பு கூட கொடுக்கக் கூடாது...

விஜய் படத்து மொக்க பஞ்ச் டயலாக் மாதிரி இருந்தாலும் ஆழமா யோசிச்சு பாத்தா அர்த்தம் இருக்கு...சரித்திரத்துல்ல பல சாம்ராஜ்யங்கள்..இயக்கங்கள்...நண்பனா இருந்து எதிரியா மாறுனவங்களால்ல தான் அழிஞ்சு இருக்கு... நண்பர்கள் தினத்தன்னிக்கு தனியா உக்காந்து அலையைப் பாக்கும் போது பழைய நண்பர்கள் ஞாபகம் நெஞ்சோரமா வந்துப் போகுது...

ஒரு காலத்துல்ல என்னோட உலகமா இருந்த எத்தனையோ நண்பர்கள் இருக்கும் திசைக் கூட எனக்கு தெரியாது....ஒண்ணும் மண்ணுமா திரிந்த அந்த கவலையற்ற பொழுதுகளோட மிச்சங்கள் நட்பை ஞாபகப்படுத்திகிட்டு இருக்க... அவங்களைத் தேடவோ தொடர்பு கொள்ளவோ எனக்கும் நேரமில்ல...

என்னால் முடிஞ்சது....அவங்களுக்கு எல்லாம் இந்த நண்பர்கள் தினத்துல்ல அன்பான் வாழ்த்துக்களை இந்த பதிவு மூலமாச் சொல்லிக்குறேன்...

Monday, July 12, 2010

வெள்ளிகிழமைக்குள்ளே வெற்றி வேண்டுமா?

அண்ணாமலை...படையப்பா....மாதிரி வாழ்க்கையிலேயும் மூணு மணி நேரத்துல்ல அப்படியே சொய்ங்ன்னு உயரத்துக்குப் போனா எப்படி இருக்கும்..நல்லாத் தான் இருக்கும்..ஆனா அதெல்லாம் சினிமா.... நிழல்..நிஜம் என்னவோ வேற மாதிரி இல்ல இருக்கு.... திங்கட் கிழமையும் அதுவுமா உங்களுக்கு எல்லாம் ஒரு அருமையான யோசனை...வர்ற வெள்ளிகிழமைக்குள்ளே நீங்க எல்லாரும் உங்க வாழ்க்கையிலே உயர...உங்க லட்சியங்களை அடைய....என்னப் பண்ணனும்ன்னு கேக்குறீங்களா....சிம்பிள் மேட்டர் தான்...கீழே இருக்கப் படத்தைப் பாருங்க..... அப்புறம் உங்க கருத்தைச் சொல்லுங்க....

ஜக்கு பாய்ஸ் 1

ஜக்கு பாய்ஸ் 2

ஜக்கு பாய்ஸ் 3


வெள்ளி கிழமை சந்திக்கலாம்...எல்லாரும் இதை அப்படியே பிளான் பண்ணி பண்ணுங்க....வெற்றி நிச்சயம் பாஸ்....பிரமோஷன் டிரீட் ரெடி பண்ணிட்டு கூப்பிடுங்க ரைட்டா...

Sunday, July 11, 2010

மனத்தை வருடிய மெளன ராகம்

தமிழ் படங்களில் எனக்கு இப்போவும் ரொம்ப பிடிச்ச படங்களின் பட்டியல் போடச் சொன்னா முதல் இடம் பிடிக்கும் படமிது...எண்பதுகளின் இறுதியில் வந்த படம்...மணிரத்னம் என்ற இயக்குனரை பெரிய அளவில் உலகத்துக்கு அறிமுகம் செய்த படமும் இது தான்..


