Monday, December 25, 2006

தனுஷ் இன் திருவிளையாடல் ஆரம்பம்

வணக்கம் மக்கா,

ரொம்ப நாளைக்குப் பிறவு தனுஷ் நடிச்சப் படம் ஒண்ணைத் தைரியமாப் பாக்கப் போனேங்க... நம்ம சிவாஜி கணேசன் அன்னிக்கு நடிச்ச டாப் கிளாஸ் படமான திருவிளையாடல் படத்திலிருந்து டைட்டில் மட்டும் கடன் வாங்கிட்டு கலகலன்னு ஒரு படம் எடுத்துருக்காங்க...

கதை ஒரு வரி தான்.. ஏழைப் பையன் பணக்காரப் பொண்ணைக் காதலிக்கிறான்... கைப்பிடிக்கிறானா?அதுக்குத் திரைக்கதை அமைத்து ஆட்டம் போட்டிருக்கிறார் பூபதி பாண்டியன்.

நல்ல சினிமாவை ரசிக்க ஒரு கூட்டம் உண்டு அது போல் ஜனரஞ்சக சினிமாவை ரசிக்கவும் ஒரு கூட்டம் உண்டு. இந்தப் படம் பக்கா ஜனரஞ்சகப் படம்.

திரு என்னும் தனுஷ் குரு என்னும் உங்கள் செல்லம் பிரகாஷ் ராஜ் (டைட்டில் கார்டில் அப்படித் தான் பட்டம் போடுறாங்கப்பா)தங்கை ஸ்ரேயாவை லவ்வுகிறார். இந்தக் காதலில் மட்டுமின்றி தன் வாழ்க்கைக் குறிக்கோளிலும் வெற்றியடைய திரு செய்யும் விளையாடல்களைத் தமிழ் சினிமாப் பார்முலாப் படி காமெடி, ஹீரோயிசம், பஞ்ச் டயலாக்ஸ், பாடல்கள், சென்டிமென்ட் என சரி விகிதத்தில் கலந்து கொடுத்து தயாரிப்பாளரின் கல்லாக் கலெக்ஷனை நல்லாவே நிறைக்கிறார் இயக்குனர்.

தனுஷ்க்கு இது இன்னொரு திருடா திருடின்னு சொல்லலாம்... பலத் தோல்விப் படங்களுக்குப் பின் கொஞ்சம் எழுந்து நிற்க இந்தப் படம் உதவும்.அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி இன்னொமொரு நடுத்தர குடும்பத்து விடலைப் பையன் ரோல். தனுஷ் நல்லாவே பயன்படுத்தியிருக்கார். கலகலப்பாய் வந்துப் போகும் வேடம். அதற்கு கச்சிதமாய் பொருந்துகிறார். சண்டைக் காட்சிகளில் ஜாக்கி சானின் பாணியை முயன்றிருக்கிறார். ஒரளவு செட் ஆகிறது. அந்த ஹேர் ஸ்டைல் தான் கன்டினியூட்டி காமெடி செய்கிறது.

ஸ்ரேயா...வருகிறார்... காதலிக்கிறார்.. டூயட் பாடுகிறார்... அவ்வப்போது அழுகிறார்... மீண்டும் வருகிறார்... காதலிக்கிறார்.. டூயட் பாடுகிறார்... தமிழ் சினிமாக்களின் இலக்கணம் மீறாத ஒரு கதாநாயகி வேடம் அவருக்கு.

செல்லம் பிரகாஷ் ராஜ்க்கு இன்னொரு அம்சமான அண்ணன் வேடம். தங்கைக்காக எதையும் செய்யத் துணியும் அண்ணனாய் அல்லோலப் படுத்துகிறார். கொடுத்த வேடத்தை நிறைவாய் செய்திருக்கிறார். என்னம்மா கண்ணு பாடலில் கொஞ்சம் ஏமாற்றுகிறார்.

இளவரசு பிரகாஷ்ராஜின் செயலராக சிரிப்பிற்கு தீனிப் போடுகிறார். கருணாஸ், சுகுமார் அன்ட் கோ முழுவதும் செய்ய முயலும் காமெடிகளை இளவ்ரசு தனியாளாகச் செய்து கைத்தட்டல்களை அள்ளிப் போகிறார்.

இவர்கள் தவிர தனுஷின் பெற்றோராக வரும் மௌலி, சரண்யா, தம்பியாக வரும் சின்னப் பையன் எல்லோரும் பாத்திரங்களைப் பொருத்தமாகச் செய்துள்ளனர்.

பாடல்கள் திரைக்கதைக்கு வேகத் தடைகள். இமான் இசை சுமார் ரகம். பின்னணி இசைக்கான வாய்ப்புக்கள் அதிகமில்லை.

லாஜிக் மறந்து சிரிக்க..ரசிக்க... நிச்சய உத்தரவாதம் இந்த திருவிளையாடல் ஆரம்பம்

Friday, December 22, 2006

வாங்கய்யா புள்ளகளைப் படிக்க வைப்போம்

வணக்கம் மக்கா,

பெருந்தலைவர் காமராசரை எங்கப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும்... அவரோட கதைய அப்பாச் சொல்லக் கேட்டு எனக்கும் அவரைப் பிடிச்சிப் போச்சு...

முக்கியமா அவர் கல்விக்காக செய்த பணிகள் கேட்டு அசந்துப் போயிருக்கேன்...

அதுவும்..

"வாங்கய்யா நாமப் புள்ளகளைப் படிக்க வைப்போம்ன்னு" தலைவர் ஒரு திட்டம் போட்டப்போ...

"அய்யா.... இது எல்லாம் ஆவுறதில்லன்னு மண்டையைச் செரிஞ்கிட்டு நின்ன அதிகார வட்டத்தைத்

தலைவர் "ஏன்ய்யா..? ஏன் ஆவாதுன்னு?" காரணம் கேப்பார்...

"அவ்வளவு பணம் நிதியிலே இல்லங்கய்யான்னு" பதிலை பம்மி காரணமாச் சொல்லுவாயங்க

"நீங்க எவ்வள்வு பணம் ஆகும்ண்ணு மட்டும் சொல்லுங்க, அதுக்கு வேண்டியதை நான் போய் பிச்சை எடுத்துட்டு வந்தாவதுத் தர்றேன்ம்பாரு.." தலைவர்

கூடவே அழுத்தமாச் சொல்லுவார்... "வாங்கய்யா புள்ளகளைப் படிக்க வைப்போம்ய்யா.. அவன் படிச்சப் படிப்பை வச்சு நாளைக்கு நாட்டை அவன் பாத்துக்குவான்னு... "

இந்தாங்க இங்கிட்டு நம்ம நண்பர் ரவி கல்விக்குன்னு நம்ம கிட்ட கையேந்தி நிக்குறார் ..

அள்ளிக் கொடுக்க முடிஞ்சவங்க அள்ளிக் கொடுங்க.. கிள்ளிக் கொடுக்க நினைக்கறவங்க கிள்ளிக் கொடுங்க...

பாவம் புள்ள படிச்சுட்டுத் தான் போகட்டுமே....என்ன மக்கா நான் சொல்லுறது..

Tuesday, December 19, 2006

சிவாஜியின் மகா அவதாரம்!!!


என்னச் சொல்ல?
தலைவா போட்டோப் பார்த்தே பிகிள் அடிக்க வைக்குறீயே!!!!!!!

Monday, December 18, 2006

வாழக்கைக் கச்சேரி

வணக்கம் மக்கா,

இந்த வாரமும் மறுக்க வெயிலை... (படத்தத் தான்) பாக்க ஒரு குரூப் என்னிய கார் எல்லாம் வச்சி கடத்திக் கொண்டு போய் டிக்கெட் எடுக்க விட்டக் கொடுமைய நான் என்னன்னு சொல்லுவேன்..

இந்த வருசம் முடிய இன்னும் ஒரு 10 - 12 நாள் பாக்கி இருக்கும்ன்னு நினைக்கிறேன்...
இந்த சமயத்துல்ல நம்ம நடு மண்டையிலே ஒரு கேள்வி உக்காந்துகிட்டு நாட்டியமாடுதுங்க... விக்கி பயல்வளைக் கேளுங்கன்னு சொல்லுறீயளா.. ம்ஹும் சில விஷயங்களுக்கு நமக்கு நாமே திட்டம் தாங்க சரியா வரும்...

வேற ஒண்ணும் இல்லைங்க.. ஒரு சிறப்பான வாழ்க்கை வாழ என்ன வழின்னு தான்ங்க கேள்வி ஆரம்பிச்சது... ஆரம்பிச்சு ஆரம் வட்டம் ஆர்ப்பாட்டம்ன்னு அண்டமெல்லாம் சுத்தி வந்து நம்ம நடு மண்டையிலே நின்னுக்கிட்டு பதில் சொல்லுங்கண்ணேன்னு செம டார்ச்சர் கொடுக்க ஆரம்பிச்சது..

நானும் என்னவெல்லாம் சொல்லிப் பார்த்தேன்..

அடேய் பய மக்கா..

வாழ்க்கை ஒரு வாழப் பழம் அதை உரிச்சு வாயிலே போட்டவன் எல்லாம் ஆளைக் காணும்..

அதுன்னாலே அது அப்படித் தான்... ஆத்து வெள்ளம் மாதிரி வாழ்ந்துட்டுப் போயிருணும் ரொம்பக் கேள்வி கேட்கப்பிடாதுன்னு பச்சப் புள்ளக்குச் சொல்லுற மாதிரிச் சொல்லியும் அது அழிச்சாட்டியம் தாங்கல்ல மக்கா....

எப்பவோ நம்ம பதிவுலகச் சகா மனதின் ஓசையார் ஒரு புத்தகத்துப் பெயரைச் சொல்லி படி மாப்பூன்னு அன்பா நம்ம அறிவு வளர்ச்சிக்கு வரப்பு வெட்டியிருந்தார்.. அவர் சொன்னக் கையோட மூர் மார்கெட் பக்கம் அலைஞ்சி திரிஞ்சு அந்தப் புத்தகத்தை வாங்கிட்டேன்...

அந்த புத்தகத்தில் ஒரு குருவும் சிஷ்யனும் பேசிக்கிற மாதிரி போதனைத் தோரணையிலே கதை நகரும்... நிறைய விஷ்யங்கள் அட போட வைக்கும் படியான் செய்திகள்..

சே இது இம்புட்டு எளிமையான விஷ்யம் ஆச்சே... செய்யலாமே...

அப்படிங்கற மாதிரி செய்திகள் அந்தப் புத்தகம் முழுக்க வழிஞ்சு கிடக்கு...

புத்தகத்தைப் படிக்கும் போது பய மக்கா நம்ம வாழ்க்கையை நம்ம முதுகு பின்னால வச்சுகிட்டு வேற எங்கிட்டு எல்லாமோ தேடுறோமேடான்னு ஒரு உணர்வு தட்டுச்சுங்க...

சாமி எதைத் தேடிடா இம்புட்டு வேகமா ஓடுற கொஞ்சம் நில்லுய்யா.. பின்னாலேப் பார்.. ஓன் வாழ்க்கை அங்கிட்டே நிக்குது நீ தான் அதை விட்டுட்டு எங்கிட்டோ ஓடிக்கிட்டு இருக்கேன்னு சொல்லாமச் சொல்லுது அந்தப் புத்தகம்.

ஒரு சின்ன விடுகதை மாதிரி கதையைச் சொல்லி குரு தன் சிஷ்யனுக்கு வாழ்க்கையை எதிர் கொள்ளக் கொடுக்கும் டிப்ஸ் சட்டுன்னு நம்ம மனசுல்லயும் ஒட்டிக்குது..

ஏழு எளிமையான் வழிவகைகளை ரொம்பவே அழுத்தமாச் சொல்லியிருக்கார் ஆசிரியர்.

முதலில்.. நம்ம எல்லோருக்குமே ஆட்சி அதிகாரம்ன்னா ஒரு சின்ன மயக்கம் இருக்கத் தான் செய்யுது.. அதுக்குத் தான் நமக்குன்னே ஆண்டவன் ஒரு பெரிய ஏரியாவை உள்ளுக்குள்ளே ஒதுக்கிக் கொடுத்து இருக்காரே ஆனாப் பாருங்க நாம அதைக் கண்டுக்குறதே இல்லை.. ஆமாம்ங்க
ஆளணும்.. நாம ஒவ்வொருத்தரும் நம்ம மனசை ஆளணும்....

மனத்தை ஆண்டாப் போதுங்க.. அமைதியான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட்ட மாதிரி தான்..

இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் வாழ்க்கையின் நோக்கம்ன்னு ஒண்ணுக் கண்டிப்பா இருக்கும்ன்னு நம்புங்க.. உங்க வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டுபிடிச்சு.. உங்க மனசு கிட்ட அந்த நோக்கத்தை அறிமுகப் படுத்தி கைகுலுக்க வைங்க... அப்புறம் என்ன மனம் நோக்கத்தின் இலக்கு நோக்கி மெதுவா மெதுவா உங்களை நகர்த்திச் செல்லும்

நோக்கம் புரிந்தாலே வாழ்க்கையிலே பாதி ஏக்கங்கள் தீரும்

நோக்கம் தெரிஞ்சுப் போச்சு அதை நோக்கி அப்படியே நகரும் போது லைட்டா நம்ம கவரவுத்துக்குப் பங்கம் வர்றலாம்.. விதி வில்லங்கமா டேகரேட் பண்ணி வந்து நம்ம வீதியிலே இழுத்து விட்டு வித்தைக் காட்டலாம்.. எதுவும் நடக்கலாம் இல்லையா... அதுனால நாம என்ன செய்யணும்..நம்மை நாம சுய பரிசோதனைச் செஞ்சுகிட்டு சுய் மேம்பாட்டுல்ல இறங்கிடணும்.. அதுல்ல ஒரு விடா முயற்சி வேணும்.. நமக்கு நாமே முதல்ல விசிலைப் போடுவோம் அப்புறம் ஊரே கூட வந்து கச்சேரி வைக்கும் பாருங்க..

தொடர்ச்சியான சுய மேம்பாடு வாழ்கையை அதன் உயரங்களுக்குச் வளர உரம் போடும்

அடுத்து சொல்லுறது தாடி வச்ச நம்ம வள்ளுவர் தாத்தால்ல இருந்து தடி பிடிச்சி நடந்த நம்ம ஒளவையார் பாட்டி வரைக்கும் சொல்லிக் கொடுத்த மேட்டர் தான்.. ஒழுக்கம்..

இதைக் கூடவே வச்சிகிட்டா நிறைய வேண்டாதக் கும்பலை எல்லாம் நம்ம வாழ்கையிலே கேரண்டியாக் கும்மியடிக்காமாப் பாத்துக்கலாமாம்.

ஒழுக்கம் அஸ்திவாரம் போட்டு ஒவ்வொரு செங்கல்லாப் பாத்து பாத்துக் கட்டுன வாழ்க்கைங்கற வீட்டுக்கு டாப் மாதிரி அதாவது கூரை மாதிரி ஓ.கேவா

நெக்ஸ்ட் மேட்டர் இன்னும் ரொம்ப டக்கர் விசயம் தான்.. கண் முன்னாடியே காணமாப் போயிட்டு இருக்கும்.. எந்த போலீஸோ.. எந்த ராணுவமே வந்தாலும் மீட்டு தர முடியாது.. அதுனால அதை பயங்கர ஜாக்கிரதையா பயன் படுத்திக்கணுமாம்.. அது படா தில்லாங்லங்கடி மேட்டர்.. எல்லாருக்கும் சமம் தான்.. ஆனா அதை எப்படி மாத்தி வச்சிக்குறோம்ங்கறது நம்ம கையிலே தான் இருக்கு.. இன்னும் புரியல்லயா..

எங்க ஆபிஸ்ல்ல நானும் 10 மணி நேரம் தான் வேலைப் பாக்குறேன்... எங்க நிறுவனத்தின் முதலாளியும் 10 மணி நேரம் தான் வேலை??!!! பாக்குறார்..என்னோட பத்து மணி நேரங்களுக்கு பொருளாதார ரீதியாகக் கிடைக்கும் மரியாதை அவரோட 10 மணி நேரத்து கூட ஒப்பிட்டுப் பார்த்தா ரொம்ப... ஹி..ஹி

ஆக அது என்ன விசயம்ன்னு விளங்கிச்சா மக்கா.. காலத்தை மதிக்கக் கத்துக்கிட்டா நம்ம வாழ்க்கைக்கும் மதிப்பு கூடுமாம்

உனக்கென வாழ்வது வாழ்க்கை இல்லை.. ஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லை.. ஓடனே ரொம்ப யோசிக்காதீஙக்... அடுத்தவங்களுக்கு பலன் தர்ற மாதிரி ஒரு மரம் ந்ட்டு வச்சு இருக்க வரைக்கும் அதுக்கு தண்ணி ஊத்துறது கூட ஒரு சேவைத் தான்...

நல்லதொரு வாழ்க்கை நாலு பேர்க்கு நன்மைச் செய்வதில் அடையாளம் காணப் படுகிறதாம்.

கடைசியா.. 2006க்கு வாங்க... முடிஞ்சுப் போச்சு 2005.. வரப் போகுது 2007.. சூப்பரா அமையும் கவலை வேண்டாம்.. ஆனா இப்போ இன்னிக்கு இன்னும் மீதியிருக்க் நேரம் அதுல்ல வாழுவோம்..

கடமையச் செய்ங்க... தோடா இன்னிக்குத் தான் என் வாழ்க்கையிலே கடைசி நாள்ன்னா எப்படி இருப்போமோ அப்படி வாழணுமாம்...

அதாவது.. நல்லதே செய் நைனா.. அதையும் அப்புறம் பண்ணிக்கலாம்ன்னு அப்பீட் ஆகமா இன்னிக்கே ஜோராச் செய்யணுமாம்

தோடா ந்டு மண்டையிலே இருந்தக் கேள்வி ஒரு குதி குடிச்சு என் முன்னாடி வந்து நின்னு ஒரே நக்கல் சிரிப்பு சிரிக்குதுங்க...

என்ன நக்கலா அப்படின்னு நான் கேட்டா?

ம்ஹும் அதெல்லாம் இல்லை. உன்னிய நக்கல் அடிச்சு நான் என்னைக் கேவலப் படுத்துவேனா?

அப்படி எல்லாம் இல்ல...

சொல்லுதல் யார்க்கும் எளியவாம்.. அதைக் கேட்டுக் கைத்தட்டி சொன்னவனைத் தலையிலே வச்சு கரகம் ஆடுவது இன்னும் எளியவாம்...அப்படின்னு இழுத்துச்சு..

போது நிப்பாட்டிக்க எங்களுக்கு என்னச் சொல்ல வர்றேன்னுப் புரிஞ்சுப் போச்சு.. இப்போப் புறப்படு 2007 டிசம்பர் இதே தேதிக்கு ரிட்டன் வா அப்போப் பேசிக்கலாம்.. சொல்லி ஒரு வழியாக் கேள்விக்கு டாட்டா காட்டினேன்

Thanks THE MONK WHO SOLD THE FERRARI BY ROBIN SHARMA and Hamid for your recommendation to read

Monday, December 11, 2006

தலைவருக்கு HAPPY BIRTHDAY

தலைவருக்குப் பிறந்த நாள் கச்சேரி பண்ணுவதில் நமக்கு ரொம்ப சந்தோசம்ங்கோ!!!!!



ஹேப்பி பர்த் டே தலைவரே !!!!!

குளிர் காலத்தில் வெயில் படம்

வணக்கம் மக்கா.

எஸ் பிலிம்ஸ் நம்ம இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் பசுபதி, பரத், பாவனா, ஸ்ரேயா ரெட்டி நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்..


எஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூன்று தொடர் வெற்றிகளுக்குப் பின் நாலாவதா வந்திருக்கப் படம்..இசை ஜி.வி.பிரகாஷ், (நம்ம சிக்குப் புக்கு ரயிலு பாட்டு பாடுன அந்தச் சின்னப் பையன் தான் இப்போ ஒரளவு வளந்து தனிக் கடைப் போட்டிருக்கார்.) ஆலபம் அப்படின்னு சில வருஷங்களுக்கு முன்னாடி வந்த ஒரு படத்தை இயக்குன வசந்த பாலன் இந்தப் படத்தை இயக்கிருக்கார்.

பைபிளில் கெட்ட குமாரன் கதைன்னு ஒரு கதை இருக்கு (PRODIGAL SON)..அதை ஒத்த ஒரு கதைக் களத்தில் தான் வெயில் திரைப்படத்தின் நிகழ்வுகள் பின்னப்பட்டுள்ளன..ஒரு அழுத்தமானக் கதைக் களத்தைத் தேர்ந்துடுத்த இயக்குனருக்கு நம்ம பாராட்டுக்களைச் சொல்லியே ஆகணும்.

ஒரு மனிதன் ஆசிர்வதிக்கப் பட்டவன்.. இன்னொரு மனிதன் சபிக்கப்பட்டவன்... அவர்கள் இருவரும் சகோதரர்கள்... இது தான் கதை.


சபிக்கப் பட்ட மனிதனின் பார்வையில் கதைச் சொல்லப் படுகிறது. ஆரம்பத்தில் பசுபதியின் ஆர்ப்பாட்டமான அறிமுகத்துடன் துவங்கி..வெயிலோடு விளையாடி பாடலில் பார்வையாளர்களை அப்படியே நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

வெயிலோடு விளையாடி பாடல் இசையும் சரி.. படமாக்கப் பட்ட விதமும் சரி... காமிராவில் ஒரு ஓவியமே எழுதியிருக்காங்கப்பா..தென் தமிழ் நாட்டு கிராம வாழ்க்கையை அந்தப் பாடல ஒரு ஆல்பமாக்கி நம் கண்களுக்கு விருந்து வைக்கிறது.

