Thursday, September 27, 2007

CHEQUE DE INDIA


தனக்குப் பிடிச்ச விசயத்துக்கு கொட்டிக் கொடுப்பதும் தலையில்ல வச்சுக் கொண்டாடுறதும் தனிப்பட்ட ரசிகனுக்கு ரைட்டு..

கிரிக்கெத்துக்கு அள்ளி விடுறதும் ஹாக்கீ(யை)கீழே தள்ளி விடுறதும் அரசாங்கத்துக்கு அழகில்லை...

ஆசியக் கோப்பையில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி வீரர்களுக்கு ஆதரவாக இந்தப் பதிவு.

I SUPPORT INDIAN HOCKEY....DO YOU ?

Monday, September 24, 2007

சேது சமுத்திரம் நாயகன்

சும்மா படம் காட்டுறாய்ங்கய்யா வாங்க நீங்களும் வந்து பாருங்க...






எங்கே நீங்களும் எல்லோரும் ஒரு தடவை ஜோராக் கைத் தட்டுங்கப் பாப்போம்...

சரி இப்போ போய் வேலையைப் பாருங்க...

Monday, September 17, 2007

கல்யாணம் கச்சேரி

ஆடி மாசம் முடிஞ்சாலும் முடிஞ்சது இப்போ ஒரே கல்யாண சீசன் தாங்க..

மெயிலைத் திறந்துப் பார்த்தா பத்து வருசத்துக்கு முன்னால பழக்கம் கட் ஆகிப் போன பழைய பிரண்ட் கிட்ட இருந்து கல்யாண அழைப்பு...

வீட்டு போஸ்ட் பாக்ஸ் திறந்தா நம்ம பேர் போட்டு ஒரு இரண்டு மூணு கல்யாண அழைப்பு...

மெயிலாவது பரவாயில்ல அனுப்புறவங்க யார்ன்னு தெரியும் அதுன்னால அவருக்குத் தான் கல்யாணம்ன்னு தெரிஞ்சுக்கலாம்.. வீட்டுக்கு வர அழைப்புல்ல சில சமயம் பொண்ணு நமக்கு வேண்டியவங்களா இல்ல பையன் நமக்கு வேண்டியவங்களான்னு பெரிய குழப்பமெல்லாம் நடந்திருக்கு...

என்னப் பண்ணுறது காலம் போற வேகத்துல்ல கூட வந்தவங்க முகமெல்லாம் மறந்துப் போயிருது..

இப்படித் தான் போன வாரம் நம்மக் கூடப் படிச்ச பய ஒருத்தனுக்கு திருச்சியிலே கல்யாணம்.. கூட வேலைப் பார்த்த தோழி ஒருத்தங்களுக்குச் சென்னையிலே அதுக்கு அடுத்த நாள் கல்யாணம்...

பையன் கல்யாணத்துக்குப் போய் ரூம் எல்லாம் போட்டு பழையக்கதையை எல்லாம் பேசி... அவன் காதலிச்ச பொண்ணுக்கு கார்ட் அனுப்புனானா கடமையாக் கேள்வி எல்லாம் கேட்டுட்டு அவசரமா அவசரமா கல்யாணச் சாப்பாடு எல்லாம் சாப்புட்டு பஸ் புடிச்சு ஊருக்கு வந்தேன்.

பொண்ணு கல்யாணத்துக்குப் போறதுக்கு ஒரு சின்னத் தயக்கம்.. அவங்களைப் பார்த்து ஒரு ரெண்டு வருசம் ஆச்சி.. என் கல்யாணத்தப்போ பாத்தது.. இப்போ பழைய ஆபிஸ் மக்கள் யாராவது வருவாங்களா? இல்லை தனியாத் தான் போய் நிக்கணுமான்னு ஒரே யோசனை.. பொறவு இன்னொரு நண்பனும் வர்றதாச் சொல்ல ஒண்ணாக் கிளம்புனோம். மழையிலே நனைஞ்சுகிட்டேப் போயிட்டோம்.

மண்டபத்துல்ல போய் மேடையைப் பார்த்தா பொண்ணு மாப்பிள்ளை எல்லாம் வந்துட்டாங்க... அப்போத் தான் எங்களுக்கு பெரும் சந்தேகம்.. வேறக் கல்யாணத்துக்கு வந்துட்டோமான்னு...

பின்னே மேடையிலே தோழியைத் தேடுனா காணும்... அங்கிட்டு இருக்கப் பொண்ணுக்கும் எங்க தோழிக்கும் சம்பந்தமே இல்ல.. பொறவு மெதுவா எங்க அறிவுக்கண்ணைத் தொறந்து புரிஞ்சுக்கிட்டோம்.. எல்லாம் கமலஹாசன் டெக்னிக் தான்.. மேக்கப்ங்கோ மேக்கப்...எப்படியோ தோழியோட கெட்டப் சேஞ்சைக் கண்டுபிடிச்சு கரெக்ட்டான இடத்துக்குத் தான் வந்துறுக்கோம்ன்னு கன்பர்ம் பண்ணிகிட்டோம்.

கடைசி வரிசையிலே பந்திக்கு முந்துறதுக்குத் தோதா ஒரு இடம் பார்த்து உக்காந்துகிட்டோம். கொஞ்சம் கொஞ்சமா பழைய அலுவலகச் சகாக்கள் எல்லாரும் வந்து சேர அப்படியே கல்யாணம் களைக் கட்ட ஆரம்பிச்சுது.. ஊர் கதை, உலக கதை, உழவர் சந்தை கதை, வந்த கதை, நொந்த கதை, அந்த கதை, எடுத்துக் கட்டுன கதை, விட்டுப் போன வரலாறு, அப்படின்னு ஆசையா நாலு வார்த்தைப் பேசலாம்ன்னு பார்த்தா....

கல்யாணம் தான் கட்டிகிட்டு ஓடிப் போலாமான்னு ஸ்டேஜ்ல்ல இருந்து ஒரு பொண்ணு கேக்குது..ச்சே பாடுது...பாவம் அந்தப் பொண்ணு என்னமோ பாடத் தான் செஞ்சுது.. ஆனா அதுக்கு எபெக்ட் கொடுக்குறோம்ன்னு மியூசிக் பார்டி எக்குத்தப்பா டெசிபலை அலற விட்டு அடிவயித்துல்ல சுனாமி கிளப்புனாங்களே ...யப்ப்பா... மண்டபமோ சிறுசு... இதுல்ல இந்த அளவுக்கு சவுண்ட் பார்ட்டி வச்சுதுல்ல எங்கிட்டு நாலு வார்த்தைப் பேசுறது..

"என்ன மச்சான் ஹாய் கூட இல்லையா?" நண்பனைக் கேட்டேன்.

அவன் வாய் மட்டும் அசையுது.. வாய்ஸ் நாய்ஸொட மிக்ஸ் ஆகி... என் காதுல்ல தாலியைத் தான் கட்டிகிட்டு பெத்துக்கலாமா இல்ல புள்ளக்குட்டிப் பெத்துகிட்டு கட்டிக்கலாமான்னு பாட்டு தான் கோக்குமாக்கா விழுந்து வைக்குது..

ஆமா எதுக்கு அப்பூ கல்யாணம் காது குத்து விருந்து எல்லாம் நாலு சொந்தம் பந்தம் சுற்றம் சூழல் எல்லாம் பார்த்து நாலு வார்த்தைப் பேசி.. யூ ஒ.கே...? மீ ஓ.கேன்னு குசலம் விசாரிக்கத் தானே.. அதுக்கு ஆப்பூ வைக்கிற மாதிரி இந்த அதிரடி இரைச்சல்கள் அவசியமான்னு இசை பிடிச்ச எனக்கே யோசனையாப் போச்சு..

திரும்பவும் டாபிக் மணப்பெண்களின் மேக்கப் மேட்டருக்கு திரும்ப...நண்பர் ஒருத்தர் தன் வீட்டில் நடந்தக் கூத்தைச் சொன்னார்.. அவருக்கு ஒரு வயசுல்ல ஒரு பெண் குழந்தை இருக்கு...அவர் கல்யாணப் போட்டோவை எடுத்து அது கிட்டக் காட்டி அப்பா எங்கேம்மா செல்லம்ன்னு கேட்டிருக்கார்... டக்குன்னு கோட்டு சூட்டு போட்டுகிட்டு நின்ன அவரைப் பளிச்சுன்னு காட்டிருச்சாம்...
அடுத்தாப்புல்ல அம்மா எங்கேடா செல்லம்ன்னு கேட்டிருக்கார்.. அந்த வாண்டு விறுவிறுவெனச் சமையல் ருமுக்குப் போய் அங்கிட்டு வேலைப் பாத்துகிட்டு இருந்த அவர் தங்கமணியைக் கைப் பிடிச்சுக் கூட்டிகிட்டு வந்துருச்சாம்...

பெத்தப் புள்ளக்கே ஆத்தாளை அடையாளம் தெரியல்லயா.. என்னக் கொடுமை இது சரவணன் அப்படின்னு சொல்லி சிரிச்சார்.

நண்பர் வீட்டு தங்கமணியும் கூட இருந்தாங்க...

அவங்க எதுக்குமே அலட்டிக்காம சொன்னாங்க...."எங்க வீட்டு ரங்கமணியும் பியூட்டி பார்லருக்கெல்லாம் போயிட்டு தான் வந்தார்....ஆனாப் பாருங்க எருமை மாட்டை என்னத் தான் தேய்ச்சுவிட்டாலும் இருக்கது தான் இருக்கும்ன்னு அனுப்பி விட்டுட்டாங்க"

அவ்வளவு தான் நண்பர் கடும் வேகத்தில் எழுந்து "பந்திப் போட்டாங்கப்பா சும்மா இப்படி வெட்டியாப் பேசிகிட்டு இருந்தா வீடுப் போக நடு ராத்திரி ஆயிரும் மழை வேற பெய்யுதுப்பா...சென்னை ரோட் லட்சணம் தெரியும்ல்ல"

நாங்களும் அவர் பின்னாலேப் போனோம்...

கல்யாணம் கச்சேரி நகர வாழ்க்கையில் அவசர அவசரமாய் போய் வந்தாலும் அதுவும் ஒரு அனுபவம் தான் போங்க...

Monday, August 27, 2007

தலைவர் ஆவாரா தளபதி?

தளபதி... திமுக தொண்டர்களின் அகராதியில் அந்த வார்த்தைக்கு மு.க.ஸ்டாலின் என்று பொருள்..

இந்தப் பதிவின் தலைப்பு முன்னொரு காலத்தில் திமுக வட்டாரங்களில் மட்டுமன்றி தமிழக மக்கள் மத்தியிலும் பரவலாக எழுந்து இன்று விடை கிட்டத் தட்ட உறுதி செய்யப்பட்ட கேள்வி..

திமுகவின் கடைசி தொண்டன் வரை ஒரு மனதாய் தளபதியை எதிர்காலத்தில் தலைவனாய் ஏற்று கொண்டு ஆண்டுகள் பல ஓடி விட்டன.. ஆனால் இன்னும் தளபதி வெறும் தளபதியாய் தொடரும் காரணங்கள் என்னவாக இருக்கும்..

ஒய்வெடுக்க வேண்டிய வயதில் ஒரு பெரியவரை இன்னும் அரசியல் களத்தில் போராட விட்டு விட்டு தளபதி தள்ளி நின்று வேடிக்கை மட்டும் பார்ப்பது போல் ஒரு தோற்றம் திமுகவில நிலவது ஏன்?

தளபதி தயங்குகிறாரா.. இல்லை தடைச் செய்யப்படுகிறாரா.. இன்னும் காலம் கனியட்டும் என ஐம்பதுகளின் மத்தியினைத் தொட்டு விட்ட திமுகவின் இளைஞரணி அமைப்பாளர் காத்திருப்பதன் நோக்கம் என்ன?

அரசியலில் முப்பது ஆண்டுகால அனுபவம்.. தொண்டர் பலம்.. கட்சியில் முன்னணியினரின் ஆதரவு..தமிழ் மக்களிடம் பரவலான அறிமுகம்..சென்னை மாநகர மேயராக நிர்வாக அனுபவம்...இப்படி ஒரு தலைவருக்கான அடையாளங்கள் அனைத்தையும் நிதானமாய் தன் வசப்படுத்திக் கொண்ட பின்னும் தளபதி அமைதி காப்பதன் அர்த்தம் என்னவாக இருக்கும்.

பேரறிஞர் அண்ணாவின் செல்வாக்கு உச்சத்தில் இருந்த போதே துருவ நட்சத்திரமாய் எழுந்தவர் கலைஞர் மு.கருணாநிதி.. பிற்காலத்தில் அவருக்கு அது திமுகவின் தலைமை பொறுப்பை ஏற்கும் நிலையை ஏற்படுத்திக் கொடுத்தது.. கிட்டத் தட்ட 40 ஆண்டுகாலமாய் திமுகவின் தலைமையைத் தன் வசம் வைத்திருக்கும் கலைஞர் ஒய்வெடுக்க மறுப்பது ஏன்?

திமுககாரர்கள் இந்த விவகாரத்தை உணர்வு பூர்வமாக அணுகினாலும்.. பொதுவாக சிந்தித்துப் பார்க்கும் போது சக்கரவர்த்தியின் சக்திக்கு முன்னால் பட்டத்து இளவரசர் பவர் எடுபடாமல் இருப்பதே இதற்கு காரணமா என்று சிந்தனை ஓடுவதைத் தவிர்க்க முடியவில்லை.

84 வயதிலும் ஆட்சி பளு, கட்சி தலைமை பொறுப்பு, மத்திய அரசில் பங்களிக்கும் பொறுப்பு, மாநிலத்தில் எதிர்கட்சிகளோடு அரசியல், கூட்டணி கட்சிகளின் உள்குத்துகளைச் சமாளிப்பது, குடும்பச் சண்டையில் தனக்கு அடுத்ததுக்கும் அடுத்த தலைமுறையோடு மல்லுகட்ட புதிய தொழில் நுட்பம் கையில் ஏந்தி நிற்பது, எழுத்துலகில் கவனம், திரை உலகில் ஆர்வம் என பெரியவர் கலைஞரின் சுறுசுறுப்பும் ஆற்றலும் அவர் தம் அரசியல் கோட்பாடுகளையும் மீறி என்னை கவர்ந்தவை.. தமிழர்கள் பலரையும் அரசியல் தாண்டி ஈர்த்தவை..

ஒரு தலைவராய் கலைஞர் கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியேயும் சந்தித்த சோதனைகளும் சவால்களும் ஏராளம்.. வென்றாரா.. தோற்றாரா என்பது ஒரு புறம் இருக்கட்டும்.. நின்றார் கலைஞர்..

அப்பேர்பட்ட தலைமையின் பின்னால் அரியணை ஏற போவதாய் உறுதி செய்யப் பட்ட ஒருவர்... அந்த தலைமையின் திறன்களில் ஒரு சில சதவிகிதத்தைக் கூட வெளிகாட்டாமல் இருப்பது ஆச்சரியமாய் இருக்கிறது.அது தளபதியின் தன்னடக்கம் என்றால் நம்பும் படி இல்லை...

முப்பது ஆண்டு காலமாய் அரசியலில் இருக்கும் தளபதியின் மிகப் பெரும சாதனையாகவும் சோதனையாகவும் இன்று வரை சொல்லப்படுவது அவரது மிசா சிறைவாசம் மட்டுமே

தளபதியிடம் இருக்கும் இன்னொரு கவனிக்கத் தக்க விசயம் MEDIA SHYNESS..ஆரம்பக் காலங்களில் இருந்து தளபதியை ஏற்றமிகு கண்ணோட்டத்தில் பத்திரிக்கைகள் காட்டியதில்லை..அந்தக் காரணத்தினாலோ என்னவோ தளபதிக்கும் பத்திரிக்கைகளுக்கும் நெருக்கம் அதிகமில்லை.. தற்போதைய திமுக தலைவரோ ஒரு தேர்ந்த பத்திரிக்கையாளர். பத்திரிக்கை பலம் தெரிந்தவர்.

கடைசியாக மார்ச் வாக்கில் என்.டி.டி.வி நிருபர் தளபதி பிறந்த நாளுக்கு அவரிடம் மைக் நீட்டி பிறந்த நாள் செய்தி கேட்டப் போது...

தளபதி தவிர்க்கும் நோக்கில் தவிப்பாய் வெளியிட்டக் கருத்து... நான் பிறந்த நாள் வாழ்த்து எல்லாம் சொல்லுறது இல்லங்க...

தளபதி டிஜிட்டல் பேனர்களில் கட் அவுட்களிலும் திமுகவின் தலைவராகி ஆண்டுகள் பல ஆகிவிட்டன...

இப்போது இருக்கும் ஒரே கேள்வி போஸ்ட்டரில் மட்டுமே அவர் ஆளுமை இருக்குமா இல்லை அதையும் தாண்டி நீளுமா...

பொது மக்களுக்கு அவர் தமிழகத்தின் அடுத்த தலைவராய் விசுவ ரூபம் எடுப்பாரா இல்லை வெறும் கலைஞரின் மகனாகவே என்றும் இருந்து விடுவாரா... பொறுத்திருந்து பார்க்கலாம்..

Thursday, August 23, 2007

நானும் என் ரேடியோ பொட்டியும்

இன்றைய நகர வாழ்க்கையில் பலரது வாழ்க்கையிலும் பின்னி பிணைஞ்சுப் போன ஒரு மேட்டர்ன்னா அது ரேடியோங்க..

ஆறாவதோ ஏழாவதோ படிக்கும் போது அப்பா ரிச்சி தெருவுக்குக் கூட்டிட்டு போய் ஒரு பாக்கெட் ரேடியோ வாங்கி தந்தது இன்னும் நினைவு இருக்கு... அதோட அன்றைய விலை 100 ரூபாய்.. சிவப்பு கலர் ரேடியோ அது.. அப்போல்லாம் எப்.எம் கிடையாது.. ஆனா கேக்குறதுக்கு ரொம்ப இனிமையா இருக்கும்...

