Thursday, November 27, 2008

ஒரு தீவிரவாத புதன் கிழமை

சமீபத்தில் நான் பார்த்து சிலாகித்த இந்தி படமொன்று... A WEDNESDAY..மும்பை ரயில் குண்டு வெடிப்புகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

ஒரு சாமன்ய மனிதனுக்கு தீவிரவாதத்தின் மீது எழும் அழுத்தமான கோபத்தை பதிவு செய்த திரைப்படம் அது...
அந்தப் படம் பார்த்து அதன் தாக்கம் அடங்குவதற்குள்.. இதோ இன்னொரு புதன் கிழமை.. மீண்டும் மும்பையின் நிலமெல்லாம் ரத்தம்...அப்பாவி பொதுமக்களின் ரத்தம்..

எதற்காக இந்த வெறி ஆட்டம்... ஏனிந்த வெறி.... இந்த கேள்விகள் எல்லாம் இப்போது என் மனத்தில் இல்லை.. அதை எல்லாம் தாண்டி ஒரு தீராத கோபம்... விரக்தி.. எரிச்சல்... எல்லாம் என்னுள் கலந்து ஒலிக்கிறது... என்னால் என்ன இயலும்...

நான் ஒரு சாதரண இந்திய குடிமகன்... வேலை..பொருளாதாரம்..குடும்பம்.. என எனக்கு பல விதத்தில் சுமைகள் உண்டு.. அதன் காரணமாக என் நாட்டைப் பார்த்து கொள்ள எனக்கு நேரம் இல்லை.. என்னைப் போல எத்தனையோ சக இந்தியர்கள் எண்ணிக்கையில் உண்டு... எங்களுக்கு அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திலே நேரம் போவதால் தான்... நாட்டைப் பார்த்து கொள்ள ஆட்சியாளர்களிடம் அதிகாரத்தைக் கொடுத்து விட்டு வாங்கும் மாதச் சம்பளம் என் வீடு சேரும் முன் அரசாங்கக் கஜானாவுக்கு அதன் வரி பங்கைத் தவறாது கொடுக்கும் பல லட்சக் கணக்கான மாதச் சம்பளதாரர்களின் வர்க்கத்தில் நானும் ஒருவன்...

எது நடந்தப் போதும் பொறுத்துப் போய் பழகிவிட்டது எனக்கு.... பொறுத்ததும் போய் அதையும் தாண்டி நடப்பதை எல்லாம் நகைத்தும் ரசிக்கும் படியான கேவலமான பழக்கமும் சேர்ந்து கொண்டது.. சுத்தி எது நடந்தாலும் அது காமெடி தான்... கரண்ட் இல்லையா... அதுவும் காமெடி தான்...மழையிலே ரோடு இல்லையா அதுவும் காமெடி தான்... அரசியல்வாதிகளின் ஊழலா.. அதுவும் மெகா காமெடி தான்... எதையும் தட்டி கேக்க திராணி இன்றி ஒவ்வொரு தேசியப் பிரச்சினையிலும் தள்ளி போய் அப்படியே இன்று தனித் தீவாக ஆன எத்தனையோ பேர்களில் நானும் ஒருவன்...

ஒரு கட்டத்தில் எல்லாமே எனக்கு என்டர்டெயின்மெண்டாகவே போய் விட்டது... தேங்க்ஸ் டூ மீடியா....

இன்று காலை என் வரவேற்பரையில் மும்பையின் அலறல் சத்தம் கேட்டப் போது...நெடு நாளைய என் தூக்கம் திடுமெனக் கலைந்தது...இல்லை கலைந்துப் போனதாய் நான் உணர்கிறேன்...

எதாவது ஒரு வழியில் என் கோபம் பதிவு செய்ய பட வேண்டும் என விரும்புகிறேன்... அது தான் இந்தப் பதிவின் நோக்கம்...

மிஸ்டர் மன்மோகன் சிங்... இந்தப் பதிவு மூலமா நான் கூட தான் அறிக்கை விடுறேன்... வருத்த,,,...கோபம்... எல்லாத்தையும் சொல்லுறேன்....எதுக்குன்னா என்னால அவ்வளவு தான் முடியும்.. என்னால என்ன முடியுமோ அதை நான் செய்யுறேன்....

