Sunday, April 01, 2007

SUNDAY WITH பாபா - 2

SUNDAY WITH பாபா - 1

மீண்டும் வருக.... இந்தாளு இருக்காரே.. படிக்கறதுக்குன்னேப் பொறந்தவர்...பொதுவா அவங்க அவங்க பதிவை எப்படி அடுத்தவங்களைப் படிக்க வைக்கிறது.. சுட்டியை இலவச வினியோகம் பண்ணுறதுன்னு யோசிப்பாங்க... நம்ம ஆளு ஊர்ல்ல யார் பதிவுப் போட்டாலும் பதிவுல்ல விஷ்யமிருந்தா ஒடனே ஊரைக் கூட்டி சுட்டி தந்து சந்தோசப்பட்டுக்குவார்...நம்ம ஆளை வாயைத் திறக்க வச்சு விவரத்தை எல்லாம் முடிஞ்ச வரைக்கும் புடுங்கியிருக்கோம் இல்ல... ஸ்டார் ரிப்போர்ட்டர் எக்ஸ்க்ளுஸ்விவ்.. உங்களுக்காக நம்ம பாஸ்டன் பாலாவுடன் நம்ம SUNDAY தொடருது


பதிவு உலகில் வியாபாரம் சாத்தியமா? துட்டுப் பாக்க வழி இருக்கா?நம்ம பிரிண்ட் மீடியா அளவுக்கு நெட் மீடியா வளர சாத்தியங்கள் இருக்கா?

ஆங்கிலப் பதிவுகளிலேயே இன்னும் காசு பெரிய அளவில் புரள்வதில்லை.
பண்டமாற்று முறையில் சில்லறை விற்பனை; காமம் தொடர்பான வியாபாரம்; தேர்ந்தெடுத்த துறையில் நற்பெயர் ஈட்டி, அந்தப் புகழைக் கொண்டு தொழில் முறைப் பேச்சு/புத்தகம்/குந்துரத்தல் என்று வேறு வழிகளில் சம்பாதிப்பது போன்றவை சாத்தியம்.

ரவியின் Top 10 உலக மொழிகள்-இலிருந்து: "திரைப்படம், இலக்கியம், ஆன்மிகம், சமையல், சோதிடம் அப்படின்னு ஒரு மிகச்சிறிய வட்டத்துக்குள்ள தான் தமிழ் இருக்கு."

இப்போதைக்கு தமிழ் சஞ்சிகைகள் மேற்சொன்னவற்றுள் ஏதோவொன்றை வைத்து பணம் புரள வைக்கிறது. இணைய சஞ்சிகைகளுக்கும் ஆன்மீகம், ஜோதிடம் போன்றவை நிச்சயம் லாபம் தரும் தொழில். இவற்றில் இலக்கியம் என்பது இணையத்தில் சுஜாதா, கிரேசி மோகன், எஸ்வி சேகர் போன்றவர்களோடு நின்று விடும்.

ஒரு பதிவின் வெற்றிக்குப் பெரிதும் உதவுது கருத்தா? இல்லை நல்ல மார்க்கெட்டிங்க்கா?

மேட்டர் முக்கியமில்லை. மார்க்கெடிங் மட்டுமே போதும். மார்க்கெடிங் என்றால்...
எப்போது எழுதுகிறீர்கள், எவருக்கு சுட்டி கொடுக்கிறீர்கள், உங்களின் பழக்கப்பட்ட நிலையில் இருந்து எவ்வளவு தூரம் விலகி அதிர்ச்சி தரும் விகிதத்தில் வழங்குகிறீர்கள் போன்றவை சந்தைக்காக எழுதுவதன் குணாம்சங்கள்.

பதிவின் வெற்றிக்கு நேர்மை முக்கியம். கொண்ட கருத்தில் ஈடுபாடு அவசியம். உணர்ச்சிகரமாகவே எழுதி வருபவர், அவ்வப்போது நடையை வித்தியாசப்படுத்தி நக்கலாக எழுதும் மாறுபாடு என்னும் மார்க்கெடிங்குக்கும் பங்கு உண்டு.
நான் சினிமாப் பைத்தியம். வெகுசன சினிமாப் பைத்தியம்.
'அன்பே சிவம்' நல்ல (கருத்துள்ள) படம். போதிய அளவு மார்க்கெடிங்கும் இருந்தது. தேவையான விகிதாசாரத்தில் மாதவன், கிரண், சண்டை எல்லாம் தூவி இருந்தது. இருந்தாலும், 'போக்கிரி' பெற்ற வெற்றியை அடைய முடியவில்லை.

