Sunday, April 01, 2007

SUNDAY WITH பாபா - 1

உன் கதை முடியும் நேரமிது... பாட்டைத் திருப்பித் திருப்பிப் போட்டு நம்ம பாசக்காரப் மனச்சாட்சிப் பயலை கடுப்பேத்திகிட்டு இருந்தேன்... பின்னே ஒரு வாரமா அவன் பண்ண அலப்பரை அப்படி.. நம்ம மணிகண்டன் கூட பின்னூட்டத்துல்ல வந்து டென்சன் ஆயிட்டுப் போயிட்டார்.. கொத்ஸ் கிட்டத்தட்ட டேஞ்சர் கொடியைக் கையிலேத் தூக்கிப் பிடிச்சி யப்பா தேவ் உன் மனச்சாட்சிகிட்டக் கொஞ்சம் உஷாரா இருன்னு அன்பா அட்வைஸ் வேறக் கொடுத்தார்...இன்னிக்கு நம்ம ஸ்டார் ரிப்போர்ட்டர்க்கு பர்த்டே வேற...

சரி சரி நிப்பாட்டு... உன்னிய யார் உள்ளே விட்டது.. இது எங்க ஏரியா உள்ளே வராதே... கொத்ஸ்க்கு பொறாமை அவருக்கு ஸ்டார் ரிப்போர்ட்டர் அப்பாயின்ட்மென்ட் தர்றல்லன்னு.. உன்ன உசுப்பி உடுறார்.. மணி டீம் தோத்த பீலிங்க்ல்ல என்னமோவெல்லாம் சொல்லுறார்..அதை எல்லாம் பெரிசா எடுக்க முடியுமா...

இன்னிக்கு நம்மக் கூடப் பேசப் போறது... நாலும் தெரிஞ்சவர்..நாகரீகமானவர்.. நட்புன்னா நேசகரம் நீட்டுறவர்.. பதிவுகள்ல்ல கம்மியாகப் பேசுனாலும் சாரமாப் பேசுறரவரு... நம்ம கிட்ட வெறும் சுட்டிக் கொடுத்துட்டு எஸ்கேப் ஆனா விட்டுருவோமா... பாலாவைப் பேச வச்சிருக்கோம் இல்ல,,, இது முழுக்க முழுக்க நம்ம பாபா கச்சேரிங்கோ.. ஓவர் டூ பாபா..

பாபா - இந்தப் பட்டம் பிடிச்சிருக்கா?

வெட்டிப்பயலிடம் பேசும்போது கிட்டத்தட்ட இதே கேள்வியை அவரிடம் நண்பர் கேட்டார்.

'உங்களை வெட்டி என்று கூப்பிடும்போது வருத்தமாக இருக்காதா?'

வெட்டி பதில் சொல்வதற்குள் அவசரக்குடுக்கையாக நான்,
இந்தியர்கள் எப்போதுமே சூப்பர் ஸ்டார், தளபதி, லிட்டில் மாஸ்டர், ரோஜா மாமா என்று அடைமொழி சூட்டி மகிழ்பவர்கள். அதே குணம்தான் பதிவுலகுக்கும் நீண்டிருக்கிறது.

எனக்கு பாபா என்றழைப்பது அரசியல்/சினிமா/கிரிக்கெட்டின் தொடர்ச்சியாக பிடித்திருக்கிறது. அழைப்பவருக்கு அன்னியோன்யத்தைக் கொடுக்கிறது. பாலாஜி அவர்களே என்று நீட்டி முழக்காமல், 'அடேய் பாபா... இது ஓவர்டா' என்று ரைமிங்காக நட்பாக ஆக்குகிறது

வெட்டி-பாலாஜி வேறுகோணத்தில் ஆராய்ந்தார். வெட்டி என்பது பிராண்ட் நேம். என்னுடைய எழுத்தின் மதிப்பாகத்தான் இந்த விளிப்பை நான் பார்க்கிறேன். சுஜாதா என்றால் அது அவருடைய கதைகளுக்கு கிடைக்கும் உடனடி ரெகக்னிஷன். அதே மாதிரி வெட்டி என்று அழைத்தால், இந்தப் படைப்புக்கு உரிமையானவர்; பதிவின் மூலமாக என்னை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.

