வணக்கம் மக்கா,
தலைப்பைப் படிச்சா எதாவ்து விளங்குதா.. நேத்து மாலை நம்ம சகா ஒருத்தன் வீக் என்டும் அதுவுமா விட்டத்தைப் பாத்துகிட்டு இருக்க இந்தா இந்தப் புக்கை ஒரு பொரட்டு பொரட்டுப் பாருன்னு சொல்லி கொடுத்த புக் டைட்டில் தான் மேலே நான் போட்டு இருக்கும் ஐந்து புள்ளி யாரோ ஒண்ணு. (FIVE POINT SOMEONE)
ஒரு இந்தியரால் எழுதப் பட்ட ஆங்கில நாவல். இந்தியாவின் தலைச்சிறந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனமாகக் கருதப்படும் ஐ.ஐ.டியில் என்னச் செய்யக்கூடாது என்ற ஒரு அடைமொழியொடு நாவல் துவங்குகிறது.
சாயங்காலம் திருவான்மியூர் பீச்சுக்கு போய் 96ல்ல ரஜினி அரசியலுக்கு வராதது சரியா தப்பான்ன்னு அலசி ஆராய்ஞ்சுட்டு வீட்டுக்கு வந்து நூடுல்ஸ் கிண்டி சாப்பிட்டுட்டு புத்தகத்தைப் பிரிக்கும் போது மணி சரியா இரவு 10.15புத்தகத்தின் அட்டையில் 270 பக்கங்களும் குதுகாலம் நிரம்பியவை என்ற வாசகம் வேறு உசுபேத்த சுவாரஸ்யமாப் புத்தகத்தைப் பிரிச்சுப் படிக்க ஆரம்பிச்சேன்.
ஐ.ஐ.டிக்குள் நுழையும் மூன்று மாணவர்கள் மற்றும் அவர்கள் நட்பின் பின்னணியில் கதை சொல்லப்படுகிறது. ஐ.ஐ.டியின் வாழ்க்கை முறை, பாடத்திட்டங்கள், பேராசிரியர்கள், வகுப்பறைகள், கேன்டீன், விடுதி என கதையாசிரியர் நம்மை கரம் பிடித்து ஐ.ஐ.டி வளாகத்திற்குள் உலாவ விடுகிறார்.
கதையில் வரும் ஹரி என்ற மாணவன் மூலமே கதை நிகழ்ச்சிகள் விவரிக்கப் படுவதாய் நாவல் செல்கிறது. ஹரி, ரேயான், அலோக் என்ற மூன்று மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட மாணவர்களின் மூலம் நானும் என் கல்லூரி வாழ்க்கையை மீண்டும் வாழ்ந்து பார்க்க வைத்தார் ஆசிரியர் என்று சொல்லலாம் போல் தோன்றுகிறது.
ரேயான் - பணக்கார வீட்டு பையன், இயல்பிலேயே தலைமைக் குணம் கொண்டவன்.
அலோக் - சாது, நடுத்தர குடும்பம். குடும்பக் கஷ்ட்டங்களுக்கு பாடப்புத்தகங்களை முழுங்கி அதன் மூலம் ஒரு தீர்வு காண கனவு காண்பவன்.
ஹரி - வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்பவன். ரேயான் போல் எதிலும் முன் நிற்க வேண்டும் என்று ஆசை அதிகம் கொண்டவன். தன்னால் அது முடியாது என்றும் நினைப்பவன்.
இவர்கள் மூவரின் நட்பு எப்படியெல்லாம் இவர்களை ஆட்டுவிக்கிறது என்று மெல்லிய நகைச்சுவை இழையோட ஆசிரியர் கதையை நகர்த்துகிறார்.ஹரியின் காதல் கிளைக் கதை, வேறு திசையில் கதையின் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.
