Sunday, May 24, 2009

சுருளு மீசைக்காரனடி வேலுத்தம்பி

தமிழன் என்றொரு இனம் தனியே அவனுக்கு ஒரு குணமுண்டு...

பாடத்திலே படிச்சதா இல்ல பெரியவங்க சொல்லிக் கேட்டதான்னு ஞாபகம் இல்ல...ஆனா அப்படி ஒரு பெருமை தமிழ் சமூகத்துக்கு ஒரு காலத்தில் கட்டாயம் இருந்தது...காலப்போக்கில் தமிழினம் எப்படியெல்லாமோ போய் எங்கெல்லாமோ சாயந்து இன்று உலகத்திலே மிகவும் அதிகமான சகிப்புத் தன்மை கொண்ட ஒரு அற்புத இனமாக மாற்றம் கண்டு விட்டது...சகிப்புத் தன்மை என்றால் அப்படி ஒரு சகிப்புத் தன்மை...எருமை மாட்டிற்கு அடுத்தப் படியாக நம்மினம் தான் சகிப்பு தன்மைக்கு அர்த்தம் சொல்கிறது...

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு ஒரு கவலை இல்லை.. நான் தாண்டா என் மனசுக்கு ராஜா.... திரையில் வந்த பாட்டே மொத்த தமிழ் இனத்தின் வாழ்க்கை முறையாகிப் போனது..சமூகம் சார்ந்த தமிழனின் வாழ்க்கை..குறுகிய வட்டத்திற்குள் அடைய ஆரம்பித்தது...ஊருக்காக வாழ்ந்த தமிழன்...தனக்காகக் கூட வாழத் தயங்கும் ஒரு காலகட்டத்தில் பிறந்தவர்கள் நாம்...ஆம் தமிழ இன்று மனத்திற்குள் மட்டுமே வீரன்... தன் மனத்தளவில் அவன் தான் ராஜா...அங்கு அவன் ஆட்சி செய்வான்...ராஜ்ஜியம் அமைப்பான்... பல வீரம் தீரம் நிறைந்த சாகசம் செய்வான்.... வீட்டின் உள்ளறைக்குள் பூட்டிக்கொண்டு உலகத் தலைவர்களை எல்லாம் நியாயம் விசாரிப்பான்...பொங்குவான்...புரட்சி செய்வான்...கதவுகள் திறந்து வீதிக்கு வரும் போதோ தலை குனிந்து கொள்வான்..தமிழன் என்ற அடையாளம் வெளியே தெரியாமல் பொத்திப் பார்த்துக் கொள்வான்..வேற்று மொழி மோகம்...அயல் நாட்டு ஆடை அலங்காரம்....தன் அடையாளங்கள் மொத்தத்தையும் தொலைத்து நிற்கிறான் இன்றைய தமிழன்...

தன் பணி தன் அன்றாடத் தேவைகளுக்கு பணம் பண்ணுவது மட்டுமே என சுருங்கி போய்விட்டது தமிழினம்...கலை இலக்கியம் ஆட்சி அதிகாரம் எனக் கோலோச்சிய இனமடா நம் தமிழினம் என எதாவது பள்ளியிலோ கல்லூரியிலோ எதாவது ஒரு தமிழ் ஆசான் பாடம் நடத்தினால் அதெல்லாம் தற்காலத் தமிழனுக்கு கொட்டாவியை மட்டுமே வரவழைக்கிறது...

தன் மற்றும் தன் குடும்பம் சார்ந்த பொருளாதாரப் பிரச்சனைகளே அவன் எண்ணங்களை இறுக்கி...வேகத்தைச் சுருக்கி...அவன் வாழ்க்கையைக் கருக்கி விட்டது...20களின் இறுதியிலே பெரும்பான்மையான தமிழின இளைஞர்கள் முதுமை எய்தி விடும் அவலம் நடந்தேறி கொண்டிருக்கிறது... தமிழின இளைஞனின் அதிகப் பட்ச லட்சியம் ஒரு கல்யாணம்..ஒரு குடும்பம்...அது நடந்தால் அவன் செட்டில் ஆகிவிட்டான் என்று அர்த்தம்...அதுவும் காதல் கல்யாணம் என்றால் அவன் அடுத்த தலைமுறையின் ஆதர்ச புருசன் ஆகிவிடுகிறான்...

அந்த தாக்கம் தான் நம் தமிழ் சினிமா ஹீரோக்கள் எல்லாரும் முதலில் காதல் நாயகர்களாகவே அறிமுகமாக காரணமோ என்னவோ...தன் கூட்டுக்குள் சுருங்கி போன தமிழன்...ஜன்னல் வழியே விழும் வெளிச்சமும் திரை வெளிச்சமே...அங்கிருக்கும் யதார்த்த வாழ்க்கை மீறிய பெரிய பிம்பங்களே அவனுக்கு ஆதர்ச அவதாரங்கள் என ஆண்டுகள் உருண்டு ஓடிக்கொண்டிருக்கின்றன...

