Monday, July 24, 2006

நட்பு எனப் படுவது யாதெனின்..

ஆகஸ்ட் மாசம்... இது நட்பு மாசம்ன்னு சொல்லலாம்... ஆர்ச்சீஸ் கேலரியிலிருந்து அடுத்த தெரு கேபிள் காரன் வரைக்கும் நட்பைக் கொண்டாடி கும்மி அடிச்சு குலவைப் போட்டுருவாயங்க.. நம்ம பதிவுலும் நட்பைக் கொண்டாடணும்ன்னு ஒரு முடிவு பண்ணிட்டோம்ல்ல

யாரும் விதைக்கவில்லை...
தண்ணீரும் ஊற்றவில்லை...
தானாய் முளைத்தது
தளிர்த்து வளர்ந்தது...
பூத்துக் குலுங்கியது...
உனக்கும் எனக்கும் நட்பு...

இது எல்லாம் நான் கல்லூரிக் காலத்திலே கிறுக்கின கிறுக்கல். இப்போ இந்தக் கிறுக்கலைப் படிக்கும் போது அப்படியே மனசுக்குள்ளே லைட்டா மழையடிக்குது... சன்னமான சவுண்ட்டில் இடி முழக்கம்.. ஒண்ணு இரண்டு மின்னல்.. அப்படியே ரகளையா ஒரு மான்சூன் கச்சேரி நடக்க ஆரம்பிச்சுடுது....நட்பு அது அழகான மியூசிக் மாதிரி...

கையெழுத்துப் புத்தகத்தின்
கடைசிப் பக்கத்தில்
பெயரோடு முகவ்ரியும்
எழுதும் போது
எனக்குப் புரியவில்லை
அடுத்த சில ஆண்டுகளில்
நாம் ஒருவரை ஒருவர்
தொலைக்கப் போகிறோம் என்று...


பழைய ஆட்டோகிராப் நோட் புத்தகத்தை புரட்டும் போது என்ன என்னவோ ஞாபகங்கள். யாரோ சொன்னது நினைவுக்கு வருது..

"நாம் வாழும் வாழ்க்கையை வெறும் வருடங்களை வைத்து எண்ணிவிடக் கூடாது..நாம் பெற்றிருக்கும் நண்பர்களின் எண்ணிக்கையை வைத்தே எண்ண வேண்டுமாம்..."

அப்படி எண்ணலாம்ன்னு ஒரு சின்ன யோசனைத் துளிர் விட்டது...
விளைவுகளைப் பத்தி யோசிக்கமா எண்ண ஆரம்பித்தேன்...

மனசுங்கறது ஆண்டவன் கொடுத்த குதிரைங்கற விஷயம் அப்போத் தான் நமக்கு விளங்கிச்சு. சும்மா லேசாத் தட்டி விட்டேன் பாருங்க. அப்படியே வாலை ஒரு சுழட்டு சுழட்டுட்டி தலைத் தெறிக்க ஓட ஆரம்பிச்சுடுச்சு... அப்படி இப்படி உதாரா நம்ம புலிக்கேசி மாதிரி தொத்தித் தாவி நானும் அந்தக் குதிரையில் ஏறிகிட்டேன்... என்னுடையப் பயணம் பழைய பாதைகளை நோக்கி போனது... மனக்குதிரைக்கு லகான் போட்டு பிடிச்சு நிறுத்துறேன்....

அது ஒரு மழைக்காலம்
ஈர நிலமாய் இதயம்
உழுது போனாய்
உன் பெயரோடு
என் பெயரைச்
சேர்த்து எழுதிப் போனாய்...


ஆமாங்க... நான் யார்ன்னு எனக்கே தெரியாதக் காலத்துல்ல.. எனக்காக கொரலு விட்ட கூட்டம் ஒண்ணு இருந்துச்சுங்க... அந்தக் கூட்டத்தை இதோ இப்போ நினைச்சுப் பார்க்கும் போதே மனசுக்குள்ளே மான்சூன் கச்சேரி களைக் கட்டிடுச்சுப் போங்க...

