Wednesday, May 13, 2009

எம்.ஜி.ஆர், என்.டி.ஆர்,விஜயகாந்த் மற்றும் சீரஞ்சீவி

நடிகர்கள் அரசியலுக்கு வருவதும் ஆட்சியை அசாத்தியமாகப் பிடிப்பதும் 70 களில் தென்னிந்தியாவில் மிகவும் எளிதாக இருந்த விஷயம்..குறிப்பாக தமிழகமும், ஆந்திரமும் சினிமா மோகத்தில் உச்சத்தில் இருந்த காலம் அது....தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆரும்...ஆந்திரத்தில் என்.டி.ஆரும் நிகழ்த்திய அந்த அரசியல் சாதனைகள் இன்றளவும் கோலிவுட்டிலும் தொலிவுட்டிலும் மேக்கப் போடும் பச்சா நடிகர்களுக்கு கூட ஒரு லட்சியாமாக அமைந்து பஞ்ச் டயலாக் மட்டுமே பேசி கோட்டையே எட்டிப் பிடிக்கலாம் என மனப்பால் குடிப்பது நிகழ்கால நிதர்சனம்..

அரசியலில் வென்ற நடிகர்கள் பட்டியலை விட தோற்றவர்கள் பட்டியலே மிகவும் நீளம்....திரைப்படங்கள் அந்த சமூகத்தின் பிரதிபலிப்பாக மக்கள் உணர்வுகளை உச்சரிப்பதாக அமைந்த காலக்கட்டங்களில் கதாநாயகர்கள் தலைவர்களாக உருவாக்கப்பட்டார்கள்...உருவானப் பின் தலைவர்களாக தங்களைத் தக்க வைத்துக் கொண்டார்கள்..எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெயலலிதா என அரிதாரம் பூசி பின் அரியணை ஏறிய அனைவருக்கும் இது பொருந்தும்

பின்னாளில் சினிமா வியாபாரம் மட்டுமே பிரதானம் என மாற்றம் கண்ட் பின் வந்த திரைக் கதாநாயகர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமிருந்தாலும் அதை ஒரு அரசியல் சக்தியாக மாற்றுவது லேசுப்பட்ட காரியாமாக இல்லை... இந்தியாவிலே மிக அதிக அளவில் ரசிகர்களைக் கொண்ட ரஜினிகாந்த் கூட ஒரு கட்டத்தில் அரசியலோடு நெருங்கி வந்து பின் ஒதுங்கி போய்விட்டார்...

காலம் காலமாக அரசியல் களம் கண்டு உரம் பெற்ற கட்சிகள் இன்று தேர்ந்த கார்பரேட் நிறுவனங்கள் போல திறம்பட கிளை பரப்பி நிறுவகிக்கப் படுவதும்.. புதிதாக எதாவது ஒரு கட்சி களம் கண்டால் முளையிலே அதைக் கிள்ளி எறிய அவை பயன்படுத்தும் அஸ்திரங்களும் இன்றைய சூழலில் புதிய அரசியல் கட்சிகள் செல்வாக்கு பெறுவதை பெருமளவில் தடுத்து விடுகின்றன..

கிட்டத்தட்ட எல்லா பெரிய கட்சிகளுக்கும் மீடியா பலம் அதிக அளவில் இருக்கிறது...சினிமா என்னும் மீடியா மூலம் வெளிச்சம் கண்டு கோட்டை கனவுகள் காணும் நடிகர்களை ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தவைகளாக இந்தக் கட்சி மீடியாக்கள் உள்ளன...கட்சிகளின் முக்கிய புள்ளிகளே படத் தயாரிப்பாளர்களாக இருப்பதால் நடிகர்களை ஒரளவுக்கு கடிவாளம் போட்டே வைக்க அவர்களால் முடிகிறது

நடிகர்களாக ஜெயிக்கவே பலத்தரப்பட்ட மக்களின் ஆதரவை ஒரு நடிகன் பெற வேண்டியுள்ளது..அப்படி வென்றாலும் தற்காலத்தில் அதைத் தக்க வைக்க பெரிதும் போராட வேண்டியுள்ளது...முன் காலத்தில் ரசிகர் மன்றங்கள் மூலம் லோக்கல் வெளிச்சம் காண துடித்த பல இளந்தாரிகளை இன்று பல ஜாதிக் கட்சிகள் வளைத்துப் பிடித்து உள்ளன...நடிகனின் பின் பட ரிலீஸ்க்கு மட்டும் போகும் இந்த இளைஞர் கூட்டம் நிச்சயம் எதாவது ஒரு ஜாதிச் சங்கத்திலோ ஒரு அரசியல் கட்சியில் இளைஞரணியிலோ இருக்கிறார்கள்... மன்றங்கள் பணம் செலவழிக்கும் இடங்களாகவும் மற்றவை ஒரளவுக்கு வருமானம் கிடைக்கும் இடமாகவும் உள்ளன. அன்று எம்.ஜி.ஆர் ..என்.டி.ஆருக்கு கிடைத்த கண் மூடித் தனமான பக்தர்கள் இன்றைய விஜயகாந்துக்கும் சீரஞ்சிவிக்கும் இல்லை...