அதற்குப் பின் படம் கொஞ்சம் வேகம் குறைகிறது..பள்ளிக்கூடத்தைக் கட்டடித்து விட்டு வாத்தியார் படத்தை வாயில் சிகரெட் புகைத்தப் படி (ஆமா வாத்தியார் ரசிகர்கள் அவ்வளவா தம் அடிக்க மாட்டாங்கன்னு ஒரு பேச்சு அது பொய்யா) பார்த்து அப்பாவிடம் பிடிப்பட்டு அப்பாவின் அடக்கு முறைக்கு ஆளாகி அவமானப்பட்டு வீட்டில் இருந்து ஊரை விட்டு பணம் நகைத் திருடிக் கொண்டு ஓடுகிறான் அண்ணன் முருகேசன். கரெக்ட் நீங்க எதிர்பார்க்கிற மாதிரியேத் தான் பணம் நகைத் தொலைத்து ஒரு தியேட்டரில் தஞ்சம் அடைகிறான்.. அங்கேயே வேலைச் செய்கிறான்..தியேட்டர் ஆப்பரேட்டராக வளர்கிறான்..( எதிர் ஹோட்டல் காரப் பெண்ணை காதலிக்கிறான்...(ஓட்டல் கார புதுமுகமாய் நடித்திருக்கும் பெண் பழைய ஜானி படம் தீபாவை ஞாபகப் படுத்துகிறார்)

இந்தக் கட்டத்தில் திரையரங்கக் காட்சிகள் என்ற பெயரில் திரைப்படங்களின் ட்ரெயிலராய் ஓட்டித் தள்ளுகிறார் இயக்குனர். ஏன் சார் உங்க படத்தைப் பாக்க வந்தா ஏற்க்னவே பார்த்து முடிச்ச்ப் படத்தை எல்லாம் விடாம மறுபடியும் பாக்க வைக்கிறீங்க.. நாங்க என்ன பரீட்சைக்கு ரிவிஷன் பண்ணவா தியேட்டருக்கு வந்தோம்.)


காதல் தியேட்டர் என ஒரு சீராக ஓடும் முருகேசனின் வாழ்க்கையில் மீண்டும் விதி விளையாடுகிறது.. காதல் தோல்வி, காதலியின் மரணம்,(பாவம்ய்யா அந்தப் புது முகம் இப்படி அநியாயமாச் சாகடிச்சிட்டீங்களேய்யா) தியேட்டர் மூடல் என மீண்டும் சாப செண்டிமெண்ட் தாய பாஸ், பல்லாங்குழி பரம் பதம் என எல்லா டைப் கேம்ஸும் விளையாடி அதுவும் களைப்படைஞ்சு.. படம் பாக்குற நம்மையும் களைப்படைய வச்சு காபி தண்ணி தேட வைச்சுருது. குறிப்பா அந்தக் காதல் தோல்வி காட்சிகள் காதல் படக் கிளைமாக்ஸ் காட்சிகளை நினைவுப் படுத்தி ஏன்ய்யா இப்படி கொலைவெறி உங்களுக்கு படம் பாக்க வந்த எங்க மேலன்னு கதற விட்டுருது

அதே நேரம் முருகேசனின் தம்பி கதிர் தொட்டதெல்லாம் துலங்க.. விளம்பர நிறுவனம் ஆரம்பித்து ஆஹா ஓகோன்னு வளர்கிறான். வள்ரும் போது தொழில் போட்டி வலுக்கிறது. வெட்டுக் குத்து என நீள்கிறது. இடையில் அவனுக்கும் ஒரு காதல்.

இந்நிலையில் எல்லாம் தொலைத்து பரதேசியாக வீடு திரும்புகிறான் முருகேசன். தந்தையின் வெறுப்பு தணியாமல் அவனை இன்னும் வாட்டி வதைக்கிறது, ஆனால் தம்பி கதிர் அண்ணனைக் கொண்டாடுகிறான். தம்பியின் பாசத்துக்குக் கட்டுபட்டு முருகேசன் உள் வீட்டில் உடன் பிறந்த தங்கைகளின் அலட்சியத்தையும் தாங்கிக் கொண்டு இருக்கிறான்.

(அண்ணனை பாசமாப் பார்க்கும் அண்ணனுக்கு எதாவ்து வேலை கீலைச் செய்ய துவங்க ஓத்தாசப் பண்ணலாமில்ல.. கை கால் எல்லாம் திடகாத்திரமாய் இருக்கும் முருகேசனின் நிலையைப் பார்த்து பரிதாபத்திற்குப் பதில் நமக்கு எரிச்சலே மிஞ்சுகிறது... ஏன் டிரைக்டர் சார்.. சென்டிமென்ட் சிம்பதின்னு லாஜிக்கை லாக்கர்ல்ல வச்சி பூட்டிட்டுத் தான் படம் எடுப்பீங்களா?)


முருகேசனுக்கு இன்னொரு ஆறுதல் அவன் சிறு வயது தோழி பாண்டியம்மாள் ( லைட்டா அழகி வாசம் வீசுது இந்த பாண்டிம்மாகிட்ட..தன்னோடச் சுய கவுரவமே கேலிக்குரியதா இருக்க அவர் தெருவில்ல பம்பரம் விளையாடுற மாதிரி காட்டுறது எல்லாம் ஏன்ய்யா? அவர் மனக்கஷ்ட்டத்தோட பாவம் தீப்பொட்டி செஞ்சு கஷ்ட்டபடுர்ற ஸ்ரேயா கையிலே பம்ப்ரம் விடுறது எல்லாம் எப்படிங்க திங்க் பண்றீஙக...?

அப்புறம் என்ன தம்பி கதிரின் தொழில் போட்டியில் அண்ணன் முருகேசன் உயிர் கொடுத்து தம்பியைக் காப்பாற்றி தியாகி ஆகிறார். கடைசியிலெ எல்லாரும் அழுகிறார்கள். வழக்கம் போல் இருக்கும் போது அவ்னை மன்னிக்காத அவன் அப்பாக் கூட அவன் இறந்தப் பிறகு அவ்னுக்கு இரங்கல் போஸ்ட்டர் ஒட்டுவதாய் படம் முடிகிறது.

தோற்றுப் போன மனிதன் முருகேசனாய் பசுபதி சும்மா நடிப்பில் பந்தி பரிமாறி இருக்கார். காதல் காட்சிகளில் மனிதர் ஒரு ரொமாந்ச் லுக் ட்ரை பண்ணியிருக்கார். ஆனாலும் பசுபதியின் வெற்றி என்னவோ ஒரு தோல்வி அடைந்த மனிதனாகவே எழுந்து நிற்கிறது.

தம்பி கதிராக பரத்.. சுறுசுறு பட்டாசு... சும்மாக் கொளூத்திப் போட்டிருக்காங்க.. அவரும் வாங்குன சம்பளத்துக்கு வஞ்சனை இல்லாம ஆடுறார்.. சண்டைப் போடுறார்.. பைக் ஓட்டுறார்.. நடிக்கவும் செஞ்சிருக்கார்.

பாவனா.. பரத்தின் உருட்டல் மிரட்டல்களுக்கு பயந்து நடுங்கிப் பின் பரத்தைப் பிடிச்சிருக்குன்னுச் சொல்ல்க் காதலிக்கும் ப்ச்சைக் கிளியாக அவ்ருக்குக் கிடைத்த பாத்திரத்தில் பச்சக்குன்னு மனதில் இடம் பிடிக்கிறார்.

ஸ்ரேயா ரெட்டி.. வாழ்க்கையில் தோற்ற ஒரு மனிதன் மீது பரிவும் நட்பும் கொண்ட ஒரு தோழி பாத்திரத்தில் கொஞ்சமே வருகிறார்.. அவர் பங்குக்கு ஓ.கே..

இது தவிர படத்தில் அம்மாவாக வரும் டி,கே.கலா, அப்பாவா பிடிவாதம் பிடிக்கும் குமார்.. அந்த கிருதா வில்லன் என அவரவர் பாத்திரங்களில் நல்லாவே நடிச்சிருக்காங்க...

இசையில் வெயிலோடு விளையாடி.. உருகுதே மருகுதே... காதல் தீயின் நடனம்.. போன்ற பாடல்கள் ஜி.வி.பிரகாஷ்க்கு ஒரு நல்ல விசிட்டிங் கார்ட் தான்.

கேமரா மதி கலக்கியிருக்கார். போஸ்ட்டரே மிரட்டலா இருக்குதுங்க...

சரி இவ்வளவு இருந்தும் வெயில் படம் ஓடும் போது சீட்ல்ல நெளிய வேண்டியதா இருக்கே ஏன்ய்யா?
அட ஒவ்வெரு அஞ்சு நிமிசத்துக்கும் ஒரு தரம் வாட்ச் பார்க்க வேண்டியதா இருக்க ஏன்ய்யா?
லேசாத் தலை வலிக்கற மாதிரி இருக்கே ஏன்ய்யா?

ம்ஹும் இத்தனை ஏன்களும் இயக்குனர் வசந்த பாலனுக்கு அனுப்பப் படுகின்றன...

நல்ல நடிகர்கள்.. நல்ல பேனர்...நல்ல் டெக்னிஷ்யன்கள் இருந்தும்... திரைக்கதையில் ஆங்காங்கு சென்டிமென்ட் என்ற பெயரில் தெரியும் எக்ஸ்ட்ரா லார்ஜ் லாஜிக் ஓட்டைகள்..படததை முழுசா ரசிக்க விடாமல் நம்மை தடுக்கிறது...

காலம் மாறுதுங்க... அதுக்கு ஏத்தாப்புல்ல நீங்களும் கொஞ்சம் வேகமா.. கலக்கலா கதையைச் சொல்லுங்க...

நான் பார்த்த வரைக்கும் சொல்லணும்ன்னா...

ஆரம்பம் எல்லாம் நல்லாத் தான் இருந்துச்சி.. அப்புறம் இடையிலே திரைக்கதைக்கு வச்ச ஆப்பு.. அப்பப்பூ..

பி.கு: இந்தப் படத்தில் சிறுவர்கள் தம்மடிக்கும் காட்சி சர்வசாதரணமாகக் காட்டப் படுகிறது.. இது தப்பில்லையா.. விவரம் தெரிஞ்சவங்கச் சொல்லுங்கப்பா

Friday, December 08, 2006

மா மன்னாரு அன்ட் கோ சாப்ட்வேர் (பி) லிமிட்

வணக்கம் மக்கா,
முடிவு பண்ணிட்டோம்ல்ல.. கலை உலக வாழக்கையோட ஒரு பிஸினஸ் மகாராசாவாம் அவதாரமெடுக்கிறதுன்னு.. நம்ம சகா நம்ம நண்பன் சரா லாங் லீவ் போட்டுட்டுப் போனாலும் போனாரு நம்ம லெப்ட் ஹேண்ட் ரிப்பேர் ஆன மாதிரி ஆயிடுச்சு..சரின்னு பொது வாழ்க்கையிலே இருந்து ஒதுங்க முடியுமா.. நம்ம இன்னொரு நண்பர் ( பேர் பின்னாலச் சொல்லுறேன்) கொடுத்த ஐடியாவில்ல முடிவு பண்ணி இறங்கிட்டோம்ல்ல..

ஆமா கம்பெனி ஆரம்பிக்கப் போறோம்.. காலத்துக்கு ஏத்தாப்புல்ல கலெக்ஷ்ன் கல்லாவை நிரப்புற கம்பெனி... ஆமாங்க.. கச்சேரிகாரன் இனி கம்பெனிகாரன் ஆகப் போறாரு...

ஜொள்ளுப் பேட்டை டைம்ஸ்ல்ல விளம்பரம் எல்லாம் கொடுத்தாச்சிங்கோ...

"பீப்பிள் வான்டட்.. நியூ சாப்ட்வேர் கம்பெனி லாஞ்ச்... "

எச்.ஆர் மேனஜரா... யாரைப் போடலாம்ன்னு ஒரே குழப்பம்ஸ் ஆப் இன்டியாவா இருக்கும் போது நம்ம தளபதி சிபி வந்து நயந்தாராவோட கலக்கல் ரெஸ்யூம் ஒண்ணு கொடுத்தார்...

டமீல் சாப்ட்வேர் கம்பினியா நாக்குத் டமீல் கம்பினி இப்புடு லேது.. மன வாடு ஆந்துருல்ல கம்பினி காவாலி.. அக்கட உன்னவா? ந்னு அந்த அம்மா ஜிலேபி பாஷையில் பீட்டுருடு விட தளபதி பயங்கர அப்செட்..

அட்லீஸ்ட் பூமிகாவது ஓ.கே பண்ணுங்கப்பா நகத்தை பல்லுக்கு இடையில் வச்சுகிட்டு பயங்கர குறும்பு பண்ணிகிட்டு இருக்கார்.

அப்புறம் நம்ம ஜொ...(ஆமாங்க கிளைன்ட வாயில்ல ஜொள்ளு சரியா நுழையாதக் காரணத்தினால் ஜொன்னு சுருக்கிட்டோம்) அவர் பேட்டை பிகர்கள் லிஸ்ட்ன்னு ஒரு ஆறே முக்கால் லட்சத்து 78 ஆயிரத்து நானூத்து நாப்பதிரண்டு பேரோட ரெஸ்யூம் கொண்டு வந்துக் கொடுத்தார்.. தற்சமயம் அந்த அப்ளிகேஷன்ஸ் எல்லாம் படிச்சு ஷார்ட் லிஸ்ட் பண்ற வேலையைக் கொருக்கு பேட்டை மூணாவது சந்துல்ல நாலாவது பில்டிங்க்ல்ல இருக்க முதல் மாடியில் இயங்குற ரெஸ்யூம்கிரிகிரி அப்படிங்கற கம்பெனிக்கு அவுட் சோர்ஸ் பண்ணியிருக்கோம்.

ஜொ பயங்கர டென்சனா ரிசல்ட்டுக்கு வெயிட்டீங்க்..

நிலைமை இப்படி போக.. வழி இல்லாம போர்ட் ஆப் இயக்குனர்கள் பட்டியலில் அவசரமா அவசரமாச் சேர்த்தப் பெயர்கள்..

விவ் பார்டனர் ( அது ஒண்ணும் இல்லங்க வாங்க விவசாயி.. பங்காளி அப்படின்னு கூப்பிடுவோம் அதுக்குத் தான் கொஞ்சம் தகாஸ் நகாஸ் வேலை எல்லாம் பண்ணி விவ் பார்ட்னர்ன்னு மாத்திட்டோம்)

ப்ரீ பன்ச்சர் ( இலவசம்ன்னா ப்ரீயாம் கொத்து அப்படின்னா BUNCHஆமா.. கொத்தனார் அந்த 'னார்' ல்ல 'னா' கட் பண்ணி 'ர்' மட்டும் சேர்த்து அப்படியே போட்டு அவரையும் சேர்த்தாச்சு..

எல்லாம் நியூமராலஜி.. அப்புறம் பேஷனாலஜி.. கிளைன்ட் சைக்காலஜி.. பிரேட்டும் பட்டரும், பீசாவும், பர்க்கரும் திங்கற அசலூர்காரப் பைய நம்ம பேரைக் கொலைப் பண்ண விடலாமா.... நம்மளே பண்ணிகிட்டா அது மருவாதின்னு மாத்திட்டோம்ல்ல.

இது தவிர எஸ்.பிளாபரார். டி.சி. கான்சர்ட்டர், கட்.டி.பாய், இவங்கக் கூட இயக்குனர்கள் வரிசையிலே இருக்காங்க...

ம்ம்ம்.. அட ஹெச்.ஆர் மேனேஜர் அவசரமாப் போடணும்ன்னு சொன்னவுடனே.. மனதின் ஓசை.. அட நம்ம மனச்சாட்சியிலே இருந்து ஒரு சவுண்ட் கேட்டுச்சு.. நல்லா கேள்விக் கேக்கத் தெரிஞ்சவங்களா ஹெ.ஆர்ல்ல போடுங்கப்பான்னு...

ஆகா டக்குன்னு டவுட்டே இல்லாமா முடிவு பண்ணிட்டோம் நம்ம மா மன்னார் கோவுக்கு மூணு ஹெச்.ஆர் மேனேஜர்ன்னு

எல்லாரையும் உக்காரவச்சு இருபத்திய்யொரு கேள்வி கேட்டு கடைசியிலே அவரே பதிலும் சொல்லுவாரே நம்ம கிராண்ட் மாஸ்டர்... அவர் தான் நம்ம கம்பெனி சீப் ஹெ.ஆர் மேனேஜர். அவருக்கு அஸிடென்ட்டா யாரை வைக்கலாம்ன்னு பயங்கர ஆலோசனைக்குப் பிறகு தக..தக.. தங்கவேட்டை புகழ் சல்யூட் நீலாம்பரி அக்கான்னு ஏகமனதா மேலிடத்து ரெகமண்டேஷனோடு முடிவாச்சு....

போர்ட் ஆப் இயக்குனர்கள் எல்லாம் அயல்நாடுகளுக்குக் கிளைன்ட் புடிக்க அவசரமாக் கப்பல் பிளைட்ன்னு கிளம்பிப் போயிட்டதுன்னாலே.. ரெக்ரூட்மன்ட் வேலையை நம்ம கிராண்ட் மாஸ்ட்டர் சாரும் நிலாம்பரியும் செய்ய வேண்டியதாப் போச்சு....

முதல் ரெஸ்யூம் வேலு நாயக்கர் தாராவி மும்பை....

ஆகா என்ன ஒரு கேப்ஷன்ப்பா ..
நாலு வரி கோடு நல்லாயிருக்கணும்ன்னா எதுவுமே தப்பு இல்ல...

ஆகா வித்தியாசமா இருக்கே ஈ யாளை செலக்ட செஞ்சு கால் அனுப்பு

"மாஸ்டர் இதைப் பாருங்க..."

"அய்யோடா எந்தா இது ரெஸ்யூம்க்குப் பதிலா ஜாதகம்..."

ஆயிரம் கோடி அதிசயம் கொண்டது பாபா ஜாதகம்... என்ற பாட்டு எங்கிருந்தோ ஒலிக்கிறது..

"எந்தா சாங் கேக்குது?"

ப்ர்ர்ர்ர்ர்ராஆஆஆஆஆஆஆஆ .. பாபா...பக்மா!!!! பக்மா!!! பாபா...பக்மா!!!! பக்மா!!! தப்பு தப்பு தப்பு தப்பு தப்பு தப்பு எரரரு .....

பேர் எந்தா பரைஞ்சு?

"YO.. B2theA2theB2theA..HIS NAME IS BABA.. BABA hes a macho man... u can trust this man.."
நீலாம்பரி பயங்கர பீலிங்காகி பாட்டாகவே பாடி விடுகிறார்.

"ரெஸ்யூம்க்குப் பதில் ஜாதகம் அனுப்பியிருக்கும் ஈயாள் ஸ்டைல் வல்லியாதாயிட்டு உண்டு.. ஈ ஆளுக்கும் கால் கொடுத்துடு"

"நெக்ஸ்ட் ஆரான்ணு...?"

கேரியர் அப்ஜக்டிவ் படிக்கிறார் நீலாம்பரி

"தெம்புக்கு குடிக்கணும் விவா
சிம்பு அப்பனுக்குத் தெரியும் ஜாவா

அம்மான்னா இங்கிலீஷ்ல்ல மம்மி..
வி.பி. டாட் நெட்ன்னு நான் நல்லாவே அடிப்பேன் கும்மி
என் படம் ஓடுனா அது மிராக்கள்
எனக்கு நல்லாவே தெரியும் ஓராக்கள்"


"ஆகா ஈயாளுக்கு எந்தா ஒரு க்ரியேட்டிவிட்டி.. ஈயாளையும் கூப்பிடு.. பக்ஷ ஈயாள் பேர் எந்தா?"

"பீர்ல்ல மொகம் கழுவுனது ஆரிச்சாமி..
சாப்ட்வேர்ல்ல வயித்து கழுவ வந்துருக்கவன் வீராச்சாமி... வீராச்சாமி... "
கீழே வீராச்சாமி@ டண்டனக்கா.காம்ன்னு போட்டிருக்கு மாஸ்டர் என்று நீலாம்பரி படித்து முடிக்கிறார்.

ஓ.கே எல்லாரையும் திங்கட் கிழமை இன்டர்வியூக்கு வரச் சொல்லி பறையு... எனக்கு இப்போக் கொறச்சுச் சோலி உண்டு.. பிரேக்...
அடுத்து இன்டர்வியூ நிகழ்வுகளையும் நம்ம கச்சேரிக்கு வந்துக் கேட்டு மகிழுங்க...

இந்தப் பதிவினை உங்களுக்கு வழங்குவது செந்தழலாரின் தேடுவேலை டாட் காம்.

Wednesday, December 06, 2006

தமிழ் பதிவுலகம் 2006 - நம்ம வியூ பாயிண்ட்

வணக்கம் மக்கா,

அட அப்படி இப்படி திரும்பி பார்க்கறதுக்குள்ளே 2006 டிசம்பர் வந்துருச்சு.. வருஷம் முடியப் போகுது.. இந்த வருஷம் எப்படிடா இருந்துச்சுன்னு நமக்கு நாமே திரும்பி பார்த்துக்கறது ஒரு விதத்துல்ல நல்லது.. ஒரு வருஷமா நானும் பதிவுப் போட்டிருக்கேன்.. ப்ல பதிவைப் படிச்சுருக்கேன்.. அதைப் பத்தி பதிவு செய்யவே இந்த பதிவு.. இது நிச்சயமாய் ஒரு விம்ர்சனப் பதிவு அல்ல..

