Monday, April 30, 2007

தேங்க் யூ சங்கம் and சிங்கம்ஸ்

ஒரு வழியா எனக்கு லீவ் ஓ.கே ஆயிருச்சு மக்கா...

இது வரைக்கு 4356 லீவ் லெட்டர் கொடுத்து..

356 லெட்டர் தொலைக்கப்பட்டு...
900 லெட்டர் கிழிக்கப்பட்டு...
600 லெட்டர் காரணம் சரியில்ல என்று ரிஜெக்ட் செய்யப்பட்டு...
700 லெட்டர் ஏன் எதுக்கு இப்படி கேள்வியாக் கேட்டு...
800 லெட்டர் சும்மாவே நிராகரிக்கப்பட்டு...

கடைசியா ஒரு 999 லெட்டர் ஸ்பெலிங் மிஸ்டேக்ன்னு அநியாயமாக் காரணம் சொல்லி ரிஜெக்ட் ஆச்சு

இப்போக் கடைசியா நேரடியா ஹாட் லைன் போட்டு தலக்கு தொடர்பு கொண்டு கெஞ்சி கதறி.. லீவ் வேணும்ன்னு நான் கேட்டப்போ...

தல நான் பாராட்டுற மகராசன்... எம்புட்டு நாள் ராசான்னு தாய்ள்ளத்தோடு கேட்க...

தல பார்த்து நீயே சொல்லுத் தல ஒரு வருஷமா இங்கிட்டு இருந்திருக்கேன்... நீ லீவு கொடுத்தா... நானும் நானா இருப்பேன் தல...

ம் அப்படின்னு போன்ல்ல அவர் தெய்வீக குரல்ல முனங்கன்ன தல...

ஆமா நீ சங்கத்துல்ல இருந்தே ஓய்வு எடுக்கக் கூடாதா.... வெளியே போய் தான் ஓய்வெடுக்கணுமா? அப்படின்னு வரலாற்று சிறப்பு வாய்ந்த டவுட்டைத் தல எடுத்து விட...

தல ஸ்கூல் எல்லாம் லீவ் விட்டா ஸ்கூலுக்கு வான்னு சொல்லமாட்டாங்கத் தல...
ஆபிஸ்ல்ல கூட அப்படித் தான் தல.. நம்ம சங்கத்துல்லயும் லீவுக் கொடுத்தா அப்படியே கொடு தல அப்படின்னு பூகோள பதிலை நான் சொல்ல...

ம்ம்ம் நீ கூட விளங்கற மாதிரியே பேசுற.. ஆனாலும் வில்லங்கமாத் தான் இருக்குமோன்னு எனக்கு ஒரு டவுட்... ஆமா சங்கத்துக்கு லீவ் விட்டுட்டு வெளியே போய் என்னிய வச்சு காமெடி கீமெடி பண்ண மாட்டியே....அப்படி ஏதாச்சும் நடந்துச்சு.... இந்த பிளாக் பூமி கலவரப் பூமியா மாறிரும்... ரத்தம் பீறிட்டு ஓடும்.. ஏன்னா நான் பெரிய ரவுடின்னு நானே சொல்லி உனக்குத் தெரிய வேண்டியது இல்ல...

அப்படின்னு எனக்கு லீவ் ஓ.கே.வா தல...

ஓ.கே மாதிரி தான்..

அப்படின்னா நான் சங்கத்தை விட்டு வெளியே போகலாமாத் தல...

போலாம் ஆனா லீவு முடிஞ்சு வரணும்.. வரும் போது தலக்கு தலப்பாக் கட்டு பிரியாணியும் மத்தச் சிங்கத்துக்கு எல்லாம் குச்சி முட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிட்டுத் தான் புரியுதா?

கண்டிப்பாத் தல...

தல தல தான்...

கண்ணீர் மல்க தலக்கு போன்ல்ல உம்மா கொடுத்துட்டு சங்கம் விட்டு கிளம்பும் போது சங்கத்துக் கட்டடத்தில் யாரும் இல்லாத காரணத்தினால்

சங்கப் பலகையில் பெரிசா எழுதி வைத்து விட்டு புறப்பட்டுட்டான்

மீண்டும் சந்திக்கும் வரை .... தேங்க்யூ சங்கம் and சிங்கம்ஸ்

Wednesday, April 25, 2007

கலாட்டாக் கச்சேரிங்கோ - ஜாலி கைஸ் அன்ட் கேர்ள்ஸ்



ஓஹோ கச்சேரி பிலிம்ஸ் கம்பெனிக்கு டைடல் பார்க்ல்ல இடம் வேணும் கிடைக்குமான்னு விசாரிக்கச் சொல்லி நம்ம சராவை அனுப்பி மாசக் கணக்காச்சு பயலைக் காணும்....அவனும் விடாம பெரிய பெரியத் தலகளைச் சந்திச்சு நம்ம விசயம் பேசிகிட்டுத் திரியறதாக் கேள்வி..

சரி டைடல் பார்க் இல்லாட்டியும் பரவாயில்ல.. வேற பார்க் எதுல்லாவது ஆபிஸ் தொறக்கலாம்ன்னு நான் யோசிக்கும் போது நம்ம துபாய் பய கோபி பொங்கி அண்ணே நம்ம கிடேசன் பார்க் மரத்தை எல்லாம் வெட்டு வெட்டுன்னு வெட்டி சும்மா சூப்பரா ஆபிஸ் போட்டுருவோம்ண்ணேன்னுப் பாச மழைப் பொழிஞ்சுட்டான்.

படத்துச் சூட்டிங் கூட அங்கனத் தெரிஞ்ச ஷேக் வீட்டு கொல்லையிலே வச்சுக்கலாம்.. பூஜைக்கு நம்ம அபிஅப்பாவைக் கூப்பிட்டுறலாம் ( துபாய் கிடேசன் பார்க் ஓனர் நம்ம அபி அப்பாவுக்கு பிரண்ட்டாம் இல்ல) அப்புறம் பைனான் ஸ்க்கு அண்ணாச்சி... பினாத்தலார்ன்னு ஆட்டயப் போட்டுரலாம்.. அண்ணாச்சிக்கும் பினாத்தலாருக்கும் சும்மா ஒரு கெஸ்ட் ரோல் கொடுத்தா துபாய் கலெக்ஷ்ன் கேரண்டிண்ணே.. அம்புட்டு பேன் ஸ்ண்ணே...அப்படின்னு கிட்டத் தட்ட என்ன துபாய்க்கு கடத்த திட்டம் போட்டப்போத் தான் டவுசர் பாண்டி பாஞ்சி வந்தான்... மூச்சு வாங்க வாங்க... என்னியப் பார்த்தான்.

அண்ணே... இந்த பாப் வூல்மரைப் போட்டாய்ங்களே அவ்ங்களைப் பிடிச்சுக் கொடுத்தா எதாவது இனாம் கொடுப்பாயங்களாண்ணே... அப்பாவியாய் கேட்டான்
அடப் பாவி.. டேய் வேர்க்குது வெளியே போயிட்டு வரேன்னு போனே வெஸ்ட் இன்டீஸ்க்கேப் போயிட்டுக் கொலைக்காரங்கக் கூட கோக் குடிச்சுட்டு வந்தமாதிரி இல்ல பேசுற.. வெகுளியாப் பேசுறீயா இல்ல வில்லங்கமாப் பேசுறீயான்னு தெரியல்லயே.. மனசுக்குள் மவுத் விட்டு பேசிட்டு மவுனமாய் அவனைப் பார்த்தேன்..

ஏன் கேக்குற?

இல்லண்ணே.. எனக்கென்னமோ அது நம்ம ஜீயும் .. இம்சையக்காவுமா தான் இருக்குமோன்னு கன்பர்ம் டவுட்டாக் கீதுண்ணே

அவங்க என்னடா பண்ணாங்க பச்சப் புள்ளங்க ஆச்சேடா...

அய்யோ அப்படி எல்லாம் முடிவு பண்ணிராதீங்க.. பாப் ஆல்பம் போடப் போறோம்ன்னு அவிங்க கம்ப்யூட்டர்ல்ல எழுதி வச்சிருக்கதை நான் எழுத்துக் கூட்டிப் படிச்சுட்டேண்ணே.. எத்தனைத் தமிழ் படம் பாக்குறோம் இப்போ எல்லாம் வில்லன்வ.. இப்படி கம்ப்யூட்டர் பொட்டியில்லேத் தாண்ணே கொலை மேட்டர் எல்லாம் குறிச்சு வைப்பாய்ங்க.. நம்ம விசய், அசித், எல்லாம் அதை வச்சு கண்டுபிடிப்பாய்ங்க.. ஏன் நம்ம அந்நியன் விக்ரன் கூட அப்படி கொலைக்கு கம்ப்யூட்டர்ல்ல தாண்ணே அப்ளிகேஷ்ன் போடுவார்..என்னிய ஏமாத்த முடியுமா?

அடப் பாவி வேலைத் தேட அப்ளிகேஷ்ன் போடணுமா கம்ப்யூட்டரத் திறடா ஒரு படத்துல்லாவது சொல்லிக்கொடுங்கய்யா.. பாருங்க கொலைக்கு ரெஸ்யூம் அனுப்ப இன்ட்ர்னேட் இங்கிதம் இல்லாம இங்கே ஒரு ஜீவன் சொல்லுது.. ம்ம்ம் நீ மேல சொல்லுடா ராசா..

லாஜிக் இல்லாத தமிழ் படங்களைப் பார்த்து ஒரு பிரிட்டானிக்காவா மாறி இருந்த டவுசர் பாண்டி பரபரப்பாச் சொன்னான்...

அண்ணே அந்த பாகிஸ்தான் கோச் பேர் பாப் வூல்மர்.. இப்போ இவங்க போடப் போற ஆளு பேர் பாப் ஆல்பம்.. நல்லா யோசிங்க.. ரெண்டு பேர்ல்லயும் பாப் இருக்கு அதுன்னால... அவன் சிரியசாப் பேச பேச எனக்கு சிறுமூளையிலே சின்னதா டென்ட் விழுந்த பிலீங்க் வந்துருச்சு...

டேய் பாண்டி எப்படிடா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க... ஸ்டெப் கட்டிங்..பங்க் கட்டிங்.. இப்படி வகையா முடியெல்லாம் வெட்டுறீங்க.. ஆனா உங்களுக்கு பாப் ஆல்பம்ன்னா அது இசை சம்பந்தமான மேட்டர்ன்னு தெரியாதா... அடக்கொக்காமக்கா பாப் ஆல்பம்ன்னா பாப் வூல்மர் தம்பின்னு சொல்லுறீயடா...உன்னிய... அப்படின்னு நான் கையை ஓங்க...

வாசல்ல முகம் தெரியாத அளவுக்கு மூஞ்சி முழுக்க பொதர் வளத்துகிட்டு..,கர் புர்ன்னு கண்டபடி சவுண்ட் விட்டுகிட்டு ஏரியாவே அலறுர மாதிரி சொய்ங்ங்னு ஒரு சவுண்ட் வேற சேத்துக் கொடுத்துகிட்டு ஒரு பார்ட்டி நம்ம வீட்டு வாசல்ல நின்னுச்சு...

அய்யோ கரடிங்கண்ணா.. அப்படின்னு சின்னப் பய டவுசர் கதறிகிட்டு கொல்லைக் கதவைத் திறந்துட்டு ஓட ...

அய்யோ அரட்டை அரங்கம் நடத்த நம்ம வீட்டுக்கு வீராச்சாமியார் வீறு கொண்டு வந்துட்டார்ன்னு நான் வீல்ன்னு அழுக.... அய்யோ அந்த ஆறு நிமிசம் கொடுமையோ கொடுமை..