காலை நேரங்களில் ரேடியோ அதிகம் கேட்க முடிந்ததில்லை.. ஆனா அந்த மாலை நேரங்களில் மயிலாப்பூர் பகுதியில் நாங்க குடியிருந்த வீட்டின் மொட்டை மாடிக்குச் செல்லும் படிகளில் அமர்ந்து ரேடியோ கேக்குறது இருக்கே... அதெல்லாம் ஒரு சுகம்ங்க..

அந்த சுகம் அதிகமா வார இறுதிகளில் தான் கிடைக்கும்.. லீவுன்னு சொல்லி ரேடியோவும் காதுமா அலையலாம்.. முன்னிரவு நேரங்களில் சிபாக்கா டாப் டென் பாடல்கள்ன்னு ஒரு நிகழ்ச்சி வரும்... நமக்கு ரொம்ப பிடிச்ச நிகழ்ச்சி அது.. பாடல்களை வரிசைப் படுத்துற நிகழ்ச்சி அது... கேக்க அருமையா இருக்கும்.. அப்படியே சேனலை ட்யூன் பண்ணா இந்தியிலே அமின் சயானி ( பேர் கிட்டத் தட்டச் சரின்னு நினைக்கிறேன்) அப்படின்னு ஒரு தொகுப்பாளர் அசத்துவார் பாருங்க... அதைப் புரிஞ்சிக்கவே இந்திக் கத்துக்கலாம் போலிருக்கும்....

சில சமயம் மொழி புரியாத பாடல்களைக் கூட கேட்டு கிடப்பது உண்டு...

அப்புறம் ஒரு நாள் நான் ஆசையா வச்சிருந்த அந்த சிகப்பு ரேடியோ உயிரை விட்டுச்சு.. என்னவெல்லாமோச் செஞ்சுப் பாத்தோம்.. செலவழிச்சும் பார்த்தோம்... ம்ஹூம் அதைக் காப்பாத்த முடியல்ல

அந்த பாக்கெட் ரேடியோ போன பிறகு பலக் காலம் ரேடியோ ஆசையே போயிருச்சு...

பின்னாடி விவேகானந்தா காலேஜ்ல்ல படிக்கும் போது முக்காவாசி மதிய நேரம் ப்ரீயா அமைவது உண்டு... அப்போ எங்க வீட்டுல்ல பிலிப்ஸ் மியூசிக் சிஸ்டம் இருந்துச்சு... புதுசா வந்த நேரம்..

பண்பலை ஒளிபரப்பு துவங்கியிருந்த நேரம்... ப்ரியமான நேரம், வி.ஆர்.ஜி நேரம்ன்னு பல தனியார் நிறுவனங்கள் ஆளுக்கு ஒரு மணி நேரம்ன்னு ரேடியோ நேயர்களுக்கு புது அனுபவம் கொடுத்தக் காலமது... இன்றைய எப்.எம் சேனல்களின் முன்னோடிகள் அவைன்னு சொல்லலாம்...

மதியம் நல்லா சாப்பிட்டுட்டு ரூம் கதவைச் சாத்திட்டு வெயில் ஜன்னல் வழியா வருவதை திரைப் போட்டு பாதி தடுத்தும் தடுக்காமலும் மல்லாக்கப் படுத்துகிட்டு ரேடியோவைப் போட்டா அந்த அனுபவம் இருக்கு பாருங்க அட்டகாசம்
பொழுது பக்காவாப் போகும்...

அதற்கு பின்னால் கல்லூரி முடித்து வேலை. அப்படின்னு வாழ்க்கையின் கால்களில் சக்கரம் கட்ட தொடங்கிய காலத்தில் ரேடியோவுடனான என் நட்பு பாதிக்கப்பட்டது..

அப்படிப் பாதிக்கப்பட்ட நட்பு பின்னால் வந்த செல்போன் புரட்சி மூலம் புதுப்பிக்கப்பட்டதுன்னு சொல்லணும்...காலையில் கடுப்பேற்றும் டிராபிக்கை சிரித்தவாறு சமாளிக்க எப்.எம் தான் உதவுதுன்னா கண்டிப்பா அது மிகையாகாது...

கடுமையான வேலை இருக்கும் சில நாட்களில் இரவு நேரம் கடந்து வீடு திரும்பும் பொழுதுகளில் காதுகளில் சன்னமா இசை வழிய பயணம் போகும் அந்தத் தருணங்கள் மதிப்புமிக்கவை...அதிலும் லேசா சாரல் அடிச்சா இன்னும் அருமையான அனுபவம்...

சமீபத்திலே நம்ம குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பேச்சை இஅப்ப்டி ரேடியோவுல்ல கேட்டுகிட்டே வண்டி ஓட்டிக்கிட்டு போனது ஒரு வித்தியாசமான அனுபவம்...

ரேடியோ என் வாழ்க்கையில் எனக்கு அமைந்த ஒரு வித்தியாசமான இனிமையான நட்புன்னு சொல்லலாம்..

இந்தா இப்போக் கூட பிக் எப்.எம்ல்ல தீனான்னு நம்ம பையன் ஒருத்தன் 92.7 மணி நேரம் விடாம நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி சாதனைப் படைக்க முயற்சி பண்ணிகிட்டு இருக்கார்... நாளைக்கு காலையிலே அந்த சாதனை முடியும்... அப்பப்போ கிடைக்கிற பிரேக்ல்ல தீனா இன்னும் பேசிக்கிட்டு தான் இருக்காரான்னு செக் பண்ணுறது ஒரு த்ரில்...

ரேடியோ பத்தி பேசச் சொன்னா பேசிகிட்டே போலாம்....இன்னொரு சமயம் இன்னும் பேசலாம்.. :)

Saturday, August 18, 2007

காந்தியா சுதந்திரம் வாங்கி கொடுத்தார்?

இந்த வாரம் ஊரெல்லாம் கொடியேத்தி முட்டாய் கொடுத்து இந்திய சுதந்திரத்தின் அறுபதாவது ஆண்டை அமோகமாக்கொண்டாடுனாங்க...மெயில்..பதிவுன்னு நம்ம மக்களும் குறைவில்லாம கிடைச்ச சுதந்திரத்தை சுகமாக் கொண்டாடினாங்க..

இந்த நிலைமையிலேத் தான் எனக்குக்குள்ளே இப்படி ஒரு கேள்வி கொக்கியா தொக்கி நின்னுச்சு

அந்தக் கேள்வியைப் பதிவு தலைப்பா வச்சாச்சு.. சில பல காலத்துக்கு முன்னாடி ஒரு இந்தி படம் பார்த்தேன்.. படத்தின் பெயர் மாச்சீஸ்.. நம்ம குல்சார் கைவண்ணத்தில் வந்த படம்.. பஞ்சாப் தீவிரவாதத்தைப் பத்தி பேசும் படம் அது.. படத்தின் மொத்தத்தைப் பத்தி நான் இங்கே சொல்ல வர்றல்ல..அந்தப் படத்தில் வர்ற ஒரு வசனம் என்னைக் கொஞ்சம் சிந்திக்க வச்சிருச்சு...

அதாவது அந்த ஊர் பள்ளிக்கொடத்துல்ல வழக்கம் போல வாத்தியார் ஒருத்தர் கையிலே பிரம்போட வரலாறு சொல்லிக் கொடுத்துகிட்டு இருக்கார்...

நம்ம பாரத தேசத்துக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தது மகாத்மா காந்தி அப்படின்னு பொறி பறக்க பாடம் நடத்திகிட்டு இருக்க அவரைப் பார்த்து இடி இறக்கற மாதிரி என்னிய மாதிரி ஒரு சின்னப் பொடியன் அதிரடியா சொல்லுறான்... சார் சும்மா பொய் சொல்லக் கூடாது... இந்த டுபாக்கூர் கதையை எல்லாம் நாங்க நம்ப மாட்டோம்..

லைட்டா ஜெர்க்காகுற வாத்தி... என்னாச்சு உனக்கு நக்கலா... மவனே எனக்கு வரலாறு நீ சொல்லப் போறீயா அப்படின்னு கோவமா பிரம்பைச் சுத்த பொடியன் பிரம்புக்கு பம்மி நிக்காம வாத்தியாரை நேருக்கு நேரா நிமிந்து கேக்குறான்...

"காந்தி கிட்ட வெள்ளைக்காரன் சுதந்திரத்தை இந்தா வச்சிக்கங்க அப்படின்னு சொல்லிக் கொடுத்துட்டுப் போனதை நீங்கப் பார்த்தீங்களா... காந்தி தான் வாங்கிக் கொடுத்தார்ன்னா.. நம்ம ஊர் லாலா லஜ்பத் ராய்.. பகத் சிங்.. ஜாலியன் வாலா பாக்ல்ல ரத்தம் சிந்துன்ன பல்லாயிரக்கணக்கான மக்கள் எல்லாம் எதையும் வாங்கி தர்றல்லயா....

ஒரே பஞ்சாப்பா ஒண்ணா இருந்த நம்ம இன்னிக்கு அந்த பஞ்சாப்ல்ல இருக்க நம்ம உறவுகளை சுதந்திரமாப் போய் பார்த்துட்டு வர முடியுமா? கிடைச்சது சுதந்திரம் இல்லை... "அப்படின்னு அந்தக் காட்சி இன்னும் நீளும் ...

ஓடனே நமக்கும் யோசனை ஓடுச்சு... நம்ம செந்தமிழ் நாட்டு விடுதலை வீரர்களைப் பத்தி...வரிசையா நிறைய பேர்கள் வந்தாலும் அவங்க எல்லாம் பெரிதாகப் பேச படவில்லையோ அப்படின்னு நினைக்க வச்சுருச்சு...

காந்தி அவர்களை இந்த நாட்டின் முகமாக சித்தரிக்க என்ன காரணமாயிருக்கும்? எத்தனையோ ஆயிரம் விடுதலை வீரர்கள் போராட்டக் களத்தில் பொங்கி எழுந்து போராடி வீழ்ந்தும் வாங்கிக் கொடுத்த சுதந்திரத்தின் விலாசம் மகாத்மாவின் பெயரை மட்டும் சுமந்து நிற்க காரணம் என்ன?

மற்றவர்களின் பங்கு மறைக்கப்பட்டதா? காந்தி அவர்களின் பங்களிப்பு மிகைப் படுத்தப்பட்டதா?

எனக்கு ஒண்ணியும் புரியல்ல... ஆனா சம்பந்தில்லாம எங்க மொதலாளி அடிக்கடி சொல்லுற தத்துவம் ஞாபகம் வந்துப் போனது

"பொடியா நீ செய்யற எந்த வேலையும் ஊரும் உலகமும் கவனிக்கும் படி இருந்தா தான் நீ பெரிய ஆள் ஆக முடியும்ன்னு..."

Friday, July 27, 2007

பொடியன் பதிவு விற்பனை மண்டி

நாட்டுல்ல எவ்வளவோ தொழில் இருக்குங்க. எந்தத் தொழில் செய்தாலும் அதில் ஒரு பக்தி வேணும், நேர்மை வேணும், ஒரு நம்பிக்கை வேணும் அப்படின்னு எங்க முத்லாளி சொல்லுவார். நான் பிளாக் எழுதலாம்ன்னு தான் இங்கே வந்தேன், ஆனா வந்த நேரம் எல்லாமே மாறிடும் போலிருக்கு. நம்ம மொபைல் விடாம சிணுங்குது (ஊர்ல்ல இருக்க நம்ம அத்தைப் பொண்ணுகிட்ட ஆசையாப் பேச வாங்குனது. நோக்கியா என் சிரிஸ் மொபைல். விலை அதிகம் தான் ஆனா ஆசையின்னு வந்தா விலை எல்லாம் கண்ணுக்குத் தெரியுதா என்ன?) கிட்டத்தட்ட எல்லா பதிவரும் போனைப் போட்டு பொடியா எங்க பிளாக்கையும் ஒரு நல்ல விலைக்கு வித்துக் கொடுக்க முடியுமா? உனக்கு 10% கமிஷ்ன் தர்றேன்னு எல்லாம் ஆசைக் காட்டுறாங்க. இந்த வியாபாரமும் நல்லா இருக்கும் போலிருக்கே

எல்லாரும் பிளாக் விவரங்களைக் கொடுத்துட்டாங்க. சிலர் விலையை டாலர்ல்ல கேக்குறாங்க. இன்னும் சிலர் யூரோவில்ல கேக்குறாங்க.

எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிகிட்டு நம்ம வியாவாரத்தை ஆரம்பிக்கிறேன். கடவுள் ஆசிர்வதிக்கணும் வியாவாரம் நல்லா போகணும் லாபம் சம்பாதிக்கணும்.

முதல் போணியா இந்தப் பதிவு விலைக்கு வருது. விலைக் கேக்குறவங்கக் கேக்கலாம்.
விலையை யூரோவில்ல கேளுங்க

பூக்களப் பத்தி பல அரும் பெரும் தகவல்கள் நிறைந்த இந்தத் தளம் விற்பனைக்கு வருது

வியாபாரம் குறித்த எல்லா விவரங்களயும் பின்னூட்டங்களின் வழியாவே மெயின்டெயின் பண்ணுமாறு பாசத்தோடுக் கேட்டுக்குறேன்.

சரிங்க, முதல் வியாபாரத்தை நல்லா லாபமா ஆக்கித் தாங்க ப்ளிஸ்

Thursday, July 26, 2007

கச்சேரி TAKE OVER

உலக பதிவு வரலாற்றிலே இது தான் முதல் டேக் ஓவர்ன்னு நினைக்கிறேன்.

எம் பேர் சின்னப் பொடியன் நான் ஒரு மளிகை கடையிலே சம்பளத்துக்கு வேலைப் பாத்தேன். எங்க மொதலாளி கடையிலே பில் போட வச்சிருந்த கம்ப்யூட்டருக்கு கள்ளத்தனமா இன்டர் நெட் கனெக்ஷன் கொடுத்து பிளாக் எல்லாம் படிச்சு பித்தாகி பிளாக் எழுத ஆர்வம் அதிகமாயிருச்சுங்க.

பல நாளா யோசிச்சு சொந்தமா ஒரு பிளாக் ஆரம்பிக்கலாம் அப்படின்னு முடிவு பண்ணேங்க. அப்போத் தான் எங்க மொதலாளி சொன்னார்.

லேய் சின்னப் பொடியா, புதுசா ஆரம்பிச்சா இன்னிக்கு ஓலகத்துல்ல பொழைக்கது கஷ்ட்டம், ஏற்கனவே பிளாக் ஆரம்பிச்சு நடத்த முடியாமத் திணறிகிட்டு இருக்க பிளாக்காப் பார்த்து வாங்கிப் போட்டின்னு வை., சோலி சுளுவா முடியும்ன்னு. என் மொதலாளி வியாபார காந்தம் ஆச்சே. அவர் சொல் படி நானும் முயற்சி பண்ணேன்.

பல் பேத்துக்கிட்டேப் பேசிப் பாத்தேன். பிளாக்கை நல்ல விலைக்கு விக்க நிறைய பேர் தயாரா இருந்தாலும் நமக்கு விலைக் கட்டுப்படி ஆகல்ல. ( நெசமாத் தான் சொல்லுறேன் பிளாக் கூட விலைக்கு தர்றாங்கய்யா.. வாங்க தான் கூட்டம் கம்மியா இருக்கு). பொறவு அப்படி இப்படி விசாரிச்சு நம்ம சங்கம் போர்வாளா இருக்க தேவ் அண்ணன் கிட்டப் பேசி ஒரு வழியா அவர் நடத்திகிட்டு இருந்தக் கச்சேரியை நாங்க வாங்கிட்டோம்ப்பா.

எவ்வளவு பணம் கைமாறிச்சு? யார் எல்லாம் இதுக்கு உதவுனாங்க அப்படிங்கறதை எல்லாம் விவரமா எக்னாமிக் டைம்ஸ்ல்ல இல்ல சி.என்.என் ஐபின்ல்ல் பார்த்துப் படிச்சி அறிந்துக் கொள்ளுமாறு தாழ்மையோடு கேட்டுக்குறேன்..

தேவ் அண்ணன் கேட்டுகிட்டப் படி இப்போதைக்கு பிளாக் பேரை மட்டும் மாத்தாம சென்னைக் கச்சேரின்னு வச்சே நம்ம பதிவுலக பிரவேசத்தை ஆரம்பிக்கிறேன்.

பெரியவங்க எல்லாம் ஆசிர்வதிக்கணும், என்னையும் உங்கள்ல்ல ஒருத்தனா ஏத்துக்கணும்

இப்படிக்கு,

சின்னப் பொடியன்

Friday, July 20, 2007

தலைவி த்ரிஷாவும் டாக்டர் ஷில்பா ஷெட்டியும்

சினிமா நடிகனுக்கு ரசிகர் மன்றம் வைக்கறவன் எல்லாம் முட்டாள்ன்னு ஒரு படிச்ச அரசியல்வாதி பாவம் பிலீங் விடுறார்.. அந்த பிலீங்கின் பிளிடீங் நிக்கறதுக்குள்ளே.. அடுத்தப் பிலீங்க்கு அவரை ரெடி ஆக்கிருவாங்கப் போல இருக்கு நம்ம தங்கத் தமிழ் மகளிர்... ஆமா மகளிரேத் தான்...

இந்த போஸ்ட்டர் அடிக்கறது.. பால் ஊத்துறது... ஊல்ல்லால்லலா அப்படின்னு ஊளையிடுறது.. விசிலைப் போடுறது.. தியேட்டர்ல்ல டிஜிட்டல் பேனர் வைக்கிறது அப்படின்னு ரிலீஸ்க்கு அலம்பல் சலம்பல் சவுண்ட் கிளப்பிகிட்டு இருப்பது வெறும் ஆண் ரசிகர்கள் மட்டும் தான்...ஏன்னா அவங்க அப்படித் தான்.... இது மாதிரி ஏசி ரூம்ல்ல உக்காந்து பொட்டித் தட்டுற அக்காங்க (( கூட வேலைப் பாக்கறவங்களைச் சொல்லுறேன்ப்பா)) நிறைய பேர் அசால்ட்டா கமெண்ட் விடுவது வாடிக்கையான விசயம் தான்.. நாமளும் அதுக்கெல்லாம் எதிர் சவுண்ட் விட முடியாது.. காரணம் அவங்க சொல்லுறதுல்ல ஒரளவுக்கு உண்மை இருந்தது தான்..