இந்த வருசம் நமக்குத் தெரிஞ்சு ஒரளவுக்கு குழு பதிவுகள் வரத் துவங்கி வெற்றிகரமாச் செயல்படவும் ஆரம்பிச்சு இருக்கு

குழு பதிவுகளில் இந்த வருடம் நான் ஆர்வமாப் படிச்ச பதிவுன்னா அது தேர்தல் 2006... தேர்தல் டைம்ல்ல பல்வேறு கருத்துக்கள், அலசல்கள், செய்திகள்ன்னு பின்னிட்டாங்க... அவங்க உள்ளாட்சி தேர்தல் போது கொஞ்சம் அமைதி ஆயிட்ட மாதிரி எனக்கு ஒரு பிலீங்...

அப்புறம் பார்த்தீங்கண்ணா திராவிட தமிழ்ர்கள்ன்னு ஒரு குழு... அது மேல ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்துச்சு.. இன்னும் இருக்கு.. அவங்க எல்லாம் இன்னும் எழுச்சியாச் செயல்பட்டா நிறைய தகவல் பரிமாற்றங்கள் நடக்கும் அப்படிங்கறது என் தனிப்பட்ட எதிர்பார்ப்பு.

அடுத்து நம்ம சென்னப் பட்டிணம்ங்க.. என்னமா கலக்குறாங்க... ஏற்றமிகு தலைமை.. துடிப்பான உறுப்பினர்கள்.. நான் வளர்ந்து வாழும் சென்னை நகரத்தை மையமாக் கொண்டு பதிவுகள் வரும் இந்த் குழுப் பதிவு நமக்கு ரொம்ப பேவரீட்ங்க.. பதிவுலகைத் தாண்டியும் பதிவாளர்களை இவங்க ஒருங்கிணைக்கச் செய்யும் முயற்சிகள் எனக்கு ஆச்சரியம் தரும் விஷ்யம்.. சென்னைப் பட்டினம் இன்னும் கலக்கணும்...கண்டிப்பாப் பாராட்டியே ஆகணும்.

அடுத்து இப்போத் தான் வளந்து வரும நம்ம விக்கிபிடியாப் பசங்க...நல்ல ஐடியா.. பெரிய பெரிய ஜாம்பவான்கள் ஒண்ணுக் கூடி நம்ம கேள்விக்குப் பதில் சொல்லக் கிளம்பியிருக்காங்க.. நான் கேட்டக் கேள்விக்கு பதில் சொல்லி ஒரு பதிவை டக்குன்னு போட்டு இவங்களும் நம்ம நம்ம பேவரிட் லிஸ்ட்ல்ல சேந்துட்டாங்க

தமிழை நம்ம மரமண்டைக்கும் புரியற மாதிரி சொல் ஒரு சொல்ன்னு சொல்லிக் கொடுக்குறதும் குழு பதிவுன்னு எடுத்துக்கலாம் ஜி.ராவும் குமரனும் செய்யும் இந்த பணியும் நமக்கு ரொம்பப் புடிச்சு இருக்குங்க..

இயன்ற வரை இனிய தமிழில் எனக்கு வெண்பா வடிக்க சொல்லித் தர்றேன்னு வாக்கு கொடுத்த வெண்பா குழுவும் நான் ரசிச்ச இன்னொரு குழு பதிவு.. வெண்பா வாத்தி இப்போ மிஸ்ஸிங்... யாராவது பார்த்தாச் சொல்லுங்கப்பா

அப்புறம் க.பி.கன்னு ஒரு குழு பதிவு தமாஸ்க்கு தோரணம் கட்டி ஆரம்பிச்சாங்க... என்னத் தான் அதுல்ல உறுப்பினர் ஆக நமக்கு தகுதி இல்லன்னாலும் இதன் ஆரம்பக் கால பதிவுகள் மிகவும் ரசிக்கும் படி இருந்தன. இந்த பதிவு அமைதியாக போனதில் எனக்கு கொஞ்சம் வருத்தமே...

சிரிப்புக்கு மரியாதைக் கொடுக்கும் நம்ம வ.வா.சங்கமும் அப்படிப்பட்ட குழு பதிவுகளில் ஒண்ணுங்கறது எனக்குத் தனிப்பட்ட முறையில்ல ரொம்ப மகிழ்ச்சியைத் தருது..

சங்கத்தின் ஒரு அங்கமா இருக்கும் தமிழ் சங்கமும் 2006ல் தான் ஆரம்பம் ஆச்சு.. அது இன்னொரு சந்தோஷமான விஷ்யம்..

2006இல் தமிழ் பதிவுலகமும் தமிழ் பதிவர்களும் இன்னும் நான் பேச நினைக்கும் விஷயங்கள் தொடரும்

Thursday, November 30, 2006

தூம் - 2 | DHOOM - 2


வணக்கம் மக்கா,

நேத்து நம்ம ஆபிஸ் மக்களோட உழைச்ச உழைப்பின் பலனைக் கொண்டாட படம் போக முடிவாச்சு.. என்னப் படம் போகலாம்ன்னு ஆளுக்கு ஆள் அபிப்பிராயம் செப்பிக்கொண்டிருக்க.. கடைசியா நம்ம கிளைன்ட் ஆசைக்கு மருவாதைக் கொடுத்து கும்பலாக் சத்யம் காம்ப்ளக்ஸ்க்குக் கிளம்புனோம்ய்யா

படம் போன வாரம் தான் ரிலீஸ்.. ஓரளவு நல்ல கூட்டம்ங்க...

போஸ்ட்டர்ல்ல பார்த்துக் கதையைக் கண்டுபிடிக்க முடியுமான்னு ஒரு சின்ன யோசனையிலே போஸ்ட்டரைப் பார்த்தேன்ங்க.

விறைப்பா அபிஷேக் பச்சன் பக்கத்துல்ல நம்ம ஐஸ் (ஐசா அது.. சின்ன வயசு டிரஸ் போட்டுகிட்டு நிக்குது... யம்மாடி) அதுக்குப் பக்கத்துல்ல ஒரு கள்ளத் தனமான புன்னகையோட நம்ம இந்தியன் சூப்பர்மேன் கிரிஷ் புகழ் ஹிரித்திக் ரோஷன், அதுக்கும் பக்கத்துல்ல பிபாஷா ( இவங்க டிரஸ் போடுறதே பெரிய விஷயம் தான்.. ஆ....த்தாடி ஒரு பெரும்மூச்சு) அதுக்கும் பக்கத்துல்ல யாஷ் சோப்ரா (படத்தின் தயாரிப்பாளர்) குடுமபத்து வாரிசு உதய் சோப்ரா ஒரு காமெடி கலந்தச் சிரிப்போடு போஸ் கொடுக்கிறார்.

இந்தப் போஸ்ட்ரை வச்சு கதை என்னவா இருக்கும்ன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்..கதைன்னு ஒண்ணு தேடினாலும் இந்தப் படத்தில் இல்லைங்கறது படம் பார்க்க ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல்லயே தெள்ளத் தெளிவா விளங்கிப் போச்சு.

படத்தை இப்படி தான்..... உக்காந்து.... யோசிச்சி எடுத்துருப்பாங்களோன்னு யோசிக்க வைச்சுட்டாங்கப்பா

அதாவது முதல்ல ஹிரித்திக்கின் அறிமுக காட்சி... அந்த ரயில் காட்சி பயங்கரப் பூச்சுற்றல் என்றாலும் ரசிக்கும் படி இருக்கிறது.. ஸ்டண்ட் மாஸ்டர் வாழ்த்துக்களை அள்ளிக் கொள்கிறார்.

அதுக்கு அடுத்து உதய் மற்றும் அபிஷேக் அறிமுகமாகும் காட்சி..உதய் பைக்ல்ல பறந்து வருவதும், தண்ணிக்குள் இருந்து வாட்டர் ஸ்கூட்டரில் அபிஷேக் வெளியே பறந்து அடியாட்கள் கூட்டத்தை போட்டுத் தள்ளும் அந்த லாஜிக் செம் காமிக்..(தமிழ்ல்ல இதைக் கண்டிப்பா அடுத்த பேரரசுவின் படத்தில் பார்க்கலாம்.. மகிழலாம்..)

ஆச்சு ரெண்டு நட்சத்திரங்களும் வந்தாச்சு படமும் ஒரு பத்து பதினைஞ்சு நிமிஷம் ஓடிருது இதுக்குள்ளே... இந்தக் கேப்பிலே தூம் மச்சாலே பாட்டுக்கு ஹிரித்திக் அட்டகாசமா ஆட்டம் போடுறார்.. நடனம் பாராட்டும் படி இருக்கிறது..

சரி.. அடுத்து இருக்கே மேட்டர் பி..பா..ஷா... அவங்க அறிமுகம் வளைவு நெளிவுகளின் விளக்கத்தோடு அமைக்கப்பட்டிருக்கிறது.. ம்ஹும் இப்படி எல்லாம் ஒரு போலீஸ் இருந்தா எல்லா கிரிமினலும் அவங்க கஸ்டடிக்கு வர்றதுக்கு க்யூ கட்டி இல்ல நிப்பாங்க.. ஆனா பாவம் படத்துல்ல அவங்க கிரிமினல் பின்னாடி அலையறாங்க... கேமரா அவங்க பின்னாடியே அலையுது...கேமரா மேன் கொடுத்து வச்சவர் தானுங்க..

ம்ஹும்.. சோ அபிஷேக் வந்தாச்சு ஹ்ரித்திக் வந்தாச்சு, பிபாஷாவும் வந்தாச்சு.. அடுத்து என்ன?

யோசிக்க விடாமா ஆடுறாங்கப்பா பாடுறாங்கப்பா.. ஹிரித்திக் எல்லா லாஜிக்கையும் மீறி நம்ம கமல்ஹாசன் டைப்ல்ல மேக்கப் எல்லாம் போட்டுகிட்டு கன்னாபின்னான்னு கண்ட இடத்துல்ல திருடுறார்.. அவரை யாராலும் கண்டே பிடிக்க முடியல்ல... அபிஷேக்கும் பிபாஷாவும் ஜகஜால கில்லாடியான ஹிரித்திக்கைப் பிடிக்க என்னவெல்லாமோ திட்டம் போடுறாங்க...அப்படியும் அவரை பிடிக்க முடியாமல் கோட்டை விடுறாங்க...

அப்படிங்கும் போது நமக்கும் புரியுது.. அதாவது திருடன் போலீஸ் விளையாட்டுத் தான் இந்த தூம் 2 படமா எடுத்துருக்காங்கன்னு...அபிஷேக் புத்திசாலி போலீஸ் அப்படின்னா கூட வர்ற உதய் கொஞ்சம் நம்ம மன்மதன் சத்யன் டைப் தமாஸ் போலீஸ்...உதய் சோப்ரா நம்ம சத்யன் ரேஞ்சுக்கு நல்லாக் காமெடி பண்ணியிருக்கார்... அவர் அடிக்கிற நகைச்சுவை வசனங்களுக்கு சனங்க ரெஸ்பான்ஸ் நல்லாவே இருக்கு..

கிட்டத் தட்ட இடைவேளை வரைக்கும் இப்படியே ஓட்டிட்டு போய் பிரேக் அடிக்கிறாங்க... இடைவேளைக்குக் கொஞ்சம் முன்னாடி ஐஸ் அம்மணி முக்காடு போட்டுகிட்டு திருடனுக்கு திருடியா அறிமுகமாகி ( ஆமாங்க ஐஸ் இதுல்ல அபிஷேக்கு ஆள் இல்ல) அரையும் கொரையும் நின்னு ஹ்ரித்திக்கைப் பார்த்து ஸ்டைலா U WANNA CHECK ME OUT ன்னு பீட்டராக் கேக்குது. சாரி ஐஸ் உங்க லெவலுக்கு கதை உள்ள படத்தை நம்புங்க...இப்படி சதை உள்ள படமெல்லாம் உங்களுக்கு நல்லா இல்லங்க.

இடைவேளைக்குப் பிறகு ஹிரித்திக்கும் ஐசும் ஒருத்தரை ஒருத்தர் நெருங்க... அபிஷேக் ஹிரித்திக்கை நெருங்க பகீரத பிரயத்தனங்களில் ஈடுபடுகிறார்...பலன் பூஜ்ஜியம்...

என்னங்க இந்த இடத்துல்ல விமர்சனம் படிக்கிற உங்களுக்கே கொஞ்சம் அலுப்புத் தட்டுதா? அப்படின்னா படம் பார்த்த எங்களுக்கு எல்லாம் எப்படி இருந்திருக்கும்.

சரி அப்படியே படம் பிரேசிலுக்கு நகர்கிறது யம்மாடியோவ் ரியோடி ஜெனிரோ என்ன அழகுப்பா.. பிரேசில் பீச் காட்சிகள் கிளுகிளுப்பு... பைக் சேஸிங் காட்சிகள் பரபரப்பு... கிளைமாக்ஸ் மலைச்சரிவு நீர்வீழ்ச்சி காட்சிகள் கண்களுக்கு ஜிலிஜிலிப்பு.

பிரேசலில் இன்னொரு பிபாஷா பாசு வருகிறார்... கேமரா அவரைக் கண்டபடியெல்லாம் அளவு எடுக்கிறது. அவரும் பிகினி எல்லாம் போட்டு கேமராவுக்கு நல்லாவே வேலைக் கொடுத்திருக்கிறார். கொடுத்த சம்பளத்திற்கு பிபாஷாவிடம் உள்ளதை உள்ளபடியே வாங்கியிருக்கிறார்கள்.பிரேசில் பிபாஷாவோடு உதய் ஆடுகிறார் பாடுகிறார்.

இதற்கிடையில் ஐஸ் அபிஷேக் செட் பண்ணி அனுப்பும் போலீஸ் இன்பார்மர் என ஒரு டூமில் வேறு.. ஆனால் ஒரு கட்டத்தில் உண்மையாகவே ஐஸ் ஹிரித்திக்கின் காதல் வலையில் விழ ஹிரித்திக் ஐஸின் உதட்டினை கவ்வி இழுக்கும் காட்சியில் (நம்ம சிம்பு அளவுக்கு இல்லங்க).. தியேட்டரில் எழுந்த அபிஷேக்பச்சா நீ கோயிந்தா கோயிந்தாடா குரல்கள் இன்னும் என் நினைவில் நிற்கின்றன.

பிறகென்ன சேஸிங்... எதிர்பார்க்கும் திருப்பங்கள்.. போலீஸ் வெல்கிறது... ஆனால் திருடனும் தோற்கவில்லை.. ஐஸ் ஹிரித்திக் காதலும் கேப்பில் வெற்றி பெறுகிறது எனப் படம் முடிகிறது...

நமக்கும் வெற்றி அடைந்த ஒரு உணர்வு.. பின்னே இப்படி ஒரு படத்தை முழுசாப் பார்த்து நம்ம சகிப்புத் தன்மையை உலகத்துக்கே பதிவா வேற போட்டுக் காட்றோம் இல்ல.

முதல் பாகத்தின் இசை வெற்றி இதில் நிச்சயமாக இல்லை. அபிஷேக் நடிப்பில் அவ்வளவாய் துடிப்பு இல்லை. ஐஸ்வர்யாவுக்கு இப்படி ஒரு ரோல் தேவையா தெரியவில்லை. திரைக்கதை என்ற விஷ்யம் மொத்ததில் இயக்குனரின் எண்ணத்தில் சுத்தமாக இல்லை.

சரி இவ்வளவு தடைக் கற்களையும் மீறி தூம் வெற்றி படமாக அமையுமானால் அதற்கு காரணம் என்னவாக இருக்கும்

SLEEK AND STYLISH FILM MAKING என்ற நவீன திரைப்பட பார்மூலா மீது மக்கள் காட்டும் தற்காலிக மோகம், அற்புதமான வெளிநாட்டு படப்பிடிப்புக் காட்சிகள், ஓரளவுக்கு ஈர்ப்பு ஏற்படுத்தும் சாகசக் காட்சிகள்,ஹிரித்திக்கின் ஆர்பாட்டமில்லாத அசத்தலான பங்களிப்பு... வேற என்ன சதைப் பற்றுள்ள படங்கள் மீது இருக்கும் ஒரு வித ஆர்வம் அவ்வளவு தான்..

நான் என்ன நினைச்சேனா..ம்ம்ம் இப்படி ஒரு படத்துக்கு கூட்டிட்டு போய் ஒரு புதன் கிழமை சாயங்காலத்தைச் சாவடிச்சதுக்கு ஆபிஸ்ல்ல ஓரமா ஒரு பெஞ்சைப் போட்டு ஏத்தி நிக்க விட்டுருக்கலாம்ய்யா...

நெக்ஸ்ட் சினிமாத் தவிர்த்து வேற கச்சேரிக்கு முயற்சி பண்ணுறேண்ங்கன்னு சொல்லி இப்போ ஜூட் விட்டுக்குறேங்க...

Monday, November 20, 2006

'ஈ' படம் பார்த்தீங்களா?

வணக்கம் மக்கா,

தீவாளிக்கு வந்தப் படத்துல்ல கிட்டத்தட்ட எல்லாப் படத்தையும் துட்டு கொடுத்து டிக்கெட் எடுத்து தியேட்டர்ல்ல பார்த்து முடிச்சாச்சுன்னு இருந்தப்போ தான் யாரோக் கேட்டாங்க.. 'ஈ' படம் பார்த்தாச்சான்னு..

பள்ளிக்கொடத்துல்ல சில பாடங்கள் நமக்கு பிடிக்கிறதுக்கும் பிடிக்காமல் போறதுக்கும் காரணம் அந்தப் பாடங்கள் நமக்குச் சொல்லிக் கொடுக்கப் படும் முறை.. சில சமயம் மிகவும் கடினமான பாடங்கள் கூட எளிமையா சொல்லிகொடுக்கப்படுவதால் நமக்கு டக்குன்னு புரிஞ்சிடும்.. அதே டைப்ல்ல படிச்சவங்க, பாமரங்க, சின்னப் பசங்க இப்படிப் பலத் தரப் பட்ட சினிமா ரசிகர்களுக்கு இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் ரொம்ப எளிமையா "பயோ வார்" (BIO WAR) அப்படிங்கற விஷயத்தை படமா எடுத்துப் புரிய வச்சுருக்கார்.

அறிவியலும்,அரசியலும்,பொருளாதாரமும் கலந்து கும்மியடிக்கும் பயோ வார் விஷயத்தை படம் பார்க்கும் ரசிகர்களை அதிகம் குழப்பாமல் ஒரு சில கதாபாத்திரங்களின் வழியாகவும் அவர்கள் வாழ்க்கை நிகழ்வுகள் வழியாகவும் ஒரு யதார்ததமான கதையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

காசுக்காக் எதையும் செய்யும் 'ஈ' கதாபாத்திரம் (கிட்டத் தட்ட நம்ம புதிய பாதை பார்த்தீபன் மாதிரி தான்) தமிழ் சினிமாவுக்கு புதுசு இல்லத் தான்னாலும் ஜீவா அந்தப் பாத்திரத்தை செய்திருக்கும் விதம் ஈ மீது நமக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்திடுது கருணாஸ்க்கு மீண்டும் ஒரு லொடுக்கு பாண்டி பாத்திரம் கிடைச்சுருக்கு...இதுல்ல அவருக்கு பேர் டோனி. நயந்தாரா படத்தின் கதாநாயகி.. நாயகனைத் தமிழ் படங்களின் விதிப் பிசகாமக் காதலிக்கிறாங்க. படத்துல்ல அவங்க பேர் ஜோதி... ஒரு பார் டான்சரா வர்றாங்க.

ஆஷிஷ் வித்யார்த்தி டாக்டரா வர்றாரு..( இது என்னவோ தெரியல்ல டாக்டர்கள் ஸ்கீரினில் வில்லன்களாக் காட்டப் படும் சீசன் போல) ஏழைக் காவலனாய் இலவ்ச மருத்துவம் பார்க்கும் நல்லவனாய் வலம் வரும் ஆஷிஷின் மறுபக்கம் தான் படத்தின் கரு. வெளிநாட்டுகாரர்களின் பயோ வார் திட்டங்களுக்கு நம் இந்தியாவையும் பொருளாதாரத்தில் கீழ் நிலையில் இருக்கும் சேரி வாழ் மக்களையும் ஆய்வுக் கூடமாகவும் ஆய்வுப் பொருட்களாகவும் மாற்றி அதன் மூலம் கோடிகளைக் குவிக்கும் ஆராய்ச்சியாளர் என கோரமான அவரது மறுபக்கம்.

பழைய இந்தி படங்களின் சாயலில், வில்லன் டாக்டர் ஆஷிஷ் வித்யார்த்தி கூடவே கிளுகிளுப்பா ஒரு நர்ஸை உலாவ விட்டிருக்காங்க.. அது கொஞ்சம் பொருந்தாத மாதிரி இருக்கு... இருந்தாலும் முன் பெஞ்ச் மக்கள் அந்த நர்ஸ் திரையில் வரும் போதேல்லாம் உற்சாகக் குரல் கொடுப்பது இயக்குனரின் வியாபாரப் பார்வையையும் காட்டுகிறது. டாக்டரின் கொடுஞ்செயல்களுக்கு அந்த நர்ஸ் எடுப்பு வேலைப் பார்க்கிறார்.