அண்ணே அழாதீங்க... நான் தாண்ணே உங்க பாசக்கார ஜீ... அப்படின்னு பய டோப்பாவைக் கழ்ட்ட எனக்கு உசுரு திரும்பி வந்துச்சு

டேய் என்னடா இது கோலம்.... புதரகம் போய் தலையிலே பொதரைச் செட் பண்ணியிருக்க...அந்தப் பொதரை மொத்தமாச் சாயச் சட்டிக்குள்ளே விட்டு எடுத்துருக்க... ஜன்னல் எல்லாம் மூடுன இந்த வீட்டுல்ல கருப்பு கண்ணாடி போட்டுகிட்டு நான் நிக்குற திசைய ஒரு குத்து மதிப்பாப் பாத்துப் பேசுற...கழுத்துல்ல என்னடா இது யாரோ எப்பவோ சேவிங் முடிச்சு தூக்கியெறிஞ்ச முக்காப் பிளேட்.. அட பாவி கையிலே காப்பு அதுவும் எதோ மெஷினுக்குள்ளே கையோடு விட்டு வளைச்சு நெளிச்சு இருக்கு.. டேய் அந்த ஊரு பிச்சக்காரன் அசந்த நேரம் அவன் துணியை அடிச்சிட்டியாடா.. அங்க அங்க திறந்த மேனியா இருக்கு... டேய் திருடுனா ஷூவை ஒரே ஆளுகிட்டத் திருடக் கூடாதா.. இப்படி காலுக்கு ஒரு கலர் ஷூவா எடுத்துருக்கீயேடா...

அண்ணே உங்களுக்கு ஓலகம் தெரியாதுண்ணே.. உள்ளூர்ல்ல உக்காந்துகிட்டு கச்சேரி பண்றவர் கிட்டே ஓலக மீசிக் பத்தி எப்படி பேசற்து... ஆல் மை டைம்... ஆனா ஒண்ணுண்ணே இப்படி கெட் அப்பா இருந்தா தான் வெரி குட் சொல்லி வெள்ளைக்காரன் வேர்ல்ட் டூர் அரேஞ்ச் பண்ணுறான்... இப்போ நான் இங்கே வந்தது.. நம்மூர் மக்களுக்கு பாப் சாங் அறிமுகப் படுத்த...



இங்கே பார்டா.. இதுக்குள்ளே நம்ம டவுசர் பாண்டியும், கோபியும் வந்து நம்மக் கூட உக்காந்துகிட்டாங்க...

ஐயாம் கோபி ப்ரம் கிடேசன் பார்க் துபாய் நைஸ் மீட்டிங்க் யூ அப்படின்னு கேப்ல்ல கைக் கொடுக்க

ஓ கிடேசன் பார்க் நைஸ் ப்ளேஸ்.. ஐ ஹேவ் பிக் பேன் தேர்.. திஸ் கை அபி டேட், பாஸ்ட் பவுலர், பிரதர், மூன்பிரெண்ட், டெவில்பாண்டிங், பிளாபரார், டூ மெனி பேன் ஸ் ...

"தம்பி நீ சொன்ன பேர்ல்ல ஒரளவுக்கு விளங்குது... அது யார் டெவில் பாண்டிங்.. ரிக்கி பாண்டிங் ரிலேட்டிவ்வா?"

"அண்ணே.. திங் அவுட் ஆப் த பாக்ஸ் அப்போத் தான் விளங்கும்.. நல்லா யோசிங்க இல்ல இங்க கச்சேரி மக்கள் கிட்டே உதவி கேளுங்க.. அங் ஓ.கே கோபிஸ்.. சம்மர் முடிச்சுட்டு ஐ வில் சீ யூ இன் துபாய்..இங்கே கன்டிரி சாங்க்ஸ் விஷ்யமா ஆராச்சி பண்ண என் ட்ரூப் கூட்டிட்டு வந்துருக்கேன்.. அந்த கன்டிரி சாங்க்ஸ் அப்படியே பிக் அப் பண்ணி என் வேர்ல்ட் டூர்ல்ல யூஸ் பண்ணப் போறேன்.. சோனி ஸ்பான்ஸர் பண்ணுறேன்ன்னு சொல்லியிருக்காங்க...

சோனியா அம்மா இதெல்லாம் பண்ணுறாங்களான்னு டவுசர் பாண்டி அப்பாவியாய் என் காதைக் கடிக்க.. அவனுக்கு நான் விளக்கம் சொல்லி வில்லங்கத்தை விலக்க வேண்டியதாப் போச்சு

சரிண்ணே.. கச்சேரின்னு பேர் வச்சுருக்கீங்களே.. உங்களுக்குப் பாட வருமா?

இல்ல

"சரி எதாவது வாசிக்க வருமா?"

இல்ல



இந்த மைக் செட் , ஆர்க்கெஸ்ட்ரா.. இப்படி எதாவது டெக்னிக்கலா தெரியுமா?

இல்ல

சரி.. பாடத் தெரியாது, வாசிக்கத் தெரியாது, ம்ம் டெக்னிக்கலா எதுவும் தெரியாது ஆனா கச்சேரின்னு பேர் மட்டும் வ்ச்சுக்குவீங்க... கலாய்ப்பீங்க... ஐ வில் ஸ்டாப் ஆல் திஸ் அப்படின்னு முதுகுல்ல இருந்து ஒரு லாங் சைஸ் வீச்சரிவா எடுத்து ஜி தம்பி கீழே வச்சது...


ஜி தம்பி கதை ஒண்ணு எழுதி இன்டர்வெல் விட்ட மாதிரியே நானும் இங்கேயே இன்ட்ர்வெல் விடுறேன்..

அன்ணே உச்சா வருதுண்ணே.. இருடா நானும் வர்றேன் அப்படின்னு அந்த அருவாளைப் பாத்துகிட்டே எந்தரிச்சேன்...ஏனுங்க இன்டர்வெல் விட்டா போயிட்டு வ்ர்றது மரபு தானுங்களே...

இன்னும் வரும்....

Wednesday, April 18, 2007

ஒரு வாலிபக் குழந்தைக்கு வய்சு ஏறுது

வணக்கம் மக்கா.. இதுவும் ஒரு பிறந்த நாள் கச்சேரி தான்... ஆனா யாருக்கு?

பெங்களூர்க்கு தென்கிழக்கே ஒரு 50 மைல் தள்ளி நாளைக்கு இந்த விழா ஏற்பாடு ஆகியிருக்கு..
விழா ஏற்பாடுகளைக் கவனிக்க கப்பி மற்றும் தம்பி தலைமையில் விழாக் குழு அமைக்கப்பட்டு அமர்க்களமாக விழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன...

வழக்கம் போல் நம்ம கச்சேரி நிருபர் விழா அமைப்பாளர்களிடம் சேகரித்தத் தகவல்கள் உங்களுக்காக்..

துபாயில் இருந்து சிறப்பு விமானத்தில் வந்த தம்பி கூறியதாவது...

"இன்னிக்கு எங்க பாசக்கார அன்பின் இமயம் ETC ETC ETC....பட்டமாச் சொல்லிகிட்டேப் போனாரு.. நிறைய காதுல்ல விழுந்து காத்துல்ல கரைஞ்சுப் போச்சு.. (கடைசி வரைக்கும் பெயரைச் சொல்லவே இல்லையே மருவாதையாம்ல்ல) பிறந்த நாளுக்கு அமீரகத்தில் இருந்து கிளம்பி வந்துள்ளோம்.. அங்கே நம்ம சிங்கத்துக்குக் கிட்டத் தட்ட நாலு லட்சம் ரசிகர்கள் இருக்காங்க ( யப்பா துபாய் மொத்த மக்கள் தொகை என்னய்யா?) அவங்க எல்லோரும் சிங்கம் பொறந்த நாளுக்கு இந்தியா வரணும்ன்னு துடியா துடிச்சாங்க... ஆனாப் பாருங்க பிளைட்டிலே இடம் இல்ல...( இவர் வந்ததே அரபிக் கடலோரம் மீன் பிடிச்சவங்க வந்த கட்டுமரத்துல்லன்னு பேச்சு) நான் மட்டும் தான் துபாய் ஏர்வேஸ்ல்ல ஸ்பெஷல் பிளைட்ல்ல வந்தேன்..

சிங்கத்ததுக்கு பரிசா... இந்தா ஒரு பெரிய கீப் போர்ட் கொடுக்குறோம்..

அந்தக் கீபோர்ட்ல்ல ASL மூணு எழுத்து மட்டும் தான் இருந்துச்சு..

அது என்னங்கன்னு நாங்க கேக்க...

சங்கத்தின் சிங்கம் மட்டுமா எங்க அண்ணனின் வேகம் அடக்கி வைக்கப் பட்டிருந்தாலும் எங்க அண்ணன் அதையும் தாண்டி செய்த சாகசங்கள் சாதனைகளை எல்லாம் சங்கம் இருட்டடிப்புச் செய்து வந்திருக்கு.. எங்க அண்ணனின் பிற வீர வரலாறு வெளியே வராமல் தடுத்தப் படுபயங்கரமானச் சதியைச் செய்வது அந்தப் பெங்களூர் பிளப் மாஸ்டரும் சென்னை போர் வாலும் தான்...

இதுவரைக்கும் எங்க சிங்கம் சாட் பண்ண கம்ப்யூட்டர் எண்ணிக்கை.. 435
அதுல்ல ASL தேய்ஞ்ச கீ போர்ட் எண்ணிக்கை மட்டும் 567..
சிங்கத்துக்கு இருக்க யாகூ ஐடி மொத்தம் 234
சிங்கம் அதுல்ல பாஸ்வேர்ட் மறந்த ஐடி 123
இன்னும் அதுல்ல ரெகுலராப் பயன்படுத்துற ஐடி 45
இப்படியே ஜி மெயில் ஐடி 78
எம்.எஸ்.என் ஐடி 96
ஆர்குட்ல்ல அண்ணன் நட்பு வட்டம் 420
பிளாக்ல்ல அண்ணனுக்கு தனி வட்டம் 840
எங்க பருத்தி வீரன் பாசமா எல்லாச் சேட்ல்லயும் ஹாய் சொன்ன ஐடி 4 கோடியே 98 லட்சத்து 76 ஆயிரத்து 465 ( இதை நீங்க படிக்கும் இந்த நிமிஷத்துல்ல அந்த எண்ணிக்கை இன்னும் ஒரு சில நூறுகள் கூடியிருக்கும்.. ஏன் ஆயிரங்களைக் கூடத் தாண்டி இருக்கும்.. அண்ணனோட திறமை அப்படி)
அந்த ஐடியிலே பசங்க வெறும் ஆயிரம்
பொண்ணுங்கக் கூட்டிக் கழிச்சா ஒரு தொள்ளாயிரம்
மீதி இருக்க 4 கோடியே சொச்சமும் அண்ணன் பொண்ணுன்னு நினைச்சுப் பேசுனப் பசங்க ஐடி ( சிரிக்கப் பிடாது அவங்கப் ப்சங்கன்னு கண்டுபிடிச்சதும் அண்ணன் தானே)
அண்ணன் சேட்ல்ல ஒரு கிஙு...
அண்ணன் சேட்டையிலே ஒரு பிக் திங்கு...

இப்படி சிங்கத்தோடப் பயங்கர திறமைகள் திட்டமிட்டுத் திரையிடப்பட்டு விட்டது..

இதுக்கு மேல் பேசிய கப்பி கிட்டத்தட்ட கொந்தளித்துக் கொதி நிலையை அடைந்து விட்டார்..

"எங்க சிங்கத்துக்கு முன்னாலே அந்த ஜொள்ளு பாண்டி எல்லாம் சும்மா ஜூஜூபி... ஆனா அவரை நாடேக் கொண்டாடுது.. எங்க சிங்கம் சும்மா விடிய விடிய பண்ணுற கடலைச் சாகுபடியிலே நூத்துல்ல ஒரு பங்கு அந்த ஜொள்ளுபாண்டி பண்ண முடியுமா??? சிங்கம் சார்பா நான் சவால் விடுறேன்

ஆனா அவருக்குத் தான் ஜொள்ளுபேட்டைன்னு பட்டாப் போட்டுக் கொடுத்திருக்காங்க... எங்க சிங்கம் சிந்துற ஜொள்ளுல்ல அந்த பாண்டி ப்ரிஸ் ஆயிருவார்...தெரியும்ல்ல...

பெரிய அவமானம் என்னன்னா ஜொள்ளுக் கோச்சிங் சென்டர்ல்ல சிங்கத்தைச் சில்ரன்ஸ் செக்ஷ்னல்ல் தான் சேக்க முடியும் நக்கலாச் சொன்னாரு பாருங்க சிபி.. அதை எல்லாம் கேட்டு எங்க பிளட் பாயில் ஆகுது.. ஆனா எங்க சிங்கம் எங்களைத் தன் அன்பால் பண்பால் பாசத்தால் கட்டிப் போட்டு வச்சிருக்கு...