கிட்டத்தட்ட அதே மாதிரி தரம், குணம், சுவை உள்ள ஜெகத்தையும் பெயரிலியையும் எடுத்துக் கொள்வோம். இருவருமே பெரிதாக சந்தைப்படுத்தல் எதுவும் செய்வதில்லை. அதே தமிழ்மணம், அதே தேன்கூடு. இருந்தாலும் ஜெகத்தை விட பெயரிலி பதிவுகள் அதிக கவனம் பெறும். பல ஆண்டுகளாக எழுதுவதால் உள்ளர்த்தம் கிடைக்காதா என்று நோண்டும் சுபாவம், தமிழ்மணத்தின் நிர்வாகிகளில் ஒருவர் என்பதால் இருக்கும் விஷய்த்தை விட்டு இல்லாததைத் தேடும் மனோலயம் எல்லாம்தான் பதிவின் வெற்றிக்கு பெரிதும் உதவுவது. இது போன்ற சுவாரசியங்கள் இல்லாவிட்டால், அதே நண்பர் வட்டம், அதே பின்னூட்ட ஃபிகர்கள் என்றென்றும் தொடரும்.

.அலைஞனின் அலைகள்: குவியம்.: இராவணன்வெட்டு பின்னூட்டத்தில் இருந்து: "மொக்கை, மொள்ளை, கொள்ளை, கும்மி பதிவெல்லாம் வருகுது. நாமும் சும்மா பின்னூட்டங்களைக் கணக்குப் பாத்துப் பாத்து, தமிழ்மணம் வலதுமேல்மூலைத்தலைப்பைச் சுத்தி நிக்கிற மாதிரி கொஞ்சம் கொஞ்சமா இழுத்தடிச்சால், கவுண்டு எப்பிடி எகிறிது எண்டு பாக்க விளையாடினதுதான் உந்தப்பின்னூட்டமும் பேனூர்வலமும். சும்மா சொல்லக்கூடாது எகிறெண்ட எகிறு எகிறித்தான் இருக்குது. மினக்கெட்டு மினக்கெட்டு ஆறேழு மணித்தியாலம் இருந்து போட்ட பதிவுகள்கூட இருபது பேரைத் தாண்டாது போயிருக்கேக்க, இப்பிடி உயரத்திலையிருந்து உருட்டிவிட்ட குண்டு போல கையில வந்ததும் வராததுமா அடிச்ச எழுத்துக்கழிசலெல்லாம் நானூறைப் பிடிக்க நிக்கிறத எண்ணிச் சிரிக்கிறதோ அழுகிறதோ? ஷில்பா ஷெட்டி சங்கதிதான் எனக்கும் நடந்திருக்குது. There is nothing called BAD PUBLICITY."

உங்க கேள்விக்கே வருவோம். பதிவின் வெற்றி என்று எதை நினைக்கிறீர்கள்? சொந்த அனுபவத்தினால் கற்றதும் பெற்றதும் பலரால் படிக்கப் பெறுவதா? பார்க்கப் பெறுவதா? பதியம் போட்டு அசை போடப் பெறுவதா?

பலரால் பார்க்கப் பெற்றால், அவர்களுள் பெரும்பானவர்களால் படிக்கப் பெற்று, அவர்களுள் ஒரு சிலர் மட்டுமாவது பதியம் போட்டு பழுக்கக் காயப்போட்டுக் கொள்வார்கள்.


இலக்கிய ரீதியாப் பதிவுலகம் எதாவது தாக்கம் ஏற்படுத்தியிருக்கா? அதற்கு வாய்ப்புக்கள் இருக்கா? இலக்கியவாதிகள் பதிவுலகம் பக்கம் வராமல் இருப்பதற்கு என்னக் காரணம்? IS IT LACK OF TECHNICAL KNOWLEDGE OR LACK OF RESPECT FOR FELLOW BLOGGERS ABILITIES?

எல்லாமே Logical Fallacy: Loaded Question என்றாலும் இதற்கும் என்னுடைய ரெண்டணாவை வீசிடறேன்.

அ) இலக்கிய ரீதியாகப் பதிவுலகம் எதாவது தாக்கம் ஏற்படுத்தியிருக்கா?