இதயத்து ஓரத்தில் பாதி கடிச்ச கமர் கட்டு சுவைகளும்...
இலந்தப் பழ வாசனையும்..
இன்னும் மிச்சமிருப்பது எனக்கேக் கூட பிடிபடாத ஆச்ச்ரியம்..

கடைசிப் பெஞ்சு கவிழ்ந்தது ஒரு காலத்துல்ல என் வாழ்க்கையைப் பொறுத்த வரை டைட்டானிக் கவுந்துப் போனதை விட பெரிய செய்தி...
அதுக்குக் காரணமானவனைக் கழிவறையில் பின் பக்கமாய் போய் தாக்கி நட்புக்கு அஸ்திவாரம் போட்டுக் கொண்டது அதை விட பெரிய செய்தி....

மறந்துப் போயிருக்கும்
எத்தனையோ செய்திகளை
மீண்டும் சந்தித்த ஒற்றை பொழுதினில்
உன் நக்கல் சிரிப்பு
சொல்லாமல் சொன்னது
அது தானோ நட்பு..

துள்ளித் திரிந்த அன்றைய சென்னை வீதிகளில் இன்றைய மனம் மெது நடைப் போட்டது. அதே சுவர்கள்.. அதே ஜன்னல்கள்... மோதிய அதே கதவுகள்... சில அடையாளங்கள் மாறியிருந்தன..

நினைக்கவில்லை...
கிடைத்தப் பொருள் கிடைத்த இடத்திலேத் தொலைந்துப் போகுமென்று...

விசாரிக்க நினைக்கையில் தொண்டைக் குழிக்குள் ஒரு அழுத்தம்...காலத்தின் இடைவெளியில் இன்னொரு இடைச்சொருகல்...

மனம் வேகமாய் நகர்கிறது... என்னில் ஒரு பாதி மட்டும் என்னோடு வர மறுத்து அங்கேயே நின்று ஏக்கப் பார்வைப் பார்க்கிறது...

மேடைப் போட்டு
அறிவிக்கத் தேவையில்லை
கடமையென்னும் கயிற்றில்
கட்டி வைக்க அவசியம் இல்லை..
இதயததின் ஒரு ஓரம் போதும்
நினைத்தவுடன் பூப்பதற்கு..
அதற்கு நட்பு என்று பெயர்...

நண்பா என்று என்னை யாராவது அழைக்கும் போதெல்லாம் எனக்கு உங்க ஞாபகம் தாண்டா வருது..

(80களின் துவக்கத்தில் என்னோடு கோபாலபுரம் சாரதா உயர்நிலைப் பள்ளியில் துவக்கக் கல்வி கற்ற என் இனிய நண்பர்கள் பாலாஜி, சதீஷ், பர்த்லோமியா டயஸ் மற்றும் பி.எம்.ரவிக்குமாருக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்)

டேய் உங்கள்ல்ல எவனாவது இதைப் படிச்சா எனக்கு ஒரு மின்மடல் போடுங்க....ரொம்ப சந்தோஷப் படுவேன்

29 comments:

நாமக்கல் சிபி said...

நட்பு மாதத்தின் பதிவுக்கு நண்பன் ஒருவனின் வாழ்த்துக்கள்!

:)

நாகை சிவா said...

என்னப்ப தேவ் இப்படி பீல் பண்ண ஆரம்பித்து விட்டாயா.
நல்லா இருக்குய்யா, உன் பீலிங்க்ஸ்
அப்ப கவுஜ நடுவில் வருது, அது தான்ன் கொஞ்சம் பயமா இருக்கு.
நடத்து உன் கச்சேரி, கேட்போம். கேட்டு ரொம்ப நாள் ஆச்சு.

வெற்றி said...

தேவ்,
ஆகா! அருமையான பதிவு. என் உணர்வுகளைத் தொட்ட பதிவு. இக் கவிதைகளைப் படித்த போது என் கடந்தகால நினைவுகள்தான் மனதில் தோன்றியது.

