Wednesday, April 29, 2009

தளபதிங்கற பட்டம் இருக்கே

முதல் டிஸ்கி: இது உள்ளாட்சித் துறை அமைச்சரும் திமுக முன்னணி தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களைப் பற்றிய பதிவு இல்லை.

ஒரு பட்டம்ங்கறது...ஒருத்தரோட சாதனையைப் பாத்து..இருப்பைப் பாத்து...நடப்பைப் பாத்து...கொடுக்கப் படும் ஒரு அந்தஸ்து...

நடிகர்கள்ல்ல வி.சி.கணேசன் என்ற நடிகர் மராட்டிய வீரனாய் மேடையில் வாழ்ந்த விதம் கண்டு அவருக்கு தகுதியான சிவாஜி என்னும் பட்டத்தை அளித்தார் ஒரு மாபெரும் திராவிட பெரியார்.. அதற்கு பின்னர் அவருக்கு கிடைத்த நடிகர் திலகம் என்னும் பட்டமும் அவருக்கு எத்தனைப் பொருத்தம் என்பது அவரது படங்களைப் பார்த்த அனைவரும் ஒத்து கொள்வார்கள்..

மருதூர் கோபாலன் ராமச்சந்திரன். என்றொரு நடிகர் தன் படங்களில் தொடர்ந்து திராவிடக் கருத்துக்கள் ஒலிக்க பாமரனுக்கும் அது புரியும் வகையில் கொண்டு சென்ற காரணத்தினால் "புரட்சி நடிகர்" என்பதைக் கூட ஏற்றுகொள்ளலாம்

இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்...காதல் மன்னன் ஜெமினி கணேசன்..மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்...நடிகவேள் எம்.ஆர்.ராதா....இப்படி அந்த பட்டங்களுக்கு அன்றைய கலைஞர்கள் தகுதி படைத்தவர்களாக இருந்தனர்..அதற்கு பின் கலையுலகம் சமுதாயம் சார்ந்த நிலையில் இருந்து வசூல் சார்ந்த ஒரு நிலையை பிரதானமாகக் கொண்ட நேரத்தில் வந்த ரஜினிகாந்த சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்றது...கமல்ஹாசன் காதல் இளவரசன் பட்டம் பெற்றது ( கமல் பின்னாளில் கலை ஞானி என்ற பட்டத்தை கலைஞரால் பெற்றார்) அவை எல்லாமே பொருத்தமாகவே இருந்தது...

ஆனால் சமீபக் காலமாக...பட்டங்கள் என்றால் என்ன அப்படின்னு தெரியாத ஒரு கூட்டம் தலைதூக்கியதால் நடக்கும் கூத்துக்கள் தாங்க முடியவில்லை...

ஒவ்வொருத்தருக்கும் இருக்க பட்டத்தைக் கேட்டிங்கன்னா...ஆளுக்கு நாலு கார்கில் யுத்தம்...பம்பாய் தீவிரயுத்தம்...சீன யுத்தம் இப்படி பல யுத்தத்துல்ல முன்னால நின்னு முழுமூச்சா சண்டை போட்டிருப்பாங்களோன்னு சந்தேகமே வரும்..

இந்தச் சரித்திரமெல்லாம் ஊன்றிப் படிச்சீங்கன்னா... இல்லை குறைந்தப் பட்சமா சரித்திர நாவல்களைப் படிச்சாக் கூட போதும்....அப்படி படிக்கும் போது பழங்காலத்து மன்னர்கள் அவர் தம் படைத்தலைவர்கள் பத்தியும் ஒரளவுக்கு விசயங்கள் தெரிஞ்சுக்க முடியும்...தளபதி அப்படின்னா எவ்வளவு பெரிய பதவி...அதற்கு எவ்வளவு தகுதிகள் வேண்டும்...ம்ம் யோசிக்க் யோசிக்க பிரம்பிப்பாக இருக்கும்

அப்படியே அந்தக் காலத்துல்ல இருந்து திரும்பி இந்தக் காலத்துக்கு வந்தா....வகை வகையாக காரு...சரக்கடிக்க ரக ரகமா பல ரக பாரு....கம்பெனிக்கு கலர் கலரா பிகரு இப்படி வாழுற நம்ம கோடம்பாக்கத்துப் பையபுள்ளக இருக்காங்களே அவங்க கணக்குல்ல முக்காவாசிப் பேர் தளபதி தான்...