இன்னிக்கு எதுக்கு இந்த மேட்டர்ன்னு பாக்குறீங்களா?

காலையிலே ஆபிஸ்க்கு வர்ற வழியிலே அடையார் ஏரியாவில்ல சும்மா பெரிய சைஸ்ல்ல போஸ்ட்டர் எல்லாம் ஜொலிக்குதுப்பா...

எங்கள் தலைவி த்ரிஷா நடித்து வெளிவரும் கிரீடம் படம் பவழ விழா காண வாழ்த்துகிறோம் - த்ரிஷா பவுண்டேஷன்



தலைவி(!!!???) அதுல்ல சும்மா குழந்தைகளோடப் போஸ்... பச்சைக் குழந்தையைக் கையிலே வச்சுக்குன்னு போஸ்ன்னு பின்னுறாங்க...

கிரீடம் படத்துல்ல தலைவி கூட நடிக்கிற தல (அஜீத்)க்கு கூட அவ்வளவு போஸ்ட்டர் பந்தா எதையும் காணும்..என் கண்ணுல்ல படல்லயா இல்ல ஆண் ரசிகர்கள் எல்லாம் அய்யா திட்டுனதைக் கேட்டுத் திருந்துட்டீங்களா

எப்படியோ இதுல்லயும் போட்டிக்குப் பெண்கள் வந்திருப்பது எனக்கு ஆறுதலா இருக்கு... எந்தப் பொட்டித் தட்டுற் அக்காவாது நாக்கு மேல பல் படாம லந்தா நக்கல் விட்டா ...

COME THE HERE LOOK THE THERE அப்படின்னு அவங்க கூத்தையும் கொஞ்சம் காட்டி வாயைக் கட்டலாம் இல்ல..

போற போக்கைப் பார்த்த நம்ம நண்பன் ஒருத்தன் சொல்லுற மாதிரி 2020ல்ல தமிழ்நாட்டுல்ல த்ரிஷா அமைஞ்சாலும் அமைஞ்சிருமோ...இல்ல அட்லீஸ்ட் த்ரிஷா அமைப்போம்ன்னு குரலாவது ஒலிக்கும்ன்னு நினைக்கிறேன்...



அடுத்த 'அம்மா' இவங்க தானா..

அடுத்து நம்ம பெரிய அண்ணா புகழ் ஷில்பா ஷெட்டி டாக்டர் ஆயிட்டாங்களாம்... எங்கேவா..நம்ம இந்திய டாக்டர்கள் எல்லாம் எங்கே பயந்து பம்மி இருக்காங்களோ அதே வெள்ளைக்காரன் தேசத்தில்... ஆமாங்க இங்கிலாந்து தேசத்துல்ல எதோ ஒரு யுனிவர்சிட்டி லீட்ஸ்ன்னு நினைக்கிறேன்... அம்மணியின் பெரிய (!!!!???) சேவையைப் பாராட்டும் விதமா டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவப் படுத்தி இருக்காங்களாம்...


டாக்டருக்கு கட்டிப்பிடி வைத்தியம் தெரியுமாம்


என் பிரண்ட் ஒருத்தன் டாக்ட்ரேட் பண்ணுறேன்னு ஊர் உறவை எல்லாம் விட்டுட்டு வருசக்கணக்கா லக்னோவுல்ல தாவு தீர நோவெடுக்க உழைச்சும் இன்னும் டா கூட அவனுக்கு கொடுத்தப் பாடில்லை.. ஆனாப் பாருங்க அக்கா அசால்ட்டா டிவியிலே அழுது டாக்டர் பட்டம் வாங்கி தலையிலே தொப்பி எல்லாம் சீனாப் போசும் கொடுத்துட்டாங்க...


சரி டாக்டர் ஷில்பா செட்டிக்கும் தலைவி த்ரிஷாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிச்சுட்டு இந்தக் கச்சேரியை முடிச்சுக்குறேன்...

வர்றட்டா மக்கா

Wednesday, June 27, 2007

இன்னும் எட்டாத எட்டு

தலைவர் கொத்ஸ் வழக்கம் போல நம்ம சட்டையைப் பிடிச்சு இழுத்து இந்த எட்டுக்குள்ளேத் தள்ளி விட்டுட்டார்..இப்போ கையிலேக் குச்சியை வச்சுகிட்டு எங்கப்பா எட்டு... சீக்கிரம் போட்டுக் காட்டுன்னு மிரட்டுறார்....இந்தா நம்ம காதல் முரசு அருட்பெருங்கோ அவரும் வாய்யான்னு கூப்பிடுறார் எட்டு போட
என் வாழ்க்கையிலே நடந்த பல சத்திய சோதனைகளை உங்க கிட்ட சொல்லுறேன்...(இப்படி நானும் சொல்லணும்ன்னு எம்புட்டு நாள் விட்டத்தைப் பாத்து யோசிச்சுருப்பேன்)..

1.வியாபாரம்ன்னா நமக்கு சிறு வயசுல்ல இருந்து உசுருங்க..ஆனா அதுக்கு வந்தச் சத்திய சோதனைகள் ஏராளம்ங்க...எட்டாம் கிளாஸ் படிக்கும் போது...நான் சொந்தமாப் படிக்க வச்சிருந்தக் கதைப் பொஸ்தகம் அப்புறம் எங்க அப்பாரு படிக்க வச்சிருந்தப் பொஸ்தகம் எல்லாம் நிறையக் கிடக்குறதைப் பார்த்ததும் நம்ம மனசுல்ல வியாபார திட்டம் ஒண்ணு ஒகோன்னு வளர ஆரம்பிச்சது....பெரிய அட்டை ஓண்ணை ரெடி பண்ணி அதுல்ல "தேவ் லெண்டிங் லைப்ரரி"ன்னு பெருசா எழுதி வீட்டு வாசல்ல தொங்க விட்டு..கஷ்ட்டப் பட்டு கஸ்டமர் எலலாம் புடிச்சு ஆளுக்கு அஞ்சு ரூவா வசூல் பண்ணி உறுப்பினராச் சேத்து வியாபாரத்தை விஸ்தரிக்க யோசிக்கும் போது வந்தது காப்பரீச்சை...

கணிதத் தேர்வுன்னு நினைக்குறேன்...நமக்கு கணித அறிவு ஆறாம் அறிவுக்கும் அப்புறமா ஆண்ட்வன் வைக்க மறந்த அறிவு..எங்கப்பா (ஸ்கூல் வாத்தியார்) தான் நமக்கு ட்யூஷன் மாஸ்டர்.. கொட்டு வாங்கி கதற கதற் படிச்சிட்டு இருக்கும் போது கட்டையிலே போற கஸ்டமர் வந்து கதவு பக்கம் நிக்குறான்..கஸ்டமர் சர்வீசா கணிதமான்னு சத்திய சோதனை எனக்கு....பட்டுன்னு நடு மண்டையிலே விழுந்தக் கொட்டுல்ல.. என் முதல் வியாபாரம் மூட்டைக் கட்டி மூலைக்குப் போனது...

கிட்டத்தட்ட அழுதுகிட்டே அஞ்சு ரூவாயை ரிபண்ட் பண்ணிட்டு கணக்குப் பாடத்து ரிவிசனுக்குத் திரும்புனேன்...அதுக்குப் பின்னாடியும் நம்ம வியாபார ஆசைகள் தொடர்ந்ததும் விதியின் வில்லத்தனம் என்னோடு மோதியதில் போனா போகுதுன்னு நான் விட்டுக்கொடுத்ததும் பின்னாளில் நான் எழுதப் போகும் என் வரலாற்றில் விரிவாய் படித்து அறிந்துக் கொள்ளுங்கள்..

2.சென்னைக் கச்சேரின்னு பெயர் வச்சு பதிவுப் போட்டாலும், நமக்கு பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்ங்கற ஊர்பககம் இருக்க் குளத்துக்குடியிருப்புங்கற குக்கிராமம்ஙக்... ஒரு குளமும் அந்தக் குளத்தின் கரையில் இருக்கும் ஒரு சின்ன நிலப்பரப்பளவு கொண்டது எங்க பூர்வீக கிராமம்... (குளம்ன்னா சும்மா மைல் கணக்குல்ல நீண்டு கிடக்குற குளம், கடம்பாக் குளம்ன்னு பேர்).. சிறு வயசுல்ல அந்த ஊர பெரியவர்கள் நமக்கு வச்ச பட்டப் பேர் மெட்ராஸ்காரன்... எலேய் மெட்ராஸ்காரா எப்போ வந்தா? அந்த அன்பானக் குரல்கள் என் வேர்களின் விலாசம் என நம்புகிறேன்... கிட்டத்தட்ட பத்து வ்ருசம் கழிச்சு இந்த முறை என் மகளோடு என் மூதாதையர் மண் பார்க்க ஊர் போனப் போது.. அந்த குரல் கேட்ட வீதிகளின் வெறுமை என்னை உலுக்கியது... வீடுகள் கேட்பாரற்று கிடந்தது மனத்தைக் குடைந்தது... ஒரு பக்கம் சென்னையின் வேகம்.. இன்னொரு பக்கம் கிராமங்களின் வெறுமை...
எதாவது செய்யணும்ய்யா அப்படின்னு அடிக்கடி மனசு சொல்லுது..

3.நமக்கு ரொம்ப பிடிச்ச விளையாட்டு கபடி...கடைசியா விவேகானந்தாக் கல்லூரி துறைகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் களம் இறங்கி... எதிர் அணி கொஞ்சம் கூட இவு இரக்கம் பார்க்காமல் கதற கதற கை கால்ன்னு அமுக்கி அழுத்தி.. இன்னும் சொல்ல முடியாத கொடுமை எல்லாம் பண்ணி...உச்சக்கட்ட ரவுசா அம்பையரைக் கைக்குள்ளேப் போட்டு எங்களைத் தோற்கடித்து அனுப்பியது இன்னும் மனத்தின் ஓரம் ஒரு மில்லி மீட்டர் வடுவாய் மீதம் உள்ளது.. இப்போவோவும் கபடி ஆட ஆசை இருக்கு.... இந்த வேகமான வாழ்க்கையில் அதுக்கு எல்லாம் நேரம் தான் மிச்சமில்ல...

4.பகல்ல குத்துப் பாட்டு கேட்டாலும்.. ராவுல்ல ராசாத் தாலாட்டு தான் சொகம்ன்னு நம்புற கோடிக்கணக்கான ராசா ரசிகர்கள்ல்ல நானும் ஒருத்தன்... ராசா சென்னையிலே இசை நிகழ்ச்சி நடத்துனப்போ 2500 ரூபாய் சொந்தக் காசு போட்டு டிக்கெட் எடுத்து அஞ்சு மணி நேரம் ராகதேவனின் மழையில் நனைந்தது வாழ்க்கையின் சுவையான அனுபவத்தில் ஒன்றுன்னா.. சென்னையில் நம்ம ரஹமான் க்ச்சேரி பண்ணப்போ ஆபிஸ்க்கு (நைட் ஷிப்ட்) அல்வா கொடுத்துட்டு நம்ம நட்பு வட்டத்தோடப் போய் கால் நோக நோக ஆட்டம் போட்டது இன்னொரு வித்தியாசமான அனுபவம்... இசைன்னா நாங்க அவ்வளவு இளிச்சவாய்த் தனம் புடிச்சவங்கன்னு சொல்ல வந்தேன்.. புரிஞ்சுக்கங்க..

5.அரசியல்ல அப்படி ஒரு ஆர்வம் நமக்கு.. எட்டாம் கிளாஸ்ல்ல கணக்கு அறிவு கொஞ்சம் கம்மியானப் போனக் காரணத்தால... கள்ள ஓட்டுப் போட்டு கூட இருந்த நண்பர்களாலே தோற்கடிக்கப்பட்ட ஒரு நல்லவன் பதிவை இப்போ நீங்க எல்லாம் படிச்சுட்டு இருக்கீங்க...எல்லாம் ஒரு சாக்லேட் பிரச்சனையாலே கிளாஸ் லீடர் தேர்தலில் நூல் இழையில் தோற்று போனேன்..வகுப்புக்கு வராதவன் ஓட்டையும் போட்டு என் கிளாஸ் லீடர் கனவில் பெரிய ஓட்டையைப் போட்டார்கள்... என்னய மாதிரி எனக்கு சிவிக்ஸ் (குடுமியல்) எடுத்த டீச்சரும் கணக்குல்ல கோட்டைய விட்டாங்க...நான் கோட்டைக்குப் போக முடியல்ல அன்னிலிருந்து அரசியலை ஆழமாய் பார்க்கத் தொடங்குனேன்... இன்னும் ஆழமாப் பாத்துகிடே இருக்கேன்... நம்ம பன்னிக்குட்டி ராமசாமி சொல்ற மாதிரி அரசியல்ல நான் தோத்தது எல்லாம் ரொம்ப சாதாரணம் அப்பா

6.திட்டம் போடாம தேசந்தரமாப் பயணம் போறதுன்னா.. எடு வண்டின்னு ரைட் விடுற அளு நானு.. யோசிக்காம.. சும்மா ஒரு நாள் நாடு நகரம் காடு கரை எல்லாம் சுத்தலாம்ன்னு சொல்லி கிளம்புறது கல்லூரிகாலத்துல்ல இருந்து பழகுன விசயம்.. இன்னுமும் தொடருது.. அப்படி போய் வந்த பயணங்களில் மறக்க முடியாதது கர்னாடகா மாநிலத்திலுள்ள ஜாக் நீர்வீழ்ச்சி தான்.. சும்மா 2 கீலோ மீட்டருக்கு அதிகமான ஆழமானப் பாதையில் அருவி விழும் இடம் தரிசிக்கும் ஆவலில் இறங்கி உயிருக்குச்ச் சேதம் இல்லாம திரும்புனது எங்க குடும்பத்து மக்கள் செஞ்சப் புண்ணியம்ன்னு நினைக்கிறேன்..இப்படி பயணம் போகும் போது சுமோ மாதிரி வண்டிகள் எடுத்துட்டுப் போறது பழக்கம்.. அந்த ஓட்டுனரோடு ஐக்கியமாகி உள்ளூர் தகவல்கள் வாங்குவது சுவரஸ்யமான விசயம்..சில சமயம் புயல் மழை பாதை தவறி போய் இப்படி சில இரவுகளைச் சாலையோரம் வண்டியிலே கழித்த அனுபவமும் உண்டு.. மொத்தத்தில் நமக்கு பயணப்பித்து ஜாஸ்திங்கோ..

7.எந்த மதத்தில் பிறந்து வளர்ந்தேனோ அந்த மதம் எனக்குச் சொன்னக் கடவுளை ஆழமாய் நம்பும் ஆத்திகன் நான்.. அப்படி இருந்தாலும் என் மதம் சார்ந்த மனிதர்கள் இன்றளவும் சொல்லும் மதத்தில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை.. அதிகமா இதைப் பத்தி பேசுனா... உனக்கு நல்லது நடக்காதுன்னு சொல்லி பெரியவங்கப் பயமுறுத்தி வச்சுருராங்க... மதம் விட மனிதம் முக்கியமல்லவா...மத வாதம் வேண்டாம் எனபது என் கருத்து.. ஆனால் மதவாதிகள் சொல்லுவதோ மதத்திலே வாதம் கூடாது என்று... அட போங்கப்பா நீங்களும் உங்க பொழப்பும்..
I BELIVE IN THE GOD WHO BELIEVES IN ME..

8.நட்புக்கு என்றும் மரியாதை கொடுக்கணும்ன்னு இயன்ற வரை முயற்சிப்பேன்..
எனக்கு நண்பர்கள் குறைவு.. ஆனால் நான் நிறையப் பேருக்கு நண்பன்....(அய்யோ சும்மா பஞ்ச் வந்து தானா உக்காருதுங்க!!!)
இந்த ஒற்றை வரியிலுள்ள பொருளை நட்புள்ளம் கொண்டவ்ர்கள் அனைவரும் தங்கள் வாழ்விலும் உணர்ந்திருப்பார்கள் அப்படின்னு நினைக்கிறேன்...

எட்டுப் போட்டாச்சு இனி எகிறலாம்ல்ல

எட்டுக்குள் அழைப்பவர்கள் :-
1. ஜொள்ளு பாண்டி
2. கொங்கு ராசா
3. பினாத்தல் சுரேஷ்
4. JK
5. நந்தா
6. சுதர்சன் கோபால்
7. சந்திப்பு
8. அனுசுயா

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

Monday, June 25, 2007

ஆபிஸர் கவிஞர் ஆகிறார்

வணக்கம் மக்கா...

கொஞ்ச நாளா நம்ம ஆபிசரைப் பத்தி நான் எதுவும் பேசல்லயேன்னு ஊருக்குள்ளே ஆபிசர் ரசிகர்கள் கிட்ட இருந்து மெயிலாக் குவிஞ்சுப் போச்சு...

இப்போ எல்லாம் நம்ம ஆபிசர் ரொம்ப அமைதியாயிட்டார்.. அடிக்கடி மோவாயைத் தடவிகிட்டு விட்டத்தைப் பார்க்கிறார்..போன வாரம் உக்காரருற சீட்டுக்கு மேலே தெர்மாக்கோல்ல செஞ்ச நிலா ஒண்ணைக் கட்டி தொங்கவிட்டிருக்கார்...அந்த நிலாவைச் சாய்ஞ்சிட்டேப் பாக்குரதும..சைட்ல்ல பாக்குரது...மல்லாக்கப் படுத்துட்டேப் பாக்குறதுன்னு ஒரே ரவுசு..அப்புறம் தமிழ்ல்ல கவிதைப் போடறவங்களை எல்லாம் தேடி தேடிப் படிக்க ஆரம்பிச்சதல்ல.. அவர் மானிட்டர்ல்ல தமிழ் மணம் வீச ஆரம்பிச்சுருச்சு...ஆமாய்யா ஆபிசர் நெட்ல்ல கவிதைப் பதிவாப் படிக்க ஆரம்பிச்சாட்டாரு

ஒவ்வொரு எழுத்தாக் கூட்டிப் பெருக்கி வகுத்து ஆபிசர் கவிதைப் படிக்குறதை அவருக்கு தமிழ் சொல்லிக் கொடுத்த வாத்தியார் மட்டும் பாத்துருந்தார்ன்னா அவருக்கு கண்ணுல்ல வெந்நீயே வந்துறும்..ஆபிசரின் இந்த 'திடீர்' கவிதைத் தாகத்துக்குக் காரணம் ஆபிஸ்ல்ல ஒருத்தருக்கும் புரியாமப் பெரும் கலவரமாப் போயிருச்சு

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நாங்க எல்லாரும் பருத்திவீரனை என்ன ஏதுன்னு விசாரிக்க அனுப்புனோம்..