ஒரு ஞாயித்துகிழ்மை மதியம் பிராந்திய மொழிகளில் விருது வாங்கிய படங்கள் வரிசையில் இந்தப் படத்தை தூர்தர்ஷன்ல்ல போட்டாங்க...அப்போத் தான் முதல் முறையா இந்தப் படத்தைப் பாத்தேன்...முதல் தடவைப் பாக்கும் போது நான் ரொம்ப ரசிச்சது...என்னன்னா வி.கே.ராமசாமிகிட்டே அந்த சர்தார் மெக்கானிக் பண்ணுவாரே அந்த காமெடியைத் தான்...ரேவதி அந்த ஆளுக்கு சொல்லித் தர்ற தமிழ் வசவு மொழிகளையும் அதை அப்ப்டியே அச்சரம் பிசகாமல் சர்தாரும் நம்ம வி.கே.ஆர் கிட்டே அன்பான பணிவோட சொல்லுற அந்த அழகு இருக்கே..செம சிரிப்பு அது...

அதுக்கு அப்புறம் அந்தப் படத்தை பத்தாம் வகுப்பு படிக்கும் போது பாத்தப்போ மனசுல்ல பச்சக்குன்னு ஒட்டுனது நவரச நாயகன் கார்த்திக்கோட அந்த மிஸ்டர் சந்திர மெளலி டயலாக் தான்...இன்னிக்கும் அது ரொம்ப பிரபலம்...படத்துல்ல சும்மா பத்து பதினைஞ்சு நிமிசம் வந்தாலும் கார்த்திக்கோட நடிப்பு காலத்துக்கும் நிலைச்சு நின்னுருச்சுன்னு தான் சொல்லணும்...அதுக்கு அப்புறம் தமிழ்ல்ல வந்த சிட்டி ரொமான்டிக் ஹீரோ பாத்திரங்களுக்கு அது தான் ஒரு மைல் கல்...வழிகாட்டின்னு கூடச் சொல்லலாம்....அதுல்ல கார்த்திக்கோட நடை உடை பாவனை துள்ளலான நடிப்பு அந்த காலத்து காலேஜ் பெண்களின் தூக்கத்தைக் கெடுத்ததாகப் பின்னாளில் கேள்வி பட்டேன்

காலேஜ் நாட்களில் தூங்காமல் நண்பர்களோடு கழித்த பல இரவுகளின் இன்னிசைத் தோழன் யார்ன்னா இளையராஜா தான்...ராஜா பாடல்கள் மீது ஒரு தணியாத பைத்தியமே பிடித்தக் காலகட்டம் அது...முக்கியமா மன்றம் வந்த தென்றலுக்கு...அப்புறமா நிலாவே வா..பாடல்கள்...அந்த பாடல்களுக்காகவே மெளன ராகம் படம் இன்னும் அதிகமாகப் பிடிக்க ஆரம்பித்தது....பாக்க பாக்க படத்தின் முதல் மழை பாடலும் மனத்தை ஈரப்படுத்தியது...வான்மேகம் பூ பூவாய் தூவும்...மழை வரும் போதெல்லாம் அந்தப் பாடலை நான் முணுமுணுக்க தவறியதில்லை...பாடல்கள் மொத்தமும் அவ்வளவு ஹிட்...இன்னும் ஹாட் ஹிட் தான்...

கல்லூரி காலத்தில் தான் திவ்யா மீது ஒரு தனி கவனம் வந்தது...அட திவ்யா தான் அந்த படத்தில்ல நம்ம ரேவதியோட கேரக்டர் பேர்....எனக்கு தெரிஞ்சு ரேவதிங்கற நடிகையை விட அந்தப் படத்துல்ல திவ்யாங்கற அவங்க பாத்திரம் தான் எனக்கு அதிகம் தெரிஞ்சது

திவ்யா நகரத்து நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கல்லூரி பெண்களின் ஒட்டு மொத்த பிரதிபலிப்பு...துடிப்பு...துடுக்கு..இடக்கு..எனக் கலவையாக ரேவதி கலக்கியிருந்தார்...ரேவதி - கார்த்திக் காதல் காட்சிகள் தமிழ் சினிமாவின் எவ்ர் கிரீன் ரொமான் ஸ் பக்கங்களில் நீங்கா இடம் பிடித்தன என்று சொன்னால் அது மிகையாகாது....