பதிவுலகில் மட்டுமே குப்பை கொட்டிக் கொண்டு, 'இல்லை' என்று சொன்னால், நான் செய்வது எல்லாம் குப்பை என்றாகி விடும். அதற்காக பதிலை 'ஆமாம்' என்றால், கபடியில் இந்தியா தங்கப் பதக்கம் பெறுவது போல் முதுகில் தட்டிக் கொள்வது எனலாம்.

தாக்கம் என்றால் என்ன? BLANK NOISE PROJECT போன்ற செயல்கள் இலக்கிய ரீதியாக இல்லாமல் செயல்ரீதியாக செய்து காட்டியிருக்கிறது. இலக்கியத்தின் ஆய பயனாக ரசிகரை மகிழ்விப்பது, உற்சாகம் ஊட்டி வாழ்வை மாற்றியமைப்பது எனலாம். பதிவுலகம் அதற்கு மேலும் சிந்தனைகளை வளப்படுத்தி இலக்கியத்தின் பலாபலன்களை நிறைவேற்றுகிறது.

ஆ) இலக்கியவாதிகள் பதிவுலகம் பக்கம் ஏன் வரவில்லை?

மாலன், இரா முருகன் (தினமணிக் கதிர்), சாரு நிவேதிதா (தப்புத் தாளங்கள்), சுஜாதா (க.பெ., ஸ்ரீரங்கத்து எஸ்.ஆர்) போன்றவை பதிவுகள்தான். அவர்களுக்கு தட்டினால் துட்டு. நமக்கு தட்டினால் ஹிட்டு.

இ) ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன் போன்ற இலக்கியவாதிகள் வராமல் இருப்பதற்கு பிற பதிவரின் திறமைகளை மதிக்காதது காரணமா?

நேற்று வரை கர்ம சிரத்தையாய் அனுதினம் கிறுக்கும் வலைப்பதிபவர், நாளை 'விடைபெறுகிறேன்' என்று ஓடிப் போகிறார். இந்த மாதிரி பாதியில் கடையை மூடுவதற்கு - சக பதிவர்களின் பின்னூட்ட சிக்கல்; தமிழ்ப்பதிவுகளின் ஜனநாயக அரசியல்; 'கடைவிரித்தேன், கொள்வாரில்லை' புலம்பல்; அலுவல் வேலை கெடுபிடி; என்று பல காரணங்கள். They have better things to worry about.

நம்மப் பதிவர்கள் விருப்பப்பட்டு பதிவு படிக்கிறாங்களா வழி இல்லாமப் பதிவு படிக்கிறாங்களா... நீங்க என்னச் சொல்லுறீங்க?

நான் விருப்பப்பட்டுத்தான் பதிவுகளை படிக்கிறேன். என்னுடைய ரசனைக்கு உகந்த, நான் அறிய வேண்டிய விஷயங்களைத் தேடிப் பிடித்து மேய்கிறேன்.

மீண்டும் metaphor-க்கு மன்னிக்கவும். காலை எழுந்ததும் தினசரியை ஏன் புரட்டுகிறேன்?
ராத்திரி ஒன்பது மணிக்கு மேலே ராக்ஸ்பரி (சென்னை தாதாக்கள் போல் பாஸ்டன் வஸ்தாதுகள் உலவும் இடம்) அருகே வீட்டு வாசலில் நின்றவர் கொலை என்பார்கள். ஓ... சரி! அந்தப் பக்கம் வீடு பார்க்காமல், வேறு எங்காவது ஜாகை பார்ப்போம் என்று முடிவெடுப்பேன். சற்றுமுன் அடுத்தவருக்கு நிகழ்வது, எனக்கு நிகழ்ந்து விடக்கூடாது என்னும் தற்காப்பு; பயம்.

கொஞ்ச நாள் போன பிறகு, எல்லா செய்தித் தலைப்புகளையும் மேயப் பொறுமையில்லை. இரவு பத்து மணிக்கு அரை மணி நேர செய்தி வாசிப்பில், எல்லா கொலை, வன்முறைகளையும் படம் பிடித்து ஒளிபரப்புகிறார்கள். பார்க்க ஆரம்பிக்கிறேன். செய்தித்தாள் நிறுத்தி விட்டாயிற்று.
பத்து மணிக்கு வீட்டுக்கு வர முடியாத ராப்பிசாசு வேலை. பக்கத்துவீட்டுக்காரியின் வலைப்பதிவில் செய்திகளைக் கோர்த்துக் கொடுக்கிறாள். என்ன, எங்கே, எப்படி நடந்தது என்பதை சுருக் தைக்கிறாள். விருப்பமான பதிவாக இல்லாவிட்டாலும், வேறு வழி இல்லாமல் படிக்க வேண்டிய தேவையான பதிவாக அமைகிறது.