கப்பி கால் கிலோ கடலை மிட்டாயைப் பாக்கெட் ஒன்றை காஞ்சிப் பட்டுத்துணியில் சுற்றி எடுத்து வந்திருந்தார் சிங்கத்திற்கு பரிசு அளிக்க...

தமிழகம், கேரளம் , ஆந்திரா, கர்நாடகம் போன்ற பல ஊர்களில் இருந்து கடலை வியாபாரிகள் வண்டிக் கட்டி வந்த வண்ணம் இருக்கிறார்கள்... அவர்கள் சிங்கத்தின் பிறந்த நாள் முன்னிட்டு நல்ல வியாபாரம் நடக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்..

சங்கத்தின் தலக் கைப்புள்ள சிங்கத்தின் பிறந்த நாளைக் கடும் விமர்சையாகக் கொண்டாடும் படி அகில உலக வரு.வா.சங்கத்தின் மொத்த தொண்டர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து துருக்கி தொலைக்காட்சிக்குப் பேட்டிக் கொடுத்திருப்பதாய் யூ.டியூப் வீடியோ ஒன்று இணையத்தில் உலா வந்துக் கொண்டிருக்கிறது...

சங்கத்தின் மற்ற தோழர்களும் சிங்கத்தின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை பெங்களூரில் மையம் கொள்வார்கள் எனத் தெரிகிறது..

ட்ரிங்...ட்ரிங்... சற்றுமுன் தொலைபேசியில் நம்மைத் தொடர்பு கொண்ட சிங்கம்..

"அண்ணே ஏண்ணே உங்களுக்கு எம் மேல இந்தக் கொலவெறி.. நான் பச்சப் புள்ளண்ணே.. பாலகன்.. என்னியப் போய் இப்படி ஓட்டுறீங்க.. நீங்க ஒரு வீரனை ஓட்டியிருந்தா வெரி குட்ன்னு வீடு தேடி வந்துச் சொல்லியிருப்பேன்.. ஒரு குழந்தையை கூடத்துல்ல உக்கார வச்சு சூடம் கொளுத்திச் சுத்தி சுத்தி வந்து கும்மி அடிக்கிறீயளே நல்லாவா இருக்கு... வேணாம்ண்ணே...போங்கண்ணே போய் ஆணியப் புடுங்கங்கண்ணே.. அந்த் ஆளை வெவ்சாயம் பாக்கச் சொல்லுங்கண்ணே..."

"தம்பி...கோவப்படாதே.. ஒண்ணே ஒண்ணு சொல்லிகிடவா"

"என்னண்ணேச் சொல்லப் போறிய "

"ஏலேய் நீ எங்க தம்பிலேய்.. உன்னிய நாங்க ஓட்டாம ஜார்ஜ் புஷ் பிளைட் வச்சு வ்ந்து ஓட்டுவாரே..சரிடா தம்பி... நல்ல படியா பொறந்த நாள் கொண்டாடு.. இந்த வருசம் உனக்கு ஒரு நல்ல வருசமா அமைஞ்சு.. அடுத்த வருசம் பொண்டாட்டி புள்ளகளோடப் பொறுப்பா பொறந்த நாள் கொண்டாட அண்ணனோட வாழ்த்து.. உனக்கு.."

Monday, April 16, 2007

உன்னாலே உன்னாலே

ஒரு ராத்திரி தூக்கம் போச்சு - உன்னாலே உன்னாலே

டிக்கெட்க்கு செலவு பண்ண காசு நட்டமாப் போச்சு - உன்னாலே உன்னாலே

இப்படி கதையே இல்லாத படத்தை எல்லாம் நான் பார்த்தேன் பாரு - உன்னாலே உன்னாலே

வெயில் கொடுமைத் தாங்கல்லன்னு ராவுல்ல ஓப்பன் ஏர் தியேட்டருக்குப் போவலாம்ன்னு வந்து இந்தக் கொடுமையிலே குளிச்சுட்டேனே - உன்னாலே உன்னாலே

ஒரு ராத்திரி ஒழுங்கா வீட்டுல்ல தின்னுட்டு போர்த்திப் படுத்து தூங்கியிருந்தா இந்த அவஸ்தை வந்திருக்குமா....

உன்னை எல்லாம் கொன்னாலே கொன்னாலே என்ன?


சனிக்கிழமை ராத்திரி பிராத்தனா தியேட்டருக்கு நைட் ஷோப் போயிட்டு வர்ற வழியிலே நம்ம நட்பு நம்மைத் திட்டிய மொழிகளில் சென்சார் செய்து மிஞ்சிய் வார்த்தைகளை உங்கள் பார்வைக்கு வச்சிருக்கேன்...

பிகு: சாரி ஜிவா... எவ்வளவோ முயன்றும் உங்க படைப்புக்கு என்னாலே என்னாலே விமர்சனம் எழுத முடியல்ல...


வலிக்குது..திங்கட்கிழ்மை ஆச்சு.. இன்னும் வலிக்குது... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...


இத்தோட இதை எல்லாம் நிறுத்திக்கங்க.. நாங்க எல்லாம் பாவம்ய்யா

Saturday, April 14, 2007

ஆல் இன் ஆல் அழகுராஜ் ஸ்பீக்கீங்

ஸ்ப்ப்பா.. சென்னையிலே வெயில் கொளுத்து கொளுத்துன்னு கொளுத்துதுங்க... இதுல்ல மண்டையிலே இருக்க மூளையெல்லாம் தண்ணியா உருகி... ஆவியா... விசா வாங்கிட்டு ஆல்ப்ஸ் மலையைச் சுத்திப் பாக்குறேன்னு வெளிநாடு போயிருச்சு..

இந்த நேரத்துல்ல தம்பி வெட்டி.. நமக்கு ஒரு வேலைக் கொடுத்துருக்கார்.. அண்ணே அழகுன்னா என்னன்னு உங்கப் பாணியிலே சொல்லுங்கன்னு....( கேக்குது... உனக்குன்னு பாணி ஏணின்னு பில்டபு எல்லாம் ஒவரு ந்னு நீங்க சொல்லுறது.)

அழகு.. அழகு..அப்படின்னு சொன்ன ஓடனே நமக்கு டக்குன்னு ஞாபகம் வந்தது நம்ம வைதேகிக் காத்திருந்தாள் படத்துல்ல நம்ம கவுண்டர் கலக்குன காமெடி கேரக்டர் ஆல் இன் ஆல் அழகுராஜ் தான்... ஆமாங்க... காமெடிங்கறது எம்புட்டு அழகு.. வாழ்க்கைங்கற பயணத்துல்ல அப்பப்போ சிலிப் ஆகி சிலிண்டர் தீந்து... சிங்கி அடிச்சுட்டு நிக்கும் போது.. இந்தக் காமெடி தாங்க வாழ்க்கைக்கு அழகு சேக்குதுன்னு நான் நம்புறேன்... தன்னைப் பார்த்து சிரிக்கக் கற்று கொண்ட எந்த மனிதனும் வாழ்க்கையில் தோற்றதாய் சரித்திரம் இல்லை...சோ அழகுன்னா மொத சாய்ஸ் காமெடி தான்..

அப்புறம் எதோ ஒரு மாலை நேரத்தில் ஆங்கிள் ஆங்கிளா அலுவலகத்தில் கடமை வீரனா ஆபிசர் பணியாற்றி ஆப்புகளை வாங்கி அலமாரியில் அடுக்கிக் கொண்டிருக்கும் போது.. செல் அலறும்...
எடுத்துப் பார்த்தா எதோ தெரியாத நம்பர் வரும்...
ஆமாங்க ஸ்பீக்கிங்... எஸ்... ஹவ் கேனை ஐ ஹெல்ப் யூ... எனத் தெரிந்த ஆங்கில எழுத்துக்களைக் கோர்த்து வியர்த்துக் கொட்டி முடிக்கும் முன...
டேய் கேனை யூ கேன் ஹெல்ப் மீடா... என்னையத் தெரியல்லயா.. ராமன்டா.. கொரட்டூர் ராமன்.. மந்தை வெளி பஸ் ஸ்டாண்ட்..பிகர் எல்லாம் மறந்துப் போச்சா.. பிகர்ன்னு சொன்னதும் பளிச்சுன்னு பல்ப் எரியும் பழைய நட்பு மறுபடியும் புதுசாப் பூக்கும்...
மாப்பூ... எப்படிடா இருக்கே.. இப்போ எங்கே இருக்கன்னு.. விசாரணைகள் தொடரும் அந்த நட்பின் தருணங்கள்.. ஆமாங்க நட்பு ரொம்ப அழகானது..

ஆமா இது யார் எங்கேயோப் பார்த்த மாதிரி இருக்கு?
சீ... ஜட்டி கூட போடாம அய்யோ.. எங்க வீட்டு தங்கமணி கொஞ்சமா நம்ம வம்புக்கு இழுக்க...
அய்யோ அது வெயில் காலம்மா... அவனை அவச்ரத்தில்ல போட்டோப் பிடிச்சாங்களா அதான் அம்மா அவ்சரமாய் நம்ம பக்கம் சவுண்ட் கொடுக்க..
நமுட்டுச் சிரிப்போடு அப்பா பேப்பரில் மூழ்க...
நமக்குப் பின் வந்த சந்ததிப் பொக்க வாய் காட்டி நடப்பது எதுவும் புரியாமல் எல்லோரும் சிரிக்கிறாங்களே நாமும் சிரிப்போம்ன்னு அதுவும் சிரிக்க... குடும்பம் எவ்வளவு அழகான விஷயம்.. அழகின் பட்டியலில் குடும்பம் முக்கியமானதுங்க நமக்கு..

சுட்டெரிக்கும் சூரியப் பூமிங்க எங்க சென்னை.... தாவி வர்ற வங்கக் கடல் கூட ஒரு லிமிட்டோட நின்னுட்டு சைலண்ட்டா ரிட்டர்ன் போயிரும்.. அப்படிப் பட்ட அனல் பூமியை இந்த மே மாசம் மழி ஒண்ணு வந்து ரொமான் ஸ் பண்ணும் பாருங்க... அய்யோ நம்ம பூமி அப்படியே கூல் ஆகி குழைந்து குழந்தையாயிருவார்.. கோடை மழை செம் அழகு... இந்தா இன்னிக்கு இந்தப் பதிவை தட்டிகிட்டு இருக்கும் போது நம்ம சென்னையிலே மழைக்கும் மண்ணுக்கும் காதல் வந்தல்லலோ வந்தல்ல்லோ.. கோடையில் பெய்யும் மழை எனக்குக் கோடி அழகு..

இப்போ எல்லாம் வேலைங்கற பேர்ல்ல ஆணியை அடுக்கி வச்சு புடுங்க விட்டுறாயங்க... அப்படி அழுது வடிஞ்சு ஆணியைப் புடுங்கிப் பொங்கி ஒரு கோவத்துல்ல பொட்டியைப் பிரிச்சு வீசிராலம்ன்னு உக்காந்து இருக்கும் போது.. யப்பா இருக்கீயான்னு நம்ம இணையத்தின் இணைப்பு வழியா வந்து விழுற அந்த ஒண்ணு இரண்டு வார்த்தைகள் அழகு... அப்படியே கொஞ்சம் பேசிட்டு வேலையைத் தொடருறோம் பார்த்தீங்களா அது இன்னும் அழகு...
கொய்யாலே சேட்டிங் சேட்டைக்கு இப்படி ஒரு அழகு பிலீங் கொடுத்ததுக்கு நம்ம ராம் எனக்குக் கோடி நன்றி கட்டாயம் சொல்லுவான் பாருங்க..

கல்லுக்குள்ளே இருக்க சிலையழகு சிற்பிக்கு மட்டும் எப்படி தெரியுதுன்னு நானும் நிறைய மண்டைக் காஞிச்யிருக்கேன்...அப்போ எல்லாம் தோனாதப் பதில் இப்போ அழகு பதிவுப் போட உக்காந்தாத் தானா வருது...ஆமாங்க ஒவ்வொன்ணும் அழகு.. ஒவ்வொரு விதத்துல்ல அழகு..எல்லாமே அழகு.. அந்த அழகை நாமத் தான் பாக்கத் தவறிடுறோம்.. ச்சே என்ன ஒரு சிந்தனை.. ஆமாங்க நம்ம அழகு பட்டியல்ல சிந்தனைகளுக்கும் ஒரு இடம் நிச்சயம் உண்டு.. கதை, கவிதை, ஓவியம், இலக்கியம், இசை, திரைப்படம், பதிவு இப்படி நான் ரசித்த எத்தனையோ விஷ்யங்கள் சிலப்பல அழகிய சிந்தனைகளின் வெளிப்பாடு தானே.. என் ரசனைக்கு தீனிப் போடும் அத்த்னை சிந்தனைகளுமே கொள்ளை அழகு தான் போங்க...