முக்கியமாக அந்த கல்லூரிக்கு சென்று கார்த்திக் ரேவதியிடம் செயினைத் திருப்பிக் கொடுக்கும் காட்சி...அந்த மைக் போட்டு காதல் சொல்லும் காட்சி....காபி கடை சந்திப்பு என மொத்தமும் ரகளையான ரொமான் ஸ் ...இன்னிக்கும் பாக்கலாம்...ரசிக்கலாம்..

இருபது வயதுகளின் இறுதியில் படத்தைப் பாக்கும் போது தான் மோகன் பாத்திரத்தின் வடிவமைப்பு குறித்தான மதிப்பிட்டீல் இறங்க முடிந்தது...மோகனுக்கு அமைதியான அருமையான கனமான வேடம்...மனிதர் கொஞ்சம் கூட அலட்டிக்காமல் அருமையாக பண்ணியிருப்பார்...மோகனோட கேரியரில் மைக் இல்லாமல் மோகன் நடிப்பில் அசத்திய படமென்றால் அது இது தான்....

ப்டத்துல்ல என்னைக் கவர்ந்த இன்னொரு முக்கிய அம்சம் அந்த டெல்லி வீடு...என்ன ரசனையோடக் கட்டியிருக்காங்க...அப்படி ஒரு வீடு கட்டணும்ன்னு ரொம்ப நாள் ஆசை...எத்தனையோ மாடல் வீடு பாத்தாலும் இன்னிக்கும் அந்த வீட்டு மேல ஏற்பட்ட ஒரு ஈர்ப்பு குறையல்ல...

இவ்வளவு சொல்லிட்டு படத்தோட மகுடம் யாருக்குன்னு சொல்லாம விட்டா எப்படி..? மணிரத்னம் நகர மாந்தர்களை மையப்படுத்தி ஒரு அட்டகாசமான நகர காதல் கதையை சினிமாவா வடிச்சு திரையிலே ஓட விட்டார்ன்னா...ரேவதி, கார்த்திக், மோகன்...எல்லோரும் தங்களோட நடிப்பால் படத்தை இன்னும் ஒரு உயரம் கொண்டு போனாங்கன்னா...படததைச் சிகரம் தாண்டி கொண்டு போனது யார்ன்னா சந்தேகம் இல்லாமல் அது இசை ஞானி இளையராஜாவே தான்...செல் போன் வாங்குன புதுசுல்ல அந்த கார்த்திக் வரும் போது ராஜா போட்டிருப்பாரே ஒரு பின்னணி இசை ....அதை ரிங் டோனாத் தேடி பிடிச்சு வச்சுகிட்டவங்கள்ல்ல நானும் ஒருத்தன்...

நகரத்து நடுத்தர மக்களின் வாழ்க்கை முறையை மையப்படுத்தி ஒரு நல்ல திரைப்படமான மெளன ராகம் இப்போது பாத்தாலும் என் மனத்தை வருட தவறுவது இல்லை....

ராவணன் பத்தி ஊரே பேசி அடங்கி விட்ட இந்த நேரத்தில் மணியோட மணியான இந்தப் படத்தை பத்தி பதிவு போடணும்ன்னு தோணுச்சு...போட்டாச்சு..v

Saturday, March 20, 2010

சன் பிக்சர்ஸ் படங்களும் தமிழின ரசனையும்

காதலில் விழுந்தேன் என்னும் காலத்தால் அழியாத திரைக்காவியத்தை வெளியிடும் உரிமையை வாங்கி முதன் முறையாக வரவேற்பறைகளில் மட்டுமே தமிழ் இனத்திற்கு சேவை ஆற்றி கொண்டிருந்த சன் குழுமம் திரையரங்குகளுக்கும் தன் சேவையை விரிவுபடுத்திய வரலாறு தமிழ் நாட்டு பச்சிளம் குழந்தைக்கும் தெரியும்