மக்களுக்கு நேரம் குறைச்சல். அதில் வழி இல்லாமல் படிப்பது என்பதற்கான பேச்சே இல்லை.

பாஸ்டன் பாலா.. எதாவது செய்யணும் என்ற ஆர்வம் உடையவர் ஆனால் எதுவும் செய்யாமல் மெளனமாய் வெறும் வேடிக்கையோடு நிற்பவர்ன்னாச் சொன்னாக் கோபப்படுவீங்களா?

அடுத்த கேள்வியைப் பார்க்கவும்.

நீங்க ஒரு நல்ல விமர்சகர்.. தமிழ்மணம்..அதில் உலாவும் பதிவர்கள்.. தமிழ் மண நிர்வாகம் ஒரு மினி விம்ர்சனம் கொடுங்களேன்?

முந்தின கேள்வியைப் படிக்கவும் என்பதுதான் பதில்.
நிர்வாகத்தில் இல்லாதவர்களால் நிர்வாகிகளின் மண்டையிடி என்ன என்பது தெரியாது. வெளியாள் சுளுவாக விமர்சித்து சென்று விடலாம். தமிழ்மணம் குறித்து போதும் போதுமென்கிற அளவு, ஏற்கனவே அவ்வப்போது எழுதி மாய்ந்தாயிற்று.

தற்போதைய கண்ணீரும் கம்பலையுமான டாபிக் ஆன பூங்கா குறித்து, முன்பு Desipundit plans to close shop என்று தேசிபண்டிட் அலசல் கிட்டத்தட்ட பொருந்தும்.

கடைசியா.. சென்னைக் கச்சேரிக்காக.... ஒரு மெக்ஸிக்கன் ஜோக் ப்ளீஸ்...

ஏற்கனவே சொல்லியாச்சு... ஈ-தமிழ்: கேள்வியும் நானே... பதிலும் நானே!

நன்றி பாஸ்டன் பாலா

8 comments:

அனுசுயா said...

இந்த நட்சத்திர வாரம் நல்ல வித்தியாசமாயிருந்தது தேவ். ரிப்போர்ட்டிங்குல கலக்கீட்டீங்க முக்கியமா அடுத்தவங்களோட கருத்தை தெளிவா விளக்கமா போட்டு இருக்கீங்க.

அடுத்ததா பாபாவோட பேட்டி அருமை. நல்ல கேள்விகள். வலை பதிவு வெற்றிகரமா அமைய மார்க்கட்டிங் தேவையா? இல்ல மேட்டர் முக்கியமாங்கற கேள்விக்கு பாபாவோட பதில்
//எப்போது எழுதுகிறீர்கள், எவருக்கு சுட்டி கொடுக்கிறீர்கள், உங்களின் பழக்கப்பட்ட நிலையில் இருந்து எவ்வளவு தூரம் விலகி அதிர்ச்சி தரும் விகிதத்தில் வழங்குகிறீர்கள் போன்றவை சந்தைக்காக எழுதுவதன் குணாம்சங்கள். //
நல்ல பதில். அதே மாதிரி வெறும் மார்க்கட்டிங் மட்டும் வெச்சு பதிவுலகில நிலைக்க முடியாது. விசயம் கொஞ்சமாவது இருந்தாதான் அடுத்த முறை தேடிப்போய் படிக்க தோணும். பல பதிவுகள் 100 மேல கமெண்ட் வாங்குது ஆனா விசயம் இல்லாததால அடுத்த தடவை போக மனசு வர மாட்டேங்குது.
இந்த வார நட்சத்திர பதிவு நல்லா ஜொலித்தது வாழத்துக்கள் :)

Ayyanar Viswanath said...

நிறைய பதிவுகள் மட்டுமின்றி நிறைவானதாகவும் இருந்தது தேவ்..
வித்தியாசமான அனுகுமுறை மட்டுமின்றி
கூரிய விமர்சனங்களையும் முன் வைத்தது உங்களின் இந்த வாரம்..எழுதுனது போதும் நல்லா ஓய்வெடுங்க ..:)( தினமும் ரெண்டரை பதிவு கை வலிக்கலியாப்பா ?)

Boston Bala said...

என் பதிவுகளை எவராவது படிக்கிறார்களா என்னும் சந்தேகம் எனக்குண்டு. ஓரளவு தொடர்ந்து படித்ததனால்தான் இப்படி பொருத்தமான கேள்விகளை கேட்க முடிந்திருக்கிறது. அதற்காக மனமார்ந்த வணக்கங்கள்.