அந்த தளபதிங்கற வார்த்தைக்கு மட்டும் உயிர் இருந்தா... ஏகப்பட்டத் தடவை தற்கொலை பண்ணியிருக்கும்...பட்டமெல்லாம் கொடுக்குறவங்களால்ல வாங்குறவங்களுக்கு ஒரு மரியாதை இருந்தது ஒரு காலம் ஆனா இப்போ கொடுமையிலும் கொடுமை....

இரண்டு புள்ளைகளை அரையும் குறையுமா உடுத்த விட்டு அக்கம் பக்கம் வச்சுகிட்டு நாலு கும்மாங்குத்து பாட்டு... நடுவுல்ல நாலு பைட்டு....கிடைக்கிற கேப்ல்ல எல்லாம் விரலை...உசுப்பி உலுக்கு எடுத்து பஞ்ச் டயலாக்ன்னு முக்கால் இஞ்சுக்கு மேக்கப் போட்டுக்கிட்டு கேமரா முன்னாடி ரவுசு விடுறது அமவுண்ட் கொடுத்து விசில் அடிக்கும் குஞ்சுகள் மூலம் வீதிக்கு ஒரு போஸ்ட்டர் அரங்கம் தோறும் சொந்தச் செலவில் கட் அவுட் என அராத்து வேலைகளை கொஞ்சம் கூட கூச்சமின்றி வலம் வருவது தான் இன்றைய தேதியிலே தளபதி ஆகுறதுக்கு வேண்டிய அடிப்படை தகுதியாப் போச்சு...

தளபதின்னு சொன்னா மட்டும் போதாதுன்னு அதுக்கே இன்னொரு பட்டம் சேத்துக்குறாங்க....

இளைய தளபதி...சின்னத் தளபதி...புரட்சித் தளபதி....வீரத் தளபதி....இப்படி இந்த நிமிசம் வரைக்கும் தளபதிகள் லிஸ்ட் நீண்டுகிட்டே போகுது...ஒவ்வொரு வெள்ளியும் ஒரு புதுப் பட ரிலீஸ் போது ஒரு தளபதி உருவாகிக் கொண்டே இருக்கிறார்...இந்த அதி பயங்கர தீவிரவாதத் தாக்குதலுக்கு ஒரு முடிவே இல்லாமல் போயிட்டு இருக்கு..இந்த தீவிரவாதத்தை எல்லாம் ஒழிக்க ஒரு சிறப்பு படை அமைக்கற மாதிரி பெருகி வரும் தளபதிகள் தொல்லையை ஒழிக்க எதாவது ஒரு படை அமைச்சாத் தேவலாம் போலிருக்கு...

அந்தக் காலத்துல்ல பல போர்களுக்கு படைத் திரட்டி...வியூகம் வகுத்து.. நாடு கடந்து..நகரம் கடந்து...கடல் கடந்து... வீடு துறந்து...சொந்த விருப்பு வெறுப்பு துறந்து தேச நலன் பேண..இன மானம் காக்க... போர்கள் புரிந்த அந்த மெய் தளபதிகளின் ஆன்மா...இந்த டூபாக்கூர் தளபதிகளை மன்னிப்பார்களா... வேற என்னச் சொல்ல...

3 comments:

அகில உலக வீர தளபதி ரசிகர் மன்றம் said...

இந்த பதிவு எங்கள் அண்ணன் வீர தளபதி ர்ரிதீஷ் அவர்களை நேரடியாக தாக்கி உள்ளதால் இந்த பதிவை அகில உலக ர்ரிதீஷ் ரசிகர்கள் அனைவரும் புறக்கணிக்கிறோம் ...

ஜுர்கேன் க்ருகேர்..... said...

தளபதிகளெல்லாம் நம்ம தலைவிதி.

கோபிநாத் said...

அண்ணே ரெண்டாவது டிஸ்கியை போடவேல்ல பார்த்திங்களா!!...நானே போடுறேன் ;)

ரெண்டாவது டிஸ்கி ;- இது சூப்பர் ஸ்டார் நடித்த தளபதி படத்தை பற்றியும் அல்ல ;)

பதிவு சரவெடிண்ணே...உங்களை இப்படி ஆப்பு அடிச்ச அந்த தளபதி யாருண்ணு எனக்கு மட்டும் தனியாக சொல்லுங்கள் ;)

tamil10