Showing posts with label ஆபிசர். Show all posts
Showing posts with label ஆபிசர். Show all posts

Friday, October 30, 2009

அமெரிக்காவில் ஆபிசர்

ஸ்ப்ப்ப்ப்பா.... நாங்க எல்லாம் ஒரே பிசி....

நம்ம ஆபிசர் பொட்டி தட்ட ஆரம்பிச்சு பலக் காலம் ஆச்சு...எம்புட்டு வருசமாவோ பொட்டி தட்டுறார்...இந்தப் பொட்டி தட்டுறவங்க எல்லாம் அடிக்கடி ஒரு பிளைட்டை புடிச்சு அங்கிட்டும் இங்கிட்டுமா போயிட்டு வரும் போது ஆபிசர் ஆளுக்கு ஒரு சாக்லேட் வாங்கி கொடுத்துட்டு அடுத்து சொல்லுற டயலாக் தான் மேலே நீங்கப் படிக்குற டயலாக்...

நம்ம ஆபிசரும் பல நாள் மொட்டை மாடியிலே நின்னு பறக்குற பிளைட்டுக்கும் பருந்துக்கும் வித்தியாசம் தெரியாம சில சமயம் பருந்தைக் காட்டி பொண்டாட்டி என்னிக்காவது ஒரு நாள் நான் அதுல்ல ஏறி பறக்கத் தான் போறேன் பாரேன்ன்னு சவுடால் விட்டுட்டு தான் இருக்கார்...

ம்ம்க்கும் பருந்துல்ல ஏறி பறந்த முதல் மனுச ஜென்மம்ன்னு கின்னஸ்ல்ல பேரு கட்டாயம் வாங்கிருவிங்கன்னு சொல்லுங்கன்னு ஆபிசரம்மா சொன்ன பொறவு தான்...அடக்கொக்க மக்கா பருந்துக்கு இவ்வளவு பந்தி வச்சு பஞ்ச் விட்டோம்ன்னு ஆபிசர் பீல் ஆன சம்பவம் ஏராளம்..

இந்த மளிகை கணக்கு எல்லாம் சின்ன பொஸ்தகத்துல்ல எழுதுவாங்களே...அப்படி ஒரு பொஸ்தகம் தீந்துப் போன நேரம்...ஆபிசரம்மா கையிலே சிக்குன பொஸ்தகம்...ஆபிசரோட...ம்ம்க்கும் நீங்க நினைச்சதே தான்...பாஸ்போர்ட் புக் தான்... பொங்குன ஆபிசரை அப்படி ஒரு நக்கல் பார்வை பாத்துட்டு ஆபிசரம்மா சொன்னது...பாஸ்போர்ட் எல்லாம் பிளைட்ல்ல பறக்கறவங்களுக்கு தான் வேணும்...அதுவும் நாடு எல்லாம் தாண்டி போகத் தான் வேணும்...உள்ளூர் பருந்து பார்ட்டிக்கு எல்லாம் எதுக்கு....கண்க்கு பொஸ்தகம் வாங்குற காசுல்ல ஒரு இரண்டு ரூவா மிச்சமாகுமில்ல...."

இரண்டு ரூவாயா...எம்புட்டு செலவு பண்ணி விடிகாலமே போய் லைன்ல்ல நின்னு எடுத்த பாஸ்போர்ட் மதிப்பு இரண்டு ரூவாயா...இந்த பாஸ்போர்ட்ல்ல ஸ்டாம்ப் விழல்லன்னா பாரு.... ஆபிசர் முடிக்கல்ல

இப்படியே தபால் ஆபிஸ் பக்கம் போய் நில்லுங்க.....யாராவது ஸ்டாம்ப் வாங்கி கீழே விடுறாங்களான்னு பாருங்க...பாஸ்போர்ட்ல்ல டக்குன்னு பிடிச்சுக்குங்க.....

ஆபிசருக்கு வெறியே வந்தும் பயன் இல்லை...

ஒரு தரம் பாக்கிஸ்தான் பார்டர் போனப்போ...அப்படியே லைட்டாக் காலை உள்ளே வச்சுட்டு பாஸ்போர்ட்டை நீட்டி ஒரு ஸ்டாம்ப் வாங்கிரலமான்னு யோசிச்ச போது...அங்கே நின்ன பாக்கிஸ்தான் அதிக சினேகிதமா துப்பாக்கியை தூக்கி பிடிச்ச ஸ்டைல்ல பாத்து...இங்கிட்டு ஸ்டாம்பிங் வேற இடத்துல்ல தான் கிடைக்கும் போலிருக்குன்னு முடிவை மாத்திகிட்டு மனசைத் தேத்திகிட்டு ஆபிசர் திரும்பிட்டார்...அடுத்தாப்பல்ல ராமேஸ்வரம் போனப்போ அங்கிருந்து இலங்கை பக்கம் தானே படகுல்ல போய் ஒரு ஸ்டாம்பிங்க் போட்டுராலமான்னு ஒரு யோசனை உதிச்சது.... விசாரிச்சதுல்ல போட்டுருவாய்ங்களாம்...ஸ்டாம்பிங் இல்ல...ஆளையேன்னு சொல்லி ஆசைக்கு அழகா ஆப்பு வச்சுட்டாங்க....

இப்படி எல்லாம் இருந்த ஆபிசர் வாழ்க்கையிலே தீடிர் திருப்பம்....பாஸ்போர்ட் ஆபிஸ் வீணாக் கொடுத்த பாஸ்போர்ட் அப்படின்னு ஒரு லிஸ்ட் போட்டு அதுல்ல நம்ம ஆபிசர் பாஸ்போர்ட்டை சேக்கப் போன அந்த வினாடி விண்ணகத்துல்ல இருந்து ஒரு வெளிச்சம்...ஆபிசரோட பிராஜக்ட் மேனஜர் மண்டைக்குள்ளே விழுந்து....யாருமே இல்ல போறதுக்கு இருக்கத்து ஆபிசர் மட்டுமே அப்படின்னு ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு வந்து.... போறீயான்னு கேக்க.....

அந்த நிமிசத்துல்ல இருந்து ஆபிசர் விசா ஸ்டாம்ப் ஆன அன்னிக்கு ஆபிஸ்ல்ல ஒரு மரம் வேரோடு பேந்து விழுந்த வரைக்கும் நடந்த அனைத்தும் தனி பெரும் வரலாற்று பெருமை வாய்ந்த நிகழ்வுகள்....

அப்படியே பிளைட் ஏறுனப்போ...அந்த படிக்கட்டுல்ல ஆபிசர் சொல்ல நினைச்சது....

அலோ ஜென்டில்மேன் ஸ் லேடீஸ் கிட்ஸ்....நல்லாப் பாருங்க...ஒழுங்காப் பாருங்க...நானும் அமெரிக்காப் போறேன்...நானும் அமெரிக்காப் போறேன்....நானும் பொட்டி தட்டுற ஆபிசர் தான் தான்......நானும் பொட்டி தட்டுற ஆபிசர் தான் தான்..

யப்பா டிரைவர் வண்டியை நல்லா உசரமாத் தூக்கி எங்க வீட்டு மாடிப் பக்கமா ஒரு ரவுண்ட் விட்டு அமெரிக்காவுக்கு கிளப்பு....சும்மா டாப் கியர்ல்ல எடுக்கணும் புரியுதா....

நான் அமெரிக்காப் போறேன்...நான் அமெரிக்காப் போறேன்...நான் அமெரிக்காப் போறேன்...

இது தான் ஆபிசர் அமெரிக்கா வந்த கதை....


ஒரு ஒத்துமை பாத்தீங்களா...நான் அமெரிக்கா கிளம்புன அதே சமயம் தான் நம்ம ஆபிசரும் அமெரிக்கா கிளம்பியிருக்கார்....மக்கா இந்த ஆபிசரும் நானும் ஒண்ணுன்னு இன்னும் நினைச்சீங்கன்னா அதுக்கெல்லாம் நான் பொறுப்பு இல்லை சாமியோவ்...

இதர ஆபிசர் பதிவுகளுக்கு இங்கே சொடுக்கவும்

Saturday, March 21, 2009

ஆபிசர் IS BACK

க.க.போ.க.... க.க.போ.க.... இதே மேட்டரை நம்ம ஆபிசர் காலையிலே இருந்து கன்டினீயூசா சொல்லிகிட்டு இருந்ததைப் பார்த்து பருத்தீவீரன் மெகா டென்சன் ஆகிட்டாப்பல்ல

ஆபிசர்...என்ன இது வேலை செய்யிற ஆபிஸ்ல்ல பேட் வேர்ட்ஸ் எல்லாம் பேசிகிட்டு...

யப்பா வீரா....பீதியைக் கிளப்பாதே.. நான் வர்ற தேர்தல்ல எதாவது மக்களுக்கு செய்யலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்ப்பா

யோவ் ஆபிசரே ஆபிஸ்ல்ல கொடுக்குற வேலையே ஒழுங்காச் செய்ய மாட்டேங்கறீங்கன்னு தானே உங்களை ரெண்டு மாசமா பெஞ்ச்ல்ல உக்கார வச்சிருக்காங்க...

ம்ம்ம் ஒரு பொது நல தொண்டன் உருவாகுறதை முதல்ல யாரும் புரிஞ்சிக்க மாட்டாங்க போக போகத் தான் புரியும்

ஆபிசர்..உங்களை பெஞ்சல்ல் உக்கார வச்சது தப்புய்யா... ரொம்ப தப்பு...

உனக்கு மெதுவாப் புரிய ஆரம்பிச்சுருக்கு... போக போக புரிஞ்சுக்குவ வீரா

ம்ம்ம ஆபிசர் உங்களுக்கு இருக்க குசும்புக்கு உங்களை பெஞ்ச்ல்ல உக்கார வச்சது தப்பு.. அப்படியே ஏத்தி நிக்க வைக்கணும்ய்யான்னு சொல்ல வந்தேன்.. எனக்கு வேலை இருக்கு சாமி..ரிசசன் டைம்ல்ல உங்க கூட சேர்ந்து வெட்டியாப் பேசி வேலைக்கு உலை வைச்சுக்க கூடாதுன்னு நான் ஒரு முடிவுல்ல இருக்கேன்...ஆளை விடுங்க ஆபிசர்

பருத்தி வீரனை அப்படியே ஒரு லுக் விட்ட ஆபிசர்... கையிலிருந்த பால் பாயிண்ட் பென்னை மோவாயிலே வ்ச்சு ஒரு சிந்தனைச் சிற்பி போஸ் கொடுத்து விட்டு... ண்டும்..க.க.போ.க...அப்படின்னு முணுமுணுக்க ஆரம்பிச்சார்...

போன வேகத்தில் ரிவர்ஸ் போட்ட பருத்திவீரன்...அது சரி ஆபிசர்...க.க.போ.க.. அப்படின்னா மட்டும் என்னன்னு சொல்லிருங்க...

"கண்ணா வீரா... இப்படி ஒரு கேள்வி நாட்டு மக்கள் எல்லாரும் கேக்கணும்... அப்படி கேக்கும் போது தான் நாம் பாப்புலர் ஆவோம்...எப்படி என் ஐடியா"

"அப்படின்னா...க.க.போ.க அப்படின்னா என்னன்னு உங்களுக்கே தெரியாது...அப்படித் தானே..."

"இது வரைக்கும் தெரியாதுன்னு வேணும்ன்னா சொல்லலாம்...அப்படித் தான் சொல்லணும்..."

"யோவ் ஆபிசர் ஒரு கட்சி ஆரம்பிக்கப் போறீங்க..அதுக்கு கக்காபோக அப்படின்னு பேர் வேற வச்சாச்சு..ஆனா அதுக்கு அர்த்தம் தெரியாதுங்கறீங்க...உங்களை ...."

"வீரா... அது... க புள்ளி க புள்ளி போ புள்ளி க... நீ சொல்லற மாதிரி சொல்லப் பிடாது புரியுதா...."

"சரி உங்களை நம்பி யார்ய்யா ஓட்டுப் போடுவா...."

"அதுக்கு தான் ஐடியா இருக்கு... கூட்டணி....ஒரு 987 கட்சித் தலைவர்களை எனக்கு பர்சனலாத் தெரியும்....அவங்க கட்சிகளோடக் கூட்டணி பேசப் போறேன்..."

"என்னது 987 கட்சியா.... உலகம் முழுக்கவா...."

"நோ நோ....ஆல் இன்டியன் ஸ் முக்கிய தமிழன் ஸ் கட்சிஸ்....ஒரு சின்ன ரகசியம் அதுல்ல இருக்கு உனக்கு மட்டும் சொல்லுறேன்.. கேளு..."

"ரகசியமா... என்ன எழ்வு ஆபிசர் அது..."

"அந்த 987 கட்சியும் என்னைத் தவிர வேற யார் கூடவும் கூட்டணி வைக்கவே மாட்டாங்க அப்படி ஒரு மேட்டர் புடிச்சு வச்சுருக்கேன்..."

"ம்ம் ஆபிசர்ங்கண்ணா..அது என்னங்க வெண்கல மேட்டர்..மகா ஜனங்கள் எல்லாம் கேக்கணும்ன்னு பிரியப்படுறாங்க.. சொல்லிருங்க..."

"அந்த 987 கட்சியும் இதுவரைக்கும் ஆரம்பிக்கவே இல்ல... எல்லாத் தலைவர்களும் என்னை மாதிரியே ஆரம்ப கால சிந்தனையிலே தான் இருக்காங்க...சோ.. மீ த பர்ஸ்ட் ஆரம்பிச்சிட்டா... சீனியாரிட்டி முறையிலே எனக்கு தான் அதிக சீட்... அடிச்சு வாங்கிருவோம்ல்ல... இப்போ இருக்க ஆளுங்கட்சி கூட கூட்டணி மேட்டர்ல்ல நம்ம அளவுக்கு ஸ்டாரங்க் இல்ல..."

பருத்திவீரன் மடக் மடக்குன்னு நாலு கிளாஸ் தண்ணியை எடுத்து குடிச்சுட்டு வெறி தனியாம ஆபிசரைப் பாத்தான்...

"யோவ் ஆபிசர் பட்டப்பகல்ல என்னை ஆபிசுக்கு லீவ் போட வெச்சுட்டு டாஸ் மாக் போய் தண்ணியைடிக்க வச்ச பாவம் உங்களுக்கு வேணாம்...ஒழுங்கா பெஞ்ச் துடைக்கிறதைக் கன்டினியூ பண்ணுங்க... எனக்கு வேலை இருக்கு..."

"ம்ம்ம் வீரா.. இப்படி தான் அண்ணா திமுக ஆரம்பிச்சப்போ சில் பேர் பேசியிருப்பாங்க... அப்புறம் எம்.ஜி.ஆர் ஆரம்பிச்ச்போ பேசியிருக்கலாம்.. ஆனா நடந்தது என்ன... யோசிச்சு பார்...."

"யோவ் ஆபிசர் வெவரமா ஜெயிச்சவங்க மேட்டரை மட்டும் பேசிட்டு எஸ்கேப் ஆவலாம்ன்னு பாக்குறீங்களா... சிவாஜி ஆரம்பிச்சார்.. பாக்ய ராஜ் ஆரம்பிச்சார்...அண்ணன் வீராச்சாமி ஆரம்பிச்சார்..."

"என்னது ஆற்காடு வீராசாமி தனிக் கட்சி ஆரம்பிச்சாரா...?"

"யோவ் அந்த வீராச்சாமி இல்லய்யா... சிபி பீலிங் விடுற நயன் தாராவை ஒரு காலத்துல்ல லவ் பண்ண சிம்பு இருக்கானே அவங்க அப்பா வீராச்சாமி..."

"வீரா... சிபி மேல உனக்கு என்னக் கோபம்... அப்படியே விஜய டி ராஜேந்தர்ன்னு சொல்லமால்... நீட்டி சிபியை எல்லாம் இழுத்து விட்டு சொல்லுற...."

"பதிவுலகத்துல்ல பதிவு ரீச் ஆகணும்ன்னா.. பதிவுலகத்துல்ல செல்வாக்கான ஆளைக் கோத்து விட்டா நல்லாயிருக்குமேன்னு நாட் போட்டேன் ஆபிசர்...அதை விடுங்க....அவங்களுக்கே டவுசர் டவணாகி போச்சே.. உங்க நிலைமையை நினைச்சா பரிதாபமா இருக்கு...."

"ஹே வீரா.. எது பரிதாபம்... ஐடி ஐடின்னு சிங்கிள் டீக்கு சிங்கி அடிச்ச பார்டி எல்லாம் ஒரு தம்மாத்துண்டு பொட்டியைத் தட்டியே கல்லாப் பெட்டியே ரொப்பிட்டு சிங்காரமா ஒய்யாரமா ஒலகத்தையே ரவுண்ட் வந்தீங்களே... இப்போ உங்க நிலைமையை யோசிச்சுப் பார்...." ஆபிசர் சவுண்டா பேச ஆபிசில் எல்லாருமே ஆணி புடுங்கறதை விட்டுட்டு அவர் டெஸ்க் பக்கம் வந்துட்டாங்க...

"போன வாரம் நீ போட்ட சட்டைக்கு பேண்ட் மேட்ச்சா இல்லன்னு சொல்லி உன்னை லே ஆப் பண்ணப் பாத்தாங்களே.. என்னக் கொடுமை.. அப்புறம் அவசரத்துக்கு எதோ நீயும் நானும் சட்டையை மாத்தி மேட்சிங் மேட்சிங் ஆகி வேலையைக் காப்பத்திக்கிட்டோமே...அது பரிதாபம் இல்லையா...." ஆபிசர் ஆவேசமா பேச ஆரம்பிச்சார்...