பெயிண்ட் அடிச்சு போஸ்டர் ஓட்டி கொடுத்தா பாலிடாலை பச்சப் புள்ளக்கு தமிழன் பால்ன்னு காசு கொடுத்து வாங்கி ஊட்டுவான் அப்படிங்கற உண்மையை ஊருக்கு சன் பிக்சர்ஸ் படங்களின் தொடர் வியாபார வெற்றி எடுத்து சொன்னது...திண்டுக்கல் சாரதி, தெனாவட்டு,மாசிலாமணி போன்ற யாரும் திரும்பி கூடப் பார்க்கும் படங்களை சேனல்கள் மாற்றி விளம்பர படுத்தியே பட்டயைக் கிளப்ப வைத்தார்கள்

அடுத்தக் கட்டமாக திரையுலகத் தளபதிகளின் படங்களுக்கு டிங்கரிங் பார்த்து பட்டிபாத்து பெயிண்ட் அடிச்சு தோரணமாத் தொங்க விட்டு....டீலா நோ டீலா அப்ப்டி எல்லாம் சவுண்ட் விட்டு....அப்புறம் ஆட்டுக்கார அலமேலு படம் வந்த்ப்போ அந்த படத்து அலமேலுவை ஊர் ஊரா சீவி சிங்காரிச்சு தியேட்டர்ல்ல ரசிகர்களைத் தரிசிக்க வச்சு படத்தை ஓட வச்சாங்களே அது மாதிரி எளைய தளபதியை ஊர் ஊரா கூட்டிட்டு போய் நிக்க வச்சு பாட வச்சு நடனம் எல்லாம் ஆட வச்சு...எப்படியோ போட்ட காசை எடுக்கற வழியைப் பாத்தாங்க

அப்புறம் புச்சி தளபதி நடிச்ச விளையாட்டு பிள்ளை படத்துக்கும் அதே வெளம்பரம் அப்படி இப்படின்னு கொடுத்து ஓட வச்சும் ஓடாத நேரத்துல்ல பாசமுள்ள மீசைக் கார நண்பர் நக்கீரர் வினியோகத்துல்ல நித்தி சாமி ரஞ்சிதா மேடம் ( பெண்களை மதிக்கணும் என்பதால் தான் இந்த மேடம் வார்த்தை போட்டுக்குறேன்) நடிச்ச தியானபீட விளையாட்டுப் பிள்ளை பலான படத்தை ச்ட்டுன்னு ரிலீஸ் பண்ணி மார்க்கெட்டில் தாங்கள் தான் நம்பர் ஒண் அப்படின்னு நிலை நாட்டியதோடு மட்டுமில்லாமல் தமிழின ரசனையை அடுத்ததுக்கும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போற முயற்சியிலே பட்டி முதல் சிட்டி வரை செம பாராட்டுக்களை அள்ளி குவித்தனர்...

இப்படியாக தமிழ் திரையுலகத்திற்கும் தமிழ் சினிமாவுக்கு இவர்கள் செய்யும் சேவையும் என்னை புல்லரிக்க வைத்திருப்பதால் இந்த பதிவை எழுதும் கட்டாயத்துக்கு நான் தள்ளப்பட்டிருக்கிறேன் என்பதைப் பதிவைப் படிக்கும் அனைவரும் தெரிந்துக் கொள்ளுங்கள்...

இப்படியாகப் பட்ட நிலையில் இந்த வார குமுதம் இதழில் தமிழ் இனம் படித்து அப்படியே மெய் சிலிர்க்க வேண்டிய ஒரு நியுஸ் வந்துருக்கு...அதை நிறைய எப்.எம் சேனல்களில் எல்லாம் கூட கூவுனாங்க....