/கையெழுத்துப் புத்தகத்தின்
கடைசிப் பக்கத்தில்
பெயரோடு முகவ்ரியும்
எழுதும் போது
எனக்குப் புரியவில்லை
அடுத்த சில ஆண்டுகளில்
நாம் ஒருவரை ஒருவர்
தொலைக்கப் போகிறோம் என்று.../

என்னைப் பாதித்த வரிகள். ஈழத்திலும் [ஆண்டு 6 வரை] பின்னர் கனடாவிலும் என் பள்ளி வாழ்வில் நான் சம்பாதித்த நண்பர்கள் ஏராளம் ஏராளம். பள்ளியில் படித்த நாட்களில் இவர்களுடனான நட்பு என் வாழ்நாள் வரை நீடிக்குமெனத்தான் நினைத்திருந்தேன். ஆனால் இன்று இவர்களில் பலரின் நட்பு தொலைந்துவிட்டது. அந்த நாட்களை நினைத்தால் பெருமூச்சுடன் ஓர் ஏக்கம் தான் மிஞ்சுகிறது. அக்காலம் மீண்டும் வாராதா?

மனதின் ஓசை said...

தேவ்...

பதிவு நிதானமா அழகா இருக்கு...பழைய ஞாபகங்களை கிளறுது..
அந்த ஆட்டோகிராப் கவிதை மனதை பாதிக்குது..உறுத்தும் உண்மை அது..அந்த காலத்துல ஈமெயில் இல்லாததால, வாங்கின தொலைபேசி எண்கள் எல்லாம் மாறி போனதால பல நட்பு தொலைந்து போய்விட்டது..அவ்வப்பொழுது யொசிப்பது உண்டு.எதுவும் வழி இருக்கிறதா திரும்பிப்பெற என...

இதே நெரத்தில் நான் பத்தாவதில் எழுதிய ஒரு அட்டோகிராப் ஞாபகம் வருது..என் முதல் கவிதை(???)ன்னும் சொல்லலாம் இதனை...

"பண் பாடும் பறவையாக
பார் புகழும் பதுமையாக
பண்போடு பாடிப் பறந்து
பல காலம் வாழ வாழ்த்தும்
அன்பன்"
இதுவும் தொலைத்து விட்டு இப்பொது தேடும் நட்புதான் :-(

மனதின் ஓசை said...

தேவ்...
பழைய பதிவெல்லாம் கனோம்???

Unknown said...

சிபி - நன்றி

சிவா - கவலை வேண்டாம்.. கச்சேரி எப்பவும் போல உங்கள் நல்லாசியுடன் பிரமாண்டமாய் தொடரும். அது கவிதை எல்லாம் இல்லை சிவா காலம் நம் அனுமதியின்றி நம் வாழ்க்கையில் போட்டுச் செல்லும் கோலங்கள்...

ILA (a) இளா said...

//எனக்குப் புரியவில்லை
அடுத்த சில ஆண்டுகளில்
நாம் ஒருவரை ஒருவர்
தொலைக்கப் போகிறோம் //

//உன் நக்கல் சிரிப்பு
சொல்லாமல் சொன்னது
அது தானோ நட்பு..//

மனசுக்குள்
ஒரு கல்லை தூக்கிப்போட்டு,
பின்னூட்டம் கேட்க
உனக்கென்ன அப்படியொரு திமிரு?

நக்கல் சிரிப்பில் நட்பு
நிதர்சனங்களின் குவியல்
யதார்த்ததின் சங்கமம்.

நல்ல கவிதை நண்பா

Unknown said...

வெற்றி என் உணர்வுகளைப் பகிர்ந்ததற்கு என் நன்றிகள்... உங்கள் அனுபவங்களைச் சில வரிகளில் நீங்கள் பின்னூட்டமிட்டமிருந்தாலும் அதிலுள்ள ஆழமான வலி எனக்குப் புரிகிறது...

ஏக்கத்தில் பாதி... தூக்கத்தில் மீதி.. இது கவிஞரின் வரிகள்.. இது தானே மனித வாழ்க்கை. இதற்கு நாம் மட்டும் விதிவிலக்கா என்ன?

இருக்கட்டும் வெற்றி, வலியும் ஏக்கமும் மிச்சமிருக்கும் வரை மனிதனாய் நம் அடையாளங்கள் தொடரும் என்பது என் நம்பிக்கை..

Unknown said...