"ஒருத்தன் கீ போர்ட்டல்ல எஸ்ங்கற ஒரு வார்த்தை தேஞ்சுப் போச்சு அதுக்கு அவன் என்ன பண்ணுவான்...அதுனால அவன் செஞ்ச வேலையிலே குறை கண்டுபிடிச்சு அவனை பெஞ்சுல்ல உக்கார வச்சுட்டாங்களே.. அது பரிதாபம் இல்லையா..."

"ஆபிசர் இது உங்க சொந்தக் கதை மாதிரி இருக்கு.. கோடிங்ல்ல பல இடத்தில்ல சொந்தமா அடிக்கிறேன்னு சொல்லி ஸ்பெலிங் தப்பு தப்பா அடிச்சு எஸ் வர வேண்டிய இடத்துல்ல எல்லாம் சவுண்ட் ஒண்ணாத் தான் இருக்கும்ன்னு சி அடிச்சு அப்ளிகேசன் புஸ் ஆனதையா சொல்லுறீங்க.." விளக்கமா பருத்தி வீரன் சந்தேகம் கேக்க...

"இதை எல்லாம் விளக்கமாக் கேளு...இப்போத் தான் கூட்டம் கூடுது... கெடுத்துராதே ராசா..அப்படின்னு மெல்லக் கெஞ்சிட்டு மறுபடியும் சவுண்ட் கூட்டி..."ஒரு கம்பெனியிலே சேந்து ஒன்போது வருசமா ஒருத்தன் ஆபிசராவே இருக்கானே.... அவனுக்கு அஞ்சு வருசம் பின்னாடி அவன் காலேஜ்ல்ல படிச்சு அவனை மாதிரியே பல அரியர்ஸ் வச்சு பேப்பர் சேஸ் பண்ணி அவனுக்கு பின்னாடி வந்து அவன் கம்பெனியிலே ஜாயின் பண்ணி அவன் மேனேஜர் சொந்தக்காரப் பொண்ணைக் கரெக்ட் பண்ணி அவனுக்கே அவன் மேனேஜரா ஆகுறது எவ்வளவு பரிதாபம்...அதுன்னாலத் தான் சொல்லுறேன்... க.க.போ.க...." மூச்சு வாங்க ஆபிசர் பொங்கி வழிய...
"சே இவ்வளவு அசிங்கம்.. இவ்வளவு கேவலம்... இவ்வளவு. தூ...." பருத்திவீரன் முடிக்கும் முன்...

"போதும்...துப்பிராதேன்னு " ஆபிசர் இறங்கி வர...

"இல்ல ஆபிசர் இவ்வளவு துர்பாக்கியசாலியா நீங்கன்னு கேக்க வந்தேன்...." அப்படின்னு பருத்திவீரன் சொல்ல ஆபிசர் அவனை அப்படியே அணைத்துக் கொள்கிறார்...

"இது வரைக்கும் இப்படி எல்லாம் இருக்க பரிதாபமான சாப்ட்வேர் மக்களுக்கு குரல் கொடுக்க வேணாமான்னு ராத்திரி பகலா யோசிச்சேன்... அதான் முடிவு பண்ணிட்டேன்.. இனிமே என் வாழ்க்கை பொருள் ஆவி எல்லாம்.... க.க.போ.க....ஆமா க.க.போ.க...க.க.போ.க வாழ்க..வாழ்க..க.க.போ.க வாழ்க..வாழ்க....

சவுண்ட் அதிகமாக மேனேஜர் கேபின் கதவு லைட்டாத் திறக்கறதை முதல்ல பார்த்த பருத்திவீரன் பின்னாடி காலை வச்சு நகர்ந்து ரெஸ்ட் ரூம் பக்கம் போயிட்டான்..அதை நம்ம அப்பாவி ஆபிசர் கவனிக்கல்ல...

கடைசியா க.க.போ.க வாழ்க சொல்லிட்டு பாத்தா மேனேஜர் முகம் எக்ஸ்ட்ரா ஜூம்ல்ல தெரியுது..

என்ன மேன் ஆபிசர் இங்கே கலாட்டா... ஆல் ரெடி யூ ஆர் இன் பெஞ்ச்.. நவ் வாட்....

அப்போ ஆபிசர் சத்தமா சொன்னாரே பாக்கணும்... மொத்த ஆபிசும் சிரிச்ச சிரிப்பு பக்கத்து ஆபிசுக்கும் கேட்டுருச்சு பருத்திவீரன் ரெஸ்ட் ரூம்ல்ல உக்காந்து உக்காந்து சிரிச்சுட்டுருந்தான்

ஆபிசர் என்னச் சொன்னாருன்னா கேக்குறீங்க...
அது ..ஒண்ணுமில்ல மேனேஜர் சார்.. நான்.. கக்கா போக போறேன்....

Wednesday, November 05, 2008

ஆபிசரின் அரசியல் கச்சேரி

"டேய் பருத்திவீரா... நான் எல்லாம் ஒபாமா ரேஞ்ச்டா...."
"யார்... நம்ம ஆபிஸ் வாசல்ல பரோட்டாப் போடுற கடையிலே தட்டு கழுவுறங்களே அந்த ஒ பாமா அவங்க ரேஞ்சா...?"

"என்ன நக்கலா... நான் சொன்னது...இன்னிக்கு அமெரிக்காவில்ல முதல் கருப்பர் இன அதிபர் ஆகி இருக்காரே அவரைச் சொன்னேன்..."

"அப்படின்னா நீங்க அரசியல்ல இருந்தீங்களாஆஆஆஆஆஆ"

"எதுக்கு இம்புட்டு ஆ?""எல்லாம் ஒரு எபெக்ட் தான் ஆபிசர்... சின்னப் பயல்வ விரலை அசைச்சாலே என்னமா சவுண்ட் கொடுக்கான்வ சினிமாவுல்ல... நீங்க் ஆஆஆபிசர் ஆச்சே.. விடுவோமா.. நீங்க மேல போங்க..."

ஆபிசர் பருத்தி வீரனை படு கடுப்பாய் முறைத்துவிட்டு தன் அரசியல் அனுபவத்தைச் சொல்ல ரெடியாகுகிறார்.

அப்போ நான் பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டிருந்தேன்...

இது தான் ஆபிசர் உங்க கிட்ட எனக்கு பிடிச்ச விசயம்...
எது எது....
இந்த உண்மை பேசற விசயம்...பள்ளிக்கூடத்துல்ல படிச்சிட்டு இருந்தேன்னு பொய் சொல்லாமல் போயிட்டு இருந்தேன்னு சொல்லுறீங்க பாருங்க.. அந்த உண்மை பேசுற மனசை நான் பாராட்டுறென் ஆபிசர் ..ப்ளீஸ் கன்டினியூ

மீண்டும் கடுப்பு பார்வை பார்க்கும் ஆபிசர் தொடர்கிறார்..."அப்போ எல்லாம் நான் வந்து ஒரு பெரிய நடிகருக்கு ரசிகர்.....""ஆபிசர் குண்டு கல்யாணமா.. இல்லை உசிலை மணியா ஆபிசர்.... எனக்குத் தெரிஞ்ச பெரிய நடிகர்ஸ் அவங்க தான்... ரொம்ப பெரிய நடிகர்ஸ்"

தமிழ் நாட்டுல்லே பெரிய நடிகர்ன்னா யாருன்னு சின்னப் புள்ளக்கு கூடத் தெரியுமே...
சாரி ஆபிசர் நான் பெரிய புள்ளையாகி பல வருசம் ஆச்சு... சைல்ட்வுட் மெமரி எல்லாம் லாஸ் ஆயிருச்சு... பட் நீங்க கன்டினியூ ஆபிசர்...

அவர் அப்போ அரசியலுக்கு வரப் போறதா ஊர் முழுக்கப் பேச்சு....
ஆபிசர் இப்போ உங்க பையனே பள்ளிக் கூடம் போக ஆரம்பிச்சுட்டான்... இன்னும் அந்தப் பேச்சு நிக்கல்ல... மே பி உங்க பேரனும் பள்ளிக்கூடம் போற வரைக்கும் அது நிக்காது.. அது கன்னித் தீவு பார்ட் டூ... என்னக் கன்னித் தீவு... தந்தில்ல மட்டும் வரும்...இந்த மேட்டர் ஆல் பேப்பர்ஸ்ல்லயும் வரும... பட் நீங்க மேட்டருக்கு வாங்க... வாட் ஹேப்பண்ட் டூ யூ இன் பொலிடிக்ஸ்?

எங்க குடும்பம் ஒரு பராம்பரியமான அரசியல் குடும்பம்...
அதாவது வேற பொழப்பே இல்லாம மொத்தக் குடும்பமும் கும்பலாக் கிளம்பி ஊரை அடிச்சு உலையைப் போட்ட அது பராம்பரிய அரசியல் குடும்பம்
ரைட்டா....ப்ளீஸ் ப்ரொசிட் ஆபிசர்..

"நக்கலை கன்ட்ரோல் பண்ணிட்டு கேளு...எங்க ஊர் பக்கம் அப்போ எங்க கட்சி சார்பா ஒரு மாநாடு... தேர்தல் வேற பக்கமா வந்துச்சு

பக்கமா வந்துருச்சு...சரி... நீங்க என்னப் பண்ணீங்க....

இதேக் கேள்வியை தான் அக்கம் பக்கம் எல்லாத்துல்லயும் என்னைப் பாத்துக் கேட்டாங்க. நான் கொதிச்சுக் கொந்தளிச்சிப் போயிட்டேன், ஒரு பரம்பரை அரசியல் குடும்பத்துல்ல வந்த நான் தேர்தல் வர்ற நேரம்... அதுவும் நான் ரசிக்கிற பெரிய நடிகர் வேற எங்க கட்சிக்கு ஆத்ரவு கொடுத்துட்டார்...இந்த டைம்ல்ல நம்ம வெயிட் காட்டணும்ன்னு முடிவு பண்ணிட்டேன்...

"நாம யாரு... ஆபிசர்....ஒரு தடவை முடிவு பண்ணிட்டா அப்புறம் நம்ம பேச்சை நாமளேக் கேக்க மாட்டோமே... ம்ம்ம் சொல்லுங்க"

"ஸ்கூலுக்கு மட்டம் போட்டுட்டு உக்காந்து யோசிச்சோம்ப்பா...."

"அதிசயம்...ஆபிசர்.. நீங்க கூடவா யோசிச்சீங்க... சரி அந்த யோசிக்கற பழக்கம் எல்லாம் உங்களுக்கும் இருந்து இருக்கு எப்போ அதை எல்லாம் விட்டீங்க...ஆப்டர் மேரேஜா"

"ஜஸ்ட் பிபோர் மேரேஜ்...யோசிச்சிருந்தா கல்யாணம் நடந்திருக்குமா..."

"ஆமா அண்ணி யோசிச்சுருக்கலாம்... மேரேஜ் நடந்திருக்காது... சரி அது எதுக்கு இப்போ... அரசியலுக்கு வாங்க..."

ஆபிசர் அலட்டல் போஸ் கொடுக்க...

"ஆபிசர்ண்ணா... அரசியல் கதைக்கு வாங்கன்னு சொன்னேன்.. கதை மிஸ் ஆயிடுச்சு.. சீன் வேணாம் கன்டினீயு.."

மெகாவா ஒரு திட்டம் போட்டோம்.. அது படி பேனர் வைக்க முடிவு பண்ணுனோம்...அப்போ பிளக்ஸ் எல்லாம் வர்றல்ல்யா... சோ... ஆயில் பெயிண்ட் பேனர் தான்...

அட்ரா சக்க..அட்ரா சக்க,.... அப்புறம்

பயங்கரமா யோசிச்சு எங்க கட்சி தலைவர் படம் ப்ளஸ் எங்க ஸ்டார் படமும் போட்டு பேனரை ரெடி பண்ணிட்டோம்.... பேனர்ல்ல எல்லாம் கரெக்ட்டா இருக்கான்னு லாஸ்ட் மினிட் செக் பண்ணும் போது தான் டக்குன்னு தோணுச்சு

தலைவருக்குப் பட்டம் எதுவும் போடல்லயேன்னு.. தமிழினத் தலைவர்ன்னு எழுதிடலாம்ன்னு முடிவு பண்ணுனோம்

அது உங்க தலைவருக்குப் பலக் காலமா இருக்க பட்டம் தானே.. இதுல்ல என்ன புதுமை...

ஆனா அங்கே தான் ஒரு சிக்கல் வந்துருச்சு...

நான் தெளிவாத் தான் இருந்தேன்... பசங்க தான் குழம்பி என்னையும் குழப்பிட்டாங்க

ஓ அப்படியா.. அப்புறம்
என்னச் சிக்கல்..
தமிழின தலைவருக்கு சின்ன ழி யா இல்லை பெரிய ழீ யா அப்படின்னு

ஒஹோ நீங்க தான் தமிழ் புலவர் ஆச்சே ஆபிசர்... டெய்லி ஆபிஸ்ல்ல எல்லாருக்கு குட் மார்னிங் வித குறள் மெயில் எல்லாம் பார்வர்ட் பண்ணுற தமிழ் பத்தர் ஆச்சே.. சாரி தமிழ் பித்தர் ஆச்சே...

அண்ணே உங்களுக்கு அரசியல்ல பெரிய எதிர்காலம் வேணும்ன்னா பெரிய ழீ யே போட்ருவோம்ன்னே.. சென்டிமென்ட்டா ஓர்க் அவுட் ஆகும்ண்ணே... ழீயும் பெருசு... உங்க கனவும் பெருசுன்னு ஏத்தி விட்டுட்டாங்க.... நானும் அந்த ஜெர்க்ல்ல ஒத்துகிட்டேன்...

பருத்தி வீரன் விழுந்து விழுந்து சிரிக்க.....
"ஆபிசர் அங்கிள்.... உங்க தலைவர் அதைப் படிச்சிட்டாரா....?"
"ஊரே படிச்சிருச்சு,,,, எங்க அப்பாரு அன்னிக்கே என்னை ரயில் ஏத்தி ஊரை விட்டு அனுபிட்டார்... இனி அரசியல் அது இதுன்னு வந்த ... வெட்டிருவேன்னு விளக்கமா வெவரமா கடுதாசியே போட்டுட்டு போயிட்டார்..

அப்புறம் தான் நானும் அரசியல் விட்டு விலகி வந்து இப்படி ஐ.டியிலே சேந்துட்டேன்

இதோ பாரு.... தன் மெயிலில் இருந்த ஒரு பழைய படத்தைக் காட்டினார்..அதில் தமிழீனத் தலைவர்.......... அப்படிங்கற பேனர் பக்கத்தில் மாசு மருவறியாத இளம் காளையாய் நம்ம ஆபிசர்...அரசியல் கெட்டப்பில் அட்டகாசமாய் போஸ் கொடுத்திருந்தார்

ஒரு பெரிய ழீ அநியாயமாய் தமிழகத்தின் அரசியலோடும் ஐடியோடும் விளையாடிய வினையை என்னவென்று சொல்ல....:))))

Tuesday, January 22, 2008

சீனியருக்கு எல்லாம் சீனியர்டா இந்த ஆபிசர்

"ஆகா...மொத்தப் பணமும் போச்சே... " கையைக் கன்னத்துக்கு முட்டுக் கொடுத்துகிட்டு மானிட்டர்ல்ல எதோ ஷேர் மார்கெட் சைட் பாத்து நம்ம ஆபிசர் பிலீங்க்கா நேத்துல்ல உக்காந்து இருக்கார்.

"ஆபிசர் மார்கெட்ல்ல பணம் போறது இருக்கட்டும்... டேமேஜருக்கும் உங்களுக்குமான உறவு வர ரணகளமாப் போயிட்டு இருக்கே அதை பத்தி கொஞ்சமாவது கவலை இருக்கா உங்களுக்கு?" பருத்தி வீரன் ஆபிசர் முதுகைத் தட்டிக் கேட்டான்

மார்கெட் சோகத்தில் இருந்து மெல்ல நிமிர்ந்து லுக் விட்ட ஆபிசர்... கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தார்.

"டேய் பருத்திவீரா... நான் எல்லாம் சீனியருக்கு எல்லாம் சீனியர்டா...உனக்கேத் தெரியும் நான் பதவிக்கெல்லாம் ஆசைப் படறவன் இல்லன்னு.. அவன் பொடி பைய.நானாப் பாத்து வழி விட்டு மேனேஜர் ஆனப் பய அவன்..என் மேல அவனுக்கு மரியாதை ஜாஸ்திடா..."

ஆபிசர் சொல்லி முடிக்கவும்..."யோவ் ஆபிசர்... இந்தாப் பாருய்யா.. அந்த எக்ஸல் ஷீட் பிரிண்ட் கொடுத்து இருக்கேன்.. போய் அதை எடுத்துட்டு சீக்கிரம் இங்கே வாய்யா ஒரு டிஸ்கஷன் இருக்கு" டேமேஜர் குரல் படு சத்தமாய் பாய்ந்து வந்தது.. அவ்வளவு தான் பதறியடித்து எழுந்த ஆபிசர்.. சுற்றி இருந்த எங்களைப் பார்த்து பயங்கரமான எபெக்ட் கொடுத்து பயந்த பாடி லாங்க்வேஜை அப்படியே உதாரான போஸுக்கு மாத்துன அந்த அழகு இருக்கே...அதை எல்லாம் வெறும் வார்த்தையிலே சொல்லமுடியாது.