உங்க லெவலுக்கு வெறும் அறிக்கை எல்லாம் விடுறது வேலைக்கு ஆவாது சார்.... அடிச்சு ஆடுங்க...

கொடுமை காணும் இடத்தில் பொங்கி எழச் சொல்லி எல்லாப் பெரியவங்களும் சொல்லியிருக்காங்க...உங்க கிட்ட பதவி இருக்கு.. அதிகாரம் இருக்கு... நாடே உங்க பின்னாடி இருக்கு... அப்புறம் எதுக்கு கையைக் கட்டிகிட்டு கண்ணைக் கசக்கிட்டு.....


போடுங்க... ஆர்டர்.. ஆர்மியை விடுங்க... அடிக்கட்டும்... இந்தியாவை சீண்டிப் பாக்கும் தீவிரவாத வேர்கள் எங்கே இருந்தாலும் பிடுங்கி எறியணும்....அதுக்கு நீர் ஊத்துரது யார் விரலா இருந்தாலும் உரல்ல வச்சு இடிக்கணும்...

ரோட்டுல்ல போற அப்பாவி மக்களைச் சுடுற தீவிரவாதியை எல்லாம் கைது எதுக்கு பண்ணி அவனுக்கு எங்க வரி பணத்துல்ல சோறு தண்ணி எதுக்கு கொடுக்கணும்.. அங்கேயே அப்படியே எங்க வரி பணத்துல்ல தோட்டாவால சோறு போடுங்க...இல்ல கத்தியால கூறு போடுங்க....

அடிக்கு அடி உதைக்கு உதைன்னு போட்டுத் தாக்கணும்... தீவிரவாதம் இன்னொரு தாண்டவம் ஆட நம்ம இந்தியா மேடையா இருக்கக் கூடாது,...

இதை தீவிரவாதத்துக்கும் எதிரான ஒரு சாமன்ய இந்தியனின் கோபமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

Monday, November 10, 2008

சினிமா சினிமா

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
முதல்ல பார்த்த படம் சத்யம் தியேட்டர்ல்ல..மை டியர் குட்டிச்சாத்தான்...பொதுவாக எங்க வீட்டுல்ல இப்போ வரைக்கும் என்னைத் தவிர யாருக்கும் பெரிதாக சினிமா ஆர்வம் கிடையாது.. அதனால் சிறு வயதில் அதிகம் தியேட்டருக்குப் போனது இல்லை....கிட்டத்தட்ட மை டியர் குட்டிச்சாத்தான் பார்த்த அதே நேரம் தான் நாகேஷ் தியேட்டர்ல்ல எங்களையும் வாழ விடுங்கள்ன்னு ஒரு விலங்குகள் சம்பந்தப்பட்ட படம் பார்த்ததாக ஞாபகம்...

சிறு வயதில் அதிகம் கவர்ந்த படங்கள்ன்னா..அது ரஜினி படங்கள்...அதுக்கு ஒரு காரணமிருக்கு அப்போ எல்லாம் கோடை விடுமுறைக்கு ஈரோடு பக்கம் உள்ள என் உறவினர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு... அவர்கள் அனைவருக்கும் தொழில் மளிகை கடை.. அங்கு உள்ள என் வயது சிறூவர்களோடு சேர்ந்து ரஜினிக்கு கைத்தட்ட ஆரம்பித்து அப்படியே என் ஆரம்ப கால சினிமா ரசிக அனுபவங்கள் எல்லாம் ரஜினி படங்கள் சார்ந்தே அமைந்து போயின...