//"பண் பாடும் பறவையாக
பார் புகழும் பதுமையாக
பண்போடு பாடிப் பறந்து
பல காலம் வாழ வாழ்த்தும்
அன்பன்"
//

அருமையான் வரிகள்.. ரசிக்க வைத்து விட்டீர்கள் ஹமீத்.

//இதுவும் தொலைத்து விட்டு இப்பொது தேடும் நட்புதான் //

ஹமீத், தேடல் என்ற ஒன்று இருக்கும் வரை தான் வாழ்வில் ருசி இருக்கும் என்று ஒரு கவிஞன் சொன்னது உங்களுக்கும் எனக்கும் தானோ?

Unknown said...

//பழைய பதிவெல்லாம் கனோம்??? //

பழையனக் கழிதலும் புதியனப் புகுதலும் தமிழ்ர் மரபன்றோ...

நன்மனம் said...

//பழையனக் கழிதலும் புதியனப் புகுதலும் தமிழ்ர் மரபன்றோ... //

நட்புக்கு இந்த மரபுகள் கிடையாதன்றோ!!!

நட்புடன் :-)

கவிதா | Kavitha said...

//அது ஒரு மழைக்காலம்
ஈர நிலமாய் இதயம்
உழுது போனாய்
உன் பெயரோடு
என் பெயரைச்
சேர்த்து எழுதிப் போனாய்...//

அருமையான பதிவு தேவ், இந்த வரிகள் அற்புதம்.. உங்கள் நண்பர்கள் யாராவது ஒருவர் இதை படித்து உங்களுடம் பேசினால் சுகமே..

மனதின் ஓசை said...

//அருமையான் வரிகள்.. ரசிக்க வைத்து விட்டீர்கள் ஹமீத்.//
நன்றி தேவ்... சில நேரங்களில் என்னையும் அறியாமல் வெளிப்பட்ட சில வரிகள் கவிதையாய் தோன்றுவது உண்டு...இதுவும் அப்படி ஒன்றுதான்...
ஆனால், உடனே நமக்கு கவிதை வரும் என எழுத நினைத்து எழுதிய வரிகள் "வெறும் வரி"களாய் மட்டுமே ஆனது..

//ஹமீத், தேடல் என்ற ஒன்று இருக்கும் வரை தான் வாழ்வில் ருசி இருக்கும் என்று ஒரு கவிஞன் சொன்னது உங்களுக்கும் எனக்கும் தானோ? //

நமக்கு மட்டும் அல்ல தேவ்.. இன்னும் கோடானு கோடி பெருக்கும் இது பொருந்தும்.. ஆனால் எல்லா தேடலுக்கும் பொருந்தாது..நட்புக்கும் அப்படியே...
தேடிக்கொன்டே தொலைந்து போவதை காட்டிலும் தெரிந்து கொண்டு தொடர்வது நன்று..
அதுவே அதிக ருசியை கொடுக்கும் என நினைக்கிறேன்..

Unknown said...

//நட்புக்கு இந்த மரபுகள் கிடையாதன்றோ!!!

நட்புடன் :-) //

நட்புக்கு நிச்சயமாய் இந்த மரபுகள் பொருந்தாது...இது நண்பர் ஹமீத் பழையப் பதிவுகள் குறித்துக் கேட்டதற்குக் கொடுத்த விளக்கம்.

நட்பின் மரபுகளுக்கு விளக்கம் பெற ஐயன் திருவள்ளுவனை விட்டால் தமிழ் கூறும் நல்லுகினில் வேறு யாரும் உண்டோ.. விசாரித்துப் பாருங்களேன்...

கடைசியில் 'நட்புடன்' என விளித்து தாங்கள் சிந்தியப் புன்னகை போதும் எனது இன்றைய நாளினை இனிய நாள் ஆக்குவதற்கு.. நன்றி நன்மன நண்பா

Unknown said...

//மனசுக்குள்
ஒரு கல்லை தூக்கிப்போட்டு,
பின்னூட்டம் கேட்க
உனக்கென்ன அப்படியொரு திமிரு?//

நண்பா கல்லெறிந்தாலும்...காயப்பட்டாலும்... கணப் பொழுதினில் மறந்து முகம் மலர்வது நட்பு அல்லவா..

Unknown said...