'என்ன ஆபிசர்.. பிரிண்ட் எடுக்கவெல்லாம் உங்களை வெரட்டுறார்... நீங்க எவ்வளவு பெரிய சீனியர்... மரியாதை கூட வேணாம்... ஒரு சின்ன மதிப்பு கூட் மிஸ் ஆகுற மாதிரி தெரியுது.." பருத்திவீரன் கொளுத்தினான்...

"லேய் பருத்திவீரா.. நீ கார்பரேட் ஒலகத்துல்ல இன்னும் பச்சப்புள்ளயாவே இருக்கே...அந்த பிரின்டரை பாரு அது நம்ம ஆபிஸ் ஆரம்பிக்கிறதுக்கு அறுவது வருசம் முன்னாலே இருந்து பல இடத்துல்ல வேலை பாத்து அந்து அவலாகி இத்து இரும்பாகி இங்கே வந்து நிக்குது... மேனேஜர் பயலுக்கு பிரிண்டருக்கும் ஜெராக்ஸ்க்குமே ஒழுங்கா வித்தியாசம் தெரியாது.. இப்படி ஒரு பராம்பரியமான சீனியர் பிரிண்டரை ஒரு சீனியரால மட்டுமே ஹேண்டில் பண்ணமுடியும்ங்கற உண்மை அவனுக்குத் தெரியும் அதான்......" ஆபிசர் பேசி கொண்டிருக்கும் போதே பருத்திவீரன் கொட்டாவி விட வாயைத் திறந்தான்...

'நீ கொட்டாவி விடுறதைப் பாத்த என்னை அவமானப்படுத்த மாதிரி அடுத்தவங்களுக்குத் தெரியும்...ஆனா ராத்திரி இரண்டு மணி வரைக்கும் நீ வேலை பாத்த விவரம் எனக்குத் தெரியும்ங்கறதால உன்னை நான் தப்பா நினைக்க மாட்டேன்.. உன் கொட்டாவியைக் கன்டினியூ பண்ணு.. நான் பிரிண்டரைப் பாத்துட்டு வர்றேன்..." ஆபிசர் அசுர வேகத்தில் கிளம்பினார்.

ஆபிசர் போய் அரை மணி நேரமாகியும் திரும்பி வரவில்லை....டேமேஜரே பிரிண்டர் ரூம்க்கு எழுந்து போக வேண்டியதாப் போச்சு. நாங்களும் பின்னாலேப் போனோம் நடக்கிறதைப் பாக்க

"யோவ் ஆபிசர் என்னய்யா...இப்படி ஒரேடியா பிரிண்டருக்குப் பக்கத்துல்ல வந்து நின்னுகிட்டா என்ன அர்த்தம்?"

அவ்வளவு தான் ஆபிசர்.. அப்படியே ரெண்டி ஜம்ப் அடித்து பிரிண்டரில் இருந்து நாலடி தள்ளி போய் நின்றார்...நின்றது மட்டுமில்லாமல்... இது போதுமா மேனேஜர்ன்னு பம்மி பணிவாக வேற கேட்டுவிட்டு பால் பொங்கும் முகத்தோடு நின்றார்...

கஷ்ட்டப்பட்டு சிரிப்பை அடக்கிட்டோம் நாங்க.. டேமேஜர் ஆபிசரை கோபமாகப் பார்க்க ஆபிசர் பணிவு குறையாமல் தரையைப் பாக்க...

"யோவ் பிரிண்டர்ல்ல கார்ட் எங்கேய்யா...?"

"அதை தான்ங்க மேனேஜர் நானும் அரை மணி நேரமாத் தேடிகிட்டு இருக்கேன்" அப்படின்னு அப்பவும் பணிவு குறையாமல் சொன்னார் பாக்கணும் ஆபிசர்.

"ஒரு வேலை ஒழுங்காத் தெரியுதாய்யா உனக்கு..போன வாரம் ஜெராக்ஸ் மெஷினுக்கு பிரிண்டருக்கும் வித்தியாசம் தெரியாம..பிரிண்டர்ல்ல ஜெராக்ஸ் எடுக்க மூணு மணி நேரம் முயற்சி பண்ணியிருக்கீங்க..... பிரிண்டர் டேமேஜ் ஆனது தான் மிச்சம்....." டேமேஜர் ஆபிசரை பார்ட் பை பார்ட்டாக் கிழித்து தொங்கவிட்டுட்டு கிளம்பி போனார்.

வழக்கம் போல் நம்ம ஆபிசர் எதுவுமே நடக்காதது போல் வெளியே வாசலில் நின்று பருத்திவீரன் தலைமையில் அவருக்கு ஓ போட்டு நாங்க வரவேற்பு கொடுத்தோம். அதை அசால்ட்டாச் சிரிச்சுகிட்டே வாங்குன ஆபிசரை பருத்திவீரன் கைப் போட்டு ஆபிசர்....

"ஏன் ஆபிசர்...ஊர்ல்ல நாங்க எல்லாம் காளை மாட்டுல்லேயே பால் கறந்தவய்ங்க தெரியும்ல்லன்னு சொல்லுவீங்களே.... அதுக்கும் இந்த பிரிண்டர் ஜெராக்ஸ் மேட்டருக்கும் சம்பந்தம் இருக்கும் போல இருக்கேன்னு" ஆரம்பிச்சான்...

"அது எப்படி?" நாம் டவுட் கேக்க..

"ஒரு வேளை பசு மாட்டுக்கும் காளை மாட்டுக்கும் வித்தியாசம் தெரியாமப் போயிருக்குமோ.... ஜெராக்ஸ் மிசின்ன்னு நெனச்சு பிரிண்டரை அந்தப் பாடு படுத்துனவர்.. ம்ம்ம்ம்ம்..பாவம்ய்யா அந்த காளை....." பருத்திவீரன் சொல்லி நிறுத்தினான்.

"தம்பி பருத்திவீரா... இந்த நக்கல் எல்லாம் நம்ம கிட்ட வேணாம்ய்யா...உனக்கெல்லாம் ஜாவா சொல்லி கொடுத்து பூவாக்கு வழி சொன்ன என்கிட்டவே நக்கலா.... எதோ சீனியர் ஆபிசர் வாழ்க்கையிலே மைனரா ஒரு மிஸ்டேக் நடந்துப் போச்சு...."

"இது மட்டுமா....ஆபிசர்....புது ப்ராஜக்ட் சம்பந்தமா எத்தனை டாக்குமெண்ட் படிச்சிங்கன்னு மேனேஜர் கேட்டதுக்கு என்னப் பதில் சொன்னீங்க?"

"ஒம்போது டாகுமென்ட் படிச்சதாச் சொன்னேன்"

"மொத்தம் இருக்க டாகுமென்ட்டே நாலு தானே அப்படின்னு டேமேஜர் உங்களை டீம் மீட்ல்ல கேவலப்படுத்துனாரே ஆபிசர்"

"அதையே தான் நான் ஒம்போதாப் பிரிச்சு பிரிச்சுப் படிச்சேன்னு விளக்கம் கொடுத்தேன்ல்ல"

"விளங்காத விளக்கம்"

"என் புத்திசாலித்தனத்தை உன்னாலயும் உங்க டேமேஜரால்லயும் தாங்கிக்க முடியல்ல.."

"இன்னுமா உங்களை நீங்களே புத்திசாலின்னு நம்புறீங்க?"

"கண்டிப்பா...."

"அட அநியாய ஆபிசரே"

"போதும் பருத்திவீரா நிப்பாடிக்க... இப்போ என்னத் தான் சொல்ல வர்ற?"

"ஆபிசர் மருதமலையிலே நம்ம என்கவுண்டர் ஏகாம்பரம் சொல்லுறதை தான் நான் உங்களைப் பார்த்துச் சொல்லுறேன்"

"அது என்னாஆஆது?"

"உங்களுக்கு ஒரு அதிகாரியை எப்படி டீல் பண்றதுன்னு தெரியல்ல..."

"எதை வச்சு அப்படி சொல்லுற?"

"போன வாரம் நம்ம டேமேஜர்... ஆபிஸ்க்கு வர்ற வழியிலே பைக்ல்ல இருந்து சிலிப் ஆகி கீழே விழுந்து கால் உடைஞ்சு வீட்டுல்ல இருந்தாரே அப்போ நம்ம டீம் மொத்தமும் அவரைப் போய் பார்த்து ஆப்பிள், ஆர்லிக்ஸ், ஆரஞ்சு.. அது இதுன்னு கொடுத்து ஆறுதலா நாலு வார்த்தைப் பேசிட்டு வந்தோமே.... நீங்களும் கூட வந்திருந்தா.. டேமேஜருக்கும் உங்க மேல ஒரு சின்ன பாசம் வந்துருக்கும்ல்ல... " பருத்திவீரன் பிலீங்கா அட்வைஸ் மழை பொழிய

"ஹா...ஹா..ஹா...ஹா..." என அடக்கமுடியாமல் ஆபிசர் சிரிக்க ஆரம்பித்தார்.

"யோவ் ஆபிசர் என்னய்யா ஆச்சு உனக்கு?" பருத்திவீரன் கேட்டான்....

"கொய்யால.. வண்டியிலே இருந்து அவன் சிலிப் எல்லாம் ஆவல்ல... சைட்ல்ல போய் கட் கொடுத்து தள்ளி விட்டதே நான் தான்.... அவன் கால் உடைஞ்சுருச்சுன்னு நானே சந்தோசத்துல்ல திக்கு முக்காடி போயிருக்கேன்... சந்தோசத்துல்ல இருக்க நான் துக்கம் கேக்கணுமாம்ல்ல.... போவீயா" ந்னு சொல்லிட்டு மை நேம் இஸ் பில்லா பாட்டை விசிலா அடிச்சுகிட்டு படு ஸ்டைலா நடந்துப் போயிகிட்டே இருந்தார் ஆபிசர்...

"அட மெய்யாலுமே.. அநியாயத்துக்கு அநியாய ஆபிசாரா இல்ல இருக்கார்" பருத்தி வீரன் வாய்விட்டு சொன்னான்.

Monday, June 25, 2007

ஆபிஸர் கவிஞர் ஆகிறார்

வணக்கம் மக்கா...

கொஞ்ச நாளா நம்ம ஆபிசரைப் பத்தி நான் எதுவும் பேசல்லயேன்னு ஊருக்குள்ளே ஆபிசர் ரசிகர்கள் கிட்ட இருந்து மெயிலாக் குவிஞ்சுப் போச்சு...

இப்போ எல்லாம் நம்ம ஆபிசர் ரொம்ப அமைதியாயிட்டார்.. அடிக்கடி மோவாயைத் தடவிகிட்டு விட்டத்தைப் பார்க்கிறார்..போன வாரம் உக்காரருற சீட்டுக்கு மேலே தெர்மாக்கோல்ல செஞ்ச நிலா ஒண்ணைக் கட்டி தொங்கவிட்டிருக்கார்...அந்த நிலாவைச் சாய்ஞ்சிட்டேப் பாக்குரதும..சைட்ல்ல பாக்குரது...மல்லாக்கப் படுத்துட்டேப் பாக்குறதுன்னு ஒரே ரவுசு..அப்புறம் தமிழ்ல்ல கவிதைப் போடறவங்களை எல்லாம் தேடி தேடிப் படிக்க ஆரம்பிச்சதல்ல.. அவர் மானிட்டர்ல்ல தமிழ் மணம் வீச ஆரம்பிச்சுருச்சு...ஆமாய்யா ஆபிசர் நெட்ல்ல கவிதைப் பதிவாப் படிக்க ஆரம்பிச்சாட்டாரு

ஒவ்வொரு எழுத்தாக் கூட்டிப் பெருக்கி வகுத்து ஆபிசர் கவிதைப் படிக்குறதை அவருக்கு தமிழ் சொல்லிக் கொடுத்த வாத்தியார் மட்டும் பாத்துருந்தார்ன்னா அவருக்கு கண்ணுல்ல வெந்நீயே வந்துறும்..ஆபிசரின் இந்த 'திடீர்' கவிதைத் தாகத்துக்குக் காரணம் ஆபிஸ்ல்ல ஒருத்தருக்கும் புரியாமப் பெரும் கலவரமாப் போயிருச்சு

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நாங்க எல்லாரும் பருத்திவீரனை என்ன ஏதுன்னு விசாரிக்க அனுப்புனோம்..

"சித்தப்பூ , நல்லாத் தானே இருந்த.. ஆன் சைட்க்கு ஆடப் போலாம் வாய்யான்னு சொன்னா..ஆலிவுட் ஹிரோ ரேஞ்சுக்கு ஆட்டயக் கிளப்புவன்னு பார்த்தா.. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகுன்னு தாடி வளத்துருவே போலிருக்கு..."

"தம்பி.. நீ சின்னப் பைய அப்படி தள்ளி நில்லு. நான் சிந்திக்கும் போது சீண்டிப் பாக்காதே.. சொல்லிட்டேன்..ஆமா"

"யோய் சித்தப்பு சும்மா சீனைப் போடாதய்யா.. எங்கே இப்போ நான் சொன்ன அகர முதல் எழுத்து.. வரிக்கு விளக்கம் சொல்லு பாப்போம்..."

"டேய் சின்னப் பையலே.. நான் கவிதையைப் பத்திச் சிந்திச்சிட்டு இருக்கேன். நீ கவனம் சிதறுர மாதிரி சில்மிசம் பண்ணாதே மறுபடியும் சொல்லிட்டேன்.."

"யோவ் சித்தப்பு, நாங்களும் திருவள்ளுவர் சொன்னதைத் தானேச் சொன்னோம்.. நீ எந்த அளவுக்குக் கவிஞர்ன்னு தெரிஞ்சுக்குவோம்ல்ல...சொல்லுய்யா" பருத்தி வீரனும் விடவில்லை.

"இங்கேப் பார்றா.. கேக்குறான் கேனப்பைய... திருவள்ளுவர் எங்கேடா கவிதை எழுதுனார்.. அவர் காலத்துல்ல கவிதையே கிடையாதுரா தம்பி.. போ போய் கோட்ல்ல கொட்டிக் கிடக்குற பூச்சியை மருந்தடிச்சுக் கொல்லு..." சும்மாத் தெனவெட்டாச் சொல்லிவிட்டு காலைத் தூக்கி டேபிள் மேல வச்சுகிட்டு சிந்திக்க ஆரம்பித்தார் ஆபிசர்.

"சித்தப்பு.. நெசமாலுமே கொலையாகிப் போயிரும்... திருவள்ளுவர் அப்புறம் என்ன எழுதுனார்.. அதையாவது சொல்லு..." பருத்தி வீரனும் கொடாகொண்டான் ஆச்சே.. நடக்கிறதை எல்லாம் நகராம நாங்களும் பாத்துகிட்டு இருந்தோம்.

"தம்பி.. தவம் மாதிரி இருக்கேன்..தகராறு ஆயி போயிரும் சொல்லிட்டேன்... இன்னும் ரெண்டு நாளைக்குள்ள நான் நாலு கொயர் நோட்டு நிறைய கவிதை எழுதியாகணும்... சரி.. திருவள்ளுவர் கேள்விக்குப் பதிலைச் சொல்லிட்டா சிந்தாமச் சிதறாம சீட்டுக்குப் போய் சின்சியரா வேலைப் பாப்பீயா சொல்லு பதிலைச் சொல்லுரேன்.." ஆபிசர் லைட்டா இறங்கி சமரசத்துக்குத் தயார்ங்கற மாதிரி சொன்னார்.

'ம்ம்ம்' என்றான் பருத்திவீரன்.. எல்லாரும் ஆபிசரின் அந்தப் பதிலுக்காகக் காதைத் தீட்டிக் கவனமானோம்..

"நல்லாக் கேளு.. திருவள்ளுவர் காலத்துல்ல கவிஜை எல்லாம் கிடையாது... அவர் எழுதுனதுக்கு பேர் செய்யுள்.. பாடப் பொஸ்தகத்துல்ல படிச்சிருப்ப.. இப்போ ரொம்பக் கேப் விழுந்ததாலே மறந்துப் போயிருக்கும்.. பரவாயில்ல.. கவிதைக்கும் செய்யுளுக்கும் வித்தியாசம் தெரியாம வளந்துருக்கடா நீ.. ரொம்ப அப்பாவி புள்ளயா இருக்கடா நீயு.. என்னத்தச் சொல்ல இந்தக் காலத்துல்ல வீட்டுல்ல பிள்ளைகளுக்கு யார் தமிழ் சொல்லிக் கொடுத்து வளக்குறாங்க"

கொலவெறியில் மானிட்டர் எடுத்து மண்டையில் அடிக்கப் போன பருத்திவீரன நாங்கப் பத்து பேர் பாஞ்சுப் பிடித்து அவன் சீட்டுல்ல உக்கார வைக்க பயங்கரப் பாடுபட்டுட்டோம்..
ஆனா இது எதையுமே கண்டுக்காம.. ஆபிசர் திரும்பவும் விட்டத்தையும் நிலாவையும் பாத்துட்டு இருந்தார்..பருத்திவீரனுக்கு வெறி அடங்கவே இல்லை...ஒரு வழியா தன்னைத் தானே அடக்கிட்ட பருத்திவீரன்...

"என்னை விடுங்கப்பா.. அந்த ஆளை எதுவும் செய்ய மாட்டேன்.. ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டுட்டு வந்து என் வேலையைப் பாக்குறேன்"னு எழுந்துப் போனான்...

அது என்னக் கேள்வியோன்னு எதுக்கும் உஷாரா இருப்போம்ன்னு நாங்களும் நாலுப் பக்கமும் தயார நின்னுக்கிட்டோம்.பருத்தி வீரன் ஆபிசர் பக்கமாய் போய் கிட்டத்தட்ட கண்ணுல்ல கண்ணீர் பொங்க...உள்ளுக்குள்ளே நாங்க எல்லாரும் ஒரு வாரமாக் கேக்க நினைச்சு அடக்கி வச்சிருந்தக் கேள்வியை உணர்ச்சிப் பொங்கக் கேட்டான்..