இப்போ அழகா இந்த ஆட்டத்தை இன்னொரு ரவுண்ட் கொண்டுப் போக நான் கூப்பிடும் மூன்று பேர்

அனுசுயா
LUCK LOOK
பினாத்தல் சுரேஷ்

ஓ,கே . மக்கா அழகிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Tuesday, April 03, 2007

நீங்கள் கேட்டவை

போன வாரம் முழுக்க நம்மக் கச்சேரி களைக் கட்டிப் போச்சு... அந்த திருவிழாவுக்குத் தோரணம் கட்டுன எல்லாருக்கும் பொதுவா ஒரு நன்றின்னு சொல்லிட்டுப் போனாப் பொருத்தமா இருக்காது...

எவ்வளவு பில்டப்புக் கொடுத்தாலும் சொல்லப் போறது என்னவோ கடைசியா அந்த நன்றி தான்.. நட்சத்திரமாப் பேசாம மேடை விட்டு இறங்கி நின்னு பேசுறேன்....

மொதல்ல நம்ம மனச்சாட்சிக்கு நன்றி.. பய இப்போ பயங்கர ரெஸ்ட்ல்ல இருக்கான்..

ஸ்டார் ரிப்போர்ட்டர் செக்ஷன் கனக்கச்சிதமான வெற்றி பெற என் அழைப்பைத் தங்களோட இதரப் பிற பணிச் சுமைகளுக்கும் இடையே ஒப்புக்கொண்ட..நண்பர்கள் வெட்டிப் பயல் பாலாஜி, பொன் ஸ், துளசி அக்கா, அபி அப்பா, ஜி.ராகவன், பாஸ்டன் பாலா ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்

நான் பதிவுகள் மட்டுமே போட்டு விட்டு எஸ் ஆன நேரங்களில் என் பதிவைத் தன் பதிவாய் எண்ணி வந்தவர்களை வரவேற்ற பாசமலர் மை பிரெண்ட்க்கு ஸ்பெஷல் நன்றி.

மை பிரெண்ட் உடன் இணைந்து நம்ம பதிவுகளைக் கலக்கல் கும்மிக் களமாக மாற்றி பட்டையைக் கிளப்பிய பங்காளி புலி, நம்ம நண்பன் சரவணன், நல்நட்பின் ஓசை மனதின் ஓசையார், ராமு தம்பி, மாப்பி சந்தோஷ்,கோபிநாத்,பாசக்காரத் தம்பி, பாசமலர்கள் இமசையக்காதங்கச்சி, துர்கா அனைவருக்கும் நன்றி.

பின்னூட்ட வரலாற்றில் கயமைப் பக்கங்களில் பாசமுடன் தன் பதிவோடு என் பதிவையும் இணைக்க முழுமூச்சாய் போராடிய தலைவர் கொத்தனார், கைக்கொடுத்த மருத்துவர்... இருவருக்கும் என் நன்றி,.

இன்னும் வந்து வாழ்த்திய ஒவ்வொருத்தருக்கும் நன்றி..மணிகண்டன்,பாஸ்ட் பவுலர்,மதுரா,ரவி,ஸ்யாம், மு.கார்த்திகேயன்,தளபதி சிபி,மொத்தமாக வாழ்த்திய அனுசுயா ஆகியோருக்கும் என் நன்றி. இன்னும் ஏதேனும் பெயர்கள் விடுப்பட்டிருந்தால் அதுக்கு நான் இன்றைய பொழுதில் வல்லாரைக் கீரைச் சாப்பிட மறந்தது மட்டுமே காரணம்

பொதுவாக நிறைய பேச வேண்டும் என்ற எண்ணத்தை விட பேசுவதைக் குறைவில்லாமப் பேச வேண்டும்ன்னு ஆசைப் பட்டேன்.. அது ஓரளவு நிறைவேறியதில் சந்தோசம்ங்க..

ஆபிசர் கதையைப் பத்திச் சொல்லணம்ன்னா.. அது கிட்டத் தட்ட என் கதை தாங்க.. கொஞ்சம் போல் பூச்சுற்றல்களோடு.. அப்புறம் அந்தக் கதைப் பத்திச் சொல்லும் போது நம்ம பொன் ஸ் ஏன் நாமும் வலையில் அப்படி ஒரு விளையாட்டை நடத்தாலமேன்னுக் கேட்டிருந்தாங்க.. ..கண்டிப்பாச் செய்வோம்ங்க்... நல்லாவே இருக்கும்... டிசம்பர் வரைக் காத்திருக்க வேண்டுமா என்ன?

ஆபிசர் கதையை ரகளையாய் ரசித்த அனைத்து மக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.. பின்னொரு சம்யத்தில் வாய்ப்புக் கிடைத்தால் ஆபிசர் மறுபடியும் வருவார் தன் கதையோடு கூடவே கிளைக் கதைகளையும் சுமந்தப் படி...

பேட்டிகளுக்கு இப்படி ஒரு பலத்த வரவேற்பு இருக்கும்ன்னு தெரிஞ்சு இருந்தா மனச்சாட்சியை ஓரம் கட்டிட்டு நானே ஸ்டார் ரிப்ப்போர்ட்டர் ஆயிருப்பேன்.. வார இறுதியில் வெளியான பாலாவின் விஷயமுள்ள பேட்டி அதிகம் கவனிக்கப்ப்டாமல் போனதில் எனக்கு வருத்தமே.. ஆனால் அது கவனிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கிறது..

இது போல் பேட்டிகள் எடுக்க இன்னும் நிறைய மக்கள் லிஸ்ட்டில் இருக்காங்க... ஆனாப் பாருங்க ஸ்டார் ரிப்போர்ட்டர் இப்போ ஒய்வெடுக்க நம்ம இந்திய கிரிக்கெட் போய் ஒய்வெடுத்துட்டு வந்தாங்களே ஆமாங்க வெஸ்ட் இன்டீஸ் அங்கேத் தான் போயிருக்கார்..வந்தஓடனே அவர்கிட்ட பேசுவோம்..

ரஜினி குறித்தான் என் பதிவில் நண்பர் தாஸ் ஒரு கருத்தைச் சொல்லியிருந்தார்.. அவ்ர் ரஜினி பற்றி போட்டப் பதிவை நானும் படித்தேன்.. ரஜினியிடம் அவர் கண்ட குறைகளைப் பேசியிருந்தார்.. என் பதிவு ரஜினியிடம் நான் கண்ட நிறைகளைப் பட்டியலிட்டு இருந்தேன்... மாற்று கருத்திருந்தும் நம் பதிவுகளைப் படித்து ரசித்ததாய் பெருந்தன்மையோடுச் சொன்ன நண்பர் தாஸ்க்கும் என் நன்றி.

மொத்தத்தில் இது ஒரு அழகான பீலிங்க்ஸ் ஆப் இன்டியாக் கச்சேரி... எல்லாரும் ஓவராப் பீல் ஆவாம வேலையைப் பாருங்கய்யா.. வர்றோம்ங்க...

Monday, April 02, 2007

ஆபிஸர் விடைபெறுகிறார்.

கிறிஸ் மா கிறிஸ் சைல்ட் விளையாட்டு ஓரளவுக்கு உங்களுக்குப் புரிஞ்சி இருக்கும்... இதோ நம்ம வாழ்க்கையிலே அந்த விளையாட்டை நான் எப்படி விளையாடுனேன்னு சொல்லுறேன்...

மொதநாள்.. ஆபிஸ்ல்ல அவன் அவன் பரபரப்பாத் திரியறான்.. ஒருத்தனுக்கு 5 ஸ்டார் சாக்கேலட்.. ஒருத்தன்னுக்கு மிக்கி மவுஸ் கீ செயின்...இன்னொருத்தனுக்கு டேபிள் டாப் வாசகம்.. இப்படி டைம்க்கு டைம் அவன் அவனுக்கு வந்த கிப்ட அப்டேட் ஆகிட்டு இருக்கும் போது ஆபிஸ் முழுக்க தீ புடிச்சா மாதிரி அந்த கிப்ட் பத்தி பிளாஷ் நியூஸ் பரபரக்குது...

மாப்பூ நம்ம டேமேஜருக்கு எவனோ பீடிங் பாட்டில் வாங்கி அழகாக பொட்டலம் போட்டுக் கொடுத்துருக்கான்... டூ மை டியர் ஸ்வீட் லிட்டில் கிறிஸ் சைல்ட்ன்னு பிரிண்ட் அவுட் வேற.. அதுல்லயும் சைல்டை போல்ட பண்ணியிருக்கான்டா.. மனுசன் அதைப் பிரிக்கும் போது அவரைச் சுத்திப் பொண்ணுங்க வேற நின்னுகிட்டு இருந்துச்சா...

GALS U WANT TO SEE MY GIFT... PACKING LOOKS NICE LET US OPEN IT பாவம் மனுசன் தொறந்துப் பாத்துட்டு போகோ சேனல் கார்ட்டூன் மாதிரி முழிச்சார் பாக்கணுமே...

பேக்கிங் என்னமோ FEDEX ரேஞ்ச் தான்னாலும் உள்ளுக்கு மேட்டர் பாண்டி பஜார் டா...விலை 23.50 /ன்னு போட்டிருக்கும் அதைக் கூடப் பயபுள்ள அழிக்கல்ல

எவனோ நம்ம ஹிட்லரைச் செம்மையாக் கலாய்க்கறேன்னுச் சொல்லி கரண்ட் கம்பியை எடுத்து கடவாப் பல்லுக்குள்ளே விட்டிருக்கான்...

என்னது கரண்ட் கம்பி எடுத்து கடவாய் பல்லுக்குள்ளே விட்டுருக்கானா? ஏன் மாப்ளே இதெல்லாம் ஒரு ஜாலி தானே...

ஆகா ஜாலியாம் ஜாலி.. சோலியைப் பாக்க வந்த இடத்துல்ல என்ன ஜாலி வேண்டி கிடக்கு... அந்த ஆளு மொகம் போனப் போக்கை வச்சுப் பார்த்தா எவன்னு மட்டும் தெரிஞ்சது

மூந்நூறு கிலோ ஆணியைத் தனியாகக் கொடுத்து முனையை மட்டும் பாலிஸ் போடச் சொல்லி ஆர்டர் போடப் போறான்.. நீ எதுக்கும் அந்த ஆள் ரூம் பக்கம் போற வேலை இருந்தா ஹெல்மேட் ஹெட்போன் எல்லாம் போட்டுட்டுப் போ..

என்னடா ஸ்பேஸ் ஷிப்ல்ல போறவன் மாதிரிப் போகச் சொல்லுறே.. நான் என்ன மூனுக்காகப் போறேன்..

காலையிலே இருந்துப் போனவன் எல்லாம் அந்த ஆள் அலறுன ..அலறல்ல ஒண்ணுக்கு ரெண்டுக்குன்னு போயிட்டு இருக்கான்.. நீ வேற அவர் செல்லப் புள்ள.. நீ முனுக்குப் போனாலும் ஆச்சரியமில்லடா.. சொல்லிட்டேன் உஷார்...

ஹிட்லருக்கு அப்படி ஒரு அற்புதப் பரிசை கொடுத்தது யார்ன்னு போனப் பாகம் படிச்ச எல்லோருமே கண்டுப்பிடிச்சுருப்பீங்க....

யார் சின்ன்ப்புள்ள... இப்போக் காட்டிட்டோம்ல்ல... நண்பன் கொடுத்த கரண்ட் கம்பி மெசெஜ் எல்லாம் நம்மை சிறிதும் பாதிக்க வில்லை...