"சித்தப்பூ , நல்லாத் தானே இருந்த.. ஆன் சைட்க்கு ஆடப் போலாம் வாய்யான்னு சொன்னா..ஆலிவுட் ஹிரோ ரேஞ்சுக்கு ஆட்டயக் கிளப்புவன்னு பார்த்தா.. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகுன்னு தாடி வளத்துருவே போலிருக்கு..."

"தம்பி.. நீ சின்னப் பைய அப்படி தள்ளி நில்லு. நான் சிந்திக்கும் போது சீண்டிப் பாக்காதே.. சொல்லிட்டேன்..ஆமா"

"யோய் சித்தப்பு சும்மா சீனைப் போடாதய்யா.. எங்கே இப்போ நான் சொன்ன அகர முதல் எழுத்து.. வரிக்கு விளக்கம் சொல்லு பாப்போம்..."

"டேய் சின்னப் பையலே.. நான் கவிதையைப் பத்திச் சிந்திச்சிட்டு இருக்கேன். நீ கவனம் சிதறுர மாதிரி சில்மிசம் பண்ணாதே மறுபடியும் சொல்லிட்டேன்.."

"யோவ் சித்தப்பு, நாங்களும் திருவள்ளுவர் சொன்னதைத் தானேச் சொன்னோம்.. நீ எந்த அளவுக்குக் கவிஞர்ன்னு தெரிஞ்சுக்குவோம்ல்ல...சொல்லுய்யா" பருத்தி வீரனும் விடவில்லை.

"இங்கேப் பார்றா.. கேக்குறான் கேனப்பைய... திருவள்ளுவர் எங்கேடா கவிதை எழுதுனார்.. அவர் காலத்துல்ல கவிதையே கிடையாதுரா தம்பி.. போ போய் கோட்ல்ல கொட்டிக் கிடக்குற பூச்சியை மருந்தடிச்சுக் கொல்லு..." சும்மாத் தெனவெட்டாச் சொல்லிவிட்டு காலைத் தூக்கி டேபிள் மேல வச்சுகிட்டு சிந்திக்க ஆரம்பித்தார் ஆபிசர்.

"சித்தப்பு.. நெசமாலுமே கொலையாகிப் போயிரும்... திருவள்ளுவர் அப்புறம் என்ன எழுதுனார்.. அதையாவது சொல்லு..." பருத்தி வீரனும் கொடாகொண்டான் ஆச்சே.. நடக்கிறதை எல்லாம் நகராம நாங்களும் பாத்துகிட்டு இருந்தோம்.

"தம்பி.. தவம் மாதிரி இருக்கேன்..தகராறு ஆயி போயிரும் சொல்லிட்டேன்... இன்னும் ரெண்டு நாளைக்குள்ள நான் நாலு கொயர் நோட்டு நிறைய கவிதை எழுதியாகணும்... சரி.. திருவள்ளுவர் கேள்விக்குப் பதிலைச் சொல்லிட்டா சிந்தாமச் சிதறாம சீட்டுக்குப் போய் சின்சியரா வேலைப் பாப்பீயா சொல்லு பதிலைச் சொல்லுரேன்.." ஆபிசர் லைட்டா இறங்கி சமரசத்துக்குத் தயார்ங்கற மாதிரி சொன்னார்.

'ம்ம்ம்' என்றான் பருத்திவீரன்.. எல்லாரும் ஆபிசரின் அந்தப் பதிலுக்காகக் காதைத் தீட்டிக் கவனமானோம்..

"நல்லாக் கேளு.. திருவள்ளுவர் காலத்துல்ல கவிஜை எல்லாம் கிடையாது... அவர் எழுதுனதுக்கு பேர் செய்யுள்.. பாடப் பொஸ்தகத்துல்ல படிச்சிருப்ப.. இப்போ ரொம்பக் கேப் விழுந்ததாலே மறந்துப் போயிருக்கும்.. பரவாயில்ல.. கவிதைக்கும் செய்யுளுக்கும் வித்தியாசம் தெரியாம வளந்துருக்கடா நீ.. ரொம்ப அப்பாவி புள்ளயா இருக்கடா நீயு.. என்னத்தச் சொல்ல இந்தக் காலத்துல்ல வீட்டுல்ல பிள்ளைகளுக்கு யார் தமிழ் சொல்லிக் கொடுத்து வளக்குறாங்க"

கொலவெறியில் மானிட்டர் எடுத்து மண்டையில் அடிக்கப் போன பருத்திவீரன நாங்கப் பத்து பேர் பாஞ்சுப் பிடித்து அவன் சீட்டுல்ல உக்கார வைக்க பயங்கரப் பாடுபட்டுட்டோம்..
ஆனா இது எதையுமே கண்டுக்காம.. ஆபிசர் திரும்பவும் விட்டத்தையும் நிலாவையும் பாத்துட்டு இருந்தார்..பருத்திவீரனுக்கு வெறி அடங்கவே இல்லை...ஒரு வழியா தன்னைத் தானே அடக்கிட்ட பருத்திவீரன்...

"என்னை விடுங்கப்பா.. அந்த ஆளை எதுவும் செய்ய மாட்டேன்.. ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டுட்டு வந்து என் வேலையைப் பாக்குறேன்"னு எழுந்துப் போனான்...

அது என்னக் கேள்வியோன்னு எதுக்கும் உஷாரா இருப்போம்ன்னு நாங்களும் நாலுப் பக்கமும் தயார நின்னுக்கிட்டோம்.பருத்தி வீரன் ஆபிசர் பக்கமாய் போய் கிட்டத்தட்ட கண்ணுல்ல கண்ணீர் பொங்க...உள்ளுக்குள்ளே நாங்க எல்லாரும் ஒரு வாரமாக் கேக்க நினைச்சு அடக்கி வச்சிருந்தக் கேள்வியை உணர்ச்சிப் பொங்கக் கேட்டான்..

அந்தக் கேள்வி "என்னக் கொடுமை இது ஆபிசர்?" சும்மா மொத்த ஆபிசும் அந்தக் கேள்வியக் கேட்டு அதிர்ந்துச்சு இல்ல..

அன்னிக்கு சாய்ங்காலம் சுமார் ஓன்பது மணிக்கு நம்ம ஆபிசரின் கவிதை அறிவினை வளர்க்க அ வில் ஆரம்பித்து கோவில் முடியும் ஒரு பிரபல இணையக் கவிஞரைச் சந்திக்க ஏற்பாடு செய்தான் பருத்திவீரன்...

"கவிஞரே பெருசா எல்லாம் வேணாம் ஒரு மூணு நாலு வரி கவிதை எழுதற அளவுக்குத் தேத்தி விட்டுருங்கப் போதும்" அப்படின்னு பருத்தி வீரன் பலமாய் சிபாரிசு பண்ணான்.

தொண்டையைச் செருமிய கவிஞர்..

"நண்பரே...கவிதை எளிது...சொல்கிறேன் கேளுங்கள்
கடல் தொடு...வான் தேடு..மழையில் நனை..புல்லில் படு..பூவை பாடு...
ஆம் இயற்கையை ரசி..இதயத்தில் கவிதை இறக்கை கட்டும்"

'ம்க்கும்.. நீங்கச் சொல்லுற எதுவும் நம்ம சித்தப்புவுக்கு செட் ஆகாது.. முந்தாநாள் மழையிலே மெரீனால்ல கடலையே வெறிச்சு வெறிச்சு பாத்துகிட்டே ரொம்ப நேராமா நின்னுருககார்.. கவிதை வர்றல்ல.. போலீஸ் தான் வந்துச்சு வந்து சித்தப்புவைச் சந்தேகக் கேசுல்ல அள்ளிகிட்டு ஈ - 1 ஸ்டேஷனுக்குக் கொண்டுப் போயியிருச்சு.. விடியற வரைக்கும் வெளியே விடல்லயே..."

கேப் விட்டு பருத்தி வீரன் தொடர்ந்தான்.

"வானம் பாக்குறேன்னு.. வாயைப் பொளந்து வானம் பார்த்ததுல்ல.. குருவியிலந்து... பருந்து வரைக்கும்...
வேணாம் அப்படின்னு பருத்தி வீரன் வாயைப் பொத்தினார் ஆபிசர்... சித்தப்புவின் மானம் நாணம் கோணம் கருதி அத்தோடு நிறுத்திக் கொண்டான் வீரன்.

கவிஞருக்கே கொஞ்சம் சவாலாகிப் போனது...வேற மாதிரி ஆரம்பிப்போம்ன்னு யோசிச்சவர் ஆபிசரைப் பார்த்தார்.. ஆபிசர் பவ்யமா கை எல்லாம் கட்டிகிட்டு அஞ்சாப்பு படிக்கிற பைய மாதிரி சின்சியாராப் பாடம் கேட்க தயாரானார்.

"நண்பரே.. நீங்க யாரையாவது காதலிச்சிருக்கீங்களா?"

"எனக்கும் காதலிக்கணும்ன்னு ஆசை தாங்க.. பொண்டாட்டி புள்ளன்னு ஆனப் பொறவு.. அதுக்கெல்லாம் நேரமில்லங்க.. அதுல்லயும் என் பொண்டாட்டியை வச்சுட்டு நான் யாரையும் சைட் அடிச்சாலே அவளுக்கு ஆவுறதுல்ல.. இதுல்ல காதல் எல்லாம் கொஞ்சம் கஷ்ட்டம் தான்" படு சீரியசாய் பதில் சொன்னார் ஆபிசர்..

கவிஞர் குடித்தக் கோக் குப்பென்று அவருக்குப் பொறை ஏறியது.. பருத்திவீரனை பரிதாபமாய் பார்க்க.. பருத்தி KINDLY ADJUST என்பதாய் பதிலுக்குப் பார்த்தான்..

ஸ்ப்பப்ப்பா என்ற கவிஞர்.. நிதானமாய் நம்ம ஆபிசர் தோளில் கைப்போட்டு... உங்க கல்யாணத்துக்கு முன்னாடி உங்களுக்கு வர போற மனைவி பத்தி ஒருவித எதிர்பார்ப்பு இருந்து இருக்கும்.. அந்த எதிர்பார்ப்பு அந்த உணர்வு தான் காதல்.. காதல் கவிதை... கவிதை காதல் எனச் சொல்ல..வேலியில் விழுந்த வெள்ளாட்டுக் குட்டியாய் ஆபிசர் முழிக்க.. கவிஞர் கொஞ்சம் இறங்கி வந்தார்..

"நண்பரே.. திருமணத்திற்கு முன் வரப் போகும் உங்கள் மனைவியிடம் என்ன எதிர்பாத்தீங்க?" அப்படின்னு தோள் தொட்டுக் கேக்க.. ஆபிசர் முகம் குஷியானது.. வாயெல்லாம் சிரிப்புப் பொங்கச் சொன்னார்...

"அதுங்க கவிஞரே.. அதிகமா எல்லாம் எதிர்பார்க்கல்ல ஒரு 25 பவுன்... அப்புறம் 50 ஆயிரம் ரொக்கம்.. இது வீட்டுல்ல. நான் எதிர்பாத்தது ஒரே ஒரு ஹீரோ ஹோண்டா ஸ்பெளண்டர் பைக்.. அதைத் தரமா என் மாமனார் ஏமாத்திட்டாருங்க... பழையப் பீலிங்க்ஸ் எல்லாம் கிளப்பிட்டீங்கன்னு சிரிப்பு மறைந்து லேசா விசனப் பட ஆரம்பித்தார் ஆபிசர்.

கவிஞர் கன்னாப்பின்னாவெனக் கலங்கிப் போனார் என்பதைச் சொல்லத் தான் வேணுமா என்ன?

பருத்திவீரன் கவிஞரின் மனவலிமையை அதிகப்படுத்த பார்வையாலே முயன்றான்.. கவிஞரும் கஷ்ட்டப்பட்டு மனவலிமையைச் சேர்த்துக் கொண்டு ஆபிசரைப் பாரத்துக் கேட்டார்..

'இது வரைக்கும் நீங்க எதாவது கவிதை எழுதியிருக்கீங்களா?'

'ஓ' என்று தலையை ஆட்டிய நம் ஆபிசர், தன்னுடைய லேப் டாப்பைத் திறந்தார்...
கவிஞரோடு பருத்திவீரனும் ஆர்வம் ஆனான்...அந்தப் பக்கத்தைத் திறந்தார்...அதுல்ல்த் தெரிஞ்சது ஒரே வார்த்தை....

கொட்டை எழுத்துல்ல கவிதை அப்படின்னு ஒரே வார்த்தை

'இப்போத் தான் எழுத ஆரம்பிச்சுருக்கேன்.. முதல் வார்த்தை வந்த வேகத்துல்ல அடுத்த வார்த்தை வரல்ல..காத்துக் கிடந்தேன்..ஒரு கட்டத்துல்ல ஒரு வேளை நமக்கு கவிதையே வராதோன்னு எனக்கே எம் மேல சந்தேகம் வந்த சிச்சுவேஷ்ன்ல்ல நம்ம கவிப்பேரரசு வைரமுத்து பாட்டு ஒண்ணு கேட்டேன்.. அப்போத் தான் நான் ஒரு கவிஞர்ன்னு எனக்கே கன்பர்ம் ஆச்சு..'

ஆபிசர் பேச பேச, நம் கவிஞர் கரண்ட் கம்பியைக் கடவாய் பல்லுக்குள்ள எடுத்து வச்ச மாதிரி அதிர்ச்சியில் உறைந்துப் போனார்..

'சித்தப்பு.. நீ கவிஞர்ன்னு எப்படி சித்தப்பு உனக்கே கன்பர்ம் ஆச்சுன்னு' பருத்திவீரன் பரம பவ்யமாக் கேக்க...

"இந்தா இந்தப் பாட்டை நீயும் கேளு.. நீங்களும் கேளுங்க...' கவிஞர் பக்கமும் ஐ பாட்டை நீட்டினார் ஆபிசர்... பாட்டில் ஓடிய வரிகள்....
" வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞன் இல்லையா... "அந்த வரி அப்படியே ரிப்பீட்டில் ஓட... கவிஞர் எகிறி அப்பீட்டானார்....

பி.கு: வர்ற ஜுலை 10 ஆபிசருக்குப் பத்தாவது கல்யாண நாளாம் அதுக்கு அவர் வீட்டம்மாவுக்கு கவிதை ஒண்ணு எழுதித் தருவதாய் ஒரு மப்பானப் பொழுதில் வாக்குக் கொடுத்துருக்கார் ஆபிசர்... அந்த அம்மாவும் அதை நம்பி நாலுப் பேத்துக்கு எங்க வூட்டுகாரரு வெறும் பொட்டி மட்டும் இல்ல கவிதை எல்லாம் சும்மா அப்படித் தட்டுவாரு தெரியும்ல்லன்னு சொல்லி இவரை உசுப்பிவிட்டிருக்காய்ங்க... வர்ற ஜூலை 10 வீட்டம்மா தோழிகள் எல்லாரும் கவிதைக் கேக்க வர்றோம்ன்னு சொல்லியிருக்காங்களாம்...

இந்தா ஆபிசர் ஆகாயம் பாக்க ஆரம்பிச்சுட்டார்ப்பா..... ஒரு ஆபிசர் கவிஞர் ஆகிறார்.... ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்

Thursday, June 21, 2007

சிவாஜி எப்படி - 4

சிவாஜி எப்படி - 3





'A Perfect film has not been made so far... '

சிவாஜி வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வாரம் முடிந்த நிலையில்.. படம் ஒரு மாபெரும் வெற்றி என அனைத்துத் தரப்பினராலும் ஒப்புக்கொள்ளப் பட்டு விட்டது...

சுமார் 250 கோடி ரூபாய் வரை வியாபாரம் ஆகும் என நாட்டின் முன்னணி வியாபார நாளிதழ் செயதி தருகிறது

சிவாஜியின் இமாலய வெற்றிக்கு காரணம் என்ன?

சிவாஜியின் வெற்றிக்கு காரணங்களாகப் பொதுவாகச் சொல்லப்டும் விஷயம்... படத்தைத் தயாரிப்பாளர்கள் சந்தைப் படுத்திய முறை.. அதற்கு ஏற்படுத்திய பிரமாண்டமான முன் வெளியீட்டு விளம்ப்ர யுக்திகள்...இந்த வியாபார உக்தியின் மூலம் படம் குறித்த ஒரு படு பிரமாண்ட் எதிர்பார்ப்பு எல்லா மட்டங்களில் கிளம்பிவிட்டிருந்தது...

ஒரு ஆபாயகரமான உக்தி தான் இது என்றாலும், ரஜினி என்ற சூப்பர் ஸ்டாரையும் அவருக்கு இருக்கும் முரட்டுத் தனமான விசுவாசிகளையும் அளவுக்கு அதிகமாகவே நம்பி ஏவி.எம் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்... ரஜினி அவர் ரசிகர்களை ஏமாற்றவில்லை.. ரசிகர்களும் கல்லாக் கட்ட தங்கள் உதவியைச் செய்ய தவறவில்லை.

எனக்கும் ரஜினியைப் பிடிக்கும்.. ரஜினியை ரசிப்பவன் என்ற முறையில் சொல்லுகிறேன்...