ரேயான் மூலம் ஐ.ஐ.டியின் பாடத்திட்டங்களை நாவலாசிரியர் சாடுவதை நம்மால் பல இடங்களில் தெளிவாய் உணர முடிகிறது. மனிதனை மனிதனாய் வாழவிடாமல் அவனை ஒரு ஒரு யந்திரமாய் மாற்றி அவன் சுய கௌரவத்தைப் பறிக்கும் தற்கால கார்பரேட் உலகத் தத்துவங்களையும் நாவல் லேசாக உரசிப் பார்க்கிறது.ரேயான் ஐ.ஐ.டி, பாடத்திட்டங்கள் மனத்தளவில் மாணவனை ஊனப்படுத்துகிறது என குமுறுகிறான். மாணவனின் சுய சிந்தனைகளையும் கற்பனா சக்திகளும் ஊக்கப்படுத்துமாறு பாடத்திட்டம் அமையவில்லை என ஆதங்கப்படுகிறான். வெறும் மனப்பாடம் செய்து பாடங்களில் மார்க் வாங்கிக் குவிக்கும் போக்கு அவனை விரக்தியடைச் செய்கிறது.
அதை மாற்ற கல்லூரி வாழ்க்கையை வண்ணமயமாக மாற்ற பலப் புதிய திட்டங்கள் வகுக்கிறான். அத்திட்டங்களை நண்பர்கள் தற்காலிகமாகச் செயல்படுத்துவதும் பின்னர் கைவிடுவதும் என நாவல் போராடிக்காமல் நகர்கிறது.
முதல் செமஸ்டர் முடிவினில் (ஆமா செமஸ்டருக்கு தமிழில் என்ன?) நண்பர்கள் மூவரும் 5 புள்ளிகளில் நிற்கிறார்கள். ஐந்து புள்ளிகளுக்குச் சொந்தக்கார்கள் ஐ.ஐ.டி மொழியில் மற்ற மாணவர்களின் திறனுக்கு முன் குறைந்தவர்கள் என்ற அர்த்தப்படுபவர்க்ள். ( இதான் தாங்க தலைப்பின் விளக்கம்). இந்த முதல் சறுக்கல் நண்பர்களைப் பெரிதும் பாதிக்கிறது, பின்னர் அந்த சறுக்கலை அவர்கள் சகஜமாக எடுத்துக் கொண்டு வாழப் பயிலுகிறார்கள்.
ரேயானின் ஆராய்ச்சித் திறமை அவன் ஐந்து புள்ளி இனத்தைச் சார்ந்தவன் எனபதால் துறை தலைவரின் கவனம் மறுக்கப்படுவது,ரேயானின் சிறு வயது, தாய் தகப்பன் ஏக்கம் என ரேயானின் கிளைக் கதைகள் ஒரு பக்கம் நம் கவனம் கவர்கின்ற வண்ணம் இட்டுச் செல்லப்படுகிறது.
ஹரி துறைத் தலைவர் மகள் நேகாவோடு கொள்ளும் காமம் எட்டிப் பார்க்கும் காதல் கலகலப்பு எனறால். நேகா ரயிலில் அடிப்பட்டு இறந்த அண்ணன் மீது கொண்டிருக்கும் பாசம் ஒரு உணர்வு குவியல்.
அலோக் வீட்டு விஷயங்களான, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அப்பா, எப்போதும் கண்ணீர் வடிக்கும் பயலாஜி டீச்சர் அம்மா, கல்யாண வயதைத் தொட்டும் மாப்பிள்ளைக் கிடைக்காத அக்கா என பக்காச் சென்டிமென்ட் கலவை.
ஐ.ஐ.டி வாழ்க்கையை எப்படியாவ்து முடித்தால் போதும் என இருக்கும் நண்பர்களுக்கு ஐந்து புள்ளிகளைத் தாண்டியே ஆக வேண்டிய மறைமுகக் கட்டாயம் ஏற்படுகிறது.
ஹரிக்குத் தன் காதலும் காதலியும் கிடைக்க அதிக மார்க்குகள் தேவை.
ரேயானுக்கு தன் ஆராய்ச்சி கட்டுரைக் கவனிக்கப்பட மார்க்குகள் முக்கியமாகிறது.
ஆலோக்க்கு வேலை கிடைக்க மார்க்குகள் கட்டாயமாகிறது.