டேய் உய்யா.. நாங்க எல்லாம் எரிமலையை எடுத்து இடுப்புல்ல கட்டிகிட்டு... துடுப்பு போடாமா வெறும் விரலாலே ஆத்தைத் தாண்டி படகு விடுறவங்க... ஸ்மால் கரண்ட் என்னிய என்னப் பண்ணிரும்... ஷாக் எல்லாம் எனக்கு சர்பத் மாதிரி... லைட்டா ஐஸ் போட்டு அடிச்சுட்டுப் போயிட்டே இருப்பேன் இல்ல.. என் மனசுக்குள்ளேச் சொல்லிகிட்டேன்...

அடுத்த ஆறு நாளுக்கும் கிப்ட் லிஸ்ட் இந்தா உங்கப் பார்வைக்கு...

ரப்பர் நிப்பிள்

கிலுகிலுப்பை...

ரப்பர் மீன் பொம்மை.. அமுக்குன்னா கீகீன்னு சவுண்ட் வருமே அது..

தொட்டில் ராட்டினம்..

அப்புறம் கிராண்டா.. ஒரு ஜட்டி பனியன் ஜஸ்ட் பார்ன்ல்ல் போய் வாங்குனது...ஒரு வாரமும் ஆபிஸ் அல்லலோ தில்லோலப் பட்டுகிட்டு இருக்கு... எவன்டா அவன்னு ஒரேப் பேச்சு...

உள்ளுக்குள்ளே சிங்கம் சிலிர்த்துகிட்டாலும் நோ.. இப்போ சிலிர்க்காதே ஸ்லீப் ராசா.. அது தான் உனக்கும் நல்லது எனக்கும் நல்லதுன்னு நல்ல விதமா கூறிட்டு என் வேலை எல்லாம் வில்லங்கம் இல்லாமா பார்த்துகிட்டு இருந்தேன்...

நம்ம ஹிட்லர் கேபின்ல்ல பரிசுகள் லைன்னா அடுக்கி வைக்கப் பட்டிருந்தது...அட அட எம்புட்டு அழகா இருக்கே...

இதை எல்லாம் பாத்துச் சிரிச்சவன் ஜஸ்ட் சிரிப்போட வந்து இருக்கலாம்... ம்ம்ஹும் அப்படி இருந்திருந்தா ஆபிசர் ஆபிசராவே இருந்து இருப்பானே...அங்கிட்டு தானே எனக்கு நானே -ஷூட்டீங் ஆர்டர் கொடுத்துகிட்டேன்...

SIR UR ROOM LOOKS LIKE AN ABSOLUTE KIDS ROOM

அப்படின்னுச் சொன்னேன்...ஓடனே ஹிடலஎ என்னிய மேலும் கீழும் பார்த்துட்டு...

I THINK ONLY U CAN DO THIS அப்படின்னு சொல்லி முடிக்கல்ல.. இடுப்புல்ல இருந்து எரிமலை வழுக்கி கால்ல விழுந்த மாதிரி டக்குன்னு ஓடம்பு மொத்தமும் ஜெர்க் ஆகி வொர்க் ஆகாம நின்னுருச்சு...

சும்மாவே ஹிட்லர் என்னைய ஆணி புடுங்க வுட்டு ஆயிரம் நொள்ளைச் சொல்லுவார்.. இப்போ கண்டு வேற புடிச்சிட்டார்.. ஆணி எல்லாம் என் அங்கம் முழுக்க அடிக்கப் பட்டு அதை என்னிய புடுங்கச் சொல்லி ஹிட்லர் சொல்லுற மாதிரி எனக்கு ஒரு பிளாஷ் கனவு வந்துப் போச்சு..

YES ONLY U CAN FIND OUT WHO DID THIS...WILL U DO THIS FOR ME BUDDY...

ஆகா... கள்ளன் கையிலே கல்லாப்பெட்டி சாவியா... நல்ல வேளை நான் செஞ்சதைக் கண்டுப்பிடிச்சாரோன்னு நினைச்சு நடுக்கத்துக்குப் போனவனை இழுத்துப் புடிச்சு நிம்மதிக் கொடுத்துச்சு அவர் கேட்டுகிட்டது...ஆனாலும் புது சிக்கல் பீதியைக் கிளப்பிச்சி...

ரூம்குள்ளே... இருந்து வெளியே வந்தவன் பாதி பயம் போய் பத்திரமா சீட்டுக்கு வந்து உக்காந்தேன்....

அன்னிக்கு சாயங்காலம் வீட்டுக்கு வந்து ஒரு மாசச் செலவு கணக்கைச் சரிப்பாக்க.. கிரெடிடி கார்ட் ஸ்லிப்பை எல்லாம் சரி பாத்துகிட்டு இருந்தேன் அதுல்ல ஒரு சிலிப் மட்டும் மிஸ்சிங்...

YES U R CORRECT JUST BORN BILL SLIP....அப்படின்னா... அந்த சிலிப்பை அந்த பேக்கேஜ்க்குள்ளேயே வச்சேன்....

அன்னிக்கு ஹிட்லர் வேற ஆபிஸ்ல்ல கிப்ட் திறக்கவே இல்ல...

அவர் திறக்கப் போறார்.. அதுக்குள்ளே சிலிப் இருக்கப் போகுது...

அதுல்ல அழகா என் கையெழுத்து....

எப்படிடா ஆபிசர் நீ மட்டும் இப்படி சிக்குற....எனக்கு நானேக் கேட்டுகிட்டேன்....

அப்போ என் செல்போனில் மெசேஜ் வருது.. எடுத்துப் பார்த்தா ஹிட்லர் தான் ( நான் பெயரை இன்றளவும் மாற்ற வில்லை)

DEAR DEV...WISH U AND YOUR FAMILY A VERY HAPPY CHRISTMAS - HITLER

அட அநியாய ஹிட்லரே...

முணுமுணுத்தப் படி அப்படியே தூங்கிப் போனேன்

Sunday, April 01, 2007

SUNDAY WITH பாபா - 2

SUNDAY WITH பாபா - 1

மீண்டும் வருக.... இந்தாளு இருக்காரே.. படிக்கறதுக்குன்னேப் பொறந்தவர்...பொதுவா அவங்க அவங்க பதிவை எப்படி அடுத்தவங்களைப் படிக்க வைக்கிறது.. சுட்டியை இலவச வினியோகம் பண்ணுறதுன்னு யோசிப்பாங்க... நம்ம ஆளு ஊர்ல்ல யார் பதிவுப் போட்டாலும் பதிவுல்ல விஷ்யமிருந்தா ஒடனே ஊரைக் கூட்டி சுட்டி தந்து சந்தோசப்பட்டுக்குவார்...நம்ம ஆளை வாயைத் திறக்க வச்சு விவரத்தை எல்லாம் முடிஞ்ச வரைக்கும் புடுங்கியிருக்கோம் இல்ல... ஸ்டார் ரிப்போர்ட்டர் எக்ஸ்க்ளுஸ்விவ்.. உங்களுக்காக நம்ம பாஸ்டன் பாலாவுடன் நம்ம SUNDAY தொடருது


பதிவு உலகில் வியாபாரம் சாத்தியமா? துட்டுப் பாக்க வழி இருக்கா?நம்ம பிரிண்ட் மீடியா அளவுக்கு நெட் மீடியா வளர சாத்தியங்கள் இருக்கா?

ஆங்கிலப் பதிவுகளிலேயே இன்னும் காசு பெரிய அளவில் புரள்வதில்லை.
பண்டமாற்று முறையில் சில்லறை விற்பனை; காமம் தொடர்பான வியாபாரம்; தேர்ந்தெடுத்த துறையில் நற்பெயர் ஈட்டி, அந்தப் புகழைக் கொண்டு தொழில் முறைப் பேச்சு/புத்தகம்/குந்துரத்தல் என்று வேறு வழிகளில் சம்பாதிப்பது போன்றவை சாத்தியம்.

ரவியின் Top 10 உலக மொழிகள்-இலிருந்து: "திரைப்படம், இலக்கியம், ஆன்மிகம், சமையல், சோதிடம் அப்படின்னு ஒரு மிகச்சிறிய வட்டத்துக்குள்ள தான் தமிழ் இருக்கு."

இப்போதைக்கு தமிழ் சஞ்சிகைகள் மேற்சொன்னவற்றுள் ஏதோவொன்றை வைத்து பணம் புரள வைக்கிறது. இணைய சஞ்சிகைகளுக்கும் ஆன்மீகம், ஜோதிடம் போன்றவை நிச்சயம் லாபம் தரும் தொழில். இவற்றில் இலக்கியம் என்பது இணையத்தில் சுஜாதா, கிரேசி மோகன், எஸ்வி சேகர் போன்றவர்களோடு நின்று விடும்.

ஒரு பதிவின் வெற்றிக்குப் பெரிதும் உதவுது கருத்தா? இல்லை நல்ல மார்க்கெட்டிங்க்கா?

மேட்டர் முக்கியமில்லை. மார்க்கெடிங் மட்டுமே போதும். மார்க்கெடிங் என்றால்...
எப்போது எழுதுகிறீர்கள், எவருக்கு சுட்டி கொடுக்கிறீர்கள், உங்களின் பழக்கப்பட்ட நிலையில் இருந்து எவ்வளவு தூரம் விலகி அதிர்ச்சி தரும் விகிதத்தில் வழங்குகிறீர்கள் போன்றவை சந்தைக்காக எழுதுவதன் குணாம்சங்கள்.

பதிவின் வெற்றிக்கு நேர்மை முக்கியம். கொண்ட கருத்தில் ஈடுபாடு அவசியம். உணர்ச்சிகரமாகவே எழுதி வருபவர், அவ்வப்போது நடையை வித்தியாசப்படுத்தி நக்கலாக எழுதும் மாறுபாடு என்னும் மார்க்கெடிங்குக்கும் பங்கு உண்டு.
நான் சினிமாப் பைத்தியம். வெகுசன சினிமாப் பைத்தியம்.
'அன்பே சிவம்' நல்ல (கருத்துள்ள) படம். போதிய அளவு மார்க்கெடிங்கும் இருந்தது. தேவையான விகிதாசாரத்தில் மாதவன், கிரண், சண்டை எல்லாம் தூவி இருந்தது. இருந்தாலும், 'போக்கிரி' பெற்ற வெற்றியை அடைய முடியவில்லை.

கிட்டத்தட்ட அதே மாதிரி தரம், குணம், சுவை உள்ள ஜெகத்தையும் பெயரிலியையும் எடுத்துக் கொள்வோம். இருவருமே பெரிதாக சந்தைப்படுத்தல் எதுவும் செய்வதில்லை. அதே தமிழ்மணம், அதே தேன்கூடு. இருந்தாலும் ஜெகத்தை விட பெயரிலி பதிவுகள் அதிக கவனம் பெறும். பல ஆண்டுகளாக எழுதுவதால் உள்ளர்த்தம் கிடைக்காதா என்று நோண்டும் சுபாவம், தமிழ்மணத்தின் நிர்வாகிகளில் ஒருவர் என்பதால் இருக்கும் விஷய்த்தை விட்டு இல்லாததைத் தேடும் மனோலயம் எல்லாம்தான் பதிவின் வெற்றிக்கு பெரிதும் உதவுவது. இது போன்ற சுவாரசியங்கள் இல்லாவிட்டால், அதே நண்பர் வட்டம், அதே பின்னூட்ட ஃபிகர்கள் என்றென்றும் தொடரும்.

.அலைஞனின் அலைகள்: குவியம்.: இராவணன்வெட்டு பின்னூட்டத்தில் இருந்து: "மொக்கை, மொள்ளை, கொள்ளை, கும்மி பதிவெல்லாம் வருகுது. நாமும் சும்மா பின்னூட்டங்களைக் கணக்குப் பாத்துப் பாத்து, தமிழ்மணம் வலதுமேல்மூலைத்தலைப்பைச் சுத்தி நிக்கிற மாதிரி கொஞ்சம் கொஞ்சமா இழுத்தடிச்சால், கவுண்டு எப்பிடி எகிறிது எண்டு பாக்க விளையாடினதுதான் உந்தப்பின்னூட்டமும் பேனூர்வலமும். சும்மா சொல்லக்கூடாது எகிறெண்ட எகிறு எகிறித்தான் இருக்குது. மினக்கெட்டு மினக்கெட்டு ஆறேழு மணித்தியாலம் இருந்து போட்ட பதிவுகள்கூட இருபது பேரைத் தாண்டாது போயிருக்கேக்க, இப்பிடி உயரத்திலையிருந்து உருட்டிவிட்ட குண்டு போல கையில வந்ததும் வராததுமா அடிச்ச எழுத்துக்கழிசலெல்லாம் நானூறைப் பிடிக்க நிக்கிறத எண்ணிச் சிரிக்கிறதோ அழுகிறதோ? ஷில்பா ஷெட்டி சங்கதிதான் எனக்கும் நடந்திருக்குது. There is nothing called BAD PUBLICITY."