சிவாஜி முடிந்து வெளியே வரும் போது.. ஒரு சின்னப் பையன்.. எட்டு பத்து வயதிருக்கும்..அவன் தந்தையிடம் " அப்பா ரஜினி என்னமா அடிக்கிறார்.. சும்மா பறந்து பறந்து ட்சூயும் .. ட்சூயும் அப்படின்னு... கூல்ல்ல்ல்ல்ல்"

இதே தான் இதே தான் இருபது வருடத்துக்கு முன் நான் என் அப்பாவிடம் ரஜினி பார்த்து ஆச்சரியப்ப்பட்டுச் சொன்னது.. இருபது வருடங்கள் தாண்டியும் ஒவ்வொரு முறையும் ரஜினி படம் வரும் போது எனக்குள் இருக்கும் அந்த சிறுவன் ரஜினியால் தட்டி எழுப்பப்படுகிறான்.. ரஜினி மேஜிக் பார்த்து ஆச்சரியப்படுகிறான்...


இந்தக் கருத்தை நம்ம பதிவுலகத்தில் இளவஞ்சி முதல் என்னையும் சேர்த்துப் பலர் சொல்லியாச்சி..ரஜினி படங்கள் மீதான எங்கள் ஈர்ப்புக்கு காரணம் இது தான்...

ITS GOOD TO BE A CHILD AGAIN...THANKS TO RAJINI BRAND ENTERTAINMENT

ஹாலிவுட்க்கு ஜேம்ஸ் பாண்ட், ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் இப்படி பல சூப்பர் ஹீரோக்கள்... உலகெங்கும் ரஜினி ரசிகர்களுக்கு எல்லாம் கலந்த ஒரே வடிவில் சூப்பர் ஹீரோவாக ரஜினிகாந்த்...






இந்த பதிவினை ஒரு விம்ரசனமாக எழுதாமல் சிவாஜி ரஜினி குறித்தான என் பார்வைகளாக மட்டுமே பதிவு செய்துள்ளேன்...

இப்போ நாலு பகுதியாகக் கேட்டு வந்த சிவாஜி எப்படி? கேள்விக்கான பதிலைப் பார்ப்போமா..

இணையம் பத்திரிக்கை எனப் பல இடங்களில் சிவாஜி விமர்சனங்களில் நீங்கள் படித்த வரிகள் தான் .. நானும் வழிமொழிகிறேன்.. சிவாஜி நோ லாஜிக்.. ஒன்லி சூப்பர் ஸ்டார் மேஜிக்

பாருங்கள் குடும்பத்தோடு... மகிழுங்கள்....ஓ.க்கே இத்தோடு சிவாஜி கச்சேரி ஸ்டாப்....

Wednesday, June 20, 2007

சிவாஜி எப்படி - 3

சிவாஜி எப்படி - 2



சினிமா என்பது ஒரு கனவுத் தொழிற்சாலை இந்தக் கருத்து பரவலாக அனைவராலும் ஏற்றுகொள்ளப் பட்டக ஒன்று.. கனவுகளின் வியாபாரம் அங்கு படு ஜோராக காலம் காலமாக நடந்து வருகிறது.. உலகெங்கும் இந்த வியாபாரச் சந்தையில் கொள்வோரும் கொடுப்போரும் அதிகம்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெரும்பான்மையானப் படங்கள் சந்தைப்படுத்துதலுக்குத் தோதாகவே எடுக்கப்பட்டவையாக இருக்கும்.. ரஜினியின் படங்கள் தமிழ் சினிமாவின் வியாபார எல்லைகளை விரிவுப்படுத்தி உள்ளன என்பதில் எந்தவொரு ஐயமிமுல்லை...

சிவாஜி வெளியாகி முதல் வாரத்திலேயே ஐரோப்பிய பாக்ஸ் ஆபிஸில் சூடுப் பரப்பதாய் தகவல்கள் வருகின்றன..சிங்கப்பூர் மலேசியா நாடுகளில் வியாபாரம் தூள் பரத்துவதாய் நெட்ல் காணக் கிடைக்கும் சினிமாச் செய்திகள் சொல்கின்றன... ஐக்கிய அரபு நாடுகளின் திரையரங்குகளில் புது வரலாறு படைக்கப்படுவதாய் பேச்சுக்கள் எழுகின்றன... ஜப்பான் கதைகளை பேசி நமக்கு அலுத்து விட்டது. சீனாக்காரர்களும் சிவாஜி ரஜினியைக் காண ஆயத்தம் ஆகி வருவதாய் தயாரிப்பாளர் தரப்பு தெரிவிக்கிறது.வங்காள மாநிலத்திலும் கொல்கத்தாப் போன்ற நகரங்களில் சிவாஜி வரும் வாரம் திரையிடபடுகிறதாம்..

தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய சந்தை உருவாக்கிக் கொடுப்பதற்கு ரஜினியும் பங்கு அளிக்கிறார்.. அந்தப் பங்களிப்பு கொஞ்சம் அதிகமாகவே உள்ளது என்பது உள்ளூர் விம்ர்சகர்கள் ஏற்க மறுத்தாலும் அது உண்மை எனபது உண்மை.

"எங்க தலைவர் படம் இப்போ உலகமெல்லாம் ஓடுதுங்க.. ஆனாலும் பாருங்க உள்ளூர் மக்க இன்னும் அவரை இந்தச் சின்ன வட்டத்துக்குள்ள சிக்க வைச்சிரணும்ன்னு விமர்சனமாப் பண்ணித் தள்ளுறாங்க... அவருக்கு எதுக்குங்க உள்ளூர் அரசியல்.. அவர் உலக ரேஞ்சுக்கு படம் பன்ணிகிட்டு போயிகிட்டுருக்கார்.. நடிகராக அவர் அடைஞ்சுருக்க அடையும் சாதனைகளை வெற்றிகளைப் பாத்து நாங்களும் சந்தோசப்படுறோம்..."

சிவாஜி இடைவேளையில் கான்டினில் காபி குடித்தப்போது ஒரு ரசிகரின் கருத்து காதில் விழுந்தது..

அட ஆமா.. நம்மூர் படத்துல்ல பட்டயக் கிளப்புன ரஜினிங்கற நடிகர் ஒருத்தர் இன்னிக்கு தன் வழக்கமான ந்டிப்பால்.. அதே ஜனரஞ்சகமான படைப்பால்...அதே தமிழ் படம் வாயிலாக இன்று உலக பொது பொழுதுபோக்கான சினிமாவின் உலகளாவிய ரசிகர்களை மகிழ்விக்கும் நிலைக்கு தன் தொழிலில் உயர்ந்துள்ளார்...அந்த உயர்ச்சிக்குக் கொடிப் பிடிக்காவிட்டாலும்.. நம்ம மக்கள் அந்த உயர்ச்சியை இகழ்ச்சியாய் பார்க்காமல் இருக்கலாமோ...

தட்டிக் கொடுக்கா விட்டாலும் தட்டி விட முயற்சியாவது செய்யாமல் இருக்கலாமோ...

பொதுவாக எங்கும் வெற்றிகள் விமர்சிக்கப்படுகின்றன... இருப்பவனை இல்லாதவனும் இயன்றவனை இயலாதவனும் விமர்சிப்பதாய் மேலுக்கு தோன்றும் சமாச்சாரங்கள்...

பொதுவா விமர்சனங்கள் குறித்து என்னுடைய கருத்து..EVERY BODY HAS A STRONG AND JUSTIFIABLE REASON FOR HIS COMMENTS AND SO DO I....

சரி சிவாஜியின் விமர்சனம் ரிட்டன்ஸ் இப்போ..

இடைவேளை வரை காமெடி, காதல், வில்லனோடு மோதலுக்கான அடித்தளம் என நகரும் சிவாஜி.. இடைவேளைக் காட்சியில் வில்லனோடு வெடிக்கும் மோதலின் உச்சக்கட்டத்தோடு.. சிவாஜி சீறும் சிங்கமாக சில்லரைக் காசை சுண்டிப் போட்டு சவால் விடுவதுமாய் நிற்கிறது...




இடைவேளைக்குப் பின் சூப்பர் ஸ்டார் பார்மூலா புதுப் பொலிவுடன் திரையில் அனல் கிளப்புகிறது...

கனவுகளின் மொத்தமுமாய் ரஜினி அதிரடிகளை அரங்கேற்றுகிறார்...

"நான் சொன்னா நீ கேட்கணும்.. அடம் பிடிச்சா ஆப்பு அடிப்பேன் ..." என்று அரசாங்க உயர் ஊழியன் முதல் அரசாங்கம் வரை 'ஆபிஸ் ரூம்' ஆட்டம் காட்டி சும்மா அதிருதுல்லன்னு விசிலையும் கைத்தட்டல்களையும் அள்ளி சுவிங்கம்மாய் வாயில் போட்டு மென்று கொண்ட திரையில் தீ தெறிக்க ராஜ நடைப் போடுகிறார் சூப்பர் ஸ்டார்..

வில்லன்களுக்கு அல்வாக் கொடுத்து சும்மா எமலோகம் வரை சென்று அங்கு எமனுக்கு ஒரு ஹலோ சொல்லிவிட்டு நட்பான டாக்டர் ரகுவரனும், அன்பான மனைவி ஸ்ரேயாவும் பாசக்கார 'அம்மாத் தம்பி' விவேக்கும் கூப்பிட்டு விட திரும்ப மண்ணுலகம் திரும்புகிறார் சூப்பர் ஸ்டார்

திரும்புனவர் சும்மா வராமால்.. படுக் கெத்தா வர்றார்...


சிவாஜியாச் செத்து எம்.ஜி.ஆரா வந்து மேட்ரிக்ஸ் பாணியில் பறந்து பாயந்து சண்டைப் போட்டு வில்லனையும் முடிக்கிறார் படத்தையும் முடிக்கிறார் ரஜினி...

எத்தனை ஜாம்பவான்கள் இருந்தாலும் ரஜினி ரசிகர்கள் பார்ப்பதும், ரசிப்பதும், கொண்டாடுவதும், கூத்தாடுவதும் ரஜினி... ரஜினி மட்டுமே...

அதுப் போல ரஜினியை விமர்சிப்பவர்கள் குறைக்காணுவதும்..குற்றம் சொல்ல விழைவதும்..குத்திக் காட்ட நினைப்பதும்... ரஜினி... ரஜினி மட்டுமே...

அந்த வகையில் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமன்றி ரஜினியை வைத்து விமர்சித்து குறை சொல்லி குற்றப்படுத்தி கும்மியடிக்கும் அனைத்து தரப்பினருக்கும் குறைவில்லாத விருந்துப் படைத்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்...

சிவாஜி எப்படி அடுத்தப் பகுதியில் முடியும்..

Monday, June 18, 2007

சிவாஜி எப்படி - 2

சிவாஜி எப்படி? - 1

"It doesnt matter how deep u fall.. All that matters is how u bounce back..."


பாபா தோல்வி என ஊடகங்களும் மற்றவர்களும் பொங்கி பொங்கல் வைத்து முடித்தக் கதையும் அதன் பின் வந்த விசுவரூபம் எடுத்த சந்திரமுகியின் வெற்றியும் இந்த சொல்லாடலுடன் பொருத்திப் பார்க்க முடிகிறது.. விழுவது அவமானம் அல்ல.. விழுந்தேக் கிடப்பது தான் அவமானம்.. பொதுவாக ரஜினி படங்களில் மறைமுகமாக ஒலிக்கும் கருத்து இது தான்.. இந்தப் பாணி கருத்து கொண்ட படங்கள் தான் அவரை இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக.. 'தலைவர்' என்ற அடைமொழியோடு இன்றளவும் நடைப்போட வைக்கிறது எனச் சொல்லலாம்.

திரைப்படங்களில் மூன்று மணி நேரங்களில் விழுந்து எழுவது லாஜிக் இல்லா மேஜிக்... ரஜினி நிஜ வாழ்க்கையில் அதை தன் தொழிலில் சாத்தியப்படுத்திக் காட்ட முடிந்ததை இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது.. 52 வயதில் பாபா தோல்வி... 55ல் மீண்டு(ம்) சந்திரமுகி வெற்றி.. 57ல் உலகமே எதிர்பார்க்கும் சிவாஜி என மீண்டு(ம்) மீண்டு(ம்) கிடுகிடுவென இன்னொரு ரவுண்டுக்கு ரஜினி ரெடி...

'சூப்பர் ஸ்டார்' என்ற எழுத்துக்கள் திரையில் தெரிந்ததும் ஆரம்பித்த ஆரவாரம் உச்சம் அடைந்தது...




ரஜினி படங்களில் அவர் அறிமுக காட்சி மிகவும் எதிர்பார்க்கப்படும் விசயங்களில் ஒன்று. 'பாம்புக்கு முத்தம் கொடுப்பார்...' 'பூசணிக்காயைத் தலையால் சிதறடித்து வணக்கம் வைப்பார்..' இப்படி இயக்குனரின் கற்பனா சக்தி ரஜினியின் அறிமுகக் காட்சியில் கண்டப்படி கரை உடைக்கும்.. இந்தப் படத்தில் ஷங்கர் மெனக்கெடவில்லை.. சும்மா ஒரு சாதாரணமான அறிமுகத்தைக் கொடுத்து ரசிகர்களுக்கு 'தலைவர்' முகம் காட்டச்செய்கிறார்...

சும்மா அதிருதுல்ல...இயக்குனர் ஷங்கரும் அதிர்ந்து விட்டாரோ என்னவோ சூப்பர் ஸ்டாரை இயக்கும் அதிர்ச்சியில் திரைக்கதை என்ற ஒரு மேட்டரை சுத்தமாக ஓரம் கட்டி வைத்து விட்டு படத்தைக் கிளப்புகிறார்...

வழக்கம் போல் அதாவது சந்திரமுகி, பாபாவுக்கு முந்தைய ரஜினியாய் 'சிவாஜி' ரஜினி வருகிறார்.. நாட்டுக்கு நல்லது செய்ய விரும்பும் ஒரு நல்லவனாய் தலைவர்... துவக்கத்தில் கொஞ்சமாய் படத்தில் ஷங்கர் வாசனை அடித்தாலும்..( ஆரம்ப அலுவலக காட்சிகள்) ஷங்கரின் அரசாங்க இயந்திரம் மீதானக் கருத்துக்கள் துளிர்க்க ஆரம்பிக்கும் போது..

"ஷங்கர் கண்ணா ....COOL நான் இருக்கேன் நான் பார்த்துக்குறேன் COOL " அப்படின்னு தலைவர் குரல் ஒலித்ததோ என்னவோ... மற்ற ரஜினி இயக்குனர்கள் (கே.எஸ். ரவிக்குமார் படையப்பா, பி.வாசு சந்திரமுகி, சுந்தர்.C. அருணாச்சல்ம்) போல் சமர்த்தாய் ரஜினியுடன் வந்து பல்லேலக்கா பாட்டில் கால் அசைத்து விட்டு போகிறார் ஷங்கர்.

80 களின் மத்தியில் ரஜினியின் கால்ஷிட் கிடைத்தால் என்னக் கதைச் சொல்லுவார்களோ அதே கதையை கொஞ்சம் 90 களின் ரஜினி பாணி கலந்து.... மிக்ஸ்யில் அடித்து குழம்பு வைத்திருக்கிறார்கள்... சும்மா நேத்து வச்ச மீன் குழம்பு ருசியாய் ரசிகர்களுக்கு பக்கா விருந்து.

படத்தில் போட்டக் காசைச் சம்பாதிப்பதைப் பற்றி தயாரிப்பாளர் யோசித்தாரோ என்னவோ.. ஷங்கர் தன் உதவியாளர்களிடம் ரஜினி ரசிகர்களின் விசில் சத்தம் சம்பாதிக்க என்னவெல்லாம் செய்யலாம் எனப் போட்டி அறிவித்தாரோ என்னவோ...

அதன் பயனாய் ரசிகர்களுக்குக் கிடைத்தது..

இளமையான ரஜினியின் தோற்றம்... ஆரம்பக் காலத்தில் தொடங்கி இன்று வரை ரஜினி ரசிகர்களை வசிகரீத்த அவர் ஹேர் ஸ்டைல்... சிகரெட் தவிர்த்த அவரது இன்னப் பிற ட்ரேட் மார்க் ஸ்டைல்கள் அதாவது கண்ணாடி சுழற்றுவது.. சுலோ மோஷனில் பின்னணி இசை அதிர நடப்பது.. காமெடி கலந்த பைட்..

ரஜினியின் பழைய படங்களில் இருந்து தேடி தேடி காட்சிகளை அமைத்து இருக்கிறார்கள்..

ஷங்கரின் அசிண்டெட் டைரக்டர்களுக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ்.. ஷங்கரே தேடிப் பிடித்திருந்தால் அவருக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லலாம் ரசிகர்கள்.. பின்னே பழைய சுறு சுறு ரஜினியை திரையில் ஒரு 20 வயது குறைத்துக் காட்டி படம் பாக்கப் போன அனைத்து ரஜினி ரசிகர்களின் வயதையும் ஒரு இருபது குறைத்து விட்டார் அல்லவா.. ( சராசரி ரஜினி ரசிகனுக்கு இப்போது முப்பது வயது என்று வையுங்கள்) ரசிகர்களையும் வயதைத் தொலைக்க வைத்து லாஜிக் மீறிய ரஜினி மேஜிக் காட்சிகளாய் சிவாஜி திரையில் விரிந்தது...

ஒரு ரஜினி ரசிகனாய் மட்டுமல்லாமல்... சினிமா ஒரு மாயாஜால மந்திர உலகம் அதில் ரஜினி ஒரு சர்வவல்லமை பொருந்திய நாயகன் என்பதை ஒத்துக் கொண்ட பொது ஜனங்களும் திரையரங்குகளில் குழந்தைகளாய் மாறி கும்மாளமாய் சிவாஜியின் நகைச்சுவைக் காட்சிகளை ரசித்தனர்..

சினிமா என்பது பொழுது போக்கு மட்டுமே என்பது தான் ரஜினி படங்களின் அடிப்படை கட்டுமான அமைப்பு.. காலப் போக்கில் அதில் சேர்க்கப்பட்ட இதர கட்டுமானங்கள் ஏராளம்... அந்தச் சுமையை ரஜினியும் 90களின் இறுதி வரை நன்றாகவே சுமந்தார்...

WHEN THINGS GO WRONG STICK TO THE BASICS...இது அனைத்துத் தொழில்களுக்கும் பொருந்தும்.. சினிமாவுக்கும் நடிப்புக்கும் மட்டும் விதிவிலக்கா என்ன? ரஜினி தன் அடிப்படை பலமான ஜனரஞ்சக படங்களுக்கு திரும்பி விட்டார்.. எனபதை சிவாஜியின் ஆரம்பக் காட்சிகள் ஆணித் தரமாய் அறிவுறுத்தின...