அந்தக் கேள்வி "என்னக் கொடுமை இது ஆபிசர்?" சும்மா மொத்த ஆபிசும் அந்தக் கேள்வியக் கேட்டு அதிர்ந்துச்சு இல்ல..

அன்னிக்கு சாய்ங்காலம் சுமார் ஓன்பது மணிக்கு நம்ம ஆபிசரின் கவிதை அறிவினை வளர்க்க அ வில் ஆரம்பித்து கோவில் முடியும் ஒரு பிரபல இணையக் கவிஞரைச் சந்திக்க ஏற்பாடு செய்தான் பருத்திவீரன்...

"கவிஞரே பெருசா எல்லாம் வேணாம் ஒரு மூணு நாலு வரி கவிதை எழுதற அளவுக்குத் தேத்தி விட்டுருங்கப் போதும்" அப்படின்னு பருத்தி வீரன் பலமாய் சிபாரிசு பண்ணான்.

தொண்டையைச் செருமிய கவிஞர்..

"நண்பரே...கவிதை எளிது...சொல்கிறேன் கேளுங்கள்
கடல் தொடு...வான் தேடு..மழையில் நனை..புல்லில் படு..பூவை பாடு...
ஆம் இயற்கையை ரசி..இதயத்தில் கவிதை இறக்கை கட்டும்"

'ம்க்கும்.. நீங்கச் சொல்லுற எதுவும் நம்ம சித்தப்புவுக்கு செட் ஆகாது.. முந்தாநாள் மழையிலே மெரீனால்ல கடலையே வெறிச்சு வெறிச்சு பாத்துகிட்டே ரொம்ப நேராமா நின்னுருககார்.. கவிதை வர்றல்ல.. போலீஸ் தான் வந்துச்சு வந்து சித்தப்புவைச் சந்தேகக் கேசுல்ல அள்ளிகிட்டு ஈ - 1 ஸ்டேஷனுக்குக் கொண்டுப் போயியிருச்சு.. விடியற வரைக்கும் வெளியே விடல்லயே..."

கேப் விட்டு பருத்தி வீரன் தொடர்ந்தான்.

"வானம் பாக்குறேன்னு.. வாயைப் பொளந்து வானம் பார்த்ததுல்ல.. குருவியிலந்து... பருந்து வரைக்கும்...
வேணாம் அப்படின்னு பருத்தி வீரன் வாயைப் பொத்தினார் ஆபிசர்... சித்தப்புவின் மானம் நாணம் கோணம் கருதி அத்தோடு நிறுத்திக் கொண்டான் வீரன்.

கவிஞருக்கே கொஞ்சம் சவாலாகிப் போனது...வேற மாதிரி ஆரம்பிப்போம்ன்னு யோசிச்சவர் ஆபிசரைப் பார்த்தார்.. ஆபிசர் பவ்யமா கை எல்லாம் கட்டிகிட்டு அஞ்சாப்பு படிக்கிற பைய மாதிரி சின்சியாராப் பாடம் கேட்க தயாரானார்.

"நண்பரே.. நீங்க யாரையாவது காதலிச்சிருக்கீங்களா?"

"எனக்கும் காதலிக்கணும்ன்னு ஆசை தாங்க.. பொண்டாட்டி புள்ளன்னு ஆனப் பொறவு.. அதுக்கெல்லாம் நேரமில்லங்க.. அதுல்லயும் என் பொண்டாட்டியை வச்சுட்டு நான் யாரையும் சைட் அடிச்சாலே அவளுக்கு ஆவுறதுல்ல.. இதுல்ல காதல் எல்லாம் கொஞ்சம் கஷ்ட்டம் தான்" படு சீரியசாய் பதில் சொன்னார் ஆபிசர்..

கவிஞர் குடித்தக் கோக் குப்பென்று அவருக்குப் பொறை ஏறியது.. பருத்திவீரனை பரிதாபமாய் பார்க்க.. பருத்தி KINDLY ADJUST என்பதாய் பதிலுக்குப் பார்த்தான்..

ஸ்ப்பப்ப்பா என்ற கவிஞர்.. நிதானமாய் நம்ம ஆபிசர் தோளில் கைப்போட்டு... உங்க கல்யாணத்துக்கு முன்னாடி உங்களுக்கு வர போற மனைவி பத்தி ஒருவித எதிர்பார்ப்பு இருந்து இருக்கும்.. அந்த எதிர்பார்ப்பு அந்த உணர்வு தான் காதல்.. காதல் கவிதை... கவிதை காதல் எனச் சொல்ல..வேலியில் விழுந்த வெள்ளாட்டுக் குட்டியாய் ஆபிசர் முழிக்க.. கவிஞர் கொஞ்சம் இறங்கி வந்தார்..

"நண்பரே.. திருமணத்திற்கு முன் வரப் போகும் உங்கள் மனைவியிடம் என்ன எதிர்பாத்தீங்க?" அப்படின்னு தோள் தொட்டுக் கேக்க.. ஆபிசர் முகம் குஷியானது.. வாயெல்லாம் சிரிப்புப் பொங்கச் சொன்னார்...

"அதுங்க கவிஞரே.. அதிகமா எல்லாம் எதிர்பார்க்கல்ல ஒரு 25 பவுன்... அப்புறம் 50 ஆயிரம் ரொக்கம்.. இது வீட்டுல்ல. நான் எதிர்பாத்தது ஒரே ஒரு ஹீரோ ஹோண்டா ஸ்பெளண்டர் பைக்.. அதைத் தரமா என் மாமனார் ஏமாத்திட்டாருங்க... பழையப் பீலிங்க்ஸ் எல்லாம் கிளப்பிட்டீங்கன்னு சிரிப்பு மறைந்து லேசா விசனப் பட ஆரம்பித்தார் ஆபிசர்.

கவிஞர் கன்னாப்பின்னாவெனக் கலங்கிப் போனார் என்பதைச் சொல்லத் தான் வேணுமா என்ன?

பருத்திவீரன் கவிஞரின் மனவலிமையை அதிகப்படுத்த பார்வையாலே முயன்றான்.. கவிஞரும் கஷ்ட்டப்பட்டு மனவலிமையைச் சேர்த்துக் கொண்டு ஆபிசரைப் பாரத்துக் கேட்டார்..

'இது வரைக்கும் நீங்க எதாவது கவிதை எழுதியிருக்கீங்களா?'

'ஓ' என்று தலையை ஆட்டிய நம் ஆபிசர், தன்னுடைய லேப் டாப்பைத் திறந்தார்...
கவிஞரோடு பருத்திவீரனும் ஆர்வம் ஆனான்...அந்தப் பக்கத்தைத் திறந்தார்...அதுல்ல்த் தெரிஞ்சது ஒரே வார்த்தை....

கொட்டை எழுத்துல்ல கவிதை அப்படின்னு ஒரே வார்த்தை

'இப்போத் தான் எழுத ஆரம்பிச்சுருக்கேன்.. முதல் வார்த்தை வந்த வேகத்துல்ல அடுத்த வார்த்தை வரல்ல..காத்துக் கிடந்தேன்..ஒரு கட்டத்துல்ல ஒரு வேளை நமக்கு கவிதையே வராதோன்னு எனக்கே எம் மேல சந்தேகம் வந்த சிச்சுவேஷ்ன்ல்ல நம்ம கவிப்பேரரசு வைரமுத்து பாட்டு ஒண்ணு கேட்டேன்.. அப்போத் தான் நான் ஒரு கவிஞர்ன்னு எனக்கே கன்பர்ம் ஆச்சு..'

ஆபிசர் பேச பேச, நம் கவிஞர் கரண்ட் கம்பியைக் கடவாய் பல்லுக்குள்ள எடுத்து வச்ச மாதிரி அதிர்ச்சியில் உறைந்துப் போனார்..

'சித்தப்பு.. நீ கவிஞர்ன்னு எப்படி சித்தப்பு உனக்கே கன்பர்ம் ஆச்சுன்னு' பருத்திவீரன் பரம பவ்யமாக் கேக்க...

"இந்தா இந்தப் பாட்டை நீயும் கேளு.. நீங்களும் கேளுங்க...' கவிஞர் பக்கமும் ஐ பாட்டை நீட்டினார் ஆபிசர்... பாட்டில் ஓடிய வரிகள்....
" வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞன் இல்லையா... "அந்த வரி அப்படியே ரிப்பீட்டில் ஓட... கவிஞர் எகிறி அப்பீட்டானார்....

பி.கு: வர்ற ஜுலை 10 ஆபிசருக்குப் பத்தாவது கல்யாண நாளாம் அதுக்கு அவர் வீட்டம்மாவுக்கு கவிதை ஒண்ணு எழுதித் தருவதாய் ஒரு மப்பானப் பொழுதில் வாக்குக் கொடுத்துருக்கார் ஆபிசர்... அந்த அம்மாவும் அதை நம்பி நாலுப் பேத்துக்கு எங்க வூட்டுகாரரு வெறும் பொட்டி மட்டும் இல்ல கவிதை எல்லாம் சும்மா அப்படித் தட்டுவாரு தெரியும்ல்லன்னு சொல்லி இவரை உசுப்பிவிட்டிருக்காய்ங்க... வர்ற ஜூலை 10 வீட்டம்மா தோழிகள் எல்லாரும் கவிதைக் கேக்க வர்றோம்ன்னு சொல்லியிருக்காங்களாம்...

இந்தா ஆபிசர் ஆகாயம் பாக்க ஆரம்பிச்சுட்டார்ப்பா..... ஒரு ஆபிசர் கவிஞர் ஆகிறார்.... ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்

Wednesday, May 23, 2007

எம்.ஜி,ஆரையே எதிர்த்தவன்டா இந்த ஆபிசர்

"இந்த கத்திரி வெயில் இழுத்து வச்சு நம்ம தோலை இஸ்திரி போட்டுச் சோலியை முடிச்சுரும் போலிருக்கே.. என்ன சித்தப்பூ சாப்பிடக் கிளம்பல்லயா?"
சவுண்டு விட்டுகிட்டே பருத்தி வீரன் சித்தப்பூ சீட் பக்கம் வரும் போது மணி ஒண்ணே முக்கால்.

சித்தப்பு கம்ப்யூட்டர்ல்ல கண்டபடி மூழ்கி கிடந்தார். எதோ எக்ஸ்ல் ஷீட் திறந்து சார்ட் எல்லாம் போட்டு சென்னை சூட்டை இன்னும் கிளப்பிக் கொண்டிருந்தார்.

"சித்தப்பூ என்ன இது? ஏன் இப்படி?"

"கருத்துக் கணிப்பு நடத்தப் போறேன்.. இந்த வடக்கத்திகார பாஸ் இருக்கானே.. அவனை என்னப் பண்ணலாம்ன்னு நம்ம ஆபிஸ் மகா ஜனங்களைக் கேக்க்ப் போறேன்...

ஆப்ஷ்ன் 1 ஓட விட்டு அடிக்கணும்

ஆப்ஷன் 2 நிக்க வ்ச்சு அடிக்கணும்

ஆப்ஷ்ன் 3 கட்டி வ்ச்சு அடிக்கணும்

வா நீயும் வந்து கருத்துச் சொல்லிட்டுப் போ.."

"சித்தப்பூ எதுக்கு இந்தக் கொலவெறி?"

"என் ஆன் சைட் கனவுக்குக் காத்து புடுங்கி விடுறதே இந்த பான்பராக் மண்டையனுக்கு நாலு வருசமா வேலையாப் போச்சு.. ஒவ்வொரு அப்ரேசலிலும் ஒரே ஆப்பை ஒவ்வொரு இடத்துல்ல் வச்சுட்டுப் போயிடுறான்"

"அப்படி என்னப் பண்ணான்?"

"ஒவ்வொரு வாட்டியும் YOU HAVE TO IMPROVE YOUR COMMUNICATION அப்படின்னே ரெக்கார்ட் ஓட்டுறான்"

"அதுவும் ரைட் தானெ போன வாட்டி இங்கிட்டு வந்த அட்லாண்டிக் கிளையண்ட் கிட்ட WE ALL CALL NIC NAMES.. HE PARUTHI VEERAN THAT IS COTTON SOLDIER.. ME.. CHITTAPOO.. அப்படின்னு நீ சொல்ல...

""WHAT U SHIT BOO" அப்படின்னு அந்த ஆளு மூக்கைப் பொத்த... தெரியுமே உன் இங்கிலீஸ் அறிவு எங்களுக்கு."

"லேய் கோடு அடிக்கத் தானே சம்பளம் கொடுக்குறாய்ங்க.. இங்கே என்ன இங்கிலீஸ் பாடம் எடுக்கவா நாங்க மருதையில்ல மாறி மாறி பஸ் புடிச்சு வந்தோம்"

"நோ டென்சன் சித்தப்பு.. பாஸ் மேட்டருக்கு வா..."

"முந்தா நாள், மூணு நாள் குடும்பமா மூணாறு போயிட்டு ஊருக்கு வந்த அவன் வீட்டு ஏசி வேலை செய்யல்லன்னு என்னைய பிடிச்சுக் காய்ச்சுறான்ய்யா.. மனுசனா அவன்?"

"அவன் வீட்டு ஏசி புதுசா ஆச்சே!!! போன மாசம் வாங்குனது தானே.. உன் தம்பி கடையிலே வாங்கி நீ தானே சித்தப்பு கொடுத்த்.. ஏசி என்னாச்சாம்?"

"ஏசிக்கு எல்லாம் ஒண்ணூம் ஆகல்ல.. கரண்ட் இல்லப்பா அதான் ஏசி வேலை செய்யல்ல"

"அதுக்கு நீ என்னப் பண்ணுவ பாவம்"

"ஊருக்குப் போறதுக்கு முன்ன.. கரண்ட் பில் கட்டிடு ப்ளிஸ்ன்னு எங்க கிட்டச் சொல்லிட்டுப் போனான்.. நான்.... உனக்கேத் தெரியும் ப்ராஜக்ட் பிசியிலே மறந்து வேலையிலே மூழ்கிட்டேன்... அதை எல்லாம் ஒரு தப்புன்னு..." சித்தப்பு சொல்லும் போதே பருத்திவீரனோடு எங்களுக்கும் டென்சன் ஆகிப் போச்சு."

"யோவ் எதாச்சும் அசிங்கமாத் திட்டிற போறேன்.. போய்யா போய் பொழப்பைப் பாரு..." பருத்திவீரன் கிட்டத்தட்ட கையை ஓங்கிட்டான்.

"வேணாம் நான் எல்லாம் அரசியல்வாதி தெரியும் இல்ல.. கட்சிக்காரன்லேய்... அதுவும் மருத திமுககாரன் சொல்லிபுட்டேன்" சித்தப்பு சீற

"இங்கே பாருடாக் கூத்தை.. சித்தப்பு நீ எல்லாம் கட்சிகாரனா!!!.... அதுவும் திமுகவா!!! ஆளும் கட்சி பெயரைச் சொல்லி அல்வாக் கிண்டுற பார்த்தியா"

"லேய் சின்னப் பயலே நான் உண்மையாவே திமுக தான்லேய்.. இன்னிக்கு ஊருக்குப் போய் பேண்ட்ட கழட்டிப் போட்டேன்னு வை..."

"ஊர்ல்ல இருக்க நாய் எல்லாம் சேந்து ஒண்ணா தொரத்தும் உன்னிய வேற என்ன?"

"ஏலேய் சின்னப் பயலே பேண்ட்டை அவுத்துட்டு வேட்டியக் கட்டுனேன் வை.. அதுவும் கரை வேட்டி.. ஊர்குள்ளே எனக்கு எம்புட்டு மருவாதை தெரியுமா"

"சொல்லுறதை ஒழுங்காச் சொல்லு.. வேட்டி ஒழுங்காக் கட்டத் தெரியுமா ஓனக்கு?"

"மருதைக் காரன் கிட்ட பேசுற நீயு... காலேஜ்க்கே கரை வேட்டி கட்டிகிட்டு கக்கத்துல்ல பொஸ்தகத்தை வச்சுகிட்டு போனவன் நான்"

"தெரியுது... அந்தப் பொஸ்தகம் வாய் இருந்தா எப்படி கதறி இருக்கும்ன்னு"

"லேய் நான் உண்மையா திமுககாரன் தான்டா... எங்க தாத்தா.. அப்பா எல்லாம் கட்சிகாரங்கடா நம்புடா"

பருத்திவீரன் மோவாயைத் தடவிகிட்டு நின்னான்.

"சரி நீ திமுகன்னா நான் கேக்குற கேள்விக்கெல்லாம் கரெக்ட்டாப் பதில் சொல்லிரு பாப்போம்"

"திமுக கொடியிலே கருப்பு மேல வருமா சிவப்பு மேல வருமா?"

"கருப்பை மேல வச்சு கட்டுனா.. கருப்பு மேல வரும்...அதே மாதிரி சிவப்பை மேல வச்சு கட்டுனா சிவப்பு மேல வந்துரும்... இதெல்லாம் ஒரு கேள்வியாம் வென்று..."

"சித்தப்பு உன் பதிலை உங்க கட்சித் தலைமை கேட்டதுன்னு வை.. உன்னை மேல வச்சு கட்டி கீழே தீ வச்சுருவாங்க.. அப்புறம் நீ ராக்கெட் மாதிரி விண்வெளிக்கே ஆன் சைட் போயிருவே..."

"கொடியை விடு... மொழிப் போர் தெரியுமா?"