//அருமையான பதிவு தேவ், இந்த வரிகள் அற்புதம்.. உங்கள் நண்பர்கள் யாராவது ஒருவர் இதை படித்து உங்களுடம் பேசினால் சுகமே.. //

கவிதா அக்கா உங்கப் பெருந்தன்மைக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள்.

நட்பைப் பற்றி நாலு வரி எழுதி தரச் சொன்னீங்க... எழுத உட்கார்ந்தா நாலு வரி நாலாயிரம் வரியா வடிவம் எடுக்குது.. அதை அப்படியே பதிவாப் போட்டாச்சு... உங்க நாலு வரி பாக்கியை எப்படியாவது யோசிச்சு எழுதி சரி பண்ணிடுறேன்.. வந்து வாழ்த்தியதற்கு மீண்டுமொரு முறை நன்றி.

கவிதா | Kavitha said...

//உங்க நாலு வரி பாக்கியை எப்படியாவது யோசிச்சு எழுதி சரி பண்ணிடுறேன்.. வந்து வாழ்த்தியதற்கு மீண்டுமொரு முறை நன்றி.//

எதுக்கு சிரம் தாழ்த்தி எல்லாம் நன்றின்னு புரியல.. எனக்கு தேவையான நாலு வரிய எழுதி தருவீங்கன்னு நம்பறேன்.. தந்தீங்கன்னா.. நானும் சிரம் தாழ்த்தி உங்கள மாதிரியே நன்றி சொல்லுவேன்..

கைப்புள்ள said...

////மனசுக்குள்
ஒரு கல்லை தூக்கிப்போட்டு,
பின்னூட்டம் கேட்க
உனக்கென்ன அப்படியொரு திமிரு?//

//நண்பா கல்லெறிந்தாலும்...காயப்பட்டாலும்... கணப் பொழுதினில் மறந்து முகம் மலர்வது நட்பு அல்லவா..//

ரெண்டு பேரும் மாத்தி மாத்தி என்னைய கலங்க வைக்கிறீங்களே!

இந்த நேரத்துல எங்கள் கல்லூரி yearbookஇல் ரீடர்ஸ் டைஜஸ்ட் சஞ்சிகையிலிருந்து சுட்டு போட்ட ஒரு quotable quote ஞாபகத்துக்கு வருது.

"There is no security quite as comfortable and undemanding as the kind you feel among old friends"

ஏற்கனவே உனக்கு பரிச்சயமானது தான்...இங்கேயும் பாரு.

Unknown said...

//"There is no security quite as comfortable and undemanding as the kind you feel among old friends"//

பொருள் பொதிந்த வரிகள் மோகன்.

நம்மை நாமாக மட்டும் பார்க்கும் பார்வைகளுக்கு நம் பழைய நண்பர்கள் மட்டுமே உரிமையாளர்கள் என்பது நிச்சயமான உண்மை.

Unknown said...

//நமக்கு மட்டும் அல்ல தேவ்.. இன்னும் கோடானு கோடி பெருக்கும் இது பொருந்தும்.. ஆனால் எல்லா தேடலுக்கும் பொருந்தாது..நட்புக்கும் அப்படியே...
தேடிக்கொன்டே தொலைந்து போவதை காட்டிலும் தெரிந்து கொண்டு தொடர்வது நன்று..
அதுவே அதிக ருசியை கொடுக்கும் என நினைக்கிறேன்..//

மிகவும் ஆழமாகவும் அழகாகவும் சிந்திக்கிறீர்கள் ஹமீத்.

அவரவர் தேடலில் வெற்றி பெற முனைவோம். வாழ்க்கையை ரசிப்போம்..

இலவசக்கொத்தனார் said...

//தண்ணீரும் ஊற்றவில்லை...//

என்னாது இது? தண்ணி ஊத்தாத நட்பா? இத நான் நம்பணுமா?

ஏம்பா, பாலாஜி, சதீஷ், பர்த்லோமியா டயஸ் மற்றும் பி.எம்.ரவிக்குமாரு, யாரு பெத்த பிள்ளைங்களோ, கொஞ்சம் வந்து அண்ணன் சொல்லற உண்மைக்கு ஆமாம் சொல்லி பழைய கதை எல்லாம் எடுத்து விடுங்க சாமிங்களா.

