Saturday, August 18, 2007

காந்தியா சுதந்திரம் வாங்கி கொடுத்தார்?

இந்த வாரம் ஊரெல்லாம் கொடியேத்தி முட்டாய் கொடுத்து இந்திய சுதந்திரத்தின் அறுபதாவது ஆண்டை அமோகமாக்கொண்டாடுனாங்க...மெயில்..பதிவுன்னு நம்ம மக்களும் குறைவில்லாம கிடைச்ச சுதந்திரத்தை சுகமாக் கொண்டாடினாங்க..

இந்த நிலைமையிலேத் தான் எனக்குக்குள்ளே இப்படி ஒரு கேள்வி கொக்கியா தொக்கி நின்னுச்சு

அந்தக் கேள்வியைப் பதிவு தலைப்பா வச்சாச்சு.. சில பல காலத்துக்கு முன்னாடி ஒரு இந்தி படம் பார்த்தேன்.. படத்தின் பெயர் மாச்சீஸ்.. நம்ம குல்சார் கைவண்ணத்தில் வந்த படம்.. பஞ்சாப் தீவிரவாதத்தைப் பத்தி பேசும் படம் அது.. படத்தின் மொத்தத்தைப் பத்தி நான் இங்கே சொல்ல வர்றல்ல..அந்தப் படத்தில் வர்ற ஒரு வசனம் என்னைக் கொஞ்சம் சிந்திக்க வச்சிருச்சு...

அதாவது அந்த ஊர் பள்ளிக்கொடத்துல்ல வழக்கம் போல வாத்தியார் ஒருத்தர் கையிலே பிரம்போட வரலாறு சொல்லிக் கொடுத்துகிட்டு இருக்கார்...

நம்ம பாரத தேசத்துக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தது மகாத்மா காந்தி அப்படின்னு பொறி பறக்க பாடம் நடத்திகிட்டு இருக்க அவரைப் பார்த்து இடி இறக்கற மாதிரி என்னிய மாதிரி ஒரு சின்னப் பொடியன் அதிரடியா சொல்லுறான்... சார் சும்மா பொய் சொல்லக் கூடாது... இந்த டுபாக்கூர் கதையை எல்லாம் நாங்க நம்ப மாட்டோம்..

லைட்டா ஜெர்க்காகுற வாத்தி... என்னாச்சு உனக்கு நக்கலா... மவனே எனக்கு வரலாறு நீ சொல்லப் போறீயா அப்படின்னு கோவமா பிரம்பைச் சுத்த பொடியன் பிரம்புக்கு பம்மி நிக்காம வாத்தியாரை நேருக்கு நேரா நிமிந்து கேக்குறான்...

"காந்தி கிட்ட வெள்ளைக்காரன் சுதந்திரத்தை இந்தா வச்சிக்கங்க அப்படின்னு சொல்லிக் கொடுத்துட்டுப் போனதை நீங்கப் பார்த்தீங்களா... காந்தி தான் வாங்கிக் கொடுத்தார்ன்னா.. நம்ம ஊர் லாலா லஜ்பத் ராய்.. பகத் சிங்.. ஜாலியன் வாலா பாக்ல்ல ரத்தம் சிந்துன்ன பல்லாயிரக்கணக்கான மக்கள் எல்லாம் எதையும் வாங்கி தர்றல்லயா....

ஒரே பஞ்சாப்பா ஒண்ணா இருந்த நம்ம இன்னிக்கு அந்த பஞ்சாப்ல்ல இருக்க நம்ம உறவுகளை சுதந்திரமாப் போய் பார்த்துட்டு வர முடியுமா? கிடைச்சது சுதந்திரம் இல்லை... "அப்படின்னு அந்தக் காட்சி இன்னும் நீளும் ...

ஓடனே நமக்கும் யோசனை ஓடுச்சு... நம்ம செந்தமிழ் நாட்டு விடுதலை வீரர்களைப் பத்தி...வரிசையா நிறைய பேர்கள் வந்தாலும் அவங்க எல்லாம் பெரிதாகப் பேச படவில்லையோ அப்படின்னு நினைக்க வச்சுருச்சு...

காந்தி அவர்களை இந்த நாட்டின் முகமாக சித்தரிக்க என்ன காரணமாயிருக்கும்? எத்தனையோ ஆயிரம் விடுதலை வீரர்கள் போராட்டக் களத்தில் பொங்கி எழுந்து போராடி வீழ்ந்தும் வாங்கிக் கொடுத்த சுதந்திரத்தின் விலாசம் மகாத்மாவின் பெயரை மட்டும் சுமந்து நிற்க காரணம் என்ன?

மற்றவர்களின் பங்கு மறைக்கப்பட்டதா? காந்தி அவர்களின் பங்களிப்பு மிகைப் படுத்தப்பட்டதா?

எனக்கு ஒண்ணியும் புரியல்ல... ஆனா சம்பந்தில்லாம எங்க மொதலாளி அடிக்கடி சொல்லுற தத்துவம் ஞாபகம் வந்துப் போனது

"பொடியா நீ செய்யற எந்த வேலையும் ஊரும் உலகமும் கவனிக்கும் படி இருந்தா தான் நீ பெரிய ஆள் ஆக முடியும்ன்னு..."

7 comments:

வெங்கட்ராமன் said...

காந்தி சுதந்திரப் போராட்டம் பண்ணது என்ன்மோ உண்மைதான்.

இரண்டாம் உலப் போரில் இந்தியாவோட நிலைப்பாடு. . . .