சிவாஜியின் சில்லி சூனியக் காட்சிகள்...பழக..பழக காட்சிகள்.. போன்றவை ரஜினியின் அண்ணாமலை பாம்பு பிராண்ட் நகைச்சுவைப் பாணியில் சிரிப்பை சிந்தாமல் சிதறாமல் அள்ளியது என்றால் ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும்.

அன்று பள்ளியில் படிக்கும் போது பார்த்த எங்கள் ரஜினி அங்கிள் மீண்டும் திரையில் என்று ரஜினி ரசிக கண்மணிகள் பரவசமடைந்தது உண்மை... இரண்டு தலைமுறையை வசப் படுத்திய அந்த நட்சத்திரத்தின் ஆட்டத்தில் மெய்யாலுமே முதல் பாதி அரங்கம் பாதி சிரிப்பும் ..மீதி கொண்டாட்டமுமாய் களைக் கட்டியது...

Saturday, June 16, 2007

சிவாஜி எப்படி? - 1

"நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்ன்னு யாருக்கும் தெரியாது...ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்ட்டா வருவேன்"



அரசியல் பேசுவதாய் நினைத்தால் மன்னிக்கவும்...மேல குறிப்பிடப்பட்டிருக்கும் வரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1996ல் முத்து திரைப்படத்தில் சொன்ன ஒரு வசனம்,அது ரஜினி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

அவரது நடிப்பில் தற்சமயம் வெளிவந்துள்ள சிவாஜி - தி பாஸ் படத்தின் வெளியீட்டிற்கு இந்த வசனம் மிகவும் பொருந்தும். அட ஆமாங்க.. பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப் பட்டு ,வியாபார மற்றும் தொழில் நுட்பக் காலதாமத்தால் ஒரு வழியாக ஜூன் 15 உலகமெங்கும் திரைக்கு வந்தே விட்டது.

சிவாஜியில் ஷங்கர் - ரஹமான் - ஏவி.எம் என ஒரு பிரமாண்டக் கூட்டணியோடு களத்தில் ரஜினி...

பாபா தோல்விக்குப் பின் சந்திரமுகி வெற்றியடைந்த நேரம்...சந்திரமுகியின் வெற்றிக்கு யார் காரணம் என்று ஒரு விவாதமே நடந்தது... சந்திரமுகி சூப்பர் ஸ்டார் படம் அல்ல.. சந்திரமுகியில் நடிகர் ரஜினியும் நடித்திருக்கிறார் அவ்வளவே என ஆங்காங்கே தீர்ப்புகள் எழுதப்பட்டன.. தமிழகத்தில் இனி சூப்பர் ஸ்டார் அத்தியாயங்கள் முடிந்து போயாச்சு என் ஆருடங்கள் சொல்லப்பட்ட நேரம் அறிவிக்கப்பட்ட படம் சிவாஜி - தி பாஸ்..

ரஜினி என்ற குதிரை வென்றது சந்திரமுகியில்.. சிவாஜியில் ரஜினியா...சூப்பர் ஸ்டார் ரஜினியா... இல்லை ஷங்கர் இயக்கும் நடிகர் ரஜினியா இப்படி பக்கம் பக்கமாய் அலசப் பட்டன ஊடகங்களில்... ரஜினியின் சம வயது கதாநாயகர்களும் சின்னப் பெண்களை விரட்டி விரட்டி டூயட் பாடிக்கொண்டிருக்க ரஜினியை மட்டும் வயது என்ற வட்டத்துக்குள் வீழ்த்த பேனா முனைகளும்.. பொட்டித் தட்டும் விரல்களும் தம் பணி முடித்தப் பின்னும் ஓவர்டைம் பார்த்தன...

ஏன் திரைப்படம் ரிலீஸ் ஆகும் முன்னரே உலக திரை வரலாற்றிலே முதன் முறையாக விமர்சனங்கள் கூட வெளியான படம் என்றால் அது ரஜினியின் சிவாஜி தான்..

சிவாஜியைச் சூழ்ந்த ஒவ்வொரு சின்ன விஷயமும் உள்ளூர் கேபிளில் இருந்து உலகத் தொலைக்காட்சிகள் வரை கொலை வெறி வியாபார நோக்கோடு அலசப்பட்டன ஆராயப்பட்டன.. ரஜினி ரசிகன் தகவல் வெள்ளங்களில் மூழ்கிவிடுமளவுக்கு சிவாஜி தகவல்கள் கொட்டப்பட்டன.. பொது மக்களும் கவனிக்கும் அளவு சிவாஜி ஊடகங்களால் ஊதி பெருசாக்கப்பட்டது...

பாடல்கள் வெளியீடு.. அதன் பின் நெட்டில் பாட்டு வந்தது.. ட்ரெயிலர் ஊசி முனை கேப்பில் ஆன் லைனில் முந்தி வந்தது..என கடந்தப் பல மாதங்களாக சிவாஜி சூடு நம்ம சென்னை வெயிலைத் தாண்டி பற்றி எரிந்தது..

சினிமா என்பது கலை என்பதாய் ஒரு புறம் மைக் கட்டிச் சொல்லப்பட்டாலும்.. அடிப்படையில் அது ஒரு வியாபாரம்.. போட்டக் காசை எடுக்கணும்.. அதுவும் சீக்கிரத்தில் எடுக்கணும்... அள்ளி எடுக்கணும்.. இது மேற்கத்திய நாடுகளில் வழக்கத்தில் உள்ள நடைமுறை..

சமீபத்தில் தான் அந்த வகை சிந்தனை நம் இந்தியாவிற்குள் வந்துள்ளது... இந்தி திரைபடங்கள் அந்த வகை வியாபாரத்திற்கு முழுசாய் மாறிவிட்டார்கள்.. நம்ம தென்னகத்து சினிமா ரசிகர்கள் தான் இன்னும் வெற்றியின் கணக்கை நாட்கணக்கோடு கூட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

மேற்கத்திய வியாபார முறையான 'கிராண்ட் ஓப்பனிங்' வகையை தமிழகத்துக்கு சிவாஜி மூலம் அதன் வெளியீட்டாளர்கள் அறிமுகப்படுத்தி உள்ளனர்.. அதாவது ஒரே நேரத்தில் பல திரையரங்குகளில் படததை வெளியிட்டு சீக்கிரமாய் போட்ட முதலை எடுக்கும் உத்தி.. இந்த உத்தியும் விம்ர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்பது வேறு விஷயம்.

சிவாஜி வெளியாகி மூன்று நாட்கள் ஆகி உள்ள நிலையில் சென்னைப் போன்ற பெருநகரங்களில் இந்த் முறை வெற்றி பெற்றுள்ளது எனச் சொல்லலாம்.. சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் இந்த முறையின் வெற்றி விவாதத்துக்கு உரியதே...

சிவாஜி சுற்றிய அரசியல் சர்ச்சைகளைப் பற்றி நாம் இந்தப் பதிவில் விவாதிக்க வில்லை..அதனால் அவைகளை விட்டு விடுவோம்...

சிவாஜி படத்துக்குக் கொடுத்தப் பில்டப்பு மாதிரி சிவாஜி விமர்சனத்துக்கும் ஒரு பில்டப்பு கொடுத்தாச்சு.. அப்புறம் என்ன?

ரசிகர்கள் ரஜினியிடம் இந்தப் படத்தின் மூலம் என்ன எதிர்பார்க்கிறார்கள்....

விசாரித்த வரையில் ஒரு நிறைவான பொழுதுபோக்கு படம்.. ரஜினியிடம் கடந்தக் காலங்களில் அவர் ரசிகர்கள் எதிர்பார்த்த அரசியல் வழிகாட்டுதல்களை இம்முறை ரசிகர்கள் குறைத்துக் கொண்டார்கள் என்றே சொல்லலாம்... 80களில் இருந்த ரஜினியிடம் அவர் ரசிகர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ அதே எதிர்பார்ப்போடு சிவாஜிக்கான கவுண்ட் டவுண் சொல்ல ஆரம்பித்தார்கள் ரஜினி ரசிகர்கள்

இந்த முறை ரஜினியின் ரசிகர் பட்டாளத்துடன் இன்னொரு தலைமுறையும் சேர்ந்துக் கொண்டிருந்தது...

எதிர்பார்ப்புகள் எகிறி நிற்க.. பந்தயக் குதிரை சிவாஜியின் ரிலீஸ் கிட்டத் தட்டத் திருவிழாக் கணக்காய் டிவிக்களிலும் பத்திரிக்கைகளிலும் பிரமாண்டப் படுததப்பட்டு

சென்னையில் வியாழன் அன்று இரவு படம் வெளியானது...



ஏ.ஆர்.ரஹமானின் புதிய துள்ளல் இசையோடு சூப்பர் ஸ்டார் என்ற எழுத்துக்கள் திரையில் மின்ன... ரஜினி என்ற மூன்றெழுத்து திரையில் நிறைய எழுந்த ஆரவாரம் தமிழ் திரை ரசிகர்களுக்கு மட்டுமே பரிச்சயமான ஒரு விழாவின் துவக்க உரை...

மேலும் சிவாஜி பார்வை தொடரும்...

சிவாஜி எப்படி? - 2

Thursday, June 14, 2007

பார்த்த ஞாபகம் இல்லையோ - பாகம் 7

சிந்தாநதி'யின் ஞாபகம் -1

வெட்டிப்பயல்'ன் ஞாபகம் -2

CVR'ன் ஞாபகம் 3

ஜி'யின் ஞாபகம் - 4

இம்சை அரசியின் ஞாபகம் - 5

வைகை ராமின் ஞாபகம் - 6



"நான் ஆர்டெனரி கேர்ள் தான், வாழ்க்கையிலே நடக்கிற விஷயங்களை சாதாரணமா அதோட போக்கிலே வாழ்ந்துட்டு தான் இருக்கேன், ஆனா என்னை சுத்தியிருக்கிற சில பேர் புரிஞ்சுக்காமே தான் நான் ஒரு எக்ஸ்டரா-ஆர்டெனரியா'ன்னு நினைக்கிறாங்க... அதை நான் தப்புன்னும் சொல்லலை... "

இனி....

உமா போய் நீண்ட நேரம் வரை காவேரி தனியாக அமர்ந்திருந்தாள்.. அவள் அறை ஜன்னலுக்கு வெளியே எங்கிருந்தோ இளையராஜாவின் குரலில் காதல் ஓவியம் தேனாய் குழைந்து காற்று வழி தவழ்ந்து வந்து அவள் சிந்தை நுழைந்தது..
காதல்.. காதல்..காதல்.. காவேரியின் உள்ளத்தில் மீண்டும் மீண்டும் மோதிச் சிதறிய அந்த வார்த்தை அவளுக்கு தலை வலியைக் கொடுத்தது...

"ஒரு பொண்ணு... ஒரு பையன்.. காதல் மட்டும் தான் அந்த உறவுக்குப் பேரா.. என்ன உலகமடா இது ?"

யோசிக்க யோசிக்க அவள் தலைவலி அதிகரித்தது.. ம்ம்கூம்..தலையை பலமா ஆட்டிகிட்டு படுக்கையில் சாய்ந்தாள்..

இப்போ ஜன்னல் வழி பாடல் மாறியிருந்தது...கண்மணியே காதல் என்பது கற்பனையோ....கண் வரைந்த ஓவியமோ... இசை மெல்ல அவளைத் தாலாட்டியது.. பாடல் வரிகளில் கவனம் செலுத்த முயன்றாள்..



காதல்..காதல்... என்ற வார்த்தை கொஞ்சம் அதிகப் படியா ஒலிக்க கண்மூடியவள்.. அவளையுமறியாமல் அதிர்ந்து எழுந்தாள்...முகம் துடைத்தாள்.. முத்து முத்தாய் வியர்வைப் பூக்கள் காவேரியின் முகத்தில் விடாது பூத்தன.. எழுந்துப் போய் தண்ணீர் குடித்து விட்டு வந்து மீண்டும் படுத்தாள்.. கண் மூடாது உருண்டு புரண்டாள்..

ஜன்னல் வழி பாடல் ராஜாவை விட்டு நகர்ந்து ரஹமானுக்கு மாறி இருந்தது.. நேற்று இல்லாத மாற்றம் என்னது.. என்று காவேரியை ச்சீண்டலாய் கேட்பபது போல் பாடியது..

காவேரி மிகவும் சிரமப்பட்டுக் கண் மூடினாள்..
அங்கு கனவினில் அவன் சிரித்தான்... காவேரியின் முகம் சிவக்க அவன் குறும்புப் பார்வைப் பார்த்தான்.. கண்களால் அவள் மனசுக்கு மொத்த உரிமைப் பேசினான்..

காவேரி வெட்கம் முழுசாய் தன்னை தின்ன அவனுக்கு அவன் கேட்பதை எல்லாம் கொடுக்க ஆயத்தம் ஆன அந்தப் பொழுதினில் அவள் கனவினைக் கலைக்க ஒரு குரல் ஒலித்தது...

கொஞ்சம் கோபமாய் கண்விழித்த காவேரிக்குத் தன் முன் எப்படி ஒரு கரடி வந்து நிற்கிறது என்று ஒரு குழப்பம் மிஞ்சியது...

மனித குரலில் பேசும் கரடி...

கண்ணைக் கசக்கினாள்..

சற்றே அந்த கரடியின் உருவம் பழக்கப்பட்டதாய் தோன்றியது...

இன்னும் கண்ணைத் தேய்த்துப் பார்த்தாள்..

கரடி உருவம் மெல்ல விலகி அங்கு உமாவின் உருவம் வந்தது.. கிராபிக்ஸ் காட்சி அது...

"உமா நீ எப்போ வந்தே? "

"அடி பாவி கரடியாக் கத்திகிட்டு இருக்கேன்.. (இதைக் கேட்டதும் காவேரி சுளுக்கெனச் சிரித்து விட்டாள். உமா எதுவும் புரியாமல் முழித்தாள்) பத்து நிமிசம்.. சரி ஒரு இருபது நிமிசம் நான் ரூம்ல்ல இல்லை அதுக்குள்ளே நான் என்னமோ அயர்லாந்துப் போயிட்டு வந்த மாதிரி அதிர்ச்சியாக் கேக்குற... கன்பர்ம்டீ.. நீ காதல்ல தான் இருக்க.. "

"பாம்பின் கால் பாம்பு அறியும்.. " அப்படின்னு உமா எக்ஸ்ட்ராவா முணுமுணுக்க.. காவேரி கொஞ்சம் தன் நிலை அடைந்தாள்.

"அது என்ன டயலாக் பாம்பு..கால்..அது இதுன்னு..."

"அது ஒண்ணுமில்ல..." உமாவின் முகத்தில் வெட்கம் லிட்டர் கணக்கில் வழிந்தது.. அசடு அதை விடவும் அதிகம் வழிந்து வெட்கத் தடங்களை அழித்தது தனி சோகம்.

"உமா..நீ யாரையாவது லவ் பண்ணுறீயா? "

"ம்" ஒற்றை எழுத்தைச் சொல்ல உமா முக்கி முனகினாள்...

"அதான் என்னை அந்தக் கேள்வி கேட்டியா...? "
காவேரி தோழியின் காதல் கதையினை விசாரிக்கும் ஆவலில் அடுத்து கேள்விக் கணைகளைத் தொடுக்க ஆயுத்தமானாள்.

ஜன்னல் வழியே.. மீண்டும் இளையராஜாவின் இசை பாய்ந்து வந்தது..
என் மன்னவன் உன் காதலன் என்ற சிட்டுக்குருவி படத்துப் பாடல்...

"நான் எதுவும் சொல்ல மாட்டேன்.. நீ உன் காதலைப் பத்தி எதுவும் சொல்லமாட்டேங்குற.. நான் மட்டும் சொல்லணுமா?"" என்றாள் உமா.

"அய்யோ உமா.. மறுபடியும் சொல்லுறேன்.. வசந்தும் நானும் நண்பர்கள்.. அவ்வளவு தான்.. நான் காதலிக்கறது வசந்த் இல்ல...." என்று நாக்கை மடித்தாள்.

உமா கொஞ்சம் உஷார் தான் ஆனாலும் காதல் வந்தால் எப்படி பட்ட் உஷார் பேர்வழியும் உலகம் இருட்டு என்று ஒரு திருட்டு வாழ்க்கை வாழ ஆரம்பித்து விடும் போது பாவம் உமா மட்டும் என்ன செய்வாள்.. காவேரியின் வார்த்தைச் சிதறல் உமாவின் கவனம் பெறவில்லை..

"அப்படின்னா வசந்த்க்கும் உனக்கும் வெறும் ப்ரண்ட்ஷிப் தானா.. ப்ச் "என்று உதட்டைப் பிதுக்கினாள்.

அப்பாடா என பெருமூச்சு விட்ட காவேரி.. "நல்ல வேளை நம்ம கதையை இவ இன்னும் நோண்டாம விட்டாளே.. இவக் கிட்ட நம்ம கொசுவர்த்தியைச் சுத்த வேண்டிப் போயிருக்கும்"

"சரி, நாளைக்கு சனிக்கிழமை... நீ என் கூட சினிமாவுக்கு வர்றீயா...காதலன் அப்படின்னு ஒரு படம்.. நல்லா இருக்குதாம்.." உமா கேட்டாள்

"ம்ம்ம்ம்..விளையாடுறீயா... படிக்கணும் அசைன்மென்ட் இருக்கு முடிக்க.. இப்போ படம் ரொம்ப அவ்சியமா..?? " சீறினாள் காவேரி..

"சரி, நீ வந்தா என் ஆள் யார்ன்னு உனக்குக் காட்டுறேன்... வசந்தும் வர்றேன்னு சொல்லி இருக்கான்..ப்ளீஸ்" என்று உரிமையாய் உருகினாள் உமா.