பசுபதி, இவருக்கு சேகுவேரா மாதிரி ஒரு வேடம். கொஞ்சமே வருகிறார். ஆனால் மனுசன் அழுத்தமாய் பதிகிறார். (பசுபதிண்ணா வெயில்ல உங்களை இன்னும் அதிகமா எதிர்பார்க்க வச்சீட்டீங்க). இவருக்கும் ஜீவாவுக்கும் கிளைமெக்ஸ் நெருக்கத்தில் நடக்கும் உச்சக் கட்ட உரையாடல்களில் சமுதாயச் சிந்தனைகளை அதிகப் பிரச்சார வாசம் இன்றி ஒலிக்கச் செய்திருக்கிறார் இயக்குனர்.

இது தவிர படத்தில் அஜய் ரத்னம், ராஜேஷ், பான்பராக் ரவி ஆகியோரும் வந்துப்போகிறார்கள். படத்தில் சிறிய வேடத்தில் வந்தாலும் ஜீவாவின் ஆயாவாக வரும் அந்த பாட்டி மனத்தில் நிற்கிறார்.

ஜீவாவின் நடிப்பைப் பத்தி சொல்லுணம்ன்னா.. மாப்பூ.. கமல்..விக்ரம்.. சூர்யா.. போய்ட்டுருக்க ரூட்ல்ல வண்டியை விட்டிருக்கார். நிறைய மெனக்கெட்டிருக்கார். அவர் மெனக்கெட்டதன் பலனை திரையரங்களில் ரசிகர்களின் கரகோஷ்மாய் நல்லாவே அறுவடைப் பண்ணிகிட்டு இருக்கார்.

நயந்தாரா ஜீவாவோடு போராடும் ஒரு காதலியாய் நல்லாவே செஞ்சு இருக்கார். சில காட்சிகளில் நடிப்புத் திறனைக் காட்டக் கிடைச்சக் காட்சிகளையும் நல்லாவே பயன்படுத்திகிட்டு இருக்கார்.

பாடல்கள் ஓ,கேன்னு சொல்லலாம். ஒரே முறை ..ஒர்ரே முறை... பாடல் தாளம் போட வைக்கிறது... சில காட்சிகளில் பின்னணி இசை இன்னும் பலம் சேர்த்திருக்கலாம்.. குறிப்பா பசுபதியின் உயிர் பிரியும் காட்சி..SOMETIMES SILENCE CAN BE THE BEST FORM OF MUSIC.. சிரிகாந்த் தேவா அதை ட்ரை பண்ணியிருக்கலாமேன்னு தோணுச்சு...

படத்தின் இன்னொரு பாராட்டத் தக்க விஷயம் கலை இயக்குனரின் உழைப்பு என்னமாச் செட் போட்டுருக்கார்ப்பா. ( ஏற்கனவே இவர் இயற்கையிலே போட்ட கலங்கரை விளக்கம் செட் அற்புதமான் ஒன்று) சாரி அவர் பெயரை நான் கவனிக்க மறந்துட்டேன்.

மொத்ததுல்ல சொல்லணும்ன்னா ஒரு முக்கியமான வெகுஜன விழிப்புணர்வு மேட்டரை தேவையான அளவு உப்பு உரைப்பு எல்லாம் சேத்து பக்குவாமாச் சமைச்சு பரிமாறி இருக்காங்க...போதுமான அளவுக்கு ருசியாவே இருக்கு..

இந்த ஈ தீவாளி ரேஸ்ல்ல மெதுவா ரெக்க விரிச்சாலும் கொஞ்சம் உசரமாவே பறக்கும்ங்கோ..

அப்புறம் என்ன டைம் கிடைச்சா ஈ படம் பாருங்க..

Wednesday, November 15, 2006

CMஐ முந்துகிறாராம் ஸ்டாலின்??

வணக்கம் மக்கா,

ஒரு பத்து பதினைஞ்சு நாளா ஒரே வேலை... இன்னும் ஓயல்ல.. வீட்டிலும் சரி ஆபிஸ்ல்லயும் சரி குனிய வச்சு குட்டுறாய்ங்க... சரி நம்ம கதை தான் வீடு தோறும் நடக்கும் கதையாச்சே.. அதைப் பத்தி பேசி என்ன பிரயோஜனம்.

பேப்பர் படிக்க முடியல்ல ...ஒழுங்கா நாலு நியூஸ் சானல் மாத்திப் பாத்து ஜி.கே டெவலப் பண்ண முடியல்ல... மழை வேற பெஞ்சு ஓஞ்சா மாதிரி போக்குக் காட்டிட்டு நான் ரெயின் கோட் கொண்டு போக மறக்கற நாளாப் பாத்துப் பேக்ல்ல தாக்குது.. ஒரு மனுஷன் என்னத் தான் செய்வான் சொல்லுங்க?

நாட்டு நடப்பெல்லாம் எப்படி இருக்குன்னு தெரிஞ்சிக்க எனக்கு இருந்த ஒவ்வொரு வழியும் ஒவ்வொரு விதத்துல்ல ஊட்டி ரோடு மண்சரிவுல்ல பிளாக் ஆன மாதிரி மூடி கிடக்க... நம்ம அறிவு பசி மட்டும் அடங்க மறுத்து அடம் பிடிக்க ஆரம்பிச்சது.

தமிழ் மணம் தேன்கூடுன்னு காலை முதல் மாலை வரை வேலையாக இருந்த எனக்கு அப்ரைசல் கண்டம் வெகு அருகினில் வரும் காரணத்தில் கூடுமானவரை அந்தப் பக்கங்களுக்கு அடிக்கடி போகக் கூடாது என்று ஒரு உறுதிமொழி வேறு... ( தமிழ்மணம் , தேன்கூடு படிக்கறதையே தொழிலாகக் கொண்டு ஒரிஜினல் தொழில் என்ன எனபதையே மறந்து அப்ரைசல் நேரத்தில் அது தங்களுக்கு நினைவூட்டப் பட்டதாய் பரிதாப கதை சொன்ன வலையுலக மேன்மக்களுக்கு என் உறுதி மொழியின் நோக்கம் புரியும்)

ஆக... இப்படி அகில உலகத்தில் நடக்கும் வம்பு தும்புகள் காதில் விழாமல் என்னடா வாழ்க்கை என்று அலுத்தப் படி டீ குடிக்க கடைக்குப் போயிருந்தேன்...

ம்ம் பிரெட் பஜ்ஜி ஒரு பிளேட் அப்புறம் ஒரு ஸ்பெஷல் டீ சொல்லிட்டு காத்திருந்த கேப்பில் காதில் விழுந்தது தான் இந்தப் பதிவின் தலைப்பு..


CMஐ முந்துகிறாராம் ஸ்டாலின்

அடங்கொக்க மக்கா.. உள்ளாட்சி உடனே தமிழக ஆட்சி ஆகப் போகுதான்னு காதைத் தீட்டிகிட்டேன்.

"ஸ்டாலின் முந்துறதாவது.. எங்கேய்யா பார்த்த?" ஒருத்தன் கேட்டான்.

"மச்சி எல்லாப் பேப்பர்ல்லயும் போட்டிருந்தானே நீ பார்க்கலியா.. நெட்ல்ல எல்லாம் கூட போட்டிருக்கான்ப்பா" அங்கிருந்தக் கும்பல்ல ஒருத்தன் பதில் சொன்னான்..

"ஸ்டாலின் ஓ,கே தான்ம்மா அதுக்காக CM அளவுக்கெல்லாம் பேசக் கூடாது"

"எத்தனை நாளைக்கு தான் இன்னும் CM புராணம் பாடுவீங்க ஸ்டாலின் அடிச்சுக் கிளப்புறாரு பாருங்கப்பா"

"யோவ் அதுக்குள்ளே சொன்னா எப்படி இப்போத் தானேப்பா ஸ்டாலின் வந்துருக்கார்..CM ரிக்கார்ட் தெரியும் இல்ல"

"CM ரிக்கார்ட் எல்லாம் உடைக்கப் போறார் பாருய்யா ஸ்டாலின்"

"யோவ் ஆயிரம் இருந்தாலும் CM ரேஞ்சு வேறய்யா..ஸ்டாலின் எல்லாம் CM ரேஞ்ச்க்கு எப்படிய்யா ஒத்துக்க முடியும்?"

"பந்தயம்ய்யா ஸ்டாலின் CMஐ அடிச்சுக் காட்டுவாரு பாப்போமா"

இப்படியே பேச்சுப் போச்சு.. நான் ஆர்டர் பண்ண பஜ்ஜியும் டீயும் வர அந்தக் கும்பல கிளம்பி போகவும் சரியா இருந்துச்சு..

ஆக கூடி ஸ்டாலின் கலக்க ரெடி ஆயிட்டார்ன்னு எதோ புரிஞ்சிகிட்டு எழுந்து ஆபிஸ் போனேன்.

போனதும் அவசரமா நம்ம இட்லி வடையார் பக்கம் போனேன்.. இப்படி நியூஸ் எல்லாம் அவரை விட்டா யார் முதல்ல சொல்லுவா? ம்ஹும் அவர் பக்கத்துல்லயும் இந்த மேட்டர் எதுவும் இல்லை...

ச்சே என்னப்பா விவரம் தெரிஞ்சும் சரியா விளங்கல்லயே...பேப்பர்ல்ல எல்லாம் வந்து இருக்குங்கறாங்க... நெட்ல்ல போட்டு இருக்குன்னு சொல்லுறாங்க... ஆனா நமக்கு மட்டும் தெரியல்லயேன்னு மண்டைக் காய்ஞ்சுப் போய்.. நேரா சன் டிவிக்கு போன் போட்டுரலாமான்னு யோசிச்ச டைம்ல்ல நம்ம ஜி மெயிலுக்கு ஒரு மெயில் வந்துச்சுங்க...

அதோட டைட்டில்...

"STALIN OVERTAKES CM"

அவசரம் அவசரமா மெயிலைத் திறந்துப் படிக்கிறேன்...

"சுப்ரீம் ஸ்டார் சீரஞ்சிவி நடித்த ஸ்டாலின் படம் முந்தைய வருடம் நம்ம தலைவர் நடிச்சு வெளிவந்த சந்திரமுகி படத்து வசூலை ஆந்திராவில்ல முந்திருச்சாம்....

அட பாவிகளா இது தானா நான் கேட்ட டீக் கடை மேட்டர்.. ஸ்டாலினுக்கு சப்போர்ட்டாப் பேசுனவிங்க குரல்லயே லைட்டா ஜாங்கிரி எழுத்து வாடை அடிக்கும் போதே நான் டவுட் ஆகி இருக்கணும்... என்னப் பண்றது... சரி விடுங்க மக்களே மறுபடியும் டைட்டிலுக்கே வர்றேன்...


CMஐ முந்துகிறாராம் ஸ்டாலின்??

உங்க கருத்தை எனக்குப் பின்னூட்டமாச் சொல்லுங்க..

இப்போதைக்கு ஐயாம் தி எஸ்கேப்ங்கோ

PS: CM = ChandraMukhiயாம்

Tuesday, October 31, 2006

மனதோடு மழைக்காலம்

வணக்கம் மக்கா,

தீவாளி வந்து செலவு புயல் அடிச்சு ஓயஞ்சு அதனால பர்ஸ்,பாக்கெட் மற்றும் இதர துட்டு தங்கும் இடங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு அதற்கான நிவாரணங்கள் தேடி மனம் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் நேரத்துல்ல... மறுபடியும் புயல்ன்னு ரேடியோ டி.வியில்ல எல்லாம் சொன்னா மனம் என்ன பாடு படும்ய்யா கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க...

நம்ம ஆபிஸ்க்கும் நான் குடியிருக்க வீட்டுக்கும் கிட்டத்தட்ட ஒரு 10 - 12 கிலோமீட்டர் தூரம் இருக்கும்... நடுவில்ல அடையாறுன்னு ஒரே ஒரு ரிவர் இருக்கு..லண்டனுக்கு தேம்ஸ் மாதிரி தென்சென்னைக்கு இந்த அடையார்...( இதை யாராவது லண்டன் மக்கள் வாசிச்சா கண்டபடி உணர்ச்சி வசப் படக்கூடாது ஆமா.. அடையார்ல்ல ஜெயிச்ச கவுன்சிலர் ஓட்டுக் கேட்டு வரும் இதைச் சொன்னப்போ நாங்க யாருமே டென்சன் ஆகல்ல தெரியுமா?)

சரி நான் என் கதைக்கு வரேன்ங்க.. இந்த் ஒரே ஒரு ஆறு தான் இருக்கு.. ஆனாப் பாருங்க ஒரு அரை மணி மழை ரொம்ப பொங்கி புனல் எடுத்துச்சுன்னு வைங்க... அது என்ன மாயமோ என்ன மந்திரமோ தெரியல்ல எங்க வீட்டுல்லருந்து அடையாறு போறதுக்குள்ளே ஒரு இருபது இருபதைஞ்சு ஆறு உற்பத்தி ஆயிடுதுங்க...

இங்கேத் தான் இந்தப் பதிவைப் படிக்கிற விஞ்ஞானிகள் ரொம்ப ஆழமாக் கவனிக்கணும்

மழை வந்தாலும் வெயில் அடிச்சாலும் நான் ஆபிஸ்க்குப் போறது என்னமோ என் பியரோ பைக்ல்ல தான்.. ஆனாப் பாருங்க வெயில்ல ரோடு மாதிரி காட்சி தர்ற இடங்கள் எல்லாம் மழை பெஞ்சா ஆறு மாதிரி மாறிடுது.. அந்தச் சமயத்துல்ல நம்ம பைக் பாவம் ஆத்துல்ல இறங்கவே பதறி உதறும்... அப்போ அதோட என்ஞின் கொடுக்குற அந்த சவுண்ட்டைக் கேட்டா...

"ஏன்டா படிச்சவன் தானே நீயு... அறிவிருக்கா ஓனக்கு நிலத்துல்ல ஓடுற என்னை இப்படி தண்ணியிலே இறக்கி கொல்லப் பாக்குறீயே கிராதகா.. இதுல்ல 24ஆம் புலிக்கேசி மாதிரி என் முதுகுல்ல ஓக்காந்துகிட்டு வேற இருக்க...பாவி.. படுபாவிபயலே..."

இந்த சவுண்டையும் மீறி ஆத்துல்ல இறங்கி ஆக்சிலேட்டரை ஒரு முறுக்கு முறுக்கி காலைத் தூக்கி கிராஷ் கார்ட்ல்ல வச்சிகிட்டு ஜொய்ங்ன்னு முன்னேறுவேன்ங்க... இஞ்சின் சவுண்ட் ஆத்து தண்ணி நாம் போட்டுருக்க அம்சமான ஷூ பேண்ட் எல்லாத்து மேலயும் காறித் துப்பும் பாருங்க... சும்மாத் தனியா எல்லாம் துப்பாது.. அங்கிட்டு இங்கிட்டு திறந்துப் பொங்கி வழியுற கழிவுத் தண்ணியோடு கூட்டணிப் போட்டுத் துப்பும்.

அடப் பொட்டித் தட்டி வெள்ளைக் காரனுக்கே எடுப்பு வேலைப் பாத்து இருக்க அம்புட்டு மானத்தையும் என்னிக்கோத் தொலைச்ச நமக்கு இந்த துப்பல்ஸ் எல்லாம் சாதாரணம்ப்பா...

ஆங் விஞ்ஞானிகளே உங்களைப் பதிவைப் படிக்கச் சொல்லிட்டு நான் நொந்தக் கதையைச் சொல்லிகிட்டு இருந்தா எப்படி?

இப்படி ஒரு ஆறு தாண்டி மறு ஆறு தாண்டி பாவம் நம்ம பைக் ஒரு கட்டத்துல்ல என்னோட அராஜகம், கொடுமை, முடிச்சவிக்குத் தனம் எதையும் சகிக்க முடியாம..

"போடா நீயும் ஒன்னோட எனக்கு இருக்க சவகாசமும்ன்னு ஒரு பெரிய உறுமல் போட்டுட்டு... புகையை வெளியே என் மொகம் இருக்கத் திசைப் பார்த்துக் கக்கிட்டு "காந்திகிரி" பண்ண ஆரம்பிச்சுடுது.. ( அதான்ங்க ஒத்துழையாமை இயக்கம்)

அதை எம்புட்டு கெஞ்சியும் கொஞ்சியும் பயனில்லாமல்.. செல்லத்தைக் கையிலேடுத்து ( செல் போன் தான்) " Hello I am stuck in the Rain.. u know the roads are flooded.. heavy traffic.. my bike has developed rainophobia.. அப்படின்னு பைக் டாக்டருக்குப் படிச்சவன் மாதிரி அளந்து விட்டுட்டு முடிவா I Will coming a lil late to the aaapis.." ன்னு சொல்லுவேன்.

ஒவ்வொரு வாட்டி மழை வரும் போது இது தான் நடக்குது.. இது தான் நடக்கும் போல இருக்கு...

இது தீருவதற்கு ஒரு வழி சரியான சாலைகள், நகரத்தின் கட்டமைப்பினை மழையை எதிர்கொள்ளும் அளவிற்கு தயார் செயவது.. இதையெல்லாம் அரசியல்வாதிங்க.. கழகத்துக்காரங்கத் தான் செய்யணும் செஞ்சிருக்கணும்.. அவிங்க செய்யல்ல.. அதுக்குண்ணு நாம சும்மா இருக்க முடியுமா சொல்லுங்க...

இங்கே தான் மகாகனம் பொருந்திய விஞ்ஞானிகளே நீங்க வர்றீங்க...

இதைச் சமாளிக்க இன்னொரு வழி நீர்/நிலம் இரண்டுல்லயும் ஓடுற பைக் கண்டுபிடிக்கிறது..

அது உங்க கையிலேத் தான் இருக்கு.. எப்படியாவது அப்படி ஒரு பைக் கண்டுபிடிச்சு சல்லிசா என்னிய மாதிரி ஏழை பாழை வாங்கி ஓட்டுறதுக்கு வசதியான விலையிலே மார்க்கெட்ல்ல விட்டீங்கன்னா.. ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்லல வண்டிக் கடன் வாங்கி ஓட்டிப் பொழைச்சுக்குவோம் சாமி..

நடு ரோட்டுல்ல நிக்கும் போது என்னப் பொழுதுபோக்கு காதுல்ல எப்.எம் ரேடியோ தான்.. அதுல்ல போட்டாங்கப்பா ஒரு பாட்டு.. படம் பேர் மனதோடு மழைக்காலமாம்... அதான் தலைப்பா வச்சிட்டேன் நல்லாயிருக்கா...


Ok Chennaittes enjoy the rain...hehehe

Tuesday, October 24, 2006

வரலாறு - ''மீண்டு''ம் ''தல''

நேத்து ஆல்பர்ட் தியேட்டர்ல்ல மழைக்கு ஒதுங்கலாம்ன்னு ஓதுங்குனா.. அங்கிட்டு பேனர்ல்ல அலையென எழுவோம்.. தலையென வாழ்வோம்ன்னு ஒரு பேனர்...

கவுண்ட்டர்க்குள்ள கையை நீட்டுனா டிக்கெட் கொடுத்துட்டாங்க... "அல்டிமேட் ஸ்டார்" அஜீத் நடிப்பில் கடைசியாக வெளிவந்த இரண்டு படங்கள் பரமசிவன், திருப்பதி பார்த்து நொந்த நிலையில் அதிகமான மனத்தைரியத்தோடு வரலாறு பார்க்க நண்பர்களோடு போயிருந்தேன்.

அரங்கிற்குள் நுழையும் முன் நம்மை ஈர்த்த விஷயஙக்ள். அஜீத்தின் மூன்று வேடங்கள், ரஹமானின் இசை, நாயகி அசின், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் ஜனரஞசகமான இயக்கம்.

அஜீத் ரசிகர்களின் ஆரவாரம் அடங்கிய வெகு நேரம் ஆகியும் கதையை நோக்கி படம் நகர்ந்த மாதிரி தெரியவில்லை. நகைச்சுவை என்ற பெயரில் ஆரம்பக் காட்சிகளில் வழியும் இரட்டை அர்த்த சம்பவங்களின் கோர்வையில் கதை மெல்ல நகர்கிறது. அதில் ஆங்காங்கு வேகத் தடைகளாய் பாடல் காட்சிகள் வேறு..

வீல் சேரே வாழ்க்கையாகிப் போன பாசமான 'காட்பாதர்' தந்தை அஜீத், பொறுப்புகளைச் சுமக்க விருப்பமின்றி இளமை.. இளமை எனக் கூத்து கட்டும் பணக்கார மகன் அஜீத்...அவர் நண்பர்கள், அவர் காதலியாக அசின், தந்தையின் விசுவாசமான் வேலையாள் பாண்டு எனக் கதை களம் முதல் பாதியில் விரிகிறது

மூன்றாவது அஜீத் எங்கே என வினா எழும் போது அதுவே இடைவேளை நெருங்குகையில் திரைக்கதையில் முடிச்சாய் விழுகினறது...

கடல்மீன்கள் என்றொரு பழைய கமல் படத்தில் பார்த்தக் கதை தான்...
தந்தை தாய்க்கு துரோகம் இழைத்து விட்டதாய் நினைத்து குரோதம் கொள்ளூம் வில்லன் மகனாய் இன்னொரு அஜீத்.. வில்லன் அஜீத் தந்தை - தம்பி வாழ்க்கையில் மர்ம புயலாய் வீசுகிறார். விபரீதங்களை விளைவிக்கிறார். தந்தையைக் கொல்ல வெறீயோடு அலைகிறார்.
இந்த நிலையில் காட்பாதரின் பிளாஷ் பேக் ஆரம்பம்...