மார்க்குகளைக் குறி வைத்து அவர்கள் வகுக்கும் திட்டம் மேலும் விபரீதங்களை விளைவிக்கிறது. ஆலோக் தற்கொலைக்கே துணிகிறான்... மூவரின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் அளவுக்கு சம்பவங்கள் நடந்தேறுகின்றன. அதிலிருந்து அவர்களை மீட்க முயலும் ரேயானின் ஆதர்ச பேராசிரியர் வீராவின் முயற்சிகள் என்னவாகின்றன?
விபரீதங்களின் விளிம்பில் நின்று காதலியைக் காட்டிக்கொடுக்கும் ஹரியின் காதல் என்னவானது?
துறைத் தலைவர் செரியன் மகன் மரணம் ஒரு விபத்தா? போன்ற கேளிவிகளுக்குப் படு யாதார்த்தமாய் பதில்கள் சொல்லி நாவல் முடிகிறது.
மீண்டும் கல்லூரி போய் வந்த உணர்வு மிஞ்சியது.
கடிகாரம் பார்த்தேன் மணி 2 ஆயிருச்சு.... இழுத்துப் போர்த்திகிட்டுப் படுத்தேன்... ஒரு சில கணங்களுக்கு நாவலில் வந்த ஹரி, ரேயான், ஆலோக், நேகா, புரொபசர் வீரா, புரோபசர் செரியன், சசி தாபா என நாவலின் பாத்திரங்களின் ஞாபகம் மீண்டும் மீண்டும் என் எண்ணங்களைச் சுற்றி வந்துக் கொண்டிருந்தன..
PS: Five Point Someone is a novel wriiten by Chetan Bhagat.
15 comments:
5 புள்ளி னு தலைப்பை பார்த்தவுடன் ஏதோ புள்ளி ராஜா மேட்டரு போலனு வந்தேன். :(
ஆங்கில நாவல் எல்லாம் நீங்க படிப்பீங்களா, சொல்லவே இல்ல. பெரிய தில்லாங்கடி போங்க நீங்க
ஆத்தாடி, நீங்க இங்கிலிபிசு பொஸ்தகமெல்லாம் படிப்பீங்களா....!!! :-)
கொஞ்சம் பழைய பொஸ்த்தகம் சாமி இது. இதுக்கு பின்னாடி அவரே எழுதிய கால் சென்டரில் ஒரு ராத்திரி பொஸ்த்துவத்தை பத்தி எழுதி இருக்கலாம் இல்லே, தலைப்பு கில்மாவா இருந்து இருக்கும்.
நம்ம விமர்சனத்தையும் அப்படியே பார்த்துருங்க
அட பாவி தேவு.. அதுக்குள்ள படிச்சி முடிச்சிட்டியா??
நான் இன்னும் 15 பக்கத்தயே தாண்டல..
எனிவே.. கத நல்லா இருக்கில்ல... என் காசு வீனா போகல..குட் குட் :-)
நல்ல நாவல் அது தேவ்.. 5.someone-ஐ ஒப்பிடும் போது one night@ call centerஇல் கொஞ்சம் விறுவிறுப்பு, உண்மை எல்லாமே குறைவுதான் என்பது என் எண்ணம்.
தங்கையின் நேர்முகத் தேர்வுக்காக புனே போனபோது இந்த "கால் செண்டர்" புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டு அதே சூட்டில் அப்படியே நடந்து போய் 5.சம்ஒன்னையும் வாங்கி காத்திருந்த நேரத்திலேயே வந்து படித்து முடித்தேன்..
செமெஸ்டர் - அரையாண்டு ?
//5 புள்ளி னு தலைப்பை பார்த்தவுடன் ஏதோ புள்ளி ராஜா மேட்டரு போலனு வந்தேன். :(//
ஆகா 5 புள்ளின்னு சொன்னதும் கையிலே கோலப்பொடி டப்பா எடுத்துகிட்டு ரங்கோலி போடலாம்ன்னு கிளம்பிட்டியாக்கும்.