இதைப் பட்டம் என்பதை விட எளிமையாக பரிச்சயம் கொள்ள ஒரு புனைப்பெயர்.


அது என்ன E-Tamil, snapjudgement, விளக்கம் சொல்லமுடியுமா?

நான் பதிவு தொடங்கிய காலம் டாட்.காம் அணைய ஆரம்பித்த நேரம். எனினும், எல்லா வார்த்தைக்கும் ஈ(e) அல்லது ஐ (i) முன்னாடிப் போட்டுக் கொள்வது வெப் 1.0-வின் சாமுத்ரிகா லட்சணம். அந்த மாதிரிதான் ஈ-தமிழ்.

தற்போதைய Tamil News-இன் பூர்விகம். தமிழ் இதழ்களில், வலையகங்களில் வருவதில் பிடித்தவற்றை சேமிக்கும் கிடங்கு. எலெக்ட்ரானிக் தமிழாக, பல வலையகங்களில், விதவிதமான எழுத்துருவில் வந்தவற்றை ஒருங்குறியாக்கி, ஒரே இடத்தில் பிட்டு பிட்டாக்கி தொகுக்கும் இடம்.

கொஞ்ச நாள் கழித்து 'சொந்த சரக்கு கிடையாதா?', 'ஏன் நாங்கள் படித்ததையே மீண்டும் மீண்டும் பதிவாக்குகிறீர்கள்?' போன்ற செல்ல சிணுங்கலினால், நானும் இரண்டு வரி மறுமொழி எழுதி, எழுத்தாளன் ஆகிப் போனேன்.

மறுமொழிகளைத் தொகுத்து தனிப்பதிவாக்குவது இரண்டாண்டுகள் முன்பு ஃபேஷனாக இருந்தது. நொடி நேரத்தில் யோசித்து, பதிவு குறித்த தீர்ப்புகளை சுருக்கமாகத் தருவதால் பின்னூட்டம் என்பது ஸ்னாப் ஜட்ஜ்மெண்ட். கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, பின்னூட்டங்கள் எதுவுமே இல்லாமல், படிக்க வேண்டிய/படித்ததில் பிடித்த பதிவுகளை சேமிக்கும் தளமாக Snap Judgement ஆகிப் போனது.

இப்போ எல்லாம் வெறும் பார்வையாளரா மட்டுமே இருக்குறீங்களே என்னக் காரணம்?

இப்பொழுதும் க்விக்கா யோசி; பக்காவானால் பாசி! என்று நினைப்பதை கிறுக்கிக் கொண்டுதான் இருக்கிறேன். பின்னூட்டங்கள் போடுவது, கில்லியில் இணைப்பது போன்றவையும் தொடர்கிறது.

நீண்ட பதிவுகள் எழுதாமல் இருப்பதற்கு பல காரணங்கள். தெரிந்தவர்/நெருங்கியவர் மறைந்தவுடன் தோன்றும் 'வாழ்க்கை அநித்தியம்'; வருடந்தோறும் ஒரு சில மணித்துளிகளாவது புதிய நுட்பங்களையும் நிரலிகளையும் கற்றுக் கொள்ளும் சுய நிர்ப்பந்தம்; ஹாய்யாக டிவி, அப்பா தேவைப்படும், அப்பாவின் காலை சுற்றும் குழந்தை; போன்ற generic காரணங்களையும் சொல்லி வைக்கலாம்.

வலைப்பதிவது இன்னும் அலுக்கவில்லை :)

நான்கு வருடப் பதிவுலக அனுபவம்.. மாற்றங்கள்ன்னு எதாவது நடந்துருக்கா.. ஏற்றமா? இறக்கமா? தனிப்பட்ட மற்றும் பொதுவானப் பார்வை ரெண்டும் சொல்லுங்க பாலா?

ஆரம்பத்தில் இவ்வளவு பேர் கிடையாது. வாசகர்களும் குறைவு. ஆனால், எல்லாப் பதிவுகளையும் கிட்டத்தட்ட எல்லா சக பதிவர்களும் படிப்பார்கள். குழுமம் மாதிரி இருந்தாலும், குழுவிற்குறிய குணங்கள் இல்லாத தனித்துவத்துடன் இயங்கியது. சொந்தக் கதையை நிறைய பேசினார்கள். தனி நபர் வாழ்வியல் சிக்கல்களை மனமுவந்து பகிர்ந்து வாசகனுக்கு செழுமையூட்டினார்கள்.