இரண்டாம் உலக்ப் போருக்கு அப்புறம் இங்கிலாந்தில் நடந்த ஆட்சி மாற்றம். . .

போன்ற விஷயங்கள் நம்மிடம் இருந்து மறைக்கப் பட்டு விட்டன.

வரலாறு பாடத்தில் படித்தது அவ்வளவாக ஞாபகம் இல்லை. . . .

வரலாறு தெரிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும் . . . .

Chinna BOSS said...

வாங்க வெங்கடராமன் சார்.. நம்ம பள்ளிக்கொடத்துல்ல படிச்ச வரலாறும் சரி.. நம்ம தேசிய ஊடகங்களும் கிட்டத் தட்ட ரெண்டு தலைமுறை இந்திய மக்களிடமிருந்து பல உண்மைகளை மறைச்சு இருக்காங்க... அதுக்கு காரணம் தேடும் முயற்சியாத் தான் இந்த பதிவைப் போட்டேன்..

காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரைக்கும் குஜாராத் முதல் அசாம் வரையிலும் இந்திய சுதந்திரம் மற்றும் இந்தியன் அப்படிங்கற உணர்வை ஒருங்கிணைக்க நம்ம ஊடகங்களும் சில பல அரசியல் வாதிகளும் சேர்ந்து சிருஷ்ட்டித்த புனித பிம்பம் தான் மகாத்மாவோன்னு எனக்குள்ளே ஒரு கேள்வி விடைக் கிடைக்குமா பார்ப்போம்..

இலவசக்கொத்தனார் said...

//காந்தி அவர்களின் பங்களிப்பு மிகைப் படுத்தப்பட்டதா?//

நல்ல கேள்விதான். நான் பலமுறை கேட்டுள்ள கேள்வி. காந்தி பல போராட்டங்களுக்கு நடுவே ஒரு கோந்தாக இருந்தார். (He was a glue holding different teams together) அது மட்டுமில்லாமல் ஒரு ஏற்றுக் கொள்ளத்தக்க தலைவராக சித்தரிக்கப்பட்டார்.

நம் பண்பு என்னவென்றால் ஒருவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டுவிட்டால் வெறித்தனமாக, அவரின் தவறுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் வெறித்தனமான ஆதரவு தருவதே. இதில் அவரின் தவறுகள் மறைக்கப்பட்டும், அவரை தெய்வமாகவே சித்தரிக்கும் பழக்கமும் நம்மிடையே உண்டு. அந்த அளவுகோலில்தான் காந்தியையும் பார்க்கிறோம் என்பது என் எண்ணம். அவர்களைப் பற்றிய மாற்றுக் கருத்துக்கள் கொண்டவர்களை துரோகிகளாகப் பார்ப்பதற்கு இதுதான் காரணம்.

காந்தியும் நேருவும் அவர்கள் எடுத்த முடிவுகள் பல மாறி இருந்தால் நமக்கு நல்ல பலன்கள் பல கிட்டி இருக்கும் என்பது என் எண்ணம்.

(ரொம்பப் பேசிட்டேனோ?)

Chinna BOSS said...

வாங்க கொத்ஸ் நீங்க சொல்லுற கருத்துக்கள் பலவும் நம்மில் பலருக்கும் தோன்றி போகும் கருத்துக்களே... இந்த 'தலைவர்களை' விட அவர்களை உருவாக்கும் அந்த கிங் மேக்கர்ஸ்க்கே ஆதாயம் அதிகம் என எனக்கு படுகிறது.. காந்தி அவர்களை ஒரு மகாத்மாவாக சித்திரிக்க பின்னால் ஒரு பெரும் சக்தி தேவைப் பட்டிருக்கும் அல்லது ஈடுபட்டு இருக்கும் ... அந்த சக்தி யார்? அவர்களுக்கு அதன் மூலம் கிடைத்த ஆதாயம் என்ன?

இந்தச் செய்திகள் இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்டதன் நோக்கம் என்ன? யாருமே தோண்ட முற்படாததன் ரகசியம் என்ன? என்று ஒரு ஆர்வம் எனக்குள் இருந்ததாலே இந்தப் பதிவை எழுதினேன்..

உங்க கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு என் நன்றி கொத்ஸ்

குசும்பன் said...

காந்தியை பற்றி பல கருத்துகள் இருக்கு. ஆனா பல் விசயங்கள் மறைக்கபட்டு இருக்கிறது என்பது மட்டும் உன்மை.

குசும்பன் said...

காந்தியை பற்றி பல கருத்துகள் இருக்கு. ஆனா பல் விசயங்கள் மறைக்கபட்டு இருக்கிறது என்பது மட்டும் உன்மை.

Unknown said...

//காந்தியை பற்றி பல கருத்துகள் இருக்கு. ஆனா பல் விசயங்கள் மறைக்கபட்டு இருக்கிறது என்பது மட்டும் உன்மை. //

வாங்க குசும்பா... காந்தி பத்தி என்னக் கருத்து இருந்தாலும் சொல்லுங்க.. சொன்னா நாங்களும் தெரிஞ்சுப்போம் இல்ல.. நண்பர் நந்தா கூட இந்த தலைப்பை ஒரளவு ஒட்டிய கருத்து தளத்தில் ஒரு பதிவிட்டு இருந்தார். அதில் பலக் கருத்துக்கள் வெளிவந்திருந்தன...

மறைக்கப் பட்ட எதுவும் ஒரு நாள் வெளிவந்தே தீரும் என்று நம்புவோம்

tamil10