உங்க கேள்விக்கே வருவோம். பதிவின் வெற்றி என்று எதை நினைக்கிறீர்கள்? சொந்த அனுபவத்தினால் கற்றதும் பெற்றதும் பலரால் படிக்கப் பெறுவதா? பார்க்கப் பெறுவதா? பதியம் போட்டு அசை போடப் பெறுவதா?

பலரால் பார்க்கப் பெற்றால், அவர்களுள் பெரும்பானவர்களால் படிக்கப் பெற்று, அவர்களுள் ஒரு சிலர் மட்டுமாவது பதியம் போட்டு பழுக்கக் காயப்போட்டுக் கொள்வார்கள்.


இலக்கிய ரீதியாப் பதிவுலகம் எதாவது தாக்கம் ஏற்படுத்தியிருக்கா? அதற்கு வாய்ப்புக்கள் இருக்கா? இலக்கியவாதிகள் பதிவுலகம் பக்கம் வராமல் இருப்பதற்கு என்னக் காரணம்? IS IT LACK OF TECHNICAL KNOWLEDGE OR LACK OF RESPECT FOR FELLOW BLOGGERS ABILITIES?

எல்லாமே Logical Fallacy: Loaded Question என்றாலும் இதற்கும் என்னுடைய ரெண்டணாவை வீசிடறேன்.

அ) இலக்கிய ரீதியாகப் பதிவுலகம் எதாவது தாக்கம் ஏற்படுத்தியிருக்கா?

பதிவுலகில் மட்டுமே குப்பை கொட்டிக் கொண்டு, 'இல்லை' என்று சொன்னால், நான் செய்வது எல்லாம் குப்பை என்றாகி விடும். அதற்காக பதிலை 'ஆமாம்' என்றால், கபடியில் இந்தியா தங்கப் பதக்கம் பெறுவது போல் முதுகில் தட்டிக் கொள்வது எனலாம்.

தாக்கம் என்றால் என்ன? BLANK NOISE PROJECT போன்ற செயல்கள் இலக்கிய ரீதியாக இல்லாமல் செயல்ரீதியாக செய்து காட்டியிருக்கிறது. இலக்கியத்தின் ஆய பயனாக ரசிகரை மகிழ்விப்பது, உற்சாகம் ஊட்டி வாழ்வை மாற்றியமைப்பது எனலாம். பதிவுலகம் அதற்கு மேலும் சிந்தனைகளை வளப்படுத்தி இலக்கியத்தின் பலாபலன்களை நிறைவேற்றுகிறது.

ஆ) இலக்கியவாதிகள் பதிவுலகம் பக்கம் ஏன் வரவில்லை?

மாலன், இரா முருகன் (தினமணிக் கதிர்), சாரு நிவேதிதா (தப்புத் தாளங்கள்), சுஜாதா (க.பெ., ஸ்ரீரங்கத்து எஸ்.ஆர்) போன்றவை பதிவுகள்தான். அவர்களுக்கு தட்டினால் துட்டு. நமக்கு தட்டினால் ஹிட்டு.

இ) ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன் போன்ற இலக்கியவாதிகள் வராமல் இருப்பதற்கு பிற பதிவரின் திறமைகளை மதிக்காதது காரணமா?

நேற்று வரை கர்ம சிரத்தையாய் அனுதினம் கிறுக்கும் வலைப்பதிபவர், நாளை 'விடைபெறுகிறேன்' என்று ஓடிப் போகிறார். இந்த மாதிரி பாதியில் கடையை மூடுவதற்கு - சக பதிவர்களின் பின்னூட்ட சிக்கல்; தமிழ்ப்பதிவுகளின் ஜனநாயக அரசியல்; 'கடைவிரித்தேன், கொள்வாரில்லை' புலம்பல்; அலுவல் வேலை கெடுபிடி; என்று பல காரணங்கள். They have better things to worry about.

நம்மப் பதிவர்கள் விருப்பப்பட்டு பதிவு படிக்கிறாங்களா வழி இல்லாமப் பதிவு படிக்கிறாங்களா... நீங்க என்னச் சொல்லுறீங்க?

நான் விருப்பப்பட்டுத்தான் பதிவுகளை படிக்கிறேன். என்னுடைய ரசனைக்கு உகந்த, நான் அறிய வேண்டிய விஷயங்களைத் தேடிப் பிடித்து மேய்கிறேன்.

மீண்டும் metaphor-க்கு மன்னிக்கவும். காலை எழுந்ததும் தினசரியை ஏன் புரட்டுகிறேன்?
ராத்திரி ஒன்பது மணிக்கு மேலே ராக்ஸ்பரி (சென்னை தாதாக்கள் போல் பாஸ்டன் வஸ்தாதுகள் உலவும் இடம்) அருகே வீட்டு வாசலில் நின்றவர் கொலை என்பார்கள். ஓ... சரி! அந்தப் பக்கம் வீடு பார்க்காமல், வேறு எங்காவது ஜாகை பார்ப்போம் என்று முடிவெடுப்பேன். சற்றுமுன் அடுத்தவருக்கு நிகழ்வது, எனக்கு நிகழ்ந்து விடக்கூடாது என்னும் தற்காப்பு; பயம்.

கொஞ்ச நாள் போன பிறகு, எல்லா செய்தித் தலைப்புகளையும் மேயப் பொறுமையில்லை. இரவு பத்து மணிக்கு அரை மணி நேர செய்தி வாசிப்பில், எல்லா கொலை, வன்முறைகளையும் படம் பிடித்து ஒளிபரப்புகிறார்கள். பார்க்க ஆரம்பிக்கிறேன். செய்தித்தாள் நிறுத்தி விட்டாயிற்று.
பத்து மணிக்கு வீட்டுக்கு வர முடியாத ராப்பிசாசு வேலை. பக்கத்துவீட்டுக்காரியின் வலைப்பதிவில் செய்திகளைக் கோர்த்துக் கொடுக்கிறாள். என்ன, எங்கே, எப்படி நடந்தது என்பதை சுருக் தைக்கிறாள். விருப்பமான பதிவாக இல்லாவிட்டாலும், வேறு வழி இல்லாமல் படிக்க வேண்டிய தேவையான பதிவாக அமைகிறது.

மக்களுக்கு நேரம் குறைச்சல். அதில் வழி இல்லாமல் படிப்பது என்பதற்கான பேச்சே இல்லை.

பாஸ்டன் பாலா.. எதாவது செய்யணும் என்ற ஆர்வம் உடையவர் ஆனால் எதுவும் செய்யாமல் மெளனமாய் வெறும் வேடிக்கையோடு நிற்பவர்ன்னாச் சொன்னாக் கோபப்படுவீங்களா?

அடுத்த கேள்வியைப் பார்க்கவும்.

நீங்க ஒரு நல்ல விமர்சகர்.. தமிழ்மணம்..அதில் உலாவும் பதிவர்கள்.. தமிழ் மண நிர்வாகம் ஒரு மினி விம்ர்சனம் கொடுங்களேன்?

முந்தின கேள்வியைப் படிக்கவும் என்பதுதான் பதில்.
நிர்வாகத்தில் இல்லாதவர்களால் நிர்வாகிகளின் மண்டையிடி என்ன என்பது தெரியாது. வெளியாள் சுளுவாக விமர்சித்து சென்று விடலாம். தமிழ்மணம் குறித்து போதும் போதுமென்கிற அளவு, ஏற்கனவே அவ்வப்போது எழுதி மாய்ந்தாயிற்று.

தற்போதைய கண்ணீரும் கம்பலையுமான டாபிக் ஆன பூங்கா குறித்து, முன்பு Desipundit plans to close shop என்று தேசிபண்டிட் அலசல் கிட்டத்தட்ட பொருந்தும்.

கடைசியா.. சென்னைக் கச்சேரிக்காக.... ஒரு மெக்ஸிக்கன் ஜோக் ப்ளீஸ்...

ஏற்கனவே சொல்லியாச்சு... ஈ-தமிழ்: கேள்வியும் நானே... பதிலும் நானே!

நன்றி பாஸ்டன் பாலா

SUNDAY WITH பாபா - 1

உன் கதை முடியும் நேரமிது... பாட்டைத் திருப்பித் திருப்பிப் போட்டு நம்ம பாசக்காரப் மனச்சாட்சிப் பயலை கடுப்பேத்திகிட்டு இருந்தேன்... பின்னே ஒரு வாரமா அவன் பண்ண அலப்பரை அப்படி.. நம்ம மணிகண்டன் கூட பின்னூட்டத்துல்ல வந்து டென்சன் ஆயிட்டுப் போயிட்டார்.. கொத்ஸ் கிட்டத்தட்ட டேஞ்சர் கொடியைக் கையிலேத் தூக்கிப் பிடிச்சி யப்பா தேவ் உன் மனச்சாட்சிகிட்டக் கொஞ்சம் உஷாரா இருன்னு அன்பா அட்வைஸ் வேறக் கொடுத்தார்...இன்னிக்கு நம்ம ஸ்டார் ரிப்போர்ட்டர்க்கு பர்த்டே வேற...

சரி சரி நிப்பாட்டு... உன்னிய யார் உள்ளே விட்டது.. இது எங்க ஏரியா உள்ளே வராதே... கொத்ஸ்க்கு பொறாமை அவருக்கு ஸ்டார் ரிப்போர்ட்டர் அப்பாயின்ட்மென்ட் தர்றல்லன்னு.. உன்ன உசுப்பி உடுறார்.. மணி டீம் தோத்த பீலிங்க்ல்ல என்னமோவெல்லாம் சொல்லுறார்..அதை எல்லாம் பெரிசா எடுக்க முடியுமா...

இன்னிக்கு நம்மக் கூடப் பேசப் போறது... நாலும் தெரிஞ்சவர்..நாகரீகமானவர்.. நட்புன்னா நேசகரம் நீட்டுறவர்.. பதிவுகள்ல்ல கம்மியாகப் பேசுனாலும் சாரமாப் பேசுறரவரு... நம்ம கிட்ட வெறும் சுட்டிக் கொடுத்துட்டு எஸ்கேப் ஆனா விட்டுருவோமா... பாலாவைப் பேச வச்சிருக்கோம் இல்ல,,, இது முழுக்க முழுக்க நம்ம பாபா கச்சேரிங்கோ.. ஓவர் டூ பாபா..

பாபா - இந்தப் பட்டம் பிடிச்சிருக்கா?

வெட்டிப்பயலிடம் பேசும்போது கிட்டத்தட்ட இதே கேள்வியை அவரிடம் நண்பர் கேட்டார்.

'உங்களை வெட்டி என்று கூப்பிடும்போது வருத்தமாக இருக்காதா?'

வெட்டி பதில் சொல்வதற்குள் அவசரக்குடுக்கையாக நான்,
இந்தியர்கள் எப்போதுமே சூப்பர் ஸ்டார், தளபதி, லிட்டில் மாஸ்டர், ரோஜா மாமா என்று அடைமொழி சூட்டி மகிழ்பவர்கள். அதே குணம்தான் பதிவுலகுக்கும் நீண்டிருக்கிறது.

எனக்கு பாபா என்றழைப்பது அரசியல்/சினிமா/கிரிக்கெட்டின் தொடர்ச்சியாக பிடித்திருக்கிறது. அழைப்பவருக்கு அன்னியோன்யத்தைக் கொடுக்கிறது. பாலாஜி அவர்களே என்று நீட்டி முழக்காமல், 'அடேய் பாபா... இது ஓவர்டா' என்று ரைமிங்காக நட்பாக ஆக்குகிறது

வெட்டி-பாலாஜி வேறுகோணத்தில் ஆராய்ந்தார். வெட்டி என்பது பிராண்ட் நேம். என்னுடைய எழுத்தின் மதிப்பாகத்தான் இந்த விளிப்பை நான் பார்க்கிறேன். சுஜாதா என்றால் அது அவருடைய கதைகளுக்கு கிடைக்கும் உடனடி ரெகக்னிஷன். அதே மாதிரி வெட்டி என்று அழைத்தால், இந்தப் படைப்புக்கு உரிமையானவர்; பதிவின் மூலமாக என்னை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.