//ஆங்கில நாவல் எல்லாம் நீங்க படிப்பீங்களா, சொல்லவே இல்ல. பெரிய தில்லாங்கடி போங்க நீங்க //
சிவா இது நம்மூர் ஆள் பேர் சேத்தன் பகத் எழுதுன்ன நாவல்.. ஒரு தடவை வாங்கி படி,,, நம்ம இஸ்கோல்ல்ல படிச்ச இங்கிலீஸ் லெசன் மாதிரி லாங்க்வேஜ்ல்ல தான் இருக்கும்.
ராம்.. இனியத் தமிழில் இப்படி புத்தகங்கள் வந்தால் அதையும் படிக்கலாம்.. ஆனா அப்படி ஒண்ணும் புரியற மாதிரி வரக் காணும்..( எனக்குத் தெரியல்லயோ என்னமோ)
இளா உங்கள் விமர்சனம் படித்தேன். ONE NIGHT AT CALL CENTER இப்போது தான் திறந்திருக்கிறேன். தீபாவளி விடுமுறையில் படித்து முடிப்பேன் என நினைக்கிறேன்.
//எனிவே.. கத நல்லா இருக்கில்ல... என் காசு வீனா போகல..குட் குட் :-) //
:))
வாங்க பொன் ஸ் , செமஸ்டர் அரையாண்டா அரையாண்டு என்றால் HALFYEARLY என்று சொல்லி பழகி விட்டாயிற்று.சொல் ஒரு சொல் அன்பர்கள் உதவியைத் தான் கோர வேண்டுமோ?
ONE NIGHT @ CALLCENTER இனி தான் படிக்கணும். பொதுவாக முதல் புத்தகம் அளவிற்கு இரண்டாவ்து புத்தகம் இல்லை என்பதே மக்கள் கருத்து. படித்து விட்டு நானும் சொல்லுகிறேன்.
தீபாவளி வாழ்த்துக்கள்
One night @ the call center பல நாட்களுக்கு முன்னால் படித்தேன். விறுவிறுப்பாக இருந்தது. ஆனால் பெரிதாக கவரவில்லை... அதனால் இந்த புத்தகத்தை படிக்க தவறிவிட்டேன்..
நீங்க எழுதியிருப்பதை பார்த்தால் தப்பான முடிவெடுத்துட்டேனு தோணுது. கண்டிப்பாக படிக்க முயல்கிறேன்...
விமர்சனம் நல்லாருக்கு தேவ். புத்தகத்தை வாங்கி படிக்கிற ஆவலைத் தூண்டி விட்டுருக்கு உங்க விமர்சனம்.
//முதல் செமஸ்டர் முடிவினில் (ஆமா செமஸ்டருக்கு தமிழில் என்ன?) நண்பர்கள் மூவரும் 5 புள்ளிகளில் நிற்கிறார்கள். ஐந்து புள்ளிகளுக்குச் சொந்தக்கார்கள் ஐ.ஐ.டி மொழியில் மற்ற மாணவர்களின் திறனுக்கு முன் குறைந்தவர்கள் என்ற அர்த்தப்படுபவர்க்ள். ( இதான் தாங்க தலைப்பின் விளக்கம்). //
விளக்கம் அருமை.
//நீங்க எழுதியிருப்பதை பார்த்தால் தப்பான முடிவெடுத்துட்டேனு தோணுது. கண்டிப்பாக படிக்க முயல்கிறேன்..//.
வெட்டி இந்தப் புத்தகம் One night @ the call center விட நன்றாக உள்ளது என்றே நான் நினைக்கிறேன். அதனால் நீங்க தாராளமா படிக்கலாம்.
//விமர்சனம் நல்லாருக்கு தேவ். புத்தகத்தை வாங்கி படிக்கிற ஆவலைத் தூண்டி விட்டுருக்கு உங்க விமர்சனம்.//
நன்றி கைப்புள்ள, உங்க கல்லூரியின் கதை ஆச்சே இந்தப் புத்தகம். படித்தப் பின் என்ன நினைக்கிறீர்கள்ன்னு சொல்லுங்க..
Post a Comment