"பிச்சுருவேன் பிச்சு... மொழி போராம்.. எவன் சொன்னான் எடுபட்ட பைய.. போன வாரம் தான் குடும்பத்தோட சத்யம் போய் பார்த்தோம்... எங்க அப்பத்தாவுக்கு கூட ரொம்ப பிடிச்சு இருந்துச்சு...சோதிகா என்னமா நடிக்குது.... அய்யோ அந்த சொர்ணமால்யா ம்ம்ம்ம் ( ஜொள்ளூ வழிகிறது) மொழி சூப்பர் படம் அதைப் போய் போர்ன்னு எவன் சொன்னான்"

ஆவேசமாச் சாமியாடிய சித்தப்புவை மெதுவாப் பிடிச்சு இழுத்து வச்ச பருத்தி வீரன்.. மொழிப் போர் பத்திக் கேட்டேன்... உங்க கட்சி 60ல்ல பண்ண அரசியல் போராட்டம் பத்திக் கேட்டா அது தெரியல்ல.. பிரகாஷ் ராஜ் எடுத்த மொழியைச் சொல்லுற நீ..இது தான் லாஸ்ட்... இத்தோட நீ இனிமே அரசியலேப் பேசக் கூடாது தெரியும்ல்ல...

"ஏலேய்.. எனக்கு வேணும்ன்னா விசய ஞானம் இல்லாம இருக்கலாம்.. ஆனா நான் எல்லாம் களப்பணின்னு வந்துட்டா பின்னிருவோம்.தெரியும்ல்ல.. அஞ்சு வயசுல்ல எங்க ஊருக்கு தேர்தல் பிரச்சாரம் பண்ண வந்த எம்.ஜீ.ஆரையே நான் எதிர்த்தவன் தெரியுமா? சொன்னா நம்பணும்"

எம்.ஜி.ஆர் அந்தப் பேரைக் கேட்டதும் பருத்திவீரன் கூட் மைல்ட்டா ஜெர்க் ஆயிட்டான்னு தான் சொல்லணும்...

"ஆமா அப்போ எனக்கு அஞ்சு வயசு..."

சித்தப்பு கொசுவர்த்தி சுத்த ஆரம்பிச்சார்.. எல்லாரும் ஆர்வமா உக்காந்துட்டோம்.
பாதி சாப்பாட்டுல்ல வாயைப் பொழந்தவங்க பொழந்தப் படியே கதைக் கேக்க ஆரம்பிச்சாங்க..

"எங்க ஊர்ல்ல தேர்தல் வந்துச்சு.. ஊர் முழுக்க எல்லா சுவத்துல்ல உதயசூரியனும் இரட்டை இலையும் மாறி மாறி வரைஞ்சு இருந்தாங்க..."

அப்புறம்

"ஆட்டோ கட்டி தெருவில்ல புழுதி பறக்க ஓட்டுக் கேட்டு நிதம் பிரச்சாரம் பட்டையக் கிளப்பிச்சு..."

ம்

"அப்படி ஒரு நாள் நானும் எங்க கூட்டுச் சேக்காளிகளும் தெரு முனைக் கடையிலே கமர்கட்டும் கடலை முட்டாயும் கடன் சொல்லிச் சாப்பிட்டுகிட்டு இருக்கும் போது..

ஊர் முழுக்க பரபரப்பு ஆயிருச்சு...

எங்க ஆத்தாக் கிழவி கூட மேக்கப் எல்லாம் போட்டுகிட்டு ஊர் எல்லைக்குப் போய் நின்னுகிச்சு...
எங்கம்மாவுக்கு லேசா பயம் இருந்தாலும் அவிங்களும் பக்கத்து வூட்டு அத்தையக் கூட்டிகிட்டு அப்பாவுக்குத் தெரியாம எல்லைக்குப் போயிட்டாங்க...

ஊரே காத்து கிடந்துச்சு...

என் கையிலே இருந்த கடலை மிட்டாயும் கம்ர்கட்டும் தீரப் போற நேரம் வந்துசுடுச்சு....

ஒரே சவுண்டு.. சும்மா பெரிய குழாய் ஸ்பீக்கர் எல்லாம் வச்சு எம்.ஜி.ஆர் பாட்டு முழங்குது... தூரத்துல்ல சர் சர்ன்னு கார்களா வருது...

ஊரே பொங்குது....

ஒரு கார் கண்ணாடி திறந்து இருக்கு உள்ளே.... ஆமா எம்.ஜி.ஆர்....எல்லாரையும் பார்த்து சிரிச்சுகிட்டே டாட்டாக் காட்டிகிட்டேப் போறார்...

நான் திடமா முடிவு பண்ணிகிட்டேன் எனக்குள்ளே...

கார் கிட்ட வந்துருச்சு...

நான் அப்பவும் என் முடிவுல்ல பயங்கர உறுதியா இருக்குறேன்...

கார் பக்கமா வந்துருச்சு....

எல்லாரும் கத்துறாங்க...

நான் முடிவு பண்ணிட்டேன்.. எனக்குள்ளே இருந்த வீரம் என் முடிவை செயல் படுத்த இது தான் டைம்ன்னு சொல்லிருச்சு...

அப்புறம் என்ன கையை நல்லா மடக்கிட்டேன்...

கார் என் கிட்ட வந்துருச்சு...

எல்லாரும் நல்லா கையை விரிச்சு எம்.ஜி.ஆருக்கு டாட்டாக் காட்டுனாங்க..

அவ்ரும் பதிலுக்கு டாட்டா காட்டுனார்..

ஆனா நான் கடைசி எம்.ஜி.ஆருக்கு வரைக்கும் டாட்டாக் காட்டவே இல்ல தெரியும்ல அதுவும் எம்.ஜி.ஆர் டாட்டாக் காட்டியும் கூட நான் டாட்டாக் காட்டவே இல்ல...

சித்தப்பு சொல்லி முடிச்சுட்டு பெருமையா எங்களை எல்லாம் பாக்க....
அவ்வளவு தான் அம்புட்டு டிபன் பாக்ஸ்ல்லயும் மிச்சம் இருந்த மொத்தச் சோறும் சித்தப்பு மூஞ்சியிலே போய் பேஸ் க்ரீம் கண்க்காக உக்காந்துக்குச்சுங்கறதை நான் தனியாச் சொல்லணுமா என்ன?

Tuesday, May 08, 2007

எங்க ஆபிஸ் பருத்தி வீரன்

"ஏ சித்தப்பு.. புதுசா ஒரு பைய.. நம்ம ஆபிஸ்ல்ல ஜாவால்ல சேர்ந்து இருக்கான்.. பார்த்துப் பேசுனீயளா?"

"வரும் போது அப்பிராணியா வர்றாயங்க..
நாம உக்கார வச்சு இங்கிட்டு இருக்கது கூரான ஆணி.. அங்கிட்டு இருக்கது மொக்க ஆணி.. பாத்து பதவிசாப் புடுங்கணும்... விரல் வீங்கிரும்டான்னு நாலு நாளுச் சொல்லிக் கொடுத்தா.. புடுங்குன ஆணியை அஞ்சாவது நாள் அம்சமா நம்ம ஓவர் கோட்டுல்ல செருகிட்டு போயிரான்வே..
சரி நம்மூர்கார பைய நல்லாயிருக்கட்டும்ன்னு நான் வாழ்த்துறதும் வழக்கமாப் போயிருச்சு" சித்தப்புன்னு நாங்கச் செல்லமாக் கூப்பிடுற ஆறுமுகம் தன் கதையைச் சொல்லி எங்கக் கண்ணைக் கசக்குனார்.

"பயலுக்கு ஜாவாத் தெரியாதாம்... வேற எதோ பிளாட்பார்ம்ல்ல இருந்து இருக்கான்.. அதுல்ல மூணு வருசம் பின்னி பெடல் எடுத்தவனாம்" நியூஸ் நாதன் எடுத்துச் சொன்னான்.

"சென்ட்ரல் பிளாட்பார்ம், எக்மோர் பிளாட்பார்ம்ன்னு ரயில் பொட்டியில்ல வந்து இறங்குனவனை எல்லாம் கம்ப்யூட்டர் பொட்டி முன்னால உக்கார வச்சுரான்வ... அவனுக்கு கீ போர்ட் எங்கிருக்கு.. மவுஸ் எங்கிருக்குன்னு நான் சொல்ல வேண்டியிருக்கு..."

சித்தப்பு சொல்லிக் கொண்டிருக்கும் போதே..

ரகளையா மொபைல் போன்ல்ல டங்கா துங்கா சேலைக்காரி பாட்டை அலற விட்டுகிட்டு கையிலே லேப் டாப் (சித்தப்புக்கு லேப் ஆப்) அப்படின்னு ஒரு மார்க்கமா புதுப் பைய வந்து இறங்குனான் சீன்ல்ல.வந்தவன் லேப் டாப்பைச் சித்தப்பு மடியிலே வச்சுட்டு .... "கொஞ்சம் கண்டுக்காதீங்கன்னு" சொல்லிட்டு டேபிளைத் துடைச்சு தூசியை நாதன் முகத்தில்லத் தட்டி விட்டான்.

"என் மடி வலிக்குது.. லேப் டாப்பை எடுக்குறீயான்னு" சித்தப்பு ஈனஸ்வரத்துல்ல சவுண்ட் கொடுக்க...

"சாரி பாஸ்... வந்தோமா வேலைய ஆரம்பிச்சமோன்னு இருக்கணும்ன்னு பெரிய பாஸ் சொல்லிட்டார்.. இந்த வெட்டி அரட்டை, வீண்வம்பு பேசிகிட்டுத் திரியறவங்களோட வச்சுக்கவேக் கூடாதுன்னு இன்டர்வீயூல்ல சொல்லிட்டார்.. அதில்லயும் இங்கே முக்கியமாச் சித்தப்புன்னு ஒரு வெத்து கேரக்டர் திரியுதாமே.. அதுக் கூடக் கண்டிப்பா எந்த விஷ்யமும் இருக்கக் கூடாதுன்னு சொன்னார்.. ஆமா யார் பாஸ் அந்தச் சித்தப்பு..."

அவன் கேட்டதும் சித்தப்பு முகம் சிதறிப் போனத் தேங்காப் பீஸ் மாதிரி கதறிப் போச்சு...இருந்தாலும் டக்குன்னு சுதாரிச்சச் சித்தப்பு...

"ஆமா உனக்கு ஜாவாத் தெரியுமா?ன்னு" வம்படியாக் கேக்க

"தெரியாதுன்னு சொன்னா நீங்கச் சொல்லித் தரப் போறீங்களா.. எனக்கும் சேத்து நீங்கக் கோடு எழுதப் போறீங்களா.. எதுக்கு இந்தக் கேள்வி இன்ட்ர்வீயூல்ல ஆறு ரவுண்டு... மொக்கப் போட்டுத் தான் கூப்பிட்டாயங்க...இனியும் கேட்டாச் சொல்லமாட்டோம்ல்ல.. நாங்க மருதக் காரங்க தெரியுமில்ல... அதுவும் அழகர் கோயில் ஆளு நான்..." பயக் கெத்துக் கொத்தா ஜொலிக்க

மருதன்னு ஊர் பேர் சொன்னதும் சித்தப்பு முகம் தேங்காப் பால் ஊத்திக் கழுவுனாப்பல்ல அப்படி பளபளக்குது..

"நினைச்சேன்.. இம்புட்டு கெத்து நம்மூர்காரப் பயபுள்ளக்குத் தான் வரும்ன்னு... வா ராசா.. ஊர்ல்ல வையைல்ல தண்ணி இருக்கா.. அழகர்சாமி ஆத்துல்ல இறங்குனதுக்குப் போனீயா... ஜிகர்தண்டாக் குடிச்சு எம்புட்டு வருசமாச்சு.. "அப்படியே ஒரு பாசமலரைக் கோர்த்து சித்தப்பு அவன் கழுத்தில்லே சூட்டிச் செட்டில் ஆயிட்டார்.

அப்புறம் என்ன ஒரே வாரத்துல்ல சித்தப்புவும் அவனும் பக்கா ஜமாவாயிட்டாங்க... கிட்டத்தட்ட நம்ம பருத்திவீரன் கார்த்தியும், சரவணனும் மாதிரி...

போன வாரம் ஒரு நாள்.. மேனேஜர் கேக்குறார்

"ஏன் ஆறுமுகம்... உங்க டீம் மேட் பார்த்தி ஓர்க்ல்ல ஓ,கே தான் .. ஆனா பொண்ணுங்கக் கிட்ட ஓவரா வழியறது.. அப்புறம் ஆபிஸ்ல்ல சேட்டிங்ன்னு ராங்க்காப் போயிட்டு இருக்காரே.. அவரோட டீம் சீனியர் மெம்பர் ஆச்சே கொஞ்சம் சொல்லக்கூடாதா? ந்னு யதார்த்தாமக் கேட்க..

அவன் எங்கே சார் கேக்குறான்.. நான் கூட நிறையத் தடவைச் சொல்லிட்டேன்..

அப்படியா?

ஆமா சார்.. நீ இப்படி பொண்ணுங்களோட ஓவராப் பேசிகிட்டுத் திரிஞ்சா கண்டப் பயலும் வயிர் எரிஞ்சு உன் வேலைக்கே உலை வச்சுரப் போறான் பாருன்னும் சொல்லிட்டேன் பைய கேக்க மாட்டேன்னு வம்படியாத் திரியுறான் அப்படின்னு அடக்கமாப் பதில் சொல்லி தனக்கு தானே சொந்தச் செலவுல்ல சூ வச்சுகிட்டார் சித்தப்பு.

அடுத்துச் சும்மா இருந்த நம்ம சித்தப்புவை சிந்தனைச் செய்ங்கன்னு இப்படி கிளறி விட்டான் பருத்திவீரன்

"சித்தப்பூ எப்படியாவது ஒரு தரமாவது ஆன் சைட் போயிரணும் சித்தப்பு.".

" ஏன்டா இங்கிட்டு என்னக் கொறச்சல்?"

"என்னச் சித்தப்பு இப்படி கேக்குறீங்க? எத்தன நாள் தான் இவளுகளுக்கு ஜிமிக்கி, ஸ்டிக்கர் பொட்டு, ரிங்ன்னு நம்ம வாடிப்பட்டி சந்தையிலே வாங்கியாந்ததை ... HEY I BOUGHT THIS FOR U WHEN I WENT TO DUBAI LAST VACATION... MY MOM GOT THIS FOR U FROM HER TRIP TO SPAIN அப்படின்னு பரோட்டாப் போடறது..

போனத் தரம் நம்ம ஊர் தெரு முக்குல்ல பத்து ரூவா பாசி மணியை முப்பது நிமிசம் பேரம் பேசி மூன்று ரூவாவுக்குக் கேட்டு இனி என் மூஞ்சியிலேயே முழிக்காதேன்னுச் சொல்லி அஞ்சு ரூவாக்கு கையிலே கொடுத்தான் நம்ம மூக்கன்..

அதேப் பாசியை கிப்ட் ராப் பண்ணி.. அந்த பஞ்சாப் பானுவுக்கு எங்க அண்ணன் ஆன் சைட்க்கு லண்டன் போனப்போ உனக்க்காக நான் சொல்லி வாங்குனதுன்னுக் கொடுத்தப்போ மைல்ட்டா டவுட் ஆயிட்டா.. இனியும் ஆட்டயப் போட முடியாது..

சோ ஆன் சைட் போறோம் அங்க சிவத்த சிவத்த குட்டப் பாவடப் போட்டக் குட்டிகளாப் பார்த்து நம்ம பில்டப்பு போட்டு வாழ்றோம்.. அடி வாங்குனாலும் அவக கையாலே அடி வாங்கணும் அது தான் என் சித்தப்பு என் லட்சியம்..மனுசப் பிறவின்னா ஒரு லட்சியம் வேணாமாச் சித்தப்பு"

சித்தப்புப் பேசக் கூட முடியாம கண்ணு கலங்கி நிக்க.. ஆன் சைட் போறதுக்கு இப்படி ஒரு காரணமா..அப்படின்னு நாங்களும் மலைக்க

"சித்தப்பூ எங்கச் சித்தி பையன் போன வருசம் ஜெர்மனிக்குப் போயிருக்கான்.. அங்கே இந்தியாக்காரப் பயபுள்ளன்னு சொன்ன உடனே.. ஏ...YOU FROM LAND OF ELEPHANTS
அப்படின்னு பொண்ணுங்க, பயல்வ,கூடவே அம்மணிகளும், அய்யாக்களும், லைன் கட்டி கதைக் கேட்க.. திருச்செந்தூர் கோயில் யானைத் தவிர வேறு யானையைப் பாக்காத பய மண்டையிலே பல்பு எரிஞ்சிருக்குப் பாருங்க...

எஸ் எஸ் YOU KNOW OUR COUNTRY ELEPHANT COUNTRY.. EVERY HOUSE HAS 3-4 ELEPHANTS..MY HOUSE HAS 6 ELEPHANTS.. I GO SCHOOL COLLEGE IN ELEPHANT... MY DAD GO OFFICE IN ONE ELEPHANT.. MY MOM GOES VEGETABLE MARKET IN ONE ELEPHANT...ITS FUN U KNOW அப்படின்னு அடிச்சு விட்டுருக்கான்..ம்ஹும் கூட்டத்துல்ல இருந்த பொண்ணு ஒருத்தி அவன் விட்ட ரீலை நம்பி அவன் கன்னத்துல்ல பச்சக்ன்னு ஒரு உம்மா வேறக் கொடுத்துட்டா.... தொடர்ந்து பல உம்மாக்கள் ... பைய பாக்க எலிபேண்ட் மாதிரி இருந்துகிட்டு அந்த ரவுசு பண்ணியிருக்கான்.. அன்னிக்கு முடிவானது தான் லட்சியம்.. ஆன் சைட் போய் அட்லீஸ்ட் ஒரு உம்மாவது வாங்கமா நான் ஐ,டி பீல்ட்ல்ல இருந்து ரிட்டையர் ஆக மாட்டேன்னு...