எம்.ஜி.ஆரை,என்.டி.ஆரை வெல்ல வைக்க வேண்டும் என அவர்களுக்காக உடல் பொருள் ஆவியை அர்பணித்து உழைக்க ஒரு பெரும் கூட்டம் தயாராக இருந்தது...அந்தக் கூட்டத்தை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வேலை வாங்கும் திறன் அந்த தலைவர்களுக்கு இருந்தது..கட்சி என்பது தங்கள் சினிமாக் கவர்ச்சியைத் தாண்டி பல விஷ்யங்களால் கட்டப்பட்டது என்ற உண்மையை உணர்ந்தவர்கள் அவர்கள்...சினிமாக் கவர்ச்சியை ஒரு பிரதான ஆயுதமாக பயன்படுத்தி கட்சியின் அடித்தளத்தை மாநிலமெங்கும் பலப்படுத்தினார்கள்..நம்பிக்கையான தளகர்த்தரகளை ஏற்படுத்தி களம் கண்டார்கள்..எதிரணியின் பலம் பலவீனம் கண்டு அதற்கு தக்க தங்களை மாற்றி கொண்டு போராடி வென்றார்கள்..

அதி முக்கியமாக தங்களுக்கு எனத் தனி அடையாளம் இருந்தது அவர்களிடம்..அந்த அடையாளததை பெருக்கி பலன் கண்டார்கள்..

இன்று களம் காணும் முக்கிய நடிகர்கள் விஜயகாந்த்..சீரஞ்சிவி...சினிமா வாழ்க்கையின் அந்தியக் காலத்தில் அரசியலுக்கு வந்தவர்கள்...திரை வாழ்க்கையில் முடிவுரை எழுதும் தருணத்தில் அரசியலில் அரிச்சுவடி படிக்க வந்திருக்கிறார்கள்..அவர்களோடு இருப்பது பெரும்பாலும் அவர் தம் சொந்தக் குடும்பத்தினர்...முக்கிய தளகர்த்தர்கள் எனப் பெரிதாக அவர்களால் யாரும் உருவாக்கப்படவில்லை...

போருக்கு போக ஆயுதம் இருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள்...ஆயுதத்தை சமயோசிதமாக இயக்கத் தெரிந்தவ்ர்களோ தெரிந்திருக்க வேண்டும் என்பதோ அவர்கள் கருத்திலேயே இல்லை..வேர்களை ஆழமாகப் பதிக்காமல் வெறும் கிளைகளைப் பரப்பி கவர்ச்சிப் பந்தல் போடும் வியாபாரிகளாகவே இவர்கள் உள்ளார்கள்.. அரசியலில் எந்தவொரு ஆசானிடமும் நேராகப் பாடம் படித்து அறியாதவர்கள்...போஸ்ட்ட்ர்களில் மட்டும் பெருந்தலைவர்களின் படம் போட்டு வெத்து சவுடால் விடுபவர்கள்...அரசியல் அடிப்படை தெளிவு பெற நேரம் கூட ஒதுக்க முடியாதவர்கள்..அரசியலில் பால பாடம் கூடப் படிக்காமல் நேராக தேர்வு வந்தால் கூட பரவாயில்லை பட்டமளிப்பு விழாவுக்குச் செல்ல்த் துடிப்பவர்கள்


அரசியலில் செல்வாக்கு எவ்வளவு முக்கியமோ அதற்கும் அதிகமாய் கட்டமைப்பும் முக்கியம்.. திறமையாய் களம் கண்டு சாதிக்கக் கூடிய தளகர்த்தர்கள் முக்கியம்... இவர்களோடு அதிகமாக இருப்பது...இவர் தம் சொந்தக் குடும்பத்தினரே...


இவர்களோடு இருக்கும் ரசிகர் பட்டாளம் வெற்றி கொண்டாட்டங்களில் பங்கு பெற மட்டுமே லாயக்கு ஆனவர்கள்... வெற்றிக்கு உழைக்க தயார் ஆனவர்களா என்பது மிகப் பெரிய கேள்வி குறி?

ரசிகர்கள் பலம் திரையரங்குகளில் வேண்டுமானால் வசூலை அள்ள போதுமானதாக இருக்கும்...அரசியல் தேர்தல் என வரும் போது போராட்டம்...கட்டமைப்பு... திடமான நடத்தை...அசாதரண வேகம்... அசாத்திய விவேகம்... இவை எல்லாம் முக்கியம்... இது இல்லாத பட்சத்தில்...அரசியலில் வென்ற நடிகர்கள் அல்ல,,,,வெல்ல முடியாதவர்களின் பட்டியலில் தான் இவர்கள் பெயரும் இடம் பெறும்...

தற்சமயத்தில் இவர்கள் செய்ய வேண்டியது சினிமாவுக்கும் யதார்த்தக்கும் உள்ள இடைவெளியை புரிந்து கொள்வது.... முடிந்த வரை அந்த இடைவெளியை சீர் செய்து தங்கள் அடுத்த கட்டப் பயணத்துக்கு தயார் ஆவது... அதைச் செய்ய இவர்கள் தவறும் பட்சத்தில் வெற்றி வெளிச்சம் காணக் கிடைக்காத இவர் தம் ரசிகர்கள் வெகு சீக்கிரமே கோலிவுட்டிலும் டொலிவுட்டிலும் காத்திருக்கிறார்கள் எத்தனையோ வருங்கால முதல்வர்கள்... அவர்களுக்கு விசில் அடிக்க அவசரமாய் கிளம்பி போய் விடுவார்கள்

2 comments:

ராஜ நடராஜன் said...

//நடிகர்கள் அரசியலுக்கு வருவதும் ஆட்சியை அசாத்தியமாகப் பிடிப்பதும் 70 களில் தென்னிந்தியாவில் மிகவும் எளிதாக இருந்த விஷயம்//

இப்பத்தான் எளிதான விசயம்.

சரவணகுமரன் said...

நீங்கள் சொல்வது போல் சொந்தங்களையே பெரிதும் நம்புவது, இவர்களது அரசியல் வாழ்விற்கு நல்லது இல்லைதான்...

tamil10