ஏம்பா தேவு? விட்டா சமீபத்தில் 1960ல்லன்னு பேச ஆரம்பிச்சுருவ போல இருக்கே. அவ்வளவு வயசு ஆகலைப்பா உனக்கு. சும்மா ஜாலி பதிவே போடு.

Santhosh said...

நல்ல பதிவு தேவு,
நட்பையும் அதன் உணர்வுகளையும் விளக்க வரிகள் ஏது.. அனுபவிக்க முடியும் இல்லாட்டி நினைச்சு பாக்க முடியும்.

சீனு said...

நல்ல பதிவு தேவ்.

அது என்னவோ, எனக்கு மட்டும் நண்பர்கள் நிலைப்பதில்லை (அல்லது நான் நிலைக்க விடுவதில்லை).

//கையெழுத்துப் புத்தகத்தின்
கடைசிப் பக்கத்தில்
பெயரோடு முகவரியும்
எழுதும் போது
எனக்குப் புரியவில்லை
அடுத்த சில ஆண்டுகளில்
நாம் ஒருவரை ஒருவர்
தொலைக்கப் போகிறோம் என்று//

Excellent.

ஜொள்ளுப்பாண்டி said...

அடடா இப்படி மாத்தி மாத்தி பீலிங்ஸ் உட்டு மனச ரணகளமாகுறீங்களே தேவு !! ஆனாலும் ரொம்பத்தான் பீல் பண்ணியிருக்கீங்க ! நல்லா இருக்கு தேவண்ணா !

Unknown said...

//என்னாது இது? தண்ணி ஊத்தாத நட்பா? இத நான் நம்பணுமா? //

கொத்ஸ் மெய்யாலுமாச் சொல்லுறேன் நீங்க நம்பித் தான் ஆகணும்.. நட்பு வளர தண்ணி ஊத்த வேணாம்... எனக்குத் தெரிஞ்ச தண்ணி ஊத்தி அவிஞ்சுப் போன நட்பெல்லாம் கூட இருக்கு...

எது எப்படியோ... பிரைமரி இஸ்கொல் படிக்கச் சொல்ல தண்ணி ஊத்துறது அப்பால ஆப் பாயில் போடுறதுன்னு எந்தக் கலையும் கற்காத பிள்ளைப் பருவமது

Unknown said...

//சும்மா ஜாலி பதிவே போடு.//

தலைவர் ஆணை ரசிகனின் பாக்கியம்...

Unknown said...

//நட்பையும் அதன் உணர்வுகளையும் விளக்க வரிகள் ஏது.. அனுபவிக்க முடியும் இல்லாட்டி நினைச்சு பாக்க முடியும்.//

பங்காளி அந்த அனுபவங்கள் நினைவுகளை நெஞ்சில் தங்குவதும்.. மீண்டும் நினைவுகள் அனுபவங்களாய் மாறாதா அப்படிங்கற ஏக்கமும் என்றென்றும் தொடரும் கதையோ?

Unknown said...

//அது என்னவோ, எனக்கு மட்டும் நண்பர்கள் நிலைப்பதில்லை (அல்லது நான் நிலைக்க விடுவதில்லை).//

நண்பர்கள் வெறும் மனிதர்கள் தானே.. மனிதன் நிலையற்றவன் தானே.. ஆனா நட்பு அது நிலையானது சீனு... யோசிச்சுப் பாருங்க... உங்க மன்சுல்லயும் சில நிலையான நட்புக்கள் நிச்சயம் இருக்கும்..

Unknown said...

//அடடா இப்படி மாத்தி மாத்தி பீலிங்ஸ் உட்டு மனச ரணகளமாகுறீங்களே தேவு !! ஆனாலும் ரொம்பத்தான் பீல் பண்ணியிருக்கீங்க //

உன் எச்சரிக்கைப் புரிகிறது பாண்டி... ஏற்கனவே தலைவர் கொத்தனார் வேற சவுண்டாவே எச்சரிக்கை மணி அடிச்சுட்டுப் போயிட்டார்... சோ கன்ட்ரோல் பண்ணிக்கிறேன்...

tamil10