இதைப் பட்டம் என்பதை விட எளிமையாக பரிச்சயம் கொள்ள ஒரு புனைப்பெயர்.


அது என்ன E-Tamil, snapjudgement, விளக்கம் சொல்லமுடியுமா?

நான் பதிவு தொடங்கிய காலம் டாட்.காம் அணைய ஆரம்பித்த நேரம். எனினும், எல்லா வார்த்தைக்கும் ஈ(e) அல்லது ஐ (i) முன்னாடிப் போட்டுக் கொள்வது வெப் 1.0-வின் சாமுத்ரிகா லட்சணம். அந்த மாதிரிதான் ஈ-தமிழ்.

தற்போதைய Tamil News-இன் பூர்விகம். தமிழ் இதழ்களில், வலையகங்களில் வருவதில் பிடித்தவற்றை சேமிக்கும் கிடங்கு. எலெக்ட்ரானிக் தமிழாக, பல வலையகங்களில், விதவிதமான எழுத்துருவில் வந்தவற்றை ஒருங்குறியாக்கி, ஒரே இடத்தில் பிட்டு பிட்டாக்கி தொகுக்கும் இடம்.

கொஞ்ச நாள் கழித்து 'சொந்த சரக்கு கிடையாதா?', 'ஏன் நாங்கள் படித்ததையே மீண்டும் மீண்டும் பதிவாக்குகிறீர்கள்?' போன்ற செல்ல சிணுங்கலினால், நானும் இரண்டு வரி மறுமொழி எழுதி, எழுத்தாளன் ஆகிப் போனேன்.

மறுமொழிகளைத் தொகுத்து தனிப்பதிவாக்குவது இரண்டாண்டுகள் முன்பு ஃபேஷனாக இருந்தது. நொடி நேரத்தில் யோசித்து, பதிவு குறித்த தீர்ப்புகளை சுருக்கமாகத் தருவதால் பின்னூட்டம் என்பது ஸ்னாப் ஜட்ஜ்மெண்ட். கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, பின்னூட்டங்கள் எதுவுமே இல்லாமல், படிக்க வேண்டிய/படித்ததில் பிடித்த பதிவுகளை சேமிக்கும் தளமாக Snap Judgement ஆகிப் போனது.

இப்போ எல்லாம் வெறும் பார்வையாளரா மட்டுமே இருக்குறீங்களே என்னக் காரணம்?

இப்பொழுதும் க்விக்கா யோசி; பக்காவானால் பாசி! என்று நினைப்பதை கிறுக்கிக் கொண்டுதான் இருக்கிறேன். பின்னூட்டங்கள் போடுவது, கில்லியில் இணைப்பது போன்றவையும் தொடர்கிறது.

நீண்ட பதிவுகள் எழுதாமல் இருப்பதற்கு பல காரணங்கள். தெரிந்தவர்/நெருங்கியவர் மறைந்தவுடன் தோன்றும் 'வாழ்க்கை அநித்தியம்'; வருடந்தோறும் ஒரு சில மணித்துளிகளாவது புதிய நுட்பங்களையும் நிரலிகளையும் கற்றுக் கொள்ளும் சுய நிர்ப்பந்தம்; ஹாய்யாக டிவி, அப்பா தேவைப்படும், அப்பாவின் காலை சுற்றும் குழந்தை; போன்ற generic காரணங்களையும் சொல்லி வைக்கலாம்.

வலைப்பதிவது இன்னும் அலுக்கவில்லை :)

நான்கு வருடப் பதிவுலக அனுபவம்.. மாற்றங்கள்ன்னு எதாவது நடந்துருக்கா.. ஏற்றமா? இறக்கமா? தனிப்பட்ட மற்றும் பொதுவானப் பார்வை ரெண்டும் சொல்லுங்க பாலா?

ஆரம்பத்தில் இவ்வளவு பேர் கிடையாது. வாசகர்களும் குறைவு. ஆனால், எல்லாப் பதிவுகளையும் கிட்டத்தட்ட எல்லா சக பதிவர்களும் படிப்பார்கள். குழுமம் மாதிரி இருந்தாலும், குழுவிற்குறிய குணங்கள் இல்லாத தனித்துவத்துடன் இயங்கியது. சொந்தக் கதையை நிறைய பேசினார்கள். தனி நபர் வாழ்வியல் சிக்கல்களை மனமுவந்து பகிர்ந்து வாசகனுக்கு செழுமையூட்டினார்கள்.

இப்பொழுது 2000+ பதிவுகள். நிறைய வாசகர்கள். நன்றாக இருந்தால் மனமுவந்து பாராட்டும், பார்வையிடும், பரிந்துரைக்கும் விரிந்த ஊடகம்.

செய்திகள், இடதுசாரி, முதலாளித்துவம், விளையாட்டு, பொருளாதாரம், அறிவியல் என்று ஓரிருவரை மட்டுமே வலம்வந்து, குண்டுச்சட்டியில் குதிரையோட்டிய தமிழ்ப்பதிவுலகம் பரந்துபட்டு, 'அவர் இல்லாவிட்டால் இன்னொருவர்' என்று மாற்று ஊடகமாக மிளிர்கிறது.

உலகத்தின் மூலை முடுக்கில் நிகழ்வதை அறிய சற்றுமுன், பல்சுவை கட்டுரைகளை அறிய பூங்கா, பல்வேறு பதிவர்களின் விருப்பத்தை அறிய மாற்று, பெண்பதிவர்களின் வீச்சை அறிய கூகிள் ரீடர் சக்தி என்று புதிய முயற்சிகள் தொடங்கி வீறுநடை போடுகிறது.

'நான் மட்டுமே வாசகன்' என்னும் அளவில் வலைப்பதிவை துவங்கினேன். கஷ்டப்பட்டு ஒவ்வொருத்தராக அழைத்து, நண்பர்களைப் படிக்க வைத்து, சுட்டி கொடுத்து வலைவீசி வாசகரைத் தேடி, கூகிளை நம்பி தேடல் வார்த்தைகளை நிரப்பி, கூட்டம் சேர்க்கும் நிர்ப்பந்தம் இன்று கிடையாது.

கை சொடுக்கில் தமிழ்மணம், தேன்கூடு, கில்லி, மாற்று கிடைக்கிறது. பார்வையாளர் வருகையேட்டு எண்ணிக்கையை மின்னல் வேகத்தில் உச்சாணிக் கொம்பில் ஏற்றும் வாய்ப்பு கிடைப்பது, புதிய பதிவர்களுக்கு pressure ஏற்படுத்தி பரபரப்புக்கும் உள்ளாக வைக்கிறது. இதனால் அடுத்தவரின் அனுபவத்தைப் பகிரும் அன்னியோன்யம் குறைந்து நாட்டு நடப்பை உலகியலாக ஆராயும் போக்கு மட்டுமே பெருகி வருவது இறக்கம்.

பதிவுகளில் கிளாஸ் - மாஸ் இருக்கா? தேவையா?

கிளாசுக்கு இங்கே போகவும்: வரவனையான்
மாஸுக்கு: ஞானபீடம்: வீரன்

கொஞ்சம் சேரியமாய் பார்த்தால், 'பிதாமகன்' படத்தில் சிம்ரன் ஆடுவது போல், ரோசாவசந்த் பதிவில் ஆண்குறி மாஸ்.
என்னுடைய பதிவில் எப்போதாவது கிளாஸ். நடிகைக்கு கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் வித்தியாசம் தெரியும். உருப்படியான பதிவரும் அதே மாதிரிதான்.

ஆங்கிலப் பதிவுப் போட்டவங்க இன்னைக்கு இதையே ஒரு முழு நேரத் தொழிலாச் செய்யுமளவுக்கு பதிவுகள் அவனுக்கு வளம் கொடுத்திருக்கு... இங்கே நம்மாலே அதெல்லாம் முடியுமா? உங்க கருத்தைச் சொல்லுங்க? CAN BLOGGING BE A FUTURE CARREER?

ஆங்கிலத்தில் சிறு பத்திரிகைகள் சக்கைபோடு போடுகிறது. எல்லா வெரைட்டி எழுத்தாளர்களையும் கொண்டாடுகிறார்கள். தமிழிலும் இதே நிலை இப்போது(தான்) உருவாகிறது. வலைப்பதிவும் கொஞ்ச நாள் கழித்துதான் வேகம் எடுக்கும்.
எடுத்துக்காட்டாக, சினிமாவைப் பற்றி மட்டும் பதிவு எழுதலாம். அந்தப் பதிவர், 'சித்திரம் பேசுதடி' போன்ற அதிகம் புகழ் பெறாத படங்கள் வரும்போது, படத்தை சந்தைப்படுத்த உதவலாம். அவருடைய பதிவில் எக்ஸ்க்ளூசிவ் கொடுக்கலாம். அதன் மூலம் நுழைவுச்சீட்டுகளை ஏலம் விட்டு பணம் சம்பாதிக்கலாம். படம் சம்பந்தப்பட்ட விஷயங்களை வணிகத்தளத்தில் விற்கலாம். இலவசமாகக் கொடுக்க தயாரிப்பாளர்களிடம் நிறைய வஸ்து இருக்கும். அவற்றை போட்டி போட்டுக் கொண்டு வாங்க நுகர்வோர் தயாராக இருப்பார்கள். இருவருக்கும் பாலமாக, பதிவர் அமைவார்.
இவ்வாறே இசை, ஓவியம், புத்தகம், விழியம், நாடகம் போன்ற பிற கலைத் துறைகளிலும் நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது.
சம்பந்தப்பட்டோரை தொடர்பு கொள்வது, அவர்களிடம் viral marketing, word of mouth, buzz creation என்று சந்திரபாபு நாயுடு ரேஞ்சுக்கு பவர்பாயிண்ட் காட்டினால் மயங்காதோரும் உண்டோ?

ஆங்கிலப் பதிவுகள் புத்தகங்களாக மாறுகிறது. தமிழ்ப் பதிப்புலகம் 'சொந்தக் கதை' அல்லது புகழ் பெற்றவர் அல்லாத தனி மனித வரலாற்றை மதிப்பதில்லை. புனைவுக்கு இடமுண்டு; அதுவும் பெயரெடுத்தவராக இருக்க வேண்டும் அல்லது பின் நவீனத்துவம் எழுதுபவராக இருத்தல் வேண்டும் போன்ற நிர்ப்பந்தங்களில் சிக்கியுள்ளது.

ஆங்கிலத்தில் அவ்வாறு இல்லாமல் புற்றுநோயிலிருந்து மீண்டவர், தொலைதூரம் ஓடியவர் வரலாறுகளும் வெளியாகிறது. பெருவாரியாக விற்பனையாகிறது. தமிழ்ப்பதிவர்களில் வெங்கட் போன்ற சிலர்தான் தொடர்ச்சியாக ஒரே துறையில் சுவாரசியமான கட்டுரைகளை அளிக்கிறார்கள். அனேகருக்கு ஒரு நாள் சினிமா, இன்னொரு நாள் விமர்சனம் என்று பல மரம் கண்ட தச்சனாக புகுந்து புறப்படுவதால், புத்தகமாகத் தொகுக்க இயலாத நிலை.

இந்த நிலையும் காலப்போக்கில் மாறும். துறைசார் பதிவுகளின் லாபத்தன்மை கருதியோ, சொந்த விருப்பத்தின் உந்துதலிலோ, குழுப்பதிவுகளும், தொடர்ச்சியும் அமையப்பெறும். இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் இந்தப் போக்குகளை நிறுவனப்படுத்த ஏதாவது கூகிள் போன்ற பிசினஸோ, தன்னார்வ அமைப்போ, விகடன்/குங்குமம் போன்ற வெளியீட்டாளர்களோ முயற்சிகளை எடுத்து, சரியான பாதையை வகுத்து, வலைப்பதிவதை லாபகரமான பொழுதுபோக்காக மாற்றலாம்.



SUNDAY WITH பாபா தொடரும் ஒரு சின்ன இடைவேளைக்குப் பிறகு... இன்னும் பாபா பேச நிறைய இருக்கு.. கேக்க ரெடியா....

ஜி.ராகவனின் கள்ளியிலும் பால் படிச்சீங்களா?