சன் டிவியில் நடிகைகளை சந்திக்கும் போது 'உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?', 'உங்களுடையது காதல் கல்யாணமாக அமையுமா' என்று வார்ப்புரு கேள்விகளைக் கேட்டு பழக்கப்பட்டவனுக்கு, 'குடைக்குள் மழை' பார்த்திபனை ருத்ரன் ஆராயும் அளவிற்கு அளந்தாராய்ந்து, வினாத் தொடுத்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

நட்சத்திர வாரத்தில் தன் பதிவுக்கு மட்டும் தமிழ்மணத்தின் சூரிய ஒளியை எடுத்துக் கொள்ளாமல், எனக்கும் என் எண்ணங்களுக்கும் இடம் கொடுத்ததற்காக ஆச்சரியமான சந்தோஷங்கள் :)

Santhosh said...

கேள்விகளும் சூப்பர் பாபா சொல்லி இருக்கிற மாதிரி அவருடைய பதிவுகளை நன்றாக படித்து அப்புறம் கேள்விகளை சரியா கேட்டு இருக்க தேவு. பாபாவும் சளைக்காம பதில் சொல்லி இருக்காரு, அப்படியே நான் சொன்ன மாதிரி கழுவுற மீனில் நழுவுற மீனா இருக்கீங்க :))..முக்கியமா அந்த அடுத்த கேள்வியை பார்க்கவும் முந்தைய கேள்வியை பார்க்கவும் :)).

-/சுடலை மாடன்/- said...

கேள்விகளும், பதில்களும் நல்லதொரு நேர்காணலைப் படித்த அனுபவத்தைத் தந்தது.

நன்றி - சொ. சங்கரபாண்டி

G.Ragavan said...

ஆளுக்கேத்த கேள்வி. கேள்விக்கேத்த பதில். பதிலுக்கேத்த பதிவு. பதிவுக்கேத்த பின்னூட்டங்கள். :-) பாபாவும் சளைக்கலை.

அத்தோடு பாபாவின் கருத்தோடு நானும் ஒத்துப் போகிறேன். நட்சத்திர வாரத்தில் எல்லாரும் தங்கள் பதிவுகளில் மின்னுவார்கள். ஆனால் அடுத்தவர் பதிவுகளுக்கும் வெளிச்சம் வாங்கித் தந்திருக்கிறார் தேவ். நன்றி தேவ்.

கேள்வி கேட்பது உண்மையிலேயே எளிதன்று. யாரிடம் எதைக் கேட்க வேண்டும் என்று தெரிந்து கேட்டிருக்கின்றீர்கள். என்னுடைய பாராட்டுகள்.

சேதுக்கரசி said...

//என் பதிவுகளை எவராவது படிக்கிறார்களா என்னும் சந்தேகம் எனக்குண்டு.//

என்ன பாபா இப்படிக் கேட்டுட்டீங்க.. ஆனா உங்க பதிவை அப்பப்ப படிக்கிறவங்களுக்கும் புதுசா படிக்கிறவங்களுக்கும் ஏதாவது புரியுமான்னு கேளுங்க.. அது கேள்வி. ஹிஹி. எல்லாம் அனுபவந்தேன். முதல்ல உங்க பதிவுப் பக்கம் வரும்போது கொஞ்சம் புரிஞ்சும் புரியாமலுமே இருக்கும். ஏன்னா நீங்க சொந்தமா உப்புமா கிண்டாம, இதோ இங்கே இருந்து கொஞ்சம், அதைப் பத்தி கொஞ்சம், வேற எதையோ பத்தி கொஞ்சம் கொஞ்சம், இன்னொருத்தர் பதிவு பத்தி கொஞ்சம், அப்புறம் அமெரிக்காவில் நான் இருந்தாலும் எனக்குப் புரியாத அமெரிக்கன் usage-ல ஒரு பஞ்ச் லைன், இப்படி கொத்துபரோட்டாவா போடுவீங்க. சரிதானே? ;-) அதையும் புரிஞ்சுக்க முயற்சி பண்ணியிருக்கோம்ல...

துளசி கோபால் said...

பதிவு வீக் எண்டிலே வந்ததாலே 'சரியான கவனிப்பு' இல்லாமப் போச்சோன்னு
ஒரு எண்ணம் முந்தி எனக்கு இருந்துச்சு.

இப்ப?

இல்லை:-))))

tamil10