காவேரி பலமாக யோசித்தாள்.. கடைசியாத் தியேட்டர் போய் என்னப் படம் பார்த்தோம் யோசித்துப் பார்த்தாள்.. ம்ஹூம் ஒன்றும் நினைவுக்கே வரவில்லை.. சரி ஒரு நாள் போலாமே.. உமாவின் உள்ளம் கவர் கள்வன் யாருன்னு பாக்கலாம்.. எல்லா வாரமும் படிக்கிறோம்.. ஒரு வாரம் கொஞ்சம் ஜாலியாத் தான் இருப்போமே.. காவேரி முடிவெடுத்தாள்..

"சரி வர்றேன்.. டிக்கெட் காசு எவ்வளவு ஆகும்?" என்று தயக்கமாய் கேட்டாள் காவேரி..

"லூசு.. டிக்கெட் எல்லாம் நான் பாத்துக்குறேன் நீ வர்றேன்னு சொன்னதே போதும்" சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள் உமா...

ஜன்னல் பாடல் பொத்தி வச்ச மல்லிகை மொட்டு என்று வெட்கம் சொல்லி குழைந்தது..

உமா வெளியில் போனாள். காவேரி கட்டிலில் சாய்ந்து கண் மூடினாள். மீண்டும் அவள் கனவினில் அவன் வந்து அவள் ஆசைகளூக்கு ஊஞ்சல் கட்டி அவளோடு விளையாடினான்.. விளையாட்டு கனவினை களிப்பாக்கியது.. காவேரி தூங்கிப்போனாள்.. முகம் முழுக்க சின்னதாய் ஒரு பூரிப்பு படர்ந்து கிடந்தது..

ஜன்னல் வழி மவுனம் எட்டிப்பார்த்தது.. மவுனம் கூட நல்ல இசை தான்.. ரசிக்கத் தான் தனி திறமை தேவைப்படுகிறது.

"ஏய் இந்த பச்சை சுடிதார் நல்லாயிருக்கா... ? "உமா அத்தோடு ஆறு தடவை உடை மாற்றி விட்டாள்.. அறுபது தடவை தலை வாரி விட்டாள்.. இன்னும் சில நூறு முறை அலங்காரம் சரிப்படுத்திக் கொண்டாள்..

"உமா.... நீ நேத்தே கிளம்ப ஆரம்பிச்சு இருக்கணும்.. அப்போக் கரேக்ட்டா இருந்து இருக்கும்..இன்னிக்கு கிளம்பி நாளைக்குத் தான் போவோம் போல இருக்கு..."

உமா அதற்கும் வழிந்தாள்...

"இல்லப்பா என் ஆளை ரொம்ப நாள் கழிச்சுப் பாக்கப் போறேன்.. அதான் கொஞ்சம் அழகாப் போய் அசத்தலாமேன்னு" அப்படின்னு இழுத்தாள்.

காவேரிக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.. கடகடவெனச் சிரித்துவிட்டாள். உமா கொஞ்சம் நொந்துத் தான் போனாள்...

ஒரு வழியாக உமா சகல் அலங்காரங்களையும் முடித்து கிளம்ப இன்னுமொரு அரை மணி நேரம் ஆகியது. காவேரி வெள்ளையில் சிவப்பு பூப் போட்ட சுடிதாரும், சிவப்பு துப்பட்டா அது இருக்க வேண்டிய இடத்திலும் போட்டு, தூக்கி வாரியக் கூந்தலில் ஒரு சின்ன பட்டாம்பூச்சி கிளிப் அணிந்து அழகாய் இருந்தாள். உமாவின் அழகு விவரனை இங்கும் நமக்கு வேண்டாம்.. அவ அழகோ அழகுன்னு இருந்தான்னு சொல்லிக்குறேன்.

தியேட்டருக்குப் போகும் வழியில் வசந்த அவர்களைச் சந்தித்தான்.. பஜாஜ் கேலிபர் வண்டி ஒன்றை வைத்திருந்தான்..அதில் ஓ மை காட் என்று எழுதப் பட்ட வாசகம் வேறு...

மூவரும் சேர்ந்து உமாவின் காதலனுக்காகக் காத்திருக்க துவங்கினார்கள். வசந்து வழ்க்கம் போல் கேலியும் கிண்டலுமாய் பேசிக் கொண்டிருந்தான். உமா பேச்சில் சுவாரஸ்யமின்றி பாதையை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவ்வப்போது கையைக் குலுக்கி கடிகாரம் ஓடுதா என்றும் பார்த்துக் கொண்டாள்...

"ம்ம் லேட்டா வந்ததே இல்ல.. எதாவது பிரச்சனையோ!!!??" அப்படின்னு உமா கொஞ்சமாய் பதட்டம் வேறு அடைந்தாள்.

அந்த இடைப்பட்ட நேரத்தில்...

"ஹே ஒரு அஞ்சு நிமிசம் வந்துடுறேன்" என்று வசந்த் எங்கோக் கிளம்பினான்..

காவேரி ஒன்றும் செய்ய முடியாமல் கைக்கட்டி கண் மூடி யோசனையில் ஆழ்ந்தாள்.. கண்மூடினாலே இப்போவெல்லாம் காவேரிக்கு அவன் முகம் தானாய் திரை கட்டி தன் கண்ணுக்குள் ஓடுவதைத் தடைச் செய்ய முடிவதில்லை.. மீண்டும் அவன்...

எவ்வளவு நேரம் அவன் நினைவாய் நின்றாளோ அவளுக்கேத் தெரியாது..

கீங்ங்ங்ங் கீங்ங்ங்ங் பைக் ஹாரன் சத்தம் கேட்டு அதிர்ந்து கண் விழித்தவள்.. ஏறக்குறைய மூர்சையாகிப் போனாள் என்றே சொல்லலாம்.. இது கனவா..!!!?? இல்ல நனவா.....!!!???

தன்னையேக் கிள்ளிக் கொண்டாள்...

வசந்த் கையில் ஒற்றை ரோஜாவோடு நின்றான்.. பக்கத்தில் உமா கலகலவென சிரிப்போடு...

ஒரு கணம் திகைத்துப் போனாள் காவேரி... அவள் மொத்த உணர்வுகளும் ஸ்தம்பித்துப் போனது.. கண்களின் ஓரமாய் சிறு துளி கண்ணீர் அரும்பியது..

இருவருக்கும் இடையில் இருந்து இவள் விழிகளை நேருக்கு நேராய் சந்தித்தப் படி புத்தம் புது யமஹா வண்டியில் இருந்து இறங்கி நடந்து வந்தான் அவன்.....

வினோத்.... காவேரி தன் வாய் திறக்கும் முன் உமா குரலில் அவன் பெயர் உச்சரிக்கப்பட்டது...

காவேரி. .இது வினோத்.. என் ஆளு.... காவேரி கண்களை வேகமாய் மூடி திறந்தாள்...

அந்த இடைவெளியில் அவள் பார்த்த வினோத்கள் மொத்தம் ரெண்டு..

அவள் கண்ணுக்குள் இருந்த வினோத்துக்கும் அவள் கண் முன்னால் நிற்கும் வினோத்துக்கும் எத்தனை வித்தியாசம்..

அவள் தடுமாறி நின்றாள்...வினோத்தைக் கண்டு அவள் தடுமாறி நின்ற அதே வினாடியில்

"காவேரி.. என் மொத்த வாழ்க்கையையும் உன்னோடு வாழ ஆசைப்படுறேன்... நான் உன்னைக் காதலிக்கிறேன் காவேரி" ஒற்றை ரோஜாவை காவேரியிடம் நீட்டினான் வசந்த்...


___________________________________________________________________

நண்பர்களே! இந்த தொடர்கதை மூலம் ஒரு புதிய முயற்சி. இந்தக் கதை தொடர்கதையாக வலைப்பதிவு சங்கிலி வழியாக எடுத்துச் செல்லப் படும். இந்த தொடரின் அத்தியாயங்களை வெவ்வேறு பதிவர்கள் தொடர வேண்டும். இதே தலைப்பில் தொடர் எண் இட்டு எழுதப் பட வேண்டும். ஒவ்வொருவரும் கதையை எழுதி இந்த குறிப்பை இறுதியில் இட்டு அடுத்து தொடர இன்னொருவரை அழைக்க வேண்டும். இந்த வித்தியாசமான முயற்சிக்கு தோள் கொடுக்க வாருங்கள்.

அடுத்து வரும் (வந்த) ஞாபகங்களை நம்மோடு பகிரந்துக் கொள்ள நட்பில் சிறந்த அருமை நண்பர் ஜி,ரா.வை அன்போடு அழைக்கிறேன்;-)

Tuesday, June 12, 2007

பல்லேலக்கா பல்லேலக்கா - THE PREVIEW

சிவாஜியில் சூப்பர் ஸ்டார் அறிமுகமாகும் பாடல் காட்சி பல்லேலக்கா..பல்லேக்கா ஸ்பெஷல் ப்ரீவியூ உங்களுக்காக...

பாடல்: நா. முத்துகுமார்
பாடியது: பாடும் நிலா பாலு, ரைஹானா, பின்னி

பல்லே லக்கா பல்லே லக்கா



Female Chorus:

சூரியனோ...சந்திரனோ...யாரிவனோ..
சட்டுன்னு சொல்லு...
சேர பாண்டிய சூரனும் இவனோ...
சொல்லு சொல்லு...சட்டுன்னு சொல்லு..
(சூரியனோ... )

பாரடி பாரடி யாரடி இவனோ
பாய்கிற சிறுத்தையின் காலடி இவனோ
கூறடி கூறடி யாரடி இவனோ
கேட்டதை பட்டென சுட்டிடும் சிவனோ.....

Male Chorus :

ஏய்...பல்லே லக்கா பல்லே லக்கா சேலத்துக்கா
மதுரைக்கா..
மெட்ராசுக்கா...திருச்சிக்கா..திருத்தணிக்கா..
ஏய்...பல்லே லக்கா பல்லே லக்கா...
ஒட்டு மொத்த மக்களுக்கா...
அண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா...








Male:
காவிரி ஆறும், கை குத்தல் அரிசியும் மறந்து போகுமா?
ஒஹோ...தாவனி பெண்களும், தூது விடும் கண்களும் தொலைந்து போகுமா? நம்ம களத்து மேடு...
கம்மாகரை கரிசகாடு..
செம்மண் அள்ளி தெளிக்கும் ரோடு....

ஏய்...சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு ஆடிய மரத்தடி...
படுப்படு படுவென போர்த்திய புல்வெளி...
தொட தொட தொட தொட உடைகிற பனித்துளி...
சுட சுட சுட சுட கிடைக்கிற இட்லி...
தட தட தட தடவென அதிர்கிற ரயிலடி...
கடகட கடவென கடக்கிற காவிரி...
விறுவிறு விறுவென மடிக்கிற வெற்றிலை...
முறுமுறு முறுமுறுவென முறுக்கிய மீசைகள்...
மனதில் இருக்குது மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்
(சூரியனோ..)









சரணம் 1:

Male:
எலேய்...
கிராமத்து குடிசையில கொஞ்ச காலம் தங்கி பாருலேய்...
கூரையின் ஒட்டை விரிசல் வழி நட்சத்திரம் எண்ணிபாருலேய்...
கூவும் செல் போனின் நச்சரிப்பை அணைத்து ,
கொஞ்சம் சில் வண்டின் உச்சரிப்பை கேட்போம்...
வெறும் காலில் செருப்பின்றி நடந்து ,
மண்ணோடு பேசிக்கொண்டு போவோம்...
மழலைகள் ஆவோம் !

Female:
ஆல மரத்துக்கு ஜடைகள் பின்னிதான் பூக்கள் வைக்கலாமேய்...

Male :
ஊர் ஓரம்...அய்யனாரிடம் கத்தி வாங்கிதான் பென்சில் சீவலாமேய்...
( ஏய்...பல்லே லக்கா )













சரணம் 2:

Male:
ஏலேய்..லேய்..
அஞ்சறை பெட்டியில ஆத்தவோட ருசியிருக்கும்...
அம்மியில் அரைச்சு ஆக்கிவெச்ச நாட்டு கோழி பட்ட கெளப்பும்...

ஏலெய்..
ஆடு மாடு மேல உள்ள பாசம்..
வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கும்..
வெறும் தண்ணி கேட்டா மோரு தரும் நேசம்...
வெள்ளந்தி மனிதர்கள் வாசம்..
மண்ணு எங்கும் வீசும்...

Female:
பாம்படக் கிழவியின் பச்சிலை மருந்துக்கு பேயும் ஓடி போகும்!

Male:
பங்காளி..பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கிற
அன்பு இங்கு வாழும்..
( ஏய்...பல்லே லக்கா )





COOL !!!!!!!!!!!!!!!!!!!!!


சிவாஜி கவுண்ட் டவுண் ஆரம்பம்

Wednesday, May 23, 2007

எம்.ஜி,ஆரையே எதிர்த்தவன்டா இந்த ஆபிசர்

"இந்த கத்திரி வெயில் இழுத்து வச்சு நம்ம தோலை இஸ்திரி போட்டுச் சோலியை முடிச்சுரும் போலிருக்கே.. என்ன சித்தப்பூ சாப்பிடக் கிளம்பல்லயா?"
சவுண்டு விட்டுகிட்டே பருத்தி வீரன் சித்தப்பூ சீட் பக்கம் வரும் போது மணி ஒண்ணே முக்கால்.

சித்தப்பு கம்ப்யூட்டர்ல்ல கண்டபடி மூழ்கி கிடந்தார். எதோ எக்ஸ்ல் ஷீட் திறந்து சார்ட் எல்லாம் போட்டு சென்னை சூட்டை இன்னும் கிளப்பிக் கொண்டிருந்தார்.

"சித்தப்பூ என்ன இது? ஏன் இப்படி?"

"கருத்துக் கணிப்பு நடத்தப் போறேன்.. இந்த வடக்கத்திகார பாஸ் இருக்கானே.. அவனை என்னப் பண்ணலாம்ன்னு நம்ம ஆபிஸ் மகா ஜனங்களைக் கேக்க்ப் போறேன்...

ஆப்ஷ்ன் 1 ஓட விட்டு அடிக்கணும்

ஆப்ஷன் 2 நிக்க வ்ச்சு அடிக்கணும்

ஆப்ஷ்ன் 3 கட்டி வ்ச்சு அடிக்கணும்

வா நீயும் வந்து கருத்துச் சொல்லிட்டுப் போ.."

"சித்தப்பூ எதுக்கு இந்தக் கொலவெறி?"

"என் ஆன் சைட் கனவுக்குக் காத்து புடுங்கி விடுறதே இந்த பான்பராக் மண்டையனுக்கு நாலு வருசமா வேலையாப் போச்சு.. ஒவ்வொரு அப்ரேசலிலும் ஒரே ஆப்பை ஒவ்வொரு இடத்துல்ல் வச்சுட்டுப் போயிடுறான்"

"அப்படி என்னப் பண்ணான்?"

"ஒவ்வொரு வாட்டியும் YOU HAVE TO IMPROVE YOUR COMMUNICATION அப்படின்னே ரெக்கார்ட் ஓட்டுறான்"

"அதுவும் ரைட் தானெ போன வாட்டி இங்கிட்டு வந்த அட்லாண்டிக் கிளையண்ட் கிட்ட WE ALL CALL NIC NAMES.. HE PARUTHI VEERAN THAT IS COTTON SOLDIER.. ME.. CHITTAPOO.. அப்படின்னு நீ சொல்ல...

""WHAT U SHIT BOO" அப்படின்னு அந்த ஆளு மூக்கைப் பொத்த... தெரியுமே உன் இங்கிலீஸ் அறிவு எங்களுக்கு."

"லேய் கோடு அடிக்கத் தானே சம்பளம் கொடுக்குறாய்ங்க.. இங்கே என்ன இங்கிலீஸ் பாடம் எடுக்கவா நாங்க மருதையில்ல மாறி மாறி பஸ் புடிச்சு வந்தோம்"

"நோ டென்சன் சித்தப்பு.. பாஸ் மேட்டருக்கு வா..."

"முந்தா நாள், மூணு நாள் குடும்பமா மூணாறு போயிட்டு ஊருக்கு வந்த அவன் வீட்டு ஏசி வேலை செய்யல்லன்னு என்னைய பிடிச்சுக் காய்ச்சுறான்ய்யா.. மனுசனா அவன்?"

"அவன் வீட்டு ஏசி புதுசா ஆச்சே!!! போன மாசம் வாங்குனது தானே.. உன் தம்பி கடையிலே வாங்கி நீ தானே சித்தப்பு கொடுத்த்.. ஏசி என்னாச்சாம்?"

"ஏசிக்கு எல்லாம் ஒண்ணூம் ஆகல்ல.. கரண்ட் இல்லப்பா அதான் ஏசி வேலை செய்யல்ல"

"அதுக்கு நீ என்னப் பண்ணுவ பாவம்"

"ஊருக்குப் போறதுக்கு முன்ன.. கரண்ட் பில் கட்டிடு ப்ளிஸ்ன்னு எங்க கிட்டச் சொல்லிட்டுப் போனான்.. நான்.... உனக்கேத் தெரியும் ப்ராஜக்ட் பிசியிலே மறந்து வேலையிலே மூழ்கிட்டேன்... அதை எல்லாம் ஒரு தப்புன்னு..." சித்தப்பு சொல்லும் போதே பருத்திவீரனோடு எங்களுக்கும் டென்சன் ஆகிப் போச்சு."

"யோவ் எதாச்சும் அசிங்கமாத் திட்டிற போறேன்.. போய்யா போய் பொழப்பைப் பாரு..." பருத்திவீரன் கிட்டத்தட்ட கையை ஓங்கிட்டான்.

"வேணாம் நான் எல்லாம் அரசியல்வாதி தெரியும் இல்ல.. கட்சிக்காரன்லேய்... அதுவும் மருத திமுககாரன் சொல்லிபுட்டேன்" சித்தப்பு சீற

"இங்கே பாருடாக் கூத்தை.. சித்தப்பு நீ எல்லாம் கட்சிகாரனா!!!.... அதுவும் திமுகவா!!! ஆளும் கட்சி பெயரைச் சொல்லி அல்வாக் கிண்டுற பார்த்தியா"

"லேய் சின்னப் பயலே நான் உண்மையாவே திமுக தான்லேய்.. இன்னிக்கு ஊருக்குப் போய் பேண்ட்ட கழட்டிப் போட்டேன்னு வை..."