டெர்மினேட்டர் அப்படின்னு ஒரு செம இங்கிலீஸ் படம் ...நான் எல்லாம் பத்தாம் கிளாஸ் படிக்கும் போது அலங்கார் தியேட்டர்ல்ல வந்துச்சு..25 வாரம் ஓடுச்சு...அதுல்ல அர்னால்ட் சொஜ்ஜினேகர் அப்ப்டின்னு ஒருத்தர் நடிச்சார்...இப்போ அதுக்கு என்னன்னு கேக்குறீங்களா...அந்தப் படத்துல்ல அவர் வித் அவுட்டா தான் அறிமுகம் ஆவார்....மிஸ்டர் யுனிவர்ஸ் பட்டம் வாங்குன அவர் பாடி காட்டுவார்...அந்த படத்துல்ல அவர் ஒரு எந்திரம்....இப்போ லைட்டா மேட்டர் விளங்குதா...

இப்போ சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஒரு பெரிய படம் அதே எந்திரமா நாயகர் வர்ற கதை தான்..அதுல்ல நாயகர் தமிழ் இந்திய உலக சினிமாவின் உச்ச நடிகர்...அவரை வித் அவுட்ல்ல காட்டப் போறதா தான் நியுஸ்...நாயகரும் ஒ.கே .சொல்லிட்டார்ன்னு போட்டிருந்தாங்க.... இது மட்டும் உண்மைன்னா..... என்னத்த சொல்ல...தமிழ் சினிமா அடுத்த அடுத்த அடூத்த கட்டத்துக்கேப் போயிரும்ன்னு வைங்க....

ஒரு சின்னக் கொசுறு நியுஸ் அந்த ஆங்கிலப் படத்துல்ல வித் அவுட்ல்ல நடிச்ச நடிகர் தற்சமயம் கலிபோர்னியா அப்படின்னு ஒரு அமெரிக்க மாநில கவர்னராயிட்டார்...அந்த ஊர்ல்ல முதலமைச்சர் பதவி மாதிரி....அதுன்னால்ல உச்ச நடிகரோட ரசிகர்கள் இந்த ஒரே ஒத்துமையை வச்சு தமிழ் நாட்டுக்கு அடுத்த மொதல்வர் தங்கள் தலைவர் தான் என்று தாங்கள் என்றோ தொலைத்த நம்பிக்கையை மீண்டும் மீட்டு எடுக்கலாம்...

இப்படியே இதே ரேஞ்சுல்ல சன் பிக்சர்ஸ் தொடர்ந்து பல வெற்றி படங்களைக் கொடுத்து தமிழனின் ரசனை தரம் தாழ்ந்து போய் விடாமல் பார்த்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...

டிஸ்கி: மத்தவங்க எல்லாம் ஒழுங்கா படம் எடுக்குறாங்களான்னு கேக்கறவங்களுக்கு நான் சொல்லுற ஒரே பதில்.....இந்த கேள்வி ஓவர் டு கலையுலகின் பிதாமகர் பாசத் தலைவர் கலைஞர் அய்யா...அவர் தான்ய்யா படத்துக்கு எல்லாம் அவார்ட் ரிவார்ட் எல்லாம் கொடுக்குறாரு.... இப்போதைக்கு இவ்வளவு தான் கச்சேரி ரைட்டு ஜூட்டு

Sunday, February 21, 2010

கொலை முயற்சி வழக்கு

நகல் படத்தில் நடித்த மண்ட நடிகர் மீது கொலை முயற்சி வழக்குப் போடப்பட்டுள்ளது சினிமாப் பட்டி மக்கள் மத்தியில் கடும் பீதியைக் கிளப்பி உள்ளது...

காலம் காலமாக சினிமாப் பட்டியின் பல உலகத் தரம் வாய்ந்த படைப்புகளை ஆரவாரமாக வரவேற்று...உயிரைக் கொடுத்து...கையில் இருக்கும் கடைசி காசு வரைக்கும் செலவழித்து ஆராதித்து ஒப்பற்ற கலை சேவை செய்து வந்த தமிழ் ரசிக ஜனம் இது பற்றி என்ன நினைக்கிறார்கள் எனக் கருத்து கேட்க முயற்சித்தோம்...