பருத்திவீரனின் ஆவேசம் சித்தப்புவையும் தொற்றி கொண்டது தான் துரதிர்ஷ்ட்டம்.. கல்யாணம் ஆகி இரண்டு புள்ளக்கு அப்பன் ஆகிட்ட சித்தப்புவும் இப்போ வெள்ளைக்கார முத்தம் அப்படின்னு பாட்டு பாடிகிட்டுத் திரியுறார்...

மக்களே இதெல்லாம் எங்கே போய் முடியுமோ?

Monday, April 02, 2007

ஆபிஸர் விடைபெறுகிறார்.

கிறிஸ் மா கிறிஸ் சைல்ட் விளையாட்டு ஓரளவுக்கு உங்களுக்குப் புரிஞ்சி இருக்கும்... இதோ நம்ம வாழ்க்கையிலே அந்த விளையாட்டை நான் எப்படி விளையாடுனேன்னு சொல்லுறேன்...

மொதநாள்.. ஆபிஸ்ல்ல அவன் அவன் பரபரப்பாத் திரியறான்.. ஒருத்தனுக்கு 5 ஸ்டார் சாக்கேலட்.. ஒருத்தன்னுக்கு மிக்கி மவுஸ் கீ செயின்...இன்னொருத்தனுக்கு டேபிள் டாப் வாசகம்.. இப்படி டைம்க்கு டைம் அவன் அவனுக்கு வந்த கிப்ட அப்டேட் ஆகிட்டு இருக்கும் போது ஆபிஸ் முழுக்க தீ புடிச்சா மாதிரி அந்த கிப்ட் பத்தி பிளாஷ் நியூஸ் பரபரக்குது...

மாப்பூ நம்ம டேமேஜருக்கு எவனோ பீடிங் பாட்டில் வாங்கி அழகாக பொட்டலம் போட்டுக் கொடுத்துருக்கான்... டூ மை டியர் ஸ்வீட் லிட்டில் கிறிஸ் சைல்ட்ன்னு பிரிண்ட் அவுட் வேற.. அதுல்லயும் சைல்டை போல்ட பண்ணியிருக்கான்டா.. மனுசன் அதைப் பிரிக்கும் போது அவரைச் சுத்திப் பொண்ணுங்க வேற நின்னுகிட்டு இருந்துச்சா...

GALS U WANT TO SEE MY GIFT... PACKING LOOKS NICE LET US OPEN IT பாவம் மனுசன் தொறந்துப் பாத்துட்டு போகோ சேனல் கார்ட்டூன் மாதிரி முழிச்சார் பாக்கணுமே...

பேக்கிங் என்னமோ FEDEX ரேஞ்ச் தான்னாலும் உள்ளுக்கு மேட்டர் பாண்டி பஜார் டா...விலை 23.50 /ன்னு போட்டிருக்கும் அதைக் கூடப் பயபுள்ள அழிக்கல்ல

எவனோ நம்ம ஹிட்லரைச் செம்மையாக் கலாய்க்கறேன்னுச் சொல்லி கரண்ட் கம்பியை எடுத்து கடவாப் பல்லுக்குள்ளே விட்டிருக்கான்...

என்னது கரண்ட் கம்பி எடுத்து கடவாய் பல்லுக்குள்ளே விட்டுருக்கானா? ஏன் மாப்ளே இதெல்லாம் ஒரு ஜாலி தானே...

ஆகா ஜாலியாம் ஜாலி.. சோலியைப் பாக்க வந்த இடத்துல்ல என்ன ஜாலி வேண்டி கிடக்கு... அந்த ஆளு மொகம் போனப் போக்கை வச்சுப் பார்த்தா எவன்னு மட்டும் தெரிஞ்சது

மூந்நூறு கிலோ ஆணியைத் தனியாகக் கொடுத்து முனையை மட்டும் பாலிஸ் போடச் சொல்லி ஆர்டர் போடப் போறான்.. நீ எதுக்கும் அந்த ஆள் ரூம் பக்கம் போற வேலை இருந்தா ஹெல்மேட் ஹெட்போன் எல்லாம் போட்டுட்டுப் போ..

என்னடா ஸ்பேஸ் ஷிப்ல்ல போறவன் மாதிரிப் போகச் சொல்லுறே.. நான் என்ன மூனுக்காகப் போறேன்..

காலையிலே இருந்துப் போனவன் எல்லாம் அந்த ஆள் அலறுன ..அலறல்ல ஒண்ணுக்கு ரெண்டுக்குன்னு போயிட்டு இருக்கான்.. நீ வேற அவர் செல்லப் புள்ள.. நீ முனுக்குப் போனாலும் ஆச்சரியமில்லடா.. சொல்லிட்டேன் உஷார்...

ஹிட்லருக்கு அப்படி ஒரு அற்புதப் பரிசை கொடுத்தது யார்ன்னு போனப் பாகம் படிச்ச எல்லோருமே கண்டுப்பிடிச்சுருப்பீங்க....

யார் சின்ன்ப்புள்ள... இப்போக் காட்டிட்டோம்ல்ல... நண்பன் கொடுத்த கரண்ட் கம்பி மெசெஜ் எல்லாம் நம்மை சிறிதும் பாதிக்க வில்லை...

டேய் உய்யா.. நாங்க எல்லாம் எரிமலையை எடுத்து இடுப்புல்ல கட்டிகிட்டு... துடுப்பு போடாமா வெறும் விரலாலே ஆத்தைத் தாண்டி படகு விடுறவங்க... ஸ்மால் கரண்ட் என்னிய என்னப் பண்ணிரும்... ஷாக் எல்லாம் எனக்கு சர்பத் மாதிரி... லைட்டா ஐஸ் போட்டு அடிச்சுட்டுப் போயிட்டே இருப்பேன் இல்ல.. என் மனசுக்குள்ளேச் சொல்லிகிட்டேன்...

அடுத்த ஆறு நாளுக்கும் கிப்ட் லிஸ்ட் இந்தா உங்கப் பார்வைக்கு...

ரப்பர் நிப்பிள்

கிலுகிலுப்பை...

ரப்பர் மீன் பொம்மை.. அமுக்குன்னா கீகீன்னு சவுண்ட் வருமே அது..

தொட்டில் ராட்டினம்..

அப்புறம் கிராண்டா.. ஒரு ஜட்டி பனியன் ஜஸ்ட் பார்ன்ல்ல் போய் வாங்குனது...ஒரு வாரமும் ஆபிஸ் அல்லலோ தில்லோலப் பட்டுகிட்டு இருக்கு... எவன்டா அவன்னு ஒரேப் பேச்சு...

உள்ளுக்குள்ளே சிங்கம் சிலிர்த்துகிட்டாலும் நோ.. இப்போ சிலிர்க்காதே ஸ்லீப் ராசா.. அது தான் உனக்கும் நல்லது எனக்கும் நல்லதுன்னு நல்ல விதமா கூறிட்டு என் வேலை எல்லாம் வில்லங்கம் இல்லாமா பார்த்துகிட்டு இருந்தேன்...

நம்ம ஹிட்லர் கேபின்ல்ல பரிசுகள் லைன்னா அடுக்கி வைக்கப் பட்டிருந்தது...அட அட எம்புட்டு அழகா இருக்கே...

இதை எல்லாம் பாத்துச் சிரிச்சவன் ஜஸ்ட் சிரிப்போட வந்து இருக்கலாம்... ம்ம்ஹும் அப்படி இருந்திருந்தா ஆபிசர் ஆபிசராவே இருந்து இருப்பானே...அங்கிட்டு தானே எனக்கு நானே -ஷூட்டீங் ஆர்டர் கொடுத்துகிட்டேன்...

SIR UR ROOM LOOKS LIKE AN ABSOLUTE KIDS ROOM

அப்படின்னுச் சொன்னேன்...ஓடனே ஹிடலஎ என்னிய மேலும் கீழும் பார்த்துட்டு...

I THINK ONLY U CAN DO THIS அப்படின்னு சொல்லி முடிக்கல்ல.. இடுப்புல்ல இருந்து எரிமலை வழுக்கி கால்ல விழுந்த மாதிரி டக்குன்னு ஓடம்பு மொத்தமும் ஜெர்க் ஆகி வொர்க் ஆகாம நின்னுருச்சு...

சும்மாவே ஹிட்லர் என்னைய ஆணி புடுங்க வுட்டு ஆயிரம் நொள்ளைச் சொல்லுவார்.. இப்போ கண்டு வேற புடிச்சிட்டார்.. ஆணி எல்லாம் என் அங்கம் முழுக்க அடிக்கப் பட்டு அதை என்னிய புடுங்கச் சொல்லி ஹிட்லர் சொல்லுற மாதிரி எனக்கு ஒரு பிளாஷ் கனவு வந்துப் போச்சு..

YES ONLY U CAN FIND OUT WHO DID THIS...WILL U DO THIS FOR ME BUDDY...

ஆகா... கள்ளன் கையிலே கல்லாப்பெட்டி சாவியா... நல்ல வேளை நான் செஞ்சதைக் கண்டுப்பிடிச்சாரோன்னு நினைச்சு நடுக்கத்துக்குப் போனவனை இழுத்துப் புடிச்சு நிம்மதிக் கொடுத்துச்சு அவர் கேட்டுகிட்டது...ஆனாலும் புது சிக்கல் பீதியைக் கிளப்பிச்சி...

ரூம்குள்ளே... இருந்து வெளியே வந்தவன் பாதி பயம் போய் பத்திரமா சீட்டுக்கு வந்து உக்காந்தேன்....

அன்னிக்கு சாயங்காலம் வீட்டுக்கு வந்து ஒரு மாசச் செலவு கணக்கைச் சரிப்பாக்க.. கிரெடிடி கார்ட் ஸ்லிப்பை எல்லாம் சரி பாத்துகிட்டு இருந்தேன் அதுல்ல ஒரு சிலிப் மட்டும் மிஸ்சிங்...

YES U R CORRECT JUST BORN BILL SLIP....அப்படின்னா... அந்த சிலிப்பை அந்த பேக்கேஜ்க்குள்ளேயே வச்சேன்....

அன்னிக்கு ஹிட்லர் வேற ஆபிஸ்ல்ல கிப்ட் திறக்கவே இல்ல...

அவர் திறக்கப் போறார்.. அதுக்குள்ளே சிலிப் இருக்கப் போகுது...

அதுல்ல அழகா என் கையெழுத்து....

எப்படிடா ஆபிசர் நீ மட்டும் இப்படி சிக்குற....எனக்கு நானேக் கேட்டுகிட்டேன்....

அப்போ என் செல்போனில் மெசேஜ் வருது.. எடுத்துப் பார்த்தா ஹிட்லர் தான் ( நான் பெயரை இன்றளவும் மாற்ற வில்லை)

DEAR DEV...WISH U AND YOUR FAMILY A VERY HAPPY CHRISTMAS - HITLER

அட அநியாய ஹிட்லரே...

முணுமுணுத்தப் படி அப்படியே தூங்கிப் போனேன்

Friday, March 30, 2007

அட அநியாய ஆபிஸரே - 4

அப்ரேசல் முடிஞ்சு அவன் அவனுக்கு அல்வாவும் லட்டும் மிக்ஸரும் காரசேவும் இனிப்பு சேவும் ஏன் மக்ரூன் கூடக் கொடுத்தாய்ஙக... நமக்கும் கிடைச்சது எம்.ஜி.ஆருக்கு ஒரு புரட்சித் தலைவர் , கருணாநிதிக்கு ஒரு கலைஞர் ,ரஜினிக்கு ஒரு சூப்பர் ஸ்டார், கமலுக்கு ஒரு ஓலக நாயகன்...அந்த வரிசையிலே எனக்கும் கிடைச்சது ஒரு மெகாப் பட்டம்...என்னப் பட்டம்ன்னு கேக்குறீங்களா...

அதையும் சொல்லுறேன்.. ஜெர்மன் சோல்ஞ்சர்.. ஜெர்மன் ஷெப்பர்ட் தெரிஞ்சிருக்கும் உங்களுக்கு ஜெர்மன் சோல்ஜ்ர் புதுசா இருக்கும்.. போனப் பதிவைப் படிச்சீங்கன்னா பட்டக்காரணம் உங்களுக்கே விளங்கும்...

நாளொரு நக்கலும் பொழுதொரு அவமானமும் என ஹிட்லருக்கும் எனக்குமான உறவு நிலை உலகத்தின் விளிம்ம்புக்குச் சென்று சீர்கெட்டுச் சின்னாப்பின்னமாகச் சிக்கு விழுந்துப் போய் கொண்டு இருந்தது..

இதனால் செமக் கடுப்புக்குள்ளான நான் அந்த முடிவை எடுத்து.. அதை என் நண்பர்களிடமும் சொன்னனேன்.. மச்சான் ஸ் பேசாம ராஜினாமாக் கடித்ததுல்லக் கையெழுத்துப் போட்டுரலாம்ன்னு பாக்குறேன்டா இன்னொரு பொன்மாலைப் பொழுதில் நாயர் கடை டீ ஸ்டாலில் நான் என் உணர்ச்சிகளைக் கொந்தளிச்சு கொப்பளிச்சேன்.

எனக்கு ஒத்தடம் கொடுக்கற மாதிரி ஒரு ஆறுதலான அயோடக்ஸ் தடவுன வார்த்தைகள் பதிலா வரும்ன்னு நான் காத்திருந்தா.. சண்டாளர்கள் டைமிங்காக் கவுத்து கரையான் புத்துக்குள்ளேக் கையை விட்ட எபெக்ட்ல்ல எனக்கு பதில் சொன்னாங்க..

மாப்ளே நீ இப்படி ஒரு முடிவு எடுக்கலாமாடா.. நீ யாருடா வீரன்... ஒரு வீரன் இப்படி முடிவுப் பண்னக் கூடாதுடா.. போராடணும்.. அதுவும் நீ ஜெர்மன் சோல்ஜ்ர் ஆச்சு... குடிச்ச டீ தொண்டையிலே நின்னு குலுங்கி குலுங்கிச் சிரிச்சிட்டு வயித்துக்குள்ளேப் போச்சு... அந்த அளவுக்கு நக்கலுக்கு நையாண்டித்தனத்துக்கும் ஆளாக்கப்பட்டேன்.. யாரால்.. எல்லாம் அந்த ஹிட்லரின் மறு அவதாரத்தில்.. என்னைக் காப்பாற்ற ஒரு சர்ச்சில் வரமாட்டரான்ன்னு நான் தவிக்க ஆரம்பிச்சேன்...

சிரிங்கடா நல்லாச் சிரிங்க எல்லாத்துக்கும் ஒரு நாள் இருக்குடான்னு தமிழ் படம் பாத்து கெட்டுப்போன டயலாக் ஒண்ணை எடுத்துச் சொல்லிட்டு ஹிட்லர் போன் வர பாதி டீயை மடக்கென்று ஊற்றி கொண்டு கிளம்பினேன்.....


அதுக்கு அப்புறம் ஒரு நாள் டீம் மீட்டிங் வைச்சாங்க...

அன்னிக்கு பாய் கடை பிரியாணியும் அவிச்ச முட்டையும் தின்ன அசதி ஆளை அசத்த கொஞ்சம் கண் அசந்துட்டேன்.. படு பாவி பயர்...(என்ன இருந்தாலும் நமக்கு மேலதிகாரி மரியாதைக் குறைவாப் பேசப்பிடாது எனக்கு நானே வச்சுருக்க கொள்கை இது.. நானெல்லாம் ஒரு கொள்கை வீரன்ங்க...அதைப் பத்தி தனியா வேற பதிவு போடுறேன்)) அசிங்கப்படுத்திட்டார் என்னிய.... கிட்ட வந்து தட்டியிருந்தாக் கூட எழும்பி இருப்பேன்... விளங்காத பயர் போனைப் பண்ணி எழுப்புறார்... என் கிரகம் புடிச்ச நேரம் அன்னிக்குப் பார்த்து அவருக்குன்னு செட் பண்ணியிருந்த ரிங் டோன் WHO LET THE DOGS OUT???

சைலண்ட் மோட்ல்ல இருந்து செல்லமா பேச வேண்டிய போன் சங்கநாதமா ஒலிச்சு என்னைச் சங்காரம் பண்ணக் கிளம்பிருச்சு...

WHATS WRONG WITH U MAN? நீ ஒரு ஆபிசர் மாதிரியே பிஹெவ் பண்ண மாட்டேங்குற? ஒரு காலேஜ் பையன் மாதிரி கோமாளித் தனம் பண்ணிகிட்டு திரியுரன்னு வாய்ல்ல கஞ்சி காயச்சு நான் போதும் போதும்ன்னு கதறும் அளவுக்கு ஊத்து ஊத்துன்னு ஊத்திட்டார்... சுத்தி இருந்தப் பிகருங்க எல்லாம் கெக்கப் பிக்கன்னு சிரிச்சு நொந்தவனை நூடுல்ஸ் ஆக்கி தொங்கவிட்டிருச்சுங்க...

அத்தோட விட்டிருக்கலாம்...

இந்த வாரம் பார்ட்டி போலாம்ன்னு மேப் போட்டார் ஹிட்லர்... மேப்ல்ல எனக்குத் தான் ஆப் சொருகியிருக்குன்னு தெரியாம வலியப் போய் மேப்பை வாங்கி மூக்கு கிட்ட வச்சு உத்துப் பாத்தேன்.. WE WILL HAVE A DRINKS PARTY?