நாட்டிய கலைஞராய் தந்தை அஜீத்... அவரின் பெண்மை கலந்த நளின நடைப்பாவஙகளை காரணம் காட்டி அஜீத்தை மணக்க மறுத்து அவமானபடுத்தும் அம்மா கனிகா..கல்யாணம் தடைப்பட.. அப்புறம் என்ன அஜீத் பொங்குகிறார்... தன் ஆண்மைக்கு சவால் விடும் கனிகாவை அவர் சம்மதமின்றி அம்மா ஆக்குகிறார். இரட்டைக் குழந்தைகள் பிறக்கினறன்... இதுக்கும் மேல என்ன நடந்து இருக்கும் என் தமிழ் திரைப்பட் ரசிகர்கள் நீங்கள் கட்டாயம் ஊகித்து விடுவீர்கள் எனப்தால் இத்தோடி கதையை விட்டு விடுகிறேன்.

கடைசியில் மசாலாத் தடவப் பட்ட காரணங்கள் சொல்லி இயக்குனர் காட்பாதர் குடும்பம் இணைய வழி செய்கிறார். இணையும் போது பாதர் காட் பாதர் ஆகிறார்.

அஜீத் தந்தை வேடத்தில் ஜொலிக்கிறார். அதுவும் நாட்டியக் கலைஞராய் கலைந்த தலைமுடியில் அவர் நடக்கும் அந்த நடைக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது.

வில்லன் அஜீத் நிறைவு. அந்த கோபப்பார்வை.. ஆவேச அசைவுகள் என வில்லன் பாத்திரத்தை மிகைப் படுத்ததாமல் செய்துள்ளார்.

அசினுக்கு அதிகம் வேலையில்லை. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் அவ்வளவே. FAIREVER QUEEN FOREVER AJITH என படத்தில் ரொமான்ஸ் ராகம் பாடுகிறார்.

ரமேஷ் கண்ணா, சுமன் ஷெட்டி ( 7ஜி ரெயின்போ காலனி, ஜெயம்) , ராஜீ சுந்தரம் குரூப் டான்சர்கள் என ஒரு பட்டாளமும், வழக்கமான வில்லன்கள் பொன்னம்பலம், மன்சூரலிகான் ஆகியோரும் நகைச்சுவைக் களத்தில் இறக்கிவிடப்பட்டிருந்தாலும் ஓரிரு காட்சிகளில் வரும் மனோகர் கைத்தட்டலை அள்ளிச் செல்கிறார்.

கனிகா கதையோடு வருகிறார். முதலில் ஆவேசமாய் இளமையாய் பின் பாதியில் அமைதியும் அவதியுமாய்.

இன்னிசை என்ற பாடல் அஜித்தின் நடிப்புக்கு 'ஓ' போட வைக்கிறது.
ரஹமான் இசையோடு ஒரு பாட்லும் பாடியிருக்கிறார்.

சுஜாதா, சந்தானபாரதி, ராஜேஷ், விஜயன் போன்றோரும் படத்தில் உண்டு.

ஆக மொத்தம் நம்மால் பொறுத்துக் கொள்ள முடிந்த அளவிலான பூச்சுற்றல்களோடு, சென்டிமெண்ட் கலவையைத் தூவி அஜித் நடிப்பில் ஒரு பார்க்கக் கூடிய பொழுதுபோக்கு படம் படைத்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.
மொத்தத்தில் அஜீத் ரசிகர்களுக்கு இது 'தல' தீபாவளி தான்...பின்னே தீபாவளிக்குத் திரைக்கு வந்த எல்லாப் படத்துல்லயும் இப்படமே முன்னணியாமே....

Monday, October 23, 2006

வல்லவன் - திரை விமர்சனம்

லூஸ் பெண்ணே ... லூஸ் பெண்ணே ... லூஸ் பையன் உம் மேலத் தான் லூஸாச் சுத்துறான்...

இந்தப் பாட்டு தான் கதை...

முதல் பாதியில் தன் நிஜக் காதலி (!!!??) நயன் தாரா மீது லூசாகி காதலாகி லூசுத்தனமான காதல்கவித்துவமான காரியங்களைச் செய்கிறார் சிம்பு. இரண்டாவது பாதியில் வரும் பிளாஷ் பேக்கில் இதே லூஸ் தனங்களைச் சிம்பு ரொம்பவே அதிகப்படியான சென்டிமென்ட் பூச்சுற்றல்களோடு தன் பள்ளிக் கூடக் காதலி ரிமா சென்னுடன் செய்கிறார்.

படம் துவங்கும் போது காதல் அனுபவமே இல்லாததுப் போல் பேசும் சிம்பு தன் எதிர்காலக் காதலி குறித்த கற்பனையுடன் இருப்பது போல் காட்சிகள் விரிகின்றன....நயனைக் கோயிலில் வழக்கமானத் தமிழ் பட பார்முலாவை மீறாமல் சந்திக்கும் சிம்பு அவர் மீது லூசாகிறார் (நோட் த் பாயிண்ட் இது காதல்ன்னு தப்பா நினைக்கக்கூடாது)

அப்புறம் என்ன சிம்பு பல்லன் என்ற பெயரின் கமலின் கல்யாணராமனாக வந்து நயன் பின்னால் லூசாக அலைகிறார். காதலுக்கு அழகு முக்கியம் இல்லை என்ற மகத்தானக் கருத்தைக் காட்டப் பல்லனாக வருகிறாராம். நயன் மனத்தில் செருப்புத் திருடி இடம் பிடிக்கும் சிம்பு.. நயனின் கட்டிலில் இரண்டு உம்மா கொடுத்து இடம் பிடிக்கிறார். இது எல்லாம் நடக்கும் வரை நயனுக்கு சிம்பு தான் விரிவுரையாளராக இருக்கும் (அதே கல்லூரியில் ஒரு மாணவன் தான் என்பது தெரியாதாம்.. அட நம்புங்கப்பா)

தெரிந்தவுடன் வயதில் தன்னை விட மூன்று வயது சின்னவனான சிம்புவை மணக்க மறுக்கிறார் நயன்.அப்புறம் லூஸ் பையன் தன் காதலியை நினைத்து பல அழகிய அரைகுறை உடை உடுத்திய மாடல் அழகிகளுடன் கவலையாக லூசு பெண்ணே பாட்டு பாடி நம்மையும் கவலைக் கொள்ளச் செய்கிறார்...

இடையில் சிம்புவின் நண்பர் கூட்டணி ஒன்று சிம்புவின் எல்லா லூசுத்தனங்களுக்கும் ஓ போடுவதற்காகவே படம் நெடுக வருகின்றன.

காதல் சந்த்யா, லொள்ளு சபா சந்தானம், சத்யன், ரேடியோ சிட்டி ஆர்.ஜே நண்டு.. அந்த நண்பர் பட்டாளத்தில் கொஞ்சம் வயதுமுதிர்ந்த அங்கிளாக எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ, சந்தானம் மற்றும் சேகரின் டைமிங் ஜோக்குகள் சில ரசிக்க படி உள்ளன.

இடைவேளைக்குப் பிறகு வரும் பிளாஷ் பேக்கில்,பள்ளிக்காலத்தில் சிம்புவுக்கு ரிமா சென் மீது காதல் என்றால் ரிமாவுக்கு சிம்பு மீது சைக்கோத் தனமானக் காதல்.இந்தக் காதல் ஒரு கட்டத்தில் முறிகிறது.

அப்புறம் என்ன நீங்க நினைக்கிறது சரி தான்.. சிம்பு படையப்பா ஆகிறார்.. ரிமா நீலாம்பரி ஆகிறார்..( அப்படின்னு நாம நினைச்சுகிட்டுப் படம் பார்க்கணும்) ரிமாவா இது... ஸ்கூல் பொண்ணாய் ரிமா வரும் குளோஸ் அப் காட்சிகளில் அது எதோ ஒரு முதியோர் கல்விக்கூடமோ என்ற சந்தேகம் நமக்குள் எழுவதை நம்மால் தடுக்கமுடியவில்லை. படத்துக்கு எவ்வளவோ செலவு பண்ண தேனப்பன் ரிமா மேக்கப்க்கும் அஞ்சு பத்து அதிகம் பார்க்காமல் செலவு பண்ணியிருக்கலாம். மேக்கபில்லாமல் நடிக்க தைரியம் வேணும் ரிமா.. ஆனா பார்க்க அதை விட தைரியம் அதிகம் வேணும்.

சிம்புவை அடைய ரிமா போடும் திட்டங்களைச் சிம்பு யாரையோ உசுப்பேற்றும் படி பிஞ்ச் டயலாக் எல்லாம் பேசி (ஆமாங்க இது சத்யமா பஞ்ச் டயலாக் இல்ல) சவால் விட்ட படி ஸ்டைலாக யார் மாதிரியோ ஸ்லோ மோஷனில் நடந்து தவிடு பொடி ஆக்குகிறார்.

டைட்டில் கார்டில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று போடுகிறார்கள் அந்த டைட்டிலுக்குத் தகுந்தப் படி பிஞ்ச்சோ பிஞ்ச் டயலாக்ஸ் தான் போங்க...

நான் கவனிச்ச ஒரு சில பிஞ்சிங் டயலாக்ஸ் இதோ

" நீ அம்பானி பொண்ணைக் கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகணும்ன்னு ஆசைப் படுறே..ஆனா நான் அந்த அம்பானியாவே ஆகணும்ன்னு ஆசைப் படுறேன்."

"நீ என்னையும் என் காதலையும் ஒதுக்கிட்டே.. தூக்கி எறிஞ்சுட்ட.. அதுக்காக நான் போலீஸ் கோர்ட்ன்னு தாடி விட்டுகிட்டு தண்ணியடிச்சுட்டுப் போய் நிப்பேன்னு நினைச்சியா... நான் உன்னைவிட அழகா,கும்ன்னு , ஜம்முன்னு ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி வாழ்ந்துக் காட்டுறேன் பாரு..."

இசை யுவன்.. பாடல்கள் எல்லாம் எப்.எம் ரேடியோக்களின் புண்ணியத்தில் ஏற்கனவே சூப்பர் ஹிட். (அந்த நம்பிக்கையிலே தானே படம் பார்க்கவே போனேன்). குறிப்பா டி.ஆர் பாடிய யம்மாடி.. ஆத்தாடி..பாடலில் திரையரங்கம் எழுந்து ஆடுகிறது. டி.ஆரும் இந்தப் பாட்டில் ஆடுகிறார்.

அந்நியன் பாணி முடிவு..ரிமா மனநலக் காப்பகம் செல்கிறார்...அங்கு மூன்று வருடங்கள் இருந்து திருந்தியதாய் பாலகுமாரன்(இவரே வசனம் மன நல மருத்துவராய் தலைக் காட்டுகிறார்.) ஆமோதிக்க திரும்புகிறார்...

ஆனால் அதே லூஸ் பெண்ணாக மீண்டும் சிம்புவைச் சந்திக்கிறார்.... TO BE CONTINUED
என்ற வார்த்தைகள் திரையில் தெரிய திரையரங்கின் வாசல் நோக்கி தலைதெறித்து ஓடிய மொத்த கும்பலில் நானும் ஒருத்தன்.

முதல் பாதியில் லூஸ் பையன் சிம்பு... லூஸ் பொண்ணு நயன் தாரா

அடுத்த பாதியில் லூஸ் பையன் சிம்பு... லூஸ் பொண்ணு ரிமா சென்.

படம் முடியும் போது படம் பார்த்தவங்க எல்லாரும்.... அட நீங்களே புரிஞ்சிக்கோங்க...

மன்மதனில் மனம் கவர்ந்த சிம்பு இதில் இயக்குனராகவும் நடிகராகவும் மிஸ்ஸிங்..

Monday, October 16, 2006

5 புள்ளி யாரோ ஒண்ணு

வணக்கம் மக்கா,

தலைப்பைப் படிச்சா எதாவ்து விளங்குதா.. நேத்து மாலை நம்ம சகா ஒருத்தன் வீக் என்டும் அதுவுமா விட்டத்தைப் பாத்துகிட்டு இருக்க இந்தா இந்தப் புக்கை ஒரு பொரட்டு பொரட்டுப் பாருன்னு சொல்லி கொடுத்த புக் டைட்டில் தான் மேலே நான் போட்டு இருக்கும் ஐந்து புள்ளி யாரோ ஒண்ணு. (FIVE POINT SOMEONE)

ஒரு இந்தியரால் எழுதப் பட்ட ஆங்கில நாவல். இந்தியாவின் தலைச்சிறந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனமாகக் கருதப்படும் ஐ.ஐ.டியில் என்னச் செய்யக்கூடாது என்ற ஒரு அடைமொழியொடு நாவல் துவங்குகிறது.

சாயங்காலம் திருவான்மியூர் பீச்சுக்கு போய் 96ல்ல ரஜினி அரசியலுக்கு வராதது சரியா தப்பான்ன்னு அலசி ஆராய்ஞ்சுட்டு வீட்டுக்கு வந்து நூடுல்ஸ் கிண்டி சாப்பிட்டுட்டு புத்தகத்தைப் பிரிக்கும் போது மணி சரியா இரவு 10.15புத்தகத்தின் அட்டையில் 270 பக்கங்களும் குதுகாலம் நிரம்பியவை என்ற வாசகம் வேறு உசுபேத்த சுவாரஸ்யமாப் புத்தகத்தைப் பிரிச்சுப் படிக்க ஆரம்பிச்சேன்.

ஐ.ஐ.டிக்குள் நுழையும் மூன்று மாணவர்கள் மற்றும் அவர்கள் நட்பின் பின்னணியில் கதை சொல்லப்படுகிறது. ஐ.ஐ.டியின் வாழ்க்கை முறை, பாடத்திட்டங்கள், பேராசிரியர்கள், வகுப்பறைகள், கேன்டீன், விடுதி என கதையாசிரியர் நம்மை கரம் பிடித்து ஐ.ஐ.டி வளாகத்திற்குள் உலாவ விடுகிறார்.

கதையில் வரும் ஹரி என்ற மாணவன் மூலமே கதை நிகழ்ச்சிகள் விவரிக்கப் படுவதாய் நாவல் செல்கிறது. ஹரி, ரேயான், அலோக் என்ற மூன்று மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட மாணவர்களின் மூலம் நானும் என் கல்லூரி வாழ்க்கையை மீண்டும் வாழ்ந்து பார்க்க வைத்தார் ஆசிரியர் என்று சொல்லலாம் போல் தோன்றுகிறது.

ரேயான் - பணக்கார வீட்டு பையன், இயல்பிலேயே தலைமைக் குணம் கொண்டவன்.
அலோக் - சாது, நடுத்தர குடும்பம். குடும்பக் கஷ்ட்டங்களுக்கு பாடப்புத்தகங்களை முழுங்கி அதன் மூலம் ஒரு தீர்வு காண கனவு காண்பவன்.
ஹரி - வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்பவன். ரேயான் போல் எதிலும் முன் நிற்க வேண்டும் என்று ஆசை அதிகம் கொண்டவன். தன்னால் அது முடியாது என்றும் நினைப்பவன்.

இவர்கள் மூவரின் நட்பு எப்படியெல்லாம் இவர்களை ஆட்டுவிக்கிறது என்று மெல்லிய நகைச்சுவை இழையோட ஆசிரியர் கதையை நகர்த்துகிறார்.ஹரியின் காதல் கிளைக் கதை, வேறு திசையில் கதையின் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.

ரேயான் மூலம் ஐ.ஐ.டியின் பாடத்திட்டங்களை நாவலாசிரியர் சாடுவதை நம்மால் பல இடங்களில் தெளிவாய் உணர முடிகிறது. மனிதனை மனிதனாய் வாழவிடாமல் அவனை ஒரு ஒரு யந்திரமாய் மாற்றி அவன் சுய கௌரவத்தைப் பறிக்கும் தற்கால கார்பரேட் உலகத் தத்துவங்களையும் நாவல் லேசாக உரசிப் பார்க்கிறது.ரேயான் ஐ.ஐ.டி, பாடத்திட்டங்கள் மனத்தளவில் மாணவனை ஊனப்படுத்துகிறது என குமுறுகிறான். மாணவனின் சுய சிந்தனைகளையும் கற்பனா சக்திகளும் ஊக்கப்படுத்துமாறு பாடத்திட்டம் அமையவில்லை என ஆதங்கப்படுகிறான். வெறும் மனப்பாடம் செய்து பாடங்களில் மார்க் வாங்கிக் குவிக்கும் போக்கு அவனை விரக்தியடைச் செய்கிறது.

அதை மாற்ற கல்லூரி வாழ்க்கையை வண்ணமயமாக மாற்ற பலப் புதிய திட்டங்கள் வகுக்கிறான். அத்திட்டங்களை நண்பர்கள் தற்காலிகமாகச் செயல்படுத்துவதும் பின்னர் கைவிடுவதும் என நாவல் போராடிக்காமல் நகர்கிறது.

முதல் செமஸ்டர் முடிவினில் (ஆமா செமஸ்டருக்கு தமிழில் என்ன?) நண்பர்கள் மூவரும் 5 புள்ளிகளில் நிற்கிறார்கள். ஐந்து புள்ளிகளுக்குச் சொந்தக்கார்கள் ஐ.ஐ.டி மொழியில் மற்ற மாணவர்களின் திறனுக்கு முன் குறைந்தவர்கள் என்ற அர்த்தப்படுபவர்க்ள். ( இதான் தாங்க தலைப்பின் விளக்கம்). இந்த முதல் சறுக்கல் நண்பர்களைப் பெரிதும் பாதிக்கிறது, பின்னர் அந்த சறுக்கலை அவர்கள் சகஜமாக எடுத்துக் கொண்டு வாழப் பயிலுகிறார்கள்.

ரேயானின் ஆராய்ச்சித் திறமை அவன் ஐந்து புள்ளி இனத்தைச் சார்ந்தவன் எனபதால் துறை தலைவரின் கவனம் மறுக்கப்படுவது,ரேயானின் சிறு வயது, தாய் தகப்பன் ஏக்கம் என ரேயானின் கிளைக் கதைகள் ஒரு பக்கம் நம் கவனம் கவர்கின்ற வண்ணம் இட்டுச் செல்லப்படுகிறது.

ஹரி துறைத் தலைவர் மகள் நேகாவோடு கொள்ளும் காமம் எட்டிப் பார்க்கும் காதல் கலகலப்பு எனறால். நேகா ரயிலில் அடிப்பட்டு இறந்த அண்ணன் மீது கொண்டிருக்கும் பாசம் ஒரு உணர்வு குவியல்.

அலோக் வீட்டு விஷயங்களான, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அப்பா, எப்போதும் கண்ணீர் வடிக்கும் பயலாஜி டீச்சர் அம்மா, கல்யாண வயதைத் தொட்டும் மாப்பிள்ளைக் கிடைக்காத அக்கா என பக்காச் சென்டிமென்ட் கலவை.

ஐ.ஐ.டி வாழ்க்கையை எப்படியாவ்து முடித்தால் போதும் என இருக்கும் நண்பர்களுக்கு ஐந்து புள்ளிகளைத் தாண்டியே ஆக வேண்டிய மறைமுகக் கட்டாயம் ஏற்படுகிறது.

ஹரிக்குத் தன் காதலும் காதலியும் கிடைக்க அதிக மார்க்குகள் தேவை.
ரேயானுக்கு தன் ஆராய்ச்சி கட்டுரைக் கவனிக்கப்பட மார்க்குகள் முக்கியமாகிறது.
ஆலோக்க்கு வேலை கிடைக்க மார்க்குகள் கட்டாயமாகிறது.

மார்க்குகளைக் குறி வைத்து அவர்கள் வகுக்கும் திட்டம் மேலும் விபரீதங்களை விளைவிக்கிறது. ஆலோக் தற்கொலைக்கே துணிகிறான்... மூவரின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் அளவுக்கு சம்பவங்கள் நடந்தேறுகின்றன. அதிலிருந்து அவர்களை மீட்க முயலும் ரேயானின் ஆதர்ச பேராசிரியர் வீராவின் முயற்சிகள் என்னவாகின்றன?
விபரீதங்களின் விளிம்பில் நின்று காதலியைக் காட்டிக்கொடுக்கும் ஹரியின் காதல் என்னவானது?

துறைத் தலைவர் செரியன் மகன் மரணம் ஒரு விபத்தா? போன்ற கேளிவிகளுக்குப் படு யாதார்த்தமாய் பதில்கள் சொல்லி நாவல் முடிகிறது.

மீண்டும் கல்லூரி போய் வந்த உணர்வு மிஞ்சியது.

கடிகாரம் பார்த்தேன் மணி 2 ஆயிருச்சு.... இழுத்துப் போர்த்திகிட்டுப் படுத்தேன்... ஒரு சில கணங்களுக்கு நாவலில் வந்த ஹரி, ரேயான், ஆலோக், நேகா, புரொபசர் வீரா, புரோபசர் செரியன், சசி தாபா என நாவலின் பாத்திரங்களின் ஞாபகம் மீண்டும் மீண்டும் என் எண்ணங்களைச் சுற்றி வந்துக் கொண்டிருந்தன..

PS: Five Point Someone is a novel wriiten by Chetan Bhagat.

Friday, October 13, 2006

லகே ரகோ கொத்ஸ் பாய்

வணக்கம் மக்கா,

பீலிங் பதிவுப் போட்டுட்டு பீலிங்காத் திரிஞ்சிகிட்டு இருந்த எனக்கு அமெரிக்காவில்ல இருந்து போன்.. அரக்க பரக்க போனை எடுத்தா என் தானைத் தலைவர் கொத்ஸ் லைன்ல்ல இருக்கார்.