வீரம் சார்ந்த விளையாட்டு...அறிவு சார்ந்த கலைகள்...சமூகம் சார்ந்த வாழ்க்கை...சுயமரியாதை சேர்ந்த உயர்பண்புகள்.. இது தானடா தமிழினம்..இப்படி வாழ்ந்தவனடா உன் மூப்பாட்டன் தமிழின பெரியோன்.. என தமிழனுக்கு அடித்துச் சொல்ல இன்று ஒரு குரல் இல்லை....

சேரன் சோழன் பாண்டியன் பல்லவன் ஆங்கிலேயனை எதிர்த்த பொம்மு வரை அப்படி தான் தமிழின குரல் ஒலித்து வந்தது.... ஏன் 50 களில் ஆரம்பத்தில் கூட அப்படி திராவிடக் குரல்கள் ஒலித்தன...காலப் போக்கில் அந்த கரும்சிவப்பு குரல்கள் தம் ஒலி அளவை குறைத்து தாள லயத்தை மாற்றி கொண்டு போன அவலம் தனிக்கதை...

சொல்ல வருவது என்னவென்றால் எத்தனையோ தமிழ் வீரர்களின் கதையைப் படித்திருக்கிறோம்...கேட்டிருக்கிறோம்...நம் தலைமுறையில் நமக்கு அருகிலே கேட்ட ஒரு வீரக் குரலுக்கு சொந்தக் காரன்...தன்னலம் பாராமல்...இன நலம் காக்க களம் கண்டவன்... போராட்டப் பயணத்தில் தினம் ஆயுளைச் செலவழித்தவன்...இன விடுதலைத் தேடலில் தன்னை முழுமையாக அர்பணித்தவன்.. தீவுத் தமிழனின் துயர் துடைக்க துப்பாக்கி ஏந்தியவன்...

அந்த வீரத் தமிழன் செய்த மொத்த செயல்களும் புனிதம் வாயந்தவை என இந்தப் பதிவில் நான் வக்காலத்து வாங்கவில்லை....சில பல ஏற்கதகாத விரும்ப முடியாத முடிவுகளும் அவன் தம் இயக்கப் பாதையில் இருப்பது கசப்பான உண்மையே

ஆனாலும் தமிழ் தமிழன் தமிழினம் என்னும் அடையாள மிச்சங்களை நெஞ்சோரம் கொஞ்சமாயினும் தேக்கி வைத்திருக்கும் எந்த ஒரு தமிழனுக்கும் எதோ ஒரு விதத்தில் அவனைக் கட்டாயம் பிடிக்கும்...

தலைகுனிவே வாழ்க்கையின் நியதி என வாழ பழகி விட்ட தற்கால தமிழினத்தில் இன எழுச்சி காண தலை உயர்த்திய ஒற்றை தமிழன் அவன்.... அவன் வேட்கை வென்றிருந்தால் இன்னும் ஒரு சில கோடி தமிழர்களின் தலையும் நிலையும் உயர்ந்திருக்கும்......

தற்காப்புக்காக தலை குனியலாம்.... தன்மானம் தொலைத்து எக்காலமும் பணியக் கூடாது என கொள்கை உறுதி கொண்ட அந்த வீரன் வேலு தம்பிக்கு என் சல்யூட் இந்தப் பதிவு

6 comments:

கானா பிரபா said...

தற்காப்புக்காக தலை குனியலாம்.... தன்மானம் தொலைத்து எக்காலமும் பணியக் கூடாது என கொள்கை உறுதி கொண்ட அந்த வீரன் வேலு தம்பிக்கு என் சல்யூட் இந்தப் பதிவு//

முத்தாய்ப்பாய் முடித்த இந்தப் பதிவு நெஞ்சில் பதிகிறது.

ஆயில்யன் said...

/தற்காப்புக்காக தலை குனியலாம்.... தன்மானம் தொலைத்து எக்காலமும் பணியக் கூடாது என கொள்கை உறுதி கொண்ட அந்த வீரன் வேலு தம்பிக்கு என் சல்யூட் இந்தப் பதிவு //

உணர்வுகளுக்கு உணவு கொடுத்தது இவ்வரிகள்!

Unknown said...

கா.பி, ஆயில்ஸ், சிவா - வருகைக்கும் கருத்து தருகைக்கும் நன்றி

கோபிநாத் said...

என் சல்யூட்டும்!

கண்டும் காணான் said...

கை தட்டியாகிவிடது , அடுத்த படிக்கு வாருங்கள் உறவுகளுக்கு கை கொடுங்கள்

http://kandumkaanaan.blogspot.com/

Unknown said...

என் சல்யூட் எப்போதும் ...

tamil10