இப்பொழுது 2000+ பதிவுகள். நிறைய வாசகர்கள். நன்றாக இருந்தால் மனமுவந்து பாராட்டும், பார்வையிடும், பரிந்துரைக்கும் விரிந்த ஊடகம்.

செய்திகள், இடதுசாரி, முதலாளித்துவம், விளையாட்டு, பொருளாதாரம், அறிவியல் என்று ஓரிருவரை மட்டுமே வலம்வந்து, குண்டுச்சட்டியில் குதிரையோட்டிய தமிழ்ப்பதிவுலகம் பரந்துபட்டு, 'அவர் இல்லாவிட்டால் இன்னொருவர்' என்று மாற்று ஊடகமாக மிளிர்கிறது.

உலகத்தின் மூலை முடுக்கில் நிகழ்வதை அறிய சற்றுமுன், பல்சுவை கட்டுரைகளை அறிய பூங்கா, பல்வேறு பதிவர்களின் விருப்பத்தை அறிய மாற்று, பெண்பதிவர்களின் வீச்சை அறிய கூகிள் ரீடர் சக்தி என்று புதிய முயற்சிகள் தொடங்கி வீறுநடை போடுகிறது.

'நான் மட்டுமே வாசகன்' என்னும் அளவில் வலைப்பதிவை துவங்கினேன். கஷ்டப்பட்டு ஒவ்வொருத்தராக அழைத்து, நண்பர்களைப் படிக்க வைத்து, சுட்டி கொடுத்து வலைவீசி வாசகரைத் தேடி, கூகிளை நம்பி தேடல் வார்த்தைகளை நிரப்பி, கூட்டம் சேர்க்கும் நிர்ப்பந்தம் இன்று கிடையாது.

கை சொடுக்கில் தமிழ்மணம், தேன்கூடு, கில்லி, மாற்று கிடைக்கிறது. பார்வையாளர் வருகையேட்டு எண்ணிக்கையை மின்னல் வேகத்தில் உச்சாணிக் கொம்பில் ஏற்றும் வாய்ப்பு கிடைப்பது, புதிய பதிவர்களுக்கு pressure ஏற்படுத்தி பரபரப்புக்கும் உள்ளாக வைக்கிறது. இதனால் அடுத்தவரின் அனுபவத்தைப் பகிரும் அன்னியோன்யம் குறைந்து நாட்டு நடப்பை உலகியலாக ஆராயும் போக்கு மட்டுமே பெருகி வருவது இறக்கம்.

பதிவுகளில் கிளாஸ் - மாஸ் இருக்கா? தேவையா?

கிளாசுக்கு இங்கே போகவும்: வரவனையான்
மாஸுக்கு: ஞானபீடம்: வீரன்

கொஞ்சம் சேரியமாய் பார்த்தால், 'பிதாமகன்' படத்தில் சிம்ரன் ஆடுவது போல், ரோசாவசந்த் பதிவில் ஆண்குறி மாஸ்.
என்னுடைய பதிவில் எப்போதாவது கிளாஸ். நடிகைக்கு கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் வித்தியாசம் தெரியும். உருப்படியான பதிவரும் அதே மாதிரிதான்.

ஆங்கிலப் பதிவுப் போட்டவங்க இன்னைக்கு இதையே ஒரு முழு நேரத் தொழிலாச் செய்யுமளவுக்கு பதிவுகள் அவனுக்கு வளம் கொடுத்திருக்கு... இங்கே நம்மாலே அதெல்லாம் முடியுமா? உங்க கருத்தைச் சொல்லுங்க? CAN BLOGGING BE A FUTURE CARREER?