மண்ட நடிகர் பல காலமாக வயெலட், வெட்டிசன், மூனா, கெட்ட வாசம், ரீகன், முல்லா..போன்ற படங்களில் நடித்து அந்தப் படங்கள் திரைக்கு வந்து பலத் தரப்பட்ட மக்கள் மீது ஈவு இரக்கமின்றி அராஜகத்தைக் கட்டவிழ்த்தப் போதெல்லாம் கைக் கட்டி வேடிக்கை பார்த்த அரசு..இப்போது நகல் படம் வந்த நேரத்தில் விழித்துக் கொண்டது ஓரளவு மன ஆறுதல் தரும் விஷயமாகவே பார்க்கிறோம்....

இன்னும் சிலர் மண்ட நடிகராவது பரவாயில்லங்க...கொஞ்சம் ஓ.கே தான்..... இன்னும் நிறைய பேர் இருக்காங்க பாஸ் அவங்களுக்கு எல்லாம் தூக்கு தண்டனையே தரலாம் பாஸ் அப்படின்னு அனியாயத்துக்கு பொங்கிட்டாங்க...அதுவும் குளவி, அழுகிய தக்காளி மகான், பல்லு, சேட்டைக்காரன் இப்படியெல்லாம் சின்னப்புள்ளங்க மேல எல்லாம் கூட டிவி மூலமா எல்லாம் கடுமையான கொலை வெறி தாக்குதல் நடத்துற சின்ன சேனாதிபதி நடிகரை எல்லாம் கூட உள்ளே தள்ளுனாப் புண்ணியமாப் போவுமுங்க..

சினிமாப்பட்டி ரசிகனின் கொந்தளிப்பால் சினிமாப்பட்டி சேனாதி பதி நடிகர்களும்...பழைய புதிய ஸ்டார் நடிகர்கள் கதி கலங்கிப் போயுள்ளனர்...தங்கள் மீதும் இப்படியான கொலை முயற்சி வழக்குகள் பாயலாம் எனக் கருதி முன் ஜாமீன் மனு மட்டுமின்றி இனி நடிக்கும் படங்களில் கதை மற்றும் நல்ல திரைக்கதையும் வேண்டுமெனத் தேடத் துவங்கி உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன...

பாஸ் தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சனைன்னா அதை அரசாங்கம் தான் கவனிக்கனும்...அரசியல் வாதிங்க தான் கவனிக்கணும்....ஒய் சினிமாப்பட்டி சிட்டிசன்களை டிஸ்டர்ப் பண்ணுறீங்க....பொதுவா ஒரு ரசிகரிடம் நாம் எக்குத் தப்பாக் கேக்குறீங்க...

பாஸ் எம்ப்பேர் சின்ன மலை....பசு மாடு வச்சு மில்க் வியாபாரம் பண்ணுறேன்...தமிழ்நாட்டுல்ல தான் பண்ணுறேன்...ஆனா நானே இதுவரைக்கும் என்னை வாழ வச்சது தமிழ் பால்...அழ வச்சது ஆந்திரா பால்ன்னு பாலை ஸ்டேட் வாரியா பிரிச்சதே இல்லை..ஆனா இந்த சினிமாப்பட்டிகாரங்க அப்படி எல்லாம் பாடும் போது மட்டும் நாங்க கைத்தட்டுணும்...எங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா அவங்க வெறும் நடிகன் அப்படின்னு நாங்க அவங்களை விட்டுரணும்....படா சோக்கா கீதுப்பா மேட்டர்

அப்புறம் உடல் பொருள் ஆவி எல்லாத்தையும் டமிலுக்கு டமிலர்க்கும் தர்றதா பாடுனா மட்டும் நாங்க காசு கொடுத்து கேக்கணும்...உண்ணாவிரதத்துக்கு வா நைனா அப்படின்னு கூப்பிட்டா மட்டும் அப்பீட்டூன்னு அவங்க சொல்லுவாங்க அதுக்கும் நாங்க ரிப்பீட்டேன்னு சொல்லணும்ன்னா என்ன நைனா...படா காமெடியா கீதுப்பா...