ஹேய் சோல்ஜர் வாட்ஸ் யுவர் பேவரிட் டிரிங்க் மேன்? என்னைச் சீண்டுறதே அந்தாளுக்குப் பொழப்பாப் போச்சு.. பசங்களும் பாசத்தைப் பொங்க விட்டு அன்பை வழியவிட்டாயங்க... எனக்குத் தெரிஞ்ச சோம பானம், சுராபானம் பிராண்ட்டை எல்லாம் நினைவில் கொண்டு வர கடும் முயற்சி செஞ்சிகிட்டு இருக்கும் போதே பயபுள்ள ஒருத்தன் போட்டு உடைச்சான்.... மால்ட்டோவா மம்மின்னு....

'HES A teetotaler BOSS '

அப்படின்னு நம்ம நல்லப் புள்ளத் தனத்தை எடுத்துச் சொன்னாயங்க...

வாட்... சரியானப் பச்சப் புள்ள மேன் நீ...GROW UP DUDE அப்படின்னு என் நல்லப் புள்ளத்தனத்தைச் சின்னப்புள்ளத்தனமா ஆக்கி அலங்கோலப்படுத்திட்டார் நம்ம ஹிட்லர் அண்ணன்.

மீட்டிங் முடிஞ்சுப் போச்சு..என் மானம் கப்பலேறிப் பல மைல் தூரம் போயிருச்சு....காரணம் ரைட்டோத் தப்போ மேல இருக்க அதிகாரி நம்மளைச் சின்னப்புள்ளன்னுச் சொன்னா அசிங்கம் இல்லயா.. அவமானம் இல்லையா...ஒரே பிலீங்க்ஸ் ஆப் இன்டியாவல நொந்துப் போயிட்டேன்.. இதுக்காகவது ஒரு முழு பாட்டில் பீர் விட்டுட்டு போய் அந்த ஆள் முன்னாடி நின்னு மைக் போட்டு ஏஏ.. ஹிட்லர் வெளியே வாய்யான்னு கூப்பிடலாம்ன்னு தோணுச்சு.. பட் நான் ஏற்கனவே சொன்னா மாதிரி நானெல்லாம் ஒரு பெரிய கொள்கை வீரன்...அதனால அமைதியாப் போயிட்டேன்... அடங்கிப் போயிட்டதா ஹிட்லர் மாதிரி நீங்களூம் தப்பு தப்பா நினைச்சுக்கக் கூடாது சொல்லிட்டேன்...

அதுக்கு அப்புறம், ஹிட்லர் ஆட்சி நமக்கும் பழகி கிட்டத்தட்ட ஹிட்லரின் நம்பிக்கைக்குரிய ஒரு தளபதியாவே காலம் என்னைக் கட்டாய மாற்றம் செய்தது எனக்கே ஆச்சரியமான விஷயம்..

இப்போ எல்லாம் அந்த ஆள் என்னிய என்னச் சொன்னாலும்...ஹே..ஹே.. குட் ஜோக் பாஸ்ன்னு வெக்கமே இல்லாம சிரிக்கிற அளவுக்கு சிரியசாக் கேரியர்ல்ல கவனமாயிட்டோம் இல்ல... ஆனாலும் அந்தச் சின்னப்புள்ள மேட்டர் மட்டும் மனசுல்ல ம்ஞ்சத்தூள் தூவி விட்டக் கணக்கா எரிஞ்சிகிட்டே இருந்தது...

அந்த மஞ்சத்துளை எடுத்து மசாலாவுல்ல போடுறதுக்குத் தோதா ஆபிசருக்கும் ஒரு கோல்டன் வாய்ப்பு வந்துச்சு... ஆமா அந்த ஹிட்லரை அடக்க ஒரு சர்சில் வந்தான்.. இந்த ஹிட்லரைக் கலாயக்க எனக்குக் கிறிஸ்துமஸ் ஒரு வாய்ப்பா வந்துச்சு.. வாய்ப்புன்னா வாய்ய்பு.. அம்புட்டு அருமையான வாய்ப்பு..

அது என்னன்னு கேக்குறீங்களா.. சொல்லுறேன்.. அதுக்கு நீங்களும் தயார் ஆக வேணாமா

இந்தக் கிறிஸ்துமஸ் பண்டிகைங்கறது பரிசுகள் கொடுத்து ஒருத்தரை ஒருத்தர் மகிழ்ச்சி அடைய வைக்கிற பண்டிகை.. கொடுப்பது இதன் சிறப்பு... இந்தப் பண்டிகைக் காலத்தில் வெளிநாட்டினர் ஒரு விளையாட்டு விளையாடுவாங்க அந்த விளையாட்டுக்கு பேர் கிறீஸ் மாம் .. கிறிஸ் சைல்ட்

இதைப் பத்தி கூகிளாண்டவரைக் கேட்டாக் கண்டிப்பா பக்கம் பக்கமா விளக்கம் கொடுப்பார்... எங்க ஆபிசும் மேற்கத்திய மக்களை வச்சு பொழைக்கிற ஆபிஸ் தானே... நாங்களூம் அந்த விளையாட்டை விளையாடணும்ன்னு எங்க ஹெ.எச் ஆர் அக்கா ( அக்காவை அதுக்குள்ளே மறந்து இருக்க மாட்டீங்கன்னு நம்புறேன்) வந்து ரூல்ஸ் எல்லாம் சொல்லி உசுப்பேத்தி விட்டாயங்க...

அதாவது சீட்டு எழுதி ஒரு பொட்டியிலே போடுவாங்க.. நம்ம பேர் எல்லாம் சீட்ல்ல இருக்குமாம்.. நம்ம எடுக்குற சீட்ல்ல யார் பேர் வருதோ நமக்குக் குழந்தை அந்தக் குழந்தைக்கு நாம் தான் அம்மா.. அம்மா பரிசு கொடுக்கணும் குழந்தையை ஊக்குவிக்கணும் ஒரு வாரம் இந்த விளையாட்டு நட்க்கும்

சரியா கிறிஸ்துமஸ்கு மொத நாள் யார் யாருக்குப் புள்ளன்னு தெரிஞ்சிரும்.. ஒரு வாரமும் யார் கிட்ட இருந்துப் பரிசு வருதுன்னு தெரியாம மெயின்டெயின் பண்ணனும் அந்த த்ரில் தான் விளையாட்டின் சிறப்பு...

இதைச் சொன்னது தான் தாமதம் அவன் அவன் தான் டாவடிக்கிற பொண்ணு தனக்கு குழந்தையா வர்ணும் கவர் பண்ணனும்ன்னு படா திட்டம் எல்லாம் போட ஆரம்பிச்சுட்டானுங்க... நாத்திகன் கூட சாமி கும்பிட்டு பயபக்தியாச் சீட்டு எடுத்தான்...

நானும் சீட்டு எடுத்தேன் நல்ல வேளை ஹிட்லர் பேர் இல்ல.... நமக்கு இந்த விளையாட்டு எல்லாம் அவ்வளவு சுவரஸ்யமா இல்ல..,. எதோ வந்த பேருக்கு எதாவது செய்வோம்ன்னு சீட்டை மடிச்சு வைச்சுட்டு பொட்டியைத் தட்ட ஆரம்பிச்சேன்...

நம்ம பைய ஒருத்தன் அவன் ரூட் விடுற பொண்ணு பேர் தான் சீட்ல்ல வரணும்ன்னு சிட்டியில்ல இருக்க எல்லா மதத்துக் கோவிலுக்கும் வேண்டிகிட்டு சீட் எடுத்தும் சிலிப் ஆயிருச்சு...ஒரு ரிட்டையர் ஆக வேண்டிய மாமா பேர் அவனுக்கு வந்துருச்சு...ஆனாலும் அவன் பீல் ஆகல்ல..

அவனை நான் காரணம் கேட்டேன்.. மாப்பூ இருந்தாலும் என்னடா.. நான் அவளுக்கு கிப்ட் கொடுப்பேன்.. அவளுக்கு அவ கிறிஸ்மாம் யார்ன்னு தெரியாதுல்ல... நான் கிப்ட் மூலமா என் காதலைச் சொல்லிருவேன்டா எனக்கு நம்பிக்கை இருக்குன்னு சொன்னான்...

அந்த ஆசிர்வதிக்க நிமிடம் என் மூளையிலே மின்னல் வெட்டிச்சு... அட அட ராசா என்ன ஒரு ஐடியாடா... என் நெஞ்சுல்ல மால்ட்டோவா வார்த்தடான்னு அவனை உச்சி மோந்தேன்..

என்னடான்னு அவன் கேட்டான்.. நீங்களும் கேப்பீங்க தெரியுது...

பதினாறு வயதினிலே பரட்டை மாதிரி உக்காந்துகிட்டு சொன்னேன்...

மாப்பூ ஹிட்லருக்கு நான் கிப்ட் கொடுக்கறதா முடிவு பண்ணிட்டேன்டா.... இந்த ஒரு வாரமும் நான் கொடுக்கிற கிப்ட்ல்ல மவனே ஹிட்லரை அப்படி கலாய்க்கிறேன் பாருன்னு.. வீரப்பா ரேஞ்சுல்ல சிரிச்சேன்... அப்புறம் வெயிட்டீஸ் ...டூமாரோ முடிச்சுக்குவோமா.... ஏன்னா நட்சத்திர சீசன் க்ளோஸ் ஆகப் போகுதுல்ல

Thursday, March 29, 2007

ஆபிஸருக்கு இன்னிக்கு அப்ரேசல் - 3

ஒரு வாறாக பொழப்பைக் கத்துக்கிட்டு எதோ தக்கா புக்கான்னு வேலையைப் பாத்துகிட்டு இருந்த நேரம் நம்ம டேமேஜர் கொடுத்த இமசை இருக்கே அதைச் சொல்லி மாளாதுங்க...ஒரு தனி பொஸ்தகமே போடலாம்..

போன்ங்கற ஒரு பொருளை கிரகாம் பெல் கண்டுபிடிச்சதே இந்த கிரகம் பிடிச்ச டேமேஜர் என்னைய திட்டி திண்டாட வைக்கிறதுக்குத் தானோ நான் நினைச்ச நாட்கள் ஏராளம். இத்தனைக்கு அந்த ஆள் சீட்டுக்கும் என் சீட்டுக்கும் இருபது அடி தூரம் தான் இருக்கும்...

எந்த அள்வுக்கு வெறுப்பு ஏத்துவார்ன்னா... நான் பக்கத்துல்ல நின்னுகிட்டு இருந்தாக் கூட என் டெஸ்க்குப் போய் போனை எடுக்கச் சொல்லிட்டுப் போனைப் போடுவார்...மனுசனுக்கு நானும் மரியாதைக் கொடுத்துப் போனை எடுத்தா.. ரெண்டு ஒரு வார்த்தைப் பேசிட்டு.. ப்ளிஸ் கம் டூ மை கேபின் வீ நீட் டு டிஸ்கஸ்ன்னு ரேகிங் பண்ணுவார்...ஒரு மனுசன் எம்புட்டுத் தான் தாங்குவான்.. என்னத் தான் நான் கைப்புள்ளயின் தீவிர ரசிகனா இருந்தாலும்.. அப்பப்போ அந்த ஆளு மேல விருமாண்டி காளை மாதிரி மோதி முட்டி வச்சிரலாம்ன்னு தோணும் ஆனா முடியாது...

ஒருக்கா பின்னாடி ஓட்டல்ல எதோ புதுசா திங்குற ஐட்டம் ஒண்ணு போட்டுருக்காங்கன்னு எல்லாரும் எடுத்துச் சொல்லி ஆசைக் காட்ட அது எதோ ஒரு வியர்டு ஐட்டம் போலிருக்கும்.. பாதி தூக்கத்திலிருந்தக் கோழியைத் தட்டி எழுப்பி கழுத்தைத் திருகி கொழம்புல்லப் போட்டாய்ங்கப் போல.. அது விட்ட சாபமோ என்னவோ... தின்ன எனக்கு வயிறு விசில் அடிச்சு வில்லங்கமாகி வில்லுப்பாட்டாடிருச்சு..

மனுசன் அவஸ்தையிலே அவ்சரமாப் போய் உக்காந்து இருந்தா அங்கிட்டும் அந்த ஆள் போன்.. மொபைல் போன் வேற கூன்னு கூவுது.... முழு ரிங் விட்டுட்டு சும்மா இருந்தேன்.. மறுபடியும் அடிக்கிறார் அந்த ஆளு.. என்னை விட என் வயிறு பட்ட பிலீங் இருக்கே அதெல்லாம் பதிவுல்ல விவரிக்க முடியாத வேதனை...

சரின்னு பல்லைக் கடிச்சுகிட்டு... பாஸ் ஐ யாம் இன் டீப் டிஸ்டெரஸ்... அப்படின்னு ஆரம்பிச்சு நடந்த சம்பவம் துவங்கி நடந்துக்கொண்டிருக்கும் நிகழ்வு வரைக்கும் பயங்கர எமோஷனலாச் சொல்லி முடிக்கிறேம்... ஓகே ப்னிஷ் இட் பாஸ்ட் அன்ட் கம் வீ ஹேவ் எ மீட்டிங் இன் நெக்ஸ்ட் 5 மினிட்ஸ்ன்னு சொல்லுறார்...

யோவ் நான் என்ன அஞ்சப்பர்ல்ல உக்காந்து நெஞ்செலும்பு சூப் வாங்கி சப் கொட்டி குடிச்சிகிட்டு இருக்கேன்னா சொன்னேன்.... என்ன நிலைமையிலே இருக்கேன் வெக்கம் எல்லாம் விறகாக் கட்டி வித்துட்டு உங்கிட்டச் சொன்னா.. ப்னீஷ் இட் பாஸ்ட்ன்னு சொல்லுறீயேன்னு.... அதுக்கு அப்புறம் விவரம் கேக்காதீங்க...

ஒண்ணே ஒண்ணு இப்படி ஒரு நிலைமையிலே தான் என் மொபைல்ல அந்த ஆள் பேரை 'ஹிட்லர்'அப்படின்னு மாத்தி வச்சேன்....

அதுக்கு அப்புறம் அந்த ஆள் கால் எப்போ வந்தாலும் .. என் மொபைல்ல ஹிட்லர் காலிங் அப்படின்னு தெரியும் பாருங்க அதைப் பாக்கும் போதெல்லாம் எனக்கு ஒரு அல்ப சந்தோஷம்...
இந்த ஹிட்லர் விவகாரம் ஒரு நாள் டீக் கடையிலே நம்ம சகாக்களுக்கும் தெரிய வந்துச்சி.. நமக்கு ஒரு தனி மரியாதைக் கிடைக்க ஆரம்பிச்சது...

அதாவது டீக் கடையிலே நிக்கும் போது அந்த ஆள் கால் வந்துச்சு...

"மாப்பூ யாருடா ஹிட்லர் காலிங்..." பசங்க கேக்க..

"எல்லாம் டேமேஜர் தான் " அப்படின்னு ஆரம்பிச்சு அதன் பின் கதைச் சுருக்கத்தை ஒரு வழியா ஒரு மசாலா டீ.. ரெண்டு கீரை வடைக்கு ஊடே சொல்லி முடித்தேன்...சகாக்களும் அதை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றி என்னை உசுப்பு உசுப்புன்னு ஏத்தினதிலே... வெறும் ஹிட்லரா இருந்தவரை..
"தி லிவிங் ஹிட்லரா" மாத்தி மெருகு ஏத்திட்டேன்...

ஹிட்லரின் அராஜகம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக் கூடிக்கிட்டேத் தான் போச்சே தவிர குறையவே இல்லை..

ஆப்ரேசல் ஆப்ரேசலுன்னு ஒரு விஷப் பரீட்சை ஒரு நன்னாளில் நிச்சயிக்கப் பட்டது.. நமக்கு அது தான் முதல் அனுபவம்... தனியா ரூம் போட்டு நம்மை நாறடிக்கப் போறாங்கன்னு தெரியாத அப்பாவி பருவம் அது... நல்லா சீவி சிங்காரிச்சு... சென்ட் எல்லாம் அடிச்சு.. ஒரு தடவைக்கு ரெண்டு தடவை தேயச்ச சட்டை எல்லாம் போட்டுகிட்டு கிளம்பிப் போனோம்ல்ல ஆபிஸ்க்கு....

உள்ளே போறவன் எல்லாம் பிரியாணி சாப்பிட பெல்ட்டை லூஸ் பண்ணி விட்டுகிட்டு போற மாதிரி போயிட்டு வரும் போது தீ மிதிச்ச கவுண்டமணி மாதிரி முகத்தை வச்சிகிட்டு வந்தாயங்க...

சாயங்காலம் ஆச்சு.. கடைசியா நான்....

நானும் டேமேஜரும் மட்டும் பாக்கி...

டேமேஜர் ஆப் வச்சு ஆப் வச்சு டயர்ட்டா ஆயிட்டார்.. மனுஷன் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கடுப்போட இருக்கார்...

"வெல் தேவ்... வீ வில் கோ த்ரு யுவர் அப்ரேசல் வித் அ காபி"

காபி வித் அனு.. வந்தக் காலத்துக்கெல்லாம் முன்னாடி ந்டந்தது இது.... சொல்லிட்டு மௌசன் யாருக்கோ போன் பண்ண ட்ரைப் பண்ணிகிட்டே இருந்தார்.. போன் போகவே இல்லை...

"SEEMS LIKE SOME PROBLEM WITH MY MOBILE..CAN I USE UR MOBILE"

அப்படின்னு கேட்டார்...