ஆங்கிலத்தில் சிறு பத்திரிகைகள் சக்கைபோடு போடுகிறது. எல்லா வெரைட்டி எழுத்தாளர்களையும் கொண்டாடுகிறார்கள். தமிழிலும் இதே நிலை இப்போது(தான்) உருவாகிறது. வலைப்பதிவும் கொஞ்ச நாள் கழித்துதான் வேகம் எடுக்கும்.
எடுத்துக்காட்டாக, சினிமாவைப் பற்றி மட்டும் பதிவு எழுதலாம். அந்தப் பதிவர், 'சித்திரம் பேசுதடி' போன்ற அதிகம் புகழ் பெறாத படங்கள் வரும்போது, படத்தை சந்தைப்படுத்த உதவலாம். அவருடைய பதிவில் எக்ஸ்க்ளூசிவ் கொடுக்கலாம். அதன் மூலம் நுழைவுச்சீட்டுகளை ஏலம் விட்டு பணம் சம்பாதிக்கலாம். படம் சம்பந்தப்பட்ட விஷயங்களை வணிகத்தளத்தில் விற்கலாம். இலவசமாகக் கொடுக்க தயாரிப்பாளர்களிடம் நிறைய வஸ்து இருக்கும். அவற்றை போட்டி போட்டுக் கொண்டு வாங்க நுகர்வோர் தயாராக இருப்பார்கள். இருவருக்கும் பாலமாக, பதிவர் அமைவார்.
இவ்வாறே இசை, ஓவியம், புத்தகம், விழியம், நாடகம் போன்ற பிற கலைத் துறைகளிலும் நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது.
சம்பந்தப்பட்டோரை தொடர்பு கொள்வது, அவர்களிடம் viral marketing, word of mouth, buzz creation என்று சந்திரபாபு நாயுடு ரேஞ்சுக்கு பவர்பாயிண்ட் காட்டினால் மயங்காதோரும் உண்டோ?

ஆங்கிலப் பதிவுகள் புத்தகங்களாக மாறுகிறது. தமிழ்ப் பதிப்புலகம் 'சொந்தக் கதை' அல்லது புகழ் பெற்றவர் அல்லாத தனி மனித வரலாற்றை மதிப்பதில்லை. புனைவுக்கு இடமுண்டு; அதுவும் பெயரெடுத்தவராக இருக்க வேண்டும் அல்லது பின் நவீனத்துவம் எழுதுபவராக இருத்தல் வேண்டும் போன்ற நிர்ப்பந்தங்களில் சிக்கியுள்ளது.

ஆங்கிலத்தில் அவ்வாறு இல்லாமல் புற்றுநோயிலிருந்து மீண்டவர், தொலைதூரம் ஓடியவர் வரலாறுகளும் வெளியாகிறது. பெருவாரியாக விற்பனையாகிறது. தமிழ்ப்பதிவர்களில் வெங்கட் போன்ற சிலர்தான் தொடர்ச்சியாக ஒரே துறையில் சுவாரசியமான கட்டுரைகளை அளிக்கிறார்கள். அனேகருக்கு ஒரு நாள் சினிமா, இன்னொரு நாள் விமர்சனம் என்று பல மரம் கண்ட தச்சனாக புகுந்து புறப்படுவதால், புத்தகமாகத் தொகுக்க இயலாத நிலை.

இந்த நிலையும் காலப்போக்கில் மாறும். துறைசார் பதிவுகளின் லாபத்தன்மை கருதியோ, சொந்த விருப்பத்தின் உந்துதலிலோ, குழுப்பதிவுகளும், தொடர்ச்சியும் அமையப்பெறும். இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் இந்தப் போக்குகளை நிறுவனப்படுத்த ஏதாவது கூகிள் போன்ற பிசினஸோ, தன்னார்வ அமைப்போ, விகடன்/குங்குமம் போன்ற வெளியீட்டாளர்களோ முயற்சிகளை எடுத்து, சரியான பாதையை வகுத்து, வலைப்பதிவதை லாபகரமான பொழுதுபோக்காக மாற்றலாம்.



SUNDAY WITH பாபா தொடரும் ஒரு சின்ன இடைவேளைக்குப் பிறகு... இன்னும் பாபா பேச நிறைய இருக்கு.. கேக்க ரெடியா....

3 comments:

வெட்டிப்பயல் said...

//நடிகைக்கு கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் வித்தியாசம் தெரியும். உருப்படியான பதிவரும் அதே மாதிரிதான்.
//

சூப்பர்...

வெட்டிப்பயல் said...

கேள்விகளும் பதிலும் வழக்கம் போல அருமையாக இருந்தது..

துளசி கோபால் said...

மண்டே வித் பாபா வருமா? :-))))

tamil10