அப்புறம் இந்த ஹாலிவுட்ல்ல எந்த ஸ்டாருமே...மை டிரிங்க் இஸ் அமெரிக்கன் இங்கிலீஸ் மில்க்...மை பாடி லக்கேஜ் கேஸ் ஆல் பிளாங்க் டு அமெரிக்கா அப்படின்னு சொல்ல மாட்டேங்குறாங்க...சோ அவங்களை அந்த ஊர் மக்களும் பொதுவா எந்தப் பிரச்சனைக்கும் கூப்பிடுறது இல்ல....நடிகன் நடிகனா இருந்தா அவனை யார்ப்பா இதுக்கெல்லாம் கூப்பிடப் போறா...அவன் அதையும் தாண்டி ட்ரை பண்ணும் போது தான் இப்படி கொலை முயற்சியிலே போய் முடியுது...

அய்யா பயானிதி அய்யா..தொடர்ந்து நீங்க தான் டமில் படம்...அதுவும் நெல்லை டமில் படம்...கோவை டமில் படம்...சென்னை டமில் படம்ன்னு எடுத்து சினிமாப்பட்டியையும் சினிமாப் பட்டி ரசிகனையும் காப்பாத்தணும்...ப்ளீஸ்....

சினிமாப் பட்டி ரசிகர்களின் ஏகோபித்த உணர்வுகளை பதிவு செய்த படி கச்சேரி செய்திகளுக்காக சினிமாப்பட்டியிலிருந்து ஷிவா.........:)

Monday, February 15, 2010

சினிமாப் பட்டியில் இருந்து கச்சேரி செய்திகளுக்காக சுகுமாரன்

டொட்டடொய்ங் டொட்டடொய்ங்...இதனால் சினிமா பட்டி மக்களுக்கு அறிவிக்கப்படும் செய்தி என்னவென்றால் நம்ம பாசக்கார சினிமாப் பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் பெரியவருக்கு சினிமாப் பட்டி வாழ் மக்கள் சார்பா நடத்தப்படும் நாலாயிரத்து நானூத்து எட்டாவது பாராட்டு விழாவுக்கு அனைவரும் கண்டிப்பாக கட்டாயமாக பாசத்தோடும் அன்போடும் பாராட்டு மேகங்களோடும் ( மேகம் விழாவில் மழையாக பொழிய) வந்து சேர வேண்டுமாறு அழைக்கப்படுகிறார்கள்.....மிக முக்கியமாக விழாவுக்கு தலைமையேற்க வரும் அகில உலக சூப்பர் ஸ்டார்கள்....கேலக்சி நாயகன்கள்...பெரிய தளபதிகள்..குட்டி தளபதிகள்...வாய்ஸ் கேப்டன் ஸ்...மற்றும் மேடையேற போகும் அனைத்து வருங்கால சினிமாப் பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர்களும் ஒரு நீளமான உரையை....அதாவது இது வரை கலந்து கொண்ட பாராட்டு விழாக்களில் தெரிவிக்காத பாராட்டுக்களை கொண்ட ஒரு உரையை தயார் செய்து முன் ஒப்புதலுக்காக அறிவான பஞ்சாயத்து ஆலய..ஆபிசில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