நானும் ரொம்ப பவ்யமா "சொரிங்க ஆபிசர்" ன்னு முட்டியை மடக்கி போனை அவர் கையிலே கொடுத்தேன்.

அங்கிட்டு தான் விதி வில்லனா மாறி என்னை வம்புல்ல கோர்த்து விட்டு கிளாப் அடிச்சது..

"WAIT A MINUTE>> I WILL TRY CALLING U AND CHK IF MY MOBILE IS OK BEFORE I TRY ON UR PHONE"

இடது கையிலே என் போன்.. வலது கையிலே அவர் போனில் நம்பரைத் தட்டுறார்....நானும் படு ஸ்டைலா பவ்யமாப் போஸ் கொடுத்தப் படி மூஞ்சைச் சிரிச்ச மாதிரி வச்சுக்கிட்டு நிக்குறேன்...

அவர் கடைசி நம்பரை அழுத்தும் போது தான் என் மூளைக்குள்ளே மின்னல் வெட்டுது.... வெட்டி என்னப் பயன்.. என் போனிலே இடி விழ்ந்துருச்சு...

"தி லிவிங் ஹிட்லர் காலிங்ன்னு " மினுக்மினுக்குன்னு மொபைல் ஸ்கிரீன் டாலடிக்க... அந்தாளு முகத்துல்ல சுனாமி சுரண்டிட்டுப் போன எபெக்ட்

அந்த நிலையிலும் எனக்குச் சிரிப்பு வருது...அதே சமயம் அப்ரேசல் நினைப்புக்கு வர... சொ.செ.சூ அப்படின்னா என்னன்னு விளக்கம் புரியுது... இன்னும் இருக்கு சொல்ல.. கேக்க ரெடியா?

Wednesday, March 28, 2007

அம்மா... உங்க பையன் இப்போ ஆபிஸர் - 2

டெஸ்ட்க்கு தேதி குறிச்சுட்டு டீச்சர் அக்காப் போயிட்டாங்க... பரீட்சைக்கு பாடம் படிக்கல்லன்னா பராவாயில்ல,,, பாடமே தெரியல்லன்னா.. அடக் கொக்கமக்கா.. என்னய்யா பண்றது...?

இருந்த ஒரு ராத்திரியும் யோசனையிலே கழிஞ்சுப் போச்சு... பேசாம நாமளே பேப்பரைப் போட்ட்டுருவோமா

அவங்களா நீ பெயில்ன்னு சொல்லி துரத்தி விட்டா அசிங்கம்... ஆனா அதுக்கு முந்தி நாமளாக் கிளம்புனா... ஆ சிங்கம் ஒன்ணு பொறப்பட்டதேன்னு பில் டப்பு எல்லாம் கொடுக்கலாம்ன்னு கணக்குப் போட்டுகிட்டு இருந்தேன்..

பொழுதும் விடிஞ்சிருச்சு... சுரத்தையே இல்லாமா வீட்டுல்ல நாலு இடலியை முழுங்கிட்டு பைக்கைப் பத்திகிட்டுடை எல்லாம் இறுக்கி கட்டிகிட்டுப் போய் இறங்குனேன்...நம்ம பங்காளிகளும் நம்மக் கூட தூங்கி வழிஞ்ச மீதி சிங்கங்கள் தான்.. நம்மளை மாதிரியே பீதியிலே பல வித பீலிங்க்ல்ல நின்னாய்ங்க... பெண் சிங்கங்களாவது பொறுப்பா இருப்பாங்கன்னு பார்த்தா அவிங்க கிட்டத்தட்ட கண்ணீரும் கம்பலையுமா நிக்குறாங்க...

ஏன் தேவ் நமக்கெல்லாம் வேலைப் போயிருமோ ஒரு சகோதரி சந்தேகம் கேட்ட நேரம் என் அடி வயித்துல்ல எலி ஓடுன மாதிரி இருந்துச்சு..

இருந்தாலும் பொண்ணுக்கு தைரியம் சொல்லுறது ஒரு ஆண்மகனுக்கு அழகல்லவான்னு சும்மா கிலோ கணக்குல்ல தைரியத்தை அள்ளி விட்டேன்.. இருந்த மொத்த தைரியத்தையும் ஊருக்குக் கொடுத்துட்டு உக்காந்து இருந்தேன்...

கழுதைப் பிட் அடிச்சாவது பாஸ் பண்ணலாம்ன்னு பார்த்தா ஒருத்தர் கையிலும் பாடம் பத்திய சின்ன க்ளு கூட இல்ல.. நம்ம நாயகம்ன்னா நம்மக் கூட சேந்தாங்க எல்லாம் நடு நாயகமா இருக்காங்களே ஒரு சின்ன சந்தோசம்...அந்தப் பரீட்சை ஒரு அக்னி பரீட்சையா அமைஞ்சது,, கேள்விகள் மட்டும் தெரிந்த எனக்கு விடைகள் எந்தத் திசையில் இருக்குன்னுத் தெரியாமல் என் மூளையைக் கசக்கி பிழிந்துப் பதில்கள் எழுதுனேன்..

மிஸ்டர்.பீன் பார்க்கும் ஆர்வம் உள்ளவர்கள் பீன் பரீட்சை எழுதும் பகுதி பார்த்தீருப்பீங்கன்னு நினைக்கிறேன்.. கிட்டத் தட்ட எங்க பேட்ச்ல்ல் 23 பேரும் பீன் மாதிரியேத் தான் பரீட்சை எழுதுனோம்..

அந்தப் பரீட்சை விடைத் தாள் என் கையிலே கிடைச்சா வ,வா.சங்கத்துல்ல பதிவாப் போடுறேன் பார்த்து படித்து மகிழுங்க... அவ்வளவு தமாஸ் அது...

பரீட்சை முடிஞ்சு ஒரு வாரம் கழிச்சு... எதோ சேமினார் பிரசண்டேஷன்ன்னு மைக் முன்னால வலுக்கட்டாயமா ஏத்தி நிக்க விடடாயங்க... வாய்ல்ல வடை சுட்டு ஊருக்குக் கொடுக்கறது நமக்கு கை வந்தக் கலைங்கறதால.. கண்டமேனிக்கு வடையை வறுத்து பொரிச்சு அவிச்சு வந்திருந்தவங்களுக்குக் கொடுத்திட்டோம் இல்ல,,, வந்தவ்ங்களுக்கு நம்ம பேச்சு பிடிச்ச மாதிரி தான் இருந்தது...

வேலை போகாதுடோய்ன்னு மைல்டா மைண்ட் ரிலாக்ஸ் ஆனது அப்போத் தான்.. அதுக்கு அப்புறம் அந்த நிறுவனத்தில்ல நான் ஒன்றரை வருசம் வேலைப் பார்க்கும் வரை என் தேர்வு முடிவுகள் வரவே காணும்... நாங்களும் எதுக்கு ரிஸ்க்ன்னு டீச்சர் பக்கம் மறந்தும் கூட அந்தக் கேள்வியைக் கேக்குறது இல்ல..

இதுக்கெல்லாம் பொறவு எங்களை நாங்க வேலைச் செய்யற இடத்தைப் பார்க்க கூட்டிட்டுப் போனாங்க..அங்கிட்டு அவன் அவன் கொடுத்த லுக்ல்ல மறுபடியும் எனக்கு கிலி எடுக்க ஆரம்பிச்சது..

மருந்துக்குக் கூட சிரிக்க மாட்டேன்றானுவ... எதோ ரஷ்யா ராணுவத்துக்கு ஆள் எடுத்த மாதிரி முன்னால இருந்த கம்ப்யூட்டர் பாத்து மொறச்சி மொறச்சி பாக்குறான்வா... அதை தட்டுறானவ...

நான் சிரிச்சா.. நம்மளை எளப்பமா ஒரு லுக் வேற விடுறான்வ... கடுப்புக்களைக் கண்டப் படி கிளப்பிகிட்டு இருந்தான்வ.. இவன்வ கூட வேலைப் பாக்குறதுக்கு அந்தப் பரீட்சை ரிசல்டடைக் கேட்டு வாங்கிட்டு கேட்டுக்கு வெளியேப் போய் நாலு பேப்பர் பொறுக்கிப் பொழைக்கலாம் போலிருக்கேன்னு யோசிக்க வச்சிட்டான்வ..

ONJOB TRAINING ஆரம்பிச்சது.. அப்போத் தான் எனக்கு முற்பகல் நடந்த விசயங்களுக்குக் காரணம் எல்லாம் விளங்கிச்சு... ஒரு பெரிய கோணியை என் கையிலேக் கொடுத்து.. தம்பி தேவ் .. போய் தெவை இல்லாத எல்லா ஆணியையும் டக்குன்னு புடுங்கிட்டு வா பாப்போம்ன்னு ஒருத்தன் சொன்னான் ( பின்னாளில் அலுவலத்தில் வன் எனக்கு நெருங்கிய நண்பன் ஆந்து வேறு கதை)

ஆமாங்க தேவையில்லாத ஆணின்னு எப்படிங்க் அடையாளம் கண்டுபிடிக்கிறது?

தம்பி நாங்களும் ப்ர்ண்டஸ் படம் பாத்து இருக்கோம்ல்ல எங்க கிட்டவே நக்கலா.. போ போ.. போய் ஆணி புடுங்கு.. நீ புடுங்குறாது பூராவும் தேவை இல்லாத ஆணிதான்.. கோணியும் கையுமா அலைய விட்டான்வ...

டேய் இதுக்குத் தானாடா மூணு வேளை சோறு தூக்கம்ன்னு ஒரு மாசம் வாழ விட்டீங்களாடா.. ஆடு வெட்டுரதுக்கு முன்னாடி மஞ்சத் தண்ணி எல்லாம் ஊத்தி உசுப்பேத்தி தலையிலே ஒரே போடா போடுவாங்களே அது மாதிரியாடா அதுக்குப் பேர் தான் இன்டக்ஷ்னாடா.. விவேக் மாதிரி பொலம்பல்ஸாப் போச்சு..

காலையிலே இருந்து சாயங்காலம் போய் ராத்திரி வரைக்கும் சின்சியரா நானும் ஆணி எல்லாம் புடுங்கி கோணிக்குள்ளேப் போட்டுப் போய் கொடுத்தா.. அந்த மேனேஜர் என்னப்பா பூராவுமே தேவையான ஆணியாப் புடுங்கிட்டு வந்துருக்கே.. சரியில்லையே... ம்ம் ஒண்ணு பண்ணு இந்தா இதை எல்லாம் எங்கே புடுங்குனியோ அங்கேயேப் போய் அடிச்சுட்டு தேவை இல்லாத ஆணியை மட்டும் புடுங்கிட்டு வான்னு அசால்ட்டா சொல்லுவார்..

அது மட்டுமில்லை நமக்கு ட்ரெயினிங் கொடுக்குற பங்குக்கு கிட்ட பையனுக்குச் சரியாச் சொல்லிக் கொடுப்பான்னு வேற அட்வைஸ்.. அப்புறம் என்ன கோணி, ஆணி.. புதுசாக் கையிலேச் சுத்தின்னு மறுநாள் பொழப்பு ஆரம்பம் ஆயிரும் அந்த மேனஜர் டார்ச்சர் தாங்க முடியாமப் போயிட்டு இருந்துச்சு

அதுக்கு நான் என்னப் பண்ணேன் தெரியுமா?

Tuesday, March 27, 2007

நாங்க ஆபிஸர் ஆன கதை - 1

வேலைக் கிடைச்சுடுச்சு... படம் பேர் இல்லங்க... முதன் முதலா ஒரு கம்பெனியிலே இருந்து வேலைக்கான ஓலை வந்ததும் நான் தெரு தெருவாப் போய கூவாத குறையா சொன்ன டயலாக் இது...

உங்களுக்கும் முதன் முதலா ஒரு வேலைக் கிடைச்ச நேரத்துல்ல இதை மாதிரி நீங்களும் சொல்லியிருப்பீங்க... அப்புறம் நமக்குத் தெரிஞ்ச சொந்தம், பந்தம், பாசம், நேசம், படை பரிவாரம் எல்லாத்துகிட்டயும் சொல்லிட்டு வேலைக்குச் சேந்து ஆபிஸ்ங்கற ஆலயத்துக்குள்ளே நுழைஞ்சது ஒரு சுபயோக தினத்திலே...

நான் ஆபிசரா ஆபிஸ்க்குள்ளே நுழைஞ்ச அதே சமயம் நம்மளை மாதிரியே கோட்டும் சூட்டும் பூட்டும் மாட்டிகிட்டு ஒரு கும்பலே வந்து ஆபிஸை வெறிச்சி வெறிச்சிப் பார்த்துகிட்டு நின்னாய்ங்க...கலர் கலரா நாலைஞ்சுப் பிகர் வேற... ம்ம்ஹும்.. ஹாய் ஹ்லோ.. எல்லாம் சொல்லிக் கொஞ்ச நேரத்துல்ல அம்புட்டு பேத்துக்கு பிரண்ட் ஆயிட்டோம்..

நிதம் காலையிலே கலகலப்பாக் கிளம்பி ஆபிஸ்க்குப் போயிருவோம்..

ஏன்னு கேளுங்க...

அந்த முதல் கொஞ்ச நாள் இருக்கே ஆணி..கோணி..இதுக்கெல்லாம் மீனிங்க்கே தெரியாத பொற்காலம்.. அவங்க செலவுல்ல காலை மதியம் மாலைன்னு வகை வகையா அன்னம் தண்ணி கொடுத்து அவங்கக் காட்டுன அன்பு என்ன? அந்தப் பாசம் என்ன? ஹெச்.ஆர்ல்ல இருந்து ஒரு அக்கா வரும் பாருங்க அப்படி அன்பாப் பேசும்... நமக்கெல்லாம் உருகிரும்...

அப்புறம் ஒரு டீச்சர் அக்கா வருவாங்க... நாங்க வேலைக்குச் சேந்த அந்த நிறுவனத்தைப் பத்தி அருமையாப் படம் எல்லாம் போட்டு பாடம் எல்லாம் நடத்துனாங்க... நான் பாடம் நடக்கும் போது தூங்குனாக் கூடக் கண்டுக்க மாட்டாங்க.. இபப்டி ஒரு டீச்சர் நமக்கு பள்ளிக் கொடத்துல்ல கிடைக்காமப் போயிட்டாங்களேன்னு நான் பீலிங் ஆயிட்டேனாப் பாருங்களேன்... சோறு.. ஏ.சி ரூம் தூக்கம்ன்னு பழைய ராஜாக் காலத்து சுகபோக வாழ்க்கை...

ஒரு நாள் எங்க எல்லாரையும் ஒரு பஸ் வச்சு நம்ம மகாபலிபுரம் பக்கம் கூட்டிட்டுப் போய் ஸ்கூல் பிக்னிக் எல்லாம் ஞாபகப்படுத்திட்டாங்க..ஒரு நா முழுக்க ஒரே விளையாட்டு... கூத்து.. கும்மாளம்ன்னு பின்னி பெடல் எடுத்துட்டோம்... இது வாழ்க்கைடான்னு பேசி பேசிப் பூரிச்சு புளங்காகிதம் அடைஞ்சுட்டோம்...

எல்லாம் நல்லாத் தான் போயிகிட்டு இருந்தது... தீடிரென்னு டீச்சர் அக்கா ஒரு நாள் வந்து அந்த விசயத்தைச் சொல்லுற வரைக்கும்...

கீழே தான் எங்க ஆபிஸ் இருக்காம்.. நாங்க சாப்பிட்டு சாப்பிட்டு தூங்குன இடம் வந்து சும்மா ட்ரெயினிங் நடக்குற இடமாம்.. எங்களூக்கு நடந்தது இன்டக்ஷனாம்.. ( இஞ்ஜக்சன்ன்னு எங்காதுல்ல விழுந்தது.. இதுல்ல ஊசி வேறப் போடுவாங்களாமேன்னு பயந்துட்டேன்).. இவ்வளவு நாள் அவங்க நடத்துனப் பாடத்துல்ல இருந்து மறுநாள் டெஸ்ட் வைக்கப் போறேன்னு பெரிய குண்டு ஒண்ணைப் போட்டாங்க

என்னது டெஸ்ட்டா... இதை எல்லாம் நான் தூங்கும் போது தட்டி எழுப்பிச் சொல்லியிருக்கக் கூடாதா? ஒரு மாசமாத் தூங்குன கண்ணு கவலையிலேக் கலங்கிப் போயிருச்சு...

அடுத்ததா அவங்கச் சொன்னது கேட்டு மொத்தமும் நடுங்கியேப் போச்சு.. எதோ பாஸ் மார்க்காம் அதை எடுக்கல்லன்னா வேலையை விட்டுத் தூக்கி வீதியிலே விட்டுருவாங்களாம்...

இதைச் சொல்லும் போது அந்த டீச்சர் அக்கா எங்களைப் பார்த்து.. குறிப்பா என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புச் சிரிச்சாங்க...

அடபாவிகளா... வேலைக்குப் போறேன்னு... எப்பவோ விட்டுப் போன உறவுக்கெல்லாம் வம்படியாப் போனைப் போட்டுச் சொல்லியிருக்கேனே.. இப்போ வேலைப் போச்சுன்னா.. அய்யகோ...

தூங்காதே தம்பி தூங்காதேன்னு பழைய எம்.ஜி.ஆர் பாட்டு எல்லாம் லேட்டா என் புத்தியிலே அலறுது.. பட் டூ லேட்..

ஒரு ஆபிஸரின் எதிர்காலமே ஆட்டம் காண ஆரம்பித்தது..

இன்னும் சொல்லுறேன்..

tamil10