"ஊர்ல்ல இருக்க நாய் எல்லாம் சேந்து ஒண்ணா தொரத்தும் உன்னிய வேற என்ன?"

"ஏலேய் சின்னப் பயலே பேண்ட்டை அவுத்துட்டு வேட்டியக் கட்டுனேன் வை.. அதுவும் கரை வேட்டி.. ஊர்குள்ளே எனக்கு எம்புட்டு மருவாதை தெரியுமா"

"சொல்லுறதை ஒழுங்காச் சொல்லு.. வேட்டி ஒழுங்காக் கட்டத் தெரியுமா ஓனக்கு?"

"மருதைக் காரன் கிட்ட பேசுற நீயு... காலேஜ்க்கே கரை வேட்டி கட்டிகிட்டு கக்கத்துல்ல பொஸ்தகத்தை வச்சுகிட்டு போனவன் நான்"

"தெரியுது... அந்தப் பொஸ்தகம் வாய் இருந்தா எப்படி கதறி இருக்கும்ன்னு"

"லேய் நான் உண்மையா திமுககாரன் தான்டா... எங்க தாத்தா.. அப்பா எல்லாம் கட்சிகாரங்கடா நம்புடா"

பருத்திவீரன் மோவாயைத் தடவிகிட்டு நின்னான்.

"சரி நீ திமுகன்னா நான் கேக்குற கேள்விக்கெல்லாம் கரெக்ட்டாப் பதில் சொல்லிரு பாப்போம்"

"திமுக கொடியிலே கருப்பு மேல வருமா சிவப்பு மேல வருமா?"

"கருப்பை மேல வச்சு கட்டுனா.. கருப்பு மேல வரும்...அதே மாதிரி சிவப்பை மேல வச்சு கட்டுனா சிவப்பு மேல வந்துரும்... இதெல்லாம் ஒரு கேள்வியாம் வென்று..."

"சித்தப்பு உன் பதிலை உங்க கட்சித் தலைமை கேட்டதுன்னு வை.. உன்னை மேல வச்சு கட்டி கீழே தீ வச்சுருவாங்க.. அப்புறம் நீ ராக்கெட் மாதிரி விண்வெளிக்கே ஆன் சைட் போயிருவே..."

"கொடியை விடு... மொழிப் போர் தெரியுமா?"

"பிச்சுருவேன் பிச்சு... மொழி போராம்.. எவன் சொன்னான் எடுபட்ட பைய.. போன வாரம் தான் குடும்பத்தோட சத்யம் போய் பார்த்தோம்... எங்க அப்பத்தாவுக்கு கூட ரொம்ப பிடிச்சு இருந்துச்சு...சோதிகா என்னமா நடிக்குது.... அய்யோ அந்த சொர்ணமால்யா ம்ம்ம்ம் ( ஜொள்ளூ வழிகிறது) மொழி சூப்பர் படம் அதைப் போய் போர்ன்னு எவன் சொன்னான்"

ஆவேசமாச் சாமியாடிய சித்தப்புவை மெதுவாப் பிடிச்சு இழுத்து வச்ச பருத்தி வீரன்.. மொழிப் போர் பத்திக் கேட்டேன்... உங்க கட்சி 60ல்ல பண்ண அரசியல் போராட்டம் பத்திக் கேட்டா அது தெரியல்ல.. பிரகாஷ் ராஜ் எடுத்த மொழியைச் சொல்லுற நீ..இது தான் லாஸ்ட்... இத்தோட நீ இனிமே அரசியலேப் பேசக் கூடாது தெரியும்ல்ல...

"ஏலேய்.. எனக்கு வேணும்ன்னா விசய ஞானம் இல்லாம இருக்கலாம்.. ஆனா நான் எல்லாம் களப்பணின்னு வந்துட்டா பின்னிருவோம்.தெரியும்ல்ல.. அஞ்சு வயசுல்ல எங்க ஊருக்கு தேர்தல் பிரச்சாரம் பண்ண வந்த எம்.ஜீ.ஆரையே நான் எதிர்த்தவன் தெரியுமா? சொன்னா நம்பணும்"

எம்.ஜி.ஆர் அந்தப் பேரைக் கேட்டதும் பருத்திவீரன் கூட் மைல்ட்டா ஜெர்க் ஆயிட்டான்னு தான் சொல்லணும்...

"ஆமா அப்போ எனக்கு அஞ்சு வயசு..."

சித்தப்பு கொசுவர்த்தி சுத்த ஆரம்பிச்சார்.. எல்லாரும் ஆர்வமா உக்காந்துட்டோம்.
பாதி சாப்பாட்டுல்ல வாயைப் பொழந்தவங்க பொழந்தப் படியே கதைக் கேக்க ஆரம்பிச்சாங்க..

"எங்க ஊர்ல்ல தேர்தல் வந்துச்சு.. ஊர் முழுக்க எல்லா சுவத்துல்ல உதயசூரியனும் இரட்டை இலையும் மாறி மாறி வரைஞ்சு இருந்தாங்க..."

அப்புறம்

"ஆட்டோ கட்டி தெருவில்ல புழுதி பறக்க ஓட்டுக் கேட்டு நிதம் பிரச்சாரம் பட்டையக் கிளப்பிச்சு..."

ம்

"அப்படி ஒரு நாள் நானும் எங்க கூட்டுச் சேக்காளிகளும் தெரு முனைக் கடையிலே கமர்கட்டும் கடலை முட்டாயும் கடன் சொல்லிச் சாப்பிட்டுகிட்டு இருக்கும் போது..

ஊர் முழுக்க பரபரப்பு ஆயிருச்சு...

எங்க ஆத்தாக் கிழவி கூட மேக்கப் எல்லாம் போட்டுகிட்டு ஊர் எல்லைக்குப் போய் நின்னுகிச்சு...
எங்கம்மாவுக்கு லேசா பயம் இருந்தாலும் அவிங்களும் பக்கத்து வூட்டு அத்தையக் கூட்டிகிட்டு அப்பாவுக்குத் தெரியாம எல்லைக்குப் போயிட்டாங்க...

ஊரே காத்து கிடந்துச்சு...

என் கையிலே இருந்த கடலை மிட்டாயும் கம்ர்கட்டும் தீரப் போற நேரம் வந்துசுடுச்சு....

ஒரே சவுண்டு.. சும்மா பெரிய குழாய் ஸ்பீக்கர் எல்லாம் வச்சு எம்.ஜி.ஆர் பாட்டு முழங்குது... தூரத்துல்ல சர் சர்ன்னு கார்களா வருது...

ஊரே பொங்குது....

ஒரு கார் கண்ணாடி திறந்து இருக்கு உள்ளே.... ஆமா எம்.ஜி.ஆர்....எல்லாரையும் பார்த்து சிரிச்சுகிட்டே டாட்டாக் காட்டிகிட்டேப் போறார்...

நான் திடமா முடிவு பண்ணிகிட்டேன் எனக்குள்ளே...

கார் கிட்ட வந்துருச்சு...

நான் அப்பவும் என் முடிவுல்ல பயங்கர உறுதியா இருக்குறேன்...

கார் பக்கமா வந்துருச்சு....

எல்லாரும் கத்துறாங்க...

நான் முடிவு பண்ணிட்டேன்.. எனக்குள்ளே இருந்த வீரம் என் முடிவை செயல் படுத்த இது தான் டைம்ன்னு சொல்லிருச்சு...

அப்புறம் என்ன கையை நல்லா மடக்கிட்டேன்...

கார் என் கிட்ட வந்துருச்சு...

எல்லாரும் நல்லா கையை விரிச்சு எம்.ஜி.ஆருக்கு டாட்டாக் காட்டுனாங்க..

அவ்ரும் பதிலுக்கு டாட்டா காட்டுனார்..

ஆனா நான் கடைசி எம்.ஜி.ஆருக்கு வரைக்கும் டாட்டாக் காட்டவே இல்ல தெரியும்ல அதுவும் எம்.ஜி.ஆர் டாட்டாக் காட்டியும் கூட நான் டாட்டாக் காட்டவே இல்ல...

சித்தப்பு சொல்லி முடிச்சுட்டு பெருமையா எங்களை எல்லாம் பாக்க....
அவ்வளவு தான் அம்புட்டு டிபன் பாக்ஸ்ல்லயும் மிச்சம் இருந்த மொத்தச் சோறும் சித்தப்பு மூஞ்சியிலே போய் பேஸ் க்ரீம் கண்க்காக உக்காந்துக்குச்சுங்கறதை நான் தனியாச் சொல்லணுமா என்ன?

Tuesday, May 22, 2007

வ,வா,சங்கத்தில் கைப்புள்ளயின் அடுத்த வாரிசு யார்- மெகா சர்வே முடிவுகள்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் வலையுலகின் மிகவும் பிரபலமான சங்கம்.. இந்தச் சங்கத்தின் லேட்ட்ஸ்ட் செய்தி சங்கத்தின் 'தல' கைப்புள்ள விரைவில் மணக்கோலம் பூண்டு ரங்கமணியாக பதிவு உயர்வு பெறப் போகிறார் என்பதே.. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் நம்பர் ஒன் வலைப்பதிவுகள் தல திருமணம் பற்றிய சூடானச் செய்திகளை வழங்க முயன்று கொண்டிருக்கும் நேரத்தில்..

நமது சென்னைக் கச்சேரி உங்களுக்காக களத்தில் இறங்கியது.. உலகப் புகழ் பெற்ற நிறுவனமான ஓசி பீல் சன் குழுவோடு இணைந்து இணைய ச்ர்வே குரு சர்வேசன் அவர்களின் நல்லாசியோடு நடத்திய சர்வே முடிவுகள் இதோ உங்கள் பார்வைக்கு

ஆம் தலக் கைப்புள்ளக்கு ஆப்பு வைக்க சகல உரிமைகளோடு அவர் தம் தங்கமணி பதவியேற்க போகும் நேரத்தில் மக்களின் ஆப்புக்களை யார் வாங்குவது? தலக் கைப்புள்ள உயிரேன மதித்துப் போற்றிய கடமையை தொடரப் போவது யார்?

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கத்தில் தலக் கைப்புள்ளயின் அடுத்த வாரிசு யார்?

இந்த கேள்வியோடு தமிழ் கூறும் பதிவர்களைச் சந்தித்தோம்... உலகத் தரம் வாயந்த சர்வே நுணுக்கங்களை நுணுக்கி இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது.. முடிவுகள் இதோ வந்து விட்டன..






அயல்நாடுகளில் வாழும் பதிவர்களின் கருத்து




இந்தியவாழ் பதிவர்களின் கருத்து





தமிழகவாழ் பதிவர்களின் கருத்து


பெங்களூர்வாழ் பதிவர்களின் கருத்து
சர்வே முடிவுகளைச் சொல்லியாச்சு...
நாளை பச்சோந்தி மக்கள் கட்சியின் (ப.ம.க) அடுத்த வாரிசு யார்? தொடரும் சரவே
மீண்டும் சந்திப்போமா... அது வரைக்கும் டாட்டாங்கோ

Monday, May 21, 2007

சந்திரமுகி ரஜினி படமா?


2005 ஒரு கோடைக் காலக் காலைப் பொழுதில் நெருக்கியடிக்கும் கும்பலில் நானும் ஒருவனாக நின்று ஆமாம் நின்ற படியே ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி படத்தின் முதல் காட்சிப் பார்த்து வெளியில் வந்தேன்...

என்னோடு படம் பார்த்து வெளியில் வந்த சிறுவர்களின் லக்க லக்க.. கோஷங்கள் படத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறுவதாக இருந்தாலும்..ரஜினியின் ரசிகர் கூட்டத்தில் ஒரு சாரார்க்கு சந்திரமுகி திருப்தியினை ஏற்படுத்தவில்லை என்பது நான் கண்கூடாகக் கண்ட உண்மை..

அதாவது இங்கு இந்தப் பதிவினைப் படிக்கும் மிஸ்டர்.பொதுஜனம் ஒரு விஷ்யத்தைக் கருத்தில் கொள்ளவேண்டும்..

ரஜினி என்ற நடிகருக்கு இருக்கும் ரசிகர்கள் இருவகைப் பட்டவர்கள்.. ரஜினியைத் திரையில் பார்த்து தலைவா என்றழைக்கும் கூட்டம் ஒன்று... திரைக்கு வெளியிலும் ரஜினியைத் தலைவராய் ஏற்று கொண்டவர்கள் இன்னொருக் கூட்டம்..

காலம் காலமாய் ரஜினிகாந்த இந்த இரண்டுக் கூட்டங்களையும் தன் படங்களின் மூலம் திருப்திப் படுத்தி வந்ததன் பயனாய் இருக் கூட்டமும் சேர்ந்து அவரை சூப்பர் ஸ்டார் என்ற உச்சப் பட்ச அந்தஸ்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வைத்துக் கொண்டாடி வந்தார்கள்.

90களில் ரஜினிகாந்த தன்னையுமறியாமல் தன் படங்களில் பிரயோகித்த பஞ்ச் டயலாக்கள் மூலம் இந்த இரண்டாவது கூட்டத்தின் எதிர்பார்ப்புகளையும் ஆர்வங்களையும் அளவுக்கு அதிகமாய் வளர்த்து விட்டார்..ஒரு கட்டத்தில் திரைக்கு வெளியேயும் ரஜினியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து விரிய ஆரம்பித்தது இந்த இரண்டாம் வகைக் கூட்டத்தை அளவுக்கு அதிகமாய் வலுப் பெற செய்தது.
இது ரஜினியின் தனிப்பட்ட விருப்பமா? தானாய் அமைந்ததா அது தனி விவாதம்..

அண்ணாமலை.. ரஜினியின் திரை உலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை... பாட்சா ரஜினியை மட்டுமின்றி ரஜினியின் இரண்டாம் ( இங்கு இரண்டு என்பது தரம் பிரிப்பது அல்ல) வகை ரசிகர்களையும் அழைத்துச் சென்று விட்ட இடம் தமிழக அரசியல் போர்முனை... மாபெரும் இயக்கமான அதிமுகவைப் போர்கோலம் பூண்டு சந்திக்க வேண்டிய கட்டாயம்... ரஜினியை விட அவர் ரசிகர்கள் ஆர்வமாய் போரில் பங்குபெற்றனர்... ஆர்வம் மட்டுமே அடுத்து வந்தப் போர்களுக்கு ஆகாது என்பது ரஜினி ரசிகர்கள் கற்ற பாடம்...

ரசிகர்களின் ஆர்வத்தை கட்டுப்படுத்த ரஜினி மேற்கொண்ட முயற்சியில் ஒன்று திரையில் தான் தோன்றுவதைக் குறைத்தது.. ஆனால் அது ரஜினி மீது ரஜினியின் போர்கோல ரசிகர்கள் அளவுக்கு பாசம் கொண்ட இன்னொரு பிரிவு ரசிகர்களை வாட்டியது... ரஜினி அவர்களுக்காக தன் ந்டிப்பைத் தொடர வேண்டியிருந்தது...

இரு தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்தும் விதமாக அவரால் பாட்சாவிற்கு அதாவது 1995ல் இருந்து 2002 வரை கொடுக்க முடிந்த படங்களின் எண்ணிக்கை வெறும் இரண்டு மட்டுமே

அருணாச்சல்ம் - 1997
படையப்பா - 1999

2002ல் ரசிகர்களுக்குத் தன் கருத்தைச் சொல்ல முயன்று எடுத்த பாபா ரசிகர்களைக் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது.

இதற்கிடையிலும் ரஜினியின் பொது வாழ்க்கையில் அவரது ரசிகர்கள் பக்கபலமாய் நின்றனர்.. உதாரணம் 2002 ஆகஸ்ட் காவிரி போராட்டம்.. அங்கு திரண்ட ரசிகர் கூட்டம் அதற்கு சாட்சி... அங்கு வந்திருந்த ரசிகர் கூட்டம் திரைக்கு வெளியிலும் ரஜினியை தன் தலைவனாக அறிவித்தக் கூட்டம்...



இந்த நிலையில் 2005ல் ரஜினி நடித்த படம் சந்திரமுகி... முற்றிலும் தன் சூப்பர் ஸ்டார் இமேஜை உதறாவிட்டாலும் வழக்கமா விசில் பறக்கும் பஞ்ச் டயலாக்களை அறவே விட்டு... டிரேட் மார்க் சிக்ரெட்டை தவிர்த்து... விரல் அசைவு ஓசை எழுப்பும் மேஜிக் தவிர்த்து.. ஆர்ப்பாட்டமில்லாத கதை நாயகனாக ( கம்ர்ஷியல் தமிழ் சினிமா இலக்கணத்துக்கு உட்பட்டு சண்டை, டூயட் எல்லாம் இருந்தது) திரையில் தோன்றினார்... கிட்டத் தட்ட ரஜினியே பல ஆண்டுகளுக்கு முன் திரையில் நடித்த ஆயிரம் ஜென்மங்கள் கதாபாத்திரம் தான் சந்திரமுகியின் டாக்டர் சரவணன் கேரக்டரும்..

ரஜினியின் இந்த மாற்றம் அவருடைய திரை ரசிகர்களையும் வெகு ஜனங்களையும் வெகுவாகக் கவர்ந்தது.. தமிழக் மக்கள் குடும்பம் குடும்பமாகத் திரையரங்குகளை முற்றுகையிட்டு ..சந்திரமுகி வெற்றி வரலாறு படைத்தது அனைவரும் அறிவோம்...

ரஜினியின் எல்லாத் தரப்பு ரசிகர்களும் ரஜினி என்ற தனி மனிதனின் வெற்றியில் மகிழ்ந்தனர் ஆனாலும் சூப்பர் ஸ்டாருக்காகத் தெருவில் போர்கோலம் பூண்ட ரசிகர் பிரிவின் மனத்தில் லேசான நெருடல் இருந்தது நிஜம்...

அந்த நெருடலின் கேள்வி வடிவமே இந்தப் பதிவின் தலைப்பு... அப்படின்னா அடுத்தக் கேள்வி சிவாஜி ரஜினி படமா....? அடுத்து அதைப் பற்றியும் பேசுவோம் கொஞ்சம் கேப் விட்டு

tamil10