என்னய்யா ஆச்சு உனக்கு.. ஏன் இப்படி அப்படின்னு அக்கறையா நமக்கு நாலு வார்த்தைச் சொன்னவர்..சரி சரி.. நமக்கு டக்குன்னு ஒரு படம் பண்ணனும் கதை ரெடி பண்ணு.. யாகூல்ல ஆன்லைன்ல்ல வர்றேன் கதையச் சொல்லுன்னுட்டு போயிட்டார்.நமக்கு கையும் ஓடல்ல காலும் ஓடல்ல.. மறுபடியும் நம்ம கலைத்தாகத்துக்கு தலைவரே பீர் ஊத்துறாரேன்னு பொங்கி வழிஞ்சுது நம்ம மனசு.

"சரா.. ஏலேய் சரா" அப்படின்னு நம்ம நண்பனுக்குப் போனைப் போட்டுக் கூப்ப்ட்டேன்..லைன்ல்ல வந்தவன் ஆனந்தக் கூத்தாடிட்டான்.. அடுத்த அரை மணி நேரத்துல்ல மெரீனாக் காந்தி சிலைக்குக் கீழே வானத்தைப் பாத்துகிட்டு கதை ஆலோசனையிலே நாங்க ஆழமா இறங்கிட்டோம்ய்யா.

"தேவ்.. ஒரு அருமையானக் கதை இருக்கு சொல்லுறேன் கேளு"
"சொல்லு"
"நம்ம கொத்ஸ்பாய் பழைய வண்ணாரப் பேட்டை ஏரியாவில்ல பெரிய தாதா. அவர் பேரு சொன்னாலே நம்ம மொத்தச் சென்னையும் நடுங்கும்"
" அப்புறம்.. அவருக்கு ஒரு சிஷ்ய புள்ள கூடவே வ்ர்றான்.. அவன் பேர் ப்யூஸ் கேரியர்"
"பேர் வித்தியாசமா இருக்கே"

"நம்ம தலைவர்க்கு காலையிலே எந்தரிச்சு ரெகுலராக தேன்மணம் எப் எம் கேக்குறது வழக்கம் அது ஒரு பிளாக் ரேடியோ.. அதுல்ல சங்வி அப்படின்னு ஒரு சூப்பர் பிகர் டெய்லி தன்னோட மெலடியான வாய்ஸ்ல்ல கவிதைச் சொல்லும்.. அதுல்ல இம்ப்ரஸ் ஆவுற நம்ம தலைவர் அந்தப் பொண்ணு எழுதற பிளாக்க்கு மட்டுமில்லாம அந்தப் பொண்ணுக்கே பயங்கர பேன் ஆகி லவ்ஸ் வூடுறார்"

"சூப்பர் ஸ்டோரிப்பா"

"அப்புறம் அந்தப் பொண்ணு ஒரு நாள் தன் பிளாக்ல்ல வெண்பா எழுதும் போட்டி வைக்குது.. ஜெயிக்கறவங்களுக்கு தன் கையலே வெண்பொங்கல் சாப்பிடுற வாய்ப்பும் தருவதாகச் சொல்லுது.. நம்மத் தல முடிவு பண்ணிடுறாரு அவர் வெண்பா எழுதி வெற்றி பெற்று விடுவதுன்னு"

"அப்புறம்"

"அவர் சிஷ்யன் ப்யூஸ் கேரியர்கிட்டே போன் போட்டு வெண்பான்னா என்னன்னு விசாரிக்கிறார். புதுசா வந்த பிகர் மினிஷா லம்பா சிஸ்டரா இருந்தாலும் இருக்கும் தலை.. ஆனா எப்படியும் எல்லா விவரங்களையும் விசாரித்துச் சொல்லுவதாகச் சொல்கிறான்"

"ம்ம்ம் அதுக்குப் பிறகு விசாரிக்கிறானா?"

"ஆங் பயங்கரமா விசாரிச்சு அது எதோ தமிழ் டிபார்ட்மென்ட் சம்பந்தப் பட்ட மேட்டர்ன்னு சொல்லுறான்.

தலை..பெரிசா விஷயம் ஒண்ணுமில்ல மாங்கா, தேங்கான்னு சிம்பிள் மேட்டர் தான். உடனே நம்ம தலை மாங்கா, தேங்கான்னா கோயம்பேடு மார்க்கெட்ல்ல கிடைக்குமான்னு கேட்க..அதுப் பத்தியும் விசார்ப்பதாச் சொல்லுகிறான் ப்யூஸ் கேரியர்"

"அப்புறம் எப்படி வெண்பா எழுதுறாங்க?"

"இங்கே தான் மேட்டரே.. நம்ம ப்யூஸ் கேரியர் இந்தப் பிளாக்ல்ல எல்லாம் வெண்பா எழுதுற எஸ்.கே, வெண்பா வாத்தி மாதிரி நம்ம மக்களை எல்லாம் கடத்திட்டு வந்து நம்ம தலக் கொதஸ்க்காக வெண்பா எழுத வைக்கிறான்"

"ஆகா.. நல்லாயிருக்கு சரா மேலேப் போ"

"அப்புறம் தலைவர் வெண்பா போட்டியிலே ஜெயிச்சுப் பரிசு வாங்கப் போறார்..அங்கே ஒரு பாட்டு போடுறோம்.. நம்ம தளபதி சிபி வழக்கம் போல நல்ல வரிகளை ரெடி பண்ணிடுவார்..அப்புறம் தலைவர் பிகர் கையால வெண்பொங்கல் சாப்பிடுறார்.. அப்போ அந்தப் பிகர் தலைவர்கிட்டெ வெண்பாப் பத்தி நிறைய கேள்வி கேக்குது"

"தலிவர் மாட்டிக்கிறாரா?"

"இல்ல தலிவர் செமையா டபாய்க்கிறார். உம்பா உம்பா அப்படின்னு பஞ்சதந்திரம் பாடு எல்லாம் பாடிக் கலக்குறார். அவரை ஒரு வெண்பா பாடச் சொல்லி பிகர் பீலிங்காக் கேட்க.. தலைவர் அதை விட பீலிங்கா அன்னிக்குத் தான் அவங்க வெண்பாச் சொல்லிக்கொடுத்த குருவோட மாமியார் மண்டையப் போட்ட நாள் அதுன்னால அவர் வெண்பா பாட முடியாதுன்னு எஸ் ஆயிடுரார்"

"அப்பாடா மாட்டிக்குவாரோன்னு பயந்துட்டேன்.. தலீவர் மாட்டுன்னா ரசிகர்கள் செம கடுப்பாயிடுவாங்க"

"அது தெரியும்ண்ணா.. அப்புறமும் உடாம அந்தப் பொண்ணு தலைவரை வெண்பா எப்போப் பாடுவீங்கன்னு கேக்க தலைவர் வழி இல்லாம சனிக்கிழமை அந்த்ப் பொண்ணு பிளாக்ல்ல வந்துப் பாடுறதா ஒத்துக்கிடுறார்"

"இது கஷட்டம்டா சாமி.."

"ப்யூஸ் கேரியர் என்ன என்னமோ கொடுக்கிறான்.. எதுவும் ஓர்க் அவுட் ஆகாது போகவே தலைவர் நேரா தேவனேயபாவாணர் லைப்ரரிக்குப் போய் இரவு பகலாக உக்காந்து வெண்பா படிக்கிறார். அப்போ கவிச்சக்கரவர்த்தி கம்பர் தலைவ்ருக்குத் தரிசனம் தர்றார்.. அவர் வெண்பாவின் மகிமையை தற்காலம் எப்படி மறந்துப் போச்சின்னு தலைகிட்ட சொல்லுறார்.. இங்கிட்டு கதை டேக் ஆப் ஆகுது"

"ஆகா இதெல்லாம் ரைட்.. நம்ம தலைவர்க்கு பைட் அவர் ரெகுலர் ஸ்டைல் பஞ்ச் டயலாக், வில்லன், இந்த் மேட்டர் எல்லாம் இல்லைன்னா எப்படி?"

""இருக்குதுண்ணா மாயன்சிங் அப்படின்னு ஒரு பெரிய பிளாகர்.. கிட்டத்தட்ட ஒரு 500 பிளாக், 1256 பிளாகர் ஐடி, அப்புறம் அவருக்குன்னு ஒரு 3456 அனானி மன்றங்கள் அப்படின்னு பெரிய கை அவர்.. நட்பு காரணமா நம்ம தலைவர் மாயன்சிங் எழுதுற வெத்துப் பதிவுக்கெல்லாம் 1000 - 5000ன்னு பின்னூட்டம் போட்டு வளர்த்துவிடுறார். மாயன் சிங்க்கு எதிரா எழுதுறவங்க பதிவுக்கு எல்லாம் வ்ர்ற பின்னூட்டத்தை மேஜிக் மாடுரேஷன் முறையிலே காலி பண்ணி கலங்க வைக்கிறார்."

"ம்ம் அப்புறம்.. "

"ஒரு கட்டத்துல்ல மாயன் சிங் தலைவர் லவ்ஸ் பண்ற பொண்ணு பிளாக்கையே காலி பண்ண்ச் சொல்லித் தலைவர்கிட்டேச் சொல்ல.. அப்புறம் தலையோட சிஷ்யனை வச்சே அந்த பிளாககைக் காலி பண்ண.. தலைவருக்கும் மாயன்சிங்க்கும் முட்டிக்குது"

"இங்கே பைட் எல்லாம் வைக்கிறோம்.. அந்தப் பொண்ணுகிட்ட லவ்ஸ் சொல்ல தலைவர் அந்தப் பொன்ணு அப்புறம் அவங்கச் சொந்தங்களை எல்லாம் கூட்டிட்டு கிஷ்கிந்தாப் போறார்.. அங்கே ஒரு பாட்டு நம்ம கவிஞர் நவீன்பிரகாஷ் ப்ரியன் கிட்டே சொன்னா ஆளுக்கு ஒரு நல்ல காதல் பாட்டு போட்டுருவாங்க,,, தலைவர் காதலைச் சொல்லருதுக்குள்ளே பெரிய பிரச்சனை வந்து வில்லன் கூட மோதல் ஆயிடுது"

"ம்ம்ம் அப்புறம் என்ன நடக்குது?"

" இங்கே தான் புதுமை.. தலைவர் கோபமாப் போய் வில்லனைப் புரட்ட்ப் போக.. கம்பர் வர்றார்.. வெண்பா வழியிலே எதுக்கும் தீர்வு உண்டுன்னு சொல்லுறார். அதாவது தலைவர் வழ்க்கமாப் போடுற பின்னூட்டத்தை எல்லாம் சுத்த தமிழ் வெண்பாக்கள்ல்ல போடச் சொல்லுறார்"

"ம்ம்ம்"

"தலைவர் அப்படியே செய்யுறார்,, தனியா வெண்பாக்குன்னு பதிவு தொடங்கி அங்கே வெண்பாப் பயிற்சி கொடுக்குறார்.. அவ்ர் கிட்ட் பயிற்சி எடுத்தவங்க எல்லாம் மாயன் சிங் பிளாக்ல்ல போய் வெண்பாப் பின்னூட்டமாப் போட்டுத் தாக்குறாங்க...தமிழேத் தெரியாத மாயன் சிங் இதுன்னால டென்ஷன் ஆகுறான்"

"தலைக்கு வெண்பாவில்ல பஞ்ச் டயலாக் எல்லாம் இருக்கா?"

"நல்லாக் கேட்டீங்க போங்க.. மாயன் சிங் கடுப்பாகி கொத்ஸ் அடிக்க ஆள் அனுப்புறான்..அவங்களை நம்ம தலைவர் வெண்பாவில்ல அடி அடின்னு அடிச்சு துவைக்கிறார். அப்புறம் என்ன தியேட்டர்ல்ல விசில் பறக்குது"

"கிளைமேக்ஸ் என்ன.. ?"

"அது மட்டும் சஸ்பென்ஸ் இப்போதைக்கு இந்தக் கதையை டெவலப் பண்ணி தலைவர்கிட்டச் சொல்லுங்க..அவர் ஓ,கே சொன்னா மேலே தாக்கிடலாம்"

"ம்ம் சரி.. இந்த ப்யூஸ் கேரியர், மாயன் சிங் , தலைவர் டாவடிக்கற பொண்ணு ரோல் இதுக்கு எல்லாம் யாரைப் போடலாம்ன்னு யோசிக்கிறேன்"

" அண்ணே ப்யூஸ் கேரிய்ர் ரோல் நான் பண்ணட்டுமா.. நல்லா நடிப்பேனண்ணா"

சராவை ஒரு ஆங்கிளாய் பார்த்துச் சிரித்தேன்.. தலைவர் ஆன்லைன் வருவாரா எனக் காத்திருக்கிறேன்.

இப்போதைக்கு இதுவரை நாங்கள் யோசித்தக் கதை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.

தலைவரின் அன்பு ரசிகர்கள் கதையை மேலும் மெருகேற்ற ஐடியாக்களை அள்ளிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஆங்.. படம் பேர் அதான்ங்க தமிழ் பெயரா வைக்கணும்ன்னு யோசிச்சிகிட்டு இருக்கோம் அதுக்கும் ஐடியா கொடுங்களேன் ப்ளீஸ்

Wednesday, October 11, 2006

பார்த்தீபா ஓ பார்த்தீபா

வணக்கம் மக்கா,

உள்ளாட்சித் தேர்த்ல் மேடையிலே ஒரு கழகம் இன்னொரு கழகத்தைத் திட்ட இன்னோரு கழகம் வந்த இன்னொரு கழகத்தைத் திட்ட இதைப் பத்திரிக்கைக்குப் பத்திரிக்கைப் போட்டோவோடப் போட்டுத் தாக்க.. இப்போவெல்லாம் மனசுக் கஷ்ட்டமாப் போச்சுன்னா அப்படியே நம்ம தமிழ் பேப்பர் எடுத்துப் படிக்க ஆரம்பிச்சுருவேன்.. அப்புறம் என்ன வடிவேல் காமெடி சீன் பார்த்தா மாதிரி மனசும் லேசாயிடும் அடுத்த வேலையும் நமக்கு சுளுவா ஓடும்...

இந்த வாரம் பேப்பரைப் பொரட்டும் போது படிச்ச மேட்டர் மனசை ஆக்ஸா பிளேட் வச்சு கீறுன மாதிரி வலியெடுத்துப் போச்சுங்க.. யார் கிட்ட என் வலியைச் சொல்லுவேன்.. இங்கன நம்ம கச்சேரியை விட்டா வேற வழி.

எல்லாம் இந்த தீவிரவாத மேட்டர் தான்.. அட தீபாவளிக்கு என்னப் படம் ரிலிஸ் ஆகும்ன்னு பார்க்கலாம்ன்னு பேப்பரைப் பொரட்டுன்னா.. அங்கிட்டு பாம் போட்டான்க.இங்கிட்டு ராக்கெட் விட்டானுங்கன்னு செய்தி முழுக்க புகை மண்டலமாவே இல்ல இருக்கு.. இது என்னடா கலாட்டான்னு அந்தச் செய்தியைப் படிக்க ஆரம்பிச்சேன்..தோடா தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரம் கூட இல்ல.. அதுக்குள்ளே காஷ்மீர் பார்ட்ர்ல்ல வெடி வெடிக்க ஆரம்பிச்சுட்டான்வ..

எல்லைத் தாண்டும் பயங்கரவாதிகள் அப்புறம் எல்லையை நோண்டும் தீராவியாதிகள்ன்னு படிச்சுச் சலிச்சு போன மேட்டர் தான். இருந்தாலும் படிச்சேன்...
காரணம் பார்த்தீபன்...

பார்த்தீபன் எனக்கு உறவுக்காரன் இல்ல.. சினேகிதம் கூட கிடையாது.. அவன் யாரோ எவ்னோ அப்புறம் ஏன் அவ்வள்வு அக்கரைன்னு யோசிக்கிறேன்... இன்னும் பதில் தெரியல்ல...

பார்த்தீபன் 23 வயசு பையன்..சென்னைப் பம்மலைச் சேர்ந்த இளைஞன். அவன் தந்தை இந்திய ராணுவத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். இந்த இளைஞனும் இப்போது தான் பயிற்சி முடித்து ராணுவப் பணியில் சேர்ந்து இருக்கிறான். இப்போது காஷ்மீர் தீவிரவாதிகளுடன் நடைப்பெற்ற போரில் தன்னுயிரை இழந்து விட்டான். அவ்வளவு தான் செய்தி..

இதைப் படிச்சிட்டுத் தான் எனக்கு ஒரே பிலீங்க்ஸ்...

தினம் தினம் உலகின் பல்வேறு பகுதிகளில் எத்தனையோ அப்பாவிகளும் ராணுவவீரர்களும் இந்த தீராத வியாதியாம் தீவிரவாதத்தால் தாக்கப்பட்டு இறந்துக் கொண்டுதானிருக்கின்றனர்.
அப்போது எல்லாம்,
ஒரு சின்ன அச்சோ..
கொஞசம் அதிகப்பட்சமாய் ஒரு அய்யோ..
இன்னும் மிஞ்சிப்போனால் சில நிமிட வருத்தம்.. அவ்வளவுத் தான் தோன்றியிருக்கிறது என்னிடம்...

இந்த பார்த்தீபன் விஷ்யத்தில் மட்டும் பதிவுப் போட்டும் புலம்பும் அளவிற்கு என்னாயிற்று என்று இன்னும் யோசிக்கிறேன்..
அவன் என் சென்னைப் பட்டணத்தைச் சேர்ந்தவன் என்பதாலா?
பம்மல் எனக்குத் தெரிந்த ஊர் என்பதாலா?

தீவிரவாத்தின் வலி எனக்கு வெகு அருகினில் உணரப்படும் போது எனக்கு இன்னும் அதிகமாய் வலிக்கிறது.. அது தான் காரணம்..

முன்னொரு முறை திருச்சி சரவணனின் மரணம் என்னைத் தாக்கியது...இப்போது பார்த்தீபன்...

எங்கிட்டோ...
எவனோ....
எப்படியோ...
எக்கேடு நடந்தா எனக்கென்ன?
இந்த நினைப்பு என்னை என்னிடமே தலைக்குனிந்து நிற்க செய்கிறது...

அட வேற என்னச் சொல்ல ஒரு ரெண்டு மூணு நாளு அந்த பயலை நினைச்சு மனசுக் கஷ்ட்டப்படும் அப்புறம் நம்ம மனசு கழட்டி வச்ச எருமை மாட்டு தோல் சட்டையை மாட்டிகிட்டு எல்லாத்தையும் மறந்துட்டு நம்ம பொழைப்பைப் பாக்க கிளம்பத் தான் போறேன்.. அலுவலகத்திலேப் பொட்டியத் தட்டிட்டு மேலதிகாரிசொல்லுறதைக் கேட்டுகிட்டு.. ஒண்ணாம் தேதியானா ஏ.டி.எம் வாசல்ல கையிலே கார்டை வச்சிகிட்டு தேவுடு காத்துகிட்டு.. இது தானே நம்ம வாழ்க்கை.. இதுல்ல ஏன் இந்த வருத்தம்.. நாட்டைப் பத்திய் கவலை கத்திரிக்கா எல்லாம்... (கேக்குது கேக்குது கேட்கிற கேள்வி எல்லாம் கேக்குது) ஆனா என்னச் செய்வேன் முடியல்லயே.. எங்காவது இப்படி எதாவது நடந்தா ஓரமா உக்காந்து ஒப்பாரி வைக்கவாது விடுங்கப்பா

இந்தப் பதிவின் மூலம் பார்த்தீபா.... உன் வீரத்திற்கும் தியாகத்திற்கும் நான் தலை வணங்குகிறேன்..
உன் இழப்பைத் தாங்கிக் கொள்ள உன் குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டிக்கொள்கிறேன்.

Tuesday, October 03, 2006

வரி விலக்கு

வணக்கம் மக்கா,
உழைப்பாளி இல்லாத நாடு தான் இங்கே இல்லையேயாஅவன் உழைப்பாலே பிழைக்காதப் பேர் தான் இங்கே இல்லையேயா.. எதோ ஒரு பண்பலைவரிசையில் தலீவர் பாட்டுக் கேட்டுகிட்டு இருந்தேன்.

அப்போ நம்ம பங்காளி ராஜா ( கொங்கு ராசா இல்லீங்க) சனிக்கிழமையாச்சே.. பய வேற பேச்சு இலர் வாழ்கை மறுபடியும் வாழ்றானேன்னு ஒரு வித வருத்தமானப் பாசத்தோடு நம்மளைப் பாக்க வந்து இருந்தான்.

ஐ.நா சபை ஷசி தரூர் ஆரம்பிச்சு அதிமுக சசி சித்தி ( அவக அம்மான்னா இவக சித்தி தானே) வரைக்கும் ரெண்டு பேரும் மோட்டுவளை இடிஞ்சுத் தகர அள்வுக்குப் பேசிகிட்டு இருந்தோம். அப்போ நம்ம பங்காளி அவனுக்கு சென்னையிலே பெரிய கம்பெனியிலே ஒரு நல்ல தொகையிலே ஒரு வேலைக் கிடைச்சுருக்குன்னு அவ்வளவு சுரத்தையே இல்லாமச் சொன்னான்.

அட மாப்பூ இது பீரைப் பொங்க வச்சு சிக்குன கோழியை வறுத்து தலைகீழாத் தொங்கவிட்டுக் கொண்டாட வேண்டிய மேட்டர் ஆச்சே இப்படி கொசு கடிப்பட்டு சிக்குன் குனியா வருமான்னு தவிக்கறவன் மாதிரி சொல்லுற?