வீக் என்ட் எல்லாரும் ரிலாக்சாக் கால் கையை நீட்டிகிட்டு ஸ்டார் ரிப்போர்ட்டருக்குக் காத்துக் கிடப்பீங்கன்னு தெரியும்.. அதான் பந்த் அன்னிக்குக் கூடக் கடைச் சாத்தாமக் கடமை ஆத்தக் கிளம்பி வந்துட்டோம்... இந்த தடவை நம்மக் கிட்டச் சிக்குனவரு.. சும்மா பலமுக மன்னன்ங்க... மகரந்தம்ன்னு பதிவு பேர்.. ஆனா அண்ணாச்சி புகுந்து வராத ஏரியாவே கிடையாது...

இப்போ ரிசன்ட்டா.. நம்மாளு கள்ளியிலும் பால்ன்னு ஒரு தொடர் எழுதுனாரு... படா சுவராஸ்யமாக் கதைப் போச்சு... சொம்மா அந்தக் காலத்து பாலச்சந்தர் டைப் மேட்டர் கதை... கதையைப் படிச்ச ஓடனே.. அவர் கிட்டப் பேச ட்ரை பண்ணா.. அண்ணாச்சி பிசி பிசின்னு தான் லைன்ல்ல் வருது...
அப்பாலே எதோ தமிழ் மணம் புண்ணியத்துல்ல நாம வேற ஸ்டார் ரிப்போர்ட்டர் ஆயிட்டோமா.. அத்தோடு ஓலகப் புகழ் எல்லாம் வந்தவுடன அண்ணாச்சிக்கு மறுபடியும் போன் போட்டோம்.. அவர் இப்போவும் பிசி... பட்

இப்போ நான் ஸ்டார் ரிப்போர்ட்டர் ஸ்பீக்கீங்ன்னு தான் சொன்னேன்.. உங்களூக்காகவும் உங்க பேன் ஸ்க்காகவும் தாரளாமப் பேசலாமேன்னு ஜி.ரா சொல்ல.. அப்புறம் என்ன கேள்வியை எல்லாம் அடுக்கு அடுக்குன்னு அடுக்கிட்டோம் இல்ல... ஓவர் டூ ஜி.ரா..

கள்ளியிலும் பால் நிஜ வாழ்க்கைச் சம்பவங்களின் பிரதிபலிப்பா.. நேர்மையானப் பதில் தாருங்கள்?

பதில் : இல்லை. அதாவது எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரிந்த வகையில் இல்லை. ஆனால்....அனைவருக்கும் தெரிந்து மூன்று எடுத்துக்காட்டுகள் சொல்ல முடியும்.
1. விவியன் ரிச்சட்ஸின் குழந்தைக்குத் தாயார் யார்? தெரிந்ததுதானே.
2. கனிமொழியின் தாயார்...கனிமொழியின் தந்தைக்கு மனைவியா? துணைவியா?
3. ஜெயலலிதாவிற்கும் யாருக்கும் தெரியாமல் குழந்தை இருப்பதாகச் சொல்கின்றார்களே!
இன்னொன்று..இங்கு நான் குறிப்பிட்ட யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதாகக் கருதக்கூடாது. அவரவர் வாழ்க்கைக்குத் தக்க முடிவை அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். அதற்கு அவர்களும் அவர்கள் குடும்பங்களுமே பொறுப்பு.

கள்ளியிலும் பால் கதையை நீங்கள் எழுதியதின் நோக்கம் என்ன? அந்த நோக்கம் நிறைவேறி விட்டதாக உணர்கிறீர்களா?

ம்ம்ம்ம் நோக்கம் நிறைவேறியதான்னு எனக்குத் தெரியாது. அதுல நான் சொல்ல வந்தது...ஒருவருடைய வாழ்க்கையை அவரே முடிவு செய்யும் பொழுது நாம் ஆதரிக்காவிட்டாலும் சரி...எதிர்க்கக்கூடாது என்பது அதில் நல்லது கெட்டதுகளை எடுத்துச் சொல்லலாம்..ஆனால் குறுக்கே விழுந்து தடுப்பதெல்லாம் டூ மச்

சரி கதைக்கு வருவோம்... சந்தியாவின் பாத்திரப் படைப்பில் நிறைய முரண்கள் தெரிகிறதே.. அவளை வெறும் உடல் பசி எடுத்த ஒரு பெண்ணாய் சித்தரித்து இருப்பது பெண்ணியவாதிகளிடம் உங்களுக்கு எதிர்ப்பைச் சம்பாதித்து தர வில்லையா? ஒரு வேளை அவர்கள் உங்கள் கதையைப் படிக்கவில்லையோ?

இல்லை கண்டிப்பாக இல்லை. கதையைப் படிக்காமலலி்ருந்தார்கள் என்று நம்பவில்லை. ஆனால் பலர் கருத்துச் சொல்லத் தயங்கினார்கள். ஆண்கள் உட்பட என்னிடம் தனிப்பட்ட முறையில் கருத்துகளைச் சொன்னவர்களும் உண்டு

சந்தியாவின் அடிப்படைப் பிரச்சனை என்ன? அதுப் பற்றி கதையில் எந்த விதமான தகவ்லும் இல்லையே... WAS IT INTENTIONAL?

இல்லை. Not intentional. சந்தியாவிற்கு நான்கு இட்டிலி போதவில்லை. பத்து இட்டிலி சாப்பிடுகிறாள்.அவ்வளவுதான். அதுகூட பிரச்சனை என்று நான் கருதவில்லை. ஆகையால்தான் அதைப்பற்றி விளக்கிக்கொண்டிருக்கவில்லை.

திருமணத்திற்குப் பிறகு சந்தியாவும் சராசரி பெண்ணாய் செக்ஸ் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி எழுந்துச் செல்வது போல் காட்டியதன் அர்த்தம் என்ன?

பதில்: திருமணத்திற்குப் பிறகு அவளுக்கு செக்ஸ் உணர்ச்சி எழக்கூடாதா? எழுந்தால் என்ன செய்து கொள்ளலாம் என்று அவள் கணவனோடு ஒப்புக்கொண்ட படிதானே செய்தாள். அதைச் சொல்லித்தானே சந்தியா திருமணத்திற்கு மறுத்தாள். ஆனாலும் தானும் அப்படித்தான் இருக்கப் போவதாகவும்...ஆகையால் சுதந்திரம் இருவருக்கும் உண்டு என்று ஒப்புக்கொண்டுதானே சரவணன் திருமணப் பேச்சையே எடுத்தான். ஆனால் இருவருமே....அந்தச் சுதந்திரத்தைத் தூக்கிப் போட வேண்டியதாகப் போயிற்று. அதற்குக் காரணம்...இருவருக்குமே அடிப்படையிலேயே ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பு. அடுத்தது குழந்தை.

கதையின் கடைசி அத்தியாயம், குறிப்பாக சந்தியா யாரோ முகம் தெரியாத ஒரு வாலிபனோடு நெருக்கம் காட்டுவதுமாய் அதுவும் இன்னொரு ஆணின் முன்னிலையில்.. இது பெண்களின் சுயமரியாதையை அவமதிக்கும் படியாக உள்ளதே?

இரண்டு ஆண்கள் இருக்கையில்..ஒரு பெண்...ம்ம்ம்....எல்லாப் பெண்களும் அப்படித்தான் என்று சொல்ல முடியாது. சந்தியாவிற்கு அது கடினமாக இல்லாத பொழுது...நமக்கென்ன அதுவுமில்லாமல்...அவளுக்கே தெரியாமல் ஒரு உறுத்தல் வருவதும் அப்பொழுதுதான்..ஆகையால் கதைக்கு அது தேவையானதே

பல பால் உறவுகளைச் சுட்டியிருப்பது இடைச்செருகலாகவும் பரபரப்புக்காக நுழைக்கப்பட்டதும் போல் தோன்றுகிறதே தவிர்த்திருக்கலாமோ?

பதில் : கண்டிப்பாகத் தவிர்த்திருக்கலாம். ஆனால் எழுதுகையில் அப்படி எழுத வேண்டுமென்று தோன்றியது. ஆனால் அப்படிப்பட்டவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்...என்று எண்ணி மாற்றவில்லை.

தனிப்பட்ட முறையில் சந்தியாவைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: அவள் ஒரு நல்ல பெண்

நம் சமூகத்தில் வாணிகளும் உண்டு.. சந்தியாக்களும் உண்டு... வாணிகளின் வாழ்க்கை முறை தான் சரி என்ற வாதத்தை எதிர்க்கிறீர்களா?

பதில்: இல்லை. நிச்சயமாக இல்லை. சந்தியாவிற்கு அவள் விரும்பிய வகையில் வாழ உரிமை உண்டு என்றால் வாணிக்கும் அந்த உரிமை உண்டு. தனி வீடு விரும்பிகள் தனிவீடு கட்டுகிறார்கள். அப்பார்ட்மெண்ட் விரும்பிகள் அப்பார்ட்மெண்ட் வாங்குகிறார்கள். அதற்கு அவர்களது பொருளாதாரச் சூழ்நிலையும் ஒரு காரணியாகிறது.

கதையின் முடிவை ஒரு குழந்தையின் கையில் கொடுத்து விட்டதன் நோக்கம் குடும்ப சென்டிமென்ட்டா?

பதில்: இல்லை. அவர்கள் இருவருக்குமே குடும்ப வாழ்க்கை புதிது. அதுவும்..அவர்கள் குடும்பத்திற்குள் நுழைந்ததே குழந்தையால்தான். தனக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்ற எண்ணமே....அவர்கள் மனதில் இந்த மாற்றத்தை உண்டாக்கி விட்டது. அவர்கள் அன்பற்றவர்களாக இருந்திருந்தால்..தூக்கிப் போட்டு விட்டு போயிருப்பார்கள். ஆனால்..அப்படியில்லையே.

ஜி.ரா.. பதிவுலகின் ஜென்டில்மேன் என்று ஒரு பட்டம் உள்ளது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் படைப்புகளின் வாயிலாக உங்களைப் படிப்பவர்களுக்கு நீங்கள் பொறுப்பானக் கருத்துக்கள் சொல்ல வேண்டும் என்ற கடமையை ஏற்றுகொள்கிறீர்களா?

பதில்: பதிவுலக ஜெண்டில்மேனா? நானா? :-) கிழிஞ்சது போங்க.கிண்டல் பண்ணவும் அளவு வேண்டாம்! கருத்துச் சொல்வது! அது அறிவாளிகளின் கடமை. அறிவு இருப்பதாகக் கருதுகிறவர்கள் சொல்கிறார்கள். என்னை அந்த வகையில் சேர்க்க வேண்டாம். மனதைப் பாதித்ததைச் சொல்லிக்கொண்டு போகிறேன். அதில் நல்லது எது கெட்டது எது என்பதைக் காலமும் பதிவுலகமும் தீர்மாணிக்கட்டும். தளும்பாமல் இருக்க நான் நிறைகுடம் அல்ல என்பதை மட்டும் உணர்ந்தவன் நான். ஆகையால்....அதீத எதிர்பார்ப்புகள் வேண்டாம். :-)

நாளை... ஏன் இன்றே சந்தியா போன்ற ஒரு பெண்ணை சந்திக்க நேர்ந்தால் உங்கள் ரியாக்ஷன் என்னவாக இருக்கும்?

பதில்: ஒரு ரியாக்ஷனும் இருக்காது. எப்படி இருக்கீங்க? சுந்தர் நலமா? சரவணன் நலமா என்று மட்டும் கேட்பேன்.

கடைசியா ஒரு கேள்வி... உண்மையைச் சொல்லணும்.. கள்ளியிலும் பால்.. சும்மா ஒரு பரபரப்புக்காக.. கவர்ச்சி கில்மாக்கள் கலந்து எழுதப்பட்டது என்பது தானே உண்மை...

பதில்: தெரியலை தேவ். ஆனா ஒன்னு உண்மை. பெண் சுதந்திரம் என்பதை ஆண் தரக்கூடாது. பெண்ணே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நம்புகிறவன் நான். பொதுவில் எந்தச் சுதந்திரமும் அப்படித்தான். வேணுங்கிறவங்க எடுத்துக்கனும். அதே நேரத்துல அடுத்தவங்க சுதந்திரத்தையும் மதிக்கனும். அவ்வளவுதாங்க.

நன்றி ஜிரா.

tamil10