சினிமாப் பட்டியின் உயர்வான மக்களே...தமிழை தன் உயிராய் மதிக்கும் நம் பஞ்சாயத்து தலைவரை மகிழ்விக்கும் படி நம் தற்கால சினிமாவில் வரும் இலக்கிய கருத்து செறிவான..ஓமகசீயா...நாக்கமுக்க..ரண்டக்க..பல்லேலக்கா..டையலாமா..போன்ற இனிய கருத்து ஆழம் நீளம் அகலம் உள்ள பாடல்களை பாடி...சீரான தமிழ் உடைகளை உடுத்தி உடுக்கை அடித்து...உலக்கை இடித்து....மானாடா மயிலாட....காண்பவருக்கு எல்லாம்....ஆனந்த கூத்தாட....நிகழ்ச்சிகள் அமைக்க வேண்டும்

விழா மேடையின் இரு பக்கமும் பஞ்சாயத்து தலைவரின் பிஞ்சு மனம் விம்மும் போது உடன் விம்ம அப்படியே தும்ம....குரல் கம்ம...கண் கலங்க....அகில உலக நாயகன் மற்றும் அகில உலக சூப்பர் ஸ்டாரும் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்....

கடைசியாக....விழாவுக்கு வரும் சினிமாப் பட்டி மக்களுக்கு அழைப்பு சீட்டோடு ஒரு துண்டு சீட்டும் வழங்கப்படும் அந்த சீட்டில் தங்கள் பெயரை எழுதி கருப்பும் சிவப்புமாய் முத்திரை குத்தி அங்கிருக்கும் பஞ்சாய்த்து அதிகாரிகளின் கையில் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

விழா முடிவில் துணை பஞ்சாயத்து தலைவரும்...மத்திய முனிசிபாலிட்டி கமிட்டி சேர்மனும் சேர்ந்து மூன்று அதிர்ஷ்ட்டசாலிகளைத் தேர்ந்து எடுப்பார்கள்...அந்த மூன்று பேருக்கும்

பீலாகதி வாரனின் டின் பிக்சர்ஸ் தயாரிக்கும் புது படம்...மற்றும் அதோகதி வயலின் ரெட் பெயிண்ட் பிலிம்ஸ் தயாரிக்கும் புது படம்... வைகை ஏரியா லவுட் வைன் பிலிம்ஸ் தயாரிக்கும் புது படம் ஆகியவற்றில் நடிக்காமல் வேறு தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க சிறப்பு அனுமதி இனாமாக அளிக்கப்ப்டும்...ஆகவே பாராட்டு விழாவில் கலந்து கொள்ளுங்கள் அனுமதியை வெல்லுங்கள்..டீலா நோ டீலா....சினிமா பட்டி மக்களே

இந்த அறிக்கை சினிமாப்பட்டி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...இந்த அறிக்கை கேட்க பலரை நாம் தொடர்பு கொண்ட போது பலரும் இலங்கை தமிழர்களின் நலன் வேண்டி பஞ்சாயத்து தலைவர் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க காலவரையற்ற மவுன விரதம் இருப்பதாய் சைகை மொழியில் தெரிவித்தனர்...

அலட்டி நாட் ஸ்டார் பட்டத்தை தூக்கி எறிந்த மண்ட நடிகர் மட்டும் வீரமா வாயைத் திறந்து...ஐய் ஆ....இவ்ங்க ஏன்னை மெரட்டுராங்க..ஆனாலும் நான் பேஸ் மாட்டேன்...நீங்க சொல்லுற வர்க்கும் ஏதுவ்வும் பேஸ் மாட்டேன்...ஆனா சொல்லிடுங்க ஐய் ஆ...ப்ளீஸ்...நான் பேஸ்ணும்..நறைய்ய பேஸ்ணும்...அப்படின்னு தன் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்தார்...


இப்போ தலைப்பை படிச்சு பதிவை முடிங்க....

டிஸ்கி: இந்த அறிக்கையும் அதில் இருக்கும் கருத்துக்களும் சும்மா லுடுலுடுவாயி மட்டுமே...அது யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடுவன அல்ல....இது மெய் மெய் மெய்...மெய் மட்டுமே....

tamil10