"அப்புறம் என்னப் பண்றது.. சம்பளம் அதிகம் தான். ஆனா எவ்வளவு அதிகம் வருதோ அம்புட்டையும் வரியாக் கட்டி வறுமைக் கோட்டுக்குக் கீழேப் போயிருவேன் போலிருக்கே"

"அடக் கிரகம் புடிச்சவனே வரி கட்டுறது எவ்வளவு நல்ல விஷயம் தெரியுமா.. நாம கட்டுற வரி இந்த நாட்டுக்கே உயிர் மாதிரி... நாட்டோட வளர்ச்சிக்கு ஊட்டம் மாதிரி.. வரி தாண்டா நம்ம நாட்டையே வாழ வைக்குது புரியுதா?"

பங்கு நான் பேசுனதைக் கேட்டு விழி பிதுங்கிட்டான். ஒரு நிமிசம் என்னையே மேலும் கீழும் பார்த்துட்டுக் கேட்டான்.
"ஆமா வர்ற உள்ளாட்சித் தேர்தல்ல அம்மா கட்சியிலே இல்ல திராவிடர் கேப்டன் கட்சியிலே நிக்கப் போறீயா என்ன?"

"ஏன் அப்படி கேக்குற?.. நான் அரசியல் பேசவே இல்லியேடா"

"அட என்ன மாப்பூ... முதல்வர் கலைஞரை இம்புட்டுத் தாக்கிப் பேசிபுட்டு இப்படி ஜகா வாங்குற?"

"நான் எப்போடா கலைஞரைத் தாக்குனேன்?"

"நீ தாண்டா செமத் தாக்கு தாக்குன!"

"டேய் இங்கிட்டு கலைஞர் விசுவாசிக நிறைய பேர் படிக்க வருவாங்க.. வம்பு பண்ணி வச்சிட்டுப் போயிராதடா"

"மாப்பூ... நீ என்னச் சொன்ன வரி நாட்டுக்கு உயிர், வளர்ச்சி அப்புறம் நாட்டையே வாழ வைக்குதுன்னு.. இப்போ நம்ம முதல்வர் கலைஞர் எப்படி வேணும்ன்னாலும் படம் எடுத்துட்டு தலைப்பை மட்டும் தமிழ்ல்ல வச்சுட்டா அதுக்கு வரி விலக்குன்னு சொல்லியிருக்காரே அப்படின்னு நாட்டோட உயிரை அவர் எடுத்துட்டார்ங்கற.. நாட்டோட வளர்ச்சியைத் தடுத்துட்டார்ன்னு நீ சொல்லுற.. நாட்டோட வாழ்வையே குலைச்சுட்டார்ன்னு நீ குற்றம் சாட்டுற.. அப்படித் தானே"

"ஆகாக் கிளம்பிட்டான்யா. இனி பூ வச்சு பொட்டு வைக்காம போக மாட்டான் போலிருக்கே"

"என்ன முணுமுணுப்பு"

"மச்சான்.. கலைஞர் தமிழினத் தலைவர்டா, தமிழை வளர்க்கறதை அவர் தன் வாழ் நாள் கட்மையாச் செஞ்சுகிட்டு இருக்கார்.. இப்போ அதனாலத் தான் படமெல்லாம் தமிழ் பெயர் இருந்தா தமிழ் வளரும்ன்னு அப்படிச் சொல்லியிருக்கார்டா"

"அதுன்னால நாட்டுக்கு எவ்வளவு நஷ்ட்டம் தெரியுமா?"

"அது நஷ்ட்டம் இல்ல்டா தமிழ் வளர்க்க நாம் கொடுக்கும் விலை.."

"ஆக எம்டன் மகன் எம் மகன் ஆனாதல்ல... ஜில்லென்ற ஒரு காதல் சில்லுன்னு ஒரு காதல் ஆனாதால்ல... அப்புறம் காட்பாதர் வரலாறு அப்படின்னு மாறுனதால்ல.. தமிழ் வளர்ந்துச்சுன்னு சொல்லுற?"

பங்காளி கேட்டக் கேள்விக்கு என்னப் பதில் சொல்லுறதுன்னு யோசிச்சக் கேப்பல்ல அடுத்தக் கேள்விய வேற கேட்டான்.

"அப்ப்டின்னா.. நான் வேலைப் பாக்குற என் கம்பெனியும் தன் பெயரைத் தமிழ்ல்ல மாத்திகிட்டா அங்கே வேலைப் பாக்குற எல்லாருக்கும் கலைஞர் வரிவிலக்குக் கொடுப்பார்ன்னு சொல்லுற?"

"ஆகா.. இப்படி வேற கிளம்பியிருக்கீங்களா? ஆமா.. இன்போசிஸ்,விப்ரோ, டி.சி.எஸ், ஹெச்.சி.எல், ஐ பிளைக்ஸ் இதுக்கெல்லாம் தமிழ் பெயரா.. என் சின்ன மூளைக்கு தமிழ் படுத்துதல் ரொம்பக் கஷ்ட்டம்டா சாமி... ப்ளீஸ் ஹெல்ப்....

"மச்சான் இன்னொருக் கேள்வி..." பங்கு ஆரம்பிச்சான்.

"போதும் நான் உள்ளாட்சித் தேர்தல் அன்னிக்கு ஊரை விட்டேப் போயிடுறேன்.. என்னிய விட்டுடு.."

Friday, September 29, 2006

பயணங்கள் முடிவதில்லை - 1

வணக்கம்ங்கோ சிறு வயசுல்ல இருந்தே நமக்கு ஊர் சுத்தணும்ன்னு ரொம்ப ஆசைங்க.. அதுல்லயும் நாம படிச்ச இடங்களைப் போய் பாக்கறதுல்ல ஒரு தனி விருப்பம்.

ஜாலியான் வாலா பாக் பள்ளிக்கொடத்துல்ல வாத்தியார் பாடமாச் சொன்னப்போவும் சரி பின்னாடி எதோ டி.வி.யிலே பட்மாப பார்த்தப்போவும் சரி அந்த இடமும் அங்கே நடந்த நிகழ்ச்சியும் நம்ம மனசுல்ல ஆழ்மாப் பதிஞ்சுப் போச்சு.. அப்படி நான் பார்க்க ஆசைப் பட்ட ஜாலியான் வாலா பாகை இந்த் மாதம் நணபன் ஒருவன் பஞ்சாப் போலாம்டான்னு போட்ட பிளான் புண்ணியத்துல்ல பார்க முடிஞ்சது.

A PICTURE IS WORTH THOUSAND WORDS அப்படின்னு சொல்லுவாங்க.. ஜாலியான்வாலா பாக்ல்ல நான் எடுத்த புகைப்படஙக்ள் சிலவற்றை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ளது ஜாலியன் வாலா பாக். நம்ம திருவல்லிக்கேணி கடைவீதி மாதிரி ஒரு கூட்ட நெரிசலான வீதியில் இருக்குது இந்த இடம். இங்கிருந்து கூப்பிடு தூரத்தில் சீக்கியர்களின் புனிதத் தலமானப் பொற்கோயில் அமைந்துள்ளது.











இங்கேப் பாக்குறீங்களே இந்த சந்து வழியாத் தான் டயர் தன் காட்டுக் கூட்டத்தை ஓட்டிகிட்டு வந்து இருக்கான்.











இங்கிருந்து தான் அப்பாவிப் பொதுமக்களை நோக்கி வெறித்தனமானத் தூப்பாக்கி தாக்குதல் நடத்தி இருக்கிறான் டயர். ( இந்த்ச் செயலுக்கு ஆங்கில அரசு அவனுக்கு மெடல் வேறு குத்தியதாம்)











தியாகிகளின் உயிருக்கு குறி வைக்கப் பட்ட தோட்டாக்கள் அதை விடுத்து சுவற்றில் போய தாக்கி நிற்கின்றன. நல்லாப் பாருங்க குண்டுகள் பாயந்த இடங்கள் பச்சை வண்ண்ச் சதுரங்களீல் குறிக்கப்பட்டுள்ளன.













உயிர் காக்க இங்கு தான் 200க்கும் மேற்பட்ட அப்பாவிகள் குதித்துள்ளனர். இப்போதும் அந்த மரண ஓலங்கள் அந்தக் கிணற்றுக்குள் லேசாக எதிரொலிக்கின்றன.












ஜாலியான் வாலாபாக் தற்சமயம் ஒரு அழகிய பூங்கா வடிவம் கொண்டுள்ளது. ஒரு பொது அமைப்பு அதை பராமரித்து வருகிறது. அந்த இடத்தில் ஒரு அழகிய அமைதி குடிக்கொண்டுளளது.











மேலே பாக்குறீங்களே அது ஜாலியான் வாலாபாக் ப்டுகொலைகளுக்கு மௌனமாகச் சாட்சிச் சொல்லும் சுவர். அந்த சுவத்துல்ல போய்

"சும்மாவா வந்தது சுதந்திரம்"

அப்படின்னு த்மிழ்ல்ல எழுதுணும்ன்னு தோணுச்சு...

பயணம் தொடரும்...

Wednesday, September 27, 2006

பாராட்டுறாங்கய்யா பாராட்டுறாங்க

தோடா என்ன இது?




















கலர் டிவியிலே காட்டுவாங்களா?










அதோ பார் தெரியுதா ரெண்டு ஏக்கரா? அதைக் கொடுக்கறது யாருங்க... தலைவர் திமிங்கலம் தானுங்க...










2 ரூபாய் அரிசி சோறு தின்னியா.. வெயிட் தாங்கல்ல யம்மாடி










ஆகா... அப்படிப் போடு அள்ளி போடு.. ஆட்டம் போடு










மறந்துடாதீங்க... போட்ட ஆட்டம் எதையும் மறந்துடாதீங்க... எல்லாம் உங்களுக்காகத் தான் சாமியோவ்















எல்லாரும் சுத்துப் போட்டு என்னய்யா பண்றீங்க?
நோ டென்ஷன்.. தலைவரைப் பாராட்டுறோம்ய்யா... பாராட்டுறோம்ய்யா...

படங்கள் நன்றி தினகரன்


Monday, September 25, 2006

வசூல்ராஜா பார்ட் - 2

வணக்கம் மக்கா..

'லகே ரஹோ முன்னாபாய்' படம் பார்த்து ஒரு வாரம் ஆச்சுங்க...
சில வருஷங்களுக்கு முன்னாடி திரையில் மும்பையின் தாதாவா டாக்டருக்குப் படிக்க அவர் அடித்த லூட்டிகளால் இந்தி சினிமா ரசிகர்களின் கவனத்தைத் தன் வசமாக்கினார் இந்த முன்னா பாய். படம் முன்னாபாய் MBBS, இந்தியாவின் பல வட்டார மொழிகளிலும் அந்தப் படம் ரீ-மேக் செய்யப்பட்டு கல்லாக்கள் களைக் கட்டியது உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம். தமிழில் கமல்ஹாசனும், தெலுங்கில் சிரஞ்சீவியும் நடித்திருந்தனர்.

2006 இல் அதே மும்பை தாதா மீண்டும் தன் சகா சர்க்யூட்டோடு திரையுலகைக் கலக்கக் கிளம்பியிருக்கிறார் எனத் த்கவல் கிடைத்ததும் போனத் தடவை செம தமாஷ் பண்ணாங்களே இந்தத் தடவை என்னப் பண்ணுவாங்களோன்னு ஒரு ஆர்வம் நம்க்குள்ளே கிளம்பிருச்சு. சென்னையிலே மொத்தம் மூணு தியேட்டர்ல்ல ரிலீஸ். எங்கேயும் டிக்கெட் இல்ல.. பிளாக்குக்கு நமக்கு வசதி பத்தாது சாமி. அதான் காத்திருந்து பார்ப்போம்ன்னு முடிவு பண்ணதுல்ல படத்தை மூணாவது வாரம் அதுவும் வட இந்தியாவுக்கு பயணம் போகும் போது குர்கான்ல்ல தான் பாக்க முடிஞ்சது.. ( இங்கிட்டே பிளாக் கொடுத்துப் பார்த்திருக்கலாம். )

படம் பாக்கறதுக்கு முன்னாடி படத்தைப் பத்தி விசாரிச்ச வரையிலே படம் காந்தியப் பத்திய மேட்டர்ன்னு காதுக்குக் கிடைச்சத் தகவல் சொல்லிச்சு. "ஹே ராம்", "மேன்னே காந்தி கோ நஹி மாரா" டைப்ல்ல நம்ம இந்தியாவின் டேடியப் பத்தி பக்கா சீரியசா இல்ல படம் எடுப்பாயங்க.. நம்ம தாதாவுக்கும் தாத்தாவுக்கும் கொஞ்சம் கூட டேலி ஆவாதேன்னு யோசனையாத் தான் படம் பார்க்கப் போனேன்.

சஞ்சய் தத் (முன்னாபாய்), அர்ஷத் வார்சி (சர்க்யூட்) அதே கதாபாத்திரங்களில். வித்யா பாலன் தான் கதாநாயகி ( யார்ன்னு தெரியல்லன்னு சொல்லக் கூடாது படம் போட்டுருக்கோம் பாருங்க). முந்தையப் படத்துல்ல மெடிக்கல் காலேஜ் டீனா வந்த பொம்மன் இரானி இதுல்ல லக்கி சிங் அப்படிங்கற கேரக்டர்ல்ல வர்றாரு. அந்தப் படம் மாதிரியே இதுல்லயும் முன்னாவுக்கும் இவருக்கும் ஏழாம் பொருத்தம் தான்.

அப்புறம் இன்னோரு முக்கிய கேரக்டரா... நாம எல்லாம் போட்டோ அப்புறம் நம்ம மெரீனாப் பீச் ஐ.ஜி ஆபிஸ்க்கு எதிரே சிலையா நிக்குறாரே அவர் நடிச்சுருக்கார். ( சிவாஜி சிலை இல்லீங்க... இது கொஞ்சம் பழைய சிலை)

முன்னாவுக்கு ரேடியோ ஜாக்கி ஜான்வி மேல லவ்ஸ்ன்னா அப்படி ஒரு லவ்ஸ்.. இந்த நேரத்துல்ல ரேடியோவில்ல நம்ம நேஷன் டேடி பத்தி பேஷ்னாப் போட்டி நடத்துறாங்க.. அதுல்ல கெலிச்சா அம்மணியை ரேடியோ ஸ்டேஷன்ல்ல மீட் பண்ணி ரேடியோவிலே பேச வாய்ப்புன்னு சொல்லிடுறாங்க. நம்ம தாதாவும் சர்க்யூட்டும் பழைய டெக்னிக் பாலோ பண்ணி.. காந்தி பத்தி விவரம் தெரிஞ்சவங்களைப் பக்கத்துல்ல உக்கார வச்சுகிட்டு போனைப் போட்டு காந்தி க்வீஜ்ல்ல கெலிக்கறது செம கூத்துங்கோ. ரேடியோ ஸ்டேஷன் போய் அங்கே ஜான்வியை மீட் பண்ணி முன்னா விடுற பீட்டர் ஹாஸ்யத்தின் அடுத்த் லெவல். வித்யா பாலனின் குட் மார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னிங் மும்பாய் என்ற உச்சரிப்பு ஜில் ஜில் ரகம். ( சலாம் நமஸ்தே ப்ரீத்தியின் சலாஆம் நமஸ்தே அளவுக்கு இல்லை.. இருந்தாலும் இதுவு ஓ.கே தான்.)

காந்தி பத்தி ஒரு பிரசங்கம் பண்ண முன்னாவை ஜான்வி அழைக்க.. முன்னா முரளி பிரசாத் சர்மா என்னும் பேராசிரியராய் அவதாரம் எடுக்க நகைச்சுவை வண்டி டாப் கியரில் கிளம்புகிறது. காந்திப் பற்றி படித்து அறிய முயலும் முன்னாவின் கண்களுக்கு மட்டும் காந்தி தெரிய ஆரம்பிக்கிறார். காந்தியை ஒரு மசாலாப் படத்திற்குள் இயக்குநர் கண்ணியமாக நுழைத்து இருக்கிறார். காந்தியோடு நட்பு கொள்ளும் முன்னா பிர்சங்கம் செய்கிறான். ஜான்வியின் மனம் கவ்ர்கிறான். அவளோடு அவள் வீட்டில் இருப்பவர்களின் இதயம் கொள்ளைக் கொள்கிறான். இதுக்குப் பிறகு முன்னா தான் ஒரு பேராசிரியர் என்ற பொய் போர்வை போர்த்தி ஜான்வியை டாவு கட்ட, திரைக்கதை இதமாய் நகர்கிறது.

காந்தியிடம் தன் காதல் நிறைவேற ஐடியாக் கேட்கிறான் முன்னா, காந்தியின் சத்யப் போதனைகள் நயமாக அந்த இடத்தில் நுழைக்கப் படுகின்றன. முன்னா மெல்ல மாறுகிறான். அந்த மாற்றங்கள் மெல்லிய நகைச்சுவை இழையச் சொல்லப்பட்டு இருக்கினறன. கதையின் போக்கில், வில்லனும் அவன் செயல்களும் வழக்கமானப் பாணியில் இருந்தாலும் கச்சிதமாகப் பொருந்தும் படி நுழைக்கப்பட்டுள்ளன.

வில்லனாக பொம்மன் இரானி, நகைச்சுவை வில்லன். நம்ம ஊர் மணிவண்ணன் மாதிரி. ரசிக்க வைக்கிறார். வித்யா பாலன் வீட்டைச் சூழ்ச்சியால் வில்லன் கைப்பற்ற, அதை எதிர்த்து நம்ம முன்னா காந்திய முறையில் போராடுகிறார். போராட்டம் போரடிக்கவில்லை. கலகலப்பாய் நகைச்சுவைத் தோரணங்களால் அந்தக் காட்சிகளை அலங்கரித்து வைத்துள்ளார் இயக்குனர். போராட்டம் ரேடியோவிலும் தொடர்கிறது. முன்னா மும்பையின் ரேடியோவில் காந்திய வழியில் பலப் பிரச்சனைகளுக்கு வழி சொல்லும் ரேடியோ ஜாக்கியாகப் புகழ் பெறுகிறார்.

தற்காலப் பிரச்சனைகளுக்கும் காந்திய வழியில் தீர்வுகள் உண்டு என இயக்குனர் எளிமையாகச் சொல்ல வந்திருக்கிறார். இறுதியில் முன்னா தன் காதல், மற்றும் வில்லனை எதிர்க்கும் தன்னுடையப் போராட்டம் இரண்டிலும் காந்தீயக் கொள்கைகள் கொண்டு எப்படி வெல்கிறான் எனபதே கிளைமாக்ஸ்
வித்தியாசமானச் சிந்தனையில் விளைந்திருக்கும் ஒரு நல்ல அம்சமானப் பொழுதுப் போக்கு படம்.

சஞ்சய் தத் அர்ஷத் வார்சியிடம் அக்டோபர் 2 குறித்து ஆரம்ப காட்சிகள் கலகல சிரிப்பு ரகம் என்றால், காந்தி தன் கண்களுக்கும் தெரிவதாய் அர்ஷ்த் வார்சி காட்டிக் கொள்ளூம் காட்சிகள் குபீர் சிரிப்பு.
பொதுவாகவே அர்ஷத் வார்சியும் சஞ்சய் இணைந்து வரும் காட்சிகளில் சிரிப்புக்குக் குறைச்சல் இல்லை. போட்டுத் தாக்குறாங்கப்பா.

சஞ்சய் தத் அதிகம் மெனக்கெடாமல் முன்னாவாகக் கலக்குகிறார். என் ஓட்டு சர்க்குயூட்டாக வரும் அர்ஷத் வார்சிக்கே. மனுஷன் செம டைமிங்ப்பா.

வித்யா பாலன் நல்லாச் சிரிக்கிறார். வருகிறார். போகிறார். அவர் பங்கு நிறைவு. வித்யா பாலன் வீட்டில் இருக்கும் முதியோர் கோஷ்ட்டியின் சேட்டைகளும் ஆசைகளும் லக்கலக்க ரகம்.

பாடல்கள் படத்தோடு ஓட்டி வருகின்றன. இயக்குனர் ராஜ்குமார் ஹிரேனிக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

முதல் பகுதியை விட இரண்டாம் பகுதி சோக்காக் கீதுப்பா. டைம் கிடைச்சா மக்கா டோன்ட் மிஸ் திஸ்

ஆமா தமிழ்ல்ல வசூல்ராஜா பார்ட் - 2 வருமா?? வந்தால் வசூல் நிச்சயம்... செய்ங்க்ப்பா

கடைசியாக் காந்தி தாத்தா ஒரு மேட்டர் சொல்லுவார் அதைச் சொல்லிட்டு அப்பீட் ஆகிக்குறேன்.

"என்னைப் பல வருஷத்துக்கு முன்னாடியேப் போட்டுத் தள்ளிட்டாங்க.. என் உயிர் வேணும்ன்னா குண்டு பட்டு போயிருக்கும் என்னுடைய சிந்தனைகள் சாகாது. அது இன்னும் இப்படி யார் மன்சுல்ல புகுந்து வாழ்ந்துகிட்டு தான் இருக்கும்.."

கரிக்டாஅ சொல்லிகிரார்ப்பா காந்தி தாத்தா

Friday, September 22, 2006

சூப்பர் ஸ்டாரின் மாநாடு

அட என்னப்பா இது.. நானும் இதே சென்னையிலேத் தான் இருக்கேன். நமக்கு மேட்டர் தெரியாமப் போயிட்டுச்சு...














படம் நன்றி தி ஹிண்டு

என்னடா இது இவ்வளவு கூட்டம்?

போஸ்ட்டர் லேது...
சுவருக்கு சுவர் வரவேற்பு இல்ல....
கட் அவுட் கூட லேது...
ஆனாலும் செமக் கூட்டம் கூடியிருக்கு...

எந்தக் கட்சி கூட்டம் இது? என்னத்துக்கு இதெல்லாம்?