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?
போன சனிக்கிழமை இரவு பிராத்தனா திரையரங்கில் ஜேம்ஸ் பாண்ட் படம் குவாண்டம் ஆப் சோலஸ்

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
சேரன் நடித்த ராமன் தேடிய சீதை.... ஒரு நல்ல பொழுது போக்கு படம்

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
பட்டியல் ரொம்ப பெருசுங்க... மணிரத்னம் இயக்கி கமல் நடித்த நாயகன்... சிறு வயதில் பெரிதாய் கமல் படங்கள் பார்க்காமல் தவிர்த்த் என்னை கமல் பக்கம் திருப்பிய படம்...மணிரத்னம் படங்கள் மீது ஒரு தனி மரியாதை ஏற்படுத்திய படம்...
பின்னாளில் பிதா மகன்... காசி திரையரங்கமே எழுந்து நின்று மரியாதை கொடுத்த படைப்பு அது...
சத்யம் தியேட்டரில் இரவு காட்சி பார்த்து விட்டு தூக்கம் தொலைக்க செய்த அன்பே சிவம்
எதுக்கு இப்படி ஒரு க்ளைமேக்ஸ் என கோபம் கொள்ள வைத்த பருத்தி வீரன்...
அசத்திட்டான்ப்பா செல்வராகவன்... இந்த பையனுக்குள்ளேயும் என்ன திறமை இருக்குடா என கவனம் ஈர்த்த காதல் கொண்டேன்...
பழையப் படங்களில் வறுமையின் நிறம் சிவப்பு.... நாகேஷின் எதிர் நீச்சல், இப்படி நம்ம லிஸ்ட் ரொம்ப நீளம்..
சமீபத்தில் சென்னை 28...சுப்ரண்யமணியபுரம்...

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
1992 அண்ணாமலையில் துவங்கி அதன் பின்னால் வந்த அனைத்து ரஜினி படங்களின் ரீலிசும் அரசியலின் உச்சம்....
குறிப்பாச் சொல்லணும்ன்னா முத்து வெளியான சமயம் ஆளுங்கட்சியின் கடும் எதிர்ப்புக்கு உள்ளான ரஜினிக்கும் அவர் ரசிக கண்மணிகளுக்கும் பாடம் புகட்ட முத்து வெளியான திரையரங்குகள் தாக்கப்படலாம் என வெளியான செய்தி ( உண்மையா பொய்யா) அதையும் மீறி முதல் நாள் முதல் காட்சிக்கு வீட்டுக்குத் தெரியாமல் சென்று சேதாரமின்றி ( அதாவது வீட்டுல்ல அடிபடாமல் தப்பியது) திரும்பியது 12 வது படிக்கும் போது கிடைத்த அரசியல் வெற்றி

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
ஜீன்ஸ் வந்தக் காலத்தில் இரட்டையர்களாக பிரசாந்த் நாசர் ஐஸ்வர்யா ராய் என அன்றைய தேதிக்கு ஊரையே பேச வைத்த பிரமாண்டத்துக்கு ஷங்கர்...ஒவ்வொரு காட்சியிலும் தொழில் நுட்ப நேர்த்தி காட்டும் இயக்குனர்.. ரோஜாவுக்குப் பிறகு இசையில் தொழில் நுட்பத்துக்கு ரஹமான்...
இன்னும் தமிழில் தொழில் நுட்பம் மேலும் வளரணும்ங்கறது என் ஆதங்கம்

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
கையில் புரட்ட கிடைக்கும் அனைத்துப் பத்திரிக்கைகளிலும் தமிழ் சினிமா செய்திகளை தவற விடுவதில்லை

7. தமிழ்ச்சினிமா இசை?
ராஜா ராஜா என்றும் ராஜா... அவ்வப்போது வரும் புது பாடல்களையும் தவற விடுவதில்லை... இப்போதைக்கு அடிக்கடி ஓடுவது வாரணமாயிரம்...

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
நிச்சயம் உண்டு... தமிழ் தவிர ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு படங்களும் பார்பது உண்டு... சப் டைட்டில் இருந்தா எம்மொழியும் எம் மொழியே...
உலக சினிமாவில் ரசித்த படங்கள் காட் பாதர், சினிமா பாரடிசோ,சேவிங் பிரைவேட் ரேயான், பியூட்டிபுல் மைன்ட்...
இந்திய சினிமாவில்... ஷோலே...தில் சாத்தா ஹேய்...ஏ வெட்னஸ்டே...ரங்க் தே ப்சந்தி...
தெலுங்கில் கம்யம்...கோதாவரி...
மலையாளத்தில் தீலிப் நடித்த நகைச்சுவை படங்கள் பிடிக்கும்...

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
பிரபலங்கள் சிலரின் உறவுகள் எனக்கு நெருக்கமான நண்பர்கள்... நல்லதொரு தமிழ் சினிமா விமர்சன வலைத்தளம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் துவங்கப்பட்ட கீத்துகொட்டா பதிவை தொடர வேண்டும்...

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கதை நாயகர்களாக நடிகர்கள் மாறும் வரை.. தமிழ் சினிமா ஸ்டார்களின் முதுகு சொறியும் அலங்கரிக்கப்பட்ட துடைப்பமாகவே இருக்கும் என்ற வருத்தம் இருந்தாலும்... அமீர்.. வெங்கட் பிரபு..மிஷ்கின், பாலா... போன்ற இயக்குனர்களை நம்பலாம்....

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
ஹாலிவுட், பாலிவுட் இருக்கும்ல்ல.. அந்தப் பக்கம் ஒதுங்கிருவோம்....
கவுண்டர் பாபால்ல சொல்லுவார் இல்ல... சிங்கிள் லாங்க்வேஜ் வச்சிகிட்டு நான் சென்னைக்கு அந்த பக்கம் போக முடியாம அல்லாடுறேன்னு.. அந்த கவலை நமக்கு இல்ல...

பதிவிட அழைப்பு வைத்த பாசக்கார சிங்கங்கள் கைப்புள்ள மற்றும் கப்பிக்கு மனமார்ந்த நன்றிகள்

Wednesday, November 05, 2008

ஆபிசரின் அரசியல் கச்சேரி

"டேய் பருத்திவீரா... நான் எல்லாம் ஒபாமா ரேஞ்ச்டா...."
"யார்... நம்ம ஆபிஸ் வாசல்ல பரோட்டாப் போடுற கடையிலே தட்டு கழுவுறங்களே அந்த ஒ பாமா அவங்க ரேஞ்சா...?"

"என்ன நக்கலா... நான் சொன்னது...இன்னிக்கு அமெரிக்காவில்ல முதல் கருப்பர் இன அதிபர் ஆகி இருக்காரே அவரைச் சொன்னேன்..."

"அப்படின்னா நீங்க அரசியல்ல இருந்தீங்களாஆஆஆஆஆஆ"

"எதுக்கு இம்புட்டு ஆ?""எல்லாம் ஒரு எபெக்ட் தான் ஆபிசர்... சின்னப் பயல்வ விரலை அசைச்சாலே என்னமா சவுண்ட் கொடுக்கான்வ சினிமாவுல்ல... நீங்க் ஆஆஆபிசர் ஆச்சே.. விடுவோமா.. நீங்க மேல போங்க..."

ஆபிசர் பருத்தி வீரனை படு கடுப்பாய் முறைத்துவிட்டு தன் அரசியல் அனுபவத்தைச் சொல்ல ரெடியாகுகிறார்.

அப்போ நான் பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டிருந்தேன்...

இது தான் ஆபிசர் உங்க கிட்ட எனக்கு பிடிச்ச விசயம்...
எது எது....
இந்த உண்மை பேசற விசயம்...பள்ளிக்கூடத்துல்ல படிச்சிட்டு இருந்தேன்னு பொய் சொல்லாமல் போயிட்டு இருந்தேன்னு சொல்லுறீங்க பாருங்க.. அந்த உண்மை பேசுற மனசை நான் பாராட்டுறென் ஆபிசர் ..ப்ளீஸ் கன்டினியூ

மீண்டும் கடுப்பு பார்வை பார்க்கும் ஆபிசர் தொடர்கிறார்..."அப்போ எல்லாம் நான் வந்து ஒரு பெரிய நடிகருக்கு ரசிகர்.....""ஆபிசர் குண்டு கல்யாணமா.. இல்லை உசிலை மணியா ஆபிசர்.... எனக்குத் தெரிஞ்ச பெரிய நடிகர்ஸ் அவங்க தான்... ரொம்ப பெரிய நடிகர்ஸ்"

தமிழ் நாட்டுல்லே பெரிய நடிகர்ன்னா யாருன்னு சின்னப் புள்ளக்கு கூடத் தெரியுமே...
சாரி ஆபிசர் நான் பெரிய புள்ளையாகி பல வருசம் ஆச்சு... சைல்ட்வுட் மெமரி எல்லாம் லாஸ் ஆயிருச்சு... பட் நீங்க கன்டினியூ ஆபிசர்...

அவர் அப்போ அரசியலுக்கு வரப் போறதா ஊர் முழுக்கப் பேச்சு....
ஆபிசர் இப்போ உங்க பையனே பள்ளிக் கூடம் போக ஆரம்பிச்சுட்டான்... இன்னும் அந்தப் பேச்சு நிக்கல்ல... மே பி உங்க பேரனும் பள்ளிக்கூடம் போற வரைக்கும் அது நிக்காது.. அது கன்னித் தீவு பார்ட் டூ... என்னக் கன்னித் தீவு... தந்தில்ல மட்டும் வரும்...இந்த மேட்டர் ஆல் பேப்பர்ஸ்ல்லயும் வரும... பட் நீங்க மேட்டருக்கு வாங்க... வாட் ஹேப்பண்ட் டூ யூ இன் பொலிடிக்ஸ்?

எங்க குடும்பம் ஒரு பராம்பரியமான அரசியல் குடும்பம்...
அதாவது வேற பொழப்பே இல்லாம மொத்தக் குடும்பமும் கும்பலாக் கிளம்பி ஊரை அடிச்சு உலையைப் போட்ட அது பராம்பரிய அரசியல் குடும்பம்
ரைட்டா....ப்ளீஸ் ப்ரொசிட் ஆபிசர்..

"நக்கலை கன்ட்ரோல் பண்ணிட்டு கேளு...எங்க ஊர் பக்கம் அப்போ எங்க கட்சி சார்பா ஒரு மாநாடு... தேர்தல் வேற பக்கமா வந்துச்சு

பக்கமா வந்துருச்சு...சரி... நீங்க என்னப் பண்ணீங்க....

இதேக் கேள்வியை தான் அக்கம் பக்கம் எல்லாத்துல்லயும் என்னைப் பாத்துக் கேட்டாங்க. நான் கொதிச்சுக் கொந்தளிச்சிப் போயிட்டேன், ஒரு பரம்பரை அரசியல் குடும்பத்துல்ல வந்த நான் தேர்தல் வர்ற நேரம்... அதுவும் நான் ரசிக்கிற பெரிய நடிகர் வேற எங்க கட்சிக்கு ஆத்ரவு கொடுத்துட்டார்...இந்த டைம்ல்ல நம்ம வெயிட் காட்டணும்ன்னு முடிவு பண்ணிட்டேன்...

"நாம யாரு... ஆபிசர்....ஒரு தடவை முடிவு பண்ணிட்டா அப்புறம் நம்ம பேச்சை நாமளேக் கேக்க மாட்டோமே... ம்ம்ம் சொல்லுங்க"

"ஸ்கூலுக்கு மட்டம் போட்டுட்டு உக்காந்து யோசிச்சோம்ப்பா...."

"அதிசயம்...ஆபிசர்.. நீங்க கூடவா யோசிச்சீங்க... சரி அந்த யோசிக்கற பழக்கம் எல்லாம் உங்களுக்கும் இருந்து இருக்கு எப்போ அதை எல்லாம் விட்டீங்க...ஆப்டர் மேரேஜா"

"ஜஸ்ட் பிபோர் மேரேஜ்...யோசிச்சிருந்தா கல்யாணம் நடந்திருக்குமா..."

"ஆமா அண்ணி யோசிச்சுருக்கலாம்... மேரேஜ் நடந்திருக்காது... சரி அது எதுக்கு இப்போ... அரசியலுக்கு வாங்க..."

ஆபிசர் அலட்டல் போஸ் கொடுக்க...

"ஆபிசர்ண்ணா... அரசியல் கதைக்கு வாங்கன்னு சொன்னேன்.. கதை மிஸ் ஆயிடுச்சு.. சீன் வேணாம் கன்டினீயு.."

மெகாவா ஒரு திட்டம் போட்டோம்.. அது படி பேனர் வைக்க முடிவு பண்ணுனோம்...அப்போ பிளக்ஸ் எல்லாம் வர்றல்ல்யா... சோ... ஆயில் பெயிண்ட் பேனர் தான்...

அட்ரா சக்க..அட்ரா சக்க,.... அப்புறம்

பயங்கரமா யோசிச்சு எங்க கட்சி தலைவர் படம் ப்ளஸ் எங்க ஸ்டார் படமும் போட்டு பேனரை ரெடி பண்ணிட்டோம்.... பேனர்ல்ல எல்லாம் கரெக்ட்டா இருக்கான்னு லாஸ்ட் மினிட் செக் பண்ணும் போது தான் டக்குன்னு தோணுச்சு

தலைவருக்குப் பட்டம் எதுவும் போடல்லயேன்னு.. தமிழினத் தலைவர்ன்னு எழுதிடலாம்ன்னு முடிவு பண்ணுனோம்

அது உங்க தலைவருக்குப் பலக் காலமா இருக்க பட்டம் தானே.. இதுல்ல என்ன புதுமை...

ஆனா அங்கே தான் ஒரு சிக்கல் வந்துருச்சு...

நான் தெளிவாத் தான் இருந்தேன்... பசங்க தான் குழம்பி என்னையும் குழப்பிட்டாங்க

ஓ அப்படியா.. அப்புறம்
என்னச் சிக்கல்..
தமிழின தலைவருக்கு சின்ன ழி யா இல்லை பெரிய ழீ யா அப்படின்னு

ஒஹோ நீங்க தான் தமிழ் புலவர் ஆச்சே ஆபிசர்... டெய்லி ஆபிஸ்ல்ல எல்லாருக்கு குட் மார்னிங் வித குறள் மெயில் எல்லாம் பார்வர்ட் பண்ணுற தமிழ் பத்தர் ஆச்சே.. சாரி தமிழ் பித்தர் ஆச்சே...

அண்ணே உங்களுக்கு அரசியல்ல பெரிய எதிர்காலம் வேணும்ன்னா பெரிய ழீ யே போட்ருவோம்ன்னே.. சென்டிமென்ட்டா ஓர்க் அவுட் ஆகும்ண்ணே... ழீயும் பெருசு... உங்க கனவும் பெருசுன்னு ஏத்தி விட்டுட்டாங்க.... நானும் அந்த ஜெர்க்ல்ல ஒத்துகிட்டேன்...

பருத்தி வீரன் விழுந்து விழுந்து சிரிக்க.....
"ஆபிசர் அங்கிள்.... உங்க தலைவர் அதைப் படிச்சிட்டாரா....?"
"ஊரே படிச்சிருச்சு,,,, எங்க அப்பாரு அன்னிக்கே என்னை ரயில் ஏத்தி ஊரை விட்டு அனுபிட்டார்... இனி அரசியல் அது இதுன்னு வந்த ... வெட்டிருவேன்னு விளக்கமா வெவரமா கடுதாசியே போட்டுட்டு போயிட்டார்..

அப்புறம் தான் நானும் அரசியல் விட்டு விலகி வந்து இப்படி ஐ.டியிலே சேந்துட்டேன்

இதோ பாரு.... தன் மெயிலில் இருந்த ஒரு பழைய படத்தைக் காட்டினார்..அதில் தமிழீனத் தலைவர்.......... அப்படிங்கற பேனர் பக்கத்தில் மாசு மருவறியாத இளம் காளையாய் நம்ம ஆபிசர்...அரசியல் கெட்டப்பில் அட்டகாசமாய் போஸ் கொடுத்திருந்தார்

ஒரு பெரிய ழீ அநியாயமாய் தமிழகத்தின் அரசியலோடும் ஐடியோடும் விளையாடிய வினையை என்னவென்று சொல்ல....:))))

tamil10