எல்லாம் இவருக்கு தானுங்கோ...













படம் நன்றி தினந்தந்தி

செய்திக்கு இங்கேச் சுட்டுங்க

சீக்கிரம் திரையிலே முகம் காட்டு தலைவா!!!!

Monday, September 11, 2006

சில்லுன்னு ஒரு காதல்

சென்னை வெயிலுக்கு இதமான் தலைப்பிலே ஒரு படம் வந்துருக்கு.. அப்புறம் பார்க்கல்லன்னா எப்படி? சாயங்காலம் ஜமாவாக் கிளம்பி திருவான்மியூர் தியாகராஜா தியேட்டர் போய் நின்னாச்சு. வழ்க்கம் போல கவுண்டர்ல்ல ஹவுஸ்புல் போர்ட் பாத்துட்டு வழ்க்கம் போல நமக்குன்னு டிக்கெட் கொடுக்குற சைக்கிள் டோக்கன் போடுறவருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து வாங்க வேண்டிய டிக்கெட்டை வாங்கிட்டு உள்ளேப் போய் வசதியா உட்கார்ந்தாச்சு...

சூர்யா ரசிகர்களின்(!!!) ஒய்ங் ஒய்ங் விசில் சத்தங்களுக்கு நடுவினின் டைட்டில் ஓட ஆரம்பித்தது...

ஆகா இது என்னடாப் புதுசா.. இல்ல நான் இப்போத் தான் பாக்குறேனா.. ஆமாங்க நன்றி போடுற வரிசையிலே வலைத்தள நண்பர்களையும் சேர்த்திருக்காங்க...

சூர்யா ஸ்டார் ஆயிட்டார்ங்கறதுக்கு தியேட்டருக்கு வெளியே அவருக்கு வைக்கப் பட்டிருக்கும் விளம்பரத் தட்டிகளே சாட்சி.. நல்ல வேளை அமெரிக்க ஜனாதிபதி, அவங்க அப்பா யாரையும் சவாலுக்கு இழுக்கும் வாசகங்கள் எதுவும் தட்டிகளில் இல்லை.

சூர்யாங்கற ஸ்டாருக்கு எவ்வளவு வேல்யூ இருக்குன்னு சோதிச்சுப் பார்க்க முடிவு பண்ணிட்டாங்கப் போல..படம் ஓடுவதற்கு பிரமாண்டமான போஸ்ட்டர் டிசைன்களும்.. போஸ்ட்டரில் பெரிய பெரிய பெயர்களும் இருந்தால் போதும் என்ற திடமான முடிவின் பின்னணி திரையின் முன்னால் தெரிகிறது,

கதையைச் சொல்லுங்கப்பா... இருங்க சார்.

சூர்யா-ஜோதிகா தமிழக இளசுகளின் இன்றைய ஆதர்ச காதல் ஜோடி... அவங்க நடிச்ச படமாம்.

ஏ.ஆர்.ரஹமான் பாட்டெல்லாம் சொக்காப் போட்டுருக்காராம். சொந்தக் குரல்ல முதன் முதலா ஒரு காதல் பாட்டு கலக்கியிருக்காராம் இல்ல...

நம்ம வைகைப்புயல் வேற இருக்காராம்.. அப்போ ரவுசுக்கும் சிரிப்புக்கும் பஞ்சமிருக்காது. கூடவே கல்லூரி சனஙகளின் கலைஞனாய் விவேக் பாணியில் உருவாகி வந்துக் கொண்டிருக்கும் நம்ம சந்தானம் வேற.. அப்படின்னா லொள்ளூக்கு கேரண்டி

ரோஜாக் கூட்டம் பூமிகா வேற INDIAGLITZ வால் பேப்பர்ல்ல் ஜொலிக்குது..ஆக மெய்யாலுமே சில்லுன்னு தான் இந்தக் காதல் இருக்கும்

இப்படியெல்லாம் நினைப்புப் பொங்கப் படத்துக்குப் போனா உங்க நினைப்புல்ல எண்ணெய்யை ஊத்தி அப்பளம் பொறிக்க


இப்போவாது கதையைச் சொல்லுங்கப்பா... அட இருங்க சார். 50 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்துட்டு வந்து உடனே கதைக் கேட்டா எப்படி? சொல்லுவோம்ல்ல

சூர்யா-ஜோதிகா கல்யாணததைப் பார்க்கணும்ன்னு ஒரேத் தவிப்பாத் தவிக்கறவங்களுக்கு ஒரு வாய்ப்பு.. முதல்ல கல்யாண சீன் தான்....

அய்யோ ஆரம்பமே அசத்தலா இருக்கேன்னு எழுந்து உக்கார வைக்கிறார் இயக்குனர்.

பிடிக்காத கல்யாணம்... ஆறுவருடங்களுக்குப் பின் பிடிக்கிற கல்யாணம் ஆகி பிடிப்பின் அழகான பரிசாய் ஒரு பெண் குழந்தை என வாழ்க்கை ரசனையாய் நகர்கிறது சூர்யா-ஜோதிகா காதல் தம்பதிகளுக்கு.. இடைஇடையே வரும் சின்ன ஊடல்கள்..தொடரும் கூடல்கள் எனக் கொளுந்து விட்டு பிரகாசமாய் எரிகிறது முதல் பாதி.

கதையைச் சொல்லுங்க சார்...

இதையேத் தான் படம் பாக்கப் போன எல்லாப் பேரும் கேட்டு வைக்க பாவம்ய்யா இயக்குனர் படாதப் பட்டு போயிருக்கார் கதையைச் சொல்ல

கரையான் அரிச்ச ( இல்ல அரிக்க மறந்த) ஒரு டைரியின் பக்கங்களில் இருந்து சூர்யாவின் பழையக் காதல் சில்லுன்னு கிளம்பி நம்ம் ஜோவைச் சுள்ளுன்னு தாக்குது...

டக்குன்னு பீளிச் மண்டையும், லேசானத் தாடியுமாக. துள்ளல் வாக்கோடு சூர்யா.. தமிழ் சினிமாக் கல்லூரி நாயகர்களின் இலக்கணத்திற்குள் சிறைப் படுகிறார்.

கொஞ்சம் மின்னலே மேடி..இன்னும் கொஞ்சம் மௌனராகம் கார்த்திக் எனக் கலகலப்பின் சகலையாகிறார் சூர்யா. அடி, தடி, பீர், காதல், மோதல்,பதிவுத் திருமணம் என ஜாலியாய் நகர்ந்து தோல்வியைத் தழுகிறது சூர்யாவின் முதல் காதல் எனக் கதையைக் கஷ்ட்டப்பட்டு பின்னுகிறார் இயக்குனர்.

இப்போப் பார்த்தீங்கன்னா சூர்யா ஒரு சந்தோஷமானக் குடும்பத் தலைவர், ஜோ கணவனின் பழையக் காதலைக் கண்டுபிடித்துத் தடுமாறி நிற்கும் மனைவி...என்ன நடக்கும் என்ற ஆவல் கொஞ்சமும் மேலோங்க விடாமல்.. கதையைக் கலலைக் கட்டி கிணற்றில் வீசுகிறார் இயக்குனர்.

ஜோ புதுமைப் பெண்ணாகிறார்!!!!??? கணவனின் டைரி வரிகள் படி அவன் பழையக் காதலை அவனுக்கு ஒரு நாள் திருப்பிக் கொடுக்க முயற்சி செய்கிறார்.

சூர்யா, பூமிகா யாருமே அந்த முயற்சிக்கு எதிர்ப்போ!!! ஆதரவோ??? தருவதுப் போல் தெரியவில்லை அல்லது காட்டப் படவில்லை...

ஜோவின் இந்தத் தியாகச் செயல்,
நமக்கு வேலியிலே போற ஓணானை எடுத்து.. என்ற புகழ்பெற்ற பழமொழியினை ஞாபகப் படுத்துகிறது...
அதுக்கு மேல குத்துதுடா சாமி குடையுதுடா சாமி என்று திரைக்கதைப் பாவம் மூச்சு திண்றி நம் கண் முன்னால் ஆக்சிஜென் கேட்டு யாசிக்கிறது... அப்புறம் என்ன ஆசைத் தோசை அப்பளம் வடை என ஜோ... என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்ன்னு அழுதுகிட்டு முழியை உருட்டி உருட்டிச் சொல்ல.. சரி நீயே வ்ச்சிக்கோ உன் புருஷனை அப்படின்னு இவங்க குடும்பத்து ஆப்பரேஷன்சை ஆடிட் பண்ண வந்த KPMG ஆடிட்டர் மாதிரி பூமிகா ஒரு லெட்டர் கொடுத்துட்டு ஆஸ்திரேலியாவுக்கு சொய்ங்க்ன்னு விமானம் ஏறிடுறாங்க...

தியேட்டர்ல்ல படத்துப் பேர் சில்லுன்னு இருக்குன்னு ஏஸியை வேற நிறுத்தி தொலைச்சு அவன் பங்குக்கு அவன் புண்ணியம் கட்டிக்கிட்டான்

ஆகக் கூடி... சூர்யா அடுத்தப் படத்துக்குக் கதைக் கேட்டு நடிங்க...

அப்புறம் இன்னொரு விஷ்யம் எப்.எம்ல்ல எல்லாம் வந்து சாலைப் பாதுகாப்பு பத்திப் பேசிட்டு படத்துல்ல குடிச்சு முடிச்ச பீர் பாட்டிலை ஸ்டைலா ரோட்டுக்கு நடுவே விட்டு எறியறது அவ்வளவு நல்லா இல்ல சூரி...TAKE CARE

LAST SIGNING OFF WITH WISHES FOR A HAPPY MARRIED LIFE

Friday, September 01, 2006

மோகன்ராஜ்க்குப் பொண்ணுப் பார்த்தாச்சு

டிஸ்கி: 'இவர்' 'அவர்' இல்ல எனபதைத் தெளிவா முதல்லயே சொல்லிடுறேன்

நமக்கு ரொம்ப நெருக்கமானப் பங்காளிப் பேரு மோகன் ராஜ்ங்க... இன்னிக்குக் காலையிலே ரொம்ப நாள் கழிச்சுப் பயகிட்ட இருந்து ஒரு மெயில் வந்துருந்துச்சு...

மாப்பூ..எனக்கு கல்யாணம்டா.. பொண்ணுப் பாத்துட்டாங்கடா.. தேதி நவம்பர்ல்ல இருக்கும்ன்னு ரத்தினச் சுருக்கமா நாலே வரி

அடக் கொக்கமக்கான்னு சீட்ல்ல இருந்து எகிறி குதிச்சே புட்டேன் நான்...
இவனுக்கெல்லாம் கல்யாணம் நடக்குதுன்னா அது எல்லாம் புளுட்டோ பண்ற சதின்னு நினைச்சுகிட்டேன்..

இருக்காதாப் பின்னே..

பத்து வயசில்ல இருந்தே நமக்கு மோகன் பழக்கம்ங்க.. பய நல்லவன்.. ரொம்ப நல்லவன்.. அறிவுல்ல எல்லாம் அசகாய சூரன்... விவரமானப் பய தான்.
அவனுக்கு ஒரே ஒரு விசயம் தான் விவகாரம். அதுப் பொண்ணுங்க விஷயம்... தப்பா நினைச்சுராதீங்க, பய அப்படி எல்லாம் இல்லை...
ஒரு பொண்ணுன்னா எப்படி இருக்கணும்ன்னு நம்ம புரட்சித் தலைவருக்கும் சூப்பர்ஸ்டாருக்கும் அItalicப்புறம் அதிகம் பஞ்ச் டயலாக் பேசுன பைய இவனாத் தான் இருப்பான்...

எங்களுக்கெல்லாம் சைக்கிள் ஓட்ட பழகுறதுக்கு முன்னாலே சைட் அடிக்கப் பழக்குனவன் அவன்.

பத்து பைசா ஆசை சாக்லேட்டை ''ஆர்டினாக்கி" வச்சு அஞ்சாம் கிளாஸ் படிக்கும் போதே அம்பிகான்னு அம்சமான ஒரு கேரளாப் பொண்ணைச் செட் பண்ண ட்ரைப் பண்ணி அந்தப் புள்ள ஆர்டினுக்கு அர்த்தம் புரியாம என் சாக்லேட்டை இந்தப் பைய நசுக்கிபுட்டான்னு மேரி மிஸ் கிட்ட போட்டுக் கொடுக்க பய பரிதாபமா முழிச்சான் பார்க்கணும்.

ஆறாம் கிளாஸ்ல்ல அம்பிகா ஆசை அத்துகிட்டுப் போய் சோனாலிக்கான்னு ஒரு சேட்டுபொண்ணு மேல கண்டப் படி காதலாகி அதன் பயனா, முக்குத் தெரு பங்கஜம் மாமி கிட்டே போய் ஏக்.. தோ... தீன்... அப்படின்னு முக்கி அலறனதுல்ல மையிலாப்பூர் பகுதியிலே கணிசமானப் பேர் அவன் தயவுல்ல இலவசமாவே ஹிந்தி கத்துகிட்டாங்க. அப்போ அண்ணே நம்ம கிட்ட வந்து கயாமத் சே கயாமத் தக்., தில் தோ மாந்தா நஹின் அப்படின்னு அள்ளி விடுறது எல்லாம் ரொம்ப நாள வரைக்கும் எதோ சேட்டு வீட்டு பலகாரம்ன்னு தான் நினைச்சிகிட்டு இருந்தோம்.

சோனாலிக்கா மேரி ஜான்... அப்படின்னு அடிக்கடி புலம்புவான்... இதைக் கேட்டுபுட்டு நம்ம சங்கத்து ( அது வ.வி.ச) பய ஒருத்தன் சோனாலிக்கா கிறிஸ்டீன்னாடா அவங்க அப்பா பேர் ஜான்ங்கற அப்படின்னு அப்பாவியாக் கேட்டுட்டான்...

சோனாலிக்கா சொரம் பயலுக்கு எப்போத் தெளிஞ்சதோ சரியா ஞாபகம் இல்லை பத்தாம் கிளாஸ் படிக்கும் போது அவனை விட நாலு வயசு மூத்த ஸ்டெல்லா மேரீஸ் காலேஜ் பொண்ணு மேலப் பித்தாயிட்டான். அவங்க அண்ணன் ஜீன்ஸ் பேண்டைத் திருடிப் போட்டுகிட்டு அந்தப் பொண்ணு முன்னாடி பிலிம் காட்டுறது.... அவங்க அண்ணன் படிக்கிற பெயர் தெரியாத நாவல் எலலாம் எடுத்து அலங்காரமா உக்காந்து சீன் போடுறதுன்னு பய பம்ப்ரமாச் சுத்துனான் அந்தப் பொண்ணு பார்வைக்கு..

வந்தது வினை... அந்தப் பொண்ணுகிட்ட தானும் காலேஜ்ன்னு ரீல் விட்டு வச்சிருக்கான்..( பய பாக்க உயரமா வேற இருப்பான்.. அந்தப் பொண்ணு அதை நம்பியிருக்கு) ஒரு நாள்... என்ன கொஞ்சம் இந்தக் கடையிலே ட்ராப் பண்றீயான்னு கேக்க.. புள்ளையும் ஓ,கே சொல்ல.. அந்தப் பொண்ணு ஊருக்கு போயிருந்த அவங்க பைக் சாவியைக் கொடுக்க நம்மாளு பைக் பில்லியனில் அந்தப் பொண்ணை வச்சுகிட்டு எங்க முன்னாடி கெத்தா ரவுண்ட் விட்டுட்டு போனான்.. பாவம் போற வழியிலே மாசக் கடைசியிலே கொத்தாக் கேஸ் புடிச்சிட்டு இருந்த மாம்ஸ் கிட்ட மாட்டிகிட்டார்ன்... மாட்டுன்னா லைசென்ஸ் கேட்க.. பய முழி பிதுங்க...

அந்நேரம் அங்கிட்டு வந்த ஸ்கூல் வாத்தி.... என்னப்பா மோகன்ராஜ்? இங்கே எங்கேன்னு கேட்க.. விவரம் சொல்ல.. அவர் மாம்ஸைக் காம் பண்ணி பயலை ரிலீஸ் பண்ணி விட்டுட்டு....

"அட என்னம்மா நீ? அவன் தான் சின்னப் பைய.. ஸ்கூல் பாய்.. நீயாவது யோசிக்க வேண்டாமா லைசென் ஸ் இல்லாம இப்படி வரலாமா? மோகன் அக்காவைப் பார்த்துக் கூட்டிட்டுப் போடான்னு"

சொல்லிட்டு கிளம்ப... அதுக்கு மேல நடந்தது என்ன? உங்க ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்.

நம்ம பைய லேசுல்ல அடங்கல்ல... காலேஜ்ல்ல லவ் லெட்டர் கொடுக்காதே பொண்ணே கிடையாது.

'செருப்படி காதல் வாழ்க்கையின் முதல் படி'

அப்படின்னு ரூம்ல்ல ரூலாவே எழுதி ஒட்டி வாழ்ந்துகிட்டு இருந்தான்.

எங்க ஏரியா இன்ட்ர்நெட் சென்டர் கீ போர்ட் பூராத்துல்லயும் A S L என்ற மூணு எழுத்தும் இவன் விரல் பட்டு தீஞ்சேப் போச்சு.

தலைமுடியை திடீரென்னு தோள் வரைக்கும் வளப்பான்.. இப்படியிருந்தா தான் ஷாலுவுக்குப் பிடிக்கும் அப்படிம்பான்.

அடுத்த வாரமே மொட்டை அடிச்சுட்டு மோவாய்ல்ல லேசா அழுக்கு ஒட்டுனாப்ல்ல ஆட்டுத் தாடி விட்டுகிட்டுத் திரிவான்... இது மேக்னாவுக்குப் பிடிச்சுருக்காம் அப்படின்னு ராயலாப் பேசுவான்.

நாலாம் வருசம் முடிக்கறதுக்குள்ளே இவன் பாத்த அத்தனைப் புள்ளகளுக்கும் ஆள் செட்டாகி கடைசி வருசம் ராக்கி அன்னிக்கு இவனை ஹாஸ்ட்டல் கக்கூஸ்ல்ல ஒளிச்சு வைக்க வேண்டியதாப் போச்சுன்னாக் கேளுங்களேன். அவன் பொழைப்பு அவ்வளவு நாறிப்போச்சு.

மச்சி... உனக்கு வெக்கமே இல்லையாடான்னு ஒரு நாள் ஊத்திவிட்டு கேட்டப்போ...

அழகு மயில் ஆட.. அபிநயங்கள் கூட.. அப்படின்னு ஒரு பழைய ராஜாப் பாட்டை ஊதிகிட்டே அள்ளிவிட்டு ஆடுனான் பாருங்க.... நாங்க மட்டையாயிட்டோம்.

மோகன் ராஜ் அப்புறம் வேலைக் கிடைச்சு நார்த் இன்டியாப் பக்கம் போனான்.. போனில் ஒரு முறை பேசும் போது சோனாலிக்காவுக்காக கற்றுகொண்ட ஹிந்தி இப்போக் கை கொடுக்குதுன்னு சொன்னான்.

அப்புறம் அமெரிக்கா, லன்டன்னு சுத்திட்டு ஆஸ்திரேலியாவில்ல செட்டில் ஆயிட்டான்... எங்க செட்ல்ல ஒவ்வொருத்தருக்கா கல்யாணம் ஆகிட்டே வந்துச்சு...

"மச்சான்... கல்யாணம்ன்னு ஒண்ணு பண்ணா.. ஒரு பொண்ணைப் பண்ணனும்டா.. பொண்ணுன்னா மச்சி..பார்த்தவுடனே அப்படியே பொங்கணும்டா.. " யார் கல்யாணத்துக்கோக் கடைசியா வந்திருந்த போது சொன்னான்.

""யூ நோ ஒரு ஐஸ்வர்யா ராய்... கேததரீன் சிட்டா ஜோன்ஸ், ஏஞச்லினா ஜோலி., இல்லை அட்லீஸ்ட் ஒரு ராணி முகர்ஜி, அப்படி ஒரு லுக் வேணும் மச்சி...""

" ஆக நீ சொல்ல வர்றது.. மோகன்ராஜ் ஆகிய் எனக்கு இந்த ஜென்மத்துல்ல நோ மேரேஜ் அப்படித்தானே..."

" நோ.. நோ.. இப்போக் கூட என் ஆபிஸ்ல்ல லிசான்னு ஒரு நைஸ் கேர்ள் .. இத்தாலியன்... எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு" என்றான்.

"அவளுக்கு" நம்ம பங்கு யாரோ கேட்டாங்க..

"இப்போத் தான் ஸ்டார்ட் ஆகி இருக்கு இன்னும் போகணும் அப்புறம் அவளுக்கும் என்னையப் பிடிச்சிடும்" பயங்கரச் சிரியஸாச் சொன்னான்.

இன்னுமாடா நீ இப்படித் திரியறன்னு அவன் அவன் உளுந்துப் பொரண்டுச் சிரிக்க, மோகன் ராஜ் செல்போனில் இருந்த லிசாப் படத்தை எனக்குக் காட்டினான்...

அது ஆச்சு ஆறு மாசம், இப்போ அண்ணனுக்கு கல்யாணம் அதுவும் நம்ம மதுரைப் பக்கம் மேலூர்ல்ல.. பொண்ணு பேர் லிசாவான்னு இனி தான் விசாரிக்கணும்...

இப்போதைக்கு சகலமானவர்களுக்கும் சொல்லிக்கிறது என்னன்னா என் நண்பன் மோகன்ராஜ்க்குப் பொண்ணு பார்த்தாச்